அழியாச்சுடர்கள்

தேசியத் தலைவரிடம் இருந்த யாரும் அறியாத அதி சிறந்த பண்புகள்!

தலைவரிடத்தில் நான் கண்ட சிறப்புகள் எனது பார்வையில் தலைவர்.!!

தலைவர் பிரபாகரனின் தமிழின எழுச்சி ஆரம்பிக்கும்வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை, பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள்.

ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள், புலிகளென்றால் அது மிகையாகாது.

முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் வார்த்தை “நீ தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.!

தமிழ்மொழியை, தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமந்திரம், தமிழரை ஒன்றிணைப்பதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை.

இப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிரபாகரனே இருக்கின்றார். இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர். இது புலி எதிர்ப்பாளர்களுக்கு கசக்கின்றது. தமிழரின் தன்னெழுசியை சிதைக்க முற்படுகின்றனர்.

இதன், அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும்.

எமது மக்களால் தேசத்துரோகிகளாக, முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு, களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பதுடன், புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.!

அதற்காக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை,(புலிகளால் உரிமை கோரப்பட்ட தாக்குதல்கள்) இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை, இவர்கள் நாசுக்காக மறைத்துவிடுகின்றனர்.

இவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள்.

எனது பதிவுகள் ஊடாக நான் கடந்து வந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்?

அந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் “நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.?

எனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையிலிருந்து பயணித்தபோதும், அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன்.!

தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.?

#இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.!

#கஞ்சி அல்லது பருப்பும், சோறும் என்றாலும், அது போராளிகளுக்கும் கிடைத்துவிட்டதா, என்பதை உறுதி செய்தபின்பு தான், தனது உணவுக்கு தயாராவார். பருப்பும், சோறும் என்றாலும், அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின், அவரதுமுதல் கேள்வி “சாப்பிட்டியா”..!

#அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும், பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும், தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார்.

#உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.

#இது எனக்கு கிட்டண்ணை கூறியது.!
ஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப் போய் முகாம் திரும்பினால், தாங்கள், கழட்டிப் போட்டு விட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து, துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும், அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.

#புலிகளமைப்பில் எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையுடன், அந்த தாயன்பை நானும் அனுபவித்தேன்.!

#புன்னகையுடன் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.

#வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை, பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார். பழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் இருப்பதை கண்டுள்ளேன்.

#வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று விரும்பி, எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.

# 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர், போராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால், பொறுப்பாளர்களால் முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் ,தலைவருக்கு கடிதமெழுதுவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல், போராளிகளிடம் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த, தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம்காணப்பட்டமையே இதற்கு காரணம்.

#தனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த போராளிகளிடம், சிறிய போராளிகளாக இருந்தாலும், கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.!

#ஒரு சிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.

# எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும்.

#போராளிகளுடன் உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும்.

#பொறுப்பாளராக இருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பானு அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும்பாலும் எல்லாத்தளபதிகளும், பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

#1991 இன் ஆரம்பத்தில் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை, தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார்.

தன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.!
அவரது போராளிகள் மீதான அன்பு இப்படித்தான் அடிக்கடி வெளிப்படும்.!

#ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது, ஒரு கர்ப்பணிப்பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில், கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கிச் சுமந்தபடி நடக்கமுடியாது, சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை, மீறி அவர்களைக் கடிந்து வாகனத்தை நிறுத்தினார்.

அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால், நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு, புதுக்குடியிருப்பு நோக்கி, அந்த பெண்மணி செல்ல வேண்டியிருந்தது. அந்தத் தாயின் துன்பத்தை உணர்ந்த தலைவர், தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி, தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவ வைத்தார் எங்கள் தலைவர்.

#அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து, காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது, வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு, தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சம்பவத்தின் போது, கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு இதை சொல்வதற்கு தவறவில்லை. அடுத்தநாள் தன்னுடன் நிற்கும் போராளியை வைத்தியசாலைக்கு அனுப்பி அந்த மனிதரின் நலன் விசாரித்தமை தலைவரின் இன்னொரு சிறப்பு.

#மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில், கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று, அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில், பூசையின் நிறைவின் பின், அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி, சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது.

இதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல், சேமக்காளையில் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை, கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை, அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார். போராளிகளின் தவறுகளையும் தன் தலையில் சுமர்ந்தார்.

இந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து, தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை. இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,” தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்” என்பதைக்காட்டுவதற்கு.!

#1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த, சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக,போராளிகள் இருந்தபோதும், திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் அதில் பலியாகினர்.

இதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4×4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும், இப்படியான அசம்பாவிதங்களுக்கு தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.!

#புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள், ஒவ்வொருத்தராக வந்து, அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள்.
இதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள், அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர்.

போராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான நடவடிக்கை. ஆனால், இந்த நடவடிக்கையின் பின் சம்பந்தப்பட்ட போராளியுடன், அம்மானும் தலைவரை சந்திக்கப்போனபோது. தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத்தலைகுனிய வைத்துவிட்டது.!

வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள். நேருக்கு நேர் மோதியே வெல்வார்கள், என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார். திட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத கம்பிக்கூடும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது.

போரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர்.!

இப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.!

இது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம் தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன்.!

உறுதியில், உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும், மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் தலைவரின் அழகு தனியழகே..

ஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.!

நரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும், அவரை புரிந்துகொள்வது கடினமே.!
பெருமையுடன் துரோணர்.!!

விடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த யாரும் அறியாத அதி சிறந்த பண்பு!

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல, அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் கூறுகையில்,

நான் கண்டவர்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நல்லெதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர்.

கீழ் உள்ளவர்கள் செய்த தவறுகள் அத்தனையையும் தன்மேல் போட்டுக்கொண்டு, அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார்.

உண்மையில் சிறந்த தலைமைத்துவ பண்பை பிரபாகரன் கொண்டுள்ளார். தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமானவர் அல்ல. அன்றிருந்த அரசியல் தலைவர்களே முழுக்க முழுக்க காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 20, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன் | , , , | தேசியத் தலைவரிடம் இருந்த யாரும் அறியாத அதி சிறந்த பண்புகள்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது.

அவசியத் தேவை கருதிய ஒரு மீள் பதிவு.

“தலைவர் பிரபாகரன்” என்று இருந்த பதவி நிலையை போராட்டத்தை பன்முகப்படுத்தும் நோக்குடனும் அதற்கான அர்த்த செறிவின் ஆழத்தை உணர்ந்தும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புலிகள் ‘தமிழீழ தேசியத்தலைவர்’ என்ற பதத்தை புழக்கத்தில் கொண்டுவந்தனர்.

பிற்பாடு புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் எல்லைகள் கடந்த தமிழின தலைவராக உருவெடுத்திருக்கும் அவரது பரிமாணத்தின் வீச்சை உணர்ந்த அரசியல் தலைவர்கள்/அரசியல் விமர்சகர்கள்/வரலாற்றாசிரியர்கள் அவரை ‘தமிழின தேசியத் தலைவர்’ என்று விளித்தது சமகால வரலாறு.

2009 தமிழின அழிப்பிற்கு பிற்பாடு புலிகளின் போராட்ட வழிமுறைகளும்/ அவர்கள் அனைத்துலக சதிகளினூடாக அழிக்கப்பட்ட பிராந்திய பூகோள அரசியலும்/ அரச பயங்கரவாதத்தை மையப்படுத்திய “சர்வதேச உறவுகளும்” / குறிப்பாக நந்திக்கடல் நோக்கிய அவரது நகர்வும் தலைவர் பிரபாகரன் குறித்த வேறொரு அரசியல் பரிமாணத்தை உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் சார்ந்து எழுதியிருக்கிறது.

அது “பிரபாகரனியம்” என்ற விடுதலைக் கோட்பாடாக கட்டவிழ்ந்து ஒடுக்கப்படும் இனங்களுக்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக முகிழ்ந்திருக்கிறது.

எனவே நாம் இனி அவரை தமிழர்களுக்கு மட்டும் பொதுவான தலைவராக குறுக்குவது அரசியல்ரீதியாகவும்/ கருத்தியல்ரீதியாகவும் தவறானது.

உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது.

எனவே நாம் வேறெந்த அடைமொழிகளையும் தவிர்த்து குறிப்பிட்ட இன அடையாளத்திற்குள் குறுக்காமல் பொதுவாக ‘தேசியத்தலைவர்’ என்று விளிப்பதே அரசியல் பெறுமதி மிக்கதென்பதுடன் எமது நீதிக்கான பயணத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலாகவும் இருக்க முடியும்.

என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்.

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும்.

ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது.

அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.

இதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒரு குழப்பமும் இல்லை.

பிரபாகரனியம்

பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.

30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது. ‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..

உலகின் போராடும் தேசிய இனங்களின் ஆன்மா – இயங்கியல் – அசைவியக்கியம்.

பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.

30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது. ‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..

# பிரபாகரனியம்.

#நந்திக்கடல்கோட்பாடுகள்.

சூடான் ஆட்சிக் கவிழ்ப்பும் ‘நந்திக்கடலும்’..

ஏப்ரல் 13, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன், முள்ளிவாய்க்கால் | , , , , , | உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேசியத் தலைவரின் 2002 கிளிநொச்சி பத்திரிகையாளர் மாநாடு -காணொளி

*

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.

ஏப்ரல் 10, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் | , , , , | தேசியத் தலைவரின் 2002 கிளிநொச்சி பத்திரிகையாளர் மாநாடு -காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் 12 ஆண்டுகள் !

தமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு.

“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) 12வது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.

தமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

வான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர்

விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள பலாலி கூட்டுத்தளம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார்கள். தற்போது வான்புலிகளின் இரண்டு ஸ்குவார்டன்கள் கடந்த ஏப்ரல் 29ம் திகதி அதிகாலை கொழும்பு நகரின் மையப்பகுதிக்கு வான் வழியாக ஊடுருவி கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் கேரவலப்பிட்டிய, வத்தளை பகுதியில் அமைந்துள்ள முத்துராயவெல எரிவாயு நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தமது தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன.

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 26ம் திகதி இரவு 10.00 – 11.00 மணியளவில இரண்டு புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் வவுனியா இராணுவ முகாம்களை நோக்கி பறப்பதாகக் கிடைத்த செய்திகளைத் தொடந்து சிறிலங்கா படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்புக்களை இயக்கினார்கள். பயப்பீதியும் அச்சமும் அடைந்த சிறிலங்காவின் முப்படையினரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களாலும் சாதாரண துப்பாக்கிகளாலும் வானத்தை நோக்கிப் பல்வேறு திசைகளில் சுட்டுத்தள்ளியதால் கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் ஏனைய பகுதிகளிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், விமானநிலையப் பணியாட்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயப்பீதியால் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதைவிட மோசம் என்னவென்றால், இச்சமயத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீதும் கீழிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுதான். இதன் காரணமாக எமிரேட்ஸ், சிங்கப்பூர், கதே பசுபிக் விமானங்களின் கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கான உள்வருகை திசைதிருப்பப்பட்டு தென்னிந்தியா விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த ஏப்ரல் 29ம் திகதி வான்புலிகளின் கொழும்பு நகரத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவங்கள் நடந்தேறின. கொழும்பு நகரில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையோர் வீடுகளிலும் பொது இடங்களிலும் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிறிலங்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலககிண்ணப் போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென வாண வேடிக்கை போன்று வெடிச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. முதலில் மக்கள் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டியினை கொண்டாடுவதற்கான வெடிச்சத்தங்கள் கேட்பதாக நினைத்தார்கள். எனினும் உடனடியாக மின்சாரம் கொழும்பு நகர மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் குண்டுச்சத்தங்களும் வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கியதும் ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

வீடுகளிலும் கட்டடங்களிலும் இருந்து மக்கள் வெளியே சென்று பார்த்தபோது கட்டுநாயக்காவில் இருந்து இரத்மலானை வரையும் இராணுவ முகாம்கள், சோதனை நிலையங்கள். காவலரண்கள் ஆகியனவற்றில் கடமையிலிருந்த பயப்பீதியடைந்திருந்த சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்தவர்களும் தமது துப்பாக்கிகளினால் வானத்தை நோக்கி ரம்போ படங்களில் இடம்பெறுவது போன்று நீள் வளைய வடிவத்தில் சுட்டுத்தள்ளினார்கள். இவர்கள் பயன்படுத்திய ரேசர் ரவைகள் இரவு நேர வானத்திலே மத்தாப்புக்கள் வெடித்ததுபோன்று அனைத்துக்கட்டடங்களிலும் இருந்து வான்நோக்கிச் சென்று வர்ணக் கோலங்களை வரைந்தது.

இவ்வாறான சம்பவங்களினால் அச்சமும் திகிலும் அடைந்திருந்த கொழும்பு நகர விடுதிகளில் தங்கியிருந்த உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உடனடியாக தமது அறைகளை விட்டு வெளியேறி தரைப்பகுதியில் இருக்கின்ற வரவேற்பு பகுதிக்கு கீழே இறங்கிவருமாறு பணிக்கப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட உல்லாச விடுதிக் கட்டடங்களில் இருந்து மாடிப் படிகள் ஊடாக இறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பயப்பீதியும் கோபமும் அடைந்திருந்த பல உல்லாசப்பிரயாணிகள் இதுதான் சிறிலங்காவிற்கான தமது கடைசிப் பயணம் எனத் தெரிவித்தார்கள்.

இத்தாக்குதல்களின் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களையும் விளைவுகளையும் சிங்கள தேசம் உடனடியாகவே அனுபவிக்கத்தொடங்கிவிட்டது. கொங்கொங்கினைத் தளமாகக் கொண்டியங்கும் கதே பசுபிக் விமான நிறுவனம், டுபாயினை தலைமையகமாகக் கொண்டியங்கும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது கொழும்பிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. இவை தவிர, சிங்கப்பூர் விமான நிறுவனம் தனது சிறிலங்காவிற்கான பறப்புக்களை பகல் வேளைகளில் மட்டும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் அவுஸ்ரேலியாவும் தமது மக்களுக்கு சிறிலங்காவிற்குப் பயணிப்பதால் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக மே 10ம் திகதியில் இருந்து இரவு 10.30 தொடக்கம் அதிகாலை 4.30 வரை சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்களின் விளைவுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தென்னாசியாவில் விமானம் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து மையமாக விளங்கும் சிறிலங்காவிற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.

சாதாரணமாகக் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 வரையிலான விமானங்கள் இறங்கி ஏறுவது வழக்கம். விமானநிலையத்தினை இரவு வேளை மூடுவதால் அண்ணளவாக 40வீதமான விமானங்களின் வருகைகள் தடைப்படப்போகின்றது. அத்துடன் சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் 43.6 வீதப் பங்கினை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதுடன் நிர்வாக முகாமைத்துவம் முழுவதும் எமிரேட்ஸ் நிறுவனவத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமிரேட்ஸ் நிறுவனமானது தனது தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பறப்புக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பினை தவிர்த்து மாலைதீவு, தென் இந்தியா, சிங்கப்பூர் போன்ற விமானநிலையங்களைப் பயன்படுத்த முற்பட்டால் ஏற்கனவே பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழா வைக்கவேண்டிய நிலையும் உருவாகும். உல்லாசப் பிரயாணத்துறையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவது தொடர்பாக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

வருடத்திற்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் சிறிலங்காவிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவதினால் 410 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகின்றது. இத்துறை சிறிலங்காவின் மூன்றாவது பெரிய வருமானத்தை ஈட்டும் அமைப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக 36வீதத்தினால் ஆட்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் புலிகளின் வான்தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து விமானநிலைய மற்றும் உல்லாச விடுதி அதிகாரிகளின் நெருக்கடிகளை கையாளத்தெரியாத, முட்டாள்த்தனமான அணுகுமுறையும் (கடந்த ஏப்ரல் 26ம் திகதி நூறு வரையிலான பெல்ஜிய நாட்டு உல்லாசப்பிரயாணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புலிகளின் வான்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிலத்தில் குப்புற படுக்கும்படி விமானநிலைய பணியாட்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.) இணைந்து மேலும் உல்லாசப்பிரயாணத் துறையை சீரழிக்கப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் பொருளாதாரமானது ஏற்கனவே 17வீத பணவீக்கத்தினால் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4வீதமாகக் காணப்படுவதாலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வான்புலிகளின் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு மிகவும் விலை கூடிய வான் கண்காணிப்புக் கருவிகள், வானூர்திகளை இரவில் கண்டுபிடிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் வான் பலத்தினை அதிகரிப்பதற்கு புதிய விமானங்கள் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக 2007ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனமானது 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து 200 பில்லியன் ரூபாய்களாக (20,000 கோடி ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் மாசல் ‘ரி குணதிலக்கா கூறியுள்ளார். இவ் பாதுகாப்பு செலவதிகரிப்பானது ஏற்கனவே வரவுசெலவு பற்றாக்குறையால் திண்டாடும் சிங்கள அரசிற்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.

மூலோபாய போரியலில் கேணல் வார்டனின் ‘ஐந்து வளையக் கோட்பாடு’ !

அமெரிக்க விமானப்படையின் கேணலாக கடமையாற்றிய ஜோன் வார்டன், ஒரு எதிரி அரசின் போரிடும் ஆற்றல்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அழிப்பதற்கு அல்லது முடக்குவதற்கு இந்த ஐந்து வளையக் கோட்பாட்டினை ஒரு எளிய வடிவமாக முன்வைக்கின்றார். இக்கோட்பாட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு எதிரியின் பிரதான தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை குறிப்பாக அடையாளப்படுத்தி அதன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றார் வார்டன்.

அத்துடன் மூலோபாயப் போரியலில் இந்த ஐந்து வளையங்கள் மீதும் இயலுமானளவு பரவலாகவும் சமாந்தரமாகவும் தாக்குதல்களை போரில் ஈடுபடுகின்ற தரப்பு மேற்கொள்வதன் மூலம் போரினை வெல்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அத்தரப்பிற்கு மிகவும் பிரகாசமானதாகக் காணப்படும் என்று மேலும் கூறுகின்றார்.

அதாவது எதிரியின் போரிடும் உளவுரன் மிகவும் பாதிக்கப்பட்டு எதிரி தனது போர் முயற்சிகளை இதன் காரணமாக கைவிடப் பண்ணுவதே இத் தந்திரோபாயத்தின் இலக்காகும்.

இவ்வளையங்களிலே மிகவும் பிரதானமானதும் உள்வளையத்தில் காணப்படுவது அரசின் தலைமைச் செயலகம் மற்றும் கட்டளை பீடங்களாகும். இதற்கு அடுத்ததாக முப்படைத்தளபதிகளின் கட்டளைப்பணிமனைகள், கூட்டுப்படைத் தலைமையகங்கள், தொடர்பாடல் நிலையங்கள் என்பன போன்ற போரினை செயல்படுத்தும் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.

இரண்டாவது வளையத்தில் போரினை தொடர்ச்சியாக நடத்துவதற்குத் தேவையான சக்திமூலங்கள் காணப்படுகின்றன. ஒரு அரசின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போரினை நீண்ட காலத்திற்கு அந்த அரசினால் நடத்த முடியும். அதாவது நிதி, மின்சாரம், எரி பொருள் போன்ற சக்திமூலங்கள் ஒரே சீராகவும் தடையின்றியும் பெறக்கூடியதாக இருந்தால் மாத்திரமே ஒரு அரசினால் தனது தலைமையகத்தையும் போர் இயந்திரத்தையும் சிறப்பாக இயக்க முடியும். சிறிலங்கா போன்ற சிறிய நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் மேலே கூறப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நேரடியாக அரச தலைமைப் பீடத்தினையும் அதனது போர் இயந்திரத்தினையும் பலமாகப் பாதிக்கும்.

அதாவது இரண்டாவது வளையத்தின் மீதான தாக்குதல்கள்,

* அரசு தனது போரினையோ அல்லது அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலையோ தொடர்ச்சியாக மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்கும்.

* பொருளாதார ரீதியிலான பல்வேறு மோசமான தாக்கங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்துவதோடு அவ்வரசின் உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் கூர்மையடையப் பண்ணும்.

* இவற்றின் காரணமாக அரச இயந்திரம் முற்றாகச் செயலிழக்கும் அல்லது ஆகக்குறைந்தது முடக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.

மூன்றாவது வளையத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான போக்குவரத்துச் சாலைகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உட்கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இவ்வளையத்தின் மீதான தாக்குதல்கள் எதிரிகளின் போர் நடவடிக்கைகளுக்கான விநியோகங்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நான்காவது வளையத்தில் பொது மக்கள் காணப்படுகின்றார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனியர்கள் லண்டன் மாநகரின் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தியமை மற்றும் நேச நாடுகள் ஜேர்மன் நகரங்களின் மீது வான்வழியாக குண்டுமழை பொழிந்தமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மீது உயிரிழப்புக்களையும் அவலங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உளவியல் போரை நடத்தி மக்களை போரில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே இதுவாகும்.

ஐந்தாவது வளையத்தில் கள முனைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள படையினர் காணப்படுகின்றனர். போர் நடவடிக்கைகளில் களமுனைப்படையினர் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்களின் பிரதான நோக்கம் ஏனைய வளையங்களில் காணப்படுகின்ற தலைமைப் பீடங்களையும் கட்டுமானங்களையும் சக்தி மூலங்களையும் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே.

இப்போது வார்டனின் ஐந்து வளையக் கோட்பாட்டின் பிரதானமான இலக்கான எதிரி அரசின் தலைமைப் பீடத்தின் அனைத்து போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கட்டளைமையத்தை (Center of Gravity) அடையாளம் கண்டு அதனை தாக்கியழிப்பது அல்லது செயலிழக்கப் பண்ணுவது என்பது போரில் வெற்றி கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இம் மையமானது ஒரு அரசின் அதிகாரம், பாதுகாப்பு, உள மற்றும் பௌதீக வலிமை, போரிடும் வல்லமை போன்றனவற்றின் ஆதாரமாக விளங்குகின்றது. இது தொடர்பாக குளோஸ்விச் கூறுவதாவது “ஒரு அரசானது போரினை நடத்திக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே அதனது அதிகாரம் மற்றும் செயற்பாடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான மையம் ஒன்று வளர்ச்சிபெற்று உருவாகும். இம் மையத்தை தாக்கியழிப்பதற்கே எமது அனைத்து சக்திகளும் கவனங்களும் மூல வளங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.”

நான்காவது ஈழப்போரிலே வான் புலிகளின் மரபுவழிப் போர் நடவடிக்கையானது ஒரு புதிய பரிமாணத்தை திறந்துவிட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலே தேசியத் தலைவர் அவர்களினால் தரையிலும் கடலிலும் மரபுவழி போர்த் தகைமைகள் கொண்ட படைகளை உருவாக்கியதைப் போன்று தற்போது வான் பரப்பின் ஊடாகவும் மரபு வழிப் போரினை சிறப்பாக திட்டமிட்டுத் துல்லியமாக நிறைவேற்றக்கூடிய வான்புலிகளை எந்தவொரு நாட்டின் உதவியுமின்றி தமது சொந்த முயற்சியிலேயே உருவாக்கிவிட்ட அவரது நவீனத்துவமான படைப்புத்திறன் சிந்தனையை பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வியந்து பாராட்டுகின்றனர்.

வான் புலிகளின் மரபுவழிப் போர் என்ற இப்புதிய பரிமாணமானது தரை மற்றும் கடல் போன்றல்லாது எல்லைகள் அற்ற ஒரு புதிய தளத்தினை புலிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும், அதாவது வார்டனின் ஐந்து வளையங்களையும் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் சென்று அழிக்கக்கூடிய வல்லமையைப் புலிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒரு மாதகாலப்பகுதிக்குள் மூன்று வெற்றிகரமான மரபுவழி வான் தாக்குதல்களை வான் புலிகள் நடத்தியதன் மூலம் சிறிலங்கா அரசு தனது வான் ஆதிக்கத்தை புலிகளிடம் பறி கொடுத்துவிட்டது என்று சிங்கள ஆய்வாளர்கள் ஏற்கனவே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

சிங்கள அரசியல் தலைவர்களோ அல்லது சிங்களப் படைத்தளபதிகளோ கள யதார்த்தங்களையோ அல்லது விடுதலைப் புலிகளின் நவீன முறையிலான போரியல் சிந்தனைகள் மற்றும் செயற்றிறன்களையோ அறிவதற்கோ அல்லது அதனை ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லை என்பதே சிங்கள மக்களின் மிகவும் துன்பியல் நிறைந்த சோகம் என சிங்கள பத்தி எழுத்தாளரான ரிசராணி குணசேகரா தெரிவிக்கின்றார். இதைவிட துன்பம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரமும் அரச கட்டுமானங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கும் கோதபாய ராஜபக்சவிற்கும் கொழும்பு நகரின் மூலை முடுக்கு எங்கும் கட் அவுட் வைப்பதும் அவர்களைப் புகழ்ந்து விளம்பரங்கள் ஒட்டுவதும் தான் மிக மோசமான செயற்பாடு என்று மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்கள் தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தேச விடுதலையை விரைவுபடுத்துகின்ற தீர்க்கமான சமர்கள் இடம்பெறப் போவதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.

பெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கின்ற எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தரைப்படை, கடற்படை என்பனவற்றோடு வான் படையும் தயாராக இருக்கின்றது.

எழுத்துருவாக்கம்:- சி.புலித்தேவன்.

விடுதலைப்புலிகள் இதழ் 2007 (பங்குனி, சித்திரை)

வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் !

மார்ச் 26, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பிரபாகரன் | , , , , , , | வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் 12 ஆண்டுகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு !

‘நந்திக்கடல்’

சிறிய சிறிய அளவிலேனும் களத்தில் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக ஒருங் கிணக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது ‘நந்திக்கடல்’.

போராடும் இனங்கள் களச் சூழலுக்கு ஏற்ற வகையில் போராட்ட வடிவங்களை மாற்றலாமேயொழிய என்றும் போராட்ட பண்பை இழக்கக் கூடாது என்கிறது ‘நந்திக்கடல்’.

அந்தப் பண்பே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நிரந்தர தோல்வியை பரிசளிக்கும் போராடும் இனங்களின் மூலதனம் என்கிறது ‘நந்திக்கடல்’.

போராடும் இனங்கள் எப்போதும் தம்மை தண்ணீர் போல் வைத்திருக்க வேண்டும்,
அப்போதுதான் சாத்தியமான போராட்ட வடிவத்துடன் தம்மை நிரப்பிக் கொள்ள முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.

தனது குணாம்சத்துடன் ஒப்பிட்டு இதை ‘தண்ணீர் கோட்பாடு’ (Water Theory) என்கிறது ‘நந்திக்கடல்’.

தோல்வி மனநிலையிலிருந்து எந்த அரசியலும் செய்ய முடியாது – எந்த போராட்டத்தையும் வடிவமைக்க முடியாது – எதிரியுடன் எந்த பேரமும் பேசவும் முடியாது.

நந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு இது.

எனவே தோல்வி மனநிலையிலிருந்து வெளியே வருவது முக்கியம்.

அதற்கு உள்ளக – வெளியக எதிரிகள் கூட்டாக இணைந்து உருவாக்கிய தோல்வியின், வீழ்ச்சியின், அழிவின் குறியீடான ‘முள்ளிவாய்க்கால்’ இலிருந்து நாம் மன அளவிலும், கருத்தியல்ரீதியாகவும் வெளியே வர வேண்டும்.

இன அழிப்பு என்று வரும் போதே நாம் ‘முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரை உச்சரிக்க வேண்டும்.
மற்றபடி நாம் என்றும் விடாது உச்சரிக்க வேண்டிய குறியீட்டு சொல் ‘நந்திக்கடல்’.

இதுவே எம்மை தோல்வி மனநிலையிலிருந்து மீட்டெடுத்து ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குள் கொண்டுவரும் முதற் படிமுறையாகும்.


தூசிடிடேஸ் – சன்சூ – கௌடில்யர் – வேலுப்பிள்ளை பிரபாகரன். -3

இன்றைய நவீன அரசுகளின் இராஜதந்திர கொள்கைவகுப்பாக்கம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்பது பண்டைய மூன்று தத்துவங்களின் அடிப்படையிலேயே வரையப்படுகின்றன.

கிரேக்க ஞானி தூசிடிடேஸ்,
சீனப் போர்க்கலை வல்லுனர் சன்சூ மற்றும் இந்தியாவின் கௌடில்யர் ஆகியோரது தத்துவங்களே இவை மூன்றுமாகும்.

ஆச்சர்யப்படத்தக்க வகையில் இவை இராணுவ – படைத்துறை உத்திகளிலிருந்து தோற்றம் பெற்று அரசுகளுக்கிடையேயான இராஜதந்திர கொள்கை வகுப்பாக்கமாக வடிவ மாறுதலுக்குள்ளாகுகின்றன.

இதுவே இந்த மூவர் பட்டியலில் நான்காமவராக வேலுப்பிள்ளை பிரபாகரனை வரலாறு அடையாளம் காட்டக் காரணமாகிறது.

ஸ்பாற்றாவுக்கும் ஏதன்சுக்கும் இடையில் கி.மு.404 – 431 காலப்பகுதியில் நடந்த போர் பெலோபோனீசியன் போர் (Peloponnesian War) என்று வரலாற்றில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.

இந்தப் போரின் தோல்வியிலிருந்தே ‘மனித குல வரலாற்றின் சொத்து’ என்று இன்றளவும் வர்ணிக்கப்படும் கோட்பாட்டை கிரேக்க ஞானி தூசிடிடேஸ் எமக்கு தந்திருக்கிறார்.

வரலாறு எவ்வளவு ஆச்சர்யமானது. மீளவும் பிரபாகரனுக்காக வழிவிட்டிருக்கிறது.

பெலோபோனீசியன் போர் தோல்வியின் பின் உருவாகிய ஒரு கோட்பாடு போல், இன்று முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியினூடாக பிரபாகரனியம் மற்றும் நந்திக்கடல் கோட்பாடுகள் வழியே அவருக்கு அழியாப் புகழை தந்திருக்கிறது.

இந்தியா தனது கொள்கை வகுப்பாக்கத்தில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தையே பின்பற்றுவதால்தான் உள்ளக அளவிலும் சரி வெளியக அளவிலும் சரி அழிவு அரசியலை கையிலெடுக்கிறது.

2009 தமிழின அழிப்பு இதற்கு சிறந்த உதாரணம்.

ஏனென்றால் கௌடில்யர் குழப்பம் விளைவித்தல், ஒற்றுமையை குலைத்தல், நோய்க் கிருமிகளை பரப்புதல் எல்லாம் இராஜதந்திரமாக முன்வைக்கிறார்.

இந்த இடத்தில்தான் பிரபாகரனியம் அதி முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் நினைத்திருந்தால் கடைசி நேரத்தில் சிங்கள தேசத்தை நிர்மூலம் செய்திருக்கலாம்.

ஆனால் அவர் இந்த இனத்தினுடைய வரலாற்றை மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் போராடும் இனங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாய் போராடும் இனங்களின் வரலாற்றைத் தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்.

அதுதான் மே17 அதிகாலை பிரபாகரன் நிதானமிழந்து தென்னிலங்கையை தாக்குவார் என்று கணித்திருக்க, தனது இறுதி நேரக் கட்டளையாக முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கரும்புலித் தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.

இன்றுவரை சிங்களம் மட்டுமல்ல
இந்திய, மேற்குலக வல்லுனர்கள் கூட மிரண்டு போய் நிற்கும் இடம் இது.
உலகின் போராடும் தேசிய இனங்களை அழித்து / நீர்த்துப் போகச் செய்யும் பல உத்திகள் உலக பயங்கரவாத அரசுகளினால் பரீட்சித்து பார்க்கப்பட்ட களம்தான் தமிழீழம்.

எப்படியாவது தலைவரை அடிபணிய வைப்பதனூடாக அதை ஒரு வெற்றிச் சூத்திரமாக மாற்ற முயன்றார்கள்.

தலைவர் அதை முன்னுணர்ந்தவராக ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார்.

அவர் அதனூடாக ஒடுக்கப்பட்ட இனங்கள் சார்ந்த ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கினார்.

கிரேக்க ஞானி தூசிடிடேஸ்,
சீனப் போர்க்கலை வல்லுனர் சன்சூ மற்றும் இந்தியாவின் கௌடில்யர் வரிசையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இடம் பிடிப்பதற்கும் அதேநேரம் அவர்களிடமிருந்து முற்றாக வேறுபடுவதற்கும் இதுதான் காரணம்.

ஏனென்றால் பிரபாகரனியம் மனித வாழ்வு மீதான தீராத காதலின் நிமித்தமே ஒரு கோட்பாட்டுருவாக்கமாக முகிழ்கிறது.

பரணி

மார்ச் 15, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன் | , , , , | நந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது