அழியாச்சுடர்கள்

கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு !

இன்று கரும்புலிகள் நாள்.என்னுடைய பாடசாலைக்கால நண்பன் சுபாஸ் (கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்) பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் ஜோன் கல்வி இயங்கிக்கொண்டிருந்தது. 2000 ஆண்டு எனது பாடசாலையில் உயர்தரத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை. பற்றாக்குறை என்று சொல்வதை விட ஆசிரியர்கள் இல்லை. இதனால் நானும் என் சக மாணவர்களும் தனியார் கல்வி நிலையத்தையே நம்பியிருந்த காலம். சுபாஸ் ஜோன் கல்வி நிலையத்தில் எனது வகுப்பில் படித்தான். நான் உயரதரத்தில் எடுத்த பாடங்களையே அவனும் தெரிவு செய்திருந்தான். அதனால் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களில் எப்போதும் சந்திக்கும் சந்தரப்பம் கிடைக்கும்.

வகுப்புக்களில் இருக்கும் மாணவர்களில் சிலர் எப்போது வருவார்கள் எப்போது செல்வார்கள் என்று தெரியாது. ஒரு சிலர் வகுப்புக்களுக்கு கிழமைக்கணக்கில் வராமல் விட்டிருந்தால் கூட ஏனைய மாணவர்களால் அவர் வகுப்புக்கு வந்தாரா இல்லையா என்று தெரிவதில்லை. ஆனால் ஒரு நாள் ஒரு வகுப்பிற்கு சுபாஸ் வராமல் விட்டாலும் அவனை எல்லோரும் தேடுவார்கள். ஏனென்றால் வகுப்புக்களில் அவன் செய்யும் குறும்புகள் அவ்வளவு அதிகம்.

அவனை சக மாணவர்கள் சுபாஸ் என்று கூப்பிடுவதை விட கட்டை வாத்தி என்று தான் அழைப்போம். காரணம் அவனது உருவம். எங்களது வகுப்பில் மிகவும் குள்ளமாகவும் மெல்லிய உடலமைப்பையும் கொண்ட உருவம் அவன். அவனோடு தனியார் கல்வி நிலையத்தில் பழகிய பழக்கம் அவன் என்னை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்செல்வான். அவன் வீட்டில் செல்லப்பிள்ளை. அவனுக்கு மூத்த சகோதரர்கள் அனைவருமே பெண்கள். இவன் தான் கடைக்குட்டி. அக்காமார்களின் செல்லத்திற்கு அளவில்லை. வீட்டில் எவ்வாறு குறும்புத்தனமாக இருப்பானோ அதே போலத்தான் வகுப்பிலும் குறும்புக்காறன்.

எல்லோரும் தேசத்திற்கான தனது கடமையை ஆற்றவேண்டிய காலம் சபாசும் விடுதலைப்போராளியானான். சுபாஸ் அன்புமாறன் என்ற இயக்கப்பெயரோடு தேசத்திற்கான தனது பணியை ஆற்றத்தொடங்கினான். அவன் இயக்கத்தில் இணைந்து நீண்ட நாட்கள் நான் அவனை சந்திக்கவில்லை. சமாதானச்செயலகத்தில் ஒரு சந்திப்பை முடித்துக்கொண்டு கிளிநொச்சி காக்கா கடைச்சந்தியை உந்துருளியில் கடந்து கொண்டிருக்கிறேன். காக்கா கடைச்சந்தியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாதாரண உடையில் நிற்கும் அந்த உருவம் கட்டை வாத்தி மாதிரிக்கிடக்குதே என்று உந்துருளியை திருப்பினேன். உந்துருளியை திருப்பி அவனருகில் சென்றும் என்னைக்கண்டு விட்டான். ஓடிவந்து கட்டி அணைத்து எப்பிடி மச்சான் இருக்கிறாய் என்று நலம் வசாரித்தான். கூடவே நானும் நலம் விசாரிக்க மச்சான் எங்கட ரீவில நீ செய்தி வாசிக்கேக்க நான் எங்கட பெடியலுக்கு உன்னைப்பற்றி சொல்லுறநான். பெருமையா இருக்கு மச்சான் என்றவாறு பள்ளி த்தோழர்கள் பற்றிப்பேசி நீண்ட நேரம் உரையாடி விட்டு அவனிடமிருந்து விடை பெற்றேன். அதன் பின்னர் அடிக்கடி அவனை கிளிநொச்சியில் சந்தித்து பேசுவதுண்டு. இருவருக்கும் நேரமிருந்தால் கதை நீழும். சிரிது காலத்த்தில் அவனை சந்திக்க முடியவில்லை. வேறு எங்கோ சென்றுவிட்டான். பல தடவை நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் இடங்களை தேடியிருக்கிறேன் அவனை சந்திக்கமுடியவில்லை.

பின்னர் 2008 ஒரு படப்பிடிப்பின் போது…. முல்லை கடற்பரப்பில் கடற்கரும்புலிகளை அவர்களது நவீன கடற்கலங்களோடு ஔிப்பதிவு செய்துகொண்டிருக்கிறேன். என்னை அன்புமாறன் ஏற்கனவே அவதாணித்து விட்டான் ஆனால் நான் அவனை அவதாணிக்கவில்லை. ஔிப்பதிவு நிறைவடைந்தது. பெண் போராளிகள் சிலர் என்னிடம் வந்து அண்ணா நீங்கள் எடுத்த வீடியோக்களை ஒருக்கால் காட்டுங்கோ எங்களை எப்படி எடுத்திருக்கிறீங்கள் என்று பார்ப்போம் என்று என்னிடம் இருந்த ஔிப்பதிவு கருவியை கேட்கவே இப்போது நான் என்ன செய்ய என்று தயங்க அருகில் இருந்த இன்னொரு பெண்போராளி சொன்னாள் அண்ணா நீங்கள் இந்த வீடியோவ போடேக்க நாங்கள் உங்களோட இருக்க மாட்டம். நீண்ட தூரம் போயிருப்பம் அது தான் கேக்கிறோம் என்றால். இதற்குப்பின்னரும் அந்த ஔிப்பதிவுக்கருவி என்னிடம் இருக்க வேண்டுமா என்று எண்ணி ஔிப்பதிவுக்கருவியை அவர்களிடமே கொடுத்துவிட்டேன். அப்போது யாரோ ஒருவர் எனது பின்பக்கமாக வந்து இறுக கட்டிப்பிடித்து விட்டார்கள் யார் என்று தெரியவில்லை. ஒருவாறு இறுக கட்டிப்பிடித்த கைகளை இலேசாக்கி அந்த முகத்தைப்பார்த்தேன். என்னால் நம்ப முடியவில்லை. எதிரே அன்புமாறன். கருத்த வரிச்சீருடையுடன் உப்பு நீர் தோய்ந்தபடி சிரித்துக்கொண்டு நிற்கிறான். அவன் பேசுகிறான் என்னால் பேச முடியவில்லை. வார்த்தை வரவில்லை. வாயடைத்துப்போனேன்.

மச்சான் என்ன யோசிக்கிறாய் வா… அங்கால போவம் என்று என் கையை பற்றியபடி கடற்கரையில் நடக்கிறோம். நீண்ட தூரம் நடந்த பின்னர் என்னடா கதைக்கிறாய் இல்ல… என்ன என்றான். இல்ல மச்சான் உன்னை நான் இங்க எதிர்பார்க்கல்ல அது தான். அது ஒன்டும் இல்லடா சும்மா பயிற்சிக்கு கூப்பிட்டாங்கள் என்று என்னை சமாளித்தான். ஆனால் அந்த இடத்திற்கு செல்வதானால் எப்படி செல்ல முடியும் என்று எனக்குத் தெரியும். அது அவனுக்கும் தெரியும்.நீண்ட நேர அமைதியின் பின்னர் உரையாடல் தொடங்குகிறது.

ஏன் நீ இங்கு வந்தாய் என்று என்னால் கேட்க முடியவில்லை. அதனால் அந்த கேள்வியை அவனிடம் அந்த கேள்வியை தவிர்த்து விட்டாலும் என் மனதுக்குள் குடைந்து கொண்டிருக்க கதை தொடர்கிறது. நீண்ட நேர உரையாடலின் பின்னர் சொன்னான் மச்சான் கனநேரம் கதைசிட்டம் உன்னை உன்ற ஆட்கள் தேடுவாங்கள் வா போவம். என்று விட்டு என்னுடைய கையைப்பிடித்து அவனது தலையில் வைத்து மச்சான் நீ எனக்கு ஒரு சத்தியம் செய்யனும் என்றான். என்ன சொல் என்றேன்.என்னை இங்கு கண்டதை யாருக்கும் சொல்க்கூடாது.. எங்கட வீட்ட சொல்லாதை என்றான். அவன் கேட்டதைப்போலவே சத்தியம் செய்து விட்டு இருவரும் விடை பெற்றோம்.

ஒரு வாரம் கடந்திருக்கும். ஒரு நாள் காலை. நான் குளிக்கும் போதும் வானொலிப்பெட்டியை கிணற்றடியில் வைத்து விட்டு குளிப்பது வழக்கம். புலிகளின் குரல் செய்தியை எப்போதும் தவற விடுவதில்லை. அன்றும் காலைச்செய்தி ஒலிக்கிறது. முதலாவது தலைப்புச்செயதி முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோரா கடற்கலம் கடற்கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிப்பு என்ற வெற்றிச்செய்தி ஒலிக்கிறது. அமைதியாக வானொலிப்பெட்டிக்கு அருகில் செல்கிறேன்.
இந்த வெற்றிகர தாக்குதளில் லெப்ரின் கேணல் அன்பு மாறன் வீரகாவியமானான் என்ற செய்தி ஒலிக்கிறது. ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். போராளிகள் எல்லோரும் வீரச்சாவடைவது வழமை தான் ஆனாலும் உற்ற நண்பன் வீரச்சாவு என்றால் யாரால் தான் தாங்க முடியும். அன்பு மாறனுக்கு அன்று வாக்கு கொடுத்த விடயத்தை இன்று தான் மீறியிருக்கிறேன். மன்னித்துவிடு சுபாஸ்…

Siva Karan

22.03.2008 நாயாறு கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

22.03.2008 அன்று நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

லெப். கேணல் அன்புமாறன்
சுபாஸ்கரன் கனகலிங்கம்
முல்லைத்தீவு

மேஜர் நிரஞ்சனி
அன்பரசி நன்னித்தம்பி
கிளிநொச்சி

மேஜர் கனிநிலா
குணரூபா குணராசா
கிளிநொச்சி

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

Bt dora attack 2008Bt Lt Col anpumaran, prabakaranBt Lt Col anpumaranBt Maj Niranjini with prabakaranBt Maj NiranjiniBt Maj Kaninila with prabakaranBt Maj Kaninila

தேசியத்தலைவர் அவர்களின் கரங்களை தமிழ்மக்கள் அனைவரும் வலுப்படுத்துங்கள் என நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் வேண்டுகோள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ltte veeravanakam

ஜூலை 6, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , | கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் !

தேன் ஊறும் மரங்களும் அம் மரங்களின் வளர்ச்சியால் நிலம் தெரியா காடுகளும், பச்சைப்பசேல் என்று வானம் தொடும் தென்னை மரங்களும் அங்கே கீச்சிட்டுக் கொண்டு ஓடித்திரியும் தூக்கணாங்குருவிகளும், வாடி வீட்டை நனைத்துக் கொண்டிருக்கும் நிலவொளியும், அவ்வொளியில் மினுமினுக்கும் சமுத்திரமுமென தமிழீழம் தன் அடையாளங்களை சுமந்து நிமிர்ந்திருந்த காலம் மட்டுமல்லாது, தமிழீழம் என்ற இலக்குக்காக தம்மை ஒறுத்து தம் நாட்டின், தம் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக கரங்களில் சுடுகலன்களை சுமந்து நின்ற விடுதலைப் போராளிகளையும், தமிழ் இனத்தையே கருவறுத்து விட துடித்த சிங்கள வெறியர்களையும் அவர்களோடிணைந்த துரோகிகளையும் சுமந்து நின்ற காலம் அது.

தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு வட/ தென் தமிழீழம் எங்கும் புலிகள் வரியுடுத்தி களத்திடை மேவித் திரிந்த அக்காலத்தில், படையக ரீதியாக பல வளர்ச்சியைக் கண்டிருந்த விடுதலைப்புலிகளின் மரபுவழி தமிழீழ இராணுவம் தன் படையக வளங்கல்களை நிலைநிறுத்தவும், மேம்படுத்தவும் என விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி பயணித்தனர். ஒற்றைப் படகு மூலம் இந்தியா சென்று அங்கிருந்து விநியோகப் பணிகளை செய்த விடுதலைப்புலிகளின் கடற்புறா அணி கடற்புலிகளாக பரினாம வளர்ச்சி பெற்று பல நூறு சண்டைப் படகுகள், பல நூறு விநியோகப் படகுகள்,உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைத் தொடர்பாடல்கள் என அதி உச்ச வளர்ச்சியை அடைந்திருந்த காலம்.

அக்காலத்தில் தான் வட/ தென் தமிழீழத்தின் ஆயுத வளங்கல்களை பலப்படுத்தவும் தமிழீழ படைக்கட்டுமானத்தை நிலைநிறுத்தவும் வட தமிழீழத்தில் இருந்து தென் தமிழீழத்துக்கும் அங்கிருந்து வடதமிழீழத்துக்கும் படையக / ஆளணிகளை நகர்த்தும் பணியை பல போராளிகள் செய்து வந்தார்கள். அதில் முக்கியமானவன் லெப். கேணல் புரட்சிநிலவன். புரட்சிநிலவனை அறியாத கடற்புலிப் போராளிகள் குறைவு. அத்தகைய வீரமும் விவேகமும் கொண்ட இளைய போராளி. இயக்க வாழ்வு என்பது புரட்சிக்கு வெறும் 5 வருடங்கள் தான். ஆனாலும் அதி உச்சப் பணிகள் மூலமாக உயர்ந்து நின்ற போராளி. அதிகமான காலங்களில் விநியோக நடவடிக்கைகளையே தன் பணியாக கொண்டவன். அதுவும் பல இன்னல்கள் நிறைந்த பயணங்களை மிக சாதாரணமாக செய்து முடிப்பவன்.

நினைவாற்றல் நிறைந்த ஒரு போராளி, புரட்சி என்றால் “ஆள்கூறு “ என்று போராளிகள் கிண்டல் செய்வார்கள். உண்மையும் அதுவே புரட்சிக்கு தமிழீழத்தின் பெரும்பான்மையான ஆள்கூறுகள் அனைத்தும் மனதில் நிறைந்து கிடக்கும். குறித்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடத்தில் ஆள்கூறுகளை பார்த்து உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே பூமிநிலை காண் தொகுதி (Global Positioning System) கருவியில் அந்த ஆள்கூற்றை உட்செலுத்தி தயாராகிவிடுவான் புரட்சி. அவ்வாறு நினைவாற்றல் மிகுந்தவன் இப் போராளி.

கடல் அலைகளின் தாலாட்டில் நிதம் நிதம் மகிழ்ந்திருக்கும் வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, தாளையடியை சொந்த இடமாகவும். மருதநிலமும், பாலைவனமும் நிமிர்ந்து நிற்கும் விசுவமடுவை வதிவிட இடமாக கொண்டிருந்த வைரமுத்து வசீகரன் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் விடுதலையின் தேவையை உணர்ந்து பாசறை புகுந்து புரட்சிநிலவனாகினான். அடிப்படைப் பயிற்சியை முடித்து படையணித் தளபதிகளினால் போராளிகள் தம் படையணிகளுக்கு உள்ளிணைக்கப்பட்ட போது கடற்புலிகளின் அணிக்கு தெரிவாகி உள்வாங்கப்படுகிறான். அங்கே சிறப்பு கடற்பயிற்சிகளை முடித்த புரட்சி நிலவன் முழுநிலை கடற்புலியாக உருவாகினான்.

படகு இயந்திரவியலாளனாக தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் நடுக் கடலில் வைத்தே இயந்திரத்தை கழட்டி மாற்றி படகை இயக்கும் வல்லமை கொண்டவன். ஒரு தடவை சர்வதேச கடல் விநியோக போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட பொருட்களுடன் சாலை முகாம் நோக்கி வந்து கொண்டிருந்த படகின் பிரதான இயந்திரவியலாளர்களான சென்றது புரட்சி நிலவனும் நக்கீரன் என்ற போராளியும். கரை நோக்கி வந்து கொண்டிருந்த அப்படகு இயந்திரம் இயங்காததால் இடையில் நின்றுவிட, பழுதடைந்துவிட்ட அவ்வியந்திரத்தின் பிரதான தொகுதியை நடுக்கடலில் வைத்தே மாற்றி சர்வதேச விநியோக போராளிகளிடம் இருந்து கிடைத்த புதிய இயந்திரத் தொகுதியை நிறுவி அப்படகை இயக்கிக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.

அவ்வாறு வலிமை மிக்க டீசல் இயந்திரவியலாளனாகவும் போராளியாகவும் மிளிர்ந்த புரட்சிநிலவன் கடற்புலிகள் அணியில் இருந்து கடற்கரும்புலிகள் அணிக்கு செல்வதற்காக தேசியத்தலமையிடம் அனுமதி கோருகிறான்.

நெஞ்சுக்கும் தோள்மூட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவன் பெற்றிருந்த விழுப்புண் அவனின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்குமோ என எண்ணத்தை உருவாக்கினாலும் அவனின் துணிவும், தன்நம்பிக்கையும் விவேகமான செயற்பாடுகளும் புரட்சிநிலவனை கடற்கரும்புலியாக மாற்றுகிறது.

கடற்புலிகளின் பெரும் பணியாக இருந்த ஒன்று கடல் விநியோகம். அவ்விநியோகத்தினூடாக படையகப் பொருட்களை தமிழீழத்துக்கு கொண்டு வருவது முக்கிய பணியாக விரிந்து கிடந்தது. அப்பணியை செய்த போராளிகளுள் புரட்சி நிலவனும் முக்கியம் பெறுகிறார். அப்பணியில் முக்கியம் பெறுவது தென்தமிழீழத்துக்காக படையக பொருட்கள் விநியோகம். அவ்விநியோகத்தை தன் உச்ச வீரத்தால் செய்து கொண்டிருந்த புரட்சிநிலவன் பல முக்கிய ஆயுதங்களை தென் தமிழீழத்துக்குக் கொண்டு போய் சேர்த்தான்.

அவ்விநியோகத்தின் பெறுபேற்றை தென்தமிழீழத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைகள் நிச்சயம் உணர்ந்திருக்கும். அதை இரண்டு 152 MM ஆட்லறி எறிகணையின் மூலம் விடுதலைப்புலிகளின் படையணிகள் உணர்த்திக் காட்டின. திருகோணமலை துறைமுகம் தொடக்கம் அங்கே இருந்த எதிரிகளின் பாசறைகள் பல அத் தாக்குதல்களால் திணறிக் கிடந்தன. ஆட்லறி எறிகணையால் எம் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்து கொடுங்கோலாட்சி நடாத்திய சிங்கள தேசம் விடுதலைப்புலிகளின் ஆட்லறி எறிகணையின் துல்லிய தாக்குதல்களால் திணறிப் போய்க் கிடந்தது.

அதற்கு மூல காரணமாகியது புரட்சியிலவன் என்றால் அதில் எந்த பொய்மையும் இல்லை. தனது விவேகத்தாலும், புத்திசாதுரியத்தாலும், ஒரு போராளியும் இரண்டு பொதுமகன்களையும் தனது ஆளணியாக கொண்டு தென் தமிழீழத்தின் கிட்டுபீரங்கிப் படையணியை வானம் தொட்டுவிடச் செய்வதற்காக அவ்விரண்டு ஆட்லறி எறிகணை செலுத்திகளையும் படகினூடாக கொண்டு வந்து சேர்த்தது புரட்சி நிலவனின் போரியல் குணத்தின் முக்கிய உச்சமாகிறது. அதுவே தென்தமிழீழத்தில் பல வெற்றிகளுக்கு காரணமாகிறது.

அவற்றை அங்கே கையளித்து சற்று ஓய்வும் இன்றி தென் தமிழீழத்தில் இருந்து வட தமிழீழம் நோக்கி வந்து கொண்டிருந்த புரட்சிநிலவனும் அவனின் அணியும் தமது படகில் இன்னும் ஒரு ஆட்லறியை சுமந்து கொண்டு மன்னார் பகுதி நோக்கி பயணிக்கின்றனர். அப்போது அந்த பயங்கரம் நடக்கின்றது. ஆனால் அதை பயங்கரம் என்று நினைக்காத புரட்சிநிலவன் தனது விவேகத்தால் அன்றைய நாளில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய படையகச் சொத்தொன்றை காப்பாற்றியது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் எந்த நிலையிலும் தளர்வற்றவர்கள் என்பதை சொல்லிச் சென்றான்.

அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் என்று மன்னார் கடற்படை முகாமில் இருந்து வந்த சிங்களக் கடற்படையின் ரோந்துப் படகு ஒன்றை இவர்களை இடைமறிக்கிறது. மீனவர்கள் போல் பயணித்துக் கொண்டிருந்த அவர்களின் படகிற்குள் ஆட்லறி எறிகணை செலுத்தி இருப்பதனால், பொதுமகன்கள் இருவரும் சற்றுக் கலவரமானார்கள். சோதனை என்ற பெயரில் இவர்களின் படகிற்குள் வந்த கடற்படை ஒருத்தன் இவர்களை மிரட்டும் தொணியில் கேள்விகளை கேட்ட போது, பொதுமகன்கள் இருவராலும் கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் எந்த அதிர்ச்சியும் அடையாத புரட்சிநிலவன் சிங்கள மொழியில் உரையாடத் தொடங்கினான்.

சிங்களப் படையின் காலுக்கு கீழ் இருக்கும் சிறிய கதவு ஒன்றை திறந்தால் உள்ளே இருக்கும் பொருட்களை அவன் நிச்சயம் கண்டுவிடுவான். அதனால் அவனின் நினைவுகளை திசை திருப்புவதற்காக முயல்கிறான் புரட்சி நிலவன். உடனடியாக அவனின் கையை பிடித்து படகின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

சிங்களத்தில்

“ உனக்கு என்ன வேணும் சொல்லு தாறன்”

என்று கேட்டது மட்டுமல்லாது அந்தச் சிங்களக் கடற்படைக்கு அவர்களிடம் இருந்த அதிக விலை கொண்ட கருவாட்டை அவனுக்கு அன்பளிப்பாக வழங்குகிறான். அவ் அன்பளிப்பினாலும் உபசரிப்பினாலும் தன் நிலை இழந்த கடற்படை சிரித்தபடி தனது டோரா படகிற்கு திரும்பினான். அவ்வாறு புரட்சிநிலவன் செய்யவில்லை என்றால், நிச்சயமாக அந்த கடற்படை காலடியில் இருந்த கதவை திறந்திருப்பான். அதனை கண்டிருப்பான். அதன் பின் யாருமே எதிர்பார்க்காத சம்வங்கள் நடந்து முடிந்திருக்கும்.

ஆனால் புரட்சிநிலவனின் அந்த விவேகமான செயற்பாடு அவரின் அணியும் உள்ளே அமைதியாக இருந்த ஆட்லறியும் எந்த சேதமும் இல்லாமல் கரையேறியதற்கு காரணமாகியது. இல்லையென்றால் அன்று எமக்காக கொண்டுவரப்பட்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் பெரும் சொத்து பெற்ரோல் ஊற்றி கொழுத்தப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும். அதோடு நிச்சயம் இரண்டு போராளிகளும் வீரச்சாவடைந்திருப்பர். பொதுமகன்கள் இருவரும் கைதாகி இருப்பர் அல்லது அவர்களும் வீரச்சாவடைந்திருப்பர். ஆனால் புரட்சிநிலவனின் சாதுரியமான செயற்பாடு அன்றைய களச்சூழலை மாற்றிவிட்டது.

இக் களச் சூழலையும் சாதுரியமாக நடவடிக்கையை வெற்றிபெறச் செய்த புரட்சிநிலவனின் நடவடிக்கையினையும் அறிந்த தேசியத்தலைவர் உடனடியாக தன்னிடம் அழைத்தது மட்டுமல்லாது, CBZ உந்துருளி ஒன்றும் நடவடிக்கைக்குத் தேவையான பல பொருட்களையும் பரிசளித்து மதிப்பளித்தார்.

அதன் பின்பான நாட்கள் விநியோக நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போது, உயர் தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகளை கொண்டு வர வேண்டி களச்சூழல் ஏற்பட்டது. அதனால் உயர் தொழில்நுட்ப தகவல்பரிமாற்ற முறமையினை கற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அணியில் புரட்சி நிலவனும் ஒருவராகிறார். அந்த கற்றல் செயற்பாடு முடிவடைந்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் எதிரியின் கோட்டைக்குள்ளே நின்று சிங்கள எதிரியை திணறடிக்க செய்யும் படையக பொருட்களை தமிழீழத்துக்கு அனுப்ப வேண்டிய முக்கிய பணி ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டார்.

தென்னிலங்கையின் முக்கிய கடல் சார்ந்த நகரம் ஒன்றிற்கு அனுப்பப்பட்ட போது, புலி ஒருத்தன் மீனவனாக மாறி நின்று படையகப் பொருட்களை கப்பலில் இருந்து இறக்குவதும், அதை தமிழீழத்துக்கு எந்த இடரும் இல்லாது அனுப்புவதுமாக தனது விநியோகப் பணியை செய்து கொண்டிருந்தார். பயப்பிடவில்லை, சோர்ந்து போகவில்லை, இலக்கொன்றே அவனின் மூச்சாக தன் பணியில் ஈடுபட்டு பல படையக பொருட்களை தமிழீழத்திற்கு கிடைக்கச் செய்தார். ஒரு படகின் அணித் தலைவனாக பணியாற்றிய அப் போராளிக்கு அவன் கற்றுத் தேர்ந்திருந்த சிங்கள மொழி பெரிதும் உதவியது என்பது உண்மையே.

இவ்வாறான இடர் மிக்க பணிகளினால் தமிழீழ விடுதலைக்காக உழைத்த அப்போராளியும் அவரது அணியும் உறுதியாக இறுதி வரை பயணித்தார்கள். கடல் விநியோகம் என்பது சாதாரணமானதல்ல. சிங்கள கடற்படை இந்திய கடற்படை என கடல் வல்லூறுகளும், தொழில்நுட்ப அரக்கர்களாக இருக்கக்கூடிய சர்வதேச நாடுகளின் செய்மதிகள் மற்றும் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் என தமிழீழ கடற்பரப்பில் சிறு பணியை செய்வதற்கும் பல தடைகள் எழுந்து நின்றன. அதே நேரம் அதையும் தாண்டி, இயற்கையும் பாதகத்தை விளைவிக்கும்.

அவ்வாறான இடர்களை எல்லாம் தம் தோழ்களிலே சுமந்து தமிழீழ கடல் அன்னையின் மடியில் தவழ்ந்து திரிந்தனர் இப் போராளிகள். ஒன்றல்ல இரண்டல்ல மாதங்கள் பல கடந்தும் கரையேறாத பணி. ஒழுங்கான தூக்கம் இல்லை, உணவில்லை. ஆனாலும் சோர்ந்து போக மாட்டார்கள். தன்நம்பிக்கையையும் துணிவையும் தமதாக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஒன்றில் ஒன்றரை மாதங்களாக கடலில் பயணித்துக் கொண்டிருந்த புரட்சிநிலவன் கரையேறி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. கிடைத்த சிறு ஓய்விலும் முகாமை விட்டு நகராது தமிழீழ விடுதலைக்காக பணி செய்தார்.

அப்போது இன்னும் ஒரு அணி கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அவ்வணியின் படகு இயந்திரகோளாறால் பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத சூழல் வந்த இடைநடுவில் நின்ற போது, சிறப்புத்தளபதி சூசை அவர்களால் புரட்சிநிலவனிடம் அப் படகை மீட்டுவருவதற்கான வேண்டுகை விடப்பட்டது. அது மட்டும் அல்லாது அப்படகின் கட்டளை அதிகாரியாக வந்த போராளி முக்கிய பணி ஒன்றுக்காக வேறு ஒரு படகிற்கு செல்ல வேண்டிய தேவை எழுந்திருந்தது. இவற்றின் காரணமாக அப் படகை பொறுப்பெடுக்கவும், இயந்திரத்தை திருத்தி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கவும் சரியான தெரிவாக புரட்சிநிலவனே இருந்தார்.

அதனால் உடனடியாக தனது அணியோடு கடலேறிய புரட்சிநிலவன் படகை கொண்டு வந்து சேர்க்கும் பணியை சரியாக செய்தார். பழுதடைந்த படகினை சென்றடைந்து, அப்படகின் கட்டளை அதிகாரியாக இருந்த போராளியிடம் இருந்து படகை பொறுப்பெடுத்து அவரது பணிக்காக அவரை அனுப்பிய பின் படகை கரையேற்றும் பணியில் ஈடுபட்டார்கள் புரட்சிநிலவனின் அணியினர். பல இடர்களை சுமந்து குறிப்பிட்ட சில வருட போராட்ட வாழ்விலே உச்ச வீரத்தோடு களப்படியாற்றிய, தமிழீழ மக்களின் மனங்களை வென்ற அப் போராளிக்கு அப்பணியே இறுதிப்பணி என்று யாரும் எண்ணவில்லை.

மன்னார் கடல் அன்று அமைதியாக இல்லை. தன் வீரக் குழந்தைகளின் மேனி தொட்டு வரும் காற்றில் கடல் அலை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சிங்களத்தின் கடற்படையின் படகுகளை எதிர்க்க முடியாது அந்த அலைகள் சீறிக் கொண்டிருந்தன. தன் பிள்ளைகளை தன் அலை எனும் சிறகுகளால் பாதுகாக்க முனைந்து கொண்டிருந்தது அந்த கடல். அதனூடாகவே புரட்சி நிலவனும், மோகன் ஐயாவும், மோகனதாஸ் ஐயாவும். அப்படகோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மன்னார் கடல் பகுதியில் அடிக்கடி குறுக்கே வரும் சிங்களப்படைப் படகுகள் திடீர் என்று எதிர் வந்தன. சர்வதேசத்தாலும் இந்திய வல்லாதிக்க சக்திகளாலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அக் கடல் மீதான எமது நடவடக்கைகள் ஒவ்வொன்றிலும், அவர்களுக்கெல்லாம் போக்குக் காட்டி ஒவ்வொரு வெற்றி நடவடிக்கைகளையும் செய்த புரட்சிநிலவனின் அணி அன்று சிங்களப் படைகளினால் இடைமறிக்கப்படுகிறது. புரட்சி நிலவனும் அவரின் அணியும் எதிர்த்து களமாடுகிறார்கள். தொலைத் தொடர்புக் கருவிகள் நிலமையை கட்டளைப் பீடத்துக்கு கொண்டு செல்கின்றன. ஆனாலும் சண்டையின் தீவிரம் உச்சம் பெற்று படகு சண்டை இட முடியாத அளவுக்கு சேதமடைகிறது. ஆனாலும் இறுதிவரை உறுதியாக புரட்சிநிலவன் சிங்களப்படைகளை எதிர்கொள்கிறார்.

கட்டளைப் பணியகத்தில் இருந்து உதவி அணிகள் சென்றடைய முன்பாகவே சண்டை உக்கிரமமடைந்து அப்படகு கட்டளை அதிகாரியான கடற்கரும்புலி புரட்சிநிலவன் லெப். கேணல் புரட்சிநிலவனாகவும், மோகன், மற்றும் மோகனதாஸ் என்ற பொதுமகன்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும் வீரச்சாவடைந்திருந்தார்கள். மன்னார் கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததைப் போலவே தமிழீழம் என்ற உன்னத இலக்குக்காக ஆர்ப்பரித்துப் பயணித்த புரட்சிநிலவனும் அவரது அணியும் தம் பணியின் போதே விழி மூடி கடல் மடியில் வெடியோடு சங்கமித்து போயினர்.

“கடலிலே காவியம் படைப்போம்” என்ற உயர்ந்த வாசகத்தை தாரகமந்திரமாக கொண்டு பயணித்த கடற்புலிகள் பாரிய துறைமுகங்களை கொண்ட ஒரு அரச கடற்படையாக இல்லாத நிலையிலும், பல சிறு கடற்துறைமுகங்களை கொண்டிருந்ததும் விநியோக நடவடிக்கைகளில் உச்சம் பெற்றிருந்ததும், தமிழீழ கடற்படையின் இவ்வாறான போராளிகளின் தியாகங்கள் உச்சம் பெற்றிருந்ததும் வரலாறாக பதிவாகி கிடக்கின்றது

ஜூலை 6, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , | கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள்!


யூலை 5….

எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை பெறுகின்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் தான் தமிழினத்தின் மிகப்பெரும் பலமான கரும்புலி வடிவத்தை தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் உலகின்முன் எடுத்துக்காட்டினார்.

1987 மே மாதத்தில் இலங்கை அரசு நடத்திய, ஒப்பறேசன் லிபறேசன் என்ற மிகப்பெரிய இராணுவநடவடிக்கைதான், இத்தகையதோர் வடிவத்தை தேசியத்தலைவர் உருவாக்குவதற்கு வழிவகுத்தது. யாழ்குடாநாட்டில் அரசபடையினர் பயணிக்க அச்சங்கொள்ளுமளவிற்கு விடுதலைப் போராளிகளின் மறைந்திருந்து தாக்கும் கெரில்லாத் தாக்குதல் வடிவம் வளர்ச்சியுற்றிருந்தது. படையினர் உளரீதியாக தளர்வடையத்தொடங்கியிருந்தனர். எனவேதான் அன்றைய ஐனாதிபதியாகவிருந்த. ஜே .ஆர். ஐயவர்த்தன, படையினரை உளவலுப்படுத்த எண்ணினார்.

இலங்கைத்தீவிலிருந்து தமிழினத்தவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க பல பேரினவாதிகள் வரிசைகட்டி நின்றாலும், துளியளவும் ஈவிரக்கமற்ற இனவாதியாக தன்னை தமழினத்தவர்களின் நெஞ்சிற் பதித்தவர் அன்றைய ஐனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஐயவர்த்தன. தன்னுடைய ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்போராளிகளையும், அவர்களைத் தாங்கிநிற்கும் தமிழினமக்களையும் துடைத்தழிக்க நினைத்தார் அவர்.

இதற்கமைய இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பேருதவியோடு தமிழினத்தின்மீது படையெடுப்பொன்றைத் திட்டமிட்டார் ஐயவர்த்தன. இந்த நடவடிக்கைக்காக தன்னுடைய இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறப்புப்பயிற்சி பெற்றுக்கொள்ளச் செய்தார். அத்தோடு, தமிழர்கள் மிகச்செறிந்துவாழும் யாழ்குடாநாட்டின்மீது பொருளாதாரத்தடையையும் விதித்தார்.

இவ்வாறு நன்கு திட்டமிட்டு, மிகப்பெரிய படையெடுப்பொன்றை வடமராட்சிமண்ணில் தொடக்கினார். இந்த நடவடிக்கைதான் “ஒப்பரேசன் லிபரேசன்” என்கின்ற இராணுவ நடவடிக்கை. இதன்மூலம் வடமராட்சிப் பிரசேத்தை இராணுவத்தின் கைக்குள் கொண்டுவந்து, விடுதலைப்புலிகளையும் மக்களையும் திகிலடையச் செய்து, பின்னர் அங்கிருந்து யாழ்குடாநாட்டின் தரைப்பகுதிகளை கைப்பற்றிவிடலாம் என்பதே ஐயவர்த்தன கண்ட கனவாகும்.

1987 மே 26 ஆம் நாளன்று, அரசவிமானங்களும், கடற்படைக் கப்பல்களும் வடமராட்சிப்பகுதிமீது தாக்க, அதேநேரத்தில் தரைவழியாக இராணுவம் எறிகணைகளை வீசியபடியே முன்னேறத்தொடங்கியது.

மக்கள் குடியிருப்புகளே அதிகமாக இலக்குவைக்கப்பட்டதால், உயிரிழப்பும், உடைமைகள் இழப்பும், காயமும் என மக்கள் சொல்லொணாத்துயர் சுமந்தனர். பலநாடுகளின் உறுதுணையோடு நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு தற்காப்பு தாக்குதல்களை தொடுத்தவாறு போராளிகளும் இழப்புகளுடன் போர் உத்திமுறைக்கு அமைவாகப் பின்வாங்கினர். வடமராட்சி பிரதேசம் பேரழிவுக்குள்ளானது. மக்களின் உடைமைகள் எல்லாம் அழிவுற்றன.

வடமராட்சியைக் கைப்பற்றிய இராணுவம், அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைக்காக நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் தமது பெரும் படைத்தளமொன்றை நிறுவியது. மாணவர்களின் அறிவை விருத்திசெய்யும் பாடசாலையில் இருந்துகொண்டு யாழ்குடாநாட்டின்மீது படையெடுப்பு நிகழ்த்துவதற்குரிய அனைத்தையும் இராணுவதரப்பு செய்துகொண்டிருந்தது.

விடுதலைப்புலிகள் அச்சமுற்று ஓடிவிட்டார்கள். இராணுவம் பெருஞ்சாதனை படைத்துள்ளது என்கின்ற தோற்றத்தை காட்டி, ஐயவர்த்தன இறுமாந்திருந்தார். இந்தவேளையில் தான், அப்போது பலவீனமான நிலையிலிருந்த தமிழினத்தின் பலம்மிக்க கருவியாக, கரும்புலிகள் என்னும் வடிவத்தை தேசியத்தலைவர் அவர்கள் தேர்ந்தெடுத்தார். குறைந்த இழப்போடு, எதிரிக்கு உச்சப் பேரிழப்பைக் கொடுக்கக்கூடிய பொறிமுறையாக அதை தேசியத்தலைவர் அவர்கள் எண்ணினார்.

தனது எண்ணத்தை தேசியத்தலைவர் அவர்கள் போராளிகளிடம் முன்வைத்தபோது, இந்தத்தாக்குதலை நானே செய்கிறேன் என வல்லிபுரம் வசந்தன் என்கின்ற போராளி மில்லர் தானாகவே முன்வந்தான். மில்லர் வடமராட்சிப் பிரதேசத்திற் பிறந்து, அப்பிரதேசத்தை நன்கறிந்தவன். அதுமட்டுமன்றி, இராணுவம் குடிகொண்டிருந்த நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தின் மாணவனாகவும் இருந்தவன். எனவே இத்தாக்குதலை மில்லர் செய்வது மிகப்பொருத்தமானது என தேசியத்தலைவர் அவர்கள் தீர்மானித்தார்.

இதன்படி, நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர்மீது, 1987 யூலை 5 ஆம்நாள் நள்ளிரவு முதலாவது கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டியை இராணுவ முகாமுக்குள் செலுத்தி, தன்னை உயிர்வெடியாக்கி வெடிக்கச்செய்த மில்லர், தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் முதலாவது கரும்புலியாக, கரும்புலி கப்டன் மில்லராக நிலைபெறுற்றான்.

மில்லரின் ஒப்பற்ற இந்த ஈகம்தான், இறுமாப்போடு இருந்த, இலங்கையின் அன்றைய ஐனாதிபதி ஐயவர்த்தனவை இந்திய அரசிடம் மண்டியிடவைத்தது. இலங்கை அரசுக்கு முட்டுக்கொடுக்க வந்த இந்திய அமைதிப்படையினரையும் வென்ற வரலாறு எமக்குரியது. எமது விடுதலைப் போராட்டப் பயணிப்பில் நிகழ்ந்த அனைத்து திருப்புமுனைகளுக்கும் பின்னால் வெளித்தெரியாவேர்களாக பல கரியவீரர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

1987 யூலை 5 ஆம்நாள் ஒலித்த அந்தப்பெருவெடியோசை வடமராட்சிப்பிரதேசத்தை மட்டுமல்ல, தமிழினத்தை முற்றாக அழித்தொழித்துவிட நினைத்த ஐயவர்த்தனவின் நெஞ்சையும் அதிரச் செய்தது.

அன்று கரும்புலி கப்டன் மில்லர் தலைவனின் நெஞ்சுக்கூட்டிற்குள்ளிருந்து அக்கினிக்குஞ்சாக புறப்பட்டு, தன்னுயிரை வெடியாக்கி வீரவரலாற்றைப் படைத்தான். அவன் வாழ்வை வெறுத்துப் போகவில்லை, தன் இனத்தினமீது கவிந்த இருளை எரிக்கவே கரியநெருப்பாகினான். அன்று அவன் தாங்கிச்சென்ற வடிவத்தை, அவனைத்தொடர்ந்து, எண்ணற்ற கரும்புலிகள் ஆண்களும் பெண்களுமாய் தரையிலும் கடலிலும் வான்மூலமும் நடத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தார்கள்.

மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பமாகியது, என்றுமே உலகம் கண்டிராத எண்ணிப்பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமழீழத்தில் உருவாகியது| என தலைவர் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். தமிழினத்தின் தாயகமண் மீட்புப்போராட்ட முன்நகர்விலே, தடைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டபோதெல்லாம் தங்கள் உயிர்களை வெடியாக்கி, தடைகளைத் தகர்த்தெறிந்து தலைவனுக்கு தோள்கொடுத்து நின்றவர்கள் கரும்புலிகள்.

தாயகப்பகுதிகளில் மட்டுமல்லாது தாயகம்தாண்டி எதிரிகளின் குகைகளுக்குள்ளும் நுழைந்து வரலாறான வரலாறுகள் இவர்கள். ஆணென்றும் பெண்ணென்றும் நிலவிய பேதங்கள் கடந்து, பெருவரலாறானவர்கள் இவர்கள். எம்மினம் உயிர் வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, படுகொலைசெய்யப்படுவதை கண்டு ஆற்றாமலே இவர்கள் பெருந்தழலாய் புறப்பட்டார்கள். இவர்களில் சமுகத்தின் பழைமைவாத கருத்துநிலைகளை உடைத்தெறிந்து கடலேறி கரியவடிவெடுத்து வரலாறான பெண்களும் அடங்குவர்.

தலைவனின் கனவைச்சுமந்தபடி, கரிய இருளிலும், பேரலைகள் புரண்டடிக்கும் கடலிலும், எதிரி சுட்டுவீழ்த்தலாம் எனத்தெரிந்த வான்பரப்பிலும், எல்லாவற்றையும் தாண்டி பிரளயத்தை நிகழ்த்த துடிக்கும் கருங்காற்றாய் எதிரிகளின் நடுவிலும் உயிர்வெடியாகச் சென்று, தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தவர்கள் இவர்கள்.

வெல்லப்பட முடியாதது என எதிரிப்படைகள் இறுமாந்திருந்த எத்தனையோ படைத்தளங்களை வென்று, வெற்றிமுரசறைவதற்கு அத்திவராமிட்டவர்கள் இந்த நெருப்பு மனிதர்கள். எமது போராட்டத்தை வளர்ச்சியுறவிடாது, பயணப்பாதையில் பெருந்தடைகளாக, கால்களுக்குமுன் கருங்கல்லாகக் கிடந்த பல தடைகளைத் தம்முயிர்கொண்டு தகர்த்து, விடுதலைப் பயணத்தை முன்நகர்த்திய உன்னதங்கள் இவர்கள். தற்புகழுக்காகவோ அன்றி தன்னலத்துக்காகவோ எரிமலையாகவில்லை இவர்கள். பிறந்து வாழ்ந்து மரணிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஈற்றில் கிடைப்பது ஆறடிநிலம். அதைக்கூட ஒறுத்து, அடுத்த தலைமுறைக்காய் உயிர்கொடுத்தவர்கள் இவர்கள். எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டாய் முதற் புள்ளியிட்டவன் கரும்புலி கப்டன் மில்லர்.

தன்னுடைய தாயகத்தில் தான்பிறந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, கும்மாளமிட்டுச்சிரித்த எதிரிகளை மில்லரால் பார்த்திருக்க முடியவில்லை. தான் படித்த பாடசாலையை எதிரிகள் கைப்பற்றி, அங்கிருந்து தன்தாயகத்தை முழுவதுமாக அழிக்கத் திட்டமிடுவதை மில்லரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவனுக்குள் அக்கினிப்பிளம்பு உருக்கொண்டது.

சாவுக்கு நாள் குறித்துவிட்டு, பெற்றெடுத்த தாயுடனும், ஒன்றாய் நின்ற தோழர்களுடனும், ஊட்டி உயிராய் அணைத்த மக்களுடனும் கூட எதுவும் தெரியப்படுத்தாமல், தலைவனுடன் மட்டுமே உணவுண்டு, சிரித்தபடி விடைபெற்றுச் சென்றவர்கள் இவர்கள். தேசத்தின்மீதான பற்றுணர்வும், தம்மினத்தின்மீதான பற்றுறுதியும், ஆழமான கருணையுள்ளமும் கொண்ட இவர்கள், தமிழினத்தை அழிப்பவர்களின் மீது பெருநெருப்பாய் பாய்ந்தவர்கள்.

இவர்கள் யாரும் வாழமுடியாமலோ வாழ்வைவெறுத்தோ போராடப் புறப்பட்டவர்களல்லர். தங்களின் இனத்து மக்களை, உறவுகளை சிங்களப்பேரினவாதம் துரத்;தியடித்ததையும் துடிக்கத்துடிக்கப் படுகொலை செய்ததையும் பார்த்து, இந்த துன்பதுயரங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க தாமாகவே விடுதலைப் பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள். தம்மை கொடையாக்கி தம்மினத்தை வாழவைக்கத் துடித்தவர்கள். உலக அரங்கில் ஈழத்தமழிழினத்திற்கு ஓர் அடையாளம் நிலைத்திருப்பதற்கு இவர்கள் எல்லோரும் செய்திருக்கின்ற ஒப்பற்ற ஈகமே காரணமாயுள்ளது.

தம்முடைய விடுதலைக் கனவையும். உணர்வையும் தமக்குப்பின்னால் உள்ளவர்கள்; செயற்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கையோடு, கையசைத்து காற்றில் கரைந்தவர்கள். இவர்கள் செய்த ஒப்பற்ற உயிர்க்கொடை எதற்கானது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இவர்களால் நடத்தப்பட்ட குறிப்பிடக்கூடியளவு தாக்குதல்கள் அரசியலிலும், இராணுவநோக்கிலும், உத்திமுறையிலும் உரிமைகோரப்படாதவையாக உள்ளன. இதற்காக தம் முகத்தையும், முகவரியையும் மறைத்து செயற்பட்டவர்கள் இவர்கள். தங்களை ஒறுத்த இந்த நெருப்புமனிதர்களின் எழுச்சி, பல்வேறு அரசியற்பரிமாணங்களை உற்பவித்திருக்கின்றது. உள்ளே தெரிந்தவர்களாகவும், வெளியே தெரியாதவர்களாகவும் இவர்கள் தம்மை உருக்குலைத்து எழுதிய வரலாறு தூய்மையானது. தன்னலத்தையும், தாம் என்கின்ற ஆணவத்தையும் பதிக்கத்துடிக்கும் இன்றைய பொய்யான மனிதர்கள்பலரின் நடுவே, மெய்யாகவே தேசத்தின் விடிவுக்காக வெறுமனே கரியநிழலுருவக்களாக காலமெல்லாம் வாழ்பவர்கள் இவர்கள்.

எமது இனத்தின் மகிழ்வான , சுதந்திரமான, வளமான எதிர்கால வாழ்விற்விற்காக தங்களை நொடிப்பொழுதில் வெடியாக்கிய இவர்களின் வீரத்தையும், வரலாற்றையும் எமது தலைமுறைதாண்டி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கவேண்டிய கடப்பாடுடையவர்கள் நாங்கள். உலகின் மூலைமுடுக்கெங்கும் பரந்துவாழும் ஒவ்வொரு தமிழனும் தனது குழந்தைக்கு, தனது குழந்தையின் குழந்தைக்கு சுதந்திரமாகவாழ ஒரு தாய்நாடு அவசியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். எமது அடுத்த தலைமுறையினர் கைகளில் கைகளிலும் மனங்களிலும் அடிமை விலங்கற்று சுதந்திரமாய் வாழவேண்டும். இதற்காகவே இன்றைய நாளுக்குரியவர்கள் தம்முயிரை வெடியாக்கி, தனி வரலாறாகினார்கள். இவர்களுக்கு ஒருபோதும் மரணமில்லை. இதனால்தான் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள், ‘ இலட்சியவீரர்கள் இறப்பதில்லை’ என மொழிந்திருக்கின்றார்.

தம்மைத் தற்கொடையாக்குவதற்கு முன், இவர்கள் பெற்றுக்கொண்ட மிகக்கடினமான பயிற்சிகள் மெய்சிலிர்க்கவும் மேனிநடுங்கவும் செய்பவை. தம்மைவருத்தி அனைத்து பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்து, கையசைத்தபடியே இருளிற் கரைந்து எம் ஒளியானவர்கள் இவர்கள்.

சின்னஞ்சிறிய முரண்பாடுகளால் மனமுறிவுகளுற்று, எமது இனம் தனித்தனியாக சிதறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தம்மைவிட தம்தாய்நாடு பெரிதென்றெண்ணிய இந்தவீரப்பிள்ளைகளின் உயரிய எண்ணத்தை மனங்கொள்ள வேண்டும். ஒரு சுடரைஏற்றுவதன் மூலம் இவர்களை அஞ்சலிக்கலாம், ஆனால் இவர்களின் இலட்சியக்கனவை இதயத்தில் சுமந்து தொடர்ந்து அந்த இலட்சியத்துக்காகவே தொடர்ந்து பயணிப்பது தான் இவர்களுக்கான கைமாறாக அமையும்.

திறந்தவெளிச் சிறையாக காட்சிதரும் எமது தாயத்தின் இன்றைய நிலையை தமிழினமோ உலகமோ உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்திகளை பேரினவாத அரசு கைக்கொண்டுவருகிறது. எமது இளையதலைமுறையை பண்பாட்டு சீரழிவுகளுக்குள் சிக்கவைக்கின்றது. ஒருபுறம் , பல்வேறு திசைகளிலும் தமிழ் இளையோரின் கவனம் சிதறடிக்கப்பட்டு வருகின்றது. மறுபுறம் தமிழ்மக்களின் தாயகப்பகுதிகள் சிங்கள மயப்படுத்தப்பட்டுவருகின்றன.

பூமிப்பந்திலே நாம் மிகச்சிறிய தேசமாக இருந்தாலும், மிகப்பெரும் வலிமைவாய்ந்த சக்திமிக்க இனமாக உள்ளோம் என தேசியத்தலைவர் குறிப்பிட்டிருப்பதை மனங்கொள்வோம். தமிழர்கள் என்கின்ற ஒற்றுமையின்மூலமாக இந்த நெருப்புமனிதர்களினதும், மற்றும் மாவீரர்களதும் கனவிற்காக உழைப்போம். இதன்மூலம் எமதுமண்ணின் விடுதலையை விரைவாக்கி எமது அடுத்த தலைமுறையினரை வாழவைப்போம்.

-சிவசக்தி-

ஜூலை 6, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவரலாறு | , , , , , | எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் !

உயிராயுதம்என்றொன்று
உலகினில்உண்டென்று
உயிர்விலைகொடுத்த
உத்தமர்கள்கரும்புலிகள்…..

உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய்
கருகிப்போனவர்கள்கரும்புலிகள்
தண்ணிலவும்செங்கதிரும்என்றும்
தன்னகத்தேகொண்டவர்கள்கரும்புலிகள்…….

உக்கிரயுத்தவடிவை
உலகிற்குகாட்டியமறவர்
மரணத்தின்தேதிதன்னை
மகிழ்வோடுதமதாக்கியதீரர்கரும்புலிகள்………

தன்னினத்தின்காப்புக்கவசமாய்
தமை ஈகம்செய்து
நூற்றாண்டுகடந்தும்என்றும்
மாற்றானுக்குபுத்திபுகட்டுபவர்கரும்புலிகள்…….

எத்தடைஎவ்வழிவரினும்
அத்தடைஅவ்வழிநீக்கி
சாவுக்கேபயம்காட்டிய
சரித்திரநாயகர்கள்கரும்புலிகள்………

கண்கள்வலிக்கவழியனுப்பியவரிடம்
கலங்காநெஞ்சோடுவிடைபெற்றவர்
ஆறடிமண்ணில்அடங்கா
அனல்பூத்தநெருப்பானவர்கரும்புலிகள்……..

காற்றோடுகலந்தவர்ஈகம்
நேற்றுவரைவிஞ்சஒருவரில்லை
புதியதொருநாளில்நாளை
புத்துயிர்பெற்றுமீண்டும்……
விதைக்குள்முளையாய்இருந்து
விருட்சமாய்விழுதுகள்தாங்கி
அவன்நிகர்கொண்டவர்தாமாய்
அவனியில்அவதரிப்பார்எமக்காய்…….

நன்றி

திருமதி சுதர்சினி நேசதுரை.
—-

உயிர்வாழும் ஈகங்கள்….

இருவிழியில் தமிழீழக் கனவேந்தி நடந்தவர்கள்
கருவேங்கையாகும் துணிவோடு நிமிர்ந்தவர்கள்
கடினமான தேர்வு யாவும் மகிழ்வுடனே முடித்து
காத்திருப்பர் சாகும் தேதிக்காய் நாட்குறித்து
கரிகாலன் விழியசைக்கும் திசை நோக்கி வெடியோடு
காடு மலை கடலெனினும் இவர் பயணம் தொடர்ந்திடும்

பொங்கும் அலை நடுவே கடற்கலங்கள் தகர்த்து
உப்புநீரில் உதிர்ந்து போன உத்தமர்கள் பலருண்டு
சீறிவரும் சிங்களத்தின் படை நடுவே உட்புகுந்து
பகையழித்த நிறைவோடு தரைக்கரும்புலிகளாகிடுவர்
வான்வழியில் ஏறி வந்து எம்மினத்தை கொன்றவரை
தேடிப்போய் கதை முடித்தார் வான் கரும்புலிகளாகி

உயிர் வாழும் வரை வெளியில் தெரியாத அற்புதங்கள்
விடிகாலைப் புலர்வோடு வெளியில் வரும் வதனங்கள்
வெற்றிச்செய்திகளை மண்ணுக்காய்த் தந்துவிட்டு
சிரித்த முகங்களோடு உருவப்படமாகிடுவார்
அன்றலர்ந்த மலர்களெல்லாம் மாலைகளாய் கோர்த்து
உங்களுக்காய்க் காத்திருப்பர் தேசத்து மக்களெல்லாம்
வடியும் கண்ணீரால் விடைகள் தந்திடவே
நடுகல் நாயகராய் உறங்கிடுவீர் பணிமுடித்து
மண்ணில் புதைந்திருக்கும் வேரின் ஆழம்போல்
வெளியில் தெரியாது இவர் உணர்வுகளின் தாகம்

போர்மேகம் கருக்கொண்டு எம்மினத்தைச் சூழ்ந்த போது
பெருந்தலைவர் உயிர்காக்க தம்முடலில் வெடிபொருத்தி
இறுதிக்கணம்வரையும் மாறாக்கொள்கையுடன்
தமிழீழமுரைத்து உயிர்க்கொடையீந்தார் கரும்புலிகள்
முகமும் முகவரியும் வெளிவரா உயிராயுதங்களாய்
பெற்றவர்கள் உற்றவர்கள் தேடலோடு காத்திருக்க
இன்னுமின்னும் எத்தனையோ அநாமதேயக்கரும்புலிகள்
அறிந்திடாத, அழிந்திடாத வரலாறாய் வாழ்ந்திடுவர் ….…!

விஜிதா ராஜ்குமார்

—-

காவியத்தில் உறைந்தவர்கள்…

கருமை என்பது நிறம் அல்ல
காருண்யம் நிறை மனதாம்
உரிமை என்பதை தேசமதில்
உணர்வோடு வைத்த உத்தமர்
உலகாளும் வல்லமை உளத்தில்
உயர்வாகிய நெறி கொடையில்
வரலாறு வியக்கும் நடையில்
வாழ்ந்த மாதவர் சோதரர் ஆனவர்…

கருமை என்பது வானத்தில்
கலைந்து போகும் மேகத்தில்
மழையாகிப் பொழியும் வீரத்தில்
மண் மீது பதித்த பாசத்தில்
நீறு பூத்த நெருப்பாகி எங்கும்
நீக்கமற நிறைந்த வித்தகர்
காற்றோடும் கனலோடும் கலந்து
கண்ணீரில் உறைந்திட்ட புனிதர்…

நாளும் கோளும் குறித்த பின்னர்
நீளும் அந்தப் பொழுதுக்காய்
நீக்கப் போகும் உயிர் காத்து
நிம்மதியுறும் நேசர் இவராம்
நாளும் பொழுதும் தேசத்தாய்
நலனுக்காய் நலம் வாழ்ந்த தூயவர்
நீரோடு கரைந்து நிலம் மீது தவழ்ந்து
அலையோடு எழுந்தாடி சாதித்தவர்…

ஆண்டுகள் முப்பத்தி யிரண்டு
மாண்டு போனதென்ன மில்லரே
நின் நீண்ட கனவெல்லாம் நம்மோடு
நித்தம் கதை பேசி கடப்பதேன்
வித்தாகி விழுதாகி முளைத்திட
வித்துடலும் இல்லாது போனதென்ன
வெடியோடு உறவாடி வெந்தீரே
வெல்லும் ஈழம் மீட்டிடவே நீவிர்…

வானத்து நிலவும் வாசல் வரும்
வாகையர் வீரத்தை சாற்றி நிற்கும்
பெண்ணாகி ஆணாகி வீரமொடு
எண்ணற்று போனவரே எம்மவரே
கண்ணாகி தேசத்தின் ஒளிகாணவே
காலத்தால் அழியாத புகழ் சூடி
கலைந்து போகா இலட்சியம் ஏந்திய
காவியரே கரும்புலி யானவரே …

பெண்மையின் உள்ளம் மென்மையாம்
மேன்மைத் தமிழுக்காய் வன்மையாய்
தொன்மை வீரம் உமக்குள் சுரக்கும்
அன்னை வடிவே ஆதியாகி சூழுமிந்த
முன்னை விதி மாற்ற குழலேந்தி
குண்டுகளாய் வெடித்தீரே கோதையரே
கண்டோம் கரைந்தோம் மகளிர் படையில்
கொட்டிய தீப்பொறிகளும் பொசுக்காத
கோபக்கனலே நீவிர் அன்றோ இன்னும்
தாபம் கொண்ட தேசத் தாய்க்கு
சமர்ப்பணமானவரே உறுதிஉரைத்தோம்
உம் தியாகங்கள் வீணாவதில்லை
விடியல் ஒன்று நம் சொந்தம் ஆகும்…

யூலை ஐந்தில் உமக்காய் சுடர் ஏந்தி
சுவாலை என்றே எமக்குள் அசையும்
சவாலை ஏற்று வழி தொடர்வோம்
உயிர்க்கும் ஒரு நாள் எங்கள் தேசம்
உங்கள் பெயரை நிதமும் உரைக்கும்
கல்லறையும் வேண்டா கனவான்களே
நெஞ்சறை புதைத்தோம் உங்கள் கனவை
அஞ்சுதல் அழித்த அரங்கப் பெருமானாய்
எஞ்சிய ஒற்றைத் தமிழன் உள்ள வரை
ஒன்றான இலக்கு வென்றாடும் நாளை…

சிவதர்சினி ராகவன்

ஜூலை 4, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம், கரும்புலிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , , | காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்!

தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே …..

தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார்.

1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய் எம் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன. சொந்த மண்ணிலே வாழ முடியாது மக்கள் ஏதிலிகளாய் பெரும் அவலங்களை சந்தித்தனர்.

இந்த நேரத்திலே, வடமராட்சி மண்ணின் சில பகுதிகள் அரச படைகளால் கைப்பற்றபட்டதோடு, வெற்றி மமதையில் இருந்து கொண்டு மீண்டும் ஒரு பட நடவடிக்கைக்கு தம்மை தயாராக்கினர் சிறிலங்கா படைகள்.

இந்த நிலையிலே,அரச படைகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் எமது மண்ணை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் விடுதலைப்புலிகளிடம் இருந்தது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் சிறிலங்காப் படைகளால் நிரம்பி வழிந்தது. எந்த நேரத்திலும் இன அழிப்புக்கான அடுத்த கட்ட படை நடவடிக்கை ஆரம்பமாகி விடும்.

இப்படியான ஒரு சூழலில் தான் ஒரு மனிதனால் தன்னுடைய நாட்டுக்காகத் தன்னுடைய மக்களுக்காகச் செய்யக்கூடிய அதி உயர் ஈகமாக கொடையாக தன்னுடைய உயிரை ஆயுதமாக்கி மெய்சிலிர்க்க வைக்கும் ஈக வரலாற்றின் முதல் அத்தியாயத்தை தொடக்கி வைத்தான் கரும்புலி கப்டன் மில்லர். அன்று தொடங்கிய ஈக வரலாறு பின்னாளில் விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரு வெற்றிகளுக்கெல்லாம் திறவுகோலாய் அமைந்தது.

எமது போராட்டம் சந்தித்த பெரும் நெருக்கடிகளில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தேசத்தின் புயல்களாய் வீசிகடல்தனில் காவியமாகி ,காற்றிலே ஏறி விண்ணையும் சாடி, ஊர் பேர் தெரியாத நிழல் கரும்புலிகளாய் மாறி உயிர் கொடைகளை அள்ளித் தந்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெஞ்சிருத்திக் கொள்ளும் திருநாள் இன்று.

உண்மையிலே பார்ப்பவர்களுக்கு நெருப்பு மனிதராய் தெரியும். இந்தக் கறுப்பு மனிதருக்குள் இருக்கும் மென்மையும் ,ஈரமும் வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லி விட முடியாதவை.

“வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்”

யாரிவர்கள்…………விண்ணில் இருந்து குதித்து வந்த விசித்திர மனிதரல்ல…..எம்மைப் போலவே இரத்தமும் சதையுமாய் ஈழத் தாய்குலத்தின் மடியில் பிறந்து வளர்ந்த சரித்திரங்கள். அவர்களுக்கும் அம்மா,அப்பா ,உடன் பிறந்தோர், சொந்தம், சுற்றம் என பந்தங்கள் பல இருந்தன. துன்பங்கள் தெரியாத சுகமான வாழ்வு இருந்தது. பள்ளிப் படிப்பும், நண்பர் கூட்டமும் இருந்தன. இளமைக்கால வண்ணக் கனவுகள் இருந்தன. ஏன் ஒரு சிலருக்குள் அழகான காதல் கூட இருந்தது.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களையும் ,தேசத்தலைவனையும் அவர்கள் நேசித்தார்கள். தமிழீழ மண்ணின் விடுதலையைத் தம் இலட்சியமாக கொண்டார்கள். அதனால் தான் கரும்புலிகள் என்ற உயரிய ,உன்னதமான இலட்சியக் கனவை அவர்களால் நிறைவேற்ற முடிந்தது.

இந்த இலட்சியக்கனவை நிறைவேற்றுவதற்காக எத்தனை நாள் காத்திருப்பு ……வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கடின பயிற்சிகள்….ஓய்வு உறக்கமின்றிப் போன எத்தனையோ இரவுகள் ….பசிகூட மறந்து போன பொழுதுகள்,தம் இலக்கை நோக்கிச் செல்வதற்குள் எத்தனையோ தடைகள் ,அத்தனையும் ,கடந்து பகை அழித்து வென்றவர்கள் இவர்கள்.

இந்த இடத்தில ஒரு சிறிய சம்பவம் ஒன்றைப் பதிவாக்க நினைக்கிறேன் . இன்று தன்னுடைய ஆளுமையாலும், போரியல் நுட்பத்தாலும், மனித நேயத்தாலும்,சுய ஒழுக்கத்தாலும் உலகமே வியந்து பார்க்கும் எம் தலைவர் அவர்கள்,தாக்குதலுக்காகப் புறப்படும் கரும்புலிகளிடம் ஒரேயொரு விடயத்தை மட்டும் மிகவும் வலியுறுத்தி சொல்லுவார் .

“ நீங்கள் தேடிச் செல்லும் இலக்கு எதிரிகள் மட்டும் தான். எதிரி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மக்களும் எங்களுடைய நேசிப்புக்கு உரியவர்கள். அவர்களுக்கு எந்தவொரு சிறு தீங்கோ இழப்போ ஏற்படக் கூடாது. இந்த விடயத்தில் அனைவருமே மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.”

எங்கள் தேசத்தலைவனின் அந்த வாக்கு இலக்கைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு கரும்புலிக்குள்ளும் இருந்தது.

அப்படித்தான் அவனுக்கான இலக்கு பகை வாழும் இடத்தில இருந்தது. எத்தனையோ நாள் காத்திருப்பு. எத்தனையோ பல முயற்சியின் பின் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம். எதிரியை மிக நெருங்கி விட்டான். அந்த நேரம் சிறுவர்கள் விளையாடுவதற்காக அந்த இடத்துக்குள் வந்துவிட்டார்கள். அவன் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடும்.

ஒரு நொடி அவனது மனதில் தலைவரின் அறிவுறுத்தல் நினைவுக்கு வருகின்றது. அந்த கணமே அவன் பின் வாங்குகிறான். ஆனால் எதிரிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவன் சுற்றி வளைக்கப்படப் போகின்றான். எதிரியிடம் பிடிபடக் கூடாது. அதே நேரம் பொதுமக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. உடனே மக்கள் நட மாட்டம் இல்லாத பகுதியை நோக்கி அவன் ஓடுகின்றான். மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு தன் உடலில் கட்டிய வெடிமருந்தை வெடிக்க வைத்து சாவை அணைத்துக் கொள்கின்றான்.

உண்மையிலே அவனது சாவு என்பது ஒரு சம்பவமாகி விடவில்லை . அவன் தன் உயிரை விட எதிரி இனத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களையும் எவ்வளவு நேசித்தான் என்பதன் அடையாளம் தான் அவனுடைய சாவு. இது முகம் மறைந்த கரும்புலி வீரன் ஒருவனின் வரலாறு.

இது ஒரு சம்பவம் ஆனால் இப்படி எத்தனையோ வெற்றிச் சரித்திரங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

எதிரியின் குகைக்குள்ளே இருந்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ,பகையோடு உறவாடி, சாதுரியமாய் தமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி, வெளியே தன் முகம் மறைத்து ,உள்ளே தன் இலக்கழித்து வெற்றிகளைத் தந்து விட்டு நினைவுகள் கல் கூட இன்றி, ஏன்ஆணா, பெண்ணா என்று கூட தெரியாது வீரச் சாவுகளின் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிழல் கருவேங்கைகளின் ஈகத்தை எப்படி எழுத வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்.

அழகான காதல்

அவனுக்குள் அழகான காதல் இருந்தது. தன் காதலை எப்படியாவது அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று பல தடவை அவன் முயற்சி எடுத்தான்.அது வாழ்வதற்கான காதல் அல்ல .இலட்சியத்தால் ஒன்று பட்டு வரலாறுகளைப் பதிவதற்கான இலட்சியக் காதல்.

அவன் யார் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் தன்னை விரும்புகிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆனால் ஒரு போதும் அவனது காதலை அவள் ஏற்க வில்லை.

அவனுக்கான இலக்கு கிடைத்து விட்டது் அவன் புறப் படப் போகின்றான். இறுதி விடை பெறுவதற்காக அவளிடம் வருகின்றான். அப்போதும் அவனைச் சந்திக்க அவள் மறுத்து விடுகின்றாள் . அவன் வழமையான தன் புன்னகையோடே புறப்பட்டு விட்டான். அன்று இரவே சிறிலங்கா கடற்படையின் கப்பல் தகர்த்து கடலிலே காவியம் படைக்கின்றான். அவனும் கூடவே 3 தோழ தோழியருமாக

தொலைத்தொடர்பு சாதனம் காற்றலையில் அவனது வீரச்சாவு செய்தியை தாங்கி வருகின்றது. அவள் விழிகளில் நீர் கோர்த்தது. தோழிகள் அவளிடம் கேட்கின்றனர் . “ அவன் உன்னிடம் பேச நினைத்த போதெல்லாம் நீ பேச வில்லை, இப்போது எதற்காகக் கவலைப்படுகின்றாய்” என அதற்கு அவள் சொல்கிறாள் “ நான் காதலிக்கிறேன் என்ற அந்த ஒற்றைச் சொல் ,அவரது இலக்கு நோக்கிய பயணத்தில் ஒரு சிறிய தடுமாற்றத்தைக் கூட ஏற்படுத்தி விடக் கூடாது. சில வேளை இலக்குச் சரியாக அமையாமல் அவர் திரும்பி வந்தால் கூட என்ர மனது குற்ற உணர்வில் துடித்துப் போய்விடும். எப்போதும் அவர் தன்னுடைய இலட்சியத்தில் வெற்றி அடையவேண்டும் இது தான் என்னுடைய ஆசை. உண்மையிலே நானும் அவரை மனதார நேசிக்கின்றேன்.அவரை மட்டுமல்ல ,அவரது இலட்சியங்களையும் சேர்த்து வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல செயலிலும் அவள் நிரூபித்துக் காட்டினாள்.

விளையாட்டுப் பிள்ளை

அவன் ஒரு குழப்படிக்காரன் . ஒரு இடத்தில இரு என்றால் அது அவனால் முடியாத காரியம். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்ததனாலோ என்னவோ அவனுக்கு அளவுக்கு அதிகமான செல்லம்.

அம்மாவுடன் சேர்ந்து குடும்பச்சுமையை மூத்தவர்கள் சுமக்க வீட்டில் நிற்கும் இவனோ ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பிரச்சனைகளை அம்மாவின் தலையில் ஏற்றி வைப்பான். அந்தளவுக்கு குறும்புக்காரன் . வேலை முடித்து களைத்து வரும் அம்மா ஏக்கத்தோடே வீட்டுக்கு வருவார். இன்றைக்கு என்ன செய்து வைத்திருக்கின்றானோ என்ற பதபதப்பு அம்மாவுக்குள் எப்போதும் இருக்கும்.

ஒரு நாளைக்கு விழுந்து கைய முறிச்சிருப்பான் இல்ல காலில் அடிபட்டிருப்பான் ,இல்ல எதோ வெட்ட எடுத்த கத்தி கைய பதம் பார்த்திருக்கும். அதுகும் இல்லை என்றால் அயல் வீட்டுச் சிறுவர்களோடு அடிபட்டு பிரச்சனையை இழுத்து வைத்திருப்பான் . அப்படியொரு விளையாட்டுப் பிள்ளை அவன்.

ஆனால் இப்போது அவன் ஒரு கரும்புலி வீரன் , அதுகும் நீரடி நீச்சல் கரும்புலி. மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோல்களில் ஒருவனாக அவன்.

சாவுக்கு நாள் குறித்த அவர்கள் பயணம் தொடங்குகின்றது. இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருக்க, நீரின் அடியால் வெடிமருந்துகளைச் சுமந்த படி அவர்கள் ……..

திருமலைத் துறை முகம் பலத்த பாதுகாப்பு நிறைந்த கோட்டையாக இறுமாப்புடன் இருந்தது.

அந்தக் கோட்டைக்குள் அலையோடு அலையாக எதிரி விழிப்படையா வண்ணம் மெல்ல மெல்ல நகர்ந்து , எதிரியின் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து உள்நுழைந்து ,தமக்கான இலக்கைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள்.

இன்னும் 30 நிமிடங்கள் மிக நிதானமாக கப்பலில் குண்டினைப் பொருத்தி எதிரி விழிப்படையா வண்ணம் மிக அமைதியாகத் தம் கைகளால் அதைத் தாங்கியபடி அவர்கள் நேரங்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. தம் சாவுக்கான ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணிய படி தேசத்தலைவனும், தாம் நேசித்த மக்களும் , மலரப் போகும் தமிழீழத் தேசமும் மனக் கண்ணில் நிலைத்து நிற்க ,ஆடாமல் ,அசையாமல் ,விலகாமல் குண்டை அணைத்த படி அவன்.அந்தக் கடைசி மணித்துளி ……..” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” திருமலைத்துறைமுகம் அதிர்கின்றது. கப்பல் தகர்கிறது. ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்கத் தெரியாத அந்தத் தீராத விளையாட்டுப்பிள்ளை நம் தேச விடுதலைக்காக போரியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோலாக வரலாற்றைப் படைத்தான் கடற்கரும்புலி மேஜர் கதிரவன்.

அக்கினிக் குஞ்சுகள்

அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஆண், பெண் கரும்புலிகள் தயாராகின்றனர். இலக்கை அழிப்பதற்கான ஓயாத பயிற்சிகள் எல்லாம் நிறைவடைந்து விட்டன. தேசத்தின் புயல்கள் புறப்படுவதற்கான பொழுது நெருங்கி விட்டது.

தாய்க் குருவியோடு சேய்க்குருவிகள் மகிழ்ந்திருக்கும் அந்த அழகான தருணத்துக்கான காத்திருப்பு கறுப்புவரிச் சீருடைக்குள் புன்னகை வீசிய படி குதூகலத்துடன் அந்த உயிராயுதங்கள் அணிவகுத்து நின்றார்கள் . எங்கும் அமைதி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றது. தலைவர் அவர்கள் உள்ளே நுழைகின்றார்.

“ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அதை ஆங்கொரு காட்டிலோர்

பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு……”

என்ற பாரதியாரின் கவிதை வரிகளைச் சொல்லிக் கொள்கிறார்.

“உண்மையிலே எங்கட விடுதலைப் போராட்டத்தில் நீங்களும் அப்படித்தான் . கரும்புலி என்கின்ற பொறி ,இன்று எங்கட மண்ணிலும் , புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் மக்களுடைய மனங்களில் பெரும் விடுதலை தீயை மூட்டியிருக்கின்றது. உலகம் எங்கும் எமது விடுதலைப் போராட்டத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது”

என்ற தலைவர் அவர்களின் எண்ணத்தை தாங்கியவர்களாய், இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் , எமக்காக வாழ்ந்து தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த இந்தக் கரும்புலிகள் நினைவு சுமந்த நாளில் , அவர்களின் கனவாகிய தாயகக் கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற தார்மீகப் பொறுப்புணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போமாக.

அ.அபிராமி –

ஜூலை 4, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், களங்கள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , , | வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது