அழியாச்சுடர்கள்

ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !

   ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.

ஈழத் தமிழர் இனப் படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. “ஈழ இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இலங்கை அரசு அயல்நாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களையும் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் (30/1) நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், நீதி இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2015-ம் ஆண்டு ஈழப்போர் தொடர்பாகத் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டபொழுது, அதிலுள்ள அம்சங்களை 2017 மார்ச்சுக்குள் செயலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அக்கெடு 2019-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. 2019 மார்ச்சில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, அக்காலக்கெடுவை மேலும் இரண்டு ஆண்டுகள், அதாவது 2021 வரை இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கும் முடிவை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது திட்டமிட்டரீதியில் மறுக்கப்படுவதைத்தான் இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

ஈழ இறுதிப் போரின் பத்தாம் ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி, அப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் நடத்திய நினைவேந்தல்.

ஐ.நா. மன்றமோ அல்லது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலோ, இலங்கை அரசு இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததை இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஈழப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்துதான், அப்போது ஐ.நா.மன்ற பொதுச் செயலராக இருந்த பான் கீ மூன் இறுதிக்கட்டப் போர் குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்தார். “இலங்கை அரசு கொடிய போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறிய அக்குழு, இது குறித்துப் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்தது. எனினும், இப்பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த ஐ.நா. மன்றம் முன்வரவில்லை.

மாறாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அப்பொழுது இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே அமைத்திருந்த “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணையத்தின்” பரிந்துரைகளை அமல்படுத்துமாறு ராஜபக்சேவிடம் கோரிவந்தது. யாரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டுமோ, அக்குற்றவாளியிடமே நீதி கேட்ட கேலிக்கூத்து இது. ராஜபக்சே அமைத்த அந்த ஆணையமும், இறுதிக் கட்டப் போரின்போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதா என்பதை இலங்கை அரசே விசாரித்துவருவதாக ஒரு தோற்றத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்த காட்டிவந்த நாடகமே தவிர, வேறில்லை. இறுதிக் கட்டப் போரில் இலங்கை இராணுவம் திட்டமிட்டரீதியில் மனிதப் படுகொலை எதிலும் ஈடுபடவில்லை என்றுதான் அந்த ஆணையம் அறிக்கை அளித்திருந்தது.

2014, மார்ச்சில்தான் இறுதிக் கட்டப் போர் குறித்த ஒரு விரிவான விசாரணையை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை மார்ச் 2015-ல் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்படி விசாரணை நடத்தப்பட்டு, செப்.2015-ல் விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்று, மைத்ரிபால சிறீசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜபக்சே அதிபராக இருந்த பொழுது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதை அனுமதிக்க மறுத்தார். ஆனால், சிறீசேனாவோ இவ்விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானம் 30/1 -ஐ முன்மொழிந்தபோது, அதில் தானும் இணைந்துகொண்டார். மேலும், இந்த ஒத்துழைப்புக்கான பலன்களையும் அதிபர் சிறீசேனா அறுவடை செய்து கொண்டார்.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழு, ஈழ இறுதிக் கட்டப் போர்க் குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானமோ, இப்பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டு, அதனிடத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்குகொள்ளும்படியான ஒரு சிறப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசே அமைத்துக்கொள்ள அனுமதித்தது. பன்னாட்டு விசாரணை கூடாது என ராஜபக்சே கோரி வந்ததை, சிறீசேனா கொல்லைப்புற வழியில் சாதித்துக் கொண்டார்.

இச்சிறப்பு நீதிமன்றத்துக்கு அப்பால், “வடக்கு – கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். போரின் முடிவில் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு – நிவாரணம் வழங்கும் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சமூக, அரசியல் உரிமைகள் வழங்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்” ஆகிய அம்சங்களோடு நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தை மார்ச் 2017-க்குள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இக்காலக்கெடு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு, தற்பொழுது மார்ச் 2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 2015 -க்கும் மார்ச் 2019 -க்கும் இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில், இலங்கை அரசு 30/1 தீர்மானத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்குவதற்கு ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா எனப் பரிசீலித்து, காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. மாறாக, இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்றுகொண்டு வழங்கப்பட்ட சலுகை இது. காலக்கெடுவைத் தள்ளிக் கொண்டே போவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுவதை நடைமுறைப்படுத்தும் தந்திரம் இது.

நீர்த்துப்போன ஒன்று என்றாலும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது 30/1 தீர்மானத்தின் முக்கியமான அம்சமாகும். ஆனால், இச்சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் திசையில் இலங்கை ஒரு அடிகூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. மாறாக, இனப் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளையும் சிப்பாய்களையும் போர்க் கதாநாயகர்கள் என அழைக்கத் தொடங்கிய சிறீசேனா, பத்திரிகைச் செய்திகளிலும், இராணுவச் சிப்பாய்களைக் கூட்டி நடத்தப்படும் கூட்டங்களிலும், இராணுவ வீரர்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என மீண்டும் மீண்டும் உறுதியளித்து வருகிறார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 2016-ம் ஆண்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில், நீதித்துறை அமைச்சர் விஜேவாயாடஸா ராஜபக்சே, “இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக விமர்சிப்போர் மீது கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும்” என மிரட்டினார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தின்படி, காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமும் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நட்ட ஈடு-நிவாரண உதவி அலுவலகமும் அமைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டிவருகிறது, இலங்கை அரசு. எனினும், இந்த இரண்டு அமைப்புகளும் சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானவை.

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தையொட்டி, ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்தும், அதற்கு நீதி கேட்டும் ஈழத் தமிழ் அமைப்புகள் இலங்கை மன்னார் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஒரு குறிப்பிட்ட நபர் போரின்போது காணாமல் போனதாகச் சான்றிதழ் வழங்கி, அதற்குரிய நட்ட ஈடு வழங்குமாறு பரிந்துரைக்க முடியுமே தவிர, அதற்கு மேற்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அந்த அலுவலகத்திற்குச் சட்டபூர்வத் தகுதியும், உரிமையும் கிடையாது. இறுதிக்கட்டப் போரின்போது எத்துணை ஈழத் தமிழர்கள் காணாமல் போனார்கள் என்ற விவரத்தைக்கூட வெளியிட மறுத்துவருகிறது, இலங்கை அரசு.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு- நிவாரணம் வழங்கும் அலுவலகத்தைப் பொருத்தவரையில், அதனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைகூட கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், இந்த இரண்டு அமைப்புகளுமே இலங்கை அரசின் தொங்கு தசைகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையைச் சார்ந்த “அடையாளம்” மற்றும் “பேர்ல்” என்ற இரண்டு மனித உரிமை அமைப்புகள் ஜூலை 2017-ல் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத் தீவில் மட்டும் இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அளவில் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடருவதாகக் குறிப்பிட்டுள்ளன.

“தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் நிலங்களை இராணுவம் திரும்ப ஒப்படைக்காது” என ஜூலை 2017-ல் நடந்த இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார், அதிபர் சிறீசேனா.

முள்ளிவாய்க்கால் பகுதியில் தேசியப் பாதுகாப்புக்காக 672 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் அறிவிக்கையை அக்டோபர் 2017-ல் வெளியிட்டது இலங்கை கடற்படை.

வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் மார்ச் 2018-ல் கூடத் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் புதிய கருப்புச் சட்டத்தை இயற்றிவிட்டுத்தான், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது, இலங்கை அரசு.

சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இலங்கை அரசிற்கு அடுத்தடுத்து இரண்டு முறை காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சிறீசேனா அரசிற்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்திருப்பதுதான். மார்ச் 2017-க்குப் பிறகு, அமெரிக்கா இடையே 44 முறை இராணுவம் தொடர்பான சந்திப்புகள் நடந்திருப்பதாகவும், இரண்டு இராணுவங்களும் இணைந்து கூட்டுப் பயிற்சி நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது, மனித உரிமை அமைப்பான பேர்ல்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவிலுள்ள நெகோம்போ பகுதியில் அமைந்திருக்கும் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயலுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையை அணுகி வருகிறது, அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்கு அணுசரனையாக இலங்கை அரசும் நடந்துவருவதால், அந்நாட்டுக்குச் சலுகைகளும் நிதியுதவிகளும் அளிப்பதில் தாராளமாக நடந்துவருகிறது அமெரிக்கா. இலங்கைக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை இந்தப் புவி அரசியல் பின்னணியிலிருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவொருபுறமிருக்க, சமீபத்தில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்புகளைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, “போர்க் காலத்தில் இருந்த கடுமையான இராணுவப் பாதுகாப்பு அம்சங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால்தான், இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துவிட்டதாக”க் கூறியிருக்கும் இலங்கை அரசு, இனி இது போன்ற குண்டுவெடிப்புகள் நடப்பதைத் தடுப்பது என்ற பெயரில் ஈழப் போரில் இனப் படுகொலை குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்தி, அக்குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியிருக்கிறது.

மேலும், பௌத்த மதவெறி அமைப்புகளைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை நடத்துவதன் மூலம், ஐ.நா. தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்கான சூழல் இல்லை எனக் காட்டி, ஈழத் தமிழர்களுக்கு அரைகுறையான நீதி, நியாயம்கூடக் கிடைத்துவிடாதபடிச் செய்யும் சதியிலும் இறங்கியிருக்கிறது.

By புதிய ஜனநாயகம் – July 12, 2019

ஜூலை 13, 2019 Posted by | இந்தி, இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , , | ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இறுதிக்கட்ட யுத்தத்தில் புலிகள் யாரும் ராணுவத்திடம் சரணடையவில்லயாம் !

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ.நிரோஷ் குமார் கோரியிருந்து நிலையிலேயே, இலங்கை ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் தகவலை, அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருந்ததாக, அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சரணடைந்த பலர் இன்று காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி வட மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது உறவினர்களை இலங்கை ராணுவம் அழைத்து சென்றதாக பலர் இன்றும் தெரிவித்து வருகினறர்.

இந்த விடயம் தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சரும், தனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக கூறும் பெண்மணியுமான அனந்தி சசிதரனிடம் பி.பி.சி தமிழ் வினவியது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது கணவர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததை தானும், தன்னுடன் இருந்த லட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அவர் தெரிவித்தார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இலங்கை ராணுவத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் இருக்கவில்லை என கூறிய அவர், இராணுவம் தம்மிடம் சரணடைந்தோர் தொடர்பான தகவல்களை முழுமையாக மறைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோரை ஒப்படைக்குமாறு கோரி பல வருடங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன், போராட்டம் நடத்துபவர்கள் ராணுவத்திற்கு எதிராக போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கானோர் ராணுவத்திடம் சரணடைந்தமைக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.

இலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், விளக்க மறியலின் பொருட்டும் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.

ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்து, சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உரையாற்றியபோது சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் குடும்ப சூழல் எப்படி உள்ளது என்பது குறித்து அறிய மகேந்திரன் குடும்பத்தினரை பிபிசி தமிழ் சந்தித்தது.

திருமணமான உடனே கைது

மகேந்திரனுக்கு திருமணமாகி அப்போது ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. 1993ஆம் ஆண்டு ராணுவத்தினர் மட்டக்களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இறுதியாக, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கிணங்க நீண்ட கால சிறைத் தண்டனையை மகேந்திரன் இப்போது அனுபவித்து வருவதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முறக்கொட்டான்சேனை மகேந்திரனின் சொந்த ஊர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலம் மகேந்திரன் செயற்பட்டதாக அவரின் குடும்பத்தார் கூறுகின்றனர்.

பிறகு அந்த அமைப்பில் இருந்து விலகி, திருமணம் செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில்தான், மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக நடத்தப்பட்ட, படையினரின் சுற்றி வளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தையும் அதற்குப் பிறகு மகேந்திரனுக்கு என்னவானது என்பதையும், அவரின் மருமகள் மெரீனா பிபிசியிடம் விவரித்தார்.

“ராணுவத்தினருடன் இணைந்து அப்போது செயற்பட்ட, முகம் மறைத்த ‘ஆள்காட்டி’ ஒருவரால், எனது மாமா காட்டிக் கொடுக்கப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர் சார்பாக சட்டத்தரணிகளை வைத்து வாதிடுமளவுக்கு எங்களுக்கு வசதியிருக்கவில்லை. அந்த நிலையில்தான், அவருக்கு 70 வருடங்கள் சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது,” என்கிறார் மெரீனா.

மகேந்திரனுக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். மகேந்திரனின் சிறைக் காலத்தில்தான் அவரின் அப்பாவும் அம்மாவும் இறந்தார்கள். அம்மாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் மட்டுமே மகேந்திரனுக்குக் கிடைத்தது.

இவ்வாறான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தொடச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது குறித்து சாதகமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், முறக்கொட்டான்சேனையில் சந்தித்த மகேந்திரனின் மூத்த சகோதரி புஷ்பவதியும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்தார்.

“விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, பிடிபட்டவர்களில் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மகேந்தினுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, அவரையும் விடுவிக்க வேண்டும். இதனை ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இறக்கும் போது, அவர் எங்களுடன் இருக்கவில்லை. அம்மாவின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்தான் அவரைக் கொண்டு வந்தார்கள். அப்போது எங்கள் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை,” என்றார் புஷ்பவதி.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகேந்திரனுக்கு இப்போது 46 வயதாகிறது. தனது இளமைக் காலத்தை சிறைக்குள்ளேயே அவர் தொலைத்துவிட்டார். அவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறைக் கைதிகள் தினத்தன்று, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சந்தித்ததாகக் கூறும் மெரீனா நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் மகேந்திரன் பாதிக்கப்பட்ட நிலையிலேயே, சிறைவாசத்தை அனுபவதித்து வருகிறார் என்றார்.

இதேவேளை, மகேந்திரனை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனையடுத்தே மகேந்திரன் குறித்து நாடாளுமன்றில் வியாழேந்திரன் உரையாற்றியதாகவும் மெரீனா தெரிவித்தார்.

இதனையடுத்து, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில், நடவடிக்கைகள் எதையாவது மேற்கொண்டுள்ளீர்களா” என, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் பிபிசி வினவியது.

அதற்கு பதிலளித்த அவர்; “மகேந்திரனுக்கு 68 வருடங்களைக் கொண்ட சிறைத்தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, அவர் சுமார் 30 வருடங்களை சிறையில் கழித்துள்ளார்”.

“சிறைச்சாலை சென்று அவரை நான் சந்தித்தேன். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். நடப்பதற்குக் கூட முடியாத நிலையில் இருக்கின்றார். அந்த சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகள், தங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், மகேந்திரனின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் வேண்டிக் கொண்டனர்” என்று கூறியதோடு, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமும், ஏனைய உயர் மட்டத்தவர்களிடமும் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்,” என்றார்.

இதேவேளை, இவ்வாறானவர்களின் விடுதலை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார்.

சுமார் 03 தசாப்த காலத்தையும், தனது இளமைக் காலத்தையும் சிறைக்குள் தொலைத்து விட்ட மகேந்திரன், விடுதலை பெற்று வந்து, தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே, அவரின் குடும்பத்தாரினுடைய பேரவாவாக உள்ளது.

இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் படையினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை ஊடாகவே புனர் வாழ்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஆனால், மகேந்திரன் இறுதி யுத்தத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர் என்பதால், அவரை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ்

ஜூலை 8, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , , | இறுதிக்கட்ட யுத்தத்தில் புலிகள் யாரும் ராணுவத்திடம் சரணடையவில்லயாம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரைப் போல இந்திய அரசு நடத்துகிறது: வைகோ கண்டனம்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்.. சிறப்பு முகாம்களை முற்றிலும் நீக்க வைகோ கோரிக்கை

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஈழத்தமிழர்களை சந்தேக கண்ணோடு இந்திய அரசு அணுக கூடாது என வலியுறுத்தியுள்ள வைகோ, தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரியுள்ளார். மேலும் அவை சிறப்பு முகாம்களா அல்லது சித்திரவதை கூடங்களா என கேள்வி எழுப்பியுள்ள வைகோ, சிறப்பு முகாம்களை முற்றிலும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வைகோ வெளியிட்டுள்ளார் அதில் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைக்க தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, மத்திய அரசு பல வழிகளிலும் ஒடுக்கி வருகின்றது. சந்தேக வழக்குகளில் கைது செய்யப்படுகிற இளைஞர்களை விசாரணைக்குப் பின் விடுதலை செய்வது தான் வழக்கம். ஆனால் ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையுமின்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கிறார்கள்

சாகும் வரை உண்ணாவிரதம்

சாகும் வரை உண்ணாவிரதம் எவ்விதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே ஈழத்தமிழர்கள் அடைபட்டு கிடக்கின்றனர். சிறைப்பட்டுள்ள இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். குற்றப்பரம்பரை போல நடத்தப்படும் அவலம் குற்றப்பரம்பரை போல நடத்தப்படும் அவலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கம் அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது.பல அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் து கிடையாது. கழிப்பு அறைகளின் பக்கமே போக முடியவில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன.

ஈழத்தமிழர்களை மத்திய அரசு குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகின்றது.

இது மனித உரிமைகளுக்கு எதிரானது. சந்தேகக் கண்ணோடு பார்க்க தேவையில்லை சந்தேகக் கண்ணோடு பார்க்க தேவையில்லை ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழ தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடியுரிமையும் வழங்கியுள்ளன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை. இந்தியாவில் குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.


திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் நடப்பது என்ன?
*************************************

இந்திய உள்ளக புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத்த் தடுப்பு பிரிவினரால் பல சந்தேகங்களுக்கு உட்படுத்தப்பட்டு கைதாகிய ஈழத்தமிழர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும், இன்னமும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப் படாமல் தடுத்து வைத்திருப்பது ஏன்?

காரணம் கேட்ட அவர்களுக்கு உணவு வழங்கல் அல்லது அதற்கான உதவு தொகை என்ற எந்த அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு வதைக்கப்படுவது ஏன்?

இக் கேள்விகளோடு இந்திய , இலங்கை ஊடகங்கள் அவர்களுக்காக இந்திய மற்றும் தமிழக அரசை கேள்வி கேட்க முன் வருமா?

இன்று காலை முதல் நீதி கோரி உண்ணா நிலை போராட்டத்தை நடாத்தி வரும் அவர்களின் நீதிக்காக இத் தேசிய ஊடகங்கள் முன்வருமா..?

கடந்த 26.06.2016ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த தயானந்தன் , சத்தியசீலன்,
தர்சன் , சுதர்சன் , றொபின்பிரசாத் , கோபிநாத் , தயாகரன் , குருவிந்தன், காந்தறூபன், பிரபாகரன், றமேஸ் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்காலப் பகுதியில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர் இருபினும் இவர்கள் இன்னும் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர் தங்களை தமது நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இரத்தினம் கவிமகன்

ஜூன் 24, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , , | ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரைப் போல இந்திய அரசு நடத்துகிறது: வைகோ கண்டனம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இறுதிக்கட்ட போரின் போது மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி !

சாட்சியில்லா யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளிவந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கும் இருந்தது என வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் 2019ஆம் ஆண்டிற்கான சுய மதிப்பீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

‘போரின் பின்னர் எமக்கான தேவைகள் ஏராளம் இருந்தன. அவற்றை அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. இருட்டில் தேட முற்படுபவர்களாக இல்லாது எமது தேவைகளை கண்டறிந்து, ஆராய்ந்து, அடையாளப்படுத்தி, அவற்றை எவ்வாறு தீர்த்து வைக்க முடியும் என்பது சம்பந்தமாக நான் 2013இல் பதவி ஏற்றதும் அப்போதைய ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தியுடன் பேசினேன்.

2003இல் தயாரித்தது போல் வட மாகாணத்திற்கு ஒரு தேவைகள் மதிப்பீட்டை தயாரித்து தரும்படி வேண்டினேன். அப்போது இருந்த அரசாங்கம் மகிந்த ராஜபக்ச உடையது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் போரின் முடிவில் பாதிக்கப்பட்டோருக்காக எதையும் செய்யாது வாளாதிருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் அப்போது இருந்தன.

அந்த குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் சுபினே நந்தி இருந்தார். அவருக்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் மிக நெருக்கமான உறவு இருந்தமை யாவரும் அறிந்ததே.

முழுமையான தேவைகள் மதிப்பீட்டை செய்வதாக ஒப்புக் கொண்டதன் பின்னர் மனித இன நலம் சம்பந்தமான Humanitarian அறிக்கையை மட்டும் பெறவே அவர் முன்னின்றார்.

முழுமையான அறிக்கை பெறப்பட்டால் சாட்சியில்லா யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளிவந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கும் இருந்தது, அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வந்த சுபினே நந்தியிடமும் இருந்தது.

குறித்த அறிக்கையில் பல பிழையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. உதாரணத்திற்கு கணவன்மார்களை போரில் இழந்த பெண்களின் தொகை வட மாகாணத்தில் சுமார் 49,000மாக இருந்தது. ஆனால் அவர்கள் அறிக்கைப்படி சுமார் 7,500 பேரே போரில் கணவன்மார்களை இழந்தவர்கள்.

29,000 பேரின் கணவன்மார்கள் இயற்கை மரணம் எய்தினார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 29,000 பேர் அரச படைகளால் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தை வெளிக் கொண்டுவர வதிவிடப் பிரதிநிதி கூட பின் நின்றார்.

அரசாங்கம் மாறிய பின்னர் இது சம்பந்தமாக பிரதம மந்திரியுடன் பேசினேன். தற்போது இது பற்றி பிரதமர் தலைமைத்துவத்தில் பாஸ்கரலிங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். இவை சம்பந்தமாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி நாம் அறிந்திருந்தால் தான் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

தரவுகள் சரியாக இருந்தால் தான் புள்ளிவிபரங்களை வழிநடத்திச் செல்லலாம். பிழையான தகவல்களை அரசாங்கம் தந்தால் எமது பிரச்சினைகள் சம்பந்தமாக உரிய நிவாரணங்களைப் பெற முடியாது போய்விடும்.

ஆகவே உங்களின் சுயமதிப்பீட்டின் வழிமுறையானது இதுவரை ஐ.நா. ஸ்தாபனத்தினாலும், அரசாங்கத்தினாலும் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி போதிய அறிவு பெற இடமளிப்பதாக இருக்க வேண்டும்.

தற்போதைய ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் வடக்கு, கிழக்கு தேவைகள் பற்றி இதுவரை தயார் செய்த சகல அறிக்கைகளினதும் பிரதிகள் பெறப்பட வேண்டும்.

பாஸ்கரலிங்கம் அல்லது வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதனுடன் ஒரு நேரத்தை ஒதுக்கி அவர்களால் இதுவரை காலமும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள், பூரண விபரங்கள் போன்றவை பெறப்பட வேண்டும்.

அதன் பின்னர் தான் உங்களின் அமைப்பு முறையான சுயமதிப்பீட்டில் இறங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 18, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால் | , , , , , | இறுதிக்கட்ட போரின் போது மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் – ஹக்கீம் காக்கா அந்தர்பல்டி


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலத்த வரவேற்போடு எங்களை கிளிநொச்சியில் வரவேற்றார் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் எனப் பெரும் ஆதரவுத் தளமிருந்தது. இப்போதும் இருக்கின்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பெயரில் தமிழகம் சென்று இருந்த அவர், தமிழக ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அதேவேளை, அவர்களுக்கென்று கட்டமைப்பு இருந்தது. அரசியல் கொள்கை இருந்தது. அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக் காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சியில் நாம் நேரில் சந்தித்தோம்.

அவர் எனக்கும் எனது கட்சியினருக்கும் பலத்த வரவேற்பு வழங்கியிருந்தார். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் எங்களுடன் அவர் மனம் விட்டுப் பேசினார். துரதிஷ்டவசமாக அந்தச் சமாதானக் காலம் நீடிக்கவில்லை. மீண்டும் போர் ஆரம்பமானது. விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை.

உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன. பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று. இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது. இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்திடடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது.

அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற தகுதிக்கு ந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகள்! தமிழர் எதிரிகள்!  உறுப்பினர் விமல் வீரவன்ச, அப்படியானால் தமிழர்களுக்கு முஸ்லீம்கள் துரோகிகள் சிங்களவர்கள் எதிரிகள்

சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகள்! தமிழர் எதிரிகள்!  உறுப்பினர் விமல் வீரவன்ச

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். அதேவேளை, சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர் மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை சிங்களவர்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், அது இன்று தலைகீழாக மாறியுள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறியது போல் முஸ்லிம்கள் அனைவரினதும் வீடுகளும் மற்றும் பள்ளிவாசல்களும் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 15, 2019 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , , | பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் – ஹக்கீம் காக்கா அந்தர்பல்டி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது