அழியாச்சுடர்கள்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தத

thileepan1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.

உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான். உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்னறிலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.

செப்ரெம்பர் 26, 2009 Posted by | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | பின்னூட்டமொன்றை இடுக

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பதினோராம் நாள் (25-09-1987)

thileepan_bedஇன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.
‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்…

பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம்@ அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.

இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.

இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.

அதேபோல் திருக்கோணமலையிலும் ‘கிருபா’ என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை. முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்;;த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல – கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ‘டொலர் பாம்’, ‘கென்ற் பாம்’ ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல@ நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ‘காந்தியவாதி’ என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?

இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் ‘தமிழர் நலம் காப்பது’ என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?

ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு – திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் “தமிழீழத்தைப் பிரித்துத் தா” என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு: இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை!

நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா….? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கைக் கொம்ய10னிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு “இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம்.” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் – கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயப10ர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.

அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

“ஒ… மரணித்த வீரனே! – உன்
ஆயுதங்களை எனக்குத் தா ………
உன்
சீருடைகளை எனக்குத் தா ………
உன்
பாதணிகளை எனக்குத் தா!
(ஓ…. மரணித்த)

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.

அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?

பயணம் தொடரும்…..

மீனகம்

செப்ரெம்பர் 26, 2009 Posted by | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | பின்னூட்டமொன்றை இடுக

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பத்தாம் நாள்(24-09-1987)

thileepan_finaldaysபெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.

ஆனால், இவர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும்.

அதை நான் என் வாழ்நாளில் முதல்முறையாக அனுபவிக்கிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருருமால், நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன்.

நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் – உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.

ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…. ஆதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?

இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நும்பிக்கையே அற்றுவிட்டது.இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.

அப்படியிருக்க……….. கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா?
திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்பது புரிந்துவிட்டது.
அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?
இரத்தமா?
அந்த “மனிதன்” இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?
ஏன்?
ஏன்?
அடுத்து வேறு ஓரு உருவம்!
அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…
ஏன்…….
ஏன்…..?

இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன…..
நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டது.

நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.
இரத்த அழுத்தம் -80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ….. அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா?

அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.

“நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…”

இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும்.
கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்மிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.

கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இதை என்றோ ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்……

இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து அவகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த ‘பண்டிதர்’.

இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழியிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் ” அன்பு”

இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.

இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்?
இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன.

நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.

‘திலீபன்’ என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்.”மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

பயணம் தொடரும்……..

மீனகம்

செப்ரெம்பர் 24, 2009 Posted by | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | பின்னூட்டமொன்றை இடுக

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்(23-09-1987)

thileepan_smaஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

ஆனால் இந்தக் குயில்…?

எம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..?

திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.

அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.

உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.

உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.

கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.

இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.

பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் !

கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.

இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.

திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.

சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.

எங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.

திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

1. யாழ் பிரiஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)

2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)

3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்

4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்

5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.

இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-

தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்

இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்

அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்

பிரிகேடியர் பெர்னான்டஸ்

இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்

விடுதலைப் புலிகளின் தரப்பில்:-

தலைவர். திரு. வே. பிரபாகரன்

பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).

திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)

திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)

திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..

எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.

இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.

ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.

பயணம் தொடரும்……..

மீனகம்

செப்ரெம்பர் 24, 2009 Posted by | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | பின்னூட்டமொன்றை இடுக

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்(22-09-1987)

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..

லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.

தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லைனெ;றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?

வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி; சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..

பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படு;த்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். புக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்

சிவந்த தமிழ் மண்ணில்

சந்ததி ஒன்று

சரித்திரம் படைக்க….

முந்திடும் என்பதால்….

முளையிலே கிள்ளிட…..

சுpந்தனை செய்தவர்

சிறுநரிக் கூட்டமாய்….

‘இந்தியப்படையெனும்’

பெயருடன் வந்தெம்

சந்திரன் போன்ற…

திலீபனின் உயிரைப்

பறித்திட எண்ணினால்…..

பாரிலே புரட்சி…..

வெடித்திடும் என்று….

வெறியுடன் அவர்களை…..

எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
—————-
இரத்த அழுத்தம் – 80/50

நாடித் துடிப்பு – 140

சுவாசம் – 24

பகலவன்

செப்ரெம்பர் 24, 2009 Posted by | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | பின்னூட்டமொன்றை இடுக