அழியாச்சுடர்கள்

கப்டன் வாணன் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam

விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே மாவீரர்கள்’

புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று.

சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வின் எல்லைவரை தெளிவான பற்றுறுதியையும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டையும் வழுவாத்தன்மையையும் கொண்டிருக்கும் என்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, நடைமுறை உதாரணமாக அமைகின்றது கப்டன் வாணனின் வாழ்க்கை வரலாறு.

வாணன் அசாத்தியமான துணிச்சல்காரனாக இருந்தாலும் மென்மையானவன். எதையாவது செய்து கொண்டிருக்கும் துடிப்பும் குறும்புத்தனமும் அவனிடம் அதிகம். விளையாட்டு, நாடகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவன். வாணனுடனான இளமைப்பருவத்து நாட்கள் நெஞ்சைவிட்டகலா பதிவுகள் – அம்மாவிற்குத் தெரியாமல் நிகழ்ச்சி பார்க்க சென்று நடு இரவில் திருப்பிவரும்போது, விளாத்திமரத்தைப் பார்த்து அம்மம்மா சொன்ன பேய்க்கதையை நம்பி, உரத்து தேவாரம் பாடிக் கொண்டு வந்தது, வெள்ளத்தில் வாழைக்குத்திகளை ஒன்றாகக் கட்டி |போட்| விட்டு விளையாடியது என அந்த நாட்களின் பசுமையான நினைவுகள் பல. இளமைப்பருவத்து இனிமைகளுடன் பயணித்த காலம்.

எண்பதுகளின் பிற்பகுதியில் உக்கிரமடைந்த தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் கொலை வெறியாட்டங்களும் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் என வாழ்க்கை பதட்டமான கால ஓட்டத்தில் பயணிக்கத் தொடங்கியது. ஈழப்போர் ஒன்றின் இறுதிக்காலப்பகுதி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் தனது இருப்பை அமைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஆரம்பித்த போர், விமானக் குண்டு வீச்சு, ஆங்காங்கே நேரம் காலமின்றி விழுந்து வெடிக்கும் செல் என அசாதாரண சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. வாணனுக்கு அப்போது பதின்நான்கு வயது.

அன்றைய பதற்றமான சூழ்நிலையில், வைத்தியசாலையில் இருந்த அப்பாவின் விடுதியில் பாதுகாப்பின் நிமித்தம் தங்கியிருந்த போது நிகழ்ந்தது அந்தக் கொடூர சம்பவம். அதிலிருந்து மயிரிழையில், பிணங்களுக்குள் பிணமாக தன்னையும் உருமாற்றி ஒரு நாளுக்கு மேல் மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து தப்பியவன். 1987ம் வருடம், தீபாவளி தினத்தில், யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கில் யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவம் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டது. முன்னேறி வந்த இராணுவம், யாழ் வைத்தியசாலை வளாகத்தின் அலுவலகப் பகுதியை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுக் கொண்டு உள்நுழைந்தது.

அப்போது அப்பாவுடன் அலுவலக அறையில் நின்று கொண்டிருந்த வாணன், அந்த சம்பவத்தைப்பற்றி கூறுகையில் “ஆமி சுட்டுக்கொண்டு வந்தபோது நான் வாசல்ல தான் நின்டனான். ஆமி சுட்டதில் எனக்கு முன் நின்றவர்கள் இரண்டு பேரும் வெடிபட்டு எனக்குமேல் விழுந்து விட்டினம். நான் அப்படியே அசைவில்லாமல் அவங்களின் உடலுக்கு கீழ விழுந்து கிடந்தன், ஆமி சுட்டது எனக்குப்படேல, கொஞ்ச நேரத்தில் என்ர காலும் விறைச்சுப் போட்டுது, ஆமி வந்து என்ர காலை தனது சூக்காலால் தட்டிப்பார்த்தான், எனக்கு ஒன்டும் தெரியல, நானும் சத்தம் போடாமல் இருந்திட்டன், அதால நான் இறந்திட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டான், எனக்கு மேல இறந்து விழுந்தவர்கள் பயங்கரப் பாரம் ஒன்டும் செய்ய முடியாததால அப்படியே இருந்தன், அவர்களில் இருந்து வடிந்த இரத்தம் என்ட உடம்பையும் இரத்தமாக்கியிட்டுது அதோடு பிணங்களுக்கிடையால் ஆமியைப் பார்ப்பன். கிட்ட வரும்போது மூச்சை அடக்கியிருப்பன், அவன் போன பிறகுதான் மூச்செடுப்பன்|. மறுநாள்வரை இப்படித்தான் கழிந்தது. ‘கடைசித்தம்பி காயப்பட்டு தண்ணீர் கேட்க, அப்பா மேசையிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க முற்பட்டபோது, யன்னல்ப்பக்கமிருந்த ஆமிசுட்டு அப்பா செத்ததை பாத்துக்கொண்டிருந்தனான்’.” என்றான்.

மேலும் “உங்களை ஆமி கூட்டிக்கொண்டு போனபோது அம்மா எங்கட பெயரைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போனது கேட்டது அதனால உங்களையும் ஆமி சுடப்போறாங்களோ! என்ட பயத்தில எழுப்பேல்லை, பிறகு அப்பகுதியில் ஆமியைக் காணவில்லை, வைத்தியசாலை ஊழியர் ஓராளும் காயப்பட்டு எழும்பாமல் எங்களோடயிருந்தார். நாங்கள் இங்கயிருந்து ஓடுவம் என்று முடிவெடுத்து, நானும் தம்பியையும் தூக்கிக் கொண்டு மதில் ஏறிப்பாய்ந்து நல்லூர் கோயிலுக்கு ஓடினான். அதோட அப்பாவின் சட்டைப் பையில இருந்த அம்புலன்ஸ் சாவியையும் நல்லூர் கோயிலில் நின்ற வைத்திய பொறுப்பதிகாரி நச்சினியாக்கினியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து நடந்ததைக் கூறினேன் என்றான்”. (படுகொலைச் சம்பவத்தை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் – வலிகளுடன் தொடரும் இருபத்திநான்காவது தீபாவளித் திருநாள்)

இந்தச்சம்பவம் அவனுக்குள் எழுப்பிய கேள்விகள் பல, ஏதும் அறியாத அப்பாவிகள் மீது நடந்தேறிய கோரக் கொலைத்தாண்டவம் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. ஈழத்தமிழர்களின் வரலாற்றைப்பற்றி ஜயாவிடமும் அம்மம்மாவிடமும் கதைப்பான் பல கேள்விகளைக் கேட்பான். எமக்கான விடுதலையின் தேவை, இலங்கைத்தீவின் தமிழர்களின் வரலாறு பற்றி மேலதிகமாக அறிய ஆவல் காட்டினான். தனக்கு ஏற்பட்ட அனுபவம், தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் என இளம் பிராயத்தில் அவனுக்குள் ஏற்படுத்திய விடுதலைத்தீ ‘சுதந்திர தமிழீழம்’ என்ற விடையாகக் கிடைத்தது. தனது குறிப்பேட்டில் “எமது இனம் பெற்ற சுதந்திரம் பெறுமதி வாய்ந்தது. அதை எதிரியிடம் விட்டுவிடலாமா? கூடாது எமது இனத்தின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுவிட இறுதி மூச்சுவரை போராடுவோம்!”என்ற அவனது எழுத்தில் தனது திடத்தைப் பதித்திருந்தான்.

இந்திய இராணுவ காலத்தில் போராளிகளுக்கு உணவு எடுத்துக் கொடுத்தல், இராணுவம் தொடர்பான தகவல்களை வழங்குதல் போன்ற தன்னாலியன்ற பங்களிப்புக்களைச் செய்யத் தொடங்கினான். இவனது செயற்பாடுகளை அறிந்த அம்மா வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கிருந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீண்டும் கடலால் நாட்டுக்கு திரும்பி வந்து வீட்டில் நின்றான்.

ஈழப்போர் இரண்டு தொடங்கியதும் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். ஒருநாள் பயிற்சி முகாமில் எதேச்சையாக ‘மெடிசின்’ கொட்டிலில் அவனைக் கண்டேன். முகாம் அமைக்கும் வேலையின் போது காயம் ஏற்பட்டு, அப்போதுதான் குணமடைந்து வந்திருந்தான். ஒரே பயிற்சி முகாமில் இருவரும் பயிற்சியெடுத்தோம். அவனிடம் “நான் இணைந்திருக்கிறன் தானே நீ போய் வீட்டைப் பார்” என்றேன், மறுத்துவிட்டான். பின்னர் பயிற்சி முடித்து, வேலைத்திட்டங்களுக்காக வேறு இடங்களுக்குச் சென்று விட்டோம்.

தனது பணியினை பலாலி இராணுவமுகாமில் ஆரம்பித்தான், பல சண்டைகளில் பங்குபற்றினான். அவனது சுயமுயற்சியும் சுயதிட்டமிடலும் சிறந்த தலைமைத்துவத்தைக் கொடுத்தது. முக்கியமாக வேவுப்பணிகளில் திறமையாகச் செயற்பட்டான். எதிரிக்குள் வாழ்வதைக்கூட இலகுவான பணியாகச் செய்தான். அவ்வளவு தூரம் அவன் உளரீதியாக உறுதியான மனநிலை உடையவனாக விளங்கினான்.

1993 ம் ஆண்டு ’களத்தில்’ பத்திரிகையில் வந்த விழுதுகள் கட்டுரையில் இருந்து வாணனைப்பற்றி …

”வாணன் காவலரண்களில் கடமை புரிகிற வேளைகளில் எதிரிப்படையினரின் நிலைமைகளைச் சென்று கண்காணிப்பான். ஆனால் கத்தி விளிம்பில் நடக்கிற இச்செயலின் ஆபத்து, அவனுக்குப் பெரிதாய்ப்பட்டதில்லை – மகிழ்ச்சியைக் கொடுத்து, உற்சாக ஊக்கியாய் இருந்தது.

03-11-1990 அன்று நடாத்தப்பட்ட மாவிட்டபுரம் சிறீலங்காப்படை மினிமுகாம் தாக்குதலுக்கு முன் வேவு பார்க்கும் பணியினை இவன் ஏற்றிருந்தான். மிகச் சாதுரியமாகச் சென்று தகவல்களைத் திரட்டி ஒன்றும் மீதியின்றி தளபதியிடம் பகிர்ந்தான். மேலதிக உறுதிப்பாட்டிற்காக தளபதியினால் அனுப்பப்பட்ட போராளிகளினால் கொண்டுவரப்பட்ட தகவல்களும் இவனுடையதை ஒத்து அச்சொட்டாகவே இருந்தது. வேவுக்கடமைகளிலும் இவன் ஆளுமை மிளிர்ந்தது.

இத்தாக்குதலுக்காக எதிரியின் நிலைகளை நோக்கி இவன், சகபோராளிகள் ஊர்ந்து முன்னேறி நிலையெடுக்கின்றனர். தளபதியின் கட்டளை பிறக்கின்றது. எதிர்பாராத் தாக்குதலில் எதிர்ப்படையினர் நிலைகுலைந்து போயினர். நிதானிப்பதற்குள்ளாகக் குண்டுபட்டு வீழ்கின்றனர். எறிகணைகள், உலங்குவானூர்திகள் உக்கிரம் கொண்டு எமது நிலைகளைத் தாக்குகின்றன. குண்டு வீச்சு விமானங்கள் எமது முன்னேற்றத்தைத் தடுக்கப் பகீரதப்பிராயத்தனம் செய்கின்றன. ஆயினும் இவர்கள் எதிரிப்படையின் நிலைகளை அழித்தனர். மினிமுகாமைக் கைப்பற்றினர். எதிரிப்படையினர் தமது ஆயுதங்களை வீசிவிட்டு, காயமுற்ற தமது சகாக்களைத் தூக்கிச் சுமந்தவாறு ஓட்டமெடுத்தனர். அவற்றையும் கைப்பற்றி எமது நிலைகளை நோக்கி மீள்கையில், எங்கிருந்தோ வந்ததொரு குண்டு! இவன் உடலைப் பதம்பார்க்கின்றது! குருதியாறு நிலத்தை நனைக்கிறது. இதைப்பற்றி அவனது தினக்குறிப்பு வரிகள் குரலிலேயே நெஞ்சுள் ஒலிக்கிறது! ”தமிழா நீ பிறவி எடுத்தாலும் நீ பிறந்த மண்ணுக்காக ஒரு துளி இரத்தத்தைக் கொடுத்துவிட மறந்திடாதே தமிழா….”

மாவிட்டபுரம் மினிமுகாமைத் தகர்த்து வீரசாதனை புரிந்தவர்களில் ஒருவரான இவன், தனது விழுப்புண் ஆறமுன்னே அடுத்த சமர்க்களத்திற் குதித்தான். 19-12-90 அன்று கட்டுவனில் சிறிலங்காப் படையினருடனான கடுஞ்சமர், முன்னேற முயல்கின்றனர் எதிரிப்படையினர், தடுத்து நிறுத்துவதில் இவனது துப்பாக்கியும் சுறுசுறுப்பாய்த் துரிதமாய் இயங்கியது. 05-02-92 அன்று நடந்த தச்சன்காடு மினிமுகாம் தாக்குதலிலும் இவனது பங்கு அளப்பரியது.

சகதோழர்கள் மேல் இவன் காட்டுகிற கரிசனை அபாரம். அவர்களை வழிநடத்துகிற ஆற்றலை அவர்களே புகழ்ந்துரைப்பார்கள். இராணுவம் முன்னேறி வந்த ஒரு தடவை, இவனது குழுவைச் சேர்ந்த ஒருவன் அசட்டையாக எழுந்து நின்று அவதானித்தான். இவன் கண்டிப்பும் அன்பும் கலந்த தொனியிற் சொன்னான், ”எவ்வளவு கஸ்டத்திற்கு மத்தியில் ஒவ்வொரு போராளியையும் அண்ணை உருவாக்கி வைச்சிருக்கிறார். நீ என்னெண்டா சும்மா மண்டையைப் போடுகிறன் எண்டு எழும்பி நிக்கிறாய்!” இந்தச் சிறுவயதிலேயே தலைமைத்துவத்திற்கு விசுவாசமிக்கவனாக, ஒவ்வொரு போராளியினதும் பெறுமதி உணர்வாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தான். பங்குபற்றிய அனைத்துத் தாக்குதலுமே மிக நிதானத்துடனும், திறமையாகவும் செயற்பட்டு தளபதிகளின், பாராட்டுதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிவிட்டான்.”

சிறிது காலத்தில் பகுதி இராணுவப்பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். பொறுப்பெடுத்தபின் தனது பகுதிக்குள்ளால் இராணுவத்தை நகரவிடக்கூடாது என்பதற்காக கடுமையாகப் பாடுபட்டான். எப்போதும் எந்த வேளையிலும் ஒவ்வொரு நிலைக்கும் சென்று போராளிகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் மேல் கரிசனையாக வழிநடாத்தும் ஆற்றல் நல்ல உறவை வளர்த்தது. இராணுவத்தை சும்மாயிருக்க விடக்கூடாது தொடர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருப்பான். ஒருநாள் வாணன் இராணுவத்தி நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் சினைப்பர் வைத்திருப்பவர் வெளியில் சென்றுவிட, அந்த ஆயுதத்தைக் கொண்டு சென்று தானே ஒரு சினைப்பர் போராளியாக பதுங்கியிருந்து இரண்டு இராணுவத்தைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்தான்.

கூடியளவு தனது செயற்பாடுகளை எதிரிக்கும் தனது காவலரணுக்குமிடையில்தான் வைத்திருந்தான். அநேகமான நேரங்களில் எதிரியை அண்டிய பகுதியிலேயே இவனைச் சந்திக்கலாம் என்பது இராணுவப் பொறுப்பாளர்களின் கருத்து. தனது பகுதிக்குள் இராணுவத்தை நகரவிடாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை சிந்தித்து பதுங்கித்தாக்குதல்களை செய்தல், பொறிவெடிகளை வைத்தல் போன்ற பணிகளை தானே முன்நின்று செய்வான். அப்பகுதியில் கிடைக்கும் பழைய செல்கள் மற்றும் இதர வெடிபொருட்களை தேடியெடுத்து அவற்றை எதிரியின் நகர்விற்குச் சாத்தியமான பகுதிகளில் வைப்பான்.

”24-12-91 இது மிகத் தன்நலக்காரத் தினமோ? இத்துணை புகழ் பூத்த எம் வாணனைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதே! பாரிய வெடியோசைகள் வலிகாமம் கிழக்கின் தலையில் வெடிகின்றது. அந்தக் காலை இவ்வாறுதான் தொடங்கிற்று! இப்பிரதேசத்து ஈவினைப் பகுதி மண்ணின் இயல்பான செம்மை எம்மவர் குருதியால் மேலும் சிவப்பேறி… மூவர் விதையாகின்றனர். எதிர்பாராத கந்தக வீச்சில் மாசுற்ற எம்சூழற் காற்று இவர்தம் இறுதி மூச்சால் தூய்மை பெறுகின்றது. இந்த மூவரில் ஒருவன்தான் .. வாணன்.

ஓ…. கேட்கிறது உனது ஆத்ம ராகம். அதுதான் உனது குறிப்பேடு

”வீரத்திற்கு வித்திட்ட தமிழா , கோழைக்குக் குடை பிடிக்கலாமா? கூடாது, எமது இழப்புக்கள் இழப்பு அல்ல, விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே! எமது இலட்சியம் ஒங்குக”

உனது குறிப்பேடு, வெறும் கையேடல்ல. பின்தொடர்ந்து வரும் இளைய வீரர்களுக்காய், தாயக மக்களுக்காய் நீ எழுதி வைத்த மரண சாசனம். அது புனிதம் மிக்கது. ஏனெனில் உனது புகழுடம்பின் சட்டைப் பையிலிருந்து அதை நாம் எடுத்தபோது அதுவும் குருதியில் குளிப்பாட்டப்பட்டிருந்தது.” விழுதுகள்

வாழ்ககையின் சில கணங்களின் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அது பாசப்பிரிவின் வேதனை, விடுதலைக்கு உரமான போராளியின் பிரிவின் வேதனை, மனதை பிழந்து விடும் அந்தச் செய்தி வந்தது. அங்கே கிடைத்த பழைய செல்லை எடுத்து பொறிவெடியாக்க முயற்சித்தவேளை வெடித்ததில் வாணனும் அவனுடன் இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது. தம்பி வீரச்சாவு, உணர்வை உலுங்கிய அந்த நிமிடங்கள்.

சிலமாதங்களுக்கு முன் அப்பாவின் திதியில் இருவரும் சந்தித்ததிற்குப் பின் அவனைக் காணவில்லை. வித்துடலும் பார்க்க முடியாதவாறு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்தப்போரில் அநியாயமாக அப்பாவையும் விடுதலைக்கு விதையாக தம்பியையும் இழந்திருக்கின்றோம்.

சுதந்திர தமிழீழத்திற்காகப் புறப்பட்ட அவனது கடமை ஒரு வருடத்தில் நிறைவிற்கு வந்துவிட்டது. விடுதலைக்காக நிறைய சாதிக்கும் கனவுடன் கடுமையாக செயற்பட்ட, சாதிப்பான் என எதிர்பார்க்கப்பட்ட, அவனின் விடுதலைமூச்சு நின்றுவிட்டது. அந்த ஆத்மா தனது கனவின் அடைவுவரை அமைதிகொள்ளாது என்பது நினைவிற்குள் வர மனது கனக்கின்றது இதுபோன்று பல்லாயிரக்கணக்கானோரின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்து வாழும் எத்தனையோ ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் என்பது சுதந்திர விடுதலை மட்டுமே. விடுதலையை நெஞ்சில் சுமந்து வித்தாகிப்போன வாணனுக்கும் மற்றைய இருவருக்கும் சிரம் தாழ்த்திய வீரவணக்கம்.

-அபிஷேகா-

திசெம்பர் 24, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், வீரவணக்கம் | , , , | கப்டன் வாணன் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள், லெப்.கேணல் அப்பையா #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam

திசெம்பர் 24, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன், வீரவணக்கம் | , , , , | எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள், லெப்.கேணல் அப்பையா #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  நினைவில் ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Tamil #Eelam #ltte

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் !

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசியத் தலைவரின் அறிக்கை

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.





திசெம்பர் 13, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், வீரவணக்கம் | , , , , , | தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  நினைவில் ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Tamil #Eelam #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா, எங்கள் காட்டில் புலிதான் ராஜா ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #AntonBalasingam #Tamil #Eelam #ltte


எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா! (தேசத்தின் குரல் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் லண்டன் பேட்டி)

‘ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்… ‘ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!’ என்று. அதுதான் சத்தியம்!’’

வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்!

சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் “சிந்தனைச் சுரங்கம்”!

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்…

எழுபத்தெட்டாம் வருடம்… லண்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக இருந்தபோதுதான், முதன்முறையாக அடேலைச் சந்தித்தேன். ஒருமித்த கருத்துடைய நாங்கள் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்தோம். தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களிலும், அமெரிக்கக் காலனி ஏகாதிபத்தியத்துக்கு எதிரா கவும் தீவிரமாகப் போராடி வந்தோம். இந்த நிலைமையில்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் என்னைத் தொடர்பு கொண்டார். உலகிலுள்ள பல்வேறு ‘கெரில்ல’ விடுதலைப் போராட்டங் களைப் பற்றியும், அவற்றின் வரலாறுகளையும் தமிழில் மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த அழைப்பு விடுத்தார். நான் முதன்முதலாக பிரபாகரனை சென்னையில்தான் சந்தித்தேன். அதன் பிறகு, வருடந்தோறும் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தங்கி, போராளி களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித் தேன். அப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு!

இத்தனை வருட உறவில், எனக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், எங்களுக் கிடையிலான நல்லுறவில் எப்போதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. காரணம், நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள்.



விடுதலைப் புலிகளின் சிந்தனை வடிவம், லட்சியம், அரசியல் கொள்கை ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், போரியல் ரீதியான வளர்ச்சியில் இந்த இயக் கத்தை நெறிப்படுத்தித் திட்டமிட்டு, ஆயுதப் போராட்டத்தின் தந்தையாக விளங்குபவர் பிரபாகரன். என்னுடைய அரசியலும், அவரது போரியலும் இணைந்துதான் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது. தலைவர் என்கிற ரீதியில் அவருக்குதான் நாங்கள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொடுக் கிறோம்.

இந்த இயக்கத்தில் நான் ஒரு தொண்டன். எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா!’’ என்கிறார் அழகான சிரிப்புடன்.

கேள்விகளை முன்வைக்கிறோம். சில கேள்விகளுக்குச் சிரிக்கிறார். சில கேள்விகளைத் தவிர்க்கிறார். ஆனால் எது குறித்துப் பேசினாலும், அதன் வரலாறும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும் கொட்டுகின்றன

“”முதன்முதலாக விடுதலைப் புலிகளை ஒரு போராளி அமைப்பாக அங்கீகரித்ததோடு, ஈழப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்த இந்தியா, தற்போது ஈழப் பிரச்னையிலிருந்து விலகி இருப்ப தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?””

“”புலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் கருணையும் காட்டி வந்துள்ளது. அதற்குக் காரணம், ஈழத்தில் இருந்தாலும் இன ரீதியாக நாங்கள் இந்தியர்கள்தான்! எங்களது மூல வரலாறு இந்தியாவிலிருந்துதான் ஆரம்பமாகிறது.

எண்பத்து மூன்றாம் வருடம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. அது தமிழ்நாட்டில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆர்ப் பாட்டங்களின் மூலமும், பேரணிகள் மூலமும் தமிழக மக்கள் தங்கள் ஈழத் தமிழர் ஆதரவு உணர்ச்சிகளைக் காட்டினார்கள். அப்போதுதான், ஈழத் தமிழர் பிரச்னை என்பது ஏதோ இலங்கைத் தீவுக்குள் அடங்கும் பிரச்னை அல்ல; அதன் விளைவுகள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.

அதன் பிறகு, இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக எமது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், வேறு சில போராளிக் குழுக்களுக்கும் ஆயுதம் கொடுத்து, ராணுவப் பயிற்சி கொடுத்து எங்களை வளர்த்தது இந்தியா. இது வரலாற்று உண்மை!

அதை நாங்கள் எப்போதும் மறந்ததில்லை. இப்படியாக எங்களுக்குப் பேருதவிகள் செய்து, எங்களை ஒரு விடுதலை அமைப்பாக அங்கீகாரம் செய்து, திம்பு பேச்சு வார்த்தையில் பங்கு பெறச் செய்ததும் இந்தியாதான். அதன் பிறகு பல்வேறு காரணங்களால், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில முரண்பாடுகள் எழுந்தன (இந்த இடத்தில், கவனத்தோடு சில கடந்த கால நிகழ்வுகளைத் தவிர்க்கிறார்).

அதனால், இடைவெளிகள் தோன்றின. சில மனக் கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும், ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.””

“”இந்தியா & புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?””

“”தமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக் காது என்று நாங்கள் உறுதியாக நம்பி னோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந் தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை.

தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்று விக்கும் என்ற அச்சத்தினால், எமது லட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத் தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது.””

“”தற்போது இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?””

“”இந்தியா நேரடியாக இந்தப் பிரச்னையில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் ராணுவ நடவடிக்கையை எடுத்துப் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய ராணுவத்தால் நசுக்க முடியவில்லை. மற்றபடி புலிகள் இயக்கம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பியதில்லை. எங்களுக்கு எதிராக யுத்தம் திணிக்கப்பட்ட காரணத்தால்தான் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோமே தவிர, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங் களைத் தூக்குவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை.

ஏனென்றால், தமிழீழத்தைத் தாய்நாடாகப் பார்க்கும் நாங்கள், இந்தியாவைத் தந்தை நாடாகத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை நிச்சயம் விரைவில் ஏற்படும் என்பதுதான் எனது கருத்து.””

“”ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?””

“”இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

எண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.

நான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள்.

குமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, ‘கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்’ என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்படி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார்.

மறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார்.

நான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது.

அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்!””

சக்தி ஊடகத்திற்கான நேர்காணல் தொகுப்பு

திசெம்பர் 13, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், வீரவணக்கம் | , , , , , | எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா, எங்கள் காட்டில் புலிதான் ராஜா ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #AntonBalasingam #Tamil #Eelam #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மேதகு பிரபாகரன் வளர்த்த வீரத் தமிழச்சிகள் ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte

திசெம்பர் 12, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் | , , , , | மேதகு பிரபாகரன் வளர்த்த வீரத் தமிழச்சிகள் ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது