அழியாச்சுடர்கள்

தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்.!

பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்.
கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.

ஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிக்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். பல கரும்புலிகள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புத சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.

” கரும்புலிகள் ” என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்க்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிக்கும். எனவே கரும்புலி எனும் சொல் பல அர்த்தங்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது. முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன்.

ஜூலை 4, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , , , | தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்.! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகாள் எங்கு சென்றீரோ ! பாடல் காணொளி
மே 18, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பாடல்கள், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , , , | நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகாள் எங்கு சென்றீரோ ! பாடல் காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்!

முள்ளிவாய்க்கால் எம் தேசத்தின் விடியலின் வாசல் தலம்! – ஜனனி (சிறப்பு காணொளி)


நான் ஸ்ரீலங்கன் இல்லை

ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்
எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென

ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை
பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?
வேற்றினம் என்பதனால்தானே
நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர்

ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்
எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென

ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை
பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா?
வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே
நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது

நாமொரு இனம்
எமக்கொரு மொழி
எமக்கென நிலம்
அதிலொரு வாழ்வு

வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே!
உறிஞ்சப்பட்ட குருதியும்
மனிதப்படுகொலைகளும்
அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை?

சுதந்திரம் எவ்வளவு இனிமையானதோ
அதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடி
மாபெரும் விதையாய் புதைந்திருப்பவளே
இன்னும் பல நூறு வருடங்களெனினும்
நான் காத்திருப்பேன்

நீ அறிவாய்
நான் வரலாறு முழுதும் போராடுவேன்
அடிமையை எதிர்த்துக்கொண்டே இருப்பேன்

காதலியே! அடிமையால் என் அடையாளத்தை ஒழிக்க இயலுமோ?
ஆக்கிரமிப்பால் என் தேசத்தை மறைக்க இயலுமோ?
மாபெரும் சுற்றிவளையிலும்
நான் முன்னகர்ந்துகொண்டேயிருப்பேன்

கண்களுக்கு முன்னால் விரிந்திருக்கும்
எனது நாட்டை வேறொரு பெயரால் அழைக்காதே நண்பா!

ஒரு பாலஸ்தீனனை
இஸ்ரேலியரென அழைப்பயா?
என்னை சிறிலங்கன் என்று அழைக்காதே
நான் தமிழீழத்தவன்
எனது நாடு தமிழீழம்

மாபெரும் சமுத்திரத்தில்
தொலைக்கப்பட்ட ஓர் ஊசியினை
தேடியலைவதுபோல
அலைகிறேன் என் தாய்நாட்டைத் தேடி.

தீபச்செல்வன்

நன்றி: தீராநதி மே 2014

முள்ளிவாய்க்கால்…….
ஆண்ட தமிழினம் மாண்டு போன ஈழத்துக் கரை
துரோகத்தால் துண்டாடப்பட்ட தமிழர் நிலம்
கொத்துக் கொத்தாய் குண்டு விழுந்து தமிழர் உயிர் குடித்த நிலப்பரப்பு
ஆண்டுகள் பத்தாயினும் மறக்குமா தமிழினம் அந்த இனப்படுகொலையை!!!
எதை மறப்பது? எப்படி மறப்பது?
ஓன்றா? இரண்டா? கண்முன்னே விரிகின்ற காட்சிகளின் கோரங்கள்!!!

தொப்புள் கொடிச் சொந்தங்களை
தொலைத்து நின்றதை எப்படி மறப்பது?
துள்ளித்திரிந்த சிறுமி சில நொடியில் காலிழந்து வீழ்ந்து
துடித்ததை எப்படி மறப்பது?
கொத்துக்குண்டிற்கு குடும்பமே இரையான
கோரத்தை எப்படி மறப்பது?
கிபிர் சத்தத்திற்கு நாங்கள் பயந்து அழுத அழுகையை எப்படி மறப்பது?

தகிக்கும் வெயிலில் நாங்கள் தறப்பாள் கொட்டிலுக்குள்
அடங்கி இருந்ததை எப்படி மறப்பது?
பால்குடி மாறாத பச்சிளம் குழந்தை தாயை
இழந்து தவித்ததை எப்படி மறப்பது?

பத்துப்பேர் கொண்ட குடும்பத்தில் ஓருவர் மட்டுமே
உயிர் பிழைத்த துரதிஷ்ட வாழ்வை எப்படி மறப்பது?
பதுங்கு குழியினுள் பல இரவுகளைத் தொலைத்து
பயந்தபடியே உறங்கிய பாதி இரவுகளை எப்படி மறப்பது?

பொழியும் எறிகணை மழையிலும் கஞ்சிக்காய் காத்திருந்த
பிஞ்சுகள் மத்தியில் வீழ்ந்து வெடித்த
எறிகணைச் சிதறல்களை எப்படி மறப்பது?

எல்லைச்சாமிகளாய் எம்மைக் காத்த புலிகளை விட்டு
எறிகணை கொண்டு தாக்கியவன் எல்லைக்குள் சென்ற
இழிநிலையை எப்படி மறப்பது?

இருபுறமும் வீங்கி வெடித்துக் கிடந்த பிணங்களின் மத்தியில்
இருகைகளாலும் பிள்ளைகளை அணைத்தபடி
இராணுவ எல்லைக்குள் கூனிக்குறுகியபடி சென்றதை எப்படி மறப்பது?

குடிக்க நீரின்றி, உடலங்கள் மிதந்து கிடந்த நீர்நிலையில்
தண்ணீர் அள்ளிப் பருகிய அவலநிலையை எப்படி மறப்பது?

பசியால் அழுத குழந்தைக்கு பசியாற்ற,
பால்சுரக்காத மார்பைப் பார்த்து பரிதவித்த
தாயின் அவலத்தை எப்படி மறப்பது?

பரந்த வெட்டைவெளியில் குடிக்க நீரின்றி, ஓதுங்க நிழலின்றி
தவித்த தவிப்பை எப்படி மறப்பது?
மறக்க முடியுமா இந்தக் கோரங்களை!!!

காட்சிகளாயும் இனவழிப்பின் சாட்சிகளாயும் இருக்கும் இவை
மறந்து விட்டு நகர்ந்து விடமுடியாத எம் இனத்தின் வலி….
பத்தாண்டுகளாகியும் நீதி கிடைக்காத தமிழினப்படுகொலையை
நினைவு கூரும் இந்நாளில்,
தலைகள் தாழ்த்தி சத்தியம் செய்கிறோம்,
இறந்து போன எம் உறவுகளே!
உங்கள் கனவுகள் சுமந்தே நாங்கள் நடக்கின்றோம்.

உலகின் மௌனம் கலையும் வரைக்கும்
உயிரின் வலியை புரியும் வரைக்கும்
உங்கள் கனவுகள் சுமந்தே நடக்கிறோம்
அன்றும் இன்றும் என்றும் ” தமிழீழமே தமிழர் தாகம் ” என்று
ௐங்கி ஓலிக்கிறோம்….

-இலக்கியா புருசோத்தமன்-

பத்தலையோ….பத்தாண்டுகள் திரும்பலையே…பார்வையின்னும்…….- சுதர்சினி நேசதுரை

அண்டமதில்புவிஒன்று

கண்டமதில்தீவொன்றாம்

சின்னஞ்சிறியஈழமொன்றின்

சத்தமொன்றும்கேட்கலையோ……

கூடுகட்டிவாழ்ந்திருந்த

கூடிஆடிமகிழ்ந்திருந்த

குருவிகளின்ஈனவொலி

குவலயத்தின்காதில்விழவில்லையோ……

பார்ஆண்டபழந்தமிழன்

பாதகத்தார்கைப்பிடியில்

பாடுபட்டுப்போனகதை

பார்த்தவர்கள்யாரும்மிலையோ…..

தேசமெங்கும்சல்லடைகள்

தேகமெங்கும்சன்னங்கள்

கொத்துக்குண்டுகளால்ஈழத்தில்

செத்தவர்களைநீரும்பாக்கலையோ……

செத்தவர்உடலைக்கூட

தொட்டுவிடக்கூடாதென

எலும்புகூடமிஞ்சாமல்

எரிகுண்டுஅழித்ததையும்

தேசத்தின்இளம்வித்துகளும்

தேசம்காத்தவிழுதுகளும்

தேற்றஅங்குயாருமின்றி

தேம்பித்தேம்பிஅழுததையும்……..

பாதகரின்படுகுழியில்பலரையும்

பாதயாத்திரையில்சிலரையும்

பசித்தவயிறுஆற்றாமல்இன்னும்பலரையும்

பார்த்திருக்கப்பிரிந்தோமே அதையும்பாக்கலையோ…..

ஒன்றன்மேல்ஒன்றாக

ஒன்றல்லஓராயிரம்உடலங்களை

ஒருபாடையில்ஒன்றாக்கி

ஒற்றைதீதின்றதையும்பாக்கலையோ….

அல்லோலப்பட்டதேசமக்கள்

அரைவயிறுக்கஞ்சிஇன்றி

காததூரம்போனகதை

கண்உள்ளவரேகாணலையோ………

கண்டிருந்தால்கண்டிருப்போமேவிடிவெள்ளியை

கண்டும்காணததும்போல்இன்றும்

கரைகிறதுகாலவோட்டத்தில்எம்வாழ்வு

கரைசேர்க்கயார்வருவீரோ……..

இழந்தவைஎன்றும்இழந்தவையே

இருப்பதைஇனிஇருப்பாக்குவோம்…..

இத்தனைநாள்இமையாதிருந்தது

ஈழம்மடியில்தலைசாயவே…….

பாராதவிழிகளையும்இங்கு

பேசாதமொழிகளையும்வரைவில்

தேடாதவிரல்களையும்இனி

ஓயாமல்பார்க்கவைப்போம்

எங்கோஒருமூலையில்

ஏதோஒருஇடத்திலென்போர்க்கு

எள்மூக்கின்நுனிஅளவாயினும்

அதுஎம்தேசமெனபறைசாற்றுவோம்

நன்றி

சுதர்சினி நேசதுரை

மே 17, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், உலைக்களம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால் | , , , , , , | மீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் பாடல் -காணொளி

முள்ளிவாய்க்கால் வலிகள்… அழுவதற்கல்ல… எழுவதற்கானதே! – சிவசக்தி

மே 18 உலகில் வாழும் ஈழத்தழிழர் எவராலும் மறந்துபோக முடியாத நாள். இந்த நாளுக்கு பல்வேறு பரிமாணங்கள் காணப்படுகின்றன. சிங்களப் பேரினவாதத்தில் ஊறிய அரசு தமிழ் இனமக்களின் மீது நடத்திமுடித்த உச்சமான இனப்படுகொலை நாளாகவும், மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்த தாயக மண்மீட்புப்போரிலே அவலங்களுடன் மரணித்தவர்களை நினைவுகூருகின்ற நாளாகவும் இந்தநாள் உள்ளது.

மே 18 முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இத்தகைய துயர்மிக்க பட்டறிவுகள் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் ஆறாத்துயரமாகவும் அழியாத வடுவாகவும் பதிந்துள்ளன. உலகவரலாற்றில் பேரிழுக்கை ஏற்படுத்திய, மிகப்பெரிய இனப்படுகொலையாகவும் நேர்மையற்ற வியாகவும் நிகழ்த்தப்பட்ட இந்தப் பேரவலம் நிகழந்து பத்து ஆண்டுகள் ஓடிமறைகின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்வாழும் உரிமை உள்ளது. இது மனிதர்களின் அடிப்படை உரிமை. மனிதர்களுக்கு உரித்தான அடிப்படை மனித உரிமைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஐக்கிய நாடுகளின் அவை சட்டமாக விதித்து வைத்திருக்கின்றது. ஐக்கியநாடுகள் அவையின் சட்டதிட்டங்களைக்கூட மதிக்காமல், நடத்திமுடிக்கப்பட்ட நீதி நெறிமுறையற்ற இந்தப்போரின் அவலங்களும், அழிவுகளும் உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களிலாகவே நோக்குநர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

தமிழினத்திற்கு உரித்தான மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் சிறீலங்காவின் முப்படைகளும் நடத்திய அனைத்துவகையான தாக்குதல்களும் தமிழினத்தை சுத்திகரிப்பு செய்யும் இனப்படுகொலைதான் என்பது ஆதாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் இந்தப் பத்தாண்டுகளில் கூட மனச்சாட்சியற்ற இந்த உலகம் வாய்மூடிக்கிடக்கிறது. உலக வல்லரசுகளின் முழுமையான ஆசிகளுடனும் ஒத்துழைப்புடனும் தான் இலங்கை அரசால் இது நிகழ்த்தப்பட்டது என்பதே இதற்கான காரணமாகும். தமிழினம் இனி எக்காலத்திலும் தமது உரிமைகளை குறித்து வாய்திறக்கக்கூடாது என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த இன அழிப்புத் தாக்குதல்கள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாயகப் பற்றுறுதியோடும், தன்னின எழுச்சியோடும் நெஞ்சம்நிமிர்த்தி நின்ற தமிழ்மக்களையோ, அவர்கள்தம் விடுதலைப் போராட்டத்தையோ அடக்கவோ அழித்தொழிக்கவோ முடியாத பேரினவாதம், உலககிருமிகளுடன் கைகோர்த்தது. கைகோர்த்தது என்பதைவிடவும் அவற்றின் கால்களில் வீழ்ந்தது. இந்நிலையில் தான் அவற்றின் பேருதவியுடன் எங்களின் நிலத்தில் போர்ச் சன்னதமாடியது.

தமிழ் மக்களின் பலம் இருக்கும் வரை விடுதலைக்காக உருக்கொண்டிருக்கும் போராளிகளை அழித்துவிடமுடியாது என்பதை ஈற்றில் சிங்களப்பேரினவாதம் புரிந்துகொண்டது. எனவே, போராளிகளையும் மக்களையும் முதலில் பிரித்துவிடவேண்டும், போராளிகளை மக்கள் வெறுக்கும்வரை அவர்களை தாக்கவேண்டும் என முடிவெடுத்தது. இந்த மலினமான, சூழ்ச்சிகரமான திட்டத்துடன்தான் மாவிலாற்றில் போரை பேரினவாதம் ஊதிமூட்டியது. இதன்படியே தமிழ்மக்களின் வாழ்விடங்கள் மீது அரசின் முப்படைகளும் மூச்சுவிடாமற் தாக்குதல்களைத் தொடுத்தன.

மக்களை இலக்குவைப்பதற்காகவே மக்கள் நடுவேயிருந்த தொண்டு நிறுவனங்களை அரசு அகற்றியது. அப்போது அந்த தொண்டுநிறுவனங்களை வெளியேறவேண்டாமென மக்கள் ஒன்றுதிரண்டு வேண்டுகை விடுத்தனர். ஆனாலும் அவை வெளியேறின. இதன் பின்னர்தான், வான்படை விமானங்கள் தமிழர்நிலத்தில் பரவலாக குண்டுகளை இரவுபகலின்றிக் கொட்டின. மக்களின் வாழ்விடங்களும், சொத்துகளும், உயிர்களும் அழிந்து நாசமாகின. அந்தப் போரின் இறுதிநாட்கள் மிக அவலமானவை. மக்கள்நிறைந்த நிலப்பரப்பு குறுகக்குறுக படையினரின் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. கொத்துக் குண்டுகள், எரிகுண்டுகள் எனபலநூறு வகையான குண்டுகள் மக்கள்மீது படையினரால் ஏவப்பட்டன. முள்ளிவாய்க்கால் பெருங் கொலைக்களமாகி மக்களைப் பலியெடுத்தது.

தமிழர்நிலம் குருதிச்சேறாகியது. ஒவ்வொரு மனித உடலிலும் எண்ணற்ற குண்டுகளின் சிதறல்கள். உணவின்றி, மருந்தின்றி மக்கள் அனைவரும் பரிதவித்த அவலம் நடந்தேறியது. ஈழத் தமிழினத்தின் உடலுறுப்புகள் சிதைந்தநிலையில் அவ் உடல்கள் வகைதொகையின்றிக் கிடந்ததை செய்மதிக் காட்சிகளில் பார்த்தும் உலகம் மௌனித்துக் கிடந்தது. போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்த மக்களை அழித்துக்கொண்டு, தாம் பயங்கரவாதிகளை அழிப்பதாக பேரினவாத அரசியற் தலைமை பொய்யுரைத்தது.

உலகின் திசைகளையெல்லாம் நோக்கி தமிழ்மக்கள் அபயக்குரல் எழுப்பியபோதும், நல்நெஞ்சம் கொண்ட சில நாடுகள் போரை நிறுத்தி அழிவிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டியும், இனவாத அரசு அவற்றையெல்லாம் நிராகரித்தது. தமிழ்மக்களைப்பொறுத்தவரை, இந்த அவலங்கள் உயிருள்ளவரை மறக்கமுடியாதவை.

காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் உலகை நனைக்கிறது. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், தமிழ்மக்களுக்கான நியாயத்தை பேசுபவர்களாக எவருமில்லை.

முள்ளிவாய்க்காலில் மிஞ்சிய மக்கள் இன்னும் இலக்கு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேரினத்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட அண்மைக்கால நடவடிக்கைகள் அதையே உறுதிசெய்கின்றன. அரசு நடைமுறைப்படுத்தும் அனைத்து திட்டங்களும் சட்டங்களும் தமிழினத்தவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அண்மையில் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கைது
நடவடிக்கை தமிழர்களை அச்சுறுத்தும் செயற்றிட்டம் என்பதை அடித்துக் கூறலாம்.

ஒருபுறம் தமிழர்களை சட்டங்களால் அச்சுறுத்திக்கொண்டு, மறுபுறத்தே தமிழ் இனத்தவரின்; இன அடையாளங்களை அழிப்பதிலும், இளைய தலைமுறையை நன்கு திட்டமிட்டு சீரழியச் செய்வதிலும் சிங்கள இனவாதம் இன்றும் முனைப்புடனே இருக்கின்றது. இதற்காகவே எங்கள் இளைய தலைமுறையினர் இலக்குவைக்கப்படுகின்றனர்.

தன்னினத்தையும்; பற்றிச் சிந்திக்கும் இளையவரை சட்டங்களினால் நசுக்கிக்கொண்டு, எஞ்சிய இளையோரை திசைதிருப்பும் நடவடிக்கைகளும் முடுக்கப்பட்டுள்ளன.தாமும் உயர்ந்து தாய்நாட்டையும் உயர்த்தவேண்டிய குறிப்பிட்டளவு இளையதலைமுறையினரின் சிந்தனைகள்
முடக்கப்பட்டு, செயலற்றுக்கிடக்கின்றன. போதைப்பொருட்பாவனையிலும், சந்திச் சண்டைகளிலும் இவர்களை நாட்டங்கொள்ளச் செய்யும் உத்திகள் மலிந்துவிட்டுள்ளன. போதைப்பொருட்களும், பாலுணர்வைத்தூண்டும் காட்சிகளும் இளையவர்களிடம் அடையச்செய்யப்பட்டுள்ளன. தமிழ்மக்கள் ஒன்றாகி விடக்கூடாது என்ற நோக்கத்துடன், ஆங்காங்கே பேரினவாதம் கொளுத்திவிடும் சூழ்ச்சிக்குண்டால் தமிழ்மக்களின் ஒற்றுமை வெடிப்புற்று நிற்கின்றது. தாய்நிலம் தவிக்கும்போதெல்லாம் தம்கரங்கொண்டு அவர்களை உயர்த்திவிடும் பேரன்புமிக்கவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள். இதனைச் சரியாக இனங்கண்டு, புலம்பெயர்ந்து வாழும்தமிழர்களையும் தாய்நிலத்தில் வாழும் தமிழர்களையும் பிரிக்கும் நடவடிக்கைகளையும் பேரினவாதம் முன்னெடுக்கிறது. தமிழ்மக்களை ஒன்றுபட்ட சக்தியாக உலகஅரங்கில் உருவெடுக்கவிடக்கூடாது. தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழரின் தாய்நிலம் உலகநாடுகளின் அங்கீகாரத்தைப்பெற்றுவிடும் என பேரினவாதம் அஞ்சுகிறது. எனவேதான், தமிழர்களை திட்டமிட்டு அவர்களுக்குள்ளேயே முரண்பட்டு, கருத்துவேறுபாடுகளைப் புகுத்தி சிறுசிறு அணிகளாக்குகிறது.

இந்தச் சூழ்ச்சியை தமிழ்மக்கள் நன்குணர்ந்து கொள்ளவேண்டும். இத்தனை மோசமான இனஅழிப்பின்பின்னரும் நாங்கள் பிளவுபட்டு சிதறிக்கிடப்போமானால், அதுவே எமது இனத்துக்கு செய்யும் மாபெரும் தீங்காக அமையும். மாபெரும் இனஅழிப்பை நடத்தி முடித்தது மட்டுமன்றி, அதனை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிடும் கைங்கரியத்தையும் பேரினவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இனத்தின் விடியலுக்காக எழுந்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, தமது இன அழிப்புக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர். ஒருபுறம் தமிழர்களுக்குள் கருத்துமுரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டு, மறுபுறத்தே பிளவுகளை ஏற்படுத்தி எமது இனத்தின் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைக்கின்றது சிங்களப்பேரினவாதம். தனித்தவமான கலையும் பண்பாடும் உயர்விழுமியங்களும் மிக்க எம்மினம் அழிந்துபோய்விடக்கூடாது. கலையும் பண்பாடும் பேரொழுக்க விழுமியங்களும் கொண்ட உன்னதமான இனத்தின் பங்காளிகள் நாங்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும்மறந்துபோகக் கூடாது. முள்ளிவாய்க்கால் துயரங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.

எண்ணற்ற ஈகங்களாலும், ஒப்புவிப்புகளாலும் உலகமுற்றத்திற்கு எடுத்துவரப்பட்டது எமது போராட்டம். ஒருகாலத்தில் உலகநாடுகள் இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை என எண்ணியிருந்த எமது பிரச்சினையை தமது உயிர்களாலும் குருதியாலும் உலகத்திற்கு கொண்டுவந்தவர்கள் எம்மவர்கள். இவர்கள் அனைவரும் எமது இனத்தவர்கள். இவர்கள் செய்த உயிர்த்தியாகம் அனைத்தும் எமது நல்வாழ்விற்காக என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டியர்களாக இருக்கின்றோம். எமது இனத்தின் விடுதலைவேண்டிய உணர்வை முன்னெடுத்து செல்பவர்களாகவும், எடுத்துக்காட்டானவர்களாகவும் வாழவேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு.

போரின் கொடூரமான பாதிப்புகளுக்கு உட்பட்டு எமது இன உறவுகள் இன்னமும் அவலங்களுடன் வாழ்கின்றார்கள். வலிகளும் வாழ்வுத்துயரங்களுமே எம்மினத்தை சாபங்களாக அழுத்திக்கொண்டிருக்கின்றன. தமிழ்மக்களின் உயிர்வாழும் உரிமையும் அடிப்படைச் சுதந்திரங்களும் பறிபோனநிலை தொடர்கிறது. படையினரிடம் சரணடைபவர்களை விரைவில் குடும்பத்துடன் இணைய அனுமதிப்போம் ‘ என்கின்ற அறிவிப்பை நம்பி, தம்பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்தனர் பெற்றோர்கள். அவர்களுடன் குழந்தைகள் கூட காணாமலாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் உரிமைகள்குறித்து வாய்கிழிய பேசுபவர்களும், சிறுவர்களுக்காக பரிந்துநிற்பதுபோல பாசாங்கு செய்பவர்களும் போரில் படையினரால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, இன்றும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழினக் குழந்தைகள் குறித்து பேசுவதில்லை. இவர்களின் பெற்றவர்கள் இன்று வடிக்கும் கண்ணீரின் வலிகொடியது. அவர்களிற் பலர் ஏக்கத்தினாலும் தவிப்பினாலும் துயரத்தினாலும் மரணமடைந்துவிட்டனர்.இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவுநாளில், எமக்கு இழைக்கப்பட்ட அநீதி உலகம் முழுமைக்கும் தெரிந்ததே.

ஆனால் பேரினவாதம் நிகழ்த்திய படுகொலைகளில் தாமு தாமும் பங்காளிகளானதால் வாய்மூடிக்கிடக்கிறது உலகம்.எமக்கான நீதியை வழங்குமாறு உலகநாடுகளை நிர்ப்பந்திப்போம். தமிழர்கள் உணர்வால் ஒன்றிணைந்தால் உலகமனச்சாட்சியை உலுப்ப முடியும். போர்க்கருவிகள் அனைத்தும் மௌனித்துவிட்ட நிலையில், எங்களின் ஒன்றிணைந்த குரல் உயர்ந்தெழவேண்டும். இதுவே இத்தனைகாலமும் உயிரீந்த எமது அனைத்து உறவுகளுக்குமான உண்மையான, உன்னதமான நினைவுவணக்கமாக அமையும்.

மே 17, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பாடல்கள், முள்ளிவாய்க்கால் | , , , , , , | முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் பாடல் -காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மே 18 இல் முள்ளிவாய்க்கால் கஞ்சி உண்போம்!

இனவழிப்பின் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட உணவையே நினைவேந்தலின் வடிவமாக்குவோம்; மே 18 இல் முள்ளிவாய்க்கால் கஞ்சி உண்போம்!

மே 17, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால் | , , , , , | மே 18 இல் முள்ளிவாய்க்கால் கஞ்சி உண்போம்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது