அழியாச்சுடர்கள்

எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்………

திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லா உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார். திருமலை மக்கள் மனதில் இன்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார்.அவர் பழகிய மக்கள் எல்லோரும் அவரின் மனதினை பாராட்டுகிறார்கள். பின்னர் தலைவர் மணலாறு காட்டில் இருந்த பொழுது அவரின் பாதுகாப்பு பணியில் நின்றார். தலைவரின் உடலில் எந்த கீறும் வராமல் பாதுகாத்த பெருமை இவரையும் சாரும்.

1990 இல் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அப்பொழுது துணை பொறுப்பாளராக தலைவர் அவர்களால் கபிலம்மான் நியமிக்க பட்டார்.இதில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் எதிரிக்கோ அல்லது பெரும்பாலான மக்களுக்கோ இவரின் முகாம் தெரியாது. அவ்வாறு தனது அடயாளம் யாருக்கும் தெரிய கூடாது என்று என்றும் விழிப்பாக இருப்பார் .இவ்வாறு மிகவும் திறமையாக பல வெற்றிகர தாக்குதல்களை எதிரியின் பகுதிக்குள் செய்தவர் . 1993 ம ஆண்டு அச்சுவேலி கதிரிப்பாய் வளலாய் போன்ற பகுதிகளிக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலுக்கு நிர்வாக பொறுப்பாக இருந்தவர்.தன்னுடன் இருந்த போராளிகளின் நலன்களில் அக்கறையாக இருந்து அவர்கட்கு ஏற்படும் துன்பங்களில் தானும் ஒருவனாக இருந்து அவர்கட்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு நல்ல பொறுப்பாளனாக இருந்தவர்.

அவரை தேடி அல்லது எதோ ஒரு தேவை கருதி தன்னுடைய முகாம் வரும் மக்களை அதற்காக அமைத்திருக்கும் இடத்தில் அமர வைத்து முதலில் அவர்கட்கு எதாவது அருந்த கொடுத்து விட்டு அதன் பின்னர் தன்னுடன் நிற்கும் ஒரு போராளியை அனுப்பி அவர்களின் வேண்டுதலை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் அந்த பண்பு அவரையே சாரும். சிலவேளைகளில் சில மக்கள் தங்களின் வறுமை நிலைமைகளை சொல்லும் போது அவர்கட்கு பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவி செய்வார். தேச துரோகிகள் என்று தண்டனை வழங்க பட்ட வர்களின் குடும்பங்கள் விடுதலை புலிகளினை ஒரு தவறான அமைப்பாக கருத கூடாது என்பதற்காக அவர்கட்கு தண்டனை வழங்கப்பட்டவர்களின் துரோக செயல் பத்தி தெளிவு படுத்தி வறுமையால் துன்பப்படும் குடும்பகட்கு பண உதவி செய்து நல்லா ஒரு நட்புறவுடன் வாழ்ந்தவர். எந்த மக்களும் இலகுவாக சந்திக்க கூடிய ஒருவர் என்றால் கபிலம்மான் தான் .

மக்களால் அனுப்பப்படும் கடிதங்களை வாசித்து அவர்களின் குறைகளை அறிவதற்கு நேரடியாக தன்னுடைய போராளிகளில் ஒருவரை அவர்களின் வீட்டுக்கு அனுப்புவர் அதன் பின்னர் அவர்கட்கான அந்த முடிவை தன்னால் முடிந்தால் செய்வார் அல்லது அதை தலைவருக்கு அனுப்பி முடிவு காண்பார். இவ்வாறு மக்கள் எப்பொதும் அமைப்பின் மீது நல்ல ஒரு அவிப்பிராயம் இருக்கா வேணும் என்பதில் அக்கறையா இருப்பார். போராளிகட்கும் நல்ல ஒரு ஆலோசகராக அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்குவார். தன்னுடன் நிக்கும் போராளிகளின் வளர்ச்சியில் என்றும் அக்கறையா இருப்பார். தலைவரால் பாதுகாப்புக்கு போராளிகளை வைத்து கொள்ளுமாறு சொன்ன போது அதை விரும்பாமல் அதை மறுத்தவர். அதற்கு காரணம் கேட்ட போது எனக்கென ஒரு போராளி என்னுடன் நின்று என்னை பார்த்து கொள்ளும் வேலையே மட்டும் செய்வான். அவன் வளருவதற்கான எந்த வழியும் இருக்காது எனவே அது எனக்கு வேண்டாம. என்று இறுதி வரை வாழ்ந்தவர்.

இப்படித்தான் ஒரு முறை வேலை விடயமாக செம்மலை சென்ற போது தன்னுடன் இரண்டு போராளிகளை அழைத்து சென்றார்.இடையில் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வாகனம் ஒன்றில் வந்துகொண்டிருந்தார். இவரை கண்டதும் வாகனத்தை நிறுத்தினார். கபிலம்மான் வாகனத்தில் இருந்து இறங்கிய போது பின்னால்இருந்த மேஜர் எழிலரசன் என்ற போராளி உடனே இறங்கி அவருக்கு பின்னால சென்றான் . திரும்பி பார்த்த கபிலம்மான் ”நில்லு ஏன் இப்ப பின்னால வாறாய் போய் வாகனத்தில் இரு பார்ப்பம்” என்று தனக்கு தானே பாதுகாப்பு என்று வேற யாரும் தனக்காக தங்களது நேரத்தினையும் வீணாக்க கூடாது என்பது அவரின் பெரும் தன்மை. தலைவர் அவர்கள் மூத்த தளபதிகளுக்கு பிஸ்டல்வழங்கினார் அதனை தனது இடுப்பில் என்றும் அணிந்ததில்லை எங்கு போனாலும் கொண்டும் செல்வதில்லை. இவ்வாறு என்றும் எளிமையாக வாழ வேண்டும் என்பது அவரின் கொள்கை .

2000 இல் மட்டக்களப்பில் மற்றும் தென்னிலங்கையில் இருந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தி விட்டு ஈழம் திரும்பிய மற்றுமொரு தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் வெளியக பொறுப்பாளராக நியமிக்க பட்டார். இவ்வேளை சாள்ஸ் அவர்களின் நிர்வாகத்தில் சில மாதங்கள் பணி செய்தார். அதன் பின்னர் தனியாக வெளியக வேலைகளை செய்தார். இவ்வேளை இவருக்காக புதிய பிக்கப் வாகனம் கொடுக்கபட்டது .ஆனால் அந்த வாகனத்தில் அவர் சென்ற நாட்களே குறைவு. வேலை ரீதியாக பயன்படுத்தியவர்களின் தயார் படுத்தலுக்காகவே அந்த வாகனம் பயன்படுத்த பட்டது அதிகம். அவரின் முகாமில் இருந்து தனது வீடு செல்வதானால் கூட மிதி வண்டியில் அல்லது போராளிகளினை கொண்டு சென்று விடும் படி கேட்டு செல்வார். வாகனத்தை தனது விட்டுக்கு கொண்டு போனதே இல்லை. ஒருமுறை யாரிடம் உதவி கேட்காமல் நடந்தே வீடு சென்றவர்.இவாறு பல தடவை .யாருக்கும் தன்னால் கஷ்டம் இருக்கா கூடாது என்பது அவரின் எண்ணம்..

உண்மையில் அவர் வாழ்ந்த வீடு மிகவும் சின்னது. ஓலையால் மேயப்பட்டது. அவருக்கு பலர் பல தடவை உங்களின் வீட்டை கொஞ்சம் பெரிதாக்கி ஓலைய விட்டு சீட் போடலாம் அல்லது ஓடு போடலாம். இவ்வாறு சொன்னவர்கள் அவரின் நண்பர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் .தாங்கள் நிதி உதவி செய்கிறோம். நண்பன் என்ற ரீதியில் அதற்கு அவர் சொன்ன விளக்கம் நான் மக்களுக்காக போராட வந்தவன் இறுதிவரை அவர்கட்காக போராடி சாக போறவன். இறுதிவரை எளிமையாக வாழவே விரும்புகிறேன் ஏனென்றால் நான் அப்படி ஆடம்பரமாக வாழ்ந்தால் அது எமது அமைப்பின் பணமாக மக்கள் கருத நேரிடும் அப்படி அவர்கள் கருதுவது பிழையும் அல்ல. ஏன் மீது யாரும் எந்த குறையும் சொல்ல கூடாது அதற்கு நான் சந்தர்பம் கொடுக்க மாட்டன். என்று பதிலளித்தார் கபிலம்மான்.

இவ்வாறுதான் ஒரு முறை லண்டன் இல் இருந்து அவரின் நண்பன் ஒருவர் வந்தார் முகாம் வந்தவர் நீண்ட நேரமாக பேசிவிட்டு போகும் போது சிறு தொகை பணத்தை அவரிடம் கொடுத்து இதை உங்கள் போராளிகளின் முகாம் தேவைகட்கும் மேலும் கொஞ்சம் பணத்தை கொடுத்து இது நண்பனாக உங்கள் தனிபட்ட தேவைகட்கு என்று சொல்லி கொடுத்தார் .எல்லாவற்றையும் வாங்கிய அம்மான் ஒரு போராளியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் கணக்கில் எழுதி முகாம் செலவுக்கு பாவியுங்கள் என்று கூறினார். நண்பனுக்கு மிகவும் சந்தோசம் என்ன அம்மான் என்னும் நீங்க மாறவே இல்லை என்று கூறி விட்டு சென்றார். இப்படியாக வாழ்ந்த பெரு மனிதன் கபிலம்மான். என்னும் நிறைய சொல்லலாம் வார்த்தைகள் இல்லை.

கபிலம்மானுக்கு அழகான பெண் குழந்தை அவரின் சிரிப்பு எல்லாம் அந்த குழந்தையில் தான் காணலாம் போராளிகளின் சிறு பிள்ளைகள் பராமரிப்பதற்காக தளிர் எனும் இடம் உள்ளது அங்கே எப்போதும் காலையில் கொண்டுபோய் விடனும் பெரும்பாலான போராளிகளின் பிள்ளைகள் எதோ ஒரு வாகனத்தில் வருவார்கள். இதை அவதானித்த பிள்ளை கபிலம்மானிடம் ”அப்பா எல்லா பிள்ளைகளும் வாகனத்தில் வருகிறார்கள் நான் மட்டும் மிதிவண்டியில் தான் போகிறன் ஏனப்பா என்னையும் உங்கட வாகனத்தில் கொண்டுபோய் விடலாம் தானே” என்று கேட்டது அதற்கு அம்மான் ” இல்லை அது உதுக்கெல்லாம் பாவிக்க கூடாது நீங்க மிதி வண்டியிலே போங்கோ பிறகு நாங்கள் ஒரு வண்டி வாங்குவம்” என்று சொல்லி சமாளித்து விட்டார் . அவ்வாறு என்றைக்கும் தனது சுகபோகங்கட்கு இயக்க சொத்தை பாவித்து இல்லை. எளிமையாக வாழ்ந்தவர்

அவரின் வீரம் செறிந்த தாக்குதல்களை பாதுகாப்பு கருதி பிரசுரிக்க முடியாது மக்கள் மகிழ்ந்த பல தாக்குதல்களை செய்து விட்டு இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த வீரன் .தளபதி இறுதி சமரில் இவரின் பயணம் பாதுகாப்பாக அமைந்து விட்டதா இல்லையா என்பது தெரியாது. அவரின் இன்றைய நிலை தெரியவில்லை இருந்தும் அவருக்கு பிரிகேடியர் என்ற அந்த உயரிய நிலையை வழங்குவதில் பெருமை அடைகின்றோம்.

கபிலம்மானின் அந்த உயரிய பண்பு வீரம் விடுதலையை பெற்று தரும் ………………

அன்புடன்

சக போராளி.

திசெம்பர் 28, 2023 Posted by | தமிழீழம், வீரவணக்கம் | , , , , | எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் [ மார்ச் 26, 2007 ]

https://dailymotion.com/video/x6x8v3z

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.

வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.

செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 – இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை
ஆகஸ்டு 11, 2006 – யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 – அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26 மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.

26 ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ளகொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர்கொல்லப்பட்டனர்.

நன்றி..

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

            

     

மார்ச் 26, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவரலாறு | , , , , | வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 07 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 07)

தலைவர் பிரபாகரன் அவர்களின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமும் – தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இந்தியாவும் – தாயகம் திரும்பிய சிறுத்தை தலைவரும்

கடந்த பாகத்தில் திம்பு பேச்சு வார்த்தை பற்றியும் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டது பற்றியும் பாத்திருந்தோம் இந்த பாகத்தில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பற்றியும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

சென்னை ராயப்பேட்டையில் இடம்பெற்ற கைதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதால் சென்னையில் பதற்றம் நிலவ தொடங்கியது. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆயுதப் போராட்ட இயக்கத்தின் மாபெரும் தலைவர், சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான சிறுத்தை தலைவர், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ஆம் நாள் தொடங்கினார்.

அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார்.

இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒரு நாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். ‘அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே’ – என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள்.

இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!’ என்றார்.

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்-
உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள்.

தலைவர் பிரபாகரன்” உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார்.

இதேவேளை தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ஆம் ஆண்டு தை 3ஆம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் “இரட்சகர்” என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி முதலாம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில்,

“நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்” என்றார்.”

சிறுத்தைப்புலி தலைவனின் பாய்ச்சல் தொடரும்..

வரலாற்று பதிவில் இருந்து ஈழம் புகழ் மாறன்

ஈழப்பறவைகள்

மார்ச் 6, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பிரபாகரன் | , , , , , | தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 07 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வீரவரலாறு – காணொளிகள்

குறும் வரலாறு

முழுநீளக் காணொளிகள்

திசெம்பர் 13, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவணக்கம் | , , , , , , | தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வீரவரலாறு – காணொளிகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்?

    வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்? என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.

இதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுவதோ, தகனம் செய்யப்படுவதோ நடந்து வந்தது. ஆனால், இனிமேல் வீரமரணமடையும் அனைத்துப் புலிவீரர்களின் உடல்களையும் புதைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப் போராளியின் பெயர் கூறும் கல்லறைகள் எழுப்பப்பட்டு அவை தேசிய நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும். இவைகள் காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

தாங்கள் வீரமரணமடைந்தால் தங்களுடைய உடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைத்து அங்கே நினைவுக்கற்கள் நாட்டப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும். இந்த விருப்பம் மிக அண்மையில் ஏற்பட்ட தொன்றல்ல. இந்திய – புலிகள் போர்க் காலத்தில் வன்னிக் காட்டுக்குள்ளேயே போராளிகளின் இவ் விருப்பங்கள் வெளிப்படத் தொடங்கி விட்டன. பிரதானமாகத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த மணலாற்று காட்டுக்குள்ளேயே இவ் விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் செயல்வடிவங்களும் கொடுக்கப்பட்டது.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக கடும் சமர்கள் நடந்த இடம் மணலாறு என்பது தெரிந்ததே. இந்தியப் படைகளுடனான போரில் நாம் சந்தித்த வெற்றிக்கு அத்திவாரமாக இருந்தது மணலாற்றுக் காட்டில் நாம்கண்ட வெற்றிதான். இந்தச் சமர்களில் எமது போராளிகள் பெற்ற வெற்றிக்கு மணலாற்றுக்காடு உறுதுணையாக இருந்தது. இதனால் தங்களுடைய போராட்ட வாழ்வில் ஒன்றிக்கலந்து உறுதுணையாக இருந்த அந்த நிலத்திலேயே தங்களது உடல்களும் புதைக்கப்பட வேண்டும் எனப் போராளிகள் விரும்பினார்கள்.

மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய போராளிகள் பலர் தாங்கள் எங்கேசென்று போராடி வீரமரணமடைந்தாலும் தங்களது உடல்கள் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குள்தான் புதைக்கப்படவேண்டும் என எழுத்து மூலம், வாய் மூலம் தலைவர் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படியே அவர்களது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இதன் காரணமாக இன்று மணலாற்றுக் காட்டுக்குள் பெரியதொரு மாவீரர் துயிலும் இல்லம் போராட்டக் கதைகளைக் கூறிக்கொண்டே இருக்கின்றது. இதேபோன்று மற்றைய மாவட்டங்களிலும் சிறிய சிறிய அளவுகளில் காடுகளுக்குள் போராளிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இவ்விதம் தங்களது உடல்கள் சொந்த மண்ணுடன் கலக்கப்பட வேண்டும் என்ற போரளிகளது மன விருப்பத்தையும் அதன் பின்னால் இருந்த ஆத்மதிருப்தியையும் பார்த்தோம். இனி போராளிகளது உடல்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் இடையில் இருக்கும் மானிட உணர்வுகளையும், அதன் பிரதிபலிப்புக்களையும், மனோவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பார்ப்போம். அப்போது பாரிய உண்மைகளை நாம் கண்டுகொள்ளலாம்.

மரபு வழியாக தமிழர்களிடம் இருந்துவரும் சம்பிரதாயங்களின்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை என அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த வாதத்தை இம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த போராளிகள் விடயத்தில் ஒப்புநோக்க முடியாது. போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.

அதாவது, போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன்படும். எனவேதான் போராளிகளது உடல்களைப் புதைத்து கல்லறைகளை எழுப்பி அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச் சின்னமாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகின்றோம். இன்றுவரை 3750ற்கும் மேற்பட்ட புலிவீரர்கள் வீரமரணமடைந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தால் எமது விடுதலைப் போராட்டம் உயர்ந்ததொரு கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இவர்களது நினைவை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் சின்னங்கள் எம்மிடம் உண்டா? எனக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் கிடைக்கும்.

இப் போராளிகள் அனைவருக்கும் அவர்கள் பெயர் கூறும் கல்லறைகள் கட்டப்பட்டால் அவற்றைக் கண்ணுறும் அனைத்து மக்களும் சுதந்திரத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்வதுடன் அதை வென்றெடுக்க போராளிகள் கொடுத்த உயிர்விலையையும் உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்வார்கள்.

அன்பிற்குரிய எமது பெற்றோர்களே, மக்களே!

எமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு காலங்காலமாக இருந்து வந்த சம்பிரதாயம், சாஸ்திரங்களுக்கு முரணாக இருக்கிறது என நீங்கள் கருதலாம். ஆனால், உங்களது பிள்ளைகளான புலிவீரர்கள் இந்தச் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொதுச் சொத்தாக, பொக்கிசமாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, எமது சக தோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதைப் பாதித்திருக்கின்றன. அதாவது, பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்டிருக்கின்றோம். என்னதான் எமது தோழர்கள் சூழ்ந்து நின்று தகன நிகழ்சியை நடத்தினாலும்கூட, அப் போராளியைப் பெற்றெடுத்து – சீராட்டி வளர்த்தெடுத்த தாய் – தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ இல்லாதது எமது மனதை நெருடுகின்றது. போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வரமுடியாது விட்டாலும் நாளை இப் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக் காட்டப் போகின்றோம்? ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம்? அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும், அங்கலாய்ப்பையும் அனுபவவாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம்.

எனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காது விட்டாலும் கூட அவனது உடல் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஓரளவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவி செய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப் பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள். கல்லறைகளை அமைத்து அடிக்கடி அங்கே செல்வது சோகத்தை தொடர்ந்தும் மனங்களில் வைத்திருப்பதற்காகவா? என ஒரு கேள்வி எழலாம்.

அன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானது தான். ஆனால் அந்தச் சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாது தானே! கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும். எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக புதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா? என யாராவது வினா எழுப்பலாம்.

நீண்டகாலம் தொட்டு இருந்து வரும் தகனம் செய்வது தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானுற்று இலக்கியமும் ஈமத்தாழி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் இதை நிரூபிக்கப் போதுமானது.
ஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும், உண்மையில் இந்த முறையை ஒரு சமூக சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டும் பொருந்தும். இது பொதுமக்களிற்கல்ல. எனவே இங்கே பண்பாட்டுப்பிரச்சனை எழநியாயமில்லை. அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக் கிரியை நிகழ்ச்சி அல்ல, அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சரித்திர தியாகத்தின் சின்னம்.

சரி அப்படி புதைத்து எழுப்பப்பட்ட கல்லறைகளை இராணுவம் அழிக்காதா? அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா? எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா? எனவும் கேள்வி எழலாம். தியாகி சிவகுமாரனுக்கு உரும்பராயில் அமைக்கப்பட்ட சிலையையும் மன்னார் தளபதி லெப்.கேணல் விக்டரது கல்லறையையும் சிங்களப் படைகள் சிதைத்ததையும் மனதில் வைத்து மேற்குறித்த கேள்விகள் எழுவது நியாயமானது.

போரில் கொல்லப்பட்ட எதிரி இராணுவ வீரனது கல்லறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண போர் தர்மம். ஆனால் அதை சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கும் என உறுதி கூறமுடியாதுதான். ஆக்கிரமிப்பு இராணுவமாக இங்கு செயற்பட்டு அதானால் இங்கு கொல்லப்பட்ட இந்திய ஜவான்களுக்காக இந்திய அரசு எமது மண்ணிலேயே அமைத்த நினைவுச் சின்னங்களை இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்ட பின்பும்கூட நாம் உடைத்தெறியவில்லை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.

ஆனால், எமது மண்ணில் எமது போராளிகளுக்கு எமது மக்கள் அமைத்த நினைவுத் துண்களையும், கல்லறைகளையும் சிங்கள இராணுவம் உடைத்தெறிவதையிட்டு நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் அதையிட்டு சிங்கள இனம் வெட்கப்படட்டும். இறுதியாக ஒன்று சொல்கிறோம். முழுமையாகவே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது தாய்மண்ணை விடுவிக்கும் போரில் வீரமரணமடையும் ஒரு வேங்கை கேட்பது ஆறு அடி நிலத்தை மட்டுமே.

விடுதலைப் புலிகள்
(ஐப்பசி – கார்த்திகை 1991)

http://eelavarkural.blogspot.com/2008/09/blog-post_505.html

நவம்பர் 21, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழீழ கட்டமைப்புகள், தமிழீழச் சின்னங்கள், மாவீரர் நாள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , | போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது