அழியாச்சுடர்கள்

கார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்கள்

BT LTTE NOV

ஜூலை 4, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், கார்த்திகை மாவீரர்கள், வீரவரலாறு | , , , , | கார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்கள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

லெப். கேணல் சூட்

Lt-Col-Soodநிமிர்ந்த பனை

சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம்.

மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சிலபேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவந்தான் சூட்.

அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச் சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச் சூழலை பெரிய அளவில்கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவு மக்கள் அடர்த்தியாக வாழும் குடியியல் நிலையையும் கொண்ட பிரதேசம் அது.

பகைவனுக்கு முழுமையாக ஒத்துழைத்தது அந்த நில அமைப்பு. அது அவனுக்குச் சாதகமான ஒரு சூழல்.

அதே சமயத்தில், இனங்காண முடியாமல் சனங்களோடு இரண்டறக் கலந்திருந்த துரோகிகள் வேறு. இந்தியர்கள் போட்ட எலும்புகளை நக்கிக்கொண்டிருந்து, இயலுமான அளவுக்கு அவர்களுக்குத் துணைபோன கும்பல்களும், ஆட்களும்.

இதற்குள் இன்னொரு விடயம் என்னவென்றால், யாழ்ப்பாண மாநகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வலிகாமம் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுமான ஒன்றாக இந்திய – சிறிலங்காத் தளபதிகள் அப்போதும் இப்போதும் கருதுகிற அளவுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்த பகுதி அது.

அந்தவகையில், மணலாற்றுக்கு அடுததபடியாக இந்தியர்களின் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்ட மையமாகவும் வலிகாமப் பகுதி விளங்கியது.

இத்தகைய ஒரு புற நிலைமைக்குள், உயிர்வாழவே உத்தரவாதமற்ற இராணுவச் சூழ்நிலைக்குள்,

புலிகள் இயக்கத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இடையறாது போராடிய வரலாற்று நாயகர்களில் எஞ்சியிருந்தவன் சூட் மட்டும்தான்.

ராஜன், சுபாஸ், லோலோ, தும்பன், ரெட்ணா, கட்டைசிவா, கரிகாலன்…………… என எல்லோரும் அவனைவிட்டுப் போய்விட, அவர்களின் நினைவுகளைச் சுமந்துகொண்டு போராடியவன் இன்று எங்களை விட்டுப் போய்விட்டான்.

இப்போது……. அவனது நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள்…..

அந்த இருண்ட இரண்டரை வருடங்கள். அது மிக நெருக்கடியான காலகட்டம். வர்ணித்துச் சொல்லமுடியாத ஒரு பயங்கரச் சூழ்நிலை அப்போது நிலவியது.

பாசமிகு மக்கள் பாதுகாத்து இடமளிக்கத், தூங்கப்போகும் இரவுகள் தூக்கமற்றுப் போகும். ஒரோசையுமற்று அசையும் இரவில், தூரத்து நாயோசை இந்தியன் நகரும் சேதியைச் சொல்லும். திடீரென ஒரு பதற்றம் பற்றிக்கொள்ளும். அந்த சூழ்நிலையில் அது இயல்பானது. நாய் குரைப்புச் சத்தம் அகோரமாய் நெருங்கும். அது ஒரு அச்சமூட்டும் குறியீடு. விரிந்து நகர்ந்து வட்டமிட்டுச் சுருங்கி எதிரு முற்றுகையிடுகிறபோது, நாயோசை உச்சக்கட்டத்தில் இரையும். நெஞ்சு விறைத்துப்போகும். நள்ளிரவின் அமைதி சிதைய ஊர் துடித்து விழிக்கும். தங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மனங்கள் ‘பிள்ளைகளைக்’ காக்கச் சொல்லியும் இறைவனிடம் மன்றாடும். துப்பாக்கிகள் தயாராகும். தேர்வு நெம்பு, தானியங்கிக்கு மாற, சுட்டுவிரல் சுடுவில்லை வளைத்துக்கொள்ளும். இருளை ஊடறுத்து விழிகள் முன்னேறும். எதிரி எதிர்ப்படும் கணத்தில் சன்னங்கள் பாய முற்றுகை உடைபடும். தப்பித்து மீண்டு, சொல்லப்பட்ட இடமொன்றில் சந்திக்கின்றபோது தோழர்களில் ஒருவனோ இருவரோ வந்திருக்கமாட்டார்கள்………….

ஆள்விட்டுப் பார்த்து ஆமி இல்லை என்ற பின் மெல்ல நடந்து வீதி கடக்கும்போது, சடுதியாய் எதிர்ப்படும் சிற்றூர்திக்குள்ளிருந்து துப்பாக்கிகள் உறுமும். ஆளையோ, அல்லது ஆடைகளையோகூட சன்னங்கள் துளையிடும். உரப்பைக்குள் இருக்கும் எங்கள் துப்பாக்கியின் சூடு தணியும்போது, நாலாவது வெளி கடந்து நாங்கள் ஓடிக்கொண்டிடுப்போம். எம்மை முந்திக்கொண்டு எதிரியின் சன்னங்கள் சீறும்.

‘முற்றுகையிடுகிறான் பகைவன்’ என நினைத்து அடித்து உடத்துக்கொண்டோ, அல்லது வலு அவதானமாக நகர்ந்தோ அவனைக் கடந்து மறுபக்கம் போய் ‘தப்பி வெளியேறிவிட்டோம்’ என மகிழும்வேளை, இப்போதுதான் முற்றுகைக்குள்ளே வந்து சிக்கிப்போயுள்ளோம் என்பது தெரியவரும். நடந்த தவறு விளங்கும் போது தலை விறைக்கும்.

‘பிரச்சினை இல்லாதவை’ எனக் கருதி இரவில் படுக்கப்போகும் இடங்கள். அதிகாலையில் எதேச்சையாகச் சுற்றிவளைக்கப்படுகின்ற துரதிர்ஷ்டம் நிகழும் சர்ந்தர்ப்பவசமாகச் சிக்கிக்கொண்டுவிடுகிற அந்த விபரிக்க முடியாத் சூழ்நிலைகளில் ‘வாழ்க்கை வெறுக்கும்’.

“எல்.ரீ.ரீ” எனக் கத்திக்கொண்டு இந்தியன் எட்டிப் பிடிக்கும்போது, ‘கதை முடிந்தது’ என்று குப்பியைத் தொடும் வேளையில், இறுதி நேர முயற்சியா உதறிப் பறித்துக்கொண்டு தப்பி ஓடுகிறபோது நெஞ்சுக்குள் தண்ணிவரும்.

இப்படியாக ஏராளமான மயிறிழைகள்.

சன்னம் துளைத்தவர்களையும், ‘சயனைட்’ அடித்தவர்களையும் தவறவிட்டு தப்பித்து வந்தபோதெல்லாம், அந்த ஆருயிர் நண்பன் ஓரமாய் இருந்து கண்ணீர் சொரிவான்.

ஆனால், ஒருபோதும் அந்தப் புலிவீரனின் உள்ளம் தளர்ந்துபோனதில்லை.

நெருக்கடிகள் கூடிக்கூடி அழுத்திய போதெல்லாம் இருதிக்கொண்டே போனது அவனுடைய மனவுறுதி.

கற்பாறையப் பிளந்து முளையிடும் துளிராகி, இந்தியர்களின் கூடாரங்களுக்கு நடுவில் அவன் நிமிர்ந்தான்.

எதிரி வளைந்து நின்ற மண்ணில், கைவிடாத் துப்பாக்கியோடு கடைசி வரைக்கும் வலம்வந்து போராட்டத்தை உயிர்த்துடிப்போடு உயர்த்திச் சென்ற வேங்கை அவன்.

மரணம் அவனது உயிரை உரசிச் சென்ற போதெல்லாம் தப்பித்து மீண்டுவந்து, ‘என்ன நடந்ததோ…..?’ என ஏங்கி நின்ற எங்களின் முன் கண்குளிரக் காட்சியளித்து, ஆச்சரியப்படுத்திய வீரன்.

கட்டிக் காற்சட்டையும் சேட்டுமாக அந்த ‘சின்னப் பொடியன்’ தோற்றத்தில், இந்தியர்கள் பலதரம் ஏமாந்திருக்கிறார்கள்.

மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து இந்தியர்கள் ஒத்தியெடுத்த வேளைகளிலெல்லாம், அவன் நேசித்த மக்களால் பொத்திவைத்துப் பாதுகாக்கபட்ட குழந்தை.

எப்படி அனவால் நின்றுபிடிக்க முடிந்தது….?

அது அதிசயம் தான்!

ஆனால், அவனைப் பாதுகாத்தது வெறும் அதிஷ்டம் மட்டுமல்ல.

விவேகம், புத்திக்கூர்மை, மக்கள் செல்வாக்கு அவனுடைய சின்ன உருவம் இவற்றுக்கு மேலாக அவனுடைய உறுதியும், துணிச்சலும்.

இவைதான் அவனை உயிர்வாழச் செய்வித்தன.

அடுத்த காலை நிச்சயமற்றிருந்த அந்த நாட்களில் அவனோடுதான் நம்பிக்கையோடு தூங்கப் போகலாம். சாவு எங்களைத் தட்டி எழுப்பிய எத்தனையோ தடவைகளில் தப்பி வந்தது அவனால்தான் எனலாம்.

அப்போது யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த பொட்டம்மானும் தோழர்களும் அவனது ‘ஒழுங்கமைப்பு’ களால் பல சர்ந்தப்பங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘மக்கள் நேசம்’ அவனது உயரிய குணாம்சங்களில் ஒன்று. அவன் அவர்களில் வைத்த அன்பு அவர்களை அவனில் பாசம் வைக்கவைத்தது.

அந்த நெருக்கம் அலாதியானது; அதுதான் அவனுக்கு கவசமாகவும் இருந்தது.

அந்த நேசத்தின் தொடக்கம், அவன் போராளியான ஆரம்பம். அது 1984ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தனது பதினேழாவது வயதில் இயக்கத்தில் சேர்ந்தவன், அப்போது முதல் அந்த மக்களோடேயே வாழ்ந்தான். அந்த மக்களுக்குக் காவலாய் இருந்தான்.

அவன் மக்களை அணுகிய விதமே வித்தியாசமானது அதனால்தான் அவர்கள் அவனை நெஞ்சிலிருத்தி வைத்திருந்தார்கள்.

‘மற்ற இயக்கங்களின் ஊர்கள்’ என்று ஒதுக்கிய கிராமங்களில்தான் தூக்கமும், வேலையும். ‘மற்ற இயக்கங்களின் ஆட்கள்’ எனப்பட்டவர்கள் வீடுகளில்தான் குளிப்பும், சாப்பாடும். எல்லா ஊரையும் எம்முடையதாக்கி, எல்லாப்பேரையும் எம்மவர்களாக்கினான்.

31.05.1967 அன்று தனலட்சுமி அம்மாவுக்கும், நவரத்தினம் ஐயாவுக்கும் பிறந்தவனுக்கு விக்னராஜன் என்று பெயரிட்டார்கள்.

தனது 16வது வயதிலேயே ‘புலிப்படைப் பொடியளுக்குப் பின்னால்’ திரியத் துவங்கிவிட்டான்.

பாயில் தலையணை அடுக்கி ஆள்மாதிரிப் போர்த்திவிட்டு இரவில் காணாமல் போனவன்……. ஸ்ரான்லி கொலிச்சில் தம்பியையும், தங்கையையும் இறக்கிவிட்டு, உள்ளே வராமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு மற்றப்பக்கமாகப் போனவன்…. போய்ப்போய் வந்தவன்…………..

ஒரு நாள் ஒரேயடியாகப் போய்விட்டான்.

சூட் ஒரு அற்புதமான போராளி.
தனது ஆழகான ஆளுமையால் தோழர்களைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்த நண்பன்.

கண்டிப்போடும், பரிவோடும் அரவணைத்து வருடிய இனிய காற்று. அவர்களில் அவன் பொழிந்த பாசமே தனி.

மனங்குழம்பிப்போகின்ற எந்தப் போராளியையும் ஆதரவோடு கதைத்துத் தெளிவூட்டுகிரபோது, அவனொரு பேராசான்.

முழுமையாக என்று சொல்லாவிட்டாலும் இயக்கத்தின் நீண்ட வரலாற்று ஓட்டத்தோடு பெருமளவு கலந்து, அமைதியாக, ஆரவாரமில்லாமல், தனது செயலால் வளர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்தவன்.

சூட் ஒரு சண்டைக்காரன் அல்ல, அதற்காக சண்டை தெரியாதவன் என்றும் சொல்லிவிட முடியாது. அதாவது அவன் தேர்ச்சிபெற்ற யுத்த வீரன் அல்ல.

அப்படியானால் அவன் முன்னுக்கு வந்தது………..?

அது சண்டைகளால் அல்ல;

சண்டைக்கு வெளியில் நின்று அவன் போராட்டத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளால்.

தான் பணியாற்றிய துறைகளிலெல்லாம் தனக்கு கொடுக்கப்பட்ட வேளைகளில் பேர்சொல்லும் முத்திரைகளைப் பதித்து வளர்ந்த போராளி.

சண்டைக்கு வெளியில் நின்று எல்லாப் போராளிகளையும் போல அவனம் போர்க்களத்துக்குப் போகத்தான் துடித்தான். ஆனால், அவனது தேவை அவனை அதிலிருந்து தள்ளியே வைத்திருந்தது.

ஒரு விடுதலை வீரனின் போராட்டப் பணியானது இராணுவ அளவுகோலால் மட்டும் அளவிடப்பட முடியாதது.

சண்டையிடுவதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பிரதான அம்சம். ஆனால், அது மட்டுமே போராட்டம் ஆகாது.

சண்டை என்பது, போராட்டம் நகர்த்திச் செல்லப்படும் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று.

சண்டைகளில் நிற்காதபோதும், உண்மையான அர்ப்பண உணர்வோடு வாழ்ந்து, போராட்டத்தின் ஏனைய பரிமாணங்களூடு அபார திறமையாகக் காரியங்களைச் சாதத்த எத்தனையோ போராளிகளுள் அவனும் ஒருவன்.

இந்தியப்படை வெலியெற்றப்பட்டுவிட்டது.

இப்போது அவன் புலனாய்வுத்துறையில்.

பொட்டம்மானின் உற்ற துணைவர்களாக நின்று, இயக்கத்தையும், போராட்டத்தையும், தேசத்தையும் பாதுகாத்த முதன்மையான போராளிகளுள் ஒருவனாக, சூட் அல்லும் பகலும் ஓய்வற்றுச் சுழன்றான்.

துவக்கத்தில் யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொருப்பாளனாகப் பணி.

அவன் பொறுப்பை ஏற்றபோது அங்கு இருந்த சூழ்நிலை வித்தியாசமானது. அதனால் மிக்க அவதானமாகவும், மிக்க நிதானமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு அடிகளை வைத்தான்.

நேற்றுவரை எதிரியினால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம். இன்று திடீரென, ஒருநாளில் எங்கள் கைகளுக்கு வந்துவிட்ட காலகட்டம் அது. இந்தியாவின் எச்சசொச்சங்கள் எங்கும் பரவியிருந்த நேரம். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று அன்றொருநாள் வள்ளுவன் சொல்லியிருந்ததைப் போன்ற நிலைமை.

எவரிலும் சந்தேகம் எழக்கூடிய சூழல்.

மிகக் கவனமாக இனங்கண்டு பிரித்தறிய வேண்டும். எங்கள் புலனாய்வு நடவடிக்கைகளில் தவறு நேர்ந்து, அது மக்களைப் பாதித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

புலனாய்வுத் தவறுகளினால் மக்கள் எவ்விதத்திலும் துன்பப்பட்டுவிடக்கூடாது, அத்தகைய அவதானத்துடன் செயற்படும்போது நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் நிதானமானது, துரோகிகளுக்கு வாய்பளித்து அவர்கள் சுலபமாகச் செயற்பட இடமளிக்கவும்கூடாது.

இப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் பொறுப்பெடுத்து, மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனக்குரிய பணியை சூட் செய்து முடித்தான்.

நாட்கள் உருண்டன.

புலனாய்வுத்துறையின் முக்கியமான ஒரு போராளியாக….,

அதன் தாக்குதற் படைப்பிரிவுக்குத் தளபதியாக…..,

இயக்கத்தின் ‘கரும்புலிகள்’ அணி ஒன்றுக்குப் பொறுப்பாளனாக……..,

சூட் படிப்படியாக உச்சத்துக்கு வந்தான்.

இயக்கத் தலைமையினது அதீத நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானான்.

முக்கியத்துவம் மிக்க ஒரு கரும்புலித் தாக்குதல்.

இலக்குப் ‘பெரியது’

எனவே, ஒழுங்கமைப்பும் பெரிதாக இருந்தது.

திட்டம் திட்டப்பட்டபோது பொட்டம்மான் சூட்டைத்தான் தெரிந்தெடுத்தார்.

தியாகமும், துணிச்சலும், இலட்சிய வேட்கையும் போக… மதுநுட்பமும், விவேகமும். செயற்திறனும் அதிகமாகத் தேவை. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவ்ன் சூட்.

ஆனால் தலைவரோ ஆளை மாற்றசொன்னார்.

இந்தப் பணியைவிடவும் அதிகமாகப் போராட்டத்துக்கு அவன் பயன்படுவான் என்று அவருக்குத் தெரிந்தது உண்மைதான்.

ஆனாலும், தாக்குதலின் முக்கியத்துவத்தையும், அதன் பிசகாத, துல்லியமான வெற்றியையும் கருத்திற்கொண்டு பொட்டம்மான் சூட்டைத்தான் வலியுறுத்தினார்.

இருந்தபோதும், தலைவரது கருத்திற்கிணங்கkadaisiyil முடிவு மாற்றப்பட்டது.

அதன்பின்னர்,

எங்களது இன்னுமொரு கரும்புலி வீரன், அந்த ‘இலக்கை’ மிக வெற்றிகரமாகத் தாக்கி அழைத்து வரலாற்றைப் படைத்தான்.

பூநகரிச் சமருக்குப் புறப்படும்போது சூட் தேர்ச்சிபெற்ற ஒரு சண்டைத் தளபதியாக விளங்கினான்.

ஆனால், அவன் இராணுவ ரீதியில் மேலோங்கியதானது நீண்டகால அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சிகண்டு அல்ல.

நன்றாக இனங்காணப்பட்டு, திடீரென அவனுக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. குறுகியகால இராணுவப் பணியையே அவன் ஆற்றினான்.

ஆனால், அந்தச் சொற்ப காலத்துக்குள்ளேயே பெருந் தளபதிகளினது மதிப்பையும், பாராட்டையும் அவன் பெற்றுவிட்டிருந்தான். அது ஒரு இலேசான காரியமல்ல.

அவனது குறுகியகால இராணுவ வளர்ச்சி அசாத்தியமான ஒரு சாதனை.

பூநகரி பெரும் போர்க்களம்.

பல்வேறு படையணிகள், பல்வேறு சண்டை முனைகள், பல்வேறு வழிமுறைகள்.

பரந்த ஒரு பிரதேசத்தில் எழுந்து நின்ற எதிரியின் பெரும் படைத்தளம் ஒன்றின்மீது அதன் எல்லா அரண்களிலும் சமநேரத்தில் தாக்கி, புலிகள் நிகழ்த்திய மிகப்பெரிய படியெடுப்பு.

ஒரு முனையில் சூட்டின் படையணி.

எதிரியின் அரண் தொகுதி ஒன்று சூட்டினது படையணிக்குரிய இலக்கு. அதன் அருகிலிருந்த இன்னொரு அரண்தொகுதி லெப்.கேணல் குணாவின் படையணிக்குரிய இலக்கு.

இரண்டு அணிகளும் தமத் இலக்குகளை வீழ்த்திய பின் ஒன்றிணைந்து பிரதான தாக்குதலணி ஒன்றுக்குத் தோள் கொடுக்கவேண்டுமென்பது திட்டம்.

ஆனால் விஷயம் பிழைத்துவிட்டது. பூநகரி வெற்றியின் முதல் வித்தாக, சண்டையின் ஆரம்ப நிமிடங்களிலேயே குணா வீழ்ந்து போக, அந்தப் பகுதியில் சண்டை திசை மாறிவிட்டது.

தமது இலக்கைக் கைப்பற்றிய சூட்டினது அணி முன்னேறியபோது, குனாவினது பகுதி பிசகிவிட்டிருந்தது. எதிரி அங்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தான்.

துணை சேரவேண்டிய அணிக்குத் துனைகொடுக்கவேண்டிய நிலை.

மூர்க்கத்தனமான தாக்குதல் குணாவுக்குரிய பகுதிமீது ஆரம்பித்தது.

இறுக்கமான சண்டை.

ஆர் பி ஜி குண்டின் சிதறல்பட்டு அவனது எம்.16 உடைந்து போக, அருகில் நின்ற தோழனுடன் ரி.56ஐ வாங்கிக்கொண்டு சூட் முன்னேறினான்.

கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்த எதிரியின் பலமான அரனொன்றை சூட் ஆக்ரோசமாக நெருங்கினான்……. தனி ஆளாகப் பாய்ந்தான்.

அதிரிக்கு அருகில் அவன் முன்னேறினான், ……… மிக அருகில் …… போய்விட்டான் …… போனவன் திரும்பி வரவில்லை:

அன்பு, குணா, நவநீதன், பாமா, றூபன், கணேஸ், கோபி, அவன்…… என்று 458 தோழர்கள்….. வெற்றியைத் தந்துவிட்டு வராமலே போய்விட்டார்கள்!

தமிழீழம் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறது; அந்த மைந்தர்களின் நினைவோடு; அவர்கள் பெற்றித் தந்த வெற்றியின் பெருமிதத்தோடு.

இப்போது………. நம்பிக்கையோடு காத்திருக்கிறது…………..

!

– விடுதலைப்புலிகள் (வைகாசி 1994) இதழிலிருந்து

 

நவம்பர் 17, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், கார்த்திகை மாவீரர்கள், வீரவரலாறு | , , , | லெப். கேணல் சூட் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2ம் லெப். மயூரி, வீரவேங்கை வஞ்சி

நீண்டகாலமாக, வளர்ச்சிகண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

சுதந்திரத்தைத் தேடி………..

இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன்.ltte women vanji, mauri

வஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள்.

மயூரி மாநிறம் நல்ல சொக்கு.

பால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள்.

இருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணியுடன் வந்திருந்தார்கள்.

மட்டக்களப்புத் தமிழ் சாதாரணமாகவே கேட்க அழகாக இருக்கும். இவர்கள் தங்கள் மழலை மொழியில் அந்தத் தமிழை உச்சரிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும்.

‘அக்கா’ என்று சொல்லத் தெரியாது.’அக்கே,அக்கே’ என்று கொஞ்சுவார்கள்.

இருவரும் சின்னவர்கள் என்பதால் எல்லோரும் இவர்களுக்குச் சரியான செல்லம். செல்லம் என்பதால் குழப்படி செய்வதில்லை. நிறையக் குறும்புகள் செய்வார்கள். மட்டக்களப்பிலிருந்து வந்த புதிதில், அங்கிருந்து வந்த எல்லோரிடமிருந்தும் பயிற்சியாளர்கள் அவ்விடத்துப் பயிற்சி பற்றிக் கேட்டு இவ்விடத்துப் பயிற்சி பற்றி சொல்லிக் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு காடு என்பது தண்ணீர் பட்டபாடு, காவலுலாப் போகும் இராணுவ அணியை மறைந்திருந்து தாக்குவது வெல்லம் சாப்பிடுவது போல. இங்கே நடக்கின்ற தளமுற்றுகைகள், தகர்ப்புக்கள், வெளிகளில் நடக்கும் சண்டைகள் எல்லாம் அவர்களுக்குப் புதிது.

ஆனையிறவு வெளிகளில் எப்படிச் சண்டை நடந்தது என்று வஞ்சிக்கும், மயூரிக்கும் வாய்கொள்ளாத ஆச்சரியம். “எப்படி அக்கே வெளிக்குள்ளே நிண்டு சண்டை பிடிச்சீங்க? நாங்களெல்லாம் பத்தைக்குள்ள உருமறைஞ்சிருந்துதான் சண்டை பிடிப்பம். நீங்க எப்படி ஆனையிறவில சண்டை பிடிச்சீங்க?”

“ஏன் அந்தச் சண்டைக்கு ஆகாய,கடல்,வெளித் தாக்குதல் எண்டு பேர் வைச்சீங்க?”

என்றெல்லாம் துருவித்துருவிக் கேட்பார்கள். பூநகரிச் சண்டைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததால் இவர்களும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரண்டு பேருக்கும் குண்டுகள் கொடுக்கப்பட்டன.

பயிற்சியின் போது இருவரும் நல்ல சுறுசுறுப்பு.

வகுப்புகளிலும் அப்படித்தான்.

ஒருமுறை சொர்ணமண்ணை, பெண்போராளிகளின் பயிற்சித் தளத்திற்கு வந்து, தான் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த ஆண் போராளிகளுக்குப் பத்துக் குண்டுகளைப் பரிசாக அனுப்பியதாகவும், அதேபோல பெண் போராளிகளும் சரியாகப் பதிலளித்தால் பத்துக் குண்டுகள் தருவதாகவும் கூறினார்.

வஞ்சி, மயூரி உட்பட எல்லோரும் வகுப்புகளுக்கு வந்துவிட்டார்கள். சொர்ணமண்ணையின் கேள்விகளுக்கு வஞ்சியும், மயூரியும் சுறுசுறுப்பாக எழுந்து நின்று சரியான பதில்களைச் சொல்லிவிட்டார்கள். சரியாகச் சந்தோசப்பட்ட சொர்ணமண்ணை அடுத்தநாளே இரண்டு பேருக்கும் கொடுக்குமாறு பத்துக் குண்டுகளை அனுப்பிவைத்தார்.

குண்டுகள் கிடைத்ததில் இரண்டு பேருக்கும் சரியான புளுகு. கண்ணில் பட்ட எல்லோரிடமும் குண்டுகள் கிடைத்த விடயத்தைச் சொல்லிவிட்டு, தங்களின் பயிற்சி ஆசிரியருடன் போய் பத்துக் குண்டுகளையும் எறிந்து பயிற்சி செய்தார்கள். நாலு குண்டுகள் வெடிக்கவில்லை.

எறிந்து வெடிக்காத குண்டுகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற பயிற்சி அப்போது இவர்களுக்குக் கொடுக்கப்ப ட்டிருக்கவில்லை. எனவே பயிற்சி ஆசிரியர், இருவரையும் அருகில் போகவிடாமல் தடுத்துவிட்டு, அந்த இடத்தை அபாயமானது என அடையாளப்படுத்தி பலகை நட்டுவிட்டு, இவர்களைப் போகுமாறு அனுப்பிவிட்டார்.

பயிற்சியாசிரியர் அந்த இடத்திலேயே ஏதோ வே லையில் மூழ்கிப்போனார். தாங்கள் எறிந்த குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை என்று மண்டையைக் குடைந்துபார்த்து அலுத்துப்போன மயூரியும், வஞ்சியும் குண்டுகளைச் சோதித்துப் பார்க்கும் யோசனையுடன் இன்னுமொரு போராளியையும் அழைத்துக்கொண்டு, பயிற்சியாளரின் கண்ணில்படாமல் பற்றைக்குள் மறைந்து மறைந்து குண்டுகள் விழுந்த இடத்தை அண்மித்தவர்கள், ஒரு தடியால் குண்டைத் தட்டிவிட்டு ஓடிவந்து நிலை எடுத்தார்கள்.

திடீரென்று குண்டு வெடித்ததில் திகைத்துப்போன பயிற்சியாசிரியர் திரும்பிப் பார்க்க, பற்றைக்குள் படுத்தவாறு மூன்று சோடிக்கண்கள் திருதிருவென முழிசிக் கொண்டிருந்தன.

“ஏண்டாப்பா இந்த வேலை செய்தியள்?” என்று கேட்க,

“என்ன நடக்கும் எண்டு பார்த்தனாங்களக்கே” என்று பதில் வந்தது.

எதையுமே உடனேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் எப்போதுமே மிகுந்து காணப்பட்டது.

தங்களிடம் குண்டுகள் மட்டுமே இருப்பதை நினைத்து இடையிடையில் கவலைப்படுவார்கள்.

“சண்டைக்குப் போகேக்க குண்டுதானே தருவியள், எங்களுக்கு அருள் 89 தாங்கோ” என்பார்கள்.

சின்னன்கள் விருப்பத்தைக் கெடுக்கக்கூடாது என்று அருள் 89களைக் கொடுத்தால், பயிற்சித் தளத்துக்குப் போய் அவற்றை ஏவி, வெடிக்கச் செய்துவிட்டு துள்ளிக் குதிப்பார்கள்.

சண்டைக்கான பயிற்சி காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு கடந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி அல்லது ஒன்றரை மணிவரையில் நடக்கும். அது முடிந்து தளத்துக்குத் திரும்பி வந்து படுக்க அதிகாலை நான்கு மணியாகிவிடும். படுத்துவிட்டு ஐந்து மணிக்கு விழுந்தடித்து எழும்பி, பல்லை விளக்காமலேயே மைதானத்துக்குப் போகும் வழியிலுள்ள அருவியில் முகத்தைக் கழுவிக்கொண்டு ஓடிப்போகும் வழியிலேயே தலையை கைகளால் கிளறிச் சீர்படுத்திக்கொண்டு, மைதானத்துக்குப் போய்ச் சேர்வார்கள். இவ்வளவு வேலைகளும் கண்கள் மூடிய நிலையிலேயே நடைபெறும். அவ்வளவு நித்திரை.

திடீரென்று நெற்றி வலிக்கும். திடுக்கிட்டு கண்களை விழித்துப்பார்த்தால் மைதானத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலிருந்து விலகி, காட்டுமரமொன்றுடன் மோதியிருப்பது தெரியும். நெற்றியைத் தடவியவாறே மீண்டும் ஒற்றையடிப் பாதையால் ஓட்டம்.

ஓரளவு வெட்டையான இடங்களில் எழும்பி ஓடுவதற்கு அனுமதியில்லை. ஊர்ந்துதான் போகவேண்டும். காடுகள் என்பதால் இரவு நேரங்களில் மாடுகள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகும். அந்த இடம் ஒரே சாணமாக இருக்கும். சும்மாவே முழங்காலளவு சேறும், அதற்கு மேல் அரையடி உயரம் வரை தண்ணீரும் நிற்கும். அதற்குள் மாட்டுச் சாணமும் சேர்ந்தால், நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

அந்த அழகான பாதையால்தான் எங்கள் படையணி ஊர்ந்தவாறு செல்லும். நடக்கின்ற போதே நித்திரை செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்கள், ஊர்ந்து போகத் தொடங்கினால்…..

பின்னால் வந்த அணியைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தால் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். அந்தச் சேற்றுக்குள் வஞ்சியையும் மயூரியையும் கைகளை விட்டுத் தேடினால் கண்டுபிடிக்கலாம். எல்லோரையும் தட்டிவிட்டு, “என்ன பிள்ளையள், நித்திரையோ?” என்று கேட்டால்,

“சீ நாங்கள் நல்ல முழிப்பு. ஆர் சொன்னது நித்திரையெண்டு” என்றவாறு ஊர்ந்துபோவார்கள்.

எழும்பி நடக்கின்ற வேளைகளில் பார்த்தால், விண்வெளியில் நடமாடுவது போல சமநிலை இல்லாமல் ஆடி ஆடிப் போவார்கள்.

பெரும்பாலான போராளிகள் வயதில் இளையவர்கள். வஞ்சி, மயூரி போல மிகச் சின்னவர்களும் இருக்கிறார்கள். அம்மா,அப்பாவுடன் செல்லப்பிள்ளைகளாக துள்ளிக் குதித்துத் திரிய வேண்டிய பருவத்தில், சூரியக் கதிர்கள் கூட ஊடுருவச் சிரமப்படும் அடர்ந்த காட்டுக்குள், நாட்கணக்காக குளிக்காமல், ஒழுங்காகச் சாப்பிட நேரமில்லாமல் தங்களை வருத்தி ஒவ்வொரு போராளியும் பயிற்சி எடுப்பதைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ செய்யும்.

ஆனால்……தமிழன் வலை வீசி மீன்பிடித்த நாகதேவன்துறையில், தமிழன் வேளாண்மை செய்த பூநகரியில், ஒரு அந்நிய மொழி பேசுகின்ற இராணுவம் ஆளுவதை நினைத்தால்….

“விடக்கூடாது” என்று வெறி வரும்.

“அக்கே பசிக்குதக்கே”

என்று வஞ்சியும், மயூரியும் முன்னால் வந்து இருப்பார்கள். சட்டியில் இருக்கும் குழைத்த சோற்றை உருட்டி கையிலெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இருவரும் நித்திரை தூங்கிப் போயிருப்பார்கள். மெல்லமாக வாயைத் திறந்து ஊட்டிவிட்டால், வாய்க்குள் சோற்றை வைத்தபடியே உறங்குவார்கள்.

“அம்மன், வாய்க்குள்ள இருக்கின்ற சோத்தை விழுங்கம்மா”

என்று சொல்லிச் சொல்லி, அவர்களைத் தட்டித்தட்டி, ஒவ்வொரு சோற்று உருண்டையாக ஊட்டி அவர்களைச் சாப்பிட வைக்கும்போது….எங்கள் மனங்களில் எழும் வேதனையையும் விஞ்சி….’இந்தத் துன்பம் அடுத்த தலைமுறைக்கு வரவிடக்கூடாது. எங்களோடேயே எல்லாம் முடியட்டும்’ என்ற எண்ணம் வலுப்பெறும்.

ஒருநாள் அதிகாலை ‘மாதிரிச் சண்டை’ செய்து பார்க்கப்பட்டது. இரவு ஒரு மணிக்கு தொடங்கிய சண்டை அதிகாலையில் நிறுத்தப்பட்டு, இராணுவத் தளத்தின் மாதிரியைச் சூழ போராளிகள் நிலைஎடுத்துப் படுத்திருந்தனர். அணிகளின் பிரதான பொறுப்பாளர்கள் எல்லா நிலைகளுக்கும் போய் நிலைகள் சரியா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் எல்லோரும் அப்படியே நின்று விட்டனர். அவசர அவசரமாக கைகளால் கிண்டி அமைக்கப்பட்ட நிலை ஒன்றில் ஒரு சின்ன உருவம் தன்னையும் தன் ஆயுதத்தையும் குழைகளால் உருமறைத்த நிலையில் நல்ல நித்திரை. உடையும் ஈரம்,நிலமும் ஈரம். ஆனால் நல்ல நித்திரை. யாரென்று பார்த்தால் மயூரி!

“மயூரி எழும்பு. முன்னுக்கு ஆமியின்ர இடம். நீ நித்திரை கொள்ளுகிறாய், என்ன?”

என்று ஏச, எழும்பி பொறுப்பாளரின் முகத்தைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்றாள். பொறுப்பாளர் போய்விட்டார். அவர் திரும்பி அடுத்ததரம் நிலைகளைச் சோத்திதுக்கொண்டு வரும் போது பார்த்தால், மயூரி நல்ல நித்திரையில் இருந்தாள்.

“மயூரி, எழும்பு” அதட்டினார்.

கண்களைக் கசக்கியவாறே எழும்பிய மயூரி, பொறுப்பாளரின் முகத்தை பரிதாபமாகப் பார்த்து.

“அக்கோய், பேசாதீங்கக்கா. எனக்கு இப்படி இரவில நித்திரை முழிச்செல்லாம் பழக்கமில்லையக்கா, எனக்கு நித்திரை நித்திரையா வருது” என்று கண்ணீர் வடிய கெஞ்சினாள்.

பொறுப்பாளருக்கோ இந்த வயதில், மழைக்காலத்தில், வீட்டிலே தான் குளிராமல் போர்த்துக்கொண்டு படுத்திருந்தது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் கலங்கிப் போனார்.

“சரி. இனி அலேட்டா இரு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பயிற்சி நடைபெறும் நேரங்களில் சுறுசுறுப்பாக ஓடித்திரியும் மயூரிக்கும் வஞ்சிக்கும், வகுப்பு நேரத்தை நினைத்தாலே நித்திரை வரும். பயிற்சி ஆசிரியர் முன்னுக்கு நின்று தாக்குதல்களைப் பற்றியோ, ஆயுதங்களைப் பற்றியோ விளக்கிக் கொண்டிருப்பார். அமர்ந்திருந்து கேட்பவர்கள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு விழித்துக்கொண்டிருப்பார்கள்.

வஞ்சி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கருமுகில் ஒன்றைக் கண்டதும் பக்கத்திலிருப்பவளைச் சுரண்டி முகிலைக் காட்டுவாள். அடுத்த முகிலைக் கண்டதும் மீண்டும் சுரண்டி,

“ரெண்டு முகிலும் முட்டினவுடனே மழை பெய்யும் பார்” என்பாள்.

ஒரு துளி மழை விழுந்தாலும் போதும். தங்களுடைய அறைக்குப் போவதற்கு ஆயத்தமாகிவிடுவாள். மழை பெய்து,பயிற்சியாசிரியர் எல்லோரையும் போகுமாறு சொல்லி வாய்மூட முன்னரே வஞ்சியும், மயூரியும் அறைக்குள்ளே ஓடிப்போய் படுத்துவிடுவார்கள்.

காட்டுக்குள்ளே ஒருமுறை நாங்கள் புதிய கொட்டிலொன்றை அமைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒரு பாம்பு வர, அதை அடித்து வாலில் கட்டி, கொட்டில் வாசலில் தொங்கவிட்டுவிட்டு, வேலையைச் செய்துகொண்டிருந்தோம். எங்களைத் தேடி வஞ்சியும் மயூரியும் வந்துவிட்டார்கள். வாசலில் தொங்கிய பாம்பைப் பார்த்துவிட்டு,

“ஏன் பாம்பைத் தொங்கவிட்டிருக்கிறீங்கக்கா?” என்றார்கள். அதற்கு நாங்கள்,

” இந்தக் கொட்டில் கட்டி முடிய இதுக்குள்ள வச்சுச் சமைக்கப்போறம்” என்று புளுக ஆரம்பித்தோம்.

” என்னண்டக்கா சமைக்கிறது?”

“தலைப் பக்கமாகவும் வால்ப் பக்கமாகவும் ஒரு அங்குலம் வெட்டியெறிஞ்சு போட்டு, சின்னச் சின்னத் துண்டா வெட்டிப் பொரிச்சு குழம்பு வைக்கப் போறம். ஏன் நீங்க ஒருநாளும் சாப்பிடேல்லையா?”

“மட்டக்களப்புக் காட்டிலையும் பாம்பு இருக்குத்தானக்கா. ஆனா நாங்க பாம்புக்கறி சாப்பிடுறதில்லைக்கா. இஞ்ச நீங்க சாப்பிடுறனீங்க எண்டு சொல்லுறவங்கள். ஒரு பாம்பு என்னண்டு எல்லோருக்கும் கறி வைக்கக் காணும்?”

” இண்டைக்கு புதுக் கொட்டிலில சமைக்க வேணுமெண்டுதான் பாம்பைப் பிடிச்சனாங்கள். எல்லோருக்கும் குடுக்க காணாதுதான். சும்மா எல்லோரும் ரேஸ்ட் பண்ணிப்பார்ப்பம்”

இருவரும் உண்மையிலேயே நம்பிவிட்டார்கள். பேசாமல் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டோம். இருவரும் வியப்புடன் எம்மைப் பார்த்தார்கள்.

“நாங்கள் சும்மா சொன்னனாங்கள். பாம்புக் கறி சமைக்கேல்ல. பாம்பை வெட்டி உறுப்புக்களைப் பார்க்கிறதுக்குத்தான் வச்சிருக்கிறம்” என்றோம். பாம்பை நெடுக்கு வெட்டாகக் கீறிப் பிளந்து, இதயம் குடல் போன்றவற்றைக் காட்டிய போது ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

“அதென்னக்கா, இதென்னக்கா” என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். பாம்பைப் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொண்டதில் இருவருக்குமே மகிழ்ச்சி.

ஒரு நாள் இருவரிடமும்,

“உங்களைச் சண்டைக்கு விடாட்டி என்ன செய்வீங்க?” என்று கேட்டோம். உடனேயே இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு, ” நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததே அண்ணையைப் பாத்திட்டு, சண்டைக்குப் போயிட்டு திரும்பிப் போறதுக்குத்தான். அதெப்படிச் சண்டைக்கு விடாமலிருக்கலாம்?. எங்களை விட்டிட்டுப் போனாலும் நாங்க ஒருத்தருக்கும் தெரியாம, வாகனம் ஒண்டில ஏறிச் சண்டை நடக்கிற இடத்துக்கு வந்திடுவம்” என்றார்கள்.

சண்டைக்குப் போவதற்கு என்ன தடை வந்தாலும் தாண்டத் தயாராக இருந்தார்கள். சண்டைவிடயம் தவிர்ந்த ஏனைய எல்லாவற்றிலும் குழந்தைகளாகவே நடந்துகொள்வார்கள்.

காட்டிலிருக்கும் போது சிற்றுண்டிகள் வந்தால் முதலில் எங்களுக்கு வந்து, பின்னர்தான் ஆண் போராளிகளுக்குப் போகும். வாகனத்தில் ஏறி எமக்குரியதை இறக்கி விட்டு , வாகனத்தின் ஓட்டுனருக்குத் தெரியாமல் ஆண் போராளிகளுக்குரிய பொதிகளில் ஓட்டை வைத்து எடுத்து, காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு இறங்கிவிடுவார்கள். இரண்டு பேருமே பிரபலமற்ற, ஆனால் மிகப்பெரிய சிற்றுண்டித் திருடர்கள்.

நல்லூர்க் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப் போயிருந்தோம். இரண்டு, இரண்டு ஐஸ்கிறீம் குடித்துவிட்டு, ஊதுகுழல் வாங்கித்தருமாறு அடம்பிடித்து, வாங்கி ஊதுகுழலை ஊதியவாறே நல்லூரைச் சுற்றிப் பார்த்தார்கள். இந்தமாதிரி எங்கேயாவது கூட்டிப்போனால் இருவருக்கும் உற்சாகம் வந்துவிடும். சின்னவர்கள்தானே?

ஒருமுறை மக்கள் குடியிருப்புப் பகுதியில் தங்கிநின்ற போது பக்கத்துக் கோயிலொன்றில் திருவிழா நடந்தது. எங்களுடைய இடத்தில் நின்று பார்த்தால், சிற்றுண்டிக் கடைகள் தெரியும். விடுவார்களா வஞ்சியும் மயூரியும்?

“அக்கோய், கலர் கலரா நிறைய முட்டாசிக் கடையக்கா. எங்களைக் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களாக்கா?” என்று கேட்டதால் இருவரையும் கூட்டிப் போனோம். வாய் நிறைய, காற்சட்டைப் பை நிறைய இனிப்புக்களுடன் திரும்பினார்கள்.

சண்டைக்குப் போக முதல் எல்லோரும் முடிவெட்டி, முழுகி, அவரவரின் ஆயுதங்களுடன் படம் பிடிப்பது வழக்கம். வஞ்சியும், மயூரியும் முடிவெட்டிவிட்டு எங்களிடம் வந்து,

“வடிவா இருக்கிறோமாக்கா?” என்று கேட்டு விட்டு,

தங்களுடைய குண்டுகளையெல்லாம் கட்டிக்கொண்டு, ஒரு மணல் குவியலுக்கு மேல் ஏறி நின்று கம்பீரமாய் போஸ் குடுத்துவிட்டு,

“நீங்களும் எங்களோட நிண்டு எடுங்கக்கா” என்று தங்கள் பொறுப்பாளர்களிடம் கேட்டு படம் எடுத்தார்கள். பொறுப்பாளர் அவர்களுடன் நின்று படம் எடுத்ததில் ஒரே சந்தோசம்தான்.

சண்டைக்குரிய சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இனி அடிக்க வேண்டியதுதான். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு இலக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

மயூரி, வஞ்சிக்குரிய பாதையில் வழிகாட்டியுடன் இவர்கள் முன்னே போய் முட்கம்பி வேலியைத் தகர்த்தவுடன் இந்த இடைவெளியூடாக அணிகள் உட்சென்று தாக்குவதுதான் ஏற்பாடு.

எதிரியின் அரணுக்கு முன்னால், முள்வேலியையும் மேவி வெள்ளம் நின்றது. தண்ணீர் சலசலக்காமல் அமைதியாக முன்னேறிய வஞ்சியும் மயூரியும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். ஏதேதோ கனவுகளெல்லாம் அவர்களுக்கு.சண்டை முடிந்து வந்து அது செய்ய வேண்டும், இது செய்யவேண்டும் என்றெல்லாம்……

எதிரியின் காவலரணுக்கு முன்புள்ள முள்வேலிகளை நெருங்கிய சமயத்தில், தற்செயலாக எதிரி ஏவிய டொங்கான் எறிகணை ஒன்று இவர்கள் அருகில் வந்து விழ……

இரண்டு குஞ்சுகளும் காணாமற் போனார்கள்.

இரண்டும் கடைசி நேரத்தில் புகைப்படக் கருவிக்குப் ‘போஸ்’ கொடுத்த அழகில் மயங்கியதும்……

எதையும் சுறுசுறுப்பாகவும் ஆளுமையுடனும் செய்வதைப் பார்த்து, இந்தச் சண்டை முடிய இருவருக்கும் நல்ல பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்ததும்……

இன்னும் எங்களுக்கு மறக்கவில்லை.

அந்தப் பிஞ்சுகளைச் சுற்றி நாங்கள் கட்டியெளுப்பியிருந்த கனவுக்கோட்டையெல்லாம் பூநகரியில் ஓடிய இரத்த ஆறுடன் கரைந்துபோனது.

சுவரில் இருந்து சிரித்துக்கொண்டேயிருக்கின்ற இரண்டு சின்னன்களையும் பார்க்கும் போதெல்லாம் “எந்தத் துன்பத்தையும் நாங்கள் அடுத்த தலைமுறை வரை தொடர விடக்கூடாது. எல்லாமே எங்களோடு முடியட்டும்”

என்ற எங்களின் எண்ணம் இன்னும் வலுப்பெறுகின்றது.

நினைவுப்பகிர்வு:- மலைமகள்.

எரிமலை (ஆடி 1995) இதழிலிருந்து

நவம்பர் 13, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், கார்த்திகை மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | 2ம் லெப். மயூரி, வீரவேங்கை வஞ்சி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கடற்கரும்புலி மேஜர் கணேஸ்

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள்….BT-Maj-Ganesh

கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களின், குருதிக் கரை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும்….

பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும்….

அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்து எழும்.

கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் விழ்ந்தபோது, அது அவர்களுக்குத் தாங்கமுடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது.

எல்லாவற்றுக்குமாக சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடிதுக்கொண்டிருந்தார்கள்.

வரதனுக்கும், மதனுக்கும் முந்திய அந்த 60 நாட்கள்….

அவர்கள் சக்கை வண்டிகளோடு பகைவனை துரத்துவதும், அவன் சண்டை பிடிக்காமலே தப்பி ஓடுவதும், பின்னர் ஏமாற்றத்தோடு இவர்கள் திரும்பிச் செல்வதுமாக கழிந்த அந்த இரவுகள்.

அவர்களில் ஒருவருக்காக தன்னை அனுப்பிப் பார்க்குமாறு நச்சரித்துக்கொண்டிருப்பான் கணேஸ்.

“டோறா”வை நெருங்குவதற்கான தாக்குதலின் திட்டம் தயாரிக்கப்பட்ட போது….

அந்தச் சாதனையின் சாதனையாளர்களுள் ஒருவனாகத் தான் போக வேண்டுமென்ற ஆதங்கம் அவனுக்கு.

பருத்தித்துறைக் கடலில் புவீந்திரனும், மணியரசனும் 15 நாட்களுக்கு மேல் காத்திருந்த காலத்திலும் நச்சரிப்பு.

ஆனாலும், கணேஸ் இல்லாமலேயே அந்த இரண்டு தாக்குதல்களும் வெற்றிகரமாக முடிந்த போதும் கூட, உற்சாகம் குன்றாமல் அடுத்த தாக்குதலுக்கான காத்திருப்புகளில், வேட்கையோடு அவனது நாட்கள் நகர்ந்தன. கூடவே கோபியும் இன்னும் சில கரும்புலிகளும்….

ஏற்கனவே இரண்டு விசைப்படகுகளை இழந்துவிட்ட எதிரி பின்வந்த நாட்களில் அதிக அவதானத்துடனேயே இயங்கினான்.

வரதன், மதனுக்குப் போல, கண்டபின் தப்பியோடும் தந்திரத்தை அல்லாமல்; இவர்களின் கண்களில் தட்டுபடுவதைத் தவிர்த்து விடுவதையே தான், எதிரி தனது யுத்தியாகக் கையாண்டான்.

இப்படியாக; இலக்கை அடையாத துயரோடு இவர்கள் திரும்பி வருவது கூட, பூநகரிக்குள் “தவளைகள்” நுழையும்வரை தான் நீடித்தது.

கடலில் இரை தேடிவிட்டுக் கரையேறும் சமயங்களில், சக்கை வண்டிகளில் வரும் மற்றவர்கள், எங்கள் சண்டைப் படகுக்களினூடு லாவகமாக வளைத்துத் திருப்பி அலை கிளப்ப ஓடிக் காட்டுகிறபோது. கணேஸ் மட்டும் மெதுவாக ஓடி, ஓரமாக வந்து, அமைதியாகக் கரையேறுவான்.

“இந்த மாதிரி ஓடு உன்னால ஏலாதா…?” என்று யாராவது கேட்டால் “எதிர்பாராம ஏதாவது நடந்திட்டால்…..” என இழுத்து…..,

“அந்நியாயமாக எல்லோருமே சாகாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யவேணும்” என்று தொடரும் அவன், “சம்பவம் ஆகக்கூடாது மச்சான்” சரித்திரம் ஆகோணும்” என்று முடிப்பான்.

இப்போது……

“ஒப்பரேஷன் தவளை” வரலாற்றுச் சமரில், நாகதேவன்துறை கடற்படைத் தளம் மீதான தாக்குதலில் முக்கிய பங்கேற்பு, அந்த வீரமகன் சரித்திரமாகிவிட்டான்…..!

அன்றைய காலம் இந்திய விஸ்தரிபு வாதிகளின் படைகளை எதிர்த்து தமிழீழம் போர்க்கோலம் பூண்டிருந்த எழுச்சி நாட்கள்.

அப்போது அவனுக்கு வயது பதின்நான்கு தான்.

சாற மடிப்பிற்குள் சேட்டை மறைத்துக் கட்டிக்கொண்டு, அம்மாவுக்கு போக்குக் காட்டிவிட்டு வெளியேறியவனை பற்றி “தம்பி சந்தியில போஸ்ரர் ஒட்டிக்கொண்டு நிற்ப்பான்” என்றோ. “கடையில சாப்பிட்டுப் பார்சலுகள் கட்டிக்கொண்டு அந்தப் பக்கமாக போறான்” என்றோ யாராவது சொல்லுவார்கள்.

அம்மாவின் இதயம் வேகமாகத் துடிக்கும்.

அம்மாவுக்கும், நாகநாதி ஐயாவிற்கும் வாரிசாக, 21 வருடங்களுக்கு முன்னர் மாசி 13ம் நாளில் பிறந்தவன் ஜீவநேசன்.

இத்தனை வருடங்களாக பாசத்தைக் கொட்டி வளர்த்தெடுத்த தாயல்லவா….. அவள் துடித்துப் போனாள். அவள் தான் துடித்தாளே தவிர அவன் ஓய்ந்ததில்லை.

திடீரென ஒரு காலை , அவசர அவசரமாக ஓடிவந்து அயல் வீட்டுக்காரர் ஒருவர், கடையில் சாப்பாட்டுப் பொதிகள் வாங்கிய ஜீவனை யாரோ காட்டிக் கொடுத்து, இந்தியர்கள் இழுத்துச் செல்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னபோது, அம்மா இடிந்து போனாள். அந்த வீடு சாமவீடு போலாகிவிட்டது. அழுகுரல் நவரக்கிரி கிராமத்தை நிறைத்தது.

காங்கேசன்துறை இந்தியப்படைச் சிறையில் அடுத்த ஒரு வருடம் கழித்து. பார்க்கப் போகின்ற அப்பாவிடம் ஊர்ப் புதினங்களைத் தான் விசாரித்தானேயல்லாமல், வீட்டுப் புதினங்களையல்ல. மிகவும் அமைதியானவனான அந்தச் சிறுவனின் உள்ளத்தில், ஆவேசப் புயலொன்று அப்போது தான் மையங்கொண்டது.

இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் விடுவித்து விட்டுப்போன கணேஷ், ஐந்தாறு நாட்கள் அம்மாவோடு இருந்துவிட்டு, முழுமையாகவே இயக்கத்திற்குப் போய்விட்டான்.

அம்மா துயரத்தோடு கடவுளை நேர்ந்து கொண்டிருக்க, அந்த விடுதலைப்புலி துப்பாக்கியோடு “போர் உலா” வந்தான்.

வட தமிழீழப் போர் அரங்கின் அநேகமான எல்லா முனைகளிலும், அவனுடைய துப்பாக்கி கண்டிருக்கிறது.

கோட்டை முற்றுகையிட்டிருந்த போது, அதை முறியடிக்க வந்தவர்களை மண்டைதீவில் எதிர்கொண்டபோது, மாங்குளத்தில் படைமுகாமை அழித்தபோது, “வன்னி விக்கிரம” என்று படையெடுத்தவர்களை தோல்வியுறச் செய்த போது, தாயகத்தின் இதயத்தைப் பாதுகாத்து மணலாற்றில் “மின்னலை” தெறிக்கச் செய்தபோது, ஆனையிறவில் “பலவேகய”வில் புறப்பட்டவர்களை “ஆமை வேகய”வில் நகரச் செய்தபோது, மன்னாரில் படை எடுத்தவர்களுக்கு படையெடுத்த பதுங்கித் தாக்குதலின்போது…. இப்படியாக எங்கும், எல்லாச் சமர்களிலும் கணேஸ் சுவடு பதித்தான்.

அந்தக் காலத்திலேயே, ஒரு கரும்புலித் தாக்குதலுக்கான கனவு அவனது இதயத் துடிப்போடு கலந்திருந்தத்து.

இப்படியிருக்கையில் ஒரு நாள் …..

அது, கடந்த வருடத்தின் இறுதி. பலாலியிலிருந்து தெல்லிபளை நோக்கி முன்னேறிய “ஒப்பரேஷன் பூமியதிர்ச்சி”யை நிறுத்த நடந்த சண்டையின்போது; இடது முழங்காலுக்குக் கிழே துளைத்த ஒரு ரவை, முக்கிய நரம்போன்றை அறுத்துச் சென்றுவிட்டது.

சண்டைமுனையில் மருத்துவ வசதியின்மையால், பெருமளவு இரத்தம் வெளியேறிவிட, மயக்கமுற்று எடுத்துச் செல்லப்பட்ட கணேஸ்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, யாழ்பாணம் மருத்துவமனையின் கட்டிலொன்றில், வெடிபட்ட இடத்திற்க்குக் கிழே அந்தக் கால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில, அடக்கிக்கொள்ள முடியாத அழுகையோடு படுத்திருந்தான்.

போராட்டத்தில் காலை இழந்தமைக்காக அவன் கண்ணீரைச் சிந்தவில்லை. அருகில் நின்ற நண்பனின் கையைப் பற்றி அவன் விம்மினான்.

“இனி எப்படியடா நான் சண்டைக்குப் போறது…..?”

கணேஸ்….!

எவ்வளவு மென்மையானவனாக அவன் வாழ்ந்தான்! எவரோடும் சச்சரவுக்குப் போகாமல், எல்லோரையும் சமாளித்துக்கொள்வானே!
என்னதான் பிரசினையென்றாலும், விட்டுக் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டானே தவிர, அவன் சண்டை பிடித்துப் பெரிதாக்கியிருக்கமாட்டான். அவன் எவ்வளவோ பொறுமை சாலியாக இருந்தான்; எல்லா விடயங்களிலுமே.

அவனை மேலோட்டமாக பார்க்கிற எவரும், எதுவுமே தெரியாத அப்பாவி என ஒரு கணிப்பீட்டை வைப்பார்கள்.

விஷயம் தெரியாத நாலுபேரை இருத்திவிட்டு, எல்லாம் தெரிந்த மேதாவிகளைப் போல புழுகித் தள்ளும் நண்பர்களைத் தன்னிடம் வசமாகச் சிக்கவைத்து; “தேவையில்லாம வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே” என்று தலையைப் பிய்த்துக்கொண்டு எழுந்து போகிற அளவுக்கு அவன் கொண்டுபோய் விடுவான்.

இருப்பினும், தனக்குத் தெரியாத, அது தொடர்பான பூரண அறிவு இல்லாத, எந்த விடயங்களைப் பற்றியும் அவன் வாய் திறக்கவே மாட்டான். வெட்கப்படாமல், விஷயம் தெரிந்தவர்களிடமிருந்து விசயங்களைத் தெரிந்து கொள்வதில்த்தான் அவனுக்கு ஆர்வம் அதிகம்.

தான் செய்ய நினைக்கும் காரியங்களை செய்துமுடிக்கும் வரை முயற்சி எடுப்பதும், காலிழந்தவன் என்று கருணைகாட்டி மற்றவர்கள் உதவ முன் வந்தாலும் புன் சிரிப்போடு மறுத்துவிட்டு, தானே எல்லாவற்றையும் செய்துமுடிப்பதும், ஒரு கால் இழந்தாலும் கூட முகாமிலிருக்கும் முழு மனிதர்கள் செய்யும் வேலைகளெல்லாம் தன்னையும் ஈடுபடுத்த எத்தனிப்பதும் அவனது சிறப்பான அம்சங்கள்; அவை நாங்கள் அவனிடம் படிக்க வேண்டிய பாடங்கள்.

காயம் மாறி; ஜெய்ப்பூர் காலோடு துயரத்தையும் சுமந்து மருத்துவ மனையிலிருந்து வந்தவனுக்கு, யாழ் மாவட்ட தாக்குதற் படைப் பிரிவில் நிதி வேலை கொடுக்கப்பட்டபோது, சண்டைக்குப் போக வேண்டுமென தளபதியோடு சண்டைபிடித்து ஆனையிறவுக்கு போனதும்…

அகன்ற பாத்திரத்தில் சோறு குழைத்து, ஐந்தாறு பேர் சேர்ந்து நாங்கள் சாப்பிடும்போது; வெறுமையாகும் பாத்திரத்தை நிரபிவர வேறேவரையும் பாராமல் தானே தூக்கிக்கொண்டு எழுவதும்….

“ஜெயராஜ்” முகாமிலிருந்த ‘அருகிருக்கை’ பொருத்திய B.S.A. மோட்டார் சைக்கிளில் அவனை இருத்தி நாங்கள் தள்ளி விளையாடுகையில் வளைத்து திருப்பி ஓட வீடு வசதி காணாதென்று முற்றத்தில் இறக்கி , பின் முற்றமும் வசதி காணாதேன்று வீதிக்கெடுத்தபோது, தளபதியைக் கண்டு நாங்கள் தடுமாற, வேலியோடு மோதி வண்டி கவிழ, தலையில் நல்ல அடிபட்ட அவன் எழுந்து பிடரியைச் சொறிந்துகொண்டு நின்றதும், தண்டனை தந்தபோது, கும்மாளமிட்ட படி அவனும் சேர்ந்து செய்ததும்….

கிளாலியில் எம்மவர்களை வேட்டையாட வரும் எதிரியை நாங்கள் வேட்டையாடும் கடற்சண்டைகளில், “நேவி”யைக் கலைத்து விரட்டும் புலிகளின் விசைப்படகுகளிற்கு அவன் ஒட்டியாய் இருந்ததும்….

ஐந்து நாள் ஒய்வு தந்து வீட்டுக்கனுப்ப ‘இன்று படகுச்சேவை’ என்று நாளேட்டின் செய்தியைப் பார்த்துவிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட இரண்டாம் நாளே புறப்பட்டு அவன் கிளாலிக்கு வந்ததும்….

அப்போதெல்லாம் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்ய வேண்டுமென்ற வேட்கையை, தனது மனக் குகையினுள் அவன் சுமந்துகொண்டு திரிந்ததும்….

நாங்கள் அடிக்கடி அவனைப்பற்றி பேசிக்கொள்ள எங்களுக்குள் உயிர்வாழும் அவனது நினைவுகள்….

அவனது வீரம்; அவனது தியாகம்; அவனது முயற்சி; அவனது விட்டுக்கொடுப்பு; அவனது முன்மாதிரி; ஒட்டுமொத்தமாக அவனே எப்போதும் நினைவுகொள்ளவேண்டிய எடுத்துக்காட்டுகள்.

கணேஸா…!

உனது வீட்டுக்குப் போய்வந்த அந்த இறுதிப் பயணம்.

அதை நினைக்கும் போதெல்லாம் உன் அம்மாவின் விழி ஓரங்களில் நீரின் கசிவு.

“பழஞ்சோறு குழைத்து தீத்தி விடணை” என்று சாப்பிட்டாயாம்.

ஒரு நாளுமில்லாதது போல, அப்பாவையும், அம்மாவையும் கொண்டு நீர் அள்ளிக் குளித்தாயாம்.

“தலையெல்லாம் காஞ்சுபோய்க் கிடக்கு தேடா….. கொஞ்சம் எண்ணை வையன்ரா…….” என்று ஆதரவாகக் கேட்ட அம்மாவிடம், “நாளைக்கு கடல் தின்னப்போற தலைதானேயணை…..” என்று சிரித்தபடி சொன்னாயாம்.

முன்னர் யாரோ சொன்னது நினைவுக்குவர, இப்போது சாதுவாக சந்தேகமும் எழ, ஆச்சரியத்தோடும்; அச்சத்தோடும், “நீ கரும்புலியாய் போகபோபோறியாம் தம்பி…… உண்மையாவோடா….?” என்று பரிதாபமாகக் கேட்ட அம்மாவை, சிரித்துக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சி, “உன்னை விட்டுட்டுப் போவனோணை அம்மா!” என்று சொல்லிவிட்டுப் போனாயாம்.

இப்போது…..

கண்ணீரோடு அந்தத் தாய், தன் வீரமகனின் படத்திற்குப் பூப்போட்டுக் கொண்டிருக்கிறாள்.

“ஒப்பரேஷன் தவளை”க்கான உற்சாகமான முன்னேற்பாடுகள்.

உறக்கமற்ற இரவுகள்; ஓய்வற்ற நாட்கள்.

கடற்புலி வீரர்களின் கடுமையான கடற்பயிற்சி.

வெடிமருந்துப் படகினை எதிரியின் தளத்தோடு மோதும் செயல்முறையை, கணேஸ் சலிப்பின்றிக் களைப்பின்றி பயின்றான்.

அந்த நாள் வந்தது ….

சர்வதேச செய்தி நிறுவனங்களின் அலைவரிசைகளில் புலிகள் இயக்கத்தை முதன்மைப் படுத்திய நாள் அது.

சாமம் கழிந்த நள்ளிரா வேளை.

சமர் ஆரம்பித்துவிட்டது; பூநகரியில் புயல்வீசத் தொடங்கிவிட்டது.

நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைச் சூழ்ந்த புலிகள் கடல் – தரை வழிகளிலான ஆக்ரோசமான பாய்ச்சல்.

அங்கிருந்த, “றாடர்” கோபுரமும் தகவல் பரிவர்த்தனை நிலையமும் தான் கணேசின் இலக்கு.

உரிய நேரம் வந்தது. உத்தரவுக்காகக் காத்திருந்தவன், இதுதான் உரிய தருணம் என்பதைத் தானாகவே தீர்மானித்தான்; புறப்பட்டான்.

கடலில்; தனது தளத்தைச் சுற்றி; எதிரி அமைத்திருந்த முட்கம்பி வேலிகளை எகிறிக் கடந்து பாய்ந்தது கணேசின் வெடிமருந்துப் படகு.

இலக்குப் பிசகாத தாக்குதல்; தொடரும் வெடியோசைகளுக்கு நடுவே கடலைதிரும் குண்டோசை; கண்ணிமைக்கும் பொழுதில் பிரகாசித்த ஒளிப்பிழம்பு.

யாழ்ப்பாணக் கடல் நீரேரியில், தமிழர்களின் பிணங்களை மிதக்கச் செய்தவர்களை அதே கடல் நீரேரியிலேயே பிணங்களாக மிதக்கச் செய்துவிட்டு, உப்பு நீராக உருமாறிப் போனான் அந்த வீரன்!

விடுதலைப்புலிகள் (மார்கழி, தை1994) இதழிலிருந்து

நவம்பர் 11, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், கார்த்திகை மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , | கடற்கரும்புலி மேஜர் கணேஸ் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கடற்கரும்புலி மேஜர் கோபி

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள்…

BT-Maj-Gobi

“ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான்.

தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரை புரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்கவேணும் போல இருந்த தனது நீண்டகால மன உளைச்சலை அம்மா, மகனிடம் இப்போது வெளிப்படுத்தினாள்.

“உனக்குக் காலும் இல்லைத் தானே தம்பி…… இனியும் இயக்கத்தில இருந்து என்னப்பன் செய்யப்போறாய்…..?”

அந்தத் தாயுள்ளம் ஏக்கங்களோடு ஆதங்கப்பட்டது.

“காலில்லாட்டியும் பரவாயில்லையம்மா…… இயக்கம் என்னைப் பார்த்துக் கொள்ளும்….. நான் கடலில் வேலை செய்வன், கடற்புலிகளில படகு ஒடுவன்…..”

“கடலில நேவி வந்திட்டா என்னடா தம்பி செய்வாய்…..?….!

இது அன்னையின் அச்சம். அது இயல்பானது; அவன் புரிந்துகொண்டான்.

புன்னகையோடு பதில் வந்தது……

“பயப்படாதீங்கள் அம்மா….. பொடியல் இருக்கிறாங்கள் என்னைக் காப்பாற்றுவார்கள்; விடமாட்டார்கள்.”

அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைத்தான். இருப்பினும், முகத்தில் திருப்தி தெரிந்தது.

பழைய நண்பர்கள் சேர்ந்தனர்; ‘பிரிந்தவர் கூடினால்….!’ அது ஒரு ஆரவாரமான சந்திப்பு.

“அடுத்த மாவீரர் நாளுக்கு எங்கட வீட்டுக்காரரும் துயிலுமில்லம் போவினமடாப்பா” ….. கோபி சொல்லி வைத்தான்.

“இவன் நல்ல பகிடிவிடுகிறான்,” நண்பர்கள் ரசித்துச் சிரித்தனர்.

“எங்கட வீட்டு ஒழுங்கைக்கு ‘கோபி வீதி’ என்று பெயர் வைக்க வேண்டிவரும்” ….. கோபி இதையும் சொல்லிவைத்தான்.

நாலைந்து நாட்கள் இனிமையாகக் கழிய, எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கோபி போய்விட்டான்.

1989ம் ஆண்டின் மையப்பகுதியில், அவன் தன்னை ஒரு விடுதலைப் புலி வீரனாக்கிக் கொண்டான்.

“சேரா பிறாவோ” முகாமின் 2வது தொகுதியில் பயிற்சி எடுக்கும் காலத்திலேயே, அவனது ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கின.

மன்னார் மாவட்டப் படையணியில் இருந்து, பல்வேறு சண்டைகளிலும் பங்காற்றித் தனது திறன்களைக் காட்டிய கோபி, சிலாபத்துறை இராணுவ முகாம் மீது நாம் தொடுத்த மிகப் பெரிய தாக்குதல் முயற்சியின் போது, பலத்த காயத்துக்குள்ளானான்.

சிகிச்சை முடிந்து; காயம் மாறி அவன் வந்த பின்பு, “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி”யின் உருவாக்கத்திற்கென மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்து அனுப்பப்பட்ட புலிகளின் அணி, அவனையும் கொண்டிருந்தது.

சாள்ஸ் அன்ரனி படையணி, அவனது ஆற்றல்களுக்கும் திறமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம்.

அந்தப் படையணி எதிரியை எதிர்கொண்ட ஒவ்வொரு சர்ந்தப்பத்திலும், அந்த வீரன் தீரத்துடன் களமாடினான்.

சாள்ஸ் அன்ரனி படையணியில், கண்ணிவெடிப் பிரிவில்த் தான் அவனது பணி துவங்கியது. கால அசைவில் தளபதி பால்ராஜின் பாராட்டுக்களைப் பெற்ற போராளிகளுள் ஒருவனாக அவன் வளர்ந்தான்.

சிங்களப் படையினர் விழி இமையாது காவலிருக்கும் அரண்களின் ஊடுகளுக்குள் அந்த வீரனது இரவுகள் கழியும்.

தனது பாதுகாப்பிற்கெனத் தன்னைச் சூழ எதிரி விதைத்து வைத்திருக்கும் மிதிவெடிகளையும், பொறிவெடிகளையும் அகற்றிவிட்டு, அவனது அழிவிற்க்கென, அவனுக்கு நடுவில் எமது வெடிகுண்டுகளையும், கண்ணிப் பொறிகளையும் நாட்டும் அபாயகராமான பணி அவனுக்குடையதாக இருந்தது.

எதிரி குடியிருந்த இடங்களுக்கெல்லாம் அவன் குண்டுகொண்டு போனான்.

கண்ணிவெடிப் பிரிவில் திறமையான முறையில செயலாற்றும் போதே துணிகரமாக அவன் பார்த்த வேவு வேலைகளும், வேவுப் பணியில் அவன் காட்டிய ஈடுபாடும், அவனை ஒரு வேவுப்படை வீரனாக்கியது.

அவனது ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் வழி அமைத்து நெறிப்படுத்திய தளபதி பால்ராஜ், கண்ணிவெடிப் பிரிவில் செயற்படும் அதே சமயத்திலேயே இராணுவ வேவுப்பிரிவில் செயற்படவும் அவனை நியமித்தார்.

உயிராபத்து நிறைந்த சூழ்நிலைகளில், எதிரியின் உள்ளங்கையில் ஏறி அவனது கைரேகைகளை மனனஞ்செய்து; மதிநுட்பம் மிக்க விதமாக கோபி செய்த வேவுப் பணிகள் அதிசயமானவை. தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்கின்ற போது , அவற்றின் பயன்பாடுகளின் தார்ப்பரியங்கள் உணரப்பட்டன.

ஆனையிறவுக்குக் கிழக்கே, தட்டுவன்கொட்டியில், சிங்களப் படையின் 22 காவலரண்களை வீழ்த்திய தாக்குதலின் வெற்றிக்காக, மேஜர் கிண்ணியோடு சேர்ந்து அவன் ஓய்வற்று உழைத்தான். தாக்குதல் இலக்கு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து சண்டை முடிந்து வெளியேறுகின்ற வரை, இடைப்பட்ட காரியங்கள் எல்லாவற்றிலும் கோபி இருந்தான்.

இதன் பின்னர் , பூநகரிக்குத் தெற்க்கே பள்ளிக்குடாப் பகுதியில் காவல் அரண்கள் மீதான பெரியதொரு தாக்குதலிற்கான தயாரிப்புக்கள் செய்யப்பட்டன. அங்கு கோபி, இரவு பகலின்றிப் பாடுபட்டான். தாக்கும் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு வேவு பார்த்து, தாக்குதல் அணிகளுள் ஒரு தொகுதிக்குப் பாதைகாட்டி, தாக்குதல் குழுவோடு களத்திலும் இறங்கி அந்தத் தாக்குதலில் கோபி ஆற்றிய பங்கு, முக்கியத்துவம் மிக்கது. ஆனாலும், ஆற்றமுடியாத பெரும் சோகம் அவனது இதயத்தைக் கவ்விய இழப்பாக, அந்தத் தாக்குதலில் “லெப். கேணல் சுபன்” களப்பலியாக நேர்ந்துவிட்டது.

அடுத்ததுதான் பலாலி …..

சிங்களை ஆட்சியாளர்களையும் படைத் தளபதிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை அது…!

பலாலி கூட்டுப்படைத்தளத்தின் கிழக்குப் பகுதியில், விமான இறங்கு தளத்தின் பாதுகாப்பிற்கென இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அமைக்கப்பட்ட நான்கரைக் கிலோ மிற்றர் நீளமான பாதுகாப்பு வியூகத்தைப் புலிப்படை வீரர்கள் பிய்த்தெறிந்த வீரசாதனை அது.

கொரில்லாப் போர்முறையின் ஒரு புதிய பரிணாம வடிவத்தில் புலிகள் நிகழ்த்திய இந்தப் பெருமெடுப்பிலான தாக்குதலின் திட்டத்தை வரைவதற்கு உறுதுணையாக இருந்த முக்கியமானவர்களுள், கோபியும் ஒருவன்.

எதிரியின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அவதானித்து, ஒவ்வொரு அங்குலத்தையும் துணிகரமாக வேவு பார்த்து, தாக்குதலின் போது தாக்குதல் அணிகளுக்கு வழிகாட்டியாக சென்றதோடு மட்டும் நின்றுவிடாது…..

போரிடும் வீரனாய்ச் சண்டையில் இறங்கி, இடது காலை ரவை துளைத்துச் சென்ற பின்பும் சண்டையிட்டு, காயமடைந்த, களப்பலியான தோழர்களுடன் ஆயுதங்களை அகற்றும் வரை, களமுனையிலிருந்து தான் வெளியேற மறுத்து, சோர்ந்து விழுந்து, சுய நினைவிழந்து, “இனி இயங்காது” என்ற காலை மருத்துவர்கள் இதயம் நோக அகற்றிவிட…..

அந்த வெற்றியின் பிரசவிப்பிற்க்கா மூன்று மாதகாலமாக, படுக்கையின்றி…. பட்டனி கிடந்து….. ஓயாது சூழந்து….. அல்லும் பகலும் கசங்கிய அந்த விடுதலைப்புலி. உடல் வேதனையோடும் ஆனால் உள நிறைவோடும் படுத்திருந்தது.

ரவையுடைத்துச் சென்ற எலும்பிற்க்கு கட்டுப்போட்டுக் கொண்டு, அடுத்த கட்டிலில் படுத்திருந்த நண்பனிடம் கோபி அடிக்கடி சொல்லுவான்…..

“கால் போனது கவலைதான்; ஆனா அது ஒரு பிரசினை இல்லை. போராட்டத்துக்காக செய்யிறத்துக்கு இன்னும் எவ்வளவோ வழியிருக்குத்தானே…”

கோபி….!

அவன் மிகவும் மிருதுவானவன். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவன் நட்புக் கொள்ளும் முறை அபூர்வமானது.

அடுத்தவர்களை அனுசரித்து, அன்புகாட்டி அவன் பழகும் பண்பு அற்புதமானது.

தான் நிற்கும் இடம் எல்லாவற்றையுமே கும்மாளச் சிரிப்பாலும், குதுகலத்தாலும் நிறைத்துவிடும் அவனுடைய குணாம்சம் சிறப்பானது.

இலட்சிய உறுதியாலும், விடா முயற்சியாலும், செயற்த்திறனாலும் வளர்த்தவன் அவன்.

வேவு வேலைகள் கொடுக்கப்படும்போது, ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமையாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் வரை, “செய்து முடிக்க வேண்டும்” என்ற உணர்வின் உந்துதலோடு, திரும்ப திரும்பப் போய், முயற்சி எடுக்கும் தன்மை அவனுடையது.

எப்பொழுதும் சண்டைகளைப் பற்றியே பேச்சு; தாக்குதலைப் பற்றியே எண்ணம்; போர்த் திட்டங்களைப் பற்றியே சிந்தனை. தளபதி பால்ராஜீடம் அவன் கதைக்காத நாள் கிடையாது; கதைப்பதற்கு பகலென்றும் இரவென்றும் நேரம் கிடையாது; அந்தக் கதைகளிலெல்லாம் போரின்றி வேறெதுவும் கிடையாது.

“அங்கு ஒரு நல்ல ‘ராக்கற்’ இருக்கு”; “இந்த இடத்தில அவன் வழமையாக வந்து போறான்”; “அந்தப் பக்கம் அடிபடக்கூடிய மாதிரி இருக்கு” என்றுதான் அந்தப் புலிவீரன் பேசிக்கொண்டிருந்தானே அல்லாமல், தனது குடும்பத்தின் கஷ்ட நிலைமையைப் பற்றி, வானமே கூரையான அவர்களின் வாழ்வைப் பற்றி, அவன் ஒரு போதுமே வாய் திறந்ததில்லை.

அது மலையகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பம்.

கேகாலையில் உள்ள ‘மாவனெல்ல’ தான், சுப்பிரமணியம் ஐயாவினுடைய குடும்பத்தின் பூர்விகக் குடிநிலம்.

ஒரு அக்காவிற்கும் மூன்று தம்பிகளுக்கும் இடைப்பட்டவனாக, 1973 ஆனி 6ல் பிறந்தவனுக்கு செல்வலிங்கம் எனப் பெயரிட்டு, கண்ணன் என்று செல்லமாக அழைத்தனர். அந்தக் குடும்பத்தின் நிறைவான பொருளாதார வாழ்வை மட்டுமல்ல, அவர்களின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் சேர்த்து சிங்களப் பேரிவனவாதம் சிதைத்தது.

பத்து வருடங்களுக்கு முன்னர்,1(994ம் ஆண்டு எழுதட்டட்டது தற்சமயம் தேசக்காற்றில்) இலங்கைத் தீவையே இரத்த களமாக்கிய, தமிழர்கள் மீது கோரமான இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது, விரட்டியடிக்கப்பட்ட குடும்பங்களுள் அதுவும் ஒன்று.

அல்லல்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களோடு, அந்தக் குடும்பத்தையும் தாங்கிக் கொண்டது தமிழீழம்.

மன்னாரில் பல்லவராயன்கட்டு கிராமத்தில் அவர்கள் குடியேறும்போது, கோபிக்கு பத்தே வயதுதான்.

“சிங்களவர்களோடு தமிழர்கள் ஒருகாலத்திலும் சேர்ந்து வாழ முடியாது” என்பது, ஒரு ஆழமான உண்மையாக, அந்தப் பிஞ்சு நெஞ்சில் அப்போதேயே பதிந்தது.

நன்றாகப் படிக்க வேண்டுமென்றும், நல்ல அறிவாளியாக வரவேண்டும் என்றும் அந்தச் சிறுவனுக்கு நிறைய ஆசை. அதில் ஊக்கமும்; ஆக்கமும் கொண்ட பள்ளிக்கூட மாணவனாக அவன், 9ம் வகுப்பு வரை பாடசாலைக்கு போனான்.

படம் பார்க்கவென்று அம்மா கொடுக்கும் பணத்தை வாங்கிச் சென்று, படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிவந்து சேர்க்கும் அளவிற்கு இருந்தது அவனது கற்கும் ஆர்வம்.

ஆனால், உக்கி உதிரும் கூரையும் சொரிந்து சரியும் திண்ணையுமாக அந்தக் கொட்டில் வீட்டின் ஏழ்மை நிலையினால், அவனது ஆர்வத்திற்கும்; முயற்சிக்கும் ஒத்துழைக்க முடியவில்லை.

இந்த வேதனை அவனது மனதைப் பாராமாக அழுததும் வேளைகளில் எல்லாம், தாங்கள் அவலமாக ஓடிவந்த அந்த நாள், அவனது நினைவில் உறைக்கும்.

விரிவாக்கம் கண்டு வந்த விடுதலைப் போராட்டத்தில், தானுமொரு தமிழ்க் குடிமகன் என்ற வகையில், தனக்குரிய பங்கை உணர்ந்து கொள்ள அவன் தவறவில்லை.

படித்து முன்னேற வென்றும் என்ற ஆர்வத்தோடு வாங்கிய பாடப் புத்தகத்திற்க்குள், ஒளித்து வாங்கி வந்த போராட்ட நூல்களை மறைத்துப் படிக்க அவன் துவங்கினான்.

அந்தச் சிறுவன் வளரவளர அவனுள் அரும்பியிருந்த விடுதலை உணர்வும் விஸ்வரூபம் எடுத்துவந்தது. அது ஒரு கட்டாயக் கடமையாகவும் அவனுள் பரவியது.

கடற்புலிகள் அணி அந்த வீரனைத் தனதாக்கிக்கொண்டது 1993 இன் ஆரம்பத்தில் தான்.

எதிரியானவன் சிறந்த சண்டைப் படகுகளுடன், நவீன ஆயுதங்களுடனும் கடலில் வருகின்றான். எம்மிடமிருப்பது குலையாத ஆன்ம உறுதியும், எம் உயிரும் தான். இஅவர்ரைக் கொண்டு நாங்கள் அவனைச் சந்தித்தேயாக வேண்டும் என்ற கருத்தைச் சுமந்து வாழ்ந்த அந்த வேங்கையின் கரும்புலிக் கனவு நனவாக, சர்ந்தப்பமும் கிடைத்தது.

கிளாலிக் கடலில் எதிரியைத் தேடியலையும் வெடி மருந்துப் படகொன்றுக்கு கோபி சொந்தக்காரனாயிருந்தான்; இன்னொன்றுக்குக் கணேஸ்.

வரதனும், மதனும் உடைத்த பின், நாகதேவன்துறையில மிஞ்சிக் கிடந்த விசைப்படகுகள் புலிகளின் கைக்கு மாறும்வரை அவைதான் அவர்களின் குறி.

இலக்குகளைத் தேடி அவர்கள் போனார்கள்; ஆனால் இலக்குகள் அவர்களை விட்டு தப்பியோடிக்கொண்டிருந்தன.

கடலலை போல காலமும் கரைய வந்து சேர்ந்தன “ஒப்பரேஷன் தவளை” யின் நாட்கள்……

கோபியின் கடைசி 48 மணிநேரங்கள் அவை…..

யாழ். கடல்நீரேரியின் ஓரத்தொடு; கெளதாரிமுனைக்கும் பள்ளிக்குடாவிற்க்கும் மேற்க்கே, இந்துமா சமுத்திரத்தின் ஆர்ப்பரிக்கும் அலைகளை ஊடறுத்து அவனது படகு விரையும்.

அவனைக் காணும் எதிரியின் பீரங்கிப் படகுகள் மண்டைதீவுப் பக்கமாக ஓட்டத்துக்கு விலகும்.

“உங்களை நம்பியே தரையில் எங்கள் போராளிகள் போராடுகிறார்கள். சமர் முடிந்து அவர்கள் முற்றாக வெளியேறும் வரை நேவி இறங்காமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது.

சண்டைக்கு முன்னர் தேசியத்தலைவர் சொன்னதை ஒவ்வொரு கணமும் அவன் நினைவுபடுத்திக் கொண்டான்.

நடுக்கடலில் இயந்திரம் பிசகும், படகு உடனடியாகக் கரைக்கு விரையும்; அவனது “அவசரம்” அவசரப்படுத்தும்; படகு மீண்டும் புறப்படும். அந்த இரண்டு நாட்களுக்குள் இது அடிக்கடி நடந்தது.

இப்படியாக வந்து வந்து போனவனை; கடைசித் தடவைக்குப் பிறகு “அதே சிரித்த முகத்தோடு” நாங்கள் காணவில்லை….

எங்கள் கோபி…!

“கடலில நேவி வந்தால் பொடியல் காப்பாற்றுவார்கள்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தாயா……

எப்படியடா முடியும்…?

எங்களால் நெருங்க முடியாத உயரத்தில் நீ;

எங்களால் எட்டமுடியாத உயரத்தில் உனது இலட்சிய வேட்கை…!

நண்பா! அந்த இலட்சியத்தை அடையும் வரை……
அதே வழிகாட்டலில்; நாம் அணிவகுப்போம்.

சென்று வா…!

விடுதலைப்புலிகள் (மார்கழி, தை1994) இதழிலிருந்து

நவம்பர் 11, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், கார்த்திகை மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , | கடற்கரும்புலி மேஜர் கோபி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது