அழியாச்சுடர்கள்

ஈழ தேசத்தின் இளவரசியே !

-இளவரசி-

பாருக்கு எம்மினத்தை
பறைசாற்றிய படைவீரன்
வேலுப்பிள்ளை மகனின்
குருதிப் பகிர்வே – எம்
குலக்கொழுந்தே !!!!

யாருக்கும் அஞ்சாமல்
கரிகாலன் கைபிடித்து
போருக்குள் வாழ்வமைத்த
புங்கையின் பேரழகி
பெத்துப்போட்ட பொக்கிஷமே !!!

அகிலமே வியந்து போற்றிய
அப்பனுக்கு பிள்ளையாகினும்
அடுத்தவீட்டுக் குழந்தையைப் போல்
ஆடி, ஓட முடிந்ததா உன்னால்
அமைதித்தூக்கம் கிடைத்ததா உனக்கு ??

குளிரூட்டியின் சுகக்காற்றும்
சொகுசான படுக்கைகளும்
எம்மில் பலருக்குத் தந்துவிட்டு
குண்டுச்சத்தமும்,கொசுக்கடியும்
எளிமை வாழ்க்கையும் ஏற்றவளே !!!

உங்கப்பன் நினைத்திருந்தால்
உலகில் எங்கேனும் ஒரு மூலையில்
உல்லாச வாழ்க்கை கொடுத்திருக்கலாம்
உனக்காக எல்லாமும் செய்திருக்கலாம்
செய்தானா, செய்ய நினைத்தானா ??

காட்டிலும், மேட்டிலும், கடற்கரையிலும்
இடம்பெயர்வுகளும், இன்னல்கள் கடப்பும்
சொல்லொணாத் துயரமும் சகித்தவளே
எம் இனத்தின் விடியலுக்காய் – உன்
சுகங்களெல்லாம் விட்டுக் கொடுத்தவளே !!!

எங்கே தாயே நீ ?
எங்கே உன் குடும்பம் ?
எப்போது சோறு இறங்கும் போதும்
என் ஆத்மா உங்களை நினைக்கும்
என்னடா வாழ்க்கையென்று நெஞ்சம் துடிக்கும்…

என் ஈழ தேசத்தின் “இளவரசியே”
என் இன விடுதலைக்காய் – உன்
குலம் சிதைந்தும், அடங்கவில்லையே
எம்மவர் நாடகங்களும் நடிப்பும்….
மன்னித்துக்கொள் தாயே !!!

உன் தந்தை,
உலகின் தன்னிகரற்ற தளபதி
தமிழனாய்ப் பிறந்தது தலைவிதி..!!

-ஐங்கரன்-

-அனாதியன் கவிதைக் களம்

Advertisements

ஏப்ரல் 9, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம் | , , | ஈழ தேசத்தின் இளவரசியே ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மகளீர் தின வாழ்த்துக்கள் !

பாரதியார் கண்ட
புதுமைப் பெண்கள்
நாங்கள் இல்லை :

பிரபாகரன் வளர்த்தெடுத்த
வேங்கைகளே நாங்கள் ”

அடுக்களை கிடந்தோம்
ஆயுதம் ஏந்தியே,
விடுதலை தீயைச் சுமந்தே
விரைந்திட வைத்தான் ”

பூமாலை உதிர்த்து
நஞ்சு மாலை சூடி
புயலாய் மாறிய எங்கள்
புனிதப் பெண்களுக்கு
இனிய மகளீர் தின நல்
வாழ்த்துக்கள் “”

-ஈழவன் தாசன்

மார்ச் 8, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம் | , , | மகளீர் தின வாழ்த்துக்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்

skytigers 2முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம்
முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான்
சொந்தமான வானூர்தியில் தமிழனும்
சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது
விந்தைதானடா. போரிடை ஆடும்மண்
விடியும் என்பதற்கான குறியுடன்
எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென
இறக்கைகட்டிப் பறந்த பறப்படா.

26.03.2007 திங்கட்கிழமை
ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள்.
நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம்.
நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள்
யாரிவர்கள் என்று அதிசயித்தன.
அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட
கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர்.

நாணற்புற்களும் தலைநிமிர்த்தி
மானத்தின் மகுடம் தரித்தன.
எம்மாலும் இயலுமெனக் காட்ட
இரவிலும் வான்புலிகள் நிகழ்த்திய கூத்தில்
உமக்கினிச் சாமத்திலும் உறக்கமில்லையென
பகைவர் காதிற் பாடிய நாள்.

கோட்பாடுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும்
அப்பாலான அசாத்திய அதிசயம்.
நேரிற்பார்த்த ஓரிருதமிழருக்குத் திவ்விய தரிசனம்.
இதுவரையான காலத்தில்
ஈழத்தமிழரில் இருவருக்கே
இறக்கை முளைத்திருந்தது.
அன்று இராவணனுக்கு
இன்று பிரபாகரனுக்கு.
இராவணனின் ‘புஷ்பகம்’
சீதையைத் தூக்கித் திரும்பியது.

பிரபாகரனின் ‘கற்பகம்’
கட்டுநாயக்காவைச் சுட்டுத் திரும்பியது.
முன்னது வால்மீகியின் கற்பனை
பின்னது வான்புலிகளின் அற்புதம்.
வன்னியிலிருந்து நீர்கொழும்புவரை பறத்தலென்பது
வல்லரசுக்குச் சுண்டங்காய்.
போரிடும் விடுதலைப் பொறிகளுக்கு
எல்லோருக்கும் எட்டாத இமயம்
எட்டாத உயரத்தைத் தொட்டனர் ஈழத்தமிழர்.

நிலத்தை வசமாக்கி
மு கடலை வசமாக்கி
வானத்தையும் வசமாக்கிய வல்லமையால்
ஈழத்தமிழரை எழுப்பம் தழுவியது.
வான்புலிகளின் பறத்தலென்பது
வெறும் வல்லமையை மட்டுமல்ல
ஈழத்தமிழர் அழுதகாலம் முடிந்ததென்ற
உரத்த குரலையுமே தூக்கிச்சென்றது கூடவே.
நான்கு தமிழரின் சிறகு விரிப்பில்
நாற்பது இலட்சம் ஈழத்தமிழரும் பறந்தனர்.

ஆச்சரியம் என்னவெனில்
அதிகமானோர் தூக்கத்திலிருந்தனர் அப்போது.
இது பிரகடனப்படுத்தாத யுத்தமென்பதால்
இப்போது தருமயுத்தமே நடக்கிறது.
இடைக்கிடை நகுல சகாதேவர் களம் புகினும்
இன்னும் அருச்சுனர்கள் காண்டீபம் தரிக்கவில்லை.
வீமர்கள் கதாயுதம் எடுக்கவில்லை.
எவராயினும்
கோத்தபாயாவை எழுதிவைக்கச் சொல்லுங்கள்.
சம்பூரைத் தோல்விக் கணக்கில் செலவுவைத்து
புலிகள் வெளியேறவில்லை.

வாகரையில் இருந்து புன்னகையில் அர்த்தம் சொல்லியே
புலிகள் அகன்றனர்.
வான்புலிகளின் பறத்தல் என்பது
புலிகள் அஸ்திரங்களைக் கையிலெடுத்ததற்கான அறிகுறி
கரும்புலிகள் காண்டீபம் தரித்ததற்கான சாட்சி
வெற்றியின் வரவு இனித்தான் வெளிச்சம்தரும்.
அன்றிரவு
வானில் அழகாய் நிலவிருக்க
என்றும் போல் காற்று இதமாய் வீசியது.
நள்ளிரவு
கட்டுநாயக்கா வான் பரப்பில்
புள்ளியென ஏதோ புகுந்து பெரிதாகி
வான் தளத்தில் தீபாவளியெனவே வெடிகொளுத்தி
மீண்டும் திரும்பி மிதந்தபடி போயிற்று.

ஈழத்தமிழன் இறக்கை கட்டி
முகிலினுக்குள்
வாழத்தொடங்கிய வரலாற்று நாளிதுதான்.
உலகத் திசையாவும் உதைபட்டு
அகதியென
நிலத்திற் புல்லாகி நின்ற தமிழினத்தோன்
வானத்தில் ஏறி
வரிசையெனப் பெருமகிழ்வில்
கானத்தைப் பாடிக் களித்தான்.

தமிழ்த் தலைவன்
ஈழத்தைப் பெறுவான் என்ற பெருநம்பிக்கை
காலத்தில் மீண்டும் கால்பரத்திக் கொண்டதுகாண்.
நாளாந்தம் வந்து நம்குடிமேற் குண்டெறிந்து
ஆளானதனைத்தும் அழித்தான்.
பள்ளிசென்ற
பூவைத் தொலைத்தான்.
புதுமனையைப் போட்டெரித்தான்.
சாவையெம் வாசலிலே சபையிருத்திச் சாப்பிட்டான்.
கோயிலழித்தான்.
குடியிருப்பைப் போட்டெரித்தான்.
வாயெடுத்து அழக்கூட வகையற்று
நமையழித்தான்.

காத்திருந்த தலைவன் கதைமுடிக்கத்
தேதிவைத்தான்.
சாக்குருவியெல்லாம் சாகவொரு நாட்குறித்தான்.
தாயின் முலையினிலே தமிழ்ப்பால் குடித்தவர்கள்
வாயிற்சிரிப்போடு வான்பறவை மீதமர்ந்தார்.
தலைவன் கையசைக்க
தமிழ்வீரம் மெய்சிலிர்க்க
முகிலைக் கிழித்தபடி மிதந்ததடா வானூர்தி.
முகிலேறிப் போன முதற் குருவி
நீர்கொழும்பின்
அயலேறிப் பகைவரது அஸ்திரங்கள் எரித்ததுகாண்.
மற்றக்குருவி மடியிருந்த குண்டுகளால்
கற்பனைக்கும் எட்டாத அற்புதங்கள் செய்ததுகாண்.
கொற்றம்நிறுவிவிட்டுக் கூடுவந்த குருவிரண்டும்

மற்றத்தரம் பறக்க மறுபடியும் காத்திருக்கு.
நிலம்மகிழ
அந்த நீலவான்தான் மகிழ
புலம்மகிழ
புலத்தில் போயிருக்கும் தமிழ்மகிழ
உலகம் முழுதும் உள்ள உறவுகளோ
வாழ்த்துரைக்க
ஈழவிடுதலைக்காய் எழுந்த பறப்பிதுதான்.
வாழும் காலத்தின் வரலாறு இதுவேதான்.
மானமேறி வாழ்தல் அவாவுறும்
மரபுளோய்! உன்வாசல் வரிந்திதோ
வானமேறி முகிலை உடுத்திடும்
வாழ்வுனக்கென ஆனது தெய்வமே!
காணநூறு கண்ணில்லையே நானதைக்
கைகளாற் தொடவில்லையே தமிழனே!
தான தானதை தோமெனத் துள்ளியே
தமிழனேற்றிய ஊர்தியைப் பாரடா.

கவியாக்கம்: வியாசன்

விடுதலைப் புலிகள் வைகாசி 2007 ஏட்டிலிருந்து…………

 

பிப்ரவரி 26, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம், வீரவரலாறு | , , , | முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

prabakaran birthday wishes 2015எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக

ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக!

“இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி

இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!

வெல்வதற்கே வந்த வேங்கை வீரரவர் வெல்வார்!

வினைமுடிக்கும் பேராற்றல் வள்ளுவத்தாற் பெற்றார்!

ஒல்லும்வாய் அவரறிவார் ஓர்நாளில் ஈழம்

உருவாக்கி ஒண்டமிழால் அரசாண்டு வாழ்வார்!

 

துன்புற்றுத் துடிதுடித்துத் தொல்லையுறும் தமிழர்

துயர்துடைக்க விலங்கொடிக்கத் துடித்தெழுந்து புலிகள்

வன்படையைக் கட்டமைத்தே வாகைசூடி வாழ்வார்!

மண்ணோடு கடலோடு வான்முழுதும் வெல்வார்!

இன்னலையே இன்பமென ஏற்றபுலித் தலைவன்

எல்லாளன் வாழ்நாளில் ஈழமிங்கு விளையும்!

இன்புறவே தமிழரினி இறையாண்மை பெறுவார்

ஈகஞ்செய் மாவீரர் இசைபோற்றி வருவார்!

 

முல்லைப்போர் முடிவல்ல மூடர்காள்! புலிகள்

முன்காலை எடுத்துவைத்து முன்னேறும் பொழுதில்

நில்லாது சிங்களர்நீர் நீள்முதுகு காட்டி

நிலைகுலைந்து நெடுமரமாய் வீழ்பொழுதில் சொல்வீர்!

“எல்லாளன் போலில்லை மாவீரர்” என்றே!

இறுதிப்போர் தமிழீழ வெற்றிப்போ ரென்றே!

சொல்லுமுல கெல்லாமும் சூழ்ந்ததற மென்றே!

தொல்லைதீர புலிமுடியை சூடுவது மன்றே!

 

அல்லவைதேய்ந் தறம்பெருகும்! அருள்மறையே சொல்லும்!

அமிழ்தனைய தமிழ்ப்பெண்டிர் அழகுமுழு தழிந்து

அல்லற்பட் டாற்றாது அழுதகண்ணீர் நெருப்பாய்

அருந்தமிழ்க்கு எதிர்நின்ற அறக்கொடிய ரழிக்கும்!

நல்லறத்தை நிலைநாட்ட ஞாலமுதற் றமிழே

நல்லரசன் எல்லாளன் நாற்படையை யெழுப்பி

வெல்லும்வாய் காட்டிபுலி வெற்றிபெற வைக்கும்

விறல்வே ந்தன் தமிழீழம் வெல்கயென சொல்லும்!

 

எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் கேட்பீர்!

எடுத்தவினை முடிக்காமல் இறந்துபட மாடடார்!

எல்லாளன் எழுங்காலம் ஈழமெழும் காலம்!

எதிரிகளின் எக்காள இசைமுடியுங் காலம்!

எல்லாளப் பெருங்சோழன் எழுகதிரா யெழுவான்

இனங்காக்க எதிரியினை ஈங்கவனே  அழிப்பான்!

எல்லாளன் புலிக்கொடியே ஈழமெங்கும் பறக்கும்!

இன்னலறு இனியதமிழ் ஈழமினிப்  பிறக்கும்!

 

எல்லாள ஈடில்லா   யெம்மிறையே வாழ்க!

என்றென்றும் தமிழன்னை ஏற்றமுற வாழ்க!

கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தே தோன்றி

கழகத்தால் வளர்தமிழைக் கைக்கொண்டோன் வாழ்க!

நல்லாண்மைத் திறத்தாலே நாடாண்டு வாழ்க!

நல்லாட்சி நன்றாற்ற நலமோடு வாழ்க!

பல்லாண்டு வாழ்க!தமிழ்ப் பண்போங்க என்றும்

படையோடு வலிவோடு பார்போற்ற வாழ்க!

 

திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

அகரமுதல இணையம்

திசெம்பர் 31, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம், வீரவரலாறு | , , , | எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பிரபாகரன் விடுதலையின் விலாசம்!

praba birthday wish 2015நகர மறுக்கிற நதியென

உறங்குகிற கடற்கரை –

வல்வெட்டித்துறை.

பேசும் அலைகளின்றி

பேராரவாரமின்றி

அமைதி காக்கிற

அதன் மூச்சுபேச்செல்லாம்

விடுதலைப் பெருமூச்சு.

 

அந்தக் கரையில்தான்

உயிரெழுத்தின் நீட்சியென

அவதரித்தான் அவன்!

அந்த ஆயுத எழுத்தின்

உக்கிரத்தால் தான்

அடங்கிக் கிடந்தது

வக்கிர இலங்கை!

 

பிரபாகரன் – என்பது

ஒரு மனிதனின் பெயரல்ல..

அது

விடுதலையின் விலாசம்!

 

எமது இனத்தின்

அறுபதாண்டுக் கால

அவல வரலாற்றில்

பிரபாகரனும்

பிரபாகரனின் தோழர்களும்

எழுதியது மட்டும்தான்

பவள வரலாறு.

 

கையில் ஏந்திய ஆயுதங்களுடன்

அவர்கள் மெய்யில் தாங்கிய

உயிராயுதம் ஒன்றும்

எதிரிப் படையை

உதிரிப் படையாக்கியது.

 

நச்சுக்குப்பி – என்கிற அவ்வாயுதம்

எம் விடுதலை வீரர்களின்

உயிர் மெய்யெழுத்து.

 

அவர்கள் கழுத்தில்

மாலையாய்த் தொங்கி

அலங்கரித்தன நச்சுக் குப்பிகள்…

சொந்தச் சனம் காக்கச்

சாகவும் தயாரென்று

பகிரங்கமாகப் பறைசாற்றின.

 

போருக்குப் போகும்போதும்

போரிடும்போதும்

எந்தெந்த மாலையை அணிவதென்கிற

இலக்கணத்தையே திருத்தி எழுதி

நச்சுக்குப்பி மாலை அணிந்தனர்

மாசற்ற அந்த மாவீரர்கள்.

 

தங்கப் பதக்கங்களும்

வெள்ளிப் பதக்கங்களும்

அவ் உயிர்ப் பதக்கங்களுக்கு

நிகரில்லை ஒருபோதும்…

நெஞ்சில் அவர்களை

நிறுத்திட அதுபோதும்!

 

மாவீரர்கள் அவர்கள்

அமைதியாய்த் தூங்கட்டும்…

ஈழம் என்கிற

அவர்கள் கனா தாங்கி,

எம்மால் இயலாதது

எவரால் இயலுமெனும்

அவர்கள் வினா தாங்கி,

அணைய மறுக்கிற

அக்கினிக் குஞ்சினைத்

தமிழினம் தாங்கட்டும்!

 

அழுவதற்காகவோ

தொழுவதற்காகவோ

எழுதவில்லை இதையும்…

வீரர்கள் கனவில்

விழுதுவிட்ட ஈழம்

எப்படி வீழுமென்று

கேட்கிறது இதயம்!

 

இனப்படுகொலைக்கான

இறுதி நீதி

ஈழமாய்த் தான் இருக்கும்…

வரலாறு தெரிவிக்கும்

வழிவழிச் செய்தி இது!

 

அந்த நீதியை

நிராகரிக்கும் பொருட்டே

அழுதுபுரண்டு

அடம்பிடிக்கிறது இலங்கை!

 

பௌத்தம் அங்கே

மதம் மட்டுமல்ல…

நல்லிணக்கத்தின்

எதிர்ப்பதம்!

 

மாவீரர்களுக்காக

மணிகள் ஒலிப்பதைத்

தடுத்து நிறுத்த

பிக்குகள் துடிக்கலாம்….

காற்றின் திக்கை

அவர்கள் தீர்மானிக்க முடியுமா?

 

வீரர்கள் நினைவில்

ஜொலிக்கப் போகிற

அகல் விளக்கனைத்தையும்

அணைத்திட இயலுமா?

 

உயிராயுதங்களுக்கு

அர்ப்பணிக்கவென்றே

கங்குல் நெருப்பென

காந்தள் மலர்கள்

கண்விழிப்பதைத்

தடை செய்ய முடியுமா?

 

வீதிகள் தோறும்

விளக்குகள் ஏற்றுவோம்…

உண்மை ஒளிரட்டும்

உலகம் முழுதும்!

ஓங்கி ஒலிக்கின்ற

மணிகளின் பேரொலியில்

கேளாச் செவியரும்

நம் குரல் கேட்கட்டும்!

 

சர்வதேச வீதி வழிதான்

தீர்ப்புகள் வரவேண்டும்..

என்றாலும்

நமக்கான நீதியை

நாம்தானே பெறவேண்டும்…!

 

சிங்கள வெறியரால் வெட்டப்பட்டு

கரும்புச் சக்கையுடன்

சேர்த்தெரிக்கப்பட்ட

இக்கினியாகலை

கரும்பாலைத் தொழிலாளர்

எத்தனை நூறு பேர்?

ஆண்டாண்டுகாலங்கள்

கடந்துவிட்டதால்,

அந்தச் சாம்பலில்

தடயத்தைத் தேடுதல்

இப்போது எளிதல்ல!

 

அறுபதாண்டாய்த் தமிழரைத் தாக்கி

டயரில் எரித்த

சிப்பாய்களையெல்லாம்

தேடிப்பிடித்துக் கூண்டிலேற்றுதல்

முழுமையாக சாத்தியமல்ல!

 

என்றாலும்

இலங்கை

கலங்குகிறதே ஏன்?

 

ஆறாண்டு முன்நடந்த

இனக்கொலைக்கு

கல்லம் மேக்ரேக்களும்

கண்கண்ட சாட்சிகளும்

இருப்பதைப் பார்த்துத்தான்

நடுங்குகிறது இலங்கை.

 

அறுபதாண்டு அநீதிக்கு

நீதி தேடக்

கிடைத்த வாய்ப்பை

நழுவ விடோமென்று

உறுதியேற்போம்…

கிருஷாந்திகள் தொடங்கி

இசைப்பிரியாக்கள் வரை

சிதைத்துச் சிதைத்துப்

புதைக்கப்பட்ட

எம் பிள்ளைகளின் பெயரால்

உறுதியேற்போம்…!

 

களம் மாறியிருப்பது

உண்மைதான்…

என்றாலும்

மாவீரர்கள் பதித்த

விடுதலையின்

தடம் மாறவில்லை!

 

இன்றைய நிலையில்

நமக்குத் தேவை

அவர்களது அர்ப்பணிப்பு…

அவர் தம் ஓர்மம்..!

சூரியனையே கீழிறக்கி

குளிர் காய இயலுமெனும்

அவர்களின் மனோதிடம்.

 

அவர்கள்

ஆனையிரவை இழந்த நொடியில்

அழுது புலம்பவில்லை…

ஆனையிரவை மீட்ட நொடியில்

துள்ளிக் குதிக்கவில்லை…

நெருப்பையும் ஜீரணித்தார்கள்…

சிரிப்பையும் புறக்கணித்தார்கள்!

 

அவர்கள் சிந்திய ரத்தம்

பனித் துளியினும்

தூய்மையானது….

மழைத் துளியினும்

தாய்மையானது…

விழிநீரினும்

கூர்மையானது….

தாய்ப்பாலினும்

வலிமையானது…

 

பரிசுத்தமான அந்த ரத்தம்

ஈழத்தின் வேர் வரை

நனைத்திருப்பதால்தான்

அவரையே எம் இனம்

நினைத்திருக்கிறது.

 

மொழியும் வழியும்

தொப்புள்கொடியுமே

இணைக்கவில்லை

எம்மை….

அந்த ரத்தத் துளிகள்தாம்

இனத்தை

இணைத்த

செம்மை!
-புகழேந்தி தங்கராஜ்-

நவம்பர் 26, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் | , , , | பிரபாகரன் விடுதலையின் விலாசம்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது