அழியாச்சுடர்கள்

ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் #இறுதிவணக்கம் #நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam


தாயக விடுதலை நோக்கிய பயணத்தில் உடல், உள ஆற்றல் ஆளுமையை தனது மக்களுக்காக தான் பணியாற்றிய கல்வித்தளம் தொடக்கம் தமிழீழ விளையாட்டுத்துறையெனும் பரிணாம வீச்சால் இளைய தலைமுறையினையும், ஆசிரியத்துவ மாணவர்களையும் உலகப் பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான் பேரன்புக்குரிய மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இழப்புச் (30.11.2020) செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையுடன் எனது இரங்கல் பகிர்வுடன் இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1967 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி ஆசிரியர் பயிற்சி மாணவனாக கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு தெரிவாகி சமுகமளித்தேன். அன்றிரவு விரிவுரையாளர் மாணவர் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அப்போது 30–31 வயது மதிக்கத்தக்க இவர், எழுந்து தனது பெயர், கல்வி, தனது தொழில் தகமை பற்றிக் கூறிய போது சாதாரணமாக கிரகித்தேன். ஆனால் பின்நாளில் இவர் கூறியபடி விரிவுரை மற்றும் செய்முறையில் கண்ட ஆற்றலை கண்டு மிகவும் வியந்தேன். தடகள நிகழ்ச்சிகள் தவிர உதைபந்து, கரப்பந்து, வலைப்பந்து நிகழ்ச்சிகளிலும் தனது தொழில் நுட்ப அறிவால் குறுகிய காலத்தில் விளையாட்டுத்துறையில் எம்மை ஆர்வமுடைய மாணவர்களாக்கினார்.

இவர் வகுப்பறையில் விரிவுரை வழங்குவதிலும் மாலையில் மைதானத்தில் செயன்முறைப் பயிற்சி வழங்குவதிலும் மிகவும் கணடிப்பாக இருப்பார். ஆனால் ஏனைய நேரங்களில் சகோதர பாசத்துடன் நல்ல நண்பனாக பழகும் குணமும் உடையவர். மைதான நிகழ்ச்சிகளில் அக்கறையுடன் ஈடுபடும் ஆசிரிய மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதோடு, ஏனைய மாணவர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்புடைய ஆளுமையான குரு ஆவார்.

இவரின் காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை, நல்லூர் ஆசிரியர் கலாசாலை இரண்டிற்கும் நடைபெறும் வருடாந்த போட்டிகளில் பலவருடங்களாக கொழும்புத்துறையே வெற்றியீட்டி வந்தது. நான் படித்த காலத்தில்(S.S.C வரை) விளையாட்டில் ஈடுபாடு காட்டியதில்லை. மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாகிய பின் 26-27 வயதில் விளையாட்டில் ஈடுபாடாய் இருப்பது சிரமமாக இருந்தது. ஆனால் எனக்கு தனது பயிற்சியால் 100மீற்றர், 200மீற்றர், 400மீற்றர் ஓட்டத்திலும் நீளம் பாய்தலிலும் முதன்மை பெற உதவினார். பொதுவாக மன்னார், வவுனியா, முல்லை மாவட்ட மாணவர்கள் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கும் நியமிக்கப்படுவார்கள். வன்னி மாணவர்கள் ஓரளவு தேர்ச்சி உடையவர்களாக இருந்தார்கள். கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை இவரது வழிகாட்டலில் பல வருடங்களாக வெற்றிபெற்று வந்தது.

எங்களது ஆசானுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்ட நிகழ்வாக 1967 இல் முதல் ஐந்து மாதம் கொழும்புத்துறையில் நான் உடற்கல்வியை, கற்பித்தல் திறனால் மைதான நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களை இவரிடம் ஓரளவு தெரிந்து கொண்டேன். இதன் பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கு மாறிச் சென்று விட்டேன். அங்கு போன பின்பும் மாலை நேரங்களில் நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் சந்திப்போம். கரப்பந்து நுட்பங்களை அறிய நண்பர் துரைராசாவும் என்னுடன் வந்து இவரிடம் ஆலோசனை பெறுவார்.

1967 இல் இரண்டாம் தவணை இறுதியில் கலாசாலைகளுக்கிடையில் போட்டி நடந்தது. எமது தரப்பில் நானும், துரைராசாவும் திட்டமிட்டு வீரர்களை தயார்படுத்தி இருந்ததால், நான் 100மீற்றர், 200மீற்றர். 400மீற்றர் முதலாம் இடங்கள். நீளம்பாய்தல் மூன்றாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் வரதராஜன், தட்டெறிதல் முதலாம் இடம் பொன்சபாபதி (மறைந்த கிளி வலயக் கல்விப் பணிப்பாளர்), நீளம் பாய்தல் முதலாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் ஸ்ரனிஸ்லஸ் (பின்நாளில் நீங்கா நினைவுகளின் கடற்புலிகளில் அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் மறவன் மாஸ்டர்) 800மீற்றர் 1 மைல் முதலாம் இடங்கள். இப்படி எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னேறி 1967 நல்லூர் ஆசிரியர் கலாசாலை பல வருடங்களின் பின் வெற்றி பெற்றது. இறுதியில் எங்களது ஆசான் பத்மநாதன் கூறியது இன்றும் ஞாபகமாக உள்ளது. திட்டம் போட்டு வென்று விட்டீர்கள் என உரிமையுடனும், மகிழ்ச்சியுடனும், நட்புடனும் கூறி வாழ்த்தி ஊக்கமளித்தமை மறக்கமுடியாத ஒன்று.

பின்நாட்களில் எனது ஆசிரியத்துவப் பணி, பாடசாலை அதிபர் பணி, தேசவிடுதலைக்கான பணியென அடியெடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வுகளுக்குள்ளும் இவர் என்னை இளமைக் காலத்தில் ஆளுமைமிக்க ஒருவனாக வளர்த்து விட்ட ஒரு நல்லாசானாக நினைத்துப் பார்க்கிறேன்.

1990 தேசவிடுதலைக்காக எனது பணியை முழுமையாக தொடங்கிய காலத்தை அடுத்து 1991 காலப் பகுதியில் எனது இப்பணியின் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்ற வேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் விளையாட்டு-உடற்கல்வி விரிவுரையாளர் பத்மநாதன் அவர்கள் பணியாற்றுகின்றார் என்பதை சக நட்புக்கள் மூலம் அறிந்து, அவரை சந்திக்கும் வாய்ப்பு அவர் பல்கலைக்கழகத்தில் அவர்பணியில் அவர் நின்றவேளை கிடைத்தது. இரண்டாவது ஈழயுத்தம் நடைபெறும் காலம் அரசின் பொருளாதார கல்வி தடைகளைத் தாண்டி முகம்கொடுத்து மக்கள் வாழ்ந்த நிலையில் இவ்வாறு உணர்வுமிக்க விரிவுரையாளர்கள், பொறுப்பு மிக்க துணைவேந்தர் போன்றோர் யாழ். பல்கலைக்கழகத்தை இயங்கு நிலையில் தங்கு தடையின்றி மாணவர்களுக்கு கல்வியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அன்றொருநாள் நேரடியாக அவரை பல்கலைக்கழகத்தில் சந்திக்கச் சென்ற வேளை, அதே அன்போடு மட்டற்ற மகிழ்வோடு வரவேற்று தான் கடந்த காலத்தில் ஆசிரிய கலாசாலையில் தன்னிடம் கற்ற மாணவன் என்பதை அங்கு துணைவேந்தர் (இன்றைய மாமனிதர்) துரைராஜா மற்றும் பதிவாளர் பரமேஸ்வரன் ஏனைய விரிவுரையாளர்கள் என அவரவர் அலுவலகங்களுக்கும் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வளாகத்தின் சூழலை குறிப்பிட்ட நேரத்திற்குள் சுற்றிக்காட்டி தற்போதய போர்ச் சூழலில் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம். என மூன்று மணி நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி தனது அன்பை பகிர்ந்து தேனீர் சாலையில் தேனீர் உபசாரத்துடன் அனுப்பும் போது இந்த பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு கற்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் இங்கு வந்து இவ்வளவு கல்வியிலாளர்களை சந்திக்க சந்தர்ப்பம் தந்திருக்கிறீங்களே சேர் நகைச்சுவையாக அவரது அன்பையும் அவரிடம் தேங்கியிருந்த விடுதலைப்பற்று உறுதியையும் பகிர்ந்து கொண்டு நானும் உடன் வந்த இனியவனும் விடைபெற்று வெளியேறினோம்.

தொடர்ந்து வந்த யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் மக்கள் துன்ப துயரங்களுள் தானும் அதனை தாங்கி குடும்பத்துடன் வாழும் இயல்பு நிலையை தனதாக்கிக் கொண்டதை அவரை சந்திக்கும் போது பகிர்ந்து கொண்டார். இதே வேளை நான் பணிசெய்த தமிழீழ நிர்வாக சேவை பிரிவில் 1994இல் முல்லை மாவட்டத்தில் பொறுப்பாக பணிசெய்த அதியமான் அறிமுகமாகும் போது தான் பத்மநாதன் அவர்களின் மகன் என தெரியப்படுத்தினார் அப்போது அவரது அப்பா பற்றிய ஆளுமை எனது ஆசான் என அதியமானுக்கு தெரியப்படுத்திய போது மட்டற்ற மகிழ்வும் என்னை காணும் போதெல்லாம் அப்பாவின் அன்பை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.

பின் நாட்களில் தாயக விடுதலையின் தமிழீழ அரசுக் கட்டுமானங்கள் துளிர்விட்ட காலம். தன் துறைசார்ந்த பணியை இன்னும் அதிவேகமாக நமது இளம் தலைமுறையினரிடம் இட்டுச்செல்ல வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழீழ தேசியத் தலைவரது தலைமையினது உணர்வினை புரிந்து கொண்டு தனது பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் ஓய்வு நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து. தமிழீழ விளையாட்டுத்துறையின் இலக்கை நோக்கிய வளர்ச்சிக்கு அத்திவாரமாக செயற்பட்டு கட்டியமைப்பதில் அதிக பங்கை வகித்தவர். தமிழீழப் பரப்புக்குள் அனைத்து மாவட்டங்களின் விளையட்டுத்துறை விரிவாக்கம், தடகளப் போட்டிகள் உட்பட அனைத்து குழு விளையாட்டுக்கள் மாபெரும் விளையாட்டு விழாக்கள் பயிற்சிகள் என கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானம் இளையோரால் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும் பசுமை நினைவுகளுக்குள் இவரது உழைப்பும் உள்ளது.

அத்துடன் உலகப் பரப்பின் ஐரோப்பிய தளத்தில் தமிழீழ அரசின் விளையாட்டுத்துறையின் தமிழீழ பெண்கள் வலைப்பந்தாட்ட அணியை துலங்க வைத்த தமிழீழ தேசத்தின் மகன் இவரது அர்ப்பணிப்பான பணிக்காக தமிழீழ தேசியத்தலைவர் அழைத்து மதிப்பளித்தமை அவரது பணிக்கான வாழ்நாள் மகுடமாக கருதலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாயக விடுதலைப் பணியின் நிமித்தம் சந்தித்து கிளிநொச்சி மண்ணில் எங்கள் உணர்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வோம்.

2009 போரின் நிறைவின் பின்னர் தமிழகத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார். அவரது வீட்டில் நானும் ஒருமாதம் தங்கியிருந்தேன். கடந்த கால தேசவிடுதலையின் வீச்சும் தொடர்ந்த இழப்புகளும் அவரது மனதையும் நெருடச் செய்ய, அவரது ஆதங்கமும், ஒருவருக்கொருவர் உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்து ஆதங்கப்பட்டோம். இருந்த வீட்டில் தனது கைப்பட சுவையாக உணவு தயாரித்து தந்து மனநிறைவு கண்ட நினைவுகளை மீடடுப் பார்க்கிறேன்.

ஆம்! தேச விடுதலைக்காக தனது உணர்வுடன் ஒன்றுபட்டு இரு மகன்களை உவந்ததுடன் அவர்களில் ஒருவர் மாவீரர் கப்டன் கெனடி(பாவண்ணன்) போராளி அதியமான் என மாவீரரின் தந்தையென போற்றுதற்குரியவராகவும், தமிழீழ தேசியத்தலைவரதும் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் என அனைவரது மனங்களிலும் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்த எனது நல்லாசனது இழப்புச் செய்தியறிந்து நேரடியாக இறுதி வணக்கத்தை தெரிவிக்க வாய்ப்பு இழந்து, துயரில் உங்கள் உணர்வுக்குள் கட்டுப்பட்டு இறுதி வணக்கத்தை தெரிவித்து, உங்களது இழப்பால் துயருறும் குடும்பத்திற்கு ஆழ்ந்த ஆறுதல் பகிர்வை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா.சிவகுமார்.

திசெம்பர் 6, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர் | , , , | ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் #இறுதிவணக்கம் #நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நாட்டுப்பற்றாளர் நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் ! # நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam

நாட்டுப்பற்றாளர். நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவுநாள் 04 .12.2020ம்.திகதி 32ம் ஆண்டு நினைவுநாள்

ஓடையிலே எம் சாம்பல்

கரையும் போது

ஒண்டமிழே சலசலத்து

ஓடவேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போது பைந்தமிழின் ஓசையை நான் கேட்க வேண்டும்!

இது பாவேந்தர் பாரதிதாசன் எழுச்சிக்கவிதை வரிகள்….

இது சிவம் மாஸ்ரருக்கு மிகப்பிடித்த வரிகளும் கூட….

சிவம் மாஸ்ரர் பெயரைச் சொல்லும்போதே, தமிழ் என்று விரியும் நினைவு காங்கேசன்துறை ஊரவர்க்கு

மனதில் தோன்றும் உருவம்!

இளம்வயதில் இருந்தே தந்தை குஞ்சன் நாகமுத்துவால், தமிழ் உணர்வும் ஊட்டமாகி வளர்ந்தது!

இவர் உணர்ச்சிமிக்க மேடைப்பேச்சாளனாக முதிர்ந்த வேளை அனைத்துக் கூட்டங்களிலும் அரங்கம் அதிரும் வண்ணம் இவரது பேச்சு அமைந்திருக்கும்.

இதேவேளை ஊர்நண்பர்களுடன் இணைந்து இளந்தமிழ் மன்றம் எனும் கலை மற்றும் விளையாட்டுடனான கழகத்தை உருவாக்கும்போது, மாம்பிராய் காந்தி விளையாட்டுக்கழக இளைஞர்களும் இணைந்து

நாடகம், கவியரங்கம், வழக்குரை மன்றம், எனத் தனியாகவும், ஆண்டுவிழாக்கள், நாடகப்போட்டிகள் என்ற முத்தமிழ் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் களைகட்டும்! இவற்றுள் எல்லாம் சிவம் மாஸ்ரரின் அலவாங்குக் குழிவெட்டி கப்பு நடுவதில் இருந்து, அரங்கு அலங்கார மஞ்சள், சிவப்புக் கீலமாக ஆடும் வெள்ளைத்தாளை வெட்டிக் கோதுமைமாவில் கிண்டிய பசைதடவி நைலோன் நூலில் ஒட்டுவது ஈறாக மேடையில் முழங்கி, நாடகத்தில் நடித்து,கவிதைபாடி,

” குற்றக்கூண்டில் பாரதி தாசன்” முன்னாள் கல்வி அதிகாரி,அதிபர், தமிழ்அறிஞர், ஆன்மீகவாதிகள் தமிழ்ப்பற்றாளர் மதிப்பிற்குரிய

திரு வேலாயுதம் ஆசிரியர் நீதிபதியாக வீற்றிருக்க,சூடுமறக்க வெடிக்கும் தமிழ் வாதாட்டுமொழி சிவம்மாஸ்ரரை மேடையில் ஓர் சிவனாகவே பார்க்கலாம்! அழகும் வேகமுமாக அடுத்தடுத்து அள்ளிவரும் தமிழ்…

இப்படியே ஆண்டுகள் நகர, தமிழினவிடுதலை மென்முறைப்போராட்டங்ககள் பலவற்றிலும், தமிழாராட்சி மாநாட்டிலும் கலந்து நின்ற வாத்தியார்……

காலத்தின் தேவை, இன ஒடுக்குமுறையின் சிங்கள வன்முறையின் உச்சக் கோரதாண்டவம், எதிர்வினையாகத் தமிழ் இளைஞர்களின் கரங்களில் கருவிகளைத் திணித்தது காலம். காலப்பிரசவமாய், ஈழத்தமிழர்களின் பாரம்பரிய போர்முகம் பிரபாகரன் எனும் தமிழ் எழுச்சி வடிவமாகதோற்றமுற, இயல்பாகவே சுதந்திரத் தாகம் கொண்ட சிவம் மாஸ்ரரும், காலத்தின் கரிசனையைத் தானும் உணர, பூம்புகார் வீடு ஓர் புலிகள் சரணாலயமானது! இதற்கு முன்னரான காலத்திலும், பலபோரளிகள் அந்தவீட்டீன் அன்னம் சுவைக்காமல் சென்றதில்லை!

இறுதியாக அவர் தலையையும், மார்பையும் துளைத்த துப்பாக்கியின் சொந்தக்காரர்களான செந்தோழர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என

அனைவருக்கும் அடைக்கலமும், ஆதரவும் கொடுத்த அந்த மனிதம் மிகு மனிதன், தமிழ்ப்பற்றாளன், மக்கள் நேய ஊரவன்,

இருண்டகாலமாக எமது மண்ணில் இறங்கிய இந்திய நஞ்சுக்காற்றால் மூச்சுத்திணறவைத்தவேளை

அமைதி முகம் கிழிய, ஆயுத அரக்கரானபோது, மீண்டும் மாஸ்ரர் வழமைபோல விடுதலைக்குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியானார்.

யாழ்மாவட்ட அரசியற் துறைப்பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் லெப்.கேணல்திலீபன் அவர்களுக்குஅடுத்ததாகப் பொறுப்பேற்ற

பிரசாத் அவர்களின் அணியினது பாதுகாப்பான தலைமறைவு செயற்பாட்டுக்கு உறுதுணையாக நின்றார்!

அத்தோடு குடாநாட்டை விட்டு வெளியேறிய பல போராளிக்குழுவின் இளைப்பாறும் இடைத்தங்கல் இல்லமாக, பல பற்றைக் காடுகளில், அவர்கள் காத்திருந்தார்கள்! மாஸ்ரரின் உணவும், மருந்தும் வரும் என்று!

அத்தகைய இருத்தலில் ஒன்றின் காட்டிக்கொடுப்புச் சுற்றிவளைப்பில் மாஸ்ரரும், திலகனும் இன்னுமொரு நண்பரும் இந்திய இராணுவத்தால் கைதைசெய்யப்பட்டு, பண்டத்தரிப்புச் சந்தி முகாமில் கடுமையாகத் தாக்கி விசாரணை செய்தபின்,காங்கேசன் துறை முகாமிற்கு மாற்றப்பட்டபின், இந்திய இராணுவத்தால் செல்வாக்கு மிக்க இரட்டைமுக காங்கேசன் பிரமுகர்கள், சில அரச நண்பர்கள் அதற்கும் மேலான நடேஸ்வராக்கல்லூரியின் அன்றைய அதிபர், மாஸ்ரரில் அன்பும், மரியாதையும் கொண்ட மாணவர்கள், சக ஆசிரிய நண்பர்கள் ஆகியோரின் முயற்சியும்,

இளந்தமிழ் மன்ற நண்பர்கள், தெல்லிப்பளை பநோகூ சங்கத்தலைவர் சிவமகாராஜா,

மாஸ்ரர் பண்டத்தரிப்பு முகாமில் தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து சொன்ன, அவரது ஒன்றைவிட்ட பிராம்பற்று அண்ணன் உட்பட பலரின் அயாராமுயற்சியால் மாஸ்ரர் மறுபடி விடுவிக்கப்பட்டார். அவர் நண்பர்களோடு!

பின்பு மறுபடியும் விடுதலைக்குரல் ஒலிக்கத்தொடங்க அதனை ஒடுக்க நினைத்த இந்திய உளவுத்துறையும், அதன் நிறைவேற்றுக்குழுவான, ஈபிஆர்எல்எவ் இன் அடியாட்களும் தமது எண்ணத்தை அவகாசமின்றி 1988 டிசம்பர் 4 ம் திகதி நிறைவேற்றின!

ஒரு ஆயுதம் ஏந்தாத ஆசிரியனை ஒழிக்க பல ஆயுதம் தாங்கிய முழுமையான கொலைகாரர்கள்!

அந்த ஜீவன், கல்லூரிவீதி இரண்டாம் குறுக்குத் தெரு வீதி சந்தியில்,தலையுலும் மார்பிலும் குண்டேந்தியபடி,

தான் பிறந்த மண்ணில் தன் குருதி வழிய தான் உயிரிலும் மேலாய் நேசித்த தாயகவிடுதலைக்காக தன்னுயிரீந்தார்.இதே சந்தியில், இந்திய இராணுவம் முன்பு தன் உரிமை முழக்கம் இட்டதும்,இதே சந்தியிலேயே ஈரோஸ் அமைப்பின் போராளிகள் நால்வர் வீரச்சாவடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க சிவந்த மண் சிவம் மாஸ்ரர் வீழ்ந்த மண்!  நாட்டுப்பற்றாளரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி அவருக்கு எமது அக நினைவு வணக்கம்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர், வீரவணக்கம் | , , , , , | நாட்டுப்பற்றாளர் நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் ! # நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide

ஜூன் 11, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர், வீரவணக்கம் | , , , , | மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

#தமிழீழக்கலைஞர் #நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா ! #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #தமிழர் #தமிழினதுரோகிதிமுக #DMK #MKStalin #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide

Nationalist Kanesh Artistஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.

காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்.

போராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மை கலைஞன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் இனவெறித் தாக்குதலை – கொடுமைகளை அதனால் துன்பப்படும் உறவுகளின் சொல்லிலடங்கா வேதனைகளை, தன் தத்துருவமான திறனால் அவற்றை ஓர் காட்சியாக நடித்து ஓர் உறவுகளின் உயிரோட்டமாக புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்றவகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனையோ போராளிகளின், தாய் – தந்தையர்களின், சகோதர – சகோதரிகள், மழலைகள் மனங்களில் நிறைந்தவர்.

தன்னடக்கம், குறும்பு சிரிப்பு, அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை….. வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.

“நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது”

பல காலமாக தமிழீழ திரைப்படத் துறையில் ஓர் கலைஞானாக வலம் வந்தவர். எல்லோராலும் கணேஸ் மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ தேசம் ஓர் கலைத்துறையில் ஓர் சிறந்த கலைஞனை, ஓர் நகைச்சுவையாளனை தன்னுள் ஓர் வரலாறாக அரவணைத்தது.

கணேஷ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்று யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மைகாலம் வரையில் போராட்டகளங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து வரலாறாகிய இந்த கலைஞனுக்கு எமது இதய அஞ்சலிகள்…..

எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா தமிழீழ காற்றில் கலந்து எம் நெஞ்சமதில் நீங்காத நினைவுகளாய்……………..

கணேஷ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் சில காவியம்……….
* இன்னும் ஒரு நாடு
* அம்மா ! நலமா ?
* உயிரம்புகள்
* கடலோரக் காற்று

kanesh uncle

இன்றும் உம் உருவம் தொலைக்காட்சித் திரைகளில் விடுதலை தாகத்தின் குரலாய் கேட்கிறது காதோரம் கண்ணீர்தான் விழியோரம் நினைவுகளுடன்……

மே 8, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர், வீரவணக்கம் | , , , , , | #தமிழீழக்கலைஞர் #நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா ! #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #தமிழர் #தமிழினதுரோகிதிமுக #DMK #MKStalin #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்…#ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #வீரவணக்கம் #நாட்டுப்பற்றாளர் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர்.

போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார். எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர்.

அதற்காக ஊர், ஊராகத்திரிந்து இரவு பகலாக அலைந்து குடிசைகளிலும் கடற்கரைகளிலும் படுத்துறங்கி அவர்களின் வாழ்வை தன்வாழ்வாக்கி உணர்வுகளை வரைந்தார். அத்தோடு, நெருப்பாற்றில் நீச்சலிடும் விடுதலைப் போரின் வீச்சுமிக்க பக்கங்களை வெற்றிகளை எழுத்துருவில் மட்டுமல்லாது ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டுக்களிலும் பதிவு செய்வதற்காகவும் துடிப்பார். ஓர் கவிஞனாக மட்டுமல்லாது ஓர் ஓவியனாகவும், சிற்பியாகவும், நாவலாசிரியராகவும் தன் உணர்வுகளை பதிவுகளை பல்வேறு வடிவங்களிலும் ஆவணமாக்கினார்.

இவருடைய தாய் மண்ணின் பற்றின் சான்றுகள் தமிழீழ மண்ணிலும் இன்றும் தமிழர் மனங்களிலும் என்றும் நிலைத்து நிக்கின்றன சில கவிஞர்கள் வெறும் எழுத்துக் கவிஞர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வு என வருகையில் தாமும் தமது குடும்பமும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவர்கள் போராட வேண்டும் என நினைப்பார்கள். தாம் ஒதுங்கிவிடுவர் இவர் போராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துக்கள், பேச்சுக்கள், ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர்.

“கவிஞர் நாவண்ணன்” தமிழன் சிந்திய இரத்தம், கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது , உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். இவரால் தயாரிக்கப்பட்ட “வலியும் பழியும்” என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த “கரும்புலிகள் காவியத்தை” நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும் அதன் பின்னர் “கவியம் நூல்” உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.

எம் தேசத்தின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த இவரது குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகளிற்கு ஒரேயொரு ஆண் மகனாக இருந்த “சூசைநாயகம் கிங்சிலி” உதயன் 2 லெப். கவியழகன் என்பவர் இத்தேசத்தின் பயணத்தில் இணைந்து இறுதிவரை களமாடி மாவீரரானார். அதனாலும் மனம் தளராது வீர மறவனைப் பெற்றேடுத்தேன்- அவனை வீர புத்திரனாய் மண்ணிற்குள் விதைத்தேன் என்ற தன் உயிர்ப்பிரிவின் உணர்வை இலக்கியமாக படைத்தார்.

இவரின் முதுமைக்காலத்தில் புலிகளின்குரல் வானொலியிலும். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலும் தன் ஆற்றலினூடாக பல்வேறு நிகழ்வுகளை உலகுக்கும் உணத்தினார். இவரின் ஆற்றலிற்காக எம் தேசியத் தலைவர் அவர்களிடம் இருமுறை விருதுகள் பெற்றார். இறுதியில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோன எம் உறவுகளை நினைந்துருகி “ஆழிப்பேரலையின் சுவடுகள்” என்னும் அரிய நூல் ஒன்றையும் எழுதினார்.

காலத்தின் சுழற்சியோடு தன் வாழ்க்கையை ஒன்றிணைத்து என்றுமே, எப்போதுமே தன் படைப்பின் மூலம் நினைவுகளைப் புரட்டிப்பார்க்க விட்டுச்சென்ற ஓர் உன்னத மனிதன் கவிஞர் நாவண்ணன். அப்படிப்பட்டவர் மத்தியில் தான் மட்டுமன்றி தனது அருந்தவ புதல்வனையும் மண்ணிற்கே ஈகம் செய்தவர் கவிஞர் நாவண்ணன் அவர்கள். பல மாவீரர் பாடல்களை எழுதி எமக்காக உணர்வு ஏந்தித் தந்தவர்.

கவிஞர் நாவண்ணன் அவர்களின் புதல்வன் லெப்.கவியழகன் (சூசைநாயகம் கிங்சிலி உதயன்)16-05-1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்தார். ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார். ஈழத்தின் மூத்த கவிஞர் திரு.நாவண்ணன் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் “மாமனிதர்” விருது வழங்கி கௌரவிக்கபட்டது.

எழுத்துத் துறையோடு ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கற்சிலை மடுவில் நிறுவப்பட்டிருந்த கம்பீரமான பண்டாரவன்னியன் சிலை, மாங்குளத்தில் நிறுவப்பட்டிருந்த கரும்புலி போர்க்கின் சிலை, கிளிநொச்சி 155ம் கட்டையில் அமைக்கப்பட்டிருந்த முதற் பெண் மாவீர்ர் மாலதியின் சிலை போன்றன இவர் செதுக்கிய சிற்பங்களே.

மானிப்பாய் அந்தோனியார் ஆலய முன்றலில் யேசுக் கிறீஸ்துவின் சிலை, மல்வம் வாசிகசாலையில் சுவாமி ஞானப்பிரகாசர் சிலை,வங்காலையில் அருட்திரு பஸ்ரியன் சிலை, மன்னார் மாதா கோவில் முன்றலில் அருட்சகோதர்ர். டிலாசாலும் இரு சிறுவர்களும் நிற்கும் சிலை போன்றன இன்றும் கவிஞர் நாவண்ணணின் கலைத்திறனை நிரூபிக்கும் அவரது சிற்பங்களாகும்.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

1- 1972 இறுதி மூச்சு
2- 1976 தமிழன் சிந்திய இரத்தம்-(1958 இனக்கலவரம் பற்றியது)
3- 1976 புத்தளத்தில் இரத்தக்களம் -(1976ல் நடந்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் பற்றியது)
4- 1978 பயணம் தொடர்கிறது (நாவல்)
5- 1988 நானொரு முற்றுப்புள்ளி (சிறுகதைத் தொகுப்பு)
6- 1988 தீபங்கள் எரிகின்றன (தனி மனித வரலாறு)
7- 1989 இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் (இலக்கியம்)
8- 1992 கதை-கண்ணீர்- கவிதை (மலையக மக்கள் தொடர்பான குறுங்காவியம்)
9- 1989 நினைவாலயம் (குறுநாவல்)
10- 1994 பொழிவு (அரங்கக் கவிதைகள்)
11- 1995 எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன
12- 2002 கரும்புலி காவியம் -பாகம் 1
13- 2005 சுனாமிச் சுவடுகள்

எழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்
வலிகாமம் இருந்து வன்னி வரை
குருதியில் நனைந்த திருவடிகள்
வித்தான காவியம்
முல்லை அலை விடு தூது (தூதுப் பிரபந்தம்)

இறுதி மூச்சு வரை எழுதும் முயற்சியில் இருந்தது – புலம்பெயர்ந்த ஈழத்து உறவுகளின் வரலாறு
2006 ஏப்பிரல் 15ம் திகதி நோயுற்ற நிலையில் எழுத வேண்டும் என்ற தாகத்தோடேயே இவரது இறுதி மூச்சும் காற்றில் கலந்தது.

விடுதலைப்போராட்டத்தை வேகப்படுத்திய பெரும் எழுதுகோல் பிடித்த மாமனிதர், கவிஞர் , நாவண்ணன் அவர்களும் போற்றி வணங்கப்படவேண்டியவரே..

நினைவுப்பகிர்வு
ஈழமகன்.

மாமனிதர் கலைஞர் நாவண்ணன் நினைவு நாள்!

ஏப்ரல் 16, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர், வீரவணக்கம் | , , , , | மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்…#ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #வீரவணக்கம் #நாட்டுப்பற்றாளர் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது