அழியாச்சுடர்கள்

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் 26.08.1993 அன்று….

Bt Maj Nilavan_Cap Mathan 2

‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’

அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது, “புலிக்கு…..” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.

இடையில் ஒரு நாள்…..

சண்டை ஒன்றில் கண்ணிவெடி (மைன்ஸ்) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவுக்கு எட்டியது.

அம்மாவின் கண்களில் அருவி, வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ…? “அம்மா….!” என்று அழுவானோ….? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பாள். கொஞ்ச் நாட்களாக அம்மாவின் இரவுகள் துக்கம்று நீண்டு கழிந்தன.

காலம் அசைந்தது.

“பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்….. கடற்புலியாக கிளாலியில நிக்கிறானாம்… சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களைக் காப்பாத்துகிற வேலையாம்…..” அவர்கள் அறிந்தார்கள்.

‘எவ்வளவு காலமாகிவிட்டது….? எப்படி இருக்கிறானோ…? மகனைப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும், ஆவலும் அவளை அவரசப்படுத்தியது.

சோதனைச் சாவடிகள், இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத் தமிழில் துளைத்தேடுக்கும் கேள்விகள், கிரானில் துவங்கி தாண்டிக்குளத்தில் முடிந்த துயரப் பயணத்தின் இறுதியில், அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.

மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரைப் பதித்து, பிள்ளைக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது; ஆனால் மகன் வரவில்லை.

“கிளாலியில நேவிக்கு கரும்புலித் தாக்குதல் நடந்ததாம்…. கனக்க நேவியும் முடிஞ்சுதாம்…..” என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.

எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான் மாலையானதும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்கி, “ஈழநாதம்” விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்கு வந்தபோது…. அந்த படங்கள்….! அந்தப்படம்….! அம்மா உற்று உற்றுப் பார்த்தாள்…. கண்கள் இருண்டன…..! உடல் விறைத்துப்போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை…. வரதன்…..? அவன்தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம்! அது அம்மாவில் பிள்ளையே தான். அள்ளி அனைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே….. அதே பிள்ளைதான்.

கறியில்லாமல், காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், “சோறு காய்ச்சனை கரியோட வாறன்” என்று துவக்கெடுத்துக் கொண்டு காட்டுக்குப் போவானே…… அதே மகன்.

வீதியில் சிங்களப் படை மறித்து கிறினேட்டைக் கையில் கொடுத்து “வாயுக்குள்ள போடடா….” என்றபோது,” விருப்பமெண்டா உணர வாயுக்குள்ள போடு……” என்று துணிவோடு திரும்பிக் கொடுத்துவிட்டு வந்தானே…. அந்த மகன்!

சோகத்தோடு அனைத்து நிற்கும் தலைவனருகில், பூரிப்போடு சிரித்து நின்றான் அந்தக் கரும்புலி.

தாங்கமுடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள். கவலையைத் தீர்க்க கண்ணீர் தீரும்வரை அழுதாள்.

கந்தசாமி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.

1973ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்த நாள் வந்து போகும்.

கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக துடிப்புடன் பள்ளிக்குப் போனவனை, அப்பாவோடு வயலுக்குப் போகவைத்தது குடும்பநிலை.

குடும்பச்சுமை பகிர்ந்து உழைச்சு, 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்குப் போக வைத்தது நாட்டு நிலை.

மன்னம்பிட்டிக்குக் கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வழியை அனுபவிக்கும் எங்கள் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.

மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப் பிரிவில் பனி.

சிங்களப் படையுடன் மீண்டும் போர் துவங்கி, வெடியோசைகளால் நிறைந்து நகர்ந்து கொண்டிருந்த நாட்களுள் ஒன்று. கள்ளிச்சை வடமுனைக்கும் பெண்டுகல்செனைக்கும் இடையில் எதிரி விதைத்துவிட்டுப் போயிருந்த மிதிவெடிகளுள் ஒன்று, விநியோக வேளைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலது காலைப் பிய்த்தது.

காட்டு முட்கள் கீறிக் கிழிக்க நரக வேதனைக்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன். சிகிட்சை முடிய புகைப்படப் பிரிவில் பணி.

கிளாலியிலிருந்த கடற்புலிகளின் தளம் .

எங்கள் அன்புக்கினிய மக்களை, இரத்தப்பசி கொண்டலையும் இனவாதப் பேய்களிடமிருந்து காத்து நிற்கும் உன்னத பணியில் அவர்கள்.

இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல், பகலை இரவாக்கி துங்க முயலும் வாழ்வு.

முகாமில் எப்பொழுதும் கலகலப்பை நிறைத்திருப்பவன் மதன் தான். துடிதுடிப்பான சுபாவம் அவனுடையது.

வரதனும், மதனும் உற்ற நண்பர்கள். புகைப்படப் பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான். இன்று உயிருக்குயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.

ஒன்றாகத் தலைவருக்குக் கடிதம் எழுதி, ஒன்றாகக் கடற்புலிகளுக்கு வந்து, ஒற்றரைக் கால்களோடு நீந்திப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி கடலில் களமாடி, ஒன்றாகக் கிளாலியில் பணி செய்தவர்கள் ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்து, இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.

மதன் துடிதுடிப்பானவன். ஒற்றைக் காலில்நின்று கூத்தாடி…. ஊன்று தடியோடு துள்ளியோடி… கும்மாளமடித்தபடி திரிந்து….. அவன் ஓய்வதில்லை .

திருமலைக் காட்டில் மிதிவெடி ஒன்று கழற்றிவிட்ட இடதுகாலுகுப் பதிலாக மதனுக்கு ஜெய்ப்பூர் கால் கொழுவப்பட்டிருன்தது பொய்க்காலை கழற்றிவிட்டு, ஒன்றரைக் காலில் மரத்திலேறி மாங்காயும் இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உயர்ந்த நண்பன் அவன்.

இரவெல்லாம் படகொடி கடலில் சமராடிவிட்டு, பகலில் ஓய்வெடுத்துத் துங்கமுயலும் தோழர்களை ஊன்று தடியால் தட்டித் குழப்பித் தொந்தரவு செய்துவிட்டுத் துள்ளி ஓடி அவர்களுடியே அன்பான சினப்பிற்க்கும் ஆளாகின்றவன் அந்தக் குழப்படிக்காரன். அவன் கூட தானும் இரவு சண்டைக்குப் போயிருப்பான்: ஆனால் பகலில் ஓடித்திரிவான்.

சண்டைக்குத் தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில்…. மதன் ஒரு தென்னைமர அடியில் சாய்ந்திருப்பான். கடற்காற்றோடு கலந்து ஒரு பாடல் விரியும். தன்னுடையது பாடுவதற்கு ஏற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்சியிருக்கும்; அருகிலிருப்பவர்களை ஈர்க்கும்.

எப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப் போல பகிடி சொல்லித் திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான். எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இலந்தவனாயிருந்தும் அவன் செய்து முடிப்பான். பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கின்ற மதன், சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.

மதனுக்கிருந்த இயல்பான குழ்படித்தனத்தால், வரதனோடு துவங்கிய ஒரு பகிடிச்சண்டை கடைசியில் சீரியசாக முடிந்தது. அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்துபோய்விட்டார்கள். அடுத்த 24 மணிநேரம் வெறுப்பூட்டுவதாகக் கழிந்தது. வரதன் குளிக்கப் போனான். எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்; இப்போது வரதன் தனியே. முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு மதன் ஒரு மரக்குத்தியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். “போ” என்று நட்புத் துண்டவும் தன்மானம் தடுத்தது. ஊன்று தடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாலியை எடுத்த , வரதனுக்கு குளிக்கவார்க்கத் தொடங்கினான் அவன். சேரனிடம் இதைச் சொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.

வரதன் அமைதியானவன் அதிகம் பேசத் தெரியாதவன். கதைகளை விட செயல்களிலே அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவன். “கதைக்கும் போதெல்லாம் இயக்கத்துக்குப் பயன்படக்கூடியதாய் ஏதுங்கதியுங்க்கோடா” என்று எங்களுக்கு புத்தி சொல்பவன். அது, வெளியில் தெரியாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த ஓர் எரிமலை.

அம்மா அப்பாவைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து நீண்டகாலம். எங்கு இருக்கின்றார்களோ…..? ஆமிப்பிரசினைகளால் ஒடுக்கபட்டுத் திரிகின்றார்களோ….? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது. வரதன் கடிதம் எழுதினான்; பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை. மூன்றாம்தரம் பதிலில்லை. நான்காவது கடிதமும் போனது: பதில் வரவே இல்லை.

இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. “ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களைக் கொண்டவங்கள்…. தம்பி…. தப்பி ஓடிவந்து எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை… என்ன நடந்ததோ…..? கடவுளுக்குத்தான் தெரியும்!” வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.

காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கனவே அவனுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் ஆவேசம் கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது, கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.

கிளாலியின் விரிந்த கடல்.

தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.

இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்கும் மரணவலையம். அந்த மரண வளையத்திலும், கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் அயநிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.

நாகதேவன்துறையில் போருத்தபட்டிருக்கும் சக்திவாய்ந்த ராடர்களின் திரைகளில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்து வரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூடப் பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.

எதிரி தடை செய்த வலையத்தை எதிரிக்குத் தடைசெய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்த்திறனையும், அதனைப் பிரமாண்டமான ஒரு வளர்ட்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும் ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக் கொண்டிருந்த போர்முனை.

கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்யத்துவங்கிய நாளிலிருந்து அங்கு காவல் பணியாற்றிக் கொண்டிருக்குக்கும் கடற்கரும்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்தது.

அந்தக் கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.

விடிகாலைகளில், பயணம் போன எம்மக்கள் செத்த பிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.

அவர்கள், துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனைத் திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு, நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி, அவனைத் தாக்கித் திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஒட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்; “இப்பமட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலேயே முடியும்.”

அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காகக் காத்திருந்தார்கள். “எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வேண்டும்” என்ற வீர சபதம். அவர்களின் இதயங்களில் முழங்கிக்கொண்டிருந்தது. கரும்புலித் தாக்குதலை நடாத்தும் இரவை , அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தார்கள்.

“ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?” என்பதற்கு, ஒரு தத்து வார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை, அதன் முக்கியத்துவத்தை, அதன் பலத்தை, உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

வரதன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் “தலைவர் சொன்னதையே நான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருக்கிறன். எனது சிந்தனையெல்லாம் அதிலேயே இருக்கு. அந்த ஒரு நொடிப்போழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பேன். என்றோ ஒரு நாள் கிளாலிக் கடலில ஒரு ‘வோட்டர் ஜெற்’ நொறுங்கும்” என்பான்.

மதனும் அப்படித்தான். அவன் அடிக்கடி சொல்லுவான், “எங்கட எவ்வளவு சனங்களின்ரை ரத்தம் இந்தத் தண்ணியோட கலந்தது. இதுக்கெல்லாம் ஒரு நாளைக்குப் பாடம் படிப்பிச்சே ஆகோணும். அதை நான் சாதிச்சே தீருவேன். அவனுகளையும் இந்தக் கடலிலேயே அழிக்கவேணும்.”

மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர் 1975 ஆம் ஆண்டு, செப்ரெம்பர் திங்கள் 7 ஆம் நாள். அந்த வீரமைந்தனைப் பெற்றால் ஒரு வீரத்தாய். குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 9ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் பொது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கேன்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை; “இயக்கத்துக்குத்தான் போயிருப்பான்….” என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.

கிளாலியின் கடற்போர் முனை.

ஏறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.

அந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலிக்குப் போய்ப்போய்த் திரும்பிவரவேண்டியிருந்தது. நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இலகியதில்லை.

ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். ‘சக்கை’ வண்டி அவனை மின்னலென நெருங்கும். எதிரி ஒட்டமெடுப்பான். சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும். எதிரியின் வேகம் கூடும். அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரபினூடு செலுத்துவான். சக்கைப் படகுகள் தரை தட்டும். தொடர்ந்தும் கலைக்க முடியாமல் கரும்புலிகள் திரும்ப வேண்டியிருக்கும்.

மறுநாள்….

முகாமின் ஒரு மூஇயில் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு இருப்பார்கள். இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக , அவர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருப்பார்கள். 61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தன.

25.08.1993.

வழமையான இரவு.

நிலவு உலா வராத இருண்ட வானம்.

சிலிர்ப்பூட்டும் குளிர்.

உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்துக்கு உற்சாகமூட்டும் உவர்க்காற்று.

கடற்புலிகள் காவல் உலா வர, மக்களின் பயணம் துவங்கிவிட்டது.

சக்கை நிரப்பிய ‘புலேந்திரன்’, ‘குமரப்பா’வில் மதனும் வரதனும் தயாராக நின்றார்கள்.

கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த 62 ஆவது நாளின் இரவில், அவர்களின் முகங்களில் நம்பிககியின் தெறிப்பு; இனம்புரியாத பூரிப்பு.

அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கலர்ரிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான்; “இன்றைக்கு இடிச்சே தீருவேன். திரும்பி வரமாட்டேன்.”

நேரம் நாடு இரவைத் தாண்டியிருந்தது. நாகதேவன்துறைத் தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான் எதிரி. இன்று அவனது தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்த்தது.

ஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒருபுறத்தில் புலிகளைத் தடுக்க, மற்றையது மறுபுறத்தில் மக்களைத் தாக்கும்.

ஆனால் பகைவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவனை இருமுனைகளிலும் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.

சண்டை உக்கிரமடைந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த ‘புலேந்திரன்’ படகை ‘வோக்கி’ அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து, கட்டளைக்குக் காதுகொடுத்தான்.

மக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில்; ஏற்க்கனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின் படி,‘வோட்டர் ஜெற்’ படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.

சுற்றியிருந்த தோழர்கள் கண்கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்க்கு அவகாசமில்லாமல், மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தேழுந்த ஒளிவெள்ளம் மறைந்தது, இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்து கொண்டிருக்கும் போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த ‘P 115′ இலக்க ‘வோட்டர் ஜெற்’ றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தான் நேசித்த கடலோடும்….. காற்றோடும்….. எங்கள் மதனும்…. அவனது ‘புலேந்திர’ னும்..…

அந்தக் கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.

புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது சண்டைமுனையிலிருந்து, ‘குமரப்பா’ படகிற்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்கு விரைந்தான்.

புலிகளின் சண்டைப் படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில், தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு ‘வோட்டர் ஜெற்’ படகு, வரதனின் இலக்கு. ‘வோக்கி’ அவனுக்குத் தாக்குதல் வழிமுறையை வழங்கியது. உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.

இருள், ஆளை ஆள் பார்க்க முடியாத இருள். வளைத்து நிற்கும் புலிகளின் படகுகளை அவதானித்து விலத்தி ஓடி, ‘வோட்டர் ஜெற்’றை சரியாக இனம் கண்டு; அது அவனுடையது தான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.

சரியான இலக்கை நோக்கி வரதன் நெருங்கினான்; அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்ய முடியாமல் மலைத்துப்போய் நிற்க, அடுத்த கணப்பொழுதில்…..! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்….! எதிரியின் படகு…….

எங்கள் அன்பு வரதனும் ‘குமரப்பா’வும் தான்…..

நாகதேவன்துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், ‘P 121′ என்ற தங்கள் போர்ப்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்து முடித்துவிட்டார்கள்.

ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, ஆளுக்காள் தண்ணி ஊற்றி, ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்தோடு வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள்; கிளாலிக் கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்களப் பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள். சாகும்போது கூட ஒன்றாகவே போனார்கள்.

எங்களுக்காக….. மக்களுக்காக…. மண்ணுக்காக….!

விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993) இதழிலிருந்து

ஓகஸ்ட் 26, 2015 Posted by | ஆவணி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , | கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு….

Colonel Raju - Kuyilanமனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயூ என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.

தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயூ அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர்.

விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.

போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார். புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார்.Col Raju 31

இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் கேணல் ராயு.

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

எங்கள் பொரியார் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும்போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் கேணல் ராயு அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். புலிகள் இயக்கத்தின் புதிரான பக்கங்களின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இரகசிய மனிதன். நாளும் பொழுதும் உயிர்தின்னும் களங்களுக்குள்ளேயே அவர் வாழ்ந்தபோதும் தமிழீழ தேசம் விடியும் நாள்வரை வாழ்வாரென்றே நம்பியிருந்தோம். இயக்கத்தின் இரகசியத் தன்மைகருதி வெளித்தெரியாது வைக்கப்பட்டிருந்த எங்கள் தளபதியைப் போர்க்களங்களிலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோம். இப்போது அவரை அவர் நேசித்த மக்களுக்கு ஒரே இரவில் அறிமுகம்செய்ய எப்படி முடியும்? ஒய்வு ஒழிச்சலற்ற உழைப்பிற் கழித்த பத்தொன்பது வருடங்களின் நினைவுகளும் காட்டாற்று வெள்ளம்போல் எம்முள் பாய்கின்றன.

பொறியியலாளனாவதற்குத் துடித்த இளைஞனின் கல்வி தரப்படுத்தலால் வீழ்த்தப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகம் ஒன்றினூடாக அந்த இலக்கை அடைந்துவிடும் அலாவுடன் 1983ம் ஆண்டு தனது இருபத்து இரண்டாவது வயதிற் சிங்களத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அப்போது சிங்களம் பெரும் கொலைவெறிகொண்டு ஆடியது. குழந்தைகள், பெரியோர், பெண், ஆண் என்ற வேறுபாடின்றித் தமிழர் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தனக்கும் எதுவித பாதுகாப்புமில்லையென உணர்ந்த ராயு எவ்வாறோ தாயகம் வந்து சேர்ந்தார். சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து தமிழர் மீட்சி பெறவேண்டுமென்றெண்ணிய அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.

இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமிற் பயிற்சி பெறும்போது பொன்னமானால் இனங்காணப்பட்டார். ஐந்தாவது பயிற்சிமுகாமின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராதா அவர்களின் துணைவனாகச் செயற்பட்டார். அவருடனேயே தமிழிழத்தில் கால்பதித்தார். அன்றிலிருந்து இயக்கம் பெற்ற வெற்றிகள் பலவற்றிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.Col Raju 26

தொலைத் தொடர்பு, இலத்திரனியல், வெடிமருந்து ஆகியவற்றில் ராயு கொண்டிருந்த ஆற்றல், தளபதி விக்ரரின் வழிகாட்டலில் மன்னாரில் நாம் பெற்ற பல பெறுமதியான வெற்றிகளுக்கு வழிகோலியது. களங்களில் நேரடியாகவும் போரிட்டார். திருகோணமலைக்குத் தாக்குதலுக்காகச் சென்ற அணியில் இடம்பெற்ற அவர் தன்மார்பில் விழுப்புண் அடைந்தார். பின்னர் மன்னாரில் நடந்த சண்டை ஒன்றிலும் தன் கால்களிலொன்றில் எதிரியின் குண்டுபட்டுப் பெரிய விழுப்புண்ணைத் தாங்கினார். தளபதி விக்ரர் அடம்பனில் வீரச்சாவடைந்த பின்னர் தளபதி ராதாவின் தலைமையிற் பணியாற்றினார்.

துரோகி ஒருவன் வீசியகுண்டினால் கேணல் கிட்டு அவர்கள் தன் காலை இழந்த பின்னர், ராதாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ராயுவின் பணி தொடர்ந்தது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைத் தொடர்புப் பிரிவு ராயுவின் பொறுப்பில் மேலும் வளர்ந்தது. அவரின் வெடிகுண்டு நுட்பங்களுக்குப் போர்க்களங்களில் எதிரி அதிக விலைகொடுத்தான். பலாலி, காங்கேசன்துறை வீதியில் எதிரியின் விநியோக அணிகள் மீது ராயுவால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பலராலும் அறியப்பட்டவை. அப்போதெல்லாம் ஒரு தோட்பை நிறைந்த வெடிப் பொருட்களுடன் எதிரியைத் தேடிப்போகும் தாடிக்கார ராயு மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார்.

பல்வேறு துறைகளிலும் ராயு வெளிப்படுத்திய ஆற்றலைத் தலைவர் அவர்களும் அறிந்திருந்தார். எமது விடுதலை இயக்கத்தை வலுவான மரபுப்படையுடன் கூடிய வலிமைமிக்க அமைப்பாகக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற தன்கனவை நனவாக்கக் கூடியவர்களுள் ஒருவராக ராயுவையும் அடையாளங்கண்டார். அவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தளபதி லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்தபின் ராயுவைத் தன் நேரடிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அன்றிலிருந்து தன் இறுதி நாள்வரை தலைவரின் தலைவரின் அருகிலிருந்தே ராயு செயற்பட்டார். தலைவரின் அருகிலிருந்து ராயு செயற்பட்ட காலத்தில் போரியலிற் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எமது இனத்திற்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக் கூடிய தடைகளை உடைக்கும் போதெல்லாம் அவரின் அறிவும் ஆளுமையும் கடின உழைப்பும் பெரும்பங்கு வகித்தன. எமது படைத்துறையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிநிலைக்கும் ராயு வலுச்சேர்த்தார். தலைவரின் மீககவனத்துக்குள்ளாகும் படைத்துறைப் பணிகள் ராயுவிடமே ஒப்படைக்கப்பட்டன. படைத்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதனவான தொலைத் தொடர்பு, வெடிமருந்து, இலத்திரனியல் ஆகிய பகுதிகளைப் பொறுப்பெடுத்து பெரும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச்சென்று எமது விடுதலை அமைப்புப் பேரியக்கமாக வளர வழிவகுத்தார்.Col Raju 34

இந்தியப்படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “ஜொனி” மிதிவெடியிலிருந்து சிங்களப்படைகளின் “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மிதிவெடி, பொறிவெடி வரை, இரண்டாம் ஈழப்போரில் எதிரிகளைக் கலங்கச் செய்த பசீலன் 2000 முதல் மூன்றாம் ஈழப்போரில் எமது மோட்டார், ஆட்லறிப்படைகளைச் செயற்றிறன் மிக்கனவாய் வளர்தெடுத்ததுவரை, எம்மால் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித்தாக்குதலுக்கான வெடிகுண்டுத் தயாரிப்பிலிருந்து கடற்புலிகளின் இன்றைய வளர்ச்சி நிலைவரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத படைத்துறைப் பணிகள் பலவற்றிலும் தலைவருக்குப் பக்கபலமாய் நின்று செயற்பட்டார்.

இந்திய அமைதிப்படைகளின் வந்கொடுமைக்காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயு தலைவரினால் அனுப்பப்பட்டார். அவர் திரும்பி வந்தபோது மணலாற்றுக் காட்டுக்குள் தலைவர் இருந்த பகுதியை இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருன்தனர். இறுதிப்போர் என மார்தட்டியபடி பெரும்போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர் தலைவரை அடைந்த ராயு ஆற்றிய பணிகள் அப்போரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானவையாக அமைந்தன.

இந்தியப்படைகளைப் புறமுதுகிட்டோடவைத்த “ஜொனி” மிதிவெடியைத் தலைவரின் வடிவமைப்புக்கேற்ப ராயு உருவாக்கியமை வரலாற்றில் என்றும் அவரை நிலைநிறுத்தும். ஜொனி மிதிவெடியை உருவாக்கியபோது ராயுவின் அருகிலிருந்த போராளி அந்த நாட்களை நினைவு கூறுகிறான்.

“அப்போது அவரிடம் ஒரு சுவிஸ்நைவ் மட்டும்தான் இருந்தது. அதைவிட வேறு எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. தலைவர் அவர்கள் திட்டத்தைக் கூறி அதன்மூலம் போரில் எவ்வாறு வெற்றிகளை ஈட்டலாம் என விளக்கியபோது அதன்முக்கியத்துவத்தை ராயு அண்ணை புரிந்துகொண்டார். ஜொனியை உருவாக்குவதற்காகத் தன் நித்திரையை மறந்தார். வாளில்லை, உளியில்லை, கத்தியில்லை எனக் காரணங்களைத் தேடாமல் வெற்றியைத் தேடினார். பலமுறை தோற்ற போதும் விடாமல் முயன்று வெற்றி பெற்றார்.”Col Raju24

இந்தியப்படை வெளியேற்றப்பட்ட பின் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் ஆயுதத் தொழிற்சாலைகளுக்குப் பொறுப்பாகவிருந்து பல வெற்றிகளுக்குக் காரணமான உற்பத்திகள் பலவற்றை மேற்கொண்டார். பல இராணுவ முகாம்களின் வீழ்ச்சிக்குக் காத்திரமான பங்களித்த “பசீலன் 2000″ அவ்வுற்பத்திகளில் ஒன்றாகும். கோட்டை, மாங்குளம், ஆணையிரவு ஆகிய படைத்தளங்களிலிருந்து தப்பிப்பிழைத்த சிப்பாய்களின் மனதில் “பசிலன் 2000″ இன் வெடிப்பதிர்வு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவால் உருவாக்கப்பட்ட தொழினுட்பங்கள் கடலிலும் தரையிலும் இப்போதும் எதிரியை அச்சுறுத்தியபடியே இருக்கின்றன. இவற்றைவிட இயக்கத்தில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய வகை ஆயுதங்கள் ராயுவின் கைபட்டுத்தான் வெளியே வரும்.

இயக்கத்தின் படைத்துறை வளர்ச்சியில் செலுத்திய அதே அக்கைறையைத் தன் பொறுப்பின் கிழ் செயற்பட்ட போராளிகளின் நலனிலும் செலுத்தினார். நாள்தோறும் வெடிமருந்துகளுடன் பணியாற்றும் போராளிகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காகப் புத்தகங்களைத் தேசிப்படித்து விடயங்களை நுணிகி ஆராய்ந்து சரியான நடைமுறைகளைச் செயற்படுத்துவதிற் கண்ணாயிருந்தார். எம்மால் உற்பத்தி செய்யப்படும் வெடிமருத்துக் கருவிகள் எமது போராளிகளின் சாதனைக் கானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எமது அழிவிற்குக் காரணமாக அமையக்கூடாது என்பதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். குறிப்பாகக் கரும்புலிகளுக்கான வெடிப் பொருட்களைத் தயாரிக்கும் போது, “நாங்கள் ஒவ்வொருவருமே கரும்புலிகள் என்ற உணர்வோடு இருந்துதான் அந்த உற்பத்திகளைச் செய்யவேண்டும். ஒரு கரும்புலியின்ர உயிர் அநியாயமாகப் போகக்கூடாது. அவர்களுக்கான உற்பத்திகள் துல்லியமானவையாக இருக்க வேண்டும்” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி கூறுவார். போரில் எமது இழப்புக்களைக் குறைத்து எதிரிக்குப் பெரும் தேசத்தை ஏற்படுத்துவதில் ராயுவின் உழைப்புப் பெரிதும் உதவியது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தலைவர் தெரிவிக்கும் தீர்வுகளை நிறைவேற்றும் வரை அவர் ஓய்வதில்லை, சில வேளைகளில் ராயு தெரிவிக்கும் தீர்வு எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.

1992ம் ஆண்டு ஆயுத வெடிபொருட் பற்றாமையுடன் மற்றும் சில நெருக்கடிகளையும் சந்தித்த காலம். நாம் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலிலும் எமது ஆள், ஆயுத இழப்புகளைக் குறைத்து எதிரிக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பெருமளவில் கைப்பற்றவேண்டும் என்பதில் தலைவர் கண்ணும் கருத்துமாக இருந்து நடவடிக்களை மேற்கொண்டார். அப்பொழுது பலாலி முன்னரங்க நிலைகள் மீது ஒரு தாக்குதலை நடத்தத் திட்டம் தீட்டப்பட்டது. எதிரியின் முன்னரண்களை எளிதாகத் தாக்கியழிப்பதற்காகக் கடல்வழியால் முகாமிற்குள் இரகசியமாக நுழைவதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் கடல்வழியால் ஆயுதங்களை நகர்த்துவதில் எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. அத்தடையை நீக்குவதற்கு ராயுவால் முன்மொழியப்பட்ட தீர்வு, திட்டத்தைச் செயற்படுத்த உதவியது. தாக்குதல் இழப்புக்கள் குறைந்த வெற்றியான நடவடிக்கையாக நிறைவடைந்தது. அதற்குப்பின் நடந்த பல தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவின் கண்டுபிடிப்புப் பயன்பட்டது.

அந்நாட்களில் ராயுவை அவர் நேசித்த மக்களோ பெரும்பாலான போராளிகளோ கூட அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்டுக் கூறக்கூடிய போராளிகள் சிலருக்கு மட்டுமே அவர் அறிமுகமானவராக இருந்தார். ஆனாலும் செயல்களினூடாக எல்லோருக்குள்ளும் அவர் வாழ்ந்தார். இரண்டாம் ஈழப்போர் வெடித்த சில ஆண்டுகளிற் பலநூற்றுக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய புதிய படைப்பிரிவொன்றின் உருவாக்கத்திற்குப் பொறுப்பாக ராயு நியமிக்கப்பட்டார். உயர் செயற்றிறன் மிக்க மரபுவழிப் படையாக அதை உருவாக்க வேண்டுமென்று தலைவர் எண்ணினார். அதற்கான தொடக்கப்பணிகளே பாரிய அளவிலானவையாக இருந்தன. பகல் இரவு என்று பாராமல் ஒய்வு ஒழிவின்றிக் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது.

சிறுத்தைப் படைப்பிரிவில் முதலிற் பெண் போராளிகளே இணைக்கப்பட்டனர். பெண் போராளிகளுக்கு அவர்களின் திறமைகளையும் ஆற்றலையும் உணர்த்தி தம்மால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துத் தனிச்சிறப்புமிக்க அதிரடிப்படையை உருவாக்கவேண்டுமெனத் தலைவர் திட்டமிட்டார். அதற்கான பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுப்பதில் அதிக அக்கறை செலுத்தினார். தலைவரின் என்னத்தை முழுமையாக உணர்ந்த ராயு தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து உழைத்தார். பின்னர் சிறுத்தைப் படையில் ஆண்களுக்கான பிரிவு உருவாக்கப்பட்டபோது ராயுவின் மீதான சுமை இரட்டிப்பானது.

பயிற்சிப் பாசறையில் போராளிகளுடன் ராயு எப்படி வாழ்ந்தார் என்பதை போராளி ஒருவர் நினைவு கூர்ந்தார். “சிறுத்தைப் படையணியிற் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டோம். வெளித்தொடர்பு எதுவுமின்றி ஆண்டுக்கணக்காக எமது பயிற்சி தொடர்ந்தது. தொடக்கத்தில் எல்லாமே எங்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டனவாக வேயிருந்தன. நாங்கள் எல்லாவற்றிலுமே கடுமையாக எங்களை வருத்தினோம். அப்போதெல்லாம் எங்களுக்கு மென்மேலும் உறுதியூட்டியவை ராயு அண்ணையின் செயல்கள்தாம். அவர் எமது அடிப்படைத் தேவைகளை தந்தை ஒருவருக்குரிய அக்கறையோடு கவனித்தார். போராளிகள் அனைவரிலும் அன்பும் அக்கறையும் செலுத்தினார். ராயு அண்ணை பயிற்சி செய்வதைப் பார்த்தாலே எங்களுக்கும் அதில் ஆர்வம் வந்துவிடும்”Col Raju 36

ராயுவால் வளர்தெடுக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த சிறுத்தைப் படையணி மூன்றாம் ஈழப்போரில் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டது. போர்க்களங்களில் நேரடிச் சண்டை அணிகளாக ஈடுபடுத்தப்பட்டதுடன் சிறுத்தைப்படையணிப் போராளிகளாற் படைத்துறை உள்கட்டமைப்புகள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியிற்றுறை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. இயக்கத்தின் சுமைகளை மேலும் மேலும் தாங்கியபடியே ஒரு சுமைதாங்கிபோல அவர் வாழ்ந்தார். இன்னுமின்னும் சுமைகளைத் தாங்குவதர்காகத் தன் அறிவையும் ஆளுமையையும் வளர்த்த படியேயிருந்தார். இப்பொழுது நினைத்துப்பார்க்கையில் பிரமிக்கவைக்கும் பணிகளையெல்லாம் அந்த மனிதர் எப்படிச் செய்து முடித்தாரென்பதை அவரோடு நீண்டகாலம் வாழ்ந்த போராளியொருவர் நினைவு கூறுகிறார்.

“ராயு அண்ணையிடம் தனித்துவமான பல திறமைகளும் குணாதிசயங்களும் இருந்தன. அவர் ஞாபகப்படுத்துவதற்காகப் பெரும்பாலும் எதையும் குரித்துவைப்பதில்லை. எப்படியோ எல்லாவற்றையும் அந்த மூளையிற் பதிந்துவைத்துவிடுவார். தேவைப்படும்போது எல்லாவற்றையும் உடன்க்க்குடன் அவரால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். எங்காவது தூரத்துக்குப் புறப்படுவதென்றால் சாரதிக்குப் பக்கத்திற் புத்தகத்துடன் அமர்ந்துவிடுவார். தான் வாகனத்தை ஓட்டும்போது பக்கத்தில் இருப்பவரை வாசிக்கவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியுமில்லாவிட்டால் போராளிகளுக்கான விரிவுரைக் கூடமாக அது மாறும். கடினமான காலங்களில் ராயு அண்ணை சிறிது நேரமாவது நித்திரை கொள்வது வாகனத்திற் செல்லும் வேளையிலாகத்தானிருக்கும். வாகனம் சென்றடைந்ததும் தன் மீதிப்பணிகளை ஆரம்பித்துவிடுவார். எப்போதும் அதிகாலைவேளையில் எழுந்துவிடுவதைக் கண்டிப்பான பழக்கமாக வைத்திருந்தார். காலைக்கடன்களின் போதே தன் பொறுப்பாளர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்துவிடுவார். இப்படியான இயல்புகலாற்றான் அவரால் இவ்வளவு சுமைகளையும் சுமக்கமுடிந்தது”

உண்மையில் அவர் அப்படி வாழ்ந்ததாற்றான் போராட்டத்தளம் யாழ்குடாநாட்டிலிருந்து வன்னிக்கு மாறிய பின்னரும் எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக் காலத்தில் கூடுதலான பணிகளை அவராற் சுமக்கமுடிந்தது.

வன்னிப்போர்க்களத்தில் எமது படைத்துறை பீரங்கி, மோட்டார் உள்ளிட்ட பல நவீன படைக்கலங்கள் புகுத்தப்பட்டு வலுவூட்டப்பட்டது. எமது படைக்கட்டமைப்புகளுக்கும் தந்திரோபாயங்களுக்குமேற்ப பீரங்கிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்துவதற்கு ராயு வழிவகுத்தார். எதிரிக்கும் உலகுக்கும் புலிகளின் உண்மைப்பலத்தை உணர்த்திய ஓயாத அலைகள் ஒன்றின்போது எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எமது மோட்டார்களின் தாக்குதல் அமைவதற்கு ராயுவின் உழைப்பே காரணமாகும்.

முல்லைப் படைத் தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் எமது பீரங்கிப்படையை உருவாக்க வழிவகுத்தன. ஆனாலும் அவற்றைப் போர்க்களங்களில் நுட்பமாகப் பயன்படுத்தும் தொழில்னுட்பத்தையும் பட்டறிவையும் பெறுவது எளிதானதாக இருக்கவில்லை. எதிரியும் எமக்கு நீண்டகால இடைவெளியைத் தருவானெனத் தென்படவில்லை. எல்லாப் பொறுப்புகளும் ராயுவிடமே விடப்பட்டன. “ராயு எப்படியோ செய்து முடிப்பார்” என்று தலைவர் நம்பினார். அதனாலேயே விரைவில் நடக்கவிருந்த ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரைத் தலைவர் ஒத்திவைத்துக் காத்திருந்தார். ராயுவும் அவரது போராளிகளும் சூறாவளியாகச் சுழன்றுழைத்த அந்த நாட்களைப் பீரங்கிப்படையணியின் தளபதியொருவர் நினைவு கூறுகிறார்.

“எங்களைப் பொருத்தவரை அப்போது எமது கைகளில் இரண்டு இரும்புக்குத்திகள் இருந்தன. ஏனெனில், அப்போது ஆட்லறிபற்றிய அறிவு எமக்கு இருக்கவில்லை. தெரியாத்தனமாக ஏதும் செய்துவிட்டால் அவற்றை நாங்கள் இழந்துவிடக்கூடும். அல்லது அவற்றின் செயற்றிறன் குறைந்துவிடக்கூடும். நாம் இக்கட்டான நிலையில் இருந்தோம். ராயு அண்ணை அந்த இரும்புக் குத்திகள் மீதிருந்த ஒவ்வொரு புதிரையும் விடுவித்துக் கொண்டிருந்தார். சில கட்டங்களில் அப்பால் நகரமுடியாமல் முடங்கிவிடுவோம்.Col Raju 27

சிலவேளைகளில் நம்பிக்கையின்மைகூட ஏற்படும். “ராயு அண்ணை எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்” அந்த நம்பிக்கைதான் எல்லோரையும் தூக்கி நிறுத்தும். நம்பிக்கை வீண்போகவில்லை. இரும்புக் குத்திகள் விரைவிலேயே எமது கைகளில் ஆட்லறிகளாக மாறின. எல்லாவற்றையும் கடந்து துல்லியமான சூடுகளை வழங்கக்கூடிய நிலைக்கு ராயு அண்ணை எங்களை முன்னேற்றினார். தலைவரின் எதிர்பார்ப்பின்படியே ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரின்போது எமது ஆட்லறிகள் துல்லியமான சூடுகளை வழங்கின.”

ஆட்லறிப் பிரிவின் செயற்றிறன் மேலும்மேலும் வளர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு வழமையான மரபுவழி இராணுவக் கட்டமைப்பைப் போலல்லாது எமது படைக்கட்டமைப்புத் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. எமது வியூகங்களும் தனித்துவமானவை. இவற்றுக்கு அமைவாக எமது ஆட்லறிப் பிரிவைப் பயன்படுத்துவதில் ராயு வெற்றிகண்டார். பாதகமான காலநிலைகளின்போது ஆட்லறி, மோட்டார் போன்ற மரபுவழி ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாமையால் மரபுவழிப் படைகள் அக்காலநிலைகளிற் பாரிய அளவிலான சமர்களைத் தவிர்த்தன. ஆனால் எமது ஆட்லறிப் பிரிவை அத்தகைய கால நிலைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக ராயு அமைத்திருந்தார். ஐயசிக்குறுவிற்கு எதிரான சமர்க்களத்தில் சில இடங்களில் துல்லியமான ஆட்லறிச் சூடுகள் மூலம் இலகுவான வெற்றிகள் பெறப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின்போது எமது ஆட்லறிப்பிரிவான கேணல் கிட்டு பீரங்கிப் படையணி தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உழைத்தது. அதனை ராயுவே தலைமைதாங்கி வழிநடத்தினார்.

எல்லா முனைகளிலும் தொடர்ச்சியாக நீண்டு சென்ற அந்த மீட்புச் சமரிற் பல் சோர்வான கட்டங்களிற் போராளிகளுக்கு உற்சாகமூட்டி வேகமான வெற்றிகளுக்கு வழிவகுத்தார். களத்தில் ஏற்படும் நெருக்கடியான கட்டங்களிலெல்லாம் எதிரியின் ஆட்லறிப் பிரிவால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு விரைவான சூட்டு ஆதரவை வழங்கக்கூடிய நிலைக்கு எமது ஆட்லறிப் பிரிவை வளர்த்தெடுத்தார். அதனாற் பல பாதகமான களச்சூழல்களிலும் நாம் வெற்றிபெற முடிந்தது. போராளிகள் பலரும் காப்பாற்றப்பட்டனர். தலைவரின் புதிய திட்டமிடலின் கீழ் பரந்தன் சமரில் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பகல் சண்டையில் நாம் குதித்தபோது தலைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்லறிகளை ஒருங்கிணைத்துச் சூடுகளை வழங்கி வெற்றிக்கு வழிசமைத்தார். இந்த நம்பிக்கையுடனேயே மேலும் தொடர்ந்த நடவடிக்கைகளில் எம்மால் வெற்றியீட்ட முடிந்தது.

வரலாற்றுப் புகழ்மிக்க இத்தாவிற் சமரின் போது ஈற்றிற் சிங்களம் தொடுத்த பாரிய “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடித்த சமரின் போதும் களத்தில் நின்ற போராளிகளுக்குப் பீரங்கிகளால் உற்சாகமூட்டி அவர்களின் உயிரைக்காத்து ஓயாது பணியாற்றி வெற்றிகளுக்கு வழிசமைத்தமை ராயுவின் தலைமையில் எமது ஆட்லறிப் பிரிவு ஈட்டிய சாதனைகளில் முக்கியமானதாகும். ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியற்றுறையால் “அக்கினிக்கேலா” நடவடிக்கைக்கெதிரான சமரில் அறிமுகம் செய்யப்பட்ட வேடிக்கருவிகள் எதிரி அணிகளைச் சிதறடித்து வெற்றிக்கு வழிகோலின.Col Raju 32

போர்க்களங்களில் ஆயுதவலுவைப் பயன்படுத்தி எமது இலகுவான வெற்றிக்கு வழிகோலி, போராளிகளின் உயிர்காகாத்த எமது தளபதியைப் போர்க்களங்களிற் காப்பதில் எல்லோருமே அக்கறை கொண்டிருந்தோம். ராயுவுக்கு ஏதும் நடந்துவிட்டால் அது ஈடுசெய்யப்பட முடியாததென்பதை எல்லோரும் உணர்ந்திருந்தோம். ஆனால் போர் முழக்கங்கள் தணிந்துவிட்ட ஒருநாளிற்றான் எங்களுக்கு இடி காத்திருந்தது. நோயென்று பாயிற் படுத்தரியாத எங்கள் தளபதி ராயு கொடும் நேயினால் வதையுறுவதாகச் செய்தி வந்தது. அவரால் பிள்ளைகள்போல் வளர்க்கப்பட்ட போராளிகளும் அவரை அறிந்தவர்களும் துயரத்தில் வாடினர்.

ராயுவின் நோயின் கடுமை அதிகரித்துக் கொண்டேபோனது. சத்திரசிகிச்சை முடிவுகள் புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே அவை அவரது உடலில் வலுவாக நிலைபெற்றுவிட்டன. எங்கள் அன்புக்குரிய ராயு மீட்கப்பட முடியாதநிலைக்குச் சென்று கொண்டிருந்தார். படுக்கையில் நாட்கள் கழிவதை செரிக்க முடியாதவராக இருந்தார்.

“வருத்தமென்று சும்மா படுத்துக்கொண்டு வேலையும் செய்யாமல் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்க ஒரு மாதிரிக் கிடக்கு” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். படுக்கையில் இருந்தபடியே தனது போராளிகளுக்கு முக்கியமான விடயமொன்றைக் கற்பிப்பதில் ஈடுபட்டார். அதனால் அவர் தேறிவருவதாக எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். ஆனால் ராயுவின் வயிறு கல்லாகிக்கொண்டே போனது. தாங்கமுடியாத வயிற்றுவலிக்கு உள்ளாகும் அவரை மயக்கநிலைக்குட்படுத்த வேண்டியிருந்தது. ஈற்றில் மருத்துவத்திற்காக வேறிடத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது.

ஆட்கொல்லி நோயென்றாலும் இரும்பு மனிதரென்று நாங்கள் எல்லோரும் அடிக்கடி கூறிக்கொள்ளும் கேணல் ராயு அவர்கள் சில காலத்துக்காவது வாழக்கூடிய நிலையில் திரும்பிவருவாறேன்று எதிர்பார்த்தோம். அடுத்த மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராயு நட்டுவைத்த பூங்கன்றுகளும் அவ்வாறுதான் எண்ணியிருக்கும். ஆனால் 25.08.2002 ஆம் ஆளன்று எல்லாமே பொய்த்துப்போயின.

விடுதலைப்புலிகள் (புரட்டாதி, ஐப்பசி 2002)

ஓகஸ்ட் 25, 2015 Posted by | ஆவணி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு…. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

லெப். கேணல் விக்கீஸ்வரன்

Lt Col Vikkeesvaran

இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார்.

2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார்.

இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்தார். மீள இணைந்தோரின் படையணி, சோதியா படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து கைதடி, தச்சன்காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் தாக்குதல்களிலும் 4.1 படையணி, மாலதி படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து சாவகச்சேரியைக் கைப்பற்றும் தாக்குதலிலும் பங்குகொண்டார்.

2001 இல் 82 மி.மீ மோட்டார் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

அதேவேளை தீச்சுவாலை நடவடிக்கையின்போது முறியடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தார். 23.04.2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முறியடிப்பு அணிக்கும் 02 ஆம் கோட்டில் நின்ற அணிக்கும் பொறுப்பாக இருந்தார்.

08.05.1971 இல் வவுனியா மாவட்டத்தில் பிறந்த சதாசிவம் சதானந்தன் (விக்கீசு) ஜீவனா (போராளி) மண இணையருக்கு பவித்திரன், யாழன்பன், கோவரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளன.

கீழே தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

குடாரப்பில் கரையிறங்கிய அணியோடு பளையூடாகச் சென்று இணைவதில் தடையேற்பட்டபோது கேணல் தீபனின் பணிப்புக்கமைய மிகக் குறைந்தளவு போராளிகளுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்திடையே உறுதியாக நின்று பளையில் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து அணிகளின் இணைவுக்கு வழிசமைத்தார்.

25.04.2001 தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்பாக அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவற்றுள் ஒன்றான வலுவான காப்பரண்களைக் குறுகிய காலத்தில் பணியாளர்களைக்கொண்டு சிறப்பாக அமைத்து முடித்தார்.

மேலும் அவரோடு நின்ற பணியாளர்கள் அவரின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சமரில் நேரடியாகக் கலந்து குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினர். இது அவரது பொறியாண்மை ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியாகும்.

11.08.2006 முகமாலையில் இடம்பெற்ற சமரில் கிளாலிக் கரையூடு முன்னேறிய எமது அணியினரை எதிரி சுற்றிவளைத்து எமது உடைப்புப் பகுதியை மூடும் நிலை உருவாகியது. அப்போது கேணல் தீபனின் பணிப்புக்கமைய அணியோடு சென்ற விக்கீசு அவர்களோடு இணைந்து கிளாலி உடைப்பு மூலையில் 150 மீற்றர் கரைப்பக்கமும் கிளாலி முகமாலைக் கோட்டிலும் நிலையமைத்து நின்றார்.

எதிரியின் தாக்குதலால் இந்த நிலையின் நீளம் குறுகியபோதும் அணியினர் எல்லோரும் வெளியேறும் வரை எதிரி அந்தப் பகுதியை மூடாது தடுத்து நின்றார்.

11.10.2006 முகமாலையில் இடம்பெற்ற எதிரியின் வலிந்த தாக்குதலின்போது களநிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து இரண்டாவது கோட்டிற்கான காப்பரண்களை விரைவாக அமைத்ததுடன் சமரின் ஒரு கட்டத்தில் இரண்டாவது கோட்டுச் சமரையும் வழிநடத்தி எதிரிக்குப் பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்.

23.04.2008 அன்று முகமாலையில் இடம்பெற்ற வலிந்ததாக்குதல் முறியடிப்புச் சமரின்போது, இறுதியாக மீட்டகப்பட்ட NP08 நிலைக்கு அவரோடு நின்ற வடிவரசனுடன் ஆறு போராளிகளை அனுப்பி பின்பு அங்கு வந்த நித்திலனின் அணியுடன் இணைந்து அந்தக் காப்பரணை மீட்கும் பணியை நிறைவாகச் செய்தார்.

லெப்.கேணல் விக்கீசு ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். 10.08.2008 அன்று வீரச்சாவடைந்தார்.

நினைவுப்பகிர்வு:- செ.யோ.யோகி. (2008)

***
விடுதலைக்கான போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும்: அதனையும் தாண்டி இலட்சியத்தை அடைவோம்: கேணல் தீபன்

இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும். ஆனால், விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறான பல துன்பங்களை தாண்டித்தான் விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தனது உரையில் மேலும் கூறியதாவது:-

சிறிலங்கா படை தமிழ்மக்கள் மீது உளவியல்போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் நடத்தியும் எறிகணைத்தாக்குதல் நடத்தியும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்ற முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ்மக்கள் இடமளிக்ககூடாது. எதிரியின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்வதற்கு பதுங்குகுழிகளை அமைத்தும் அரண்களை அமைத்தும் பாதுகாப்பினை தேடவேண்டும்.

தமிழ்மக்கள் போரியல் சூழலுக்கு ஏற்றவாறு தமது வாழ்க்கையை மாற்றவேண்டும். இவ்வாறு எதிரியின் தாக்குதலில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துகொண்டு விடுதலைக்கான பணியினை விரைவுபடுத்தவேண்டும். இதன்மூலம்தான் விடுதலைக்கான போரில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் கனவினை நனவாக்க தமிழர்கள் ஒவ்வொருவரும் போராடவேண்டும்.

விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும். ஆனால், நாம் தொடர்ந்து போராடிவருகிறோம். எதிரி தமிழ்மக்களுக்கு பாரியஅழிவுகளை – உயிரிழப்புக்களை – ஏற்படுத்தி தமிழ்மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கிவருகின்றான்

விடுதலைக்கான போரில் இவ்வாறான துன்பங்களை தாண்டித்தான் வெற்றிகளை பெறமுடியும். விடுதலைக்கான அர்ப்பணிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த அர்ப்பணிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சிறிலங்கா படைகள் நினைப்பதை செய்து முடிக்கமுடியாது. எதிரிக்கு அவலத்தை கொடுத்து எமது வாழ்வை மாற்றவேண்டும். இதுதான் நாம் மாவீரர்களுக்கு செய்கின்ற பணியாக இருக்கும். இப்பணியை நிறைவேற்றி முடிப்பது தமிழ்மக்கள் அனைவரதும் கடமையாக இருக்கும். இதன்மூலம் விடுதலையை வென்றெடுக்கமுடியும்.

புளியங்குளத்தை புரட்சிக்குளமாக்கிய லெப்.கேணல் விக்கீஸ்வரன்

லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரன் 16 ஆண்டுகளாக தேசவிடுதலைக்காக உழைத்தவர். சிறந்த நிர்வாகத் திறமை மிக்க – துணிவுமிக்க – தளபதி. 1991 இல் தனது உடன்பிறப்பு ‘ஆகாயக் கடவெளி சமரில்’ வீரச்சாவடைந்தவுடன், தனது உடன்பிறப்பின் கனவை நனவாக்க விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் இவரது தொடக்கப் பணியாக புதியபோராளிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் ஒரு ஆண்டு காலமாக சண்டைகளில் ஈடுபட்டவர்.

1997 இல் – ஜெயசிக்குறு காலப்பகுதியில் – சிங்களப்படைகளின் நடவடிக்கைக்கு எதிராக – என்னுடன் நின்று நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு – புளியங்குளத்தை புரட்சிக்குளமாக்கியதில் விக்கீசுக்கும் பெரும் பங்குண்டு. சிறிலங்கா படையினரின் பளை படைத்தளத்தை உடைத்தெறிந்து, இத்தாவிலில் நிலைகொண்டிருந்த எமது அணிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒரு தடைநீக்கியாக விளங்கியவர்.

ஒவ்வொரு விடுதலைப் போராளியையும் இழக்கின்றபோது அது எமக்கு பேரிழப்பாக இருக்கின்ற போதும் இம்மாவீரர்களின் கனவினை நனவாக்க நாம் அனைவரும் அணிதிரள்வதுதான் இம்மாவீரர்களுக்குச் செய்யும் பெரும் வணக்கமாக இருக்கமுடியம்.

இவ்வாறு கேணல் தீபன் தெரிவித்தார்.

வீரவணக்க நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச் சுடரினை மாவீரர்பணிமனை பணிமுதல்வர் பொன் தியாகம் ஏற்றினார். விக்கீஸ்வரனின் துணைவியார் வித்துடலுக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலை சூட்டினார். தொடர்ந்து, மலர் மாலைகளை அவரது பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், கேணல் தீபன, லெப்டினட் கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி சிறப்புத் தளபதி கோபால் ஆகியோர் சூட்டினர்.

கிளிநொச்சிக் கோட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீரவணக்கவுரைகளை சமராய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி, கேணல் தீபன் ஆகியோர் ஆற்றினார். மலர் வணக்கத்தை வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி லோறன்ஸ் ஆரம்பித்து வைக்க மக்கள் மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து வித்துடல் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூயவிதை குழியில் விதைக்கப்பட்டது.

தகவல்: கேணல் தீபன்
தொகுப்பு: சமராய்வு மையம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

மார்ச் 22, 2015 Posted by | ஆவணி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், வீரவரலாறு | , , , | லெப். கேணல் விக்கீஸ்வரன் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தீருவில் தீயில் தியாக தீபங்கள்

பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் பட்டது.kumarappa -pulendran 12 lttes

தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.

இரு தளபதிகளும் மணமாகி மணமாலை வாடுமுன்பு தாய், தாரம் இரண்டையும் விட உயிரிலும் மேலான தாயக விடுதலையையும் மக்களையும் நேசித்தவர்கள் . இந்நிகழ்வு தமிழீழப் போராட்டத்தின் முக்கியமான திருப்புமுனையாகும். அத்துடன் தமிழீழ போராட்டத்திற்கு உத்வேகம் அளித்து புத்துயிர் பெறச்செய்தது .

29.07.1987 மாலை 6.15 மணிக்கு தமிழீழ தேசத்திற்கு இந்திய இராணுவத்தை ஏற்றி வந்த முதல் விமானம் தரையிறக்கப்பட்டது .

05.10.1987 பிற்பகல் 5.05 மணிக்கு பலாலி இராணுவ முகாமில் புலேந்திரன், குமரப்பா, அப்துல்லா, மிரேஸ், நளன், அன்பழகன், ஆனந்தக்குமார், ரெஜினோல்ட், பழனி, கரன், தவக்குமார், ரகு, தமீம், கருணா, கரன், தாஸ், செல்வா, சிவகுமார் ஆகிய 17 போராளிகள் சயனைட் உட்கொண்டனர் . இவர்களில் முதல் 11 பேரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

ரகு ஆபத்தான நிலையிலிருந்து அடுத்த நாள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான் . வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலேந்திரன் மணமுடித்து இரு மாதங்கள்தான் – குமரப்பா மணமுடித்து ஒரு மாதம் – கரன் இரு குழந்தைகளின் தந்தை . உயிர் பிழைத்த ஏனைய ஐவரும் நீண்டகால சித்திரவதையின் பின் விடுவிக்கப்பட்டனர்.

03.10.1987 அன்று எமது கடற்பரப்பில் இப் பதினேழு போராளிகளும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . இவர்கள் தமிழகத்திலிருந்து எமது அலுவலக ஆவணங்களை படகில் ஏற்றி வரும் போதே கைதாகினர்.

கைதானவர்களில் ஒருவர் புலேந்திரன் என்று தெரிந்ததும் , சிறிலங்காவின் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி துள்ளிக் குதித்தார் . சிறிலங்கா வானொலி புலேந்திரனுக்கு கொலைகாரப்பட்டம் சுமத்தி, இவ்வாறான ஒரு பயங்கர குற்றவாளியை கைது செய்துள்ளோம் என பெருமை பேசியது . ‘இவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதாலேயே இவர்களைக் கைது செய்ய வேண்டியேற்பட்டது’ என்று நியாயமும் கூறியது.

இவர்கள் பலாலி இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்டனர் . இவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி , தலைவர் பிரபாகரன் இந்திய அரசிடம் தமது கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்தார் . இது பற்றி 05.10.1987 அன்று தமிழீழத்தில் வெளிவந்த ஈழமுரசு செய்தி இதழில் பின்வருமாறு தலைவர் தெரிவித்ததாக வெளியிடப்பட்டிருந்தது. ‘ஆயுதங்களை கையளித்த பின் எமக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போராளிகளைக் கைது செய்வதும், தடுத்து வைப்பதும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானதாகும்’.

எமது போராளிகள் இதுவரை எதுவித குற்றமும் இழைக்கவில்லை. குற்றமிளைக்காதவர்களை கைது செய்ய முடியுமா?’

ஒரு மீனவத் தொழிலாளி தனது தொழிலைச் செய்ய கடலில் செல்லும் உரிமையைப் போன்றதான செயலைத்தவிர எமது போராளிகள் வேறு எதனைச் செய்தார்கள்?

நமது பிரதேசத்துக் கடலில் நாம் சுதந்திரமாகச் செல்லக் கூடாதா ? எமது இந்தச் சுதந்திரம் பறிக்கப்படக்கூடிய ஒன்று என நாம் கருதவில்லை . வெளிநாடு செல்ல விமானத்தில் பறப்பது போன்றே கடலில் படகில் செல்வதற்கான உரிமையும் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

இது போன்றதே நடந்த சம்பவமாகும் . இந்தியாவில் உள்ள எமது தலைமைக் காரியாலயத்தை மூடிவிட்டு அங்கிருந்த தஸ்தாவேஜுகளையும் பிற ஆவணங்களையும் எடுத்து நம் பிரதேசத்திற்கு கொண்டுவர இந்திய கடற்படையிடம் பாதுகாப்பும் , அனுமதியும் கேட்டோம் . பலதடவை கேட்டோம் . ஆனால் தரப்படவில்லை . எனினும் பொருட்களை எடுத்து வருவது பற்றி இந்திய அரசுக்கு அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் பொருட்களை இந்தியக் கரையில் எடுத்து வைத்து விட்டு பின் அவைகளில் ஒரு பகுதியை வள்ளத்தில் கொண்டு வந்து நமது பிரதேசத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மீதிப் பொருட்களை எடுத்து வர வள்ளத்தில் சென்றபோதே கைது சம்பவம் இடம்பெற்றது.

தளபதிகள் தற்பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது . இதனையே தளபதிகள் இருவரும் கொண்டு வந்தனர் . ஆனால் சிறிலங்கா அரசின் வானொலி , தொலைதொடர்பு சாதனங்கள் , ஆயுதங்களைக் கொண்டு வந்ததாகப் பிரச்சாரம் செய்கின்றன.

ஆயுதங்களை ஒப்படைத்த பின் எமது பாதுகாப்புக்களை இந்தியப்படையிடம் ஒப்படைத்தோம் . எம்மை யாரவது கைது செய்வதை தடுக்கவேண்டியவர்கள் அவர்களே . எமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களும் அவர்களே.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா எம்மை அங்கீகரித்தது . இவ்வாறு நிலைமை இருக்கும் போது சிறிலங்கா அரசு எம்மைக் கைது செய்யும் கட்டத்தில் இந்தியாவே எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமைப்பாட்டுக்குரியது . தவறின் அது ஆபத்துக்குரியதாகும்.

தலைவர் அவர்களின் வேண்டுகோளானது அலட்சியம் செயப்பட்டது . கைதானவர்களை கொழும்புக்கு கொண்டு செல்வது பற்றி இரு அரசுகளும் ஆராய்ந்தன.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தலைவர் அவர்களால் ஒரு செய்தி அனுப்பப்பட்டது.

இச்செய்தியை இலங்கைக்கான இந்திய தூதுவரான டிக்சித்துடன் ஆலோசித்த ராஜீவ் , பின்னர் டிக்சித் ஊடாக சில நிபந்தனைகளை உள்ளடக்கிய தனது செய்தியை அறிவித்தார் . அச்செய்தியில், ‘புலிகளுடனான போரில் கைதாகி , புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஜே . ஆர் விரும்பியவாறு இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனும் நிபந்தனைகள் உட்பட்ட வேறு சில நிபந்தனைகளும் அடங்கியிருந்தன.

இவ் நியாயமற்ற நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது , தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உறுதித்தன்மையை உலகிற்கு எடுத்தியம்பியது.

‘‘இது பேரங்களிற்கு மசியாது , எனவே இதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் இந்தியாவின் பிராந்திய நலனைப் பேணமுடியாது!’’

என்ற முடிவுக்கு வந்தது இந்திய அரசு.

அதன் முதற்கட்ட பலியாக கைதான 17 விடுதலைப் புலிகளையும் தேர்ந்தெடுத்தது.

‘‘தளபதிகள் இருவரும் அண்மையிலேயே திருமணமானவர்கள் . எனவே வாழ்க்கையில் பற்றுக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இந்திய பிரதமரின் நிபந்தனைகளைக் கூறுவோம். இவர்கள் கைதிகளை விடுவிப்பதற்கு சம்மதித்தால் , அதனைப் பிரச்சாரப்படுத்துவோம்’’ எனக்கருதிய இந்திய இராணுவத்தினர் முதலில் புலேந்திரனை அணுகினர் . பிரதமர் ராஜீவின் நிபந்தனைகளை தெரிவித்தனர்.

அதற்கு புலேந்திரன், ‘‘சிறிலங்கா இராணுவத்தினர் எம்மோடு யுத்தத்தில் ஈடுபட்ட வேளையில் யுத்தக் கைதிகளாகக் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான ஒப்பந்தத்தின் பின் கைது செயப்பட்டவர்கள். எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது . தமிழீழ இலட்சியத்திற்காகப் போராடும் எம்மை வைத்து இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேரம் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என திட்டவட்டமாகத் தெரிவித்தார் – ( ஈழமுரசு 06.10.1987).

இந்திய – சிறிலங்கா அரசுகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.

05.10.1987.

அன்று மிக விரைவாகச் சம்பவங்கள் நடந்தன . தென்பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங்; பின்பு இந்திய தூதர் டிக்சிற் சிறிலங்கா ஜனாதிபதியுடன் பேசுவதாகவும், விரைவில் சுமுகமான முடிவு வரும் என்றும் தெரிவித்தார்.

புலேந்திரன் தலைவருக்காக தனது இறுதிக் கடிதத்தை வரைந்தார். அதே போல் குமரப்பாவும் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார் . ஏனைய போராளிகளும் கூட்டாக தமது இறுதிக் கடிதத்தை வரைந்தனர்.

மூன்று கடிதங்களினதும் சாராம்சமும் ஒன்றுதான் . தம்மைக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

விடுதலைக்கான காலக்கெடு 7:00 மணியிலிருந்து 10:00 மணியாகியது . பின்பு பிற்பகல் 2:00 மணியாகியது . ஆயினும் 2:00 மணி கடந்த பின்பும் பதினேழு வேங்கைகளும் விடுதலை செய்யப்படவில்லை.

தலைவர் குறிப்பிட்டது போல் சிங்கள இனவாதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கும் நேரம் நெருங்கியது . பிற்பகல் 5:05 மணிக்கு நாம் அவர்களை இழந்தோம். வீரச்சாவெய்தும் இறுதி மணித்துளிவரை அவர்கள் போராடினார்கள்.

சயனைட் உட்கொண்டவர்கள் , உயிர் பிரிந்த பின்னர் கூடத் தாக்கப்பட்டார்கள். புலேந்திரன் உடலில் தெரிந்த காயங்கள் இன்னொரு ‘வெலிக்கடையை’ ஞாபகப்படுத்தியது . காயத்துடன் காணப்பட்ட சடலங்களில் ரகுவினுடையதும் ஒன்று.

வல்வை – தீருவில், 07.10.1987 அன்று பன்னிரு வேங்கைகளினதும் புகழுடல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன . இவர்களுக்கு ஆயுத பாணியாக வந்து அஞ்சலி செலுத்தினார் தலைவர் அவர்கள்.
ஒப்பந்தம் உருவாகிய சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த திரு பழ. நெடுமாறன் அவர்களிடம் ‘‘இந்நிலையில், தமிழீழ கோரிக்கை பற்றி ஈழத்தமிழ் மக்களின் கருத்தென்ன ?” என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள் . அதற்கு அவர் ‘‘அது அணைந்துவிடவில்லை – நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றது அது எப்போதும் பற்றிக் கொள்ளலாம்” என்றார்.

ஆம் , நீறு பறந்தது ! நெருப்பு பற்றிக் கொண்டது.

தமது பிள்ளைகளுக்கான இறுதிக் கடன்களைச் செய்வதற்காக நாற்காலிகளில் வரிசையாக இருத்தப்பட்ட பன்னிரு வேங்கைகளினதும் பெற்றோர்களைப் பார்க்கையில் எமது மக்களின் வயிற்றில் பற்றியெரிந்த நெருப்பு – நான்கு அடி உயரமான சிதையில் பன்னிரண்டு மாவீரர்களையும் வரிசையாக அடுக்கி வைத்து மூட்டிய பெரு நெருப்பு – திரு. நெடுமாறனின் கூற்றை நிரூபித்தது.

நன்றி : ”தீருவில் தீ ”

வெளியீடு மாவீரர் பணிமனை – 1992

தீயினில் எரியாத
தீபங்களே !
எம் தேசத்தில்
நிலையான வேதங்களே!

*****

Pulenthiran-kumarappa
அவர்கள் அவர்களுக்காக அல்ல………..

பலாலியில் வீரமரணமடைந்து தீருவில் தீயுடன் கலந்துவிட்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 10ம் ஆண்டு நினைவாக வெளிவந்த மலரிலிருந்து தேசக்காற்று……

மாரி காலக் கடல்

03-09-97

ரகுவும் பழனியும் அலைகளை ஊடுருவி – இருளைத் துளைத்து – எப்போதும் பழக்கப்பட்ட தமது கண்களால் பார்த்தார்கள்…. சிறிலங்கா கடற்படைப் படகு அவர்களை நோக்கி மின் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது …….

‘கடற்புறாவை’ விரைவாக செலுத்த முயன்றார்கள் .

இயலவில்லை .

புலிகளின் விரைவுப் படகுகளில் ஒன்றல்ல ‘கடற்புறா’ என்பது அவர்களுக்குத் தெரியும் .

பருத்தித்துறைக் கடலில் மலைகளாய் எழுந்து அலைகள் வெறிக்கூத்தாடின.

பதினேழு விடுதலைப் புலிகள் ‘கடற்புறாவில்’ இருந்தார்கள்.
லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட……

நிலைமையைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது .

சிறிலங்கா அரசின் கொடுமைகள் சிறிதும் குறையவில்லை . வல்லாளுமையாளரின் வெறித்தனங்கள்…….

இந்தியாவும், சிறிலங்காவும் சேர்ந்து விரித்த வலை இறுக்கமாக இருந்தது.

பதினேழு விடுதலைப் புலிகளும் நடுக்கடலில் கைதாகி அன்றிரவு சிறிலங்கா கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டார்கள்.

பழனி எதிரியின் கப்பலில் இருந்து கொண்டே கடலைப் பார்த்தான் . பின்பு நீண்டகால நண்பன் ரகுவைப் பார்த்துச் சொன்னான்;

‘’ஆசையோடு நாம் விளையாடித் திரிந்த கடல்’’

முன்பொருநாள் –

சிங்கள சிறிலங்காப் படைகளை எதிர்த்து தமிழீழம் வீறு கொண்டு போராடிய காலம்.

27,10.1986 மாலை நான்கு மணி.

தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து பயிற்சி முடித்த விடுதலைப் புலிகளின் முதற் பெண்கள் படைப்பிரிவு, தமிழீழம் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

கழுத்துகளில் ‘சயனைட்’ மாலைகள் – சிரித்த கலகலப்பான பேச்சு – களம் பார்க்கும் தாகம் – பத்துப் பெண் விடுதலைப் புலிகள் படகில் உட்கார்ந்திருந்தார்கள்.

தமிழீழக் கரையில் அவர்களைச் சேர்க்கும் பொறுப்பு ரகுவப்பாவிடமும், பழனியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

படகைக் கடலில் தள்ளிவிட்டு எல்லோரையும் பார்த்து பழனி சொன்னான்:-

சிரிக்கிறீங்க…… ஒண்டு சொல்லுறன்…. ‘’வழியில சிலவேளை நேவிக் கப்பல் வரலாம்……. ‘’ஹெலி’’ துரத்தலாம் ……அசையாதீங்கோ ….. பதட்டத்திலை குப்பியைக் கடிச்சுப் போடாதேங்கோ …..”

உறுமிக் கொண்டு மின்விசைப்படகு கடலில் பாய்ந்தது.

பெண்களில் ஒருத்தி சொன்னாள் ;

‘’பயப்பிடாதைங்கோ எண்டு சொல்லி எங்களை அவமானப்படுத்திறீங்கள் பழனி அண்ணா!’’

பழனி தனக்குள் சிரித்துக்கொண்டான் . ரகுவப்பாவும் , பழநியும் வல்வெட்டித்துறையில் பேர் போன படகு ஓட்டிகள் …..உறுதி வாய்ந்த விடுதலைப் புலிகள்.

கடற்படை படகுகள் துரத்த – பலமுறைஅவர்கள் எதிரியின் கண்ணில் மண்ணைத்தூவி – கடலைக் கிழித்துப் பறந்திருக்கிறார்கள்.

பலதடவை கடற்போரில் அவர்கள் ஈடுபட வேண்டியிருந்தது . கடற்படையோடு எத்தனையோ முறை மோதியிருக்கிறார்கள். நாகர் கோவில் கடற்கரையில் சிறிலங்கா ‘ஹெலிகொப்டர்’ ஒன்றை அவர்கள் தாக்கி வீழ்த்திய போர் உணர்ச்சி மயமானது.

தமிழீழக் கடலலைகள் கொந்தளித்த வண்ணமே இருந்தன.

கப்பலிலிருந்து அடிக்கடி மத்தாப்புக்கள் வானத்தில் வெடிக்கப்படும் . கடலில் பெரிய வெளிச்சம் அடிக்கும் .படகுகள் பளிச்சென்று அடையாளம் காணப்படும் . படகை நோக்கி குண்டுகள் பறக்கும் ……

இந்தக் கடலில்தான் ரகுவப்பாவும் , பழநியும் விடுதலைப் புலிகளை ஏற்றி இறக்கினார்கள் . அவர்களுடைய படகோட்டம் விடுதலைப் புலிகளின் வீரம் நிறைந்த ஒரு பகுதியே ……

காரிருள் வானத்தை மூடத் தொடங்கிற்று . கடலும் வானமும் இருளாகிக் கொண்டு வந்தது. அவர்கள் இப்போது நடுக் கடலில் இருந்தார்கள் .

இரவு ஆறரை மணி .

திடீரென்று …படகை யாரோ வலிய கைகளால் பற்றி இழுத்தது போன்ற அதிர்ச்சி .

அலைகள் ‘ஓ’ என்று மோதித் தெறித்தன.

கண்களின் முன்னால் படகு உள்ளே குப்புறக் கவிழ்ந்தது . மீனுக்கு விரித்த வலைகளில் ஒன்றில் படகின் வெளி இயந்திரங்கள் சிக்கி……

‘’பொலுத்தீன் பொதிகளைப் பிடித்துக் கொள்ளுங்கோ…..” என்று உரக்கக் கத்தினான்.

‘பொலுத்தீன் ‘ பொதிகளோடு பெண்புலிகள் உட்பட அனைவரும் கோர அலைகளில் மிதந்தார்கள் . ஒரு பொதியோடு லெப் . துர்க்கா….( இவள் பின்னர் உடையார்கட்டுக் காட்டுக்குள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு நடைபெற்ற மோதலில் வீரமரணமடைந்தாள்.)

வசந்தி கவிழ்ந்த படகைப் பற்றிக்கொண்டு மிதந்தவள் ‘’ஐயோ …! பழநி அண்ணா இவள் ஒருத்தி குப்பியைக் கடிக்கிறாள் …..” என்று கூச்சலிட்டாள்.

அந்தப் பெண்புலி அப்போது வசந்திக்கு அருகில் மிதந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் பொங்கி விழுந்து புரண்டன….

ரகுவப்பா மீண்டும் கத்தினான் –

‘’யாரும் சயனைட் கடிக்காதைங்கோ … நங்கள் இருக்கிறம் கரைக்கு போயிடலாம்….. யோசிக்காதேங்கோ.”

அலைகளின் மோதலுக்கிடையில் அரை குறையாகக் கடிபட்ட அவளின் குப்பியைக் கடல் அடித்துக் கொண்டு போயிற்று.

ஆழ்கடலில் – கரைதெரியாத வெறும் நீர்வெளியில் பத்துப் பெண் புலிகள்……

பழநி மூன்று பெண்களின் ‘பொலுத்தீன் ‘ பைகளைப் பிடித்து இழுத்தபடி மெல்ல மெல்ல மன்னாரை நோக்கி நீந்தத் தொடங்கினான் ……போகும் போது அவன் கத்திகொண்டே போனான்.

‘’கெதியாய் வந்திடுவன் ….. போட் ( படகு ) கொண்டு வருவன் பயமில்லாமல் இருங்கோ ….”

பழநியோடும் ரகுவப்பாவோடும் இன்னும் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள் . அவர்களும் படகு கொண்டு வரும் நோக்கில் கரை இருந்த திசை நோக்கி விரைவாக நீந்தத் தொடங்கினார்கள் …..

வசந்தி அவள் பாட்டில் தனியாக அவர்கள் பின்னால் நீந்திக்கொண்டே போனாள்…..முன்பே அவளுக்கு நீச்சல் தெரியும்.

அலைகளின் ஆவேசமான இரைச்சல் …..காற்று வேகமாக உறுமியது. ‘சளாக் !’ என்று அடிக்கடி பெரிய மீன்கள் பாயும் ஓசை.

எட்டு மணிநேரம் கடலோடு கொடுமையான போராட்டம்.

கவிழ்ந்த படகில் உட்கார்ந்திருந்த ரகுவப்பா வானத்தைப் பார்த்தான். கொடிய இருளின் பின்னணியில் வெளிச்சம் காட்டும் விண்மீன்கள்.

அப்போதுதான் –

அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படகை பழநி நடுக்கடலுக்குக் கொண்டு வந்தான்.

நீந்திக் கொண்டே இழுத்துச் சென்ற மூன்று பெண் புலிகளையும் கரையில் சேர்த்துவிட்டுப் பதட்டத்தோடும் – படகோடும் வந்திருந்தான்.

நல்லவேளை யாருக்கும் எதுவும் நடந்து விடவில்லை.

‘பொலுத்தீன்’ பொதிகளோடு மிதந்தவர்கள் படகில் ஏற்றப்பட்டார்கள் . அவர்களுக்கு நம்பிக்கையும் தெம்பும் ஊட்டிக்கொண்டிருந்த ரகுவப்பாவும் கடலில் ஏறினான்.

எட்டு மணிநேரம் கடலலைகளோடு போராடியதால் அனைவரும் களைத்துவிட்டனர். குப்பி கடித்த பெண் போராளி வாந்தி வாந்தியாக எடுத்தாள்……

ஆனால்,

அவள் உடல் நிலை ஆபத்தான நிலையிலில்லை.

காலை மூன்று மணி.

மன்னார்க் கரையில் வெள்ளை மணற்பரப்பில் ரகுவப்பா பழனி உட்பட பெண்புலிகள் அனைவரும் கரையை மிதித்தார்கள்.

தாய் மண்ணின் இனிய கடற்கரைக் காற்று சுகமாக வீசிற்று.

பழனி சயனைட் கடித்தவளைப் பார்த்துச் சொன்னான்:-

‘நான் சொல்லியும் நீ கேட்கவில்லை பார் …. சயனைட் முழுதாக உள்ளே போயிருந்தா உன்ரை நிலை என்ன ஆகியிருக்கும் ….?’

எல்லோரும் சிரித்தார்கள்.

பதட்டத்தில் ‘சயனைட்’ கடிக்க முனைந்ததை நினைத்து அவள் வெட்கப்பட்டாள்.

05.10.1987 காலை

பருத்தித்துறையில் கைதான பதினேழு விடுதலை புலிகளும் பலாலி இந்தியப் படை முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

கொழும்புக்கு அவர்களைக் கொண்டு செல்வதென்பதில் ஜெயவர்த்தனாவின் முடிவு இறுக்கமாக இருந்தது.

மாவீரன் புலேந்திரன் , சிங்கள இனவெறியர்களின் கண்ணில் மண்ணைத் தைத்தான் . தமிழ் மண்ணான திருகோணமலையைப் பறிக்க முனைந்த சிங்களக் காடையர்களை ஓட ஓட விரட்டியவன் புலேந்திரன் . எப்படியும் கொழும்புக்குக் கொண்டு சென்று ஆசை தீர அவனைச் சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும் என்று அவர்கள் துடித்தார்கள் .

விடுதலைப் புலிகள் பொதுமன்னிப்பளிக்கப்பட்டவர்கள் என்பதும் , அவர்களைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு செல்வது உடன்படிக்கைக்கு முரணானது என்பதும் புலிகளின் நிலைப்பாடு.

பலாலியில் அடைக்கப்பட்டிருந்த லெப். கேணல் குமரப்பாவும், புலேந்திரனும், மேஜர் அப்துல்லாவும் ஏனைய பதின்நான்கு புலிகளும் கொண்டிருந்த உறுதி வைரமானது.

‘’கொழும்புக்கு கொண்டு சென்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்று அவர்கள் சிறிலங்கா அரசையும் – இந்திய அரசையும் எச்சரித்திருந்தார்கள்.

பலாலி முகாமில் ரகுவப்பாவும், பழனியும் நெஞ்சில் பழைய நினைவுகள் அலைபாய….

வசந்தி கண்முன் வருகிறாள்……

அன்று –

கடலில் தனியாக நீந்திக் கரை சேர்ந்த விடுதலைப் புலி வசந்தி , பின்பு ஒரு நாள் தன் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் கழுத்தில் குண்டுபட்டு – உடலை அசைக்க முடியாதவளாக – இன்று படுத்த படுக்கையாக …..

கொழுத்த கடலலைகளை உதைத்துத் தள்ளி வசந்தி அன்று நீந்தியதை ரகுவப்பா நினைவுக்குக் கொண்டுவந்தான் …

காலக்காற்று எப்படியெல்லாம் மாறி மாறிச் சுழல்கின்றது.
எத்தனயோ புலிகளைக் கரையேற்றிய ரகுவப்பாவும், பழனியும் கடலிலே கைதாகி இன்று பலாலி முகாமில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் .

பதினேழு பேரில் –

திருமணமான புலிகள் மூவர் குமரப்பா, புலேந்திரன், கரன்….

குமாரப்பாவுக்குப் போன திங்கள் தான் திருமணம் நடந்தது…. மூன்று திங்களுக்கு முன்பு புலேந்திரனின் திருமணம்…. கரன் திருமணமாகி குழந்தைகளும் குடும்பமுமாய்….

பகல் 11 மணி ஆயிற்று.

பழனியின் மனதில் புலிகளை வழக்கமாகப் படகில் ஏற்றிக் கொண்டு புறப்படும் போது – அவர்களைப் பார்த்துக் கூறும் அந்தப் பழகிப் போன சொற்கள் நினைவுக்கு வந்தன;

‘’நாங்கள் இருக்கிறம் – பயப்பிடாதேங்கோ – அசையாதேங்கோ – என்ன நடந்தாலும் குப்பியைக் கடிச்சுப் போடாதேங்கோ ….”

பழனி நினைவிலிருந்து முழுமையாக மீளவில்லை….

அவர்கள் தங்கியிருந்த அறையின் கண்ணாடி யன்னல்கள் உடைந்து நொருங்கி விழும் கொடிய ஓசை காதைப் பிழந்தது. சிறிலங்காப் படை வெறியர்கள் ‘’திமு திமு’’ என்று உள்ளே துப்பாக்கிகளோடு பாய்ந்தார்கள்.

எதிர்பார்த்ததுதான்……

வெறுங் கைகளோடிருந்த புலிப்படை முரட்டுத்தனமான ஆயுத பாணிகளைப் புயலின் வீச்சில் மோதிற்று. எதிரிகள் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

சாவதென்று முடிவு செய்து விட்ட வீரனின் வெறுங்கை சம்பளத்துக்கு படைவீரனாக இருப்பவனின் துப்பாக்கியை விட வலிமையானதே.

‘குப்பியைக் கடியுங்கோடா’ ….. என்று கத்தினான் புலேந்தி.

நொடியில் – விடுதலைப் புலிகளின் பதினேழு உடல்கள் சிங்களப் படை வண்டியில் தூக்கி வீசப்பட்டன.

பன்னிரண்டு பிணங்களாக ……ரகுவப்பாவும் பழனியும் கூடத்தான்.

– களத்தில் (08.10.1997) இதழிலிருந்து

ஒக்ரோபர் 4, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , | தீருவில் தீயில் தியாக தீபங்கள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்…….

BT Maj Pugazharasan

புவீத்திரன்! அவன் ஒரு குழந்தை.

வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன்.

மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான்.

சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் .

பக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்?” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்துபோய் விடுகின்றவன் அவன்.

ஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கேட்டது என்றால், அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடிவேலைகள் செய்து கொண்டிருப்பான்.

சப்பாத்து கட்டாயம் அணியவேண்டிய அவனது பள்ளிகூடத்தில் ஏழை நண்பனொருவன். “அம்மா காசுக்கு கஸ்ரபடுறா….” என்று மனவேதனைப்பட்ட போது, அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன்.

குடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, “காலையில கூடச் சாப்பிடேல மச்சான் ….” என்று விம்மிய உற்ற நண்பனிடம், அவன் அடியோடு மறுமறுக்க கையில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான புவீத்திரன்.

ஒரு மென்மையான் உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறிக்கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கேட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்கூட நாங்கள் கேட்டதில்லை.

வீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி. பிற்காலத்தில், இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தாலும் அவன் தன்னைத்தானே நோந்துகொல்வானே தவிர, மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்கு தெரியும்; ஆனால், நியாயம் கதைக்க மாட்டான். பொய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான்.

Major Valavan

அது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான், குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான்.

அவனுக்கு 12 வயதே இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்ப வரவில்லை; அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள்.

புவீந்திரன் அழுதான், அப்போது அவனுக்கு அது மட்டும்தானே தெரியும். ஆனால், அம்மாவின் இழப்பு அந்த பிஞ்சு உள்ளத்தில்ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது.

ஓய்வாக இருக்கும் கருக்கள் பொழுதுகளில் அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார் சுதந்திரத்தை நோக்கிய எழுட்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம், கியூபா, தென்னாபிரிக்கா என அது நீளும். புவீத்திரன் மட்டும் ஆர்வத்தோடு இருந்து கேட்டான். ஏற்கனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கபடுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம், படக்கதைகளைக் கேட்கும்போது, ஒடுக்கப்படும் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை மனத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்த போராட்டங்களின் நியாயத் தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டு பார்த்து விழிக்கும் எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமென இருக்கும்.

இந்த விழிப்புணர்வோடும், மனவுறுதியோடும், இதயத்தை பிழியச்செய்கிற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்துதான்; அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்ககூடும்.

புவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார் ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருகின்ற பிள்ளைப்பாசம் வெளிப்பாடு கண்டபோது, வந்தவர் அப்பாவிடம் சொன்னதை, அப்பா மகனிடம் கேட்டார். “தம்பி… வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து … வீட்டோட நிக்கலாம் தானே?….” அப்பா இழுக்க, மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான்.

“இயக்கத்திற்க்கு போனது, விலத்திக்கொண்டு வாரத்துக்கில்லை; நான் போனது நாட்டுக்காகப் போராட… திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்திலை நான் சாகவும் கூடும், அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை.…” வந்தவருக்கும் அப்பாவும் மெளனித்துப் போனார்கள்.

கூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்தபின் பிரிகின்ற நேரத்தில், “நீ இப்ப நொண்டி தானேடா…… இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம்…. விட்டுட்டு வாவன்ரா….” கேலி செய்தார்களாம்.

ஒரு மணித்துளி திகைத்துப்போனவன், நின்று திரும்பி நிதானமாக சொன்னான்.

“எனக்கு கால்தான் நொண்டி, என்ர மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாய் போச்சுதே இல்லாம, உள்ளம் எப்பவும் உறுதியாய் தான் இருக்கின்றது. அங்கங்கள் போனதைப்பற்றி எனக்குக் கவலையில்லையடா….. மனதில் உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டேன். பெரிய சாதனை ஒன்றை செய்துதான் சாவேன்……”

அந்த நண்பர்களுக்கு அது அப்போது புரியவில்லை; சிரித்துக்கொண்டு போனவர்கள்; ஆனால், இப்போது வியத்து நிற்கின்றார்கள்.

“பிரபல கரும்புலி போறார்” இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள்.

ஆனையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால், ‘பெல்ட்’ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து இழுத்து, ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான்.

அவனை ஒரு “கரும்புலிப் பைத்தியம்” என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே, ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன.

எவருமில்லாத தனியறையொன்றில், ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு, நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிற்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருப்படுத்திக் கொண்டு, வரைபடத்தைத் தடியால் தொட்டுக்காட்டி, அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான்.

“…..டோறா இதாலதான் வரும்……”

“…..உங்கட வண்டிகள் இந்த மாதிரி வியூகத்தில அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும்…..”

” ….அந்த நேரம், இந்த விதமாகப் பக்கவாட்டில், உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்….”

“…..டோறா புகையாகும்……”

ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும், அவனைப் பார்க்க சிரிப்புதான் வரும்.

புவீந்திரன்!

அவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல; வித்தியாசமான மனிதனும் கூட.

அவன் அமைதியானவன்; ஆனால் சொம்போறியல்ல, உற்சாகமானவன். ஆனால் குளப்படிக்காரனல்ல.

அவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம்.

அவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டுமே தான் காணமுடியும்.

இயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இயற்கைக் குணம். அடுத்தவர்கள் அவனில் இரக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும்.

இயலாத காலோடும்கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும் விதமாக அவன் செயற்படுவான்.

கிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலை ஒன்றிற்கான அழைப்பின் பெயரில், துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால், அவன் திரும்பி வரும்போது அவனது உடுப்புகள்முற்றத்து வெளியில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன்தான் புவீந்திரன்.

முகாமிற்கு யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால், அவர்களை உபசரிக்க, அன்றைய ‘முறை ஆளை’த் தேடித்திரிந்து, பின் மூலையில் போய்ப் பிடித்துவந்து விடுவதற்கிடையில்…… வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு, அவன் பேணிகளை கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன்.

ஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சுப் பொறிப்பது பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக்கொண்டிருந்தவன். கொஞ்ச நாட்களில், மற்றவர்கள் மெச்சக்கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான்.

அறிக்கைகள், கடிதங்கள், விபரக்கோவைகள், அது இது என்று. நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்துபோய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும், கவிதை, கட்டுரைகளை எழுதிக்கொண்டு வந்து, “இதையும் ஒருக்கால்….” என்று கெஞ்சுகின்ற நண்பர்களிடமும் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப்பைக்குள் மடித்து வைப்பான் காலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1அல்லது 2 மணிவரை இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி, அதன் பிறகும் விழித்திருந்து, நண்பர்களுடையதையும் அடித்துக் கொடுக்கின்ற நண்பன்.

புவீந்திரன்!
புலி வீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம்.
உன்னோடு வாழ்ந்த நாட்கள், எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள்.

சூம்பிக் கிடக்கும் காலோடும் உன்னைத் தூக்கிக்கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம், சிறு பிள்ளை மாதிரித் தத்தளித்து கையைக் காலை வயசுக்கு விசுக்கி, ஓயாத முயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்திப் பழகினாய்.

“பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன் கூட சரியாய் அடிக்கமாட்டான்….” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டு, பயிற்சி முகாமிலிருந்து அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் “ரச்” தந்த போது, வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டு, ரைபிள் பிடித்துச் சொல்லித்தர, நீ மட்டுமே ஒரு “புல்”லும், ஒரு “நைனும்” அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய்.

எதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான உன்னிடம். நல்லதற்ற ஒரு வார்த்தையச் சொல்லி “இன்னாரிடம் கேட்டுப் பார் அர்த்தம் சொல்லுவார்……” என்று அனுப்பிவிட்டால், அங்கு சென்று நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய்.

கால் இயலாமல் இருந்தும். மெல்ல மெல்ல படகோட்டப் பழகி, கிளாலிக் களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில், அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப்படகுகளிற்கு ஒட்டியாய் இருந்தாய்.

இன்னும்…. இன்னும்…..

இவையெல்லாம், எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும்.

புவீந்திரன் !
சாதனையொன்றைச் செய்துதான் சாவேன் என்றாயா? சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல; அது சாதனைகளின் ஒரு குவியல்.

“கனோன்” எடுத்து சாதனை. அது இரண்டாக இருந்ததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு “பிப்ரி” எடுத்தது இன்னொரு சாதனை. டோறா ஒன்றை முழுமையாக் நொறுக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொல்லப்பட்டது வேறொரு சாதனை .

“ஆசிரீல ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் என்று சாள்ஸ் அண்ணன் சொல்லுறவர்….” என்று அடிக்கடி. கூறும் நீ, “இப்ப நாங்கள் அடிக்கப் போறம். ஆனால், அதைப் பார்க்கிறத்துக்கு அவர் தான் இல்லை” என்று கவலைப்படுவாய்.

அந்தத் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டது.

கட்டைக்காட்டிலிருந்து…., பலாலிக்கு ரோந்து செல்லும் டோறாவை, பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும், காங்கேசன் துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்த தாக்குதல் மையம் இருந்தது.

மணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள்.

உங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும்.

உள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய அந்த நாளில் உங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது.

சோகம் பரவிய முகத்தோடு, உன்னைக் கைதொட்டுத் தடவி, “எந்தக் காலிலையப்பன் வெடி பிடிச்சது?….” என்று, அக்கறையோடு தலைவர் விசாரித்தபோது, மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம்.

எல்லாமே தயார்.

தக்கைவண்டி, சண்டைப்படகுகள், தாக்குதற் கருவிகள், தாக்கும் வீரர்கள், மணியரசன், நீ …. எல்லாமே….., ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காக கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள்.

நள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விடவேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக்கொண்டிருக்கும்.

மறுநாள் மதியமோ, மாலைவரையோ அந்தத் தேடல் நீடிக்கும்.

எதிரி வரமாட்டான், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள்.

உற்சாகம் குன்றாமல், உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள்.

29.08.1993 அன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிடுந்தவன் கடலில் வந்தான்.

பொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா?

காத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல்.

தனியறையில் “வரைபடத்தை விரித்துவைத்து, நீ காற்றுக்கும் விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம்” எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது .

அப்போது நாங்கள் சிரித்தோம்.
இப்போது….

இரண்டு “கனன் பீரங்கி”களையும், இரண்டு “பிப்ரி கலிபர்” களையும் மூழ்கிக்கொண்டிருந்த “டோறா” விலிருந்து தோழர்கள் எடுத்துக்கொண்டு வந்தார்கள் .

புவீந்திரன் வரமாட்டான்……!
மணியரசனும் வரமாட்டான்….!

– விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993)

ஓகஸ்ட் 29, 2014 Posted by | ஆவணி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , | பின்னூட்டமொன்றை இடுக