அழியாச்சுடர்கள்

வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

January 5th

January 6th

ஜனவரி 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவணக்கம் | , , , , , | வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் !

இக்கட்டுரையை 1996 – ஏப்ரல் 20 இல் வெளியான சரிநிகர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அப்போது தமிழீழம் என்கிற ஒரு அரசாங்கம் இயங்கிக் கொண்டிருந்த காலம். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ குற்றவியல் சட்டத்தில் (Penal code of tamil ealam) பெண்களின் நிலை பற்றியது இந்தக் கட்டுரை. இக்கட்டுரையில் தான் தமிழ்ச் சூழலுக்கு முதல் தடவையாக “கற்பழிப்பு” என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக “பாலியல் வல்லுறவு” என்கிற சொல்லை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அச்சொல்லை முதலில் புழக்கத்துக்கு கொண்டுவந்ததும் சரிநிகர் பத்திரிகை தான். தற்போது பெண்கள் தொடர்பான சில சட்டங்கள் விவாதத்தில் இருக்கின்ற நிலையில் காலப்பொருத்தம் கருதி மீள இடுகிறேன்.
-என்.சரவணன்

இன்று தென்னிலங்கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ”தமிழீழம்”” என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசொன்றைக் (State) கொண்டிராத போதும் அரசாங்கம் ஒன்று அங்கு இயங்கிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

அந்த வகையில் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப்பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளிலிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்டிருக்கிற சட்டங்களை அலசிப்பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகையில் ”தமிழீழ ஒறுப்புச் சட்டம்”” (Penal Code of Tamil Ealam – PCTE) (‘தண்டனை’ இங்கு ”ஒறுப்பு”‘ என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று.

அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.

‘பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்” (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)

”ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களு க்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்.” (அதே நூல்-பக்கம்-31)

”பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்.” (அதே நூல்- பக்கம்-35)

நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிர்வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுக ளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரீதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியு ள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் ‘தமிழீழ ஒறுப்புச் சட்டம்” கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தண்டனை

தண்டனை என்கிற பதத்துக்கு மாற்றாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் “ஒறுப்பு” எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்டனை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.

”குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்க ப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்” (பார்க்க-PCTE-சரத்து-47)

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. “கடுஞ்சிறையொறுப்பு” என்பதன் அர்த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க-PCTE-சரத்து-45.ஆ(1)).

ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் “கடும் உடலுழைப்பு” என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.

அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரமல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உள ரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.

எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற் றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் அடிப்படை உரிமையாதல் வேண்டும்.

ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:

உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. (PCTE -சரத்து-215)

சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும்;. (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் “புறநடை விலக்கு” எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் ‘புறநடை விலக்கு” (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணினதும் ‘இசைவு” தேவை என கூறப்பட்டுள்ளது.

கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் பேரில் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்பும் இன்று “பாலியல் வல்லுறவு” என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணி டமே விட்டுவிட வேண்டும்.

கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்தினர் தங்களது போர்க்கால மனித வள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) – தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.

மறுமணம்

“மறுமணம்” விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ”துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவர்களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். (PCTE-சரத்து 273) எனக் கூறப்பட்டிருக்கிற போதும் அதன் ‘புறநடை” பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.

திருமணமான எவரும் துணைவி யைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.

திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள ‘காத்திருக்கும் வரையறை” என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.

பாலியல் வல்லுறவு

பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.

“பாலியல் வல்லுறவு குற்றம்” புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (PCTE -சரத்து-279-(அ)) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் ‘பாலியல் வல்லுறவு” பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டு ள்ளது. (PCTE -சரத்து-283-(4)) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.

இச்சட்டத்தில் “பாலியல் வல்லுறவு”, “பாலியல் வன்முறை” இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டி ருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,

”ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் “பாலியல் வல்லுறவு”‘ நடைபெற்றதாகக் கொள்ளப்படும்” என்றிருக்கிறது.

”பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது “பாலியல் வன்முறை”த் தவறாகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து “பாலியல் வல்லுறவு” மற்றும் பாலியல் வன்முறை” ஆகியன ஆணொ ருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் ‘பாலியல் வல்லுறவு”களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.

இதை விட “பாலியல் வல்லுறவு” (Rape) மற்றும் “பாலியல் வன்முறை” (Secual Violation) என்பதைப் போலவே ‘பாலியல் தொந்தரவுகள்” (Sexual Disturbances) என்ற ஒன்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடர்பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.

இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக “பாலியல் வல்லுறவு” எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் ‘கற்பழிப்பு” எனும் பதம் பயன்படுத்தப்பட்டபோது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலைவாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து “பாலியல் பலாத்காரம்” மற்றும் “பாலியல் வன்முறை” ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் “சரிநிகர்” பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் ‘பாலியல் பலாத்காரம்” மற்றும் “பாலியல் வன்முறை” ஆகிய பதங்களில் “பாலியலுறவு” என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற “பாலியல் வல்லுறவு” எனும் பதத்தில் பாலியல் (Sexual) + வன்மை (violence) + உறவு (intercource) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்பதைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைகளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு

எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையிலொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (PCTE -சரத்து-(286))

இதில் ‘இயற்கை இயல்புக்கு முரண்” என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகிறது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதிதாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதிலிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபு ரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்கத்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும்.

பரத்தமை

‘பரத்தமை” (பாலியல் தொழில்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.

பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரணமாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலையினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.

”காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாருடன் உடலுறவு கொள்ளுதல் ‘பரத்தமை” தவறாகும். இத்தவறுக்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையிலொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்.” (PCTE -சரத்து (481),(420))

பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.

”பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?” என வினவுகிறார் பெண்ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.

இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.

மேலும் ‘விபச்சாரி” அல்லது ‘வேசி” என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகையான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப் பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.

ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ”விபச்சாரன்” அல்லது ”பரத்தன்” போன்ற பதங்களைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்தும் அவதூறுக்கும், அவமானத்துக்கும் உள்ளாகிறாள்.

இப்படி ”தமிழீழ ஒறுப்புச் சட்டம்” தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் பிற்போக்கான பார்வையைக் கொண்டிருப்பதாகவோ, ஆழமான தூரநோக்குடையதாகக் இருப்பதாகவோ கொள்ளமுடியாது.

ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள “பெண்கள்” பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.

முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கியமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.

– என்.சரவணன்

(1996 – ஏப்ரல் 20 சரிநிகர்)

www.namathumalayagam.com

PDF-tamil eelam Law

திசெம்பர் 28, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , | தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர் !

“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தேசியத் தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே.. அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும் சுற்றுசூழலுக்கும்தான் என்பதற்கு இது ஒரு வரலாற்று ஆதாரம்.

புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் மன்னார், புல்மோட்டை, காங்கேசன்துறை, உடபட பல தாயக பிரதேசங்களில் இயற்கைக்கு மாறாக, இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் ஜப்பான் உட்பட பல நாடுகள் வியாபார ஒப்பந்தம் எழுத வந்தபோது மறுபேச்சுக்கிடமின்றி அதை தலைவர் நிராகரித்தது பலருக்கு தெரியாது.

சீன, இந்திய கப்பல்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் புல்மோட்டை இல்மனைட் கனிம வளைத்திருட்டை தடுத்தும் வந்திருந்தார்.

ஒருவேளை மண்ணுக்கு, இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் அந்த ஒப்பந்தங்களில் தலைவர் பிரபாகரன் கையெழுத்திட்டிருந்தால் மேற்குலகத்தின் பார்வையில் அவர் “பயங்கரவாதி” இல்லாமல் போயிருக்கலாம்..

இதைத்தான் இன்றைய நமது ஆய்வாளர்கள், “பிரபாகரனின் தவறு” என்று வாந்தி எடுக்கிறார்கள். இனத்தை மட்டுமல்ல, இயற்கையையும் மாற்றானிடம் அடைவு வைக்க முடியாது.

இது பேராட்டத்திற்கு மட்டுமல்ல மனித வாழ்வின் இருப்பிற்கே முரணானது. தலைவர் இப்படியெல்லாம் சிந்தித்தன் விளைவுதான், “ஒரு சிறிய இனத்தின் தலைவன் உலக முதலாளித்துவத்திற்கே வேட்டு வைக்கிறானே..” என்று ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து போராட்டத்தை அழித்து முடித்தது. தமிழீழத்தின் வாழ்வு, அடையாளம், குறியீடாக இருப்பது தாயகத்தை சுற்றியுள்ள கடலும் தாயகத்தினுள் நிமிர்ந்து நிற்கும் பனைகளும்தான்.

இந்த பனைகளத்தான் ஆரம்ப காலத்தில் பதுங்கு குழிகள் அமைக்க புலிகள் மட்டுமல்ல மக்களும் பாவித்தார்கள். ஒரு பனை தறிக்கப்படுவதென்பது ஒரு தமிழனின் வாழ்வாதாரம் நசுக்கப்டுவதற்கொப்பானது என்பதை தலைவர் உணர்ந்து அதை மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்ல தறிக்கப்பட்ட பனைகளுக்கும் மேலாக தமிழர் தாயகமெங்கும் பனங்கன்றுகளை நட உத்தரவிட்டார். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

இந்திய இராணுவ முற்றுகை உட்பட அதற்கு பின்னான பல சிங்களப் படையெடுப்பு காலங்களிலும் போராளிகள் வடதமிழீழத்திற்கும் தென் தமிழீழத்திற்கும் இலகுவாக சென்று வரவும் தமது காப்பரண்களை பாதுகாப்பாக அமைத்து கொள்ளவும் வனப்பகுதிக்கும் அங்கு வாழும் வன உயிர்களுக்கும் சேதம் வினைவிப்பதை அறிந்த தலைவர் போராளிகளிடம் ” நீங்கள் பாதையை மாற்றியமையுங்கள், அல்லது எதிரியின் முற்றுகையை உடைத்து போய் வாருங்கள், எந்த காரணம் கொண்டும் வனவளத்தை அழிக்க கூடாது” என்று இறுக்கமாக கட்டளையிட்டதும் பலருக்கு தெரியாது. காடழிப்பு தடுப்பு மற்றும் பனைவள பேணலுடன்,மர நடுகைமூலமும் மண்வளம் பேணியமையையும் நாம் மறந்துவிடலாகாது.

இதன் விளைவாக போராளிகள் பெரும் ஆயுத தளபாட சுமைகளுடன் நீண்டதூரம் நடந்து பயணிக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல பல தருணங்களில் எதிரிகளை நேரடியாக சந்தித்து மோதி களப்பலியாக வேண்டியும் ஏற்பட்டது.

இன அழிப்பு நோக்கங்களுடன் பேரழிவு ஆயுதங்களுடன் படையெடுத்து தமிழர் தேசத்தை சுற்றி நின்ற சிங்களத்தை எதிர்கொண்டபடியே இயற்கையையும் சுற்றுச்சூழலையும் புலிகள் நேசித்த, பாதுகாத்த கதை இது.

ஆனால் 2009 இற்கு பிறகு இன்று கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாக சிங்களத்தால் தமிழீழத்தின் இயற்கையும் சுற்றுச்சூழலும் தாறுமாறாகக் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

சிறீலங்கா இராணுவம் விடுதலை புலிகளால் வளர்க்கப்பட்ட காடுகளை அழித்து வருவதுடன், மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வருகின்றது. இச்செயல்கள் தான் இன்றைய வெள்ளப்பெருக்கிற்கும் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

டிசம்பர் 5ம் திகதி உலக மண்வள தினம் –
– பரணி கிருஸ்ணரஜனி

கோத்தா வருகையால் “காவல் துறை” ஆக மாறிய பொலிஸ் நிலையம்

வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் புதிய ஜனாதிபதி கோத்தாபயவின் வருகையை அடுத்து காவல்துறையாக மாற்றம் அடைந்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில் காவல்துறை என்ற தமிழ் மொழியிலான பெயர்ப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.

திசெம்பர் 28, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர் | , , | மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

உயிரை அர்ப்பணித்த கடமை வீரன் .!

“குழந்தையொன்றை காப்பாற்றும் முயற்சியில் குணேஸ்வரன் உயிரிழந்தார்”

2005/01/23 ஆம் நாள், ஈழநாதம் பத்திரிகையில் வந்த பதிவு குணேசின் கதையை சொல்லிநின்றது.

“சுனாமி அடித்தபோது, குணேஸ் அண்ணை மரத்தில் ஏறிவிட்டார். ஒரு தாயும் பிள்ளையும் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு, அவர்களை காப்பாற்ற இறங்கிப் போனார்…திரும்பி வரவில்லை!!” அப்பேரிடரில் உயிர்தப்பிய உடன் பணியாளரின் கூற்று இது.

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து, இறுதியில் மக்களுக்காகவே தனது உயிரையும் துறந்த குணேஸ்வரன், யாழ் மாவட்டம், வடமராட்சியின் தொண்டைமானாறு கெருடாவில் என்ற கிராமத்தில் , கந்தசாமி,தெய்வேந்திரராணி தம்பதியினருக்கு மகனாக, 1972/11/30 ஆம் நாள் பிறந்தார்.யாழ்/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் இணைந்து பள்ளிப்படிப்புகளை நிறைவு செய்திருந்தார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஆழமான பற்றும், நம்பிக்கையும் கொண்டிருந்த இவர், தனது பள்ளிப்பருவம் முதலாகவே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்பட்டு வந்தார்.

1991 ஆம் ஆண்டு,தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்ட வேளை, வடமராட்சி அரசியல்துறையினரூடாக தமிழீழ காவல்துறை பயிற்சிக்காக அனுப்பி வைக்கப் பட்டிருந்தார். பயிற்சியில் இணைக்கப்பட்ட இவருக்கு 19ஆம் எண் வழங்கப்பட்டிருந்தது. பயிற்சிகளின் முடிவில்,காவல்துறை உறுப்பினராக கடமைகளை ஆரம்பித்த இவர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருமலை மாவட்டங்களில் இயங்கிய தமிழீழ காவல்துறையின் காவல் பணிமனைகளில் பணியாற்றியிருந்தார்.

பின்னர் பதவிநிலை உயர்வுபெற்று ஒட்டுசுட்டான் காவல் பணிமனை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நெருக்கடி மிக்க போர்க்காலத்தில், ஒட்டுசுட்டான், முத்து ஐயன்கட்டு பகுதி மக்களுக்கு இவர் ஆற்றிய சேவை எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்டது. நிர்வாகத்தின் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டார்.
இவ்வேளையில், முல்லைத்தீவு காவல் பணிமனைக்கு, மக்களுடன் நல்லுறவை பேணக்கூடிய, ஒரு காவல் பணிமனை பொறுப்பாளரை அனுப்பிவைக்கும்படி, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திரு.சூசை அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கமைய, காவல்துறை பொறுப்பாளராக இருந்த திரு.நடேசன் அவர்களால் தெரிவு செய்து அனுப்பி வைக்கப் பட்டிருந்தார் குணேஸ்வரன்.

முல்லைத்தீவிலும் தனது சிறப்பான அணுகுமுறைகள் மூலம் மக்களினதும், போராளிகளினதும் பேரன்பை பெற்றிருந்தார்.
25/12/2004 நத்தார் தினமன்று மாலை, முல்லைத்தீவு சென்று, குணேஸ்வரனை சந்தித்து, நத்தார் தின நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தேன்.
மறுநாள் காலை, முல்லைத்தீவிற்குள் கடல் புகுந்துவிட்டதாக அறிந்து, விரைந்து சென்று பார்த்த போது எல்லாமே அழிந்துபோயிருந்தது. உயிரற்ற உடல்களே எங்கும் காணப்பட்டன. காயமடைந்தவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்றாக, குணேசின் உயிரற்ற உடலும், ஒரு குழந்தையின் உடலைப் பற்றிப் பிடித்த படியே காணப் பட்டிருந்தது.

அப்பேரிடரில், தேவப்பிரியா, ஜெகதீஸ்ஸ்வரி ஆகிய இன்னுமிரண்டு காவல்துறை பெண் உறுப்பினர்களும் சாவடைந்திருந்தனர்.
கடமையின் போதான சாவு என்பதால், குணேஸ்வரனுக்கு காவல்துறை ஆய்வாளர் நிலை வழங்கி மதிப்பளிக்க பட்டிருந்தது.
ஆண்டுகள் பல கடந்தாலும், ஆழிப்பேரலையில் உயிரிழந்த நம்மவர்களை மறக்க முடியவில்லை. இப்பேரிடரில் இறந்த அனைவரையும் மனதில் நிறுத்தி அவர்களுக்காக தலை சாய்த்து வணக்கம் செலுத்துகின்றேன்.

– இ.ரஞ்சித்குமார்
23/12/2019

திசெம்பர் 27, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர் | , , , | உயிரை அர்ப்பணித்த கடமை வீரன் .! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி #Tsunami ltte

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது.

அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும் ஆதரவாக பொதுவாகக் குரல்கொடுத்து உன்னத மனிதாபிமான நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார்.

அலை அடித்து ஓய்ந்த உடனே, மிக விரைவாக, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொறுப்புணர்வுடன் செயற்திறமை காட்டியது, இந்தப் பிராந்தியத்திலேயே புலிகள் இயக்கம்தான் என்பது இன்று ஒரு பொதுவான கருத்தாகிவிட்டது.

சந்திரிகா அம்மையாரும், சிங்கள உறுமய கட்சியினரும் இதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த உண்மை ஏகமனதாக உணரப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தின் கடற்புலி வீரர்களை, காவல்துறை உறுப்பினர்களை, போராளிகளை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உள்ளிட்ட மனிதநேய உதவி அமைப்புகளின் தொண்டர்களை உடனடியாகவே களமிறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

விளைவு! வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களே வியந்து – பாராட்டும் அளவுக்கு ஒரு அற்புதமான இடர்கால மீட்புப்பணியை புலிகள் இயக்கம் செவ்வனே நிறைவேற்றியுள்ளது. உயிர் ஆபத்திற்குள்ளும் தங்களை மீட்கவந்த புலிவீரர்களை அந்த மக்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிங்களப் படையினர் குறுக்கிட்டு, குழப்பங்களை விளைவித்தபோதும் பொறுமைகாத்து மக்கள் பணியாற்றும்படி தலைவர் போராளிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

சில இடங்களில் அலைநீரில் சிக்கிய சிங்களப் படையாட்களை மீட்டு இராணுவத்திடமே ஒப்படைத்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. அதேசமயம், கிழக்கு மாகாணத்தில் இனபேதம் காட்டாமல் பாதிக்கப்பட்ட அனைத்துச்சமூக மக்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நிவாரண உதவிகளை வழங்கி தலைவரின் மனிதாபிமான நிலைப்பாட்டை – நிறைவேற்றிச் செயற்பட்டது.

கிளிநொச்சி வந்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்த நோர்வே வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழுவினருடனும் இனபேதமற்ற தனது மனிதாபிமான நிலைப்பாட்டையே தலைவர் முன் வைத்திருந்தார். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்துடன் சமாதான முயற்சிகளையும் இணைத்துச் செயற்படுத்துவதே சிறந்தது என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

சுனாமி அனர்த்தத்திற்குள் சிங்கள அரசைப்போன்று இனரீதியான அரசியலைப் புகுத்தும் சிறுமைத் தனத்தை புலிகள் இயக்கம் செய்யவில்லை.

பெருந்தொகைப் படையினர் இயற்கைச் சீற்றத்தில் பலியாகியிருந்த போதும் – அதைப் பிரச்சாரப்படுத்தி குதூகலிக்கும் நாகரீகமற்ற அரசியலை புலிகள் இயக்கம் செய்யவில்லை.

அத்துடன் அழிவடைந்த பகுதிகளைப் பார்வையிடவந்த உலகத்தலைவர்களை முல்லைத்தீவு செல்லவிடாது தடுத்து அவர்களைச் சங்கடப்படுத்திய சிங்கள அரசின் இனவாதச் செயற்பாட்டை பெரிய விடயமாக எடுத்து அந்த உலகத் தலைவர்களை மேலும் சங்கடத்துக்குள்ளாக்காமல் அரசியல் நாகரீகத்துடன் புலிகள் இயக்கம் நடந்துகொண்டது.

இதேவேளை, கடந்த வருடம் தென்னிலங்கையில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சிங்கள மக்கள் பெரும் பாதிப்படைந்தபோது அங்கே நிவாரணப் பொருட்களுடன் சென்ற புலிகள் இயக்கம் சிங்கள மக்களுக்கு உதவிய மனிதாபிமான செயற்பாட்டையும் உலகம் அவதானித்தபடியே இருந்தது.

இவ்விதமாக, தேவை ஏற்படும்போதும், தேசிய அளவில் நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் புலிகள் இயக்கம் அரசியல் நாகரீகத்தையும் – மனிதாபிமான நிலைப்பாட்டையும் கடைப்பிடித்தபடி பண்பாக நடந்துகொண்டதை உலகசமூகம் அறியும்.

இவையெல்லாம் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அபாரமான தலைமைத்துவ ஆளுமையினதும், சீரிய உயர் பண்புகளினதும் அரசியல் வெளிப்பாடுகளே என்பதை உலக சமூகம் எடைபோட்டிருந்தன.

ஆனால், சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா அம்மையாரோ இதற்கு முரணானதொரு அரசியல் செயற்பாட்டையே இந்த இடர்கால நெருக்கடி வேளையிலும் நடாத்தி வருகின்றார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உடனடி மீட்பு நடவடிக்கைகளை அரசு சரியாக நடாத்தியிருக்கவில்லை என்று ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அரச தலைவியின் ஆளுமையின்மையும், அதன் விளைவான அரச இயந்திரத்தின் அசமந்தப்போக்குமே இந்த செயற்திறனின்மைக்கு முக்கிய காரணங்கள் என்பது உலக ஊடகங்களின் கருத்தாகும்.

அம்பாறை மாவட்டத்தின் அரச அதிபராக உள்ள சிங்கள அதிகாரி அனர்த்தம் நடந்தும் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை. அம்பாறையில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதே அவரின் இந்த புறக்கணிப்புக்குக் காரணம். இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடுமையான அழுத்தத்தின் விளைவாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் அம்பாறையின் மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையிலேயே
அம்பாறையில் அரச இயந்திரத்தின் இடர்காலப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகையதொரு தேசிய அனர்த்தவேளையிலும் ஒரு சிங்கள அதிகாரி மனிதாபிமானமில்லாமல் தனது இனவெறி உணர்வை செயலில் காட்டியிருந்தபோதும் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் சந்திரிகா அம்மையார் எடுக்கவில்லை. இது அம்மையாரின் இனவெறி உணர்வையே வெளிப்படுத்துகின்றது என்பதே உண்மையாகும்.

திருகோணமலை மாவட்டத்திலும் இதே நிலைமைதான் இருந்தது. அரச நிவாரணங்கள் இனரீதியாக வரையறுத்து – பாகுபாடாகவே நடந்தன. தமிழ்மக்களுக்குச் சென்ற நிவாரணப் பொருட்கள் படையினராலும் – ஜே.வி.பியினராலும் – சிங்களக் காடையர்களாலும் வழிமறிக்கப்பட்டு திசைதிருப்பப்பட்டன. இத்தகைய குற்றச் செயல்களுக்கும் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் அம்மையாரின் அரசு எடுக்கவில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை அண்மித்திருந்த சிங்கள மக்கள் இந்த மீட்பு நடவடிக்கைகளிலும் – நிவாரண முயற்சிகளிலும் மனிதாபிமானமாக நடந்துகொண்டனர் என்பதும் முக்கிய செய்திகளாகும்.

இலங்கைத்தீவை சுனாமி தாக்கியபோது தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாநிலங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த உண்மையைக்கூட ஏற்கமறுத்த அம்மையார் தென்னிலங்கைதான் அதிகம் பாதிப்படைந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

உலகநாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாகப் பிரித்தளிக்க அவர் தவறிவிட்டார். இந்த இயற்கை அனர்த்தவேளையிலும் சிங்களவர் – தமிழர் என்று பிரித்துப் பார்த்து தனது இனவாதச் செயற்பாட்டையே காட்டியுள்ளார்.

முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்தும் – இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்திருந்தும் – பில்லியன் ரூபா சொத்தழிவு ஏற்பட்டிருந்த இந்த துயர நேரத்திலும் அம்மையார் அவர்கள் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை மிகைப்படுத்தி – மகிழ்ச்சி தெரிவித்து – கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார்.

தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் – கடற்புலிகள் அழிந்து விட்டனர் என்று தமது பேரினவாத ஆசைகளை வெளிப்படுத்தி – கேவலமான அரசியலையே சிங்கள அரசு நடாத்திக்கொண்டிருந்தது.

உலகநாடுகளின் நிதி உதவியுடன் 15 நகரங்களை புனரமைக்கப் போவதாக சந்திரிகா அம்மையார் அறிவித்திருந்தார். அதில் ஒன்றுகூட முல்லைத்தீவு மாவட்டத்திற்கோ – யாழ்ப்பாண மாவட்டத்திற்கோ ஒதுக்கப்படவில்லை.

மனிதாபிமானப் பயணம் மேற்கொண்ட உலகத் தலைவர்களை வன்னிப்பகுதிக்கு வரவிடாமல் தடுத்து அநாகரீக அரசியலையே அம்மையார் நடாத்தியுள்ளார்.

இவையெல்லாவற்றையும் உலகசமூகம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகைய காட்டுமிராண்டி மனநிலையுடன் இருக்கும் ஒரு ஆட்சிப்பீடத்திடமிருந்து தமிழ்மக்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளை அமைதிவழியில் பெற முடியும்!? என்று உலகசமூகம் உணர்ந்திருக்கும்.

ஒருபுறத்தில் தேசிய ஆளுமையையும் – செயல்திறமையையும் கொண்ட ஒரு தலைமை செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இன்னொரு புறத்தில் இனவெறி உணர்வையும் – சோம்பேறித் தனத்தையும் கொண்டதொரு அரைகுறைத் தலைமை இலங்கைத்தீவில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை உலகசமூகம் அவதானித்தபடி உள்ளது.

-எல்லாளன்.
விடுதலைப்புலிகள் இதழிலிருந்து


ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது – சர்வேதேச கடிதம் எனும் பத்திரிக்கையிலிருந்து (பிரான்ஸ் நாளிதழ் )

ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது என Marie-France Cale என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர் கூறுகிறார் இலங்கைத் தீவில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பாத்த பின் அவர் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். கிளிநொச்சிநகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது

‘பொறுத்தல்’ என்கின்ற சொல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அகராதியில் ஒருபொழுதும் இருந்ததில்லை புலிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் ஒழுங்குமுறைகள் பேணப்படுவதில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள் .

ஒழுங்குமுறைகள் பாரதூரமாக மீறுப்படுமிடத்து புலிகள் அவர்களை நீதியின் முன் நிறுத்தி விசாரணை செய்வார்கள்.
தலைவர் பிரபாகரன் அவரது நாட்டு மக்களால் தந்தை என்ற ஸ்தானத்தில் வைத்து நோக்கப்படுகிறார்.
ஆழிப்பேரலை விடுதலைப் புலிகளின் அரசியல் நோக்கத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை மாறாக, மனதை உருக்கும் இந்த சம்பவம் சர்வதேச ரீதியாக சட்டரீதியான பல பாதைகளை அவர்களுக்கு திறந்துவிட்டிருக்கிறது

சர்வதேச சமுதாயம் எதைக் காண்கிறது என்றால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையிலும், சிங்கள அரசாங்கத்திற்கிடையிலும் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் கைச்சாத்திடப்பட்ட, இன்று அபாய நிலையிலுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் எந்நேரமும் உடைந்து விடலாம் என்பதையே.
நோர்வே சமாதானக்குழுவினர், ஆழி பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் ஒழுங்கான முறையில் அவர்களைச் சென்றடையவேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகின்றனர் .

சமாதானத்திற்கான ஒப்பந்தம் இறக்கும் தறுவாயில் இருக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சர்வதேச உதவிகளும் சென்றடையவில்லை .
‘கடநத மார்கழி மாதமே எங்களுடைய பொறுமையின் எல்லையை தொட்டுவிட்டோம், ஆனால் ஆழிப்பேரலை அடுதத கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது’ என்று புலிகள் அமைப்பு கூறுகின்றார்கள் .

‘எமக்கும், சிங்கள அரசாங்கத்திற்கும் இடையே உதவிகளை பகிர்வதற்கான ஒப்பந்தம் சரி வந்தால் அது நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு குறியீடாக இருக்கும் என்பதே சர்வதேச சமுதாயத்தின் பார்வை’ என்றார் சிங்கள அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்கககூடாது எLபதில கடும்பிடியாக இருக்கிறது. சிங்கள அரசுககு சர்வதேச சமுதாயம் இந்த விடயத்தில் கண்டனங்களை தெரிவிப்பதோடு அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும்.

கடல்கோளால் தமிழர் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியான போராட்டத்தால் நொந்துபோன எமது மக்களுக்கு ஆழிப்பேரலை இன்னும் ஒரு பரழிவை ஏற்படுத்தியது ‘ என அவர் மேலும் குறிப்பிட்டார் . கிளிநொச்சியில் இருக்கும் சில உணவகங்கள் அல்லது முழுதாகக்கூட தமிழீழ விடுதலைப் புலிகளினுடைவை. அங்கே விடுதலைப் புலிகளினுடைய வானொலி ஒலிபரப்புக்களை மக்கள் செவிமடுத்தபடி இருப்பார்கள்.

-தமிழாக்கம் :மீரா
வெளியீடு :எரிமலை இதழ்

  • tsunami 2ltte tsunami releifltte at tsunami relieftsunami

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 15ம் ஆண்டு நீங்கா நினைவு நாள்.!

சுமத்திரா தீவில் மையம் கொண்டு 26.12.2004 அன்று தமிழீழத்தின் கரையோர மாவட்டங்களை தாக்கியது போரின் துயரில் ஊர்பிரிந்து – உறவிழந்து வாழ்ந்த உறவுகளின் உடைமைகள் முதல் பல உயிர்களையும் வயது வேறுபாடு இன்றி கடல் காவுகொண்டது அதன் துயரின் 15ம் ஆண்டு நீங்கா நினைவுகள் இன்றாகும்.

வரலாற்றில் எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் ஒரு தேசிய இனத்தை முழுமையான சோகத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு.

தமிழீழ மக்களைப் பொறுத்தளவில் இத்தகைய பல தேசியத் துயர்களை எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் சந்தித்திருந்தார்கள்.

இத் துயர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கடற்கோள் ஏற்படுத்திய அழிவுகள் மாபெரும் தேசியத் துயராக வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.

தமிழீழக் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிக் கடற்கரை கடற்கோளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிலநிமிட நேரத்தில் அழிந்த பல்லாயிரம் உயிர்களும் கடல் அலைகளின் நம்பமுடியாச் சீற்றமும் தமிழீழ மக்களை உலுப்பியெடுத்துவிட்டது.

பண்டைய தமிழ் நூல்களில் பதிவாகியிருந்த கடற்கோள் என்ற சொல், எந்தவித அனுபவ அர்த்தமும் இல்லாத கற்பனைச்சொல் போன்றே, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் மனதில் இருந்துவந்தது.

26.12.2004 அன்று காலைவேளையில் கரையோரக் கிராமங்களை, பட்டணங்களை விழுங்கிய கடல்நீர், கடற்கோளின் அர்த்த பரிமாணத்தை தமிழ்மக்களுக்குக் காட்டிச் சென்றது.

கரையில்வந்து கால் நனைத்துச் செல்லும் கடல்நீர் திடீரெனப் பனையளவு உயரம் எழும்பிக் கரைகளைச் கபளீகரம் செய்த காட்சி ஒரு அழிவுகரமாகவே காணப்பட்டது.

அழிவையும் – அச்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ‘சுனாமி’ என்ற ஒரு சொல்லையும் தமிழ் அகராதிக்குள் கடற்கோள் திணித்து விட்டுச் சென்றுள்ளது.

தலைவர் பிரபாகரன் கூறியதுபோல இது எமது மக்கள் சந்தித்த இரண்டாவது சுனாமி ஆகும். ‘ஆமி ஏற்படுத்திய சுனாமி’ என்று சிங்களப்படையின் இன அழிப்பை தலைவர் உவமானப்படுத்தியிருந்தார்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தழிழீழக்கடல் வகித்துவரும் பங்கு – பாத்திரம் முக்கியமானது. அதுபோலவே, கரையோர மக்களின் போராட்டப் பங்களிப்பும் காத்திரமானது.

ஒருபுறம் இயற்கை ஆபத்தையும் – மறுபுறம் சிங்களக் கடற்படையின் கொலைவெறி ஆபாயத்தையும் எதிர்கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்திய இம்மக்கள் கடற்கோள் என்ற பேரனர்த்தத்தையும் எதிர்கொண்டது பெரும் துயரத்தைத் தருகின்றது.

இத் துயரத்தின் சோகவடுக்கள் அம் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு வாட்டத்தான் போகின்றது.

கடலுக்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரும், பெற்றோரைப் பறி கொடுத்த பிள்ளைகளின் சோகமும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் கவலைகளும் தமிழ் இனத்தின் குடும்பச்சோகமாகவே உணரப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் இந்த இயற்கையின் சீற்றத்தைக் கேள்வியுற்று துடிதுடித்துப் போனதையும் – தாயகத்து உறவுகளுக்கு வாரிவழங்கி உதவிகள் புரிந்ததையும், அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தழுததும் இந்தத் தேசிய சோகத்திற்குச் சாட்சிகளாக உள்ளன.

வரலாற்றில் நாம் சந்தித்திராத ஒரு பேரழிவை கடல் தந்திருந்தாலும் அது எங்களது எதிரியல்ல. மாறாக, அது எங்களது தேசியச் சொத்து. இயற்கையை அனுசரித்து அதை வசப்படுத்துவதில்தான் மனிதரின் வெற்றி தங்கியுள்ளது. அறிவியலின் வழிகாட்டலுடன் பெற்ற அனுபவங்களையும் துணையாகக்கொண்டு, எதிர்காலத்தில், இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வோம்.

விடுதலைப்புலிகள் (மார்கழி 2004 – தை 2005) இதழிலிருந்து

இயற்க்கை அன்னையின் மனம் ஒரு நாள் எமது இனத்திற்கு கருணை காட்டும்

திசெம்பர் 26, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , , | சிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி #Tsunami ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது