அழியாச்சுடர்கள்

தேசியத் தலைவர் முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte

குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த போது முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. இந்தியாவின் பிரசித்திபெற்ற ‘சண்டே’ (SUNDAY) எனப்படும் ஆங்கில வார ஏடு (11 – 17, மார்ச், 1984) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் இந்த நேர்காணலை பிரசுரித்தது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்தை அட்டையில் தாங்கி, மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்த பெரிதும் உதவியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கம், கொள்கைத் திட்டம், ஆயுதப் போராட்ட வடிவம், மற்றும் அன்றைய காலத்து அரசியல் சூழ்நிலை, ஆகிய விடயங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இந்த நேர்காணலில் மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். பிரபல இந்திய பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் இந்த நேர்காணல் முன்னுரையில் தேசியத் தலைவரைப் பற்றி குறிப்பிடுகையில், “இவர் அன்பானவர்; பண்பானவர். மிகவும் பலம்வாய்ந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் அவர் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்குகிறார்” என கூறியிருந்தார். ஆங்கிலத்தில் வெளியான இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

கேள்வி: வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?

பதில்: இலங்கையின் சனநாயகப் பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப்போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது. இந்த அரச அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும் துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எம்மக்கள் நடத்திய சாத்வீக சனநாயகப் போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாகத் தங்களை விடுவித்துக்கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுதப் போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால் தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்களது நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

பதில்: நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவிலிருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாகக் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்.

கேள்வி: எந்தக் கட்டத்தில் நீங்கள் பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை இழந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையைச் சிதைத்தது எது?

பதில்: எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த கால கட்டத்தில் தான் நான் அரசியலில் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் துன்ப, துயரங்களை ஈவிரக்கமின்றி முற்றிலும் புறக்கணித்து வந்த காரணத்தினால் பாராளுமன்ற அரசியலில் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.

கேள்வி: நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை எவ்வாறு ஆரம்பித்தீர்கள்?

பதில்: எம் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்பதில் முழுமையான நம்பிக்கையுடைய புரட்சிகர இளைஞர்களின் துணையுடன் தான் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தேன்.

கேள்வி: உங்களைப் ‘புலிகள்’ என்று ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள் ?

பதில்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கெரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.

கேள்வி: நீங்கள் “விடுதலைப் புலிகள்” இயக்கத்தை ஆரம்பித்த போது உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் அதனை எவ்வாறு வரவேற்றனர்?

பதில்: விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்ததுமே நான் தலைமறைவாக இயங்கி வந்தேன். அத்துடன் எனக்கும் குடும்பத்தாருக்கும் இருந்த தொடர்பு அறுந்து விட்டது.

கேள்வி: உங்கள் குடும்பத்தாரைக் கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்? உங்கள் தலைமறைவு வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்களா?

பதில்: என் குடும்பத்தாரை நான் சந்தித்துப் பதினொரு வருடங்கள் ஆகி விட்டன. சாதாரண வாழ்க்கை நடத்தும் சாமான்யனாக அவர்கள் என்னைக் கருதுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய தலைமறைவுக் கெரிலாப் போராளி வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

கேள்வி: 12 வருடகாலப் போராட்டத்தின் பின், உங்கள் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கும் கட்டத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: இந்த நீண்ட போராட்டத்தின் பின் எமது இலட்சியத்தை நோக்கி நாங்கள் வேகமாக விரைந்து கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். ஜூலை 1983 பேரழிவுகள் தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் ஒரே இலட்சியத்தின் கீழ் ஒன்றிணைத்துவிட்டன. எமது இயக்கத்தின் ஆயுதப்போராட்டத் திட்டத்திற்கு மக்களின் பேராதரவு பெருகி வருகிறது.

கேள்வி: கடந்த 12 வருடகால அனுபவங்கள் உங்களைத் தனிநபர் என்ற முறையில் எவ்வாறு பாதித்து இருக்கின்றன?

பதில்: இந்தப் போராட்ட அனுபவங்கள் எனது இலட்சியத்தை ஆழமாக வலுப்படுத்தியிருக்கின்றன. எனது பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன.

கேள்வி: இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மகத்தான அனுபவம் என்று எதைக்கூறுவீர்கள்?

பதில்: ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மகத்தானது என்று தனிமைப்படுத்திக் கூறுவது எனக்குக் கடினமானது. ஒரு கெரில்லாப் போராளியின் வாழ்க்கையானது துயரமும் மகிழ்ச்சியும் விரக்தியும் கலந்த பல்வேறுபட்ட அனுபவங்களின் கலவையாகும். இவற்றுள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் மகத்தானது தான்.

கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்டகால அனுபவமானது, வாழ்க்கை பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த அனுபவங்களின் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும், உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா? அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில கொள்கைகள், கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்துமற்றது என்பதனை உணர்த்தும் அதேவேளையில் வேறு சில சரியானவைதாம் என்ற கருத்தினையும் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லவா ? அவற்றில் சிலவற்றைக் கூறுவீர்களா?

பதில்: நாங்கள் வரித்துக்கொண்ட ஆயுதப் புரட்சிப் பாதை மிகவும் சரியானது என்பதைக் கடந்த 12 வருடகால அனுபவங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. எமது ஆயுத ரீதியிலான போராட்ட வடிவத்தை ‘பயங்கரவாதம்’ என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்குள் ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான் என்பதை இப்போது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் கைக்கொண்ட கெரில்லா யுத்தமுறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமைமிக்க வடிவமாக அமைந்திருக்கிறது. எமது வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், சிங்கள ஆயுதப் படைகளைத் தோற்கடித்து, சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு ஊட்டியிருக்கின்றன.

கேள்வி: உங்கள் நண்பன், தத்துவாசிரியன், வழிகாட்டி யார்?

பதில்: இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.

கேள்வி: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ, அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி என்று ஐரிஸ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளி என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியைத் தந்த கணம் என்று எதையாவது கூறுவீர்களா?

பதில்: என் வாழ்க்கையில் அப்படி விரக்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்ல முடியாது. இலட்சிய நோக்குக் கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள், சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது, நான் மிகுந்த விரக்திக்குள்ளானதுண்டு.

கேள்வி: உங்களுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான பிளவு எப்படி ஏற்பட்டது?

பதில்: இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்கும் விதம் தவறானது. இப் பிரச்சினையை எனக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட விரோதமாக அல்லது பிளவாக நோக்குவது தவறானது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் ஒரு தனி நபருக்கும் இடையிலான பிரச்சினையே அது. இப்பிரச்சினைக்கு நான் தனிப்பட்ட முறையில் எந்த விதத்திலும் பொறுப்பாளியல்ல. அந்தப் பிரச்சினை உமாமகேஸ்வரனாலேயே உருவானது. ஒரு புரட்சி இயக்கத்தின் முக்கியஸ்தர், அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயக்கத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவும் அடிப்படை விதிகளை அம் முக்கியஸ்தரே மீறி நடப்பாரேயானால் ஒழுங்கு குலைந்து, குழப்பம் மலிந்து, இயக்கம் சிதைந்து போகும். உமாமகேஸ்வரன் எமது இயக்கத்தின் விதிகளை மீறி நடந்தமையால் ஒழுங்கு நடவடிக்கையாக அவர் மத்திய குழுவால் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த இயக்கத்தை ஸ்தாபித்தவன் என்ற முறையிலும், உமாமகேஸ்வரனை இயக்கத்தின் ஒரு உறுப்பினராக நியமித்தவன் என்ற முறையிலும் மத்திய குழுவின் தீர்மானத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் எனக்கு இருக்கவில்லை.

கேள்வி: இன்று பல்வேறு ஈழ விடுதலைக்குழுக்கள் தமக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாரது இலட்சியமும் ஒன்றேயாதலால், இவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி அவசியமல்லவா? பொது எதிரிக்கு எதிராக உங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியால் நீங்கள் அதிகளவு பயனடையலாமே!இக்குழுக்கள் ஒருங்கிணைவதை நீங்கள் கொள்கையளவில் எதிர்க்கிறீர்களா?

பதில்: இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு நான் ஆதரவுடையவன் என்பதை மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன். இத்தகைய திட்டத்தை நான் வரவேற்கிறேன் என்பதையும், மற்ற விடுதலைக் குழுக்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து, பொது வேலைத் திட்டமொன்றினை ஏற்கும்பட்சத்தில் அத்தகைய கூட்டு முன்னணியில் இணைந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும், இந்த விடுதலை அணிகளுக்கு 2-9- 82இல் நான் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இக்குழுக்கள் ஒரு பொதுப்படையான வேலைத்திட்டத்தை உருவாக்குவதில் தோல்வி கண்டன. மாறாக, ஒவ்வொரு ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பிணக்குப்பட்டு, மேலும் பிளவுற்றனர். இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இந்தக் குழுக்களிடையே இல்லை என்பது தான். அவர்களது சொல்லுக்கும் செயலுக்குமிடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது. தங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மைக்குப் புலிகளைக் குற்றம் சாட்டுவதைக் கைவிடுத்து இக்குழுக்கள் தங்களுக்கிடையிலே ஒற்றுமையை ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழவேண்டும். ஒரு பொதுத் திட்டத்தில் அவர்கள் ஒருங்கிணையும்போது அவர்களுடன் கைகோர்த்துச் செல்ல நாம் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: உங்களைத் தவிர மற்ற அனைவரும் ஒருங்கிணையும் கருத்திற்கு ஆதரவு தருவதாக ஏனைய விடுதலைக் குழுக்களின் அமைப்பாளர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது உண்மையா?

பதில்: இது முற்றிலும் பொய்யானது; எங்கள் இயக்கத்திற்கு இழிவுதேட ஏனைய குழுக்கள் மேற்கொண்டிருக்கும் பொய்ப் பிரச்சாரத் தந்திரம் இது.

கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் தனித்து நிற்கிறீர்களா?

பதில்: இல்லை. நான் பலம்மிக்க தேசியப் போராட்ட இயக்கமொன்றினை தலைமைதாங்கி நடத்துபவன். பரந்துபட்ட தமிழ் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

கேள்வி: தனிமை உங்களை வாட்டும் கணங்கள் உண்டா? அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

பதில்: இத்தகைய தனிமையுணர்வுகள் என்னைப் பீடித்ததில்லை. தங்களின் தனிப்பட்ட மனக் குகைக்குள் தங்களை அமிழ்த்திக்கொள்பவர்களுக்கு இந்தத் தனிமையுணர்வு ஒரு பிரச்சினைதான். ஒரு உண்மையான புரட்சியாளன் இத்தனி நபர் பிரச்சினைகளை மேவி, ஒரு கூட்டு பிரக்ஞையை, சமூகப் பிரக்ஞையை உருவாக்குகிறான். நான் ஒரு பொதுவான சமூக இலட்சியத்திற்காக வாழ்பவன்; அதற்காகப் போராடுபவன்.

கேள்வி: ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையை வாழவில்லையே என்று நீங்கள் வருந்தியதுண்டா?

பதில்: நீங்கள் சொல்லுகிறமாதிரி சாதாரண வாழ்க்கை நடத்துகின்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஆனால், நாங்களோ ஒரு உன்னத இலட்சியத்துக்காகப் போராடி வருகிறோம். அந்த இலட்சியத்திற்காக உழைப்பதும், வாழ்வதும் எங்களுக்குப் பூரண ஆத்ம நிறைவைத் தருகிறது.

கேள்வி: இலங்கையில் பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் இருள்மயமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று நீங்கள் கவலைகொள்வதுண்டா ?

பதில்: இல்லை. இன்றைய இளம் சமூகத்தினர் சுதந்திரத்திற்கான போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இவர்களின் எதிர்காலம் ஒளிமயமானது என்றே எனக்குத் தெரிகிறது.

கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் மேன் மேலும் இளைஞர்கள் பங்குகொண்டு வருகிறார்கள் என்பது உண்மைதானா?

பதில்: ஆம். மேன்மேலும் இளைஞர்கள் புரட்சிப் போரில் குதித்து வருகின்றனர். தங்களுக்கும் தங்கள் சமூகத்துக்கும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே விமோசனம் உண்டு என்பதை உணர ஆரம்பித்துள்ள இளைய தலைமுறையினர் எங்கள் இயக்கத்தின் தலைமையின்கீழ் அணிதிரண்டு வருகின்றனர்.

கேள்வி: ‘பிரிவினைவாதிகள்’ என்றும் ‘சுதந்திரப் போராளிகள்’ அல்லது ‘பயங்கரவாதிகள்’ என்றும் உங்கள் இயக்கத்தைப் பற்றிக் கூறப்படுகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: ‘பிரிவினைவாதிகள்’ என்று எமது இயக்கத்தைக் குறிப்பிடுவது மிகத் தவறானது. பிரிவினைவாதம்’ என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள்போராட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம். சுயநிர்ணய உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் தாயகத்தின் இறைமையை மீட்டெடுக்க நாங்கள் போராடுகிறோம். பிரிவினைக்காகவோ, நாட்டை கூறுபடுத்துவதற்காகவோ நாங்கள் போராடவில்லை. எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கௌரவத்தோடும் வாழுகின்ற புனித உரிமையைப் பாதுகாப்பதற்காக நாங்கள் போராடுகிறோம். இந்த அர்த்தத்தில் நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர்; சுதந்திரப் போராட்ட வீரர்களே.

கேள்வி: சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா?

பதில்: உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதையே விரும்புகிறேன்.

கேள்வி: உங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஜூலை 23ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கு உங்ககளின் கெரில்லாத் தாக்குதலே காரணம் என்று கூறப்படுகிறது. இத்தகைய பாரிய பதில் தாக்குதலை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா?

பதில்: ஜூலைக் கலவரத்தை விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு எதிரான சிங்களவர்களின் பதில் தாக்குதல் என்று வெறுமனே மதிப்பிட்டு விட முடியாது. இவ்வாறு கூறுவது அந்தச் சம்பவத்தை மிகவும் எளிமைப்படுத்துகிறது. இலங்கையில் காலம் காலமாக, திட்டமிட்ட முறையிலே தமிழர்களுக்கெதிரான தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. எங்களின் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இனவெறிப் பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நாங்கள் இராணுவத் தாக்குதலை நடத்துவதற்குச் சில கிழமைகளுக்கு முன்பே திருக்கோணமலையில் மோசமான இனத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன. ஆகவே, தமிழர்களுக்கெதிரான இனத் தாக்குதலைத் தனித்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் விமர்சிக்க முடியாது. நாங்கள் நீண்ட ஒரு கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம். பல சிங்கள இராணுவ வீரர்களையும் பொலிஸ்காரர்களையும் அழித்திருக்கிறோம். ஜூலையில் நாங்கள் நடத்திய கெரில்லாத் தாக்குதல் நாங்கள் நடத்திவரும் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு அங்கம்தான். குறிப்பிட்ட ஒரு இராணுவ நடவடிக்கைதான் முழுக் கலவரத்திற்கும் காரணம் என்று கருதுவது தவறானதாகும். ஜூலைக் கலவரமானது எம் மக்களைக் கொன்று குவிக்கும் நோக்கம் மட்டும் கொண்டதல்ல, கொழும்பில் வாழுகின்ற தமிழர்களின் பொருளாதாரத் தளத்தையே அழித்து விடுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததை நீங்கள் நிச்சயமாக அவதானித்திருப்பீர்கள். எங்களுடைய கண்ணோட்டத்தில், ஜூலைப் பேரழிவானது ஆளும் கட்சியின் இனவெறிச் சக்திகளால் தமிழர்களுக்கெதிராக நன்கு திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட இனப் படுகொலைத் திட்டமாகும். ஆரம்பத்தில் இந்த வெறிக் கும்பல் முழுக் குற்றச்சாட்டையும் புலிகள் மேல் சுமத்த முனைந்தது. பிறகு திடீரென்று தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு இனக்கலவரங்களுக்கு இடதுசாரிகளே காரணம் என்று குற்றம் சாட்டியது. உண்மையில் எமது மக்களின் பாரிய உயிரிழப்பிற்கும், அவர்களின் உடைமை நாசத்திற்கும் இன்றைய அரசாங்கத்தின் இனவெறிபிடித்த தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி: ஏன் நீங்கள் இந்தத் தாக்குதலை நடத்தினீர்கள்? இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நான்கு தமிழ்ப் பெண்மணிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கு எதிரான ஒரு பழி வாங்கல் நடவடிக்கைதான் இது என்று சிலர் கூறுகிறார்கள். நான் விசாரித்தவரையில், உங்களின் இராணுவப் பிரிவுத் தலைவரும் நெருங்கிய நண்பருமான சார்ல்ஸ் அன்ரனியின் மரணத்தில் வெற்றிப் பெருமிதம் கொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்குப் பாடம் படிப்பிப்பதற்காகத்தான் இத்தாக்குதல் நடந்தது என்று தோன்றுகிறது. அதாவது விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் ஆற்றல் மிகுந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்ட பிறகும்கூட சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடிய வலிமை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க முயன்றிருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். இந்தக் கருத்து சரியா? அல்லது இதை விடவும் கூடுதல் காரணங்கள் உண்டா?

பதில்: சார்ல்ஸ் அன்ரனி பற்றியும் இத்தாக்குதல் பற்றியும் நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இத்தாக்குதல் ஓரளவிற்குப் பதிலடிதான்; சிங்கள இராணுவத்திற்குத் தண்டனை தான். இருப்பினும் எங்களைப் பொறுத்தவரை சார்ல்ஸ் போன்ற உன்னத புரட்சிவாதியின், விடுதலை வீரனின் உயிருக்குப் பதின்மூன்று இராணுவத்தினரின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது. வேறொரு வகையில், எதிரியை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் எமது கெரில்லாப் போர்முறையின் ஒரு பகுதிதான் இத்தாக்குதலாகும்.

கேள்வி: வட்டமேசை மாநாடு எந்தவித நிரந்தரமான தீர்வையாவது உருவாக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: தமிழர்களின் பிரச்சினைகளுக்கு வட்டமேசை மாநாடு எந்தவித நிரந்தரத் தீர்வையும் தராது என்பது என் கருத்து. கடந்தகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையிலேயே இம்முடிவிற்கு வந்திருக்கிறோம். சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண எந்தவித நேர்மையான முயற்சியும் மேற்கொண்டதில்லை. இப்போதைய பேச்சு வார்த்தைகளுக்கும் இந்தக்கதி தான் நேரும். முக்கியமான சகல சிங்களக் கட்சிகளும் பௌத்த அமைப்புகளும் தமிழர்களுக்குப் பிரதேச சுயாட்சியை எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் தரத் தயாராக இல்லை. சிறு சலுகைகள் வழங்கப்படுவதைக்கூட அவர்கள் எதிர்க்கிறார்கள். இம்மாநாட்டிலிருந்து உருப்படியாக எதுவும் கிடைக்காது.

கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா?

பதில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமான நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் ஒருபோதும் எடுத்ததில்லை. மாறாக, அவர்கள் பொய்யான நம்பிக்கைகளைத் தருகிறார்கள்; பிரமைகளை ஏற்படுத்துகிறார்கள்; எமது மக்களைத் தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க முனைகிறார்கள். அவர்கள் தங்களது சுயநல அபிலாசைகளை அடையவே அரசியலில் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்கான உண்மையான நோக்கம் எதனையும் அவர்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. அத்தோடு, எந்தவிதமான உருப்படியான அரசியல் வேலைத் திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த விடுதலைப் போராட்டச் சூறாவளியில் மாட்டிக்கொள் வார்கள் என்று, அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. புரட்சியின் ஜுவாலை தமிழீழம் முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை அணைக்க அவர்கள் தங்களால் ஆனமட்டும் முயன்று பார்க்கிறார்கள். இந்த அர்த்தத்தில் அவர்களைத் துரோகிகள் என வர்ணிக்கலாம்.

கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பப் பயப்படுகிறார்கள் என்பதற்குக் காரணம் சிங்களவர்கள் அல்ல, புலிகள்தான் என்கிறார்களே! இது உண்மையா?

பதில்: அவர்கள் பயப்படுவது புலிகளுக்கல்ல. சுதந்திரத் தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களித்த மக்களின் கோபா வேசத்துக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள்.

கேள்வி: இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகள் உருப்படியான தீர்வு எதையும் தருமா?

பதில்: இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகள் எம் மக்களுக்கும் ஆக்கபூர்வமான நம்பிக்கையைத் தந்திருக்கின்றன. ஆனால், சிங்கள இனவெறி அரசு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க இந்த உதவியைப் பயன்படுத்திக்கொள்ளும் என, நான் நினைக்கவில்லை.

கேள்வி: இந்தமாதிரி நிலைமையில், தமிழர்களுக்கு உதவ இந்தியா செய்யக்கூடிய மிகச் சரியான காரியம் எதுவாக இருக்க வேண்டும்?

பதில்: எம் மக்களின் நியாயமான, நேரிய கோரிக்கைகளை இந்திய அரசு அங்கீகரித்து, சுயநிர்ணயத்திற்கான எங்கள் உரிமையினை ஏற்க வேண்டும்.

கேள்வி: இந்தியாவின் இராணுவம் இதில் தலையிட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: எமது சுதந்திரத்தை நாமே போராடி வென்றெடுக்கும் மனோதிடமும், நம்பிக்கையும், உறுதிப்பாடும் எங்களிடம் உண்டு. நாமே போராடி எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். எனினும் எங்களுக்கு இந்தியாவின் தார்மீக ஆதரவும் அனுதாபமும் அவசியமாகின்றது.

கேள்வி: ஜனாதிபதி ஜெயவர்த்தனா பற்றிய உங்களின் தனிப்பட்ட மதிப்பீடு என்ன?

பதில்: ஜெயவர்த்தனா ஓர் உண்மையான பௌத்தராக இருப்பாராயின், நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திராது.

கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தனா நடத்துவதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்? காலங் கடத்தப் பார்க்கிறாரா? அப்படியானால் எதற்கு?

பதில்: இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தனா நடத்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில், இந்தியர்களின் கோபத்தைத் தணிப்பது. இரண்டாவது, இனக் கலவரங்கள் இலங்கையின் பெயருக்கு ஏற்படுத்திய பெரும் களங்கத்தை நீக்குவது. மூன்றாவதாக, நிதியுதவி தரும் மேற்கத்தைய ஸ்தாபனங்களிலிருந்து உதவி பெறுவது; கால அவகாசம் பெற்று சிங்கள இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்துவது.

கேள்வி: தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் தீவிரவாதிகளின் பிடிக்குள், ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிக்கிக்கொண்டிருக்கிறாரா? அல்லது அவர் தன்னிச்சையாகவே இயங்குகிறாரா? அல்லது பௌத்த குருமார்களால் நெருக்கப்படுகிறாரா?

பதில்: ஜெயவர்த்தனா சுயமாகத்தான் இயங்குகிறார். அவருக்கு சர்வ அதிகாரங்களுமுண்டு. அமைச்சரவையின் தீவிரவாதிகளும் பௌத்த குருமார்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

கேள்வி: சிறீலங்காவில் பௌத்த குருமார்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள்?

பதில்: சிறீலங்காவின் அரசியற் போக்குகளை நிர்ணயிப்பதில் பௌத்த குருமார்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. சிங்கள மக்கள் மத்தியில் தமிழருக்கு எதிரான இனவெறியைத் தூண்டி விட்டதில் அவர்கள் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

கேள்வி: சிறீலங்காவை தனிச்சிங்கள பௌத்த நாடாக மாற்றும் முயற்சியில், பௌத்த குருமார்கள் கணிசமான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: சிறீலங்கா ஏற்கெனவே ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடுதான். இதில் பௌத்த பிக்குகளுக்குப் பெரும் பங்குண்டு.

கேள்வி: இது பௌத்த குருமார்களின் இன வெறியின் விளைவா? அல்லது கிறிஸ்தவ குருமார்கள் தமிழர்களுடன் ஒன்றுபட்டதன் விளைவா?

பதில்: இந்த இனவெறி அரசை ஸ்திரப்படுத்துவதில் பௌத்த குருமார்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. தமிழ் கிறிஸ்தவ பாதிரிமார்கள் தமிழர் பிரச்சினைக்கு அனுதாபம் காட்டுகின்றனர். ஆனால், சிங்கள கிறிஸ்தவப் பாதிரிமார்கள் சிங்களப் பேரினவாத வெறுப்புணர்வை வெளிப்படுத்தித் தமிழர்களின் கோரிக்கைகளை எதிர்க்கின்றனர்.

கேள்வி: உலக விடுதலை இயக்கங்களுடன் உங்களுக்குத் தொடர்புகள் உண்டா? எந்த அமைப்புகள் உங்களுக்குப் பயிற்சியும், ஆயுத உபகரணங்களும் தந்து உதவுகின்றன?

பதில்: உலகின் ஏனைய விடுதலை இயக்கங்களுடன் எங்களுக்குத் தொடர்புகள் உண்டு. உங்களின் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை.

கேள்வி: உங்களின் இந்தப் போராட்டத்திற்கு எந்த நாடு மிகவும் அனுசரணையாக இருக்கிறது?

பதில்: இதுபற்றி ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: உங்களின் சித்தாந்தக் கோட்பாடு என்ன ?

பதில்: சனநாயக சோசலிசம்.

கேள்வி: எதிர்காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்களை எதிர்பார்க்கிறீர்களா? எந்தக் காரணத்தை முன்னிட்டு?

பதில்: ஆம். நான் எதிர்பார்க்கிறேன். திருகோணமலையிலும் வவுனியாவிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைக் கொல்லுவதற்கான ஒரு நாசகாரத் திட்டத்தை இனவெறி பிடித்த பாசிச சக்திகள் உருவாகி வருகின்றன. தங்களுடைய உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த தேசிய இராணுவத்துடன் சுதந்திரமான தமிழீழத் தேசம் உருவாக்கப்படும் வரை தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

கேள்வி: கெரில்லாக்களுக்கு எதிரான போர்முறையில் சிங்கள இராணுவத்திற்கு இஸ்ரேலியர்கள் பயிற்சி தருகின்றனர் என்பது உண்மையா?

பதில்: இதுவரை இலங்கையில் இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் இருப்பதைப் பற்றி நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாக இருந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். சிறீலங்கா அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கூலிகளுக்குமான ஒரு தளமாக விரைவாக மாறிக் கொண்டு வருகிறது. பயிற்சி தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நிபுணத்துவம் எத்தகையதாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் மனோ திடத்தையும், உறுதியையும் அழித்துவிட சிங்கள இராணுவத்தால் முடியாது. மகத்தான தார்மீக வலிமையும், தியாக உணர்வும், உன்னத இலட்சியப்பற்றும் எங்களுக்கு உண்டு.

கேள்வி: அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவது பற்றி உங்கள் கருத்து என்ன ?

பதில்: இந்த ஆயுதக் குவிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது உங்களுக்கத் தெரிந்ததே. திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்வது அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும்.

கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ் வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக அந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்.

கேள்வி: உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்போது அடைவீர்கள்?

பதில்: விடுதலைப் போராட்டத்திற்கு காலவரையறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து இது அமையும்.

நன்றி: எனது மக்களின் விடுதலைக்காக நூல்.

திசெம்பர் 12, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன் | , , , | தேசியத் தலைவர் முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழீழ ஆய்வு நிறுவன ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார் ! #நாட்டுப்பற்றாளர் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam


தமிழீழ விடுதலைப் புலிகளால் பொருளாதார அபிவிருத்திக்கான கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் Root Sri அவர்கள் பிரித்தானியாவில் சுகவீனம் காரணமாக டிசம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை சாவடைந்துள்ளார்.

இந்த தமிழீழ ஆய்வு நிறுவனமே பின்னர் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமானது.

பிரபலமான பௌதீகவியல் ஆசிரியராக இருந்து தமிழீழ விடுதலை விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 இல் இணைந்த இவர் ஒரு சிறந்த கல்விமான். மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் பல்வேறு தளங்களில் அரும்பணியாற்றியவர். தாயகத்திலும் பிரித்தானியாவிலும் பல்துறை கல்வியாளர்களை உருவாக்கிய இவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு இலக்கு செய்தி நிறுவனம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

அப்பையா சிறிதரன்- ரூட் சிறி (ROOT SRI)
1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை இலங்கைத்தீவில்

எங்கும் வெடித்தபோது பல இளைஞர்கள் தம்மை நேரடியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். பல்கலைக்கழக பட்டதாரியான சிறி வளமான எதிர்காலத்தை தூக்கி எறிந்து விட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் (Jaffna University Graduates Association – JUGA) நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்த சிறிதரன் எமது தாய் மண் மீட்புக்கான மக்கள் போராட்டத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றான பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

1983 ஆகஸ்ட் அளவில் தமிழீழவிடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதர் அவர்கள் களத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் போராட்டத்தை பல முனைகளில் முறியடிக்க பொருளாதார தடைகளை முன்னெடுக்கும் என முன்னுணர்ந்து மக்களைப் பாதிக்கும் உணவு உற்பத்தி தடைகளை கட்டவிழ்த்து விடும் என்பதனை முன்னிறுத்தி அதனை கப்டன் பண்டிதருடன் விவாதித்து முன்னெடுக்கப்பட்டவேலைத் திட்டமே பின்னர் “தமிழீழ ஆய்வு நிறுவனம்” (Research Organisation of Tamil Eelam – ROOT) என்ற விஸ்வரூப வடிவத்தைப் பெற்றுக்கொண்டது. உணவு உற்பத்தி, கைத்தொழில் மேம்பாடு, மாற்று சக்தி வலு உட்பட பல்வேறு அத்தியாவசியமான உள்ளூர் உற்பத்திகள் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச்செல்லப்பட்டது.

1985 ஜனவரி கப்டன் பண்டிதரின் வீரச்சாவின் பின்னர் யாழ் மாவட்ட தளபதி கிட்டு அண்ணாவின் ஆலோசனையின்படி பின் தளமாகிய தமிழ்நாட்டிற்கு சிறியும், ரவியும் சென்று தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் தமிழீழ ஆய்வு நிறுவனம் (ROOT) என்ற முறையமைக்கப்பட்ட மக்கள் கட்டமைப்பை உருவாக்கி பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு செல்லும் வரை 1985 ஏப்ரல் – மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட “களத்தில்” பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.

1985 காலப்பகுதியில் அரசியல் பொறுப்பாளர்களின் மாதாந்த ஒன்றுகூடலின்போது கிட்டண்ணாவின் ஏற்பாட்டில் அரசியல் வகுப்புகள் எடுத்த ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.

தமிழ்நாட்டு அரசினதும் மக்களினதும் பெரும் ஆதரவுடன் அங்குள்ள பிரபலமான தொழில்நுட்ப முன்னோடி நிறுவனங்களில் சென்று ஆராய்ந்து விவசாயம், கால்நடை, கடற்தொழில், கைத்தொழில், உணவு பதனிடல் தொழிநுட்பம் மற்றும் மாற்று வலு உற்பத்தி (alternative energy technology) போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் நடைமுறைப்படுத்த ஏதுவானவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து போராளிகளுக்கு அதில் பயிற்சி கொடுத்து அவர்களை கொண்டே தாயகத்தில் சிறந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து வடகிழக்கில் உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாக சபைக்கான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுள் ஒருவராக சிறிநியமிக்கப்பட்டிருந்தார்.

மறுபடியும் ஏற்பட்ட போர் சூழலில் தமிழ்நாட்டிலிருந்த கிட்டு அண்ணாவினால் மேற்கொள்ளப்பட்ட போர் தவிர்ப்பு முயற்சிகளில் அவருக்கு பக்கத்துணையாக இருந்து அரசியல் ராஜதந்திர முனைகளில் செயற்பட்டவர்களில் இவரும் முக்கிய பொறுப்பு வகித்தார்.

அக் காலகட்டத்தில் கிட்டண்ணாவை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஆ..முஸ்தபா, முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன்மொஹமட் போன்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை கொண்ட முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (Muslim United Liberation Front – MULF) சென்னையில் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை குழுவிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஆராய துறைசார் நிபுணர் குழு ஒன்று கிட்டு அண்ணாவால் உருவாக்கப்பட்டது. அதற்கான ஒருங்கிணைப்பில் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இந்தியா மத்திய அரசுடன் போர் தவிர்ப்பு பேச்சுவார்த்தை 1988 செப்டெம்பர் மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கிட்டண்ணா உட்பட தமிழ்நாட்டில் இருந்த போராளிகள் கைது செய்யப்பட்டு முதலில் சென்னை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு சிறைவாசம் அனுபவித்து 1990களின் முற்பகுதியில் ஏனைய போராளிகளுடன் விடுவிக்கப்பட்டார்.

அக் காலகட்டத்தில் தாயகத்தில் மீண்டும் ஆரம்பமாகிய போர்ச்சூழலில் ஏதிலிகளாக சிதறிய மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வு கழகத்தை (TRO) வழிநடத்தி சிறந்த பணிகளை மேற்கொண்டார்.

1990ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப் பணிக்காக தமிழ்நாடு செல்ல வேண்டி நேரிட்டதுடன் அவர் புலம்பெயர் நாட்டில் பிரித்தானியாவில் மீண்டும் தன் சமூகக் கடமைகளை கல்விச் செயல்பாடுகளினூடாக தொடர்ந்தார்.

1992 அளவில் TRTEC எனும் கல்வி நிறுவனத்தை பொறுப்பேற்று கணனி, ஆங்கிலம், கணக்கியல் போன்ற துறைசார் பயிற்சி நெறிகளை திறம்பட நடத்தி லண்டன் மாநகரில் மூன்று கிளைகளை நிறுவி ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு பயிற்சியளித்து அவர்களை வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கினார்.

ஐரோப்பா மட்டத்தில் கணனிக் கல்வி சார்ந்த மாநாடொன்றை 1990களின் பிற்பகுதியில் வெற்றிகரமாக நடத்தினார். இதன் மூலம் கணனித்துறைசார் முக்கியத்துவத்தை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பினார்.

Child First (UK) என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் பிரதம இணைப்பாளராக 2009ஆம் ஆண்டிலிருந்து தாயகத்திலுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் சிறார்களுக்கு ஆரம்பக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான நிதியுதவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் வன்னியில் உள்ள மாணவர்களுக்கு கணணிப் பயிற்சியளிக்குமுமாக மூன்று மாடி கட்டிடம் விசுவமடுவில் அமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.

தையல் பயிற்சி, அழகுக் கலை, உணவு பண்டங்கள் தயாரிப்பு போன்ற பயிற்சி வகுப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறி சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தாயகமெங்கும் தெரிவு செய்யப்பட்ட வருடா வருடம் 250இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

வறிய குடும்பங்களுக்கு உலருணவுபொதிகள் தேவை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

தன் இளமைக் காலம் தொடங்கி நோய் வாய்ப்பட்டிருந்த வேளையிலும் தமிழ் மக்களுக்கும் தாயக மக்கள் நலனிற்காகவும் ஓயாது கடமையாற்றிய சிறி இனி அமைதியாக உறங்கட்டும். அவரைப் போன்ற பல சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்களை உருவாக்கி அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதுவே நாம் அவருக்குச் செய்யும் சிறந்த கௌரவமாகும்.

திசெம்பர் 8, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர் | , , | தமிழீழ ஆய்வு நிறுவன ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார் ! #நாட்டுப்பற்றாளர் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் #இறுதிவணக்கம் #நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam


தாயக விடுதலை நோக்கிய பயணத்தில் உடல், உள ஆற்றல் ஆளுமையை தனது மக்களுக்காக தான் பணியாற்றிய கல்வித்தளம் தொடக்கம் தமிழீழ விளையாட்டுத்துறையெனும் பரிணாம வீச்சால் இளைய தலைமுறையினையும், ஆசிரியத்துவ மாணவர்களையும் உலகப் பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான் பேரன்புக்குரிய மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இழப்புச் (30.11.2020) செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையுடன் எனது இரங்கல் பகிர்வுடன் இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1967 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி ஆசிரியர் பயிற்சி மாணவனாக கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு தெரிவாகி சமுகமளித்தேன். அன்றிரவு விரிவுரையாளர் மாணவர் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அப்போது 30–31 வயது மதிக்கத்தக்க இவர், எழுந்து தனது பெயர், கல்வி, தனது தொழில் தகமை பற்றிக் கூறிய போது சாதாரணமாக கிரகித்தேன். ஆனால் பின்நாளில் இவர் கூறியபடி விரிவுரை மற்றும் செய்முறையில் கண்ட ஆற்றலை கண்டு மிகவும் வியந்தேன். தடகள நிகழ்ச்சிகள் தவிர உதைபந்து, கரப்பந்து, வலைப்பந்து நிகழ்ச்சிகளிலும் தனது தொழில் நுட்ப அறிவால் குறுகிய காலத்தில் விளையாட்டுத்துறையில் எம்மை ஆர்வமுடைய மாணவர்களாக்கினார்.

இவர் வகுப்பறையில் விரிவுரை வழங்குவதிலும் மாலையில் மைதானத்தில் செயன்முறைப் பயிற்சி வழங்குவதிலும் மிகவும் கணடிப்பாக இருப்பார். ஆனால் ஏனைய நேரங்களில் சகோதர பாசத்துடன் நல்ல நண்பனாக பழகும் குணமும் உடையவர். மைதான நிகழ்ச்சிகளில் அக்கறையுடன் ஈடுபடும் ஆசிரிய மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதோடு, ஏனைய மாணவர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்புடைய ஆளுமையான குரு ஆவார்.

இவரின் காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை, நல்லூர் ஆசிரியர் கலாசாலை இரண்டிற்கும் நடைபெறும் வருடாந்த போட்டிகளில் பலவருடங்களாக கொழும்புத்துறையே வெற்றியீட்டி வந்தது. நான் படித்த காலத்தில்(S.S.C வரை) விளையாட்டில் ஈடுபாடு காட்டியதில்லை. மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாகிய பின் 26-27 வயதில் விளையாட்டில் ஈடுபாடாய் இருப்பது சிரமமாக இருந்தது. ஆனால் எனக்கு தனது பயிற்சியால் 100மீற்றர், 200மீற்றர், 400மீற்றர் ஓட்டத்திலும் நீளம் பாய்தலிலும் முதன்மை பெற உதவினார். பொதுவாக மன்னார், வவுனியா, முல்லை மாவட்ட மாணவர்கள் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கும் நியமிக்கப்படுவார்கள். வன்னி மாணவர்கள் ஓரளவு தேர்ச்சி உடையவர்களாக இருந்தார்கள். கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை இவரது வழிகாட்டலில் பல வருடங்களாக வெற்றிபெற்று வந்தது.

எங்களது ஆசானுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்ட நிகழ்வாக 1967 இல் முதல் ஐந்து மாதம் கொழும்புத்துறையில் நான் உடற்கல்வியை, கற்பித்தல் திறனால் மைதான நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களை இவரிடம் ஓரளவு தெரிந்து கொண்டேன். இதன் பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கு மாறிச் சென்று விட்டேன். அங்கு போன பின்பும் மாலை நேரங்களில் நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் சந்திப்போம். கரப்பந்து நுட்பங்களை அறிய நண்பர் துரைராசாவும் என்னுடன் வந்து இவரிடம் ஆலோசனை பெறுவார்.

1967 இல் இரண்டாம் தவணை இறுதியில் கலாசாலைகளுக்கிடையில் போட்டி நடந்தது. எமது தரப்பில் நானும், துரைராசாவும் திட்டமிட்டு வீரர்களை தயார்படுத்தி இருந்ததால், நான் 100மீற்றர், 200மீற்றர். 400மீற்றர் முதலாம் இடங்கள். நீளம்பாய்தல் மூன்றாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் வரதராஜன், தட்டெறிதல் முதலாம் இடம் பொன்சபாபதி (மறைந்த கிளி வலயக் கல்விப் பணிப்பாளர்), நீளம் பாய்தல் முதலாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் ஸ்ரனிஸ்லஸ் (பின்நாளில் நீங்கா நினைவுகளின் கடற்புலிகளில் அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் மறவன் மாஸ்டர்) 800மீற்றர் 1 மைல் முதலாம் இடங்கள். இப்படி எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னேறி 1967 நல்லூர் ஆசிரியர் கலாசாலை பல வருடங்களின் பின் வெற்றி பெற்றது. இறுதியில் எங்களது ஆசான் பத்மநாதன் கூறியது இன்றும் ஞாபகமாக உள்ளது. திட்டம் போட்டு வென்று விட்டீர்கள் என உரிமையுடனும், மகிழ்ச்சியுடனும், நட்புடனும் கூறி வாழ்த்தி ஊக்கமளித்தமை மறக்கமுடியாத ஒன்று.

பின்நாட்களில் எனது ஆசிரியத்துவப் பணி, பாடசாலை அதிபர் பணி, தேசவிடுதலைக்கான பணியென அடியெடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வுகளுக்குள்ளும் இவர் என்னை இளமைக் காலத்தில் ஆளுமைமிக்க ஒருவனாக வளர்த்து விட்ட ஒரு நல்லாசானாக நினைத்துப் பார்க்கிறேன்.

1990 தேசவிடுதலைக்காக எனது பணியை முழுமையாக தொடங்கிய காலத்தை அடுத்து 1991 காலப் பகுதியில் எனது இப்பணியின் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்ற வேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் விளையாட்டு-உடற்கல்வி விரிவுரையாளர் பத்மநாதன் அவர்கள் பணியாற்றுகின்றார் என்பதை சக நட்புக்கள் மூலம் அறிந்து, அவரை சந்திக்கும் வாய்ப்பு அவர் பல்கலைக்கழகத்தில் அவர்பணியில் அவர் நின்றவேளை கிடைத்தது. இரண்டாவது ஈழயுத்தம் நடைபெறும் காலம் அரசின் பொருளாதார கல்வி தடைகளைத் தாண்டி முகம்கொடுத்து மக்கள் வாழ்ந்த நிலையில் இவ்வாறு உணர்வுமிக்க விரிவுரையாளர்கள், பொறுப்பு மிக்க துணைவேந்தர் போன்றோர் யாழ். பல்கலைக்கழகத்தை இயங்கு நிலையில் தங்கு தடையின்றி மாணவர்களுக்கு கல்வியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அன்றொருநாள் நேரடியாக அவரை பல்கலைக்கழகத்தில் சந்திக்கச் சென்ற வேளை, அதே அன்போடு மட்டற்ற மகிழ்வோடு வரவேற்று தான் கடந்த காலத்தில் ஆசிரிய கலாசாலையில் தன்னிடம் கற்ற மாணவன் என்பதை அங்கு துணைவேந்தர் (இன்றைய மாமனிதர்) துரைராஜா மற்றும் பதிவாளர் பரமேஸ்வரன் ஏனைய விரிவுரையாளர்கள் என அவரவர் அலுவலகங்களுக்கும் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வளாகத்தின் சூழலை குறிப்பிட்ட நேரத்திற்குள் சுற்றிக்காட்டி தற்போதய போர்ச் சூழலில் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம். என மூன்று மணி நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி தனது அன்பை பகிர்ந்து தேனீர் சாலையில் தேனீர் உபசாரத்துடன் அனுப்பும் போது இந்த பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு கற்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் இங்கு வந்து இவ்வளவு கல்வியிலாளர்களை சந்திக்க சந்தர்ப்பம் தந்திருக்கிறீங்களே சேர் நகைச்சுவையாக அவரது அன்பையும் அவரிடம் தேங்கியிருந்த விடுதலைப்பற்று உறுதியையும் பகிர்ந்து கொண்டு நானும் உடன் வந்த இனியவனும் விடைபெற்று வெளியேறினோம்.

தொடர்ந்து வந்த யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் மக்கள் துன்ப துயரங்களுள் தானும் அதனை தாங்கி குடும்பத்துடன் வாழும் இயல்பு நிலையை தனதாக்கிக் கொண்டதை அவரை சந்திக்கும் போது பகிர்ந்து கொண்டார். இதே வேளை நான் பணிசெய்த தமிழீழ நிர்வாக சேவை பிரிவில் 1994இல் முல்லை மாவட்டத்தில் பொறுப்பாக பணிசெய்த அதியமான் அறிமுகமாகும் போது தான் பத்மநாதன் அவர்களின் மகன் என தெரியப்படுத்தினார் அப்போது அவரது அப்பா பற்றிய ஆளுமை எனது ஆசான் என அதியமானுக்கு தெரியப்படுத்திய போது மட்டற்ற மகிழ்வும் என்னை காணும் போதெல்லாம் அப்பாவின் அன்பை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.

பின் நாட்களில் தாயக விடுதலையின் தமிழீழ அரசுக் கட்டுமானங்கள் துளிர்விட்ட காலம். தன் துறைசார்ந்த பணியை இன்னும் அதிவேகமாக நமது இளம் தலைமுறையினரிடம் இட்டுச்செல்ல வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழீழ தேசியத் தலைவரது தலைமையினது உணர்வினை புரிந்து கொண்டு தனது பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் ஓய்வு நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து. தமிழீழ விளையாட்டுத்துறையின் இலக்கை நோக்கிய வளர்ச்சிக்கு அத்திவாரமாக செயற்பட்டு கட்டியமைப்பதில் அதிக பங்கை வகித்தவர். தமிழீழப் பரப்புக்குள் அனைத்து மாவட்டங்களின் விளையட்டுத்துறை விரிவாக்கம், தடகளப் போட்டிகள் உட்பட அனைத்து குழு விளையாட்டுக்கள் மாபெரும் விளையாட்டு விழாக்கள் பயிற்சிகள் என கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானம் இளையோரால் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும் பசுமை நினைவுகளுக்குள் இவரது உழைப்பும் உள்ளது.

அத்துடன் உலகப் பரப்பின் ஐரோப்பிய தளத்தில் தமிழீழ அரசின் விளையாட்டுத்துறையின் தமிழீழ பெண்கள் வலைப்பந்தாட்ட அணியை துலங்க வைத்த தமிழீழ தேசத்தின் மகன் இவரது அர்ப்பணிப்பான பணிக்காக தமிழீழ தேசியத்தலைவர் அழைத்து மதிப்பளித்தமை அவரது பணிக்கான வாழ்நாள் மகுடமாக கருதலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாயக விடுதலைப் பணியின் நிமித்தம் சந்தித்து கிளிநொச்சி மண்ணில் எங்கள் உணர்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வோம்.

2009 போரின் நிறைவின் பின்னர் தமிழகத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார். அவரது வீட்டில் நானும் ஒருமாதம் தங்கியிருந்தேன். கடந்த கால தேசவிடுதலையின் வீச்சும் தொடர்ந்த இழப்புகளும் அவரது மனதையும் நெருடச் செய்ய, அவரது ஆதங்கமும், ஒருவருக்கொருவர் உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்து ஆதங்கப்பட்டோம். இருந்த வீட்டில் தனது கைப்பட சுவையாக உணவு தயாரித்து தந்து மனநிறைவு கண்ட நினைவுகளை மீடடுப் பார்க்கிறேன்.

ஆம்! தேச விடுதலைக்காக தனது உணர்வுடன் ஒன்றுபட்டு இரு மகன்களை உவந்ததுடன் அவர்களில் ஒருவர் மாவீரர் கப்டன் கெனடி(பாவண்ணன்) போராளி அதியமான் என மாவீரரின் தந்தையென போற்றுதற்குரியவராகவும், தமிழீழ தேசியத்தலைவரதும் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் என அனைவரது மனங்களிலும் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்த எனது நல்லாசனது இழப்புச் செய்தியறிந்து நேரடியாக இறுதி வணக்கத்தை தெரிவிக்க வாய்ப்பு இழந்து, துயரில் உங்கள் உணர்வுக்குள் கட்டுப்பட்டு இறுதி வணக்கத்தை தெரிவித்து, உங்களது இழப்பால் துயருறும் குடும்பத்திற்கு ஆழ்ந்த ஆறுதல் பகிர்வை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா.சிவகுமார்.

திசெம்பர் 6, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர் | , , , | ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் #இறுதிவணக்கம் #நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

புலிகள் தவறிழைக்கவில்லையா ? #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte

#Tamilniram #JegathGaspar #TamilEeelam

தலைவர் பிரபாகரன் மனதை மாற்றிய ஆண்டன் பாலசிங்கம் | Jegath Gaspar Revels Untold Secrets

திசெம்பர் 6, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் | , , , , | புலிகள் தவறிழைக்கவில்லையா ? #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை ! #நாம்தமிழர்கட்சி #Seeman #MaaveerarNaal #Prabhakaran #MaaveerarNaal2020 #SeemanSpeechToday #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NTK

#Seeman #MaaveerarNaal #Prabhakaran

சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை

திசெம்பர் 6, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், மாவீரர் நாள், மாவீரர் நாள் உரைகள் | , , , | சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை ! #நாம்தமிழர்கட்சி #Seeman #MaaveerarNaal #Prabhakaran #MaaveerarNaal2020 #SeemanSpeechToday #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NTK அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது