அழியாச்சுடர்கள்

எந்த நாட்டு கடற்படை தலைமைத் தளபதிகளையும் விட சூசை மிகச்சிறந்த ‘அட்மிரல்‘தான். !

இந்த ஆத்திரமும் ஒரு காரணம். படியுங்கள்…
—————————–
மூத்த பத்திரிகையாளர்
மோகன ரூபன் பதிவு.

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்க, வங்கக் கடல் வழியாக அடிக்கடி சரக்குக் கப்பல்கள் வருவதுண்டு.

புலிகளுக்குச் சொந்தமாக கடல்புறா, சோழன், இலியானா, யகதா, கோல்டன் பேர்ட், யெலிசியா, ஸ்வீனி, பெதியா, பிரின்சஸ் கிறிஸ்டினா (கிரிசந்தா) போன்ற பல சரக்குக் கப்பல்கள் இருந்தன.

புலிகள், அவர்களுக்காக ஆயுதம் எடுத்துவரும் கப்பல்களை முல்லைத்தீவுக்கு அப்பால் நடுக்கடலில் நிற்கச் சொல்லிவிட்டு, அதிவிரைவு படகுகளில் போய் அவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்களை ஏற்றி வருவது வழக்கம்.

சிங்களக் கடற்படை, விமானப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஆயுதங்களை படகில் அள்ளி வருவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. சிலவேளைகளில் சிங்களக் கடற்படை, விமானப்படையின் கண்களில் பட்டு அவர்களின் தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.

கடும் கடற்போருக்கு நடுவில் சில ஆயுதங்களை கடலுக்குப் பறிகொடுக்க வேண்டி வரும். சிந்தாமல் சிதறாமல் ஆயுதங்களைப் படகுகளில் ஏற்றி கரைக்குக் கொண்டுவருவது மிகவும் சிக்கலான பணி.

இந்தநிலையில், ஒருமுறை புலிகளுக்கு மிகமுக்கியமான ஆயுதங்களை ஏற்றி வந்த ஒரு சரக்குக் கப்பலை, இந்தமுறை ரைட் ராயலாக, நேரடியாக முல்லைத்தீவு கரைக்கு வரவழைத்து, ஆயுதம் இறக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை உத்தரவிட்டுவிட்டது.

ஆயுதக்கப்பலை நேரடியாக கரைக்கு வரவழைப்பதா? எப்படி? புலிகளின் உளவுப்பிரிவுத்தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகளின் தளபதி சூசை போன்றோர் இதுபற்றி கலந்து ஆலோசித்தனர்.

அப்போது, திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணத்தின் காரைத்தீவு பகுதிக்கு, ஐரிஷ் மோனா என்ற கப்பல் 128 பயணிகள், 21 ஊழியர்களுடன் வந்து கொண்டிருக்கும் தகவலை உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தெரிவித்தார்.

அவ்வளவுதான். விறுவிறுவென ஒரு திட்டம் உருவானது.

ஆகஸ்ட் 30ஆம்தேதி செவ்வாய்க் கிழமை. ஐரிஷ் மோனா கப்பல், முல்லைத் தீவு கடலோரத்தில் இருந்து 55 மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது, எங்கிருந்து வந்தார்கள் என்பதே தெரியாமல் பெண்கடற்புலிகள் சிறுபடகுகளில் வந்து ஐரிஷ் மோனா கப்பலை சூழ்ந்து கொண்டார்கள்.

கப்பலில் ஏறிய அவர்கள் கப்பல் அலுவலர்களை மிரட்டி, கப்பலை அதன் போக்குக்கு கடலில் வழிந்து செல்லும்படி செய்தனர்.

ஆட்டம் ஆரம்பம்.

ஐரிஷ் மோனா கப்பலை புலிகள் கடத்திவிட்ட தகவல் தெரிந்ததும், திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து இலங்கைக் கடற்படையின் இஸ்ரேல் தயாரிப்பு அதிநவீன டோரா பீரங்கிப் படகு ஒன்று முல்லைத்தீவு நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது.

இந்த இடத்தில் இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான டோரா (Dvora) பீரங்கிப்படகை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

88 அடி நீள படகு அது. வேகம் 48 நாட், எடை 40 டன். டோரா பீரங்கிப் படகை ஜெட் மற்றும் புரொபெல்லர் என இரு முறைகளில் இயக்கலாம். ஆழம் குறைந்த கடல்பகுதிகளில் கூட டோரா படகு ஊடுருவித் தாக்கக் கூடியது.

டோரா பீரங்கிப் படகின் சிறப்பம்சமே அதில் உள்ள 20 மி.மீ. ஆர்லிகான் (Oerlikon) பீரங்கிதான். கடல், தரை இலக்குகளை மட்டுமின்றி வானத்தில் பறந்து வரும் விமானம், ஹெலிகாப்டர்களையும் இந்த பீரங்கி மூலம் சுட முடியும்.

ஐரிஷ் மோனா கப்பலை கண்காணித்தபடி டோரா படகு கண்மூடித்தனமாகப் பாய்ந்து வந்த போது, கடலில் சற்று மூழ்கிய நிலையில் புலிகள் மிதக்க விட்டிருந்த கடல்கண்ணி வெடிகளை டோரா கவனிக்கத் தவறிவிட்டது. பாவம். டோரா படகு கடல்கண்ணி வெடியில் சிக்கி சிதற, அதிலிருந்து கடற்படையினர் நீரில் விழுந்தனர்.

பிற்பகல் 1.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.

அப்போது, இதற்காகவே காத்திருந்தது போல எங்கிருந்தோ படகுகளில் விரைந்து வந்த கடற்புலிகள், உடைந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த டோரா படகில் இருந்து ஆர்லிகான் (Oerlikon) பீரங்கியை வேகவேகமாகக் கழற்றத் தொடங்கினர்.

பீரங்கிப் படகு மூழ்கும் முன் பீரங்கி கழற்றப்பட்டு அதற்கென தயாரித்து வைத்திருந்த ஒரு தெப்பத்தில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு கரையில் பத்திரமாகச் சேர்க்கப்பட்டது.

நேரம் மாலை ஐந்தரை மணி. முதல் டோரா கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது தெரிந்து, அதன் நிலைமையை ஆராய இரண்டாவது டோரா படகு ஒன்று இப்போது முல்லைத்தீவு நோக்கி வேகமாக பாய்ந்து வந்தது.

புலிகள் ரொம்ப யோசிக்கவில்லை.

கரைசேர்க்கப்பட்டு கரையில் நிலைநிறுத்தி வைத்திருந்த டோரா படகின் ஆர்லிகான் பீரங்கி மூலம் சுட்டு, அந்த இரண்டாவது டோராவை புலிகள் மூழ்கடித்தனர். அதாவது எதிரியின் விரலை வளைத்து அந்த விரலை வைத்தே அவன் கண்ணில் ஒரு குத்து!

அவ்வளவுதான்! ஒரே நாளில் 2 டோரா பீரங்கிப் படகுகள் காலி. இந்த இரு டோரா படகுகளின் விலை 500 மில்லியன் டாலர்கள்! இலங்கை அரசு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாங்கிய இந்த இரு டோராக்களும் ஒரே நாளிலா பலியாக வேண்டும்?

இதனிடையே புலிகள் வசம் செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-55 ரக டாங்கி ஒன்று இருந்தது. (ராணுவத்திடம் இருந்து பறித்த டாங்கி). அந்த டி-55 டாங்கியை சாளை பகுதி கடற்கரையில் மண்ணுக்குள் புலிகள் புதைத்து வைத்து, அதன் குழாயை மட்டும் வெளியே நீட்டியிருக்கச் செய்து, அதன்மூலம்தான் இரண்டாவது டோராவை அவர்கள் சுட்டுமூழ்கடித்தார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

புலிகள் ஆர்லிகான் பீரங்கியால் சுட்டார்களா? டாங்கியால் சுட்டார்களா என்பது முக்கியமில்லை.

இலங்கைக் கடற்படையின் இரண்டாவது டோரா பீரங்கிப் படகு புலிகளால் சுட்டு மூழ்கடிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். எது எப்படியோ? இலங்கை கடற்படை ஒரே நாளில் இரண்டு டோராக்களையும், 38 கடற்படையினரையும் இழந்தது.

பலியானவர்களில் கடற்படை அலுவலர் நளின் விஜயசிங்கேவும் ஒருவர்.

இரண்டு டோராக்கள் பறிபோய்விட்ட நிலையில், இதற்கு மேலும் ஐரிஷ் மோனா கப்பலை மீட்கப்போகும் துணிவு இலங்கை கடற்படைக்கு வரவில்லை.

இந்நிலையில் ஆழ்கடலில் தயாராக நின்று கொண்டிருந்த ஆயுதக் கப்பலை புலிகள் இப்போது முல்லைத்தீவு கரைக்கு வரவழைத்தனர். ஐரிஷ் மோனா கப்பல் புலிகளின் கையில் பிணையாக இருந்ததால், புலிகளின் ஆயுதக் கப்பலை தடுத்துத் தாக்கும் எண்ணம் கடற்படைக்கு வரவில்லை.

என்ன செய்வது என்றே தெரியாமல், இலங்கை கடற்படையின் ஜலசாகரா என்ற கப்பல் மட்டும் கொஞ்சம் பாதுகாப்பான தொலைவில் இருந்தபடி இந்த நகர்வுகளை சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. மற்றபடி அது எதுவும் செய்யவில்லை. (சமர்த்து!)

இப்போது ஆயுதக்கப்பலில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தரையிறக்கிக் கொண்ட புலிகள், அதன்பிறகு ஆயுதக் கப்பலை போகச்செய்தனர். அது வங்கக் கடலில் பாதுகாப்பான தொலைவுக்குச் சென்ற பிறகு ஐரிஷ் மோனா கப்பலை புலிகள் விடுவித்து அனுப்பி வைத்தனர்.

கடல்மீது நடந்த இந்த அதிரடி நடவடிக்கை முழுவதும் கடற்புலிகளின் தலைவர் சூசையின் கண்காணிப்பின்கீழ் அற்புதமாக நடந்து முடிந்தது. புலிகளின் தலைமை அறிவுறுத்தியபடி ஆயுதக் கப்பலை கரைக்கே வரவழைத்து ஆயுதம் இறக்கியாற்று. கடற்படையின் 2 டோராக்களின் கதையை முடித்தாகி விட்டது. ஆபரேசன் கிரேட் சக்சஸ்.

கடற்புலிகளின் தலைவர் சூசையை சில வெளிநாட்டு ஏடுகள் ‘அட்மிரல்’ என்றுகூறி சிலவேளைகளில் கிண்டல் செய்வதுண்டு.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எந்த நாட்டு கடற்படை தலைமைத் தளபதிகளையும் விட சூசை மிகச்சிறந்த ‘அட்மிரல்‘தான். அதற்கு ஐரிஷ் மோனா நிகழ்வு போல பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

இஸ்ரேலின் டோரா பீரங்கிப்படகுகள், கிபிர் போர்விமானங்கள், அமெரிக்காவின் நவீன போர்ப்பயிற்சி, சீன, ரஷிய ஆயுதங்கள் என்று எந்த பாச்சாவும் புலிகளிடம் பலிக்கவில்லை.

இந்தியாவுடன் சேர்ந்து இத்தனை நாடுகளும் இனஅழிப்புப் போரில் இறங்கி புலிகளையும், பல லட்சம் ஈழமக்களையும் கொத்தாக அழிக்க இந்த ஆத்திரமும் ஒரு காரணம்.

பா. ஏகலைவன்

மே 13, 2020 - Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , , ,

Sorry, the comment form is closed at this time.