அழியாச்சுடர்கள்

வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் [ மார்ச் 26, 2007 ]

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.

வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.

செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 – இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை
ஆகஸ்டு 11, 2006 – யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 – அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26 மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.

26 ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ளகொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர்கொல்லப்பட்டனர்.

நன்றி..

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

            

     

மார்ச் 26, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவரலாறு | , , , , | வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்?

    வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்? என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.

இதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுவதோ, தகனம் செய்யப்படுவதோ நடந்து வந்தது. ஆனால், இனிமேல் வீரமரணமடையும் அனைத்துப் புலிவீரர்களின் உடல்களையும் புதைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப் போராளியின் பெயர் கூறும் கல்லறைகள் எழுப்பப்பட்டு அவை தேசிய நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும். இவைகள் காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

தாங்கள் வீரமரணமடைந்தால் தங்களுடைய உடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைத்து அங்கே நினைவுக்கற்கள் நாட்டப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும். இந்த விருப்பம் மிக அண்மையில் ஏற்பட்ட தொன்றல்ல. இந்திய – புலிகள் போர்க் காலத்தில் வன்னிக் காட்டுக்குள்ளேயே போராளிகளின் இவ் விருப்பங்கள் வெளிப்படத் தொடங்கி விட்டன. பிரதானமாகத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த மணலாற்று காட்டுக்குள்ளேயே இவ் விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் செயல்வடிவங்களும் கொடுக்கப்பட்டது.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக கடும் சமர்கள் நடந்த இடம் மணலாறு என்பது தெரிந்ததே. இந்தியப் படைகளுடனான போரில் நாம் சந்தித்த வெற்றிக்கு அத்திவாரமாக இருந்தது மணலாற்றுக் காட்டில் நாம்கண்ட வெற்றிதான். இந்தச் சமர்களில் எமது போராளிகள் பெற்ற வெற்றிக்கு மணலாற்றுக்காடு உறுதுணையாக இருந்தது. இதனால் தங்களுடைய போராட்ட வாழ்வில் ஒன்றிக்கலந்து உறுதுணையாக இருந்த அந்த நிலத்திலேயே தங்களது உடல்களும் புதைக்கப்பட வேண்டும் எனப் போராளிகள் விரும்பினார்கள்.

மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய போராளிகள் பலர் தாங்கள் எங்கேசென்று போராடி வீரமரணமடைந்தாலும் தங்களது உடல்கள் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குள்தான் புதைக்கப்படவேண்டும் என எழுத்து மூலம், வாய் மூலம் தலைவர் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படியே அவர்களது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இதன் காரணமாக இன்று மணலாற்றுக் காட்டுக்குள் பெரியதொரு மாவீரர் துயிலும் இல்லம் போராட்டக் கதைகளைக் கூறிக்கொண்டே இருக்கின்றது. இதேபோன்று மற்றைய மாவட்டங்களிலும் சிறிய சிறிய அளவுகளில் காடுகளுக்குள் போராளிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இவ்விதம் தங்களது உடல்கள் சொந்த மண்ணுடன் கலக்கப்பட வேண்டும் என்ற போரளிகளது மன விருப்பத்தையும் அதன் பின்னால் இருந்த ஆத்மதிருப்தியையும் பார்த்தோம். இனி போராளிகளது உடல்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் இடையில் இருக்கும் மானிட உணர்வுகளையும், அதன் பிரதிபலிப்புக்களையும், மனோவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பார்ப்போம். அப்போது பாரிய உண்மைகளை நாம் கண்டுகொள்ளலாம்.

மரபு வழியாக தமிழர்களிடம் இருந்துவரும் சம்பிரதாயங்களின்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை என அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த வாதத்தை இம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த போராளிகள் விடயத்தில் ஒப்புநோக்க முடியாது. போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.

அதாவது, போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன்படும். எனவேதான் போராளிகளது உடல்களைப் புதைத்து கல்லறைகளை எழுப்பி அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச் சின்னமாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகின்றோம். இன்றுவரை 3750ற்கும் மேற்பட்ட புலிவீரர்கள் வீரமரணமடைந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தால் எமது விடுதலைப் போராட்டம் உயர்ந்ததொரு கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இவர்களது நினைவை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் சின்னங்கள் எம்மிடம் உண்டா? எனக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் கிடைக்கும்.

இப் போராளிகள் அனைவருக்கும் அவர்கள் பெயர் கூறும் கல்லறைகள் கட்டப்பட்டால் அவற்றைக் கண்ணுறும் அனைத்து மக்களும் சுதந்திரத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்வதுடன் அதை வென்றெடுக்க போராளிகள் கொடுத்த உயிர்விலையையும் உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்வார்கள்.

அன்பிற்குரிய எமது பெற்றோர்களே, மக்களே!

எமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு காலங்காலமாக இருந்து வந்த சம்பிரதாயம், சாஸ்திரங்களுக்கு முரணாக இருக்கிறது என நீங்கள் கருதலாம். ஆனால், உங்களது பிள்ளைகளான புலிவீரர்கள் இந்தச் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொதுச் சொத்தாக, பொக்கிசமாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, எமது சக தோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதைப் பாதித்திருக்கின்றன. அதாவது, பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்டிருக்கின்றோம். என்னதான் எமது தோழர்கள் சூழ்ந்து நின்று தகன நிகழ்சியை நடத்தினாலும்கூட, அப் போராளியைப் பெற்றெடுத்து – சீராட்டி வளர்த்தெடுத்த தாய் – தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ இல்லாதது எமது மனதை நெருடுகின்றது. போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வரமுடியாது விட்டாலும் நாளை இப் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக் காட்டப் போகின்றோம்? ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம்? அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும், அங்கலாய்ப்பையும் அனுபவவாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம்.

எனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காது விட்டாலும் கூட அவனது உடல் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஓரளவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவி செய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப் பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள். கல்லறைகளை அமைத்து அடிக்கடி அங்கே செல்வது சோகத்தை தொடர்ந்தும் மனங்களில் வைத்திருப்பதற்காகவா? என ஒரு கேள்வி எழலாம்.

அன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானது தான். ஆனால் அந்தச் சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாது தானே! கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும். எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக புதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா? என யாராவது வினா எழுப்பலாம்.

நீண்டகாலம் தொட்டு இருந்து வரும் தகனம் செய்வது தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானுற்று இலக்கியமும் ஈமத்தாழி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் இதை நிரூபிக்கப் போதுமானது.
ஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும், உண்மையில் இந்த முறையை ஒரு சமூக சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டும் பொருந்தும். இது பொதுமக்களிற்கல்ல. எனவே இங்கே பண்பாட்டுப்பிரச்சனை எழநியாயமில்லை. அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக் கிரியை நிகழ்ச்சி அல்ல, அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சரித்திர தியாகத்தின் சின்னம்.

சரி அப்படி புதைத்து எழுப்பப்பட்ட கல்லறைகளை இராணுவம் அழிக்காதா? அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா? எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா? எனவும் கேள்வி எழலாம். தியாகி சிவகுமாரனுக்கு உரும்பராயில் அமைக்கப்பட்ட சிலையையும் மன்னார் தளபதி லெப்.கேணல் விக்டரது கல்லறையையும் சிங்களப் படைகள் சிதைத்ததையும் மனதில் வைத்து மேற்குறித்த கேள்விகள் எழுவது நியாயமானது.

போரில் கொல்லப்பட்ட எதிரி இராணுவ வீரனது கல்லறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண போர் தர்மம். ஆனால் அதை சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கும் என உறுதி கூறமுடியாதுதான். ஆக்கிரமிப்பு இராணுவமாக இங்கு செயற்பட்டு அதானால் இங்கு கொல்லப்பட்ட இந்திய ஜவான்களுக்காக இந்திய அரசு எமது மண்ணிலேயே அமைத்த நினைவுச் சின்னங்களை இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்ட பின்பும்கூட நாம் உடைத்தெறியவில்லை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.

ஆனால், எமது மண்ணில் எமது போராளிகளுக்கு எமது மக்கள் அமைத்த நினைவுத் துண்களையும், கல்லறைகளையும் சிங்கள இராணுவம் உடைத்தெறிவதையிட்டு நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் அதையிட்டு சிங்கள இனம் வெட்கப்படட்டும். இறுதியாக ஒன்று சொல்கிறோம். முழுமையாகவே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது தாய்மண்ணை விடுவிக்கும் போரில் வீரமரணமடையும் ஒரு வேங்கை கேட்பது ஆறு அடி நிலத்தை மட்டுமே.

விடுதலைப் புலிகள்
(ஐப்பசி – கார்த்திகை 1991)

http://eelavarkural.blogspot.com/2008/09/blog-post_505.html

நவம்பர் 21, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழீழ கட்டமைப்புகள், தமிழீழச் சின்னங்கள், மாவீரர் நாள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , | போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளம் – இரண்டாம் லெப்டினன்ட் மாலதி !

இன்று இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் 32ஆவது ஆண்டு நினைவுநாள்.

மாலதி வீரயுகத்தின் முதற்பெண் மாவீரர். தாயகத்தின் மன்னார்மாவட்ட ஆட்காட்டிவெளியில் மட்டுமே அறியப்பட்டிருந்த அந்தப்பெண், கருவிஏந்திக் களமாடி, தன்னுயிர்விதைத்து, தாயகம்தாண்டி உலகம்முழுவதும் தன்னைப் பதியவைத்துக்கொண்டாள் என்பதுதான் அவளின் சிறப்பு. பெண்ணற் பெருந்தக்க யாவுள? என்போர்க்கான விடையாக தன் வாழ்வை முன்னிறுத்தியவள் மாலதி.

சிறுபருவம்விட்டு வளரவளர அந்தப்பெண்மனதுக்குள் இருந்த முரட்டுக்குணமும் பிடிவாதமும் காலப்போக்கில் இரக்கமும் பிறருக்கு உதவும் பண்புமாக மாற்றம்கண்டன. முன்னர் சகாயசீலியாக இருந்தவள் அப்போது மாலதியாகிவிட்டிருந்தாள்.

அவளுக்குள் அச்சம் இல்லை. எதற்கும் அடிமைப்பட்டுப்போகும் இயல்பும் இல்லை. தற்துணிவு மட்டுமே பெரிதாகவிருந்தது. அந்த துணிவும் தன்நம்பிக்கையும்தான் அவளை ஈழப்பெண்ணினத்தின் அடையாளமாக்கியது.

போராட்டம் விரிவடையத்தொடங்குவதற்கு முற்பட்ட காலத் தில் தமிழ்ச்சமுகத்தில் பெண்கள் பேதைகளாகவும், பெறுமதியற்றவர்களாகவும் கணிக்கப்பட்டார்கள். பெண்ணின் சுயசிந்தனைகளோ அவளது தனித்துவமான ஆளுமைகளோ சமுகத்தால் அங்கீகரிக்கப்படாதிருந்தது. எடுத்துக்காட்டாக ஒருவர் கயிற்றை தவறாகக் கட்டினால்,?
‘ என்ன… பெட்டைக்கட்டுக் கட்டுகிறாய்?… ‘ என பழித்த காலம் அது. கண்களையும் காதுகளையும் இறுக மூடி, பெண்கள் கற்களாய் சமைந்திருந்த காலம் அது.

ஓரிருவர் தம்மீதான கட்டுக்களை உடைத்த கணப்பொழுதுகளில், அது அவர்களின் நடத்தைப்பிழையாகப் பார்க்கப்பட்ட காலம். அந்தக்காலத்தை மெதுமெதுவாய்க் கரைத்து பெண்களின் பேரெழுச்சிக்கு வித்திட்டவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்கள். தேசியத்தலைவர் அவர்களின் பெரும்படையில் இணைந்து தன்னைப் புதுப்பித்து, புதுமைப்பெண்ணாய் நிமிர்ந்தவர்களில் மாலதி முதற்பெண் மாவீரர்.

குடும்பத்தின் செல்லப்பெண்ணாய் எப்போதும் கலகலப்பாய் வாழ்ந்த மாலதி, பெண்ணடிமைச் சமுகத்தின் ஆழப்புரையோடிய அழுக்குகளை அகற்றும் புரட்சிப்பெண்ணாகினாள். போர் அவளுக்குள் பல்வேறு எண்ணங்களைக் கிளர்;த்திவிட்டிருந்தது.

எங்கள் தாய்த்தேசம் விடியவேண்டுமென்றால் வெறுமனே மண்மீட்புப்போர் மட்டும் போதாது, பெண்ணினமும் விடுதலையடையவேண்டும் என்ற எங்களின் தேசியத்தலைவரின் எண்ணத்தைப் புரிந்தவளாய் மாலதி தோற்றம்பெற்றாள்.

வீட்டைவிட்டு பெண்கள் வெளியேறுதல் சாத்தியமற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் கோட்டைப்பகுதியில் அவள்தன் தோழியருடன் காவற்கடமையில் நின்றாள். காத்து, கறுப்பு எனப் பெண்களை சமுகம் அச்சுறுத்தி வைத்திருந்த அக்காலத்தில் நள்ளிரவுகளில் காவற்பெண்ணாய் அவள் விழித்திருந்தாள்.

களமுனைகளிலும் மாலதியின் பங்களிப்பு இருந்தது. அரசியலிலும் அவளின் பங்களிப்பு இருந்தது. 1987இல் ஈழத்தமிழர்களின் இருண்டகாலம். இந்திய அமைதிப்படை ஈழத்தில் காலடிகள் பதித்திருந்த காலம். மாலதி யாழ்ப்பாணத்தில் தோழியருடனிருந்தாள்.

1987 இல்… தியாகதீபம் லெப்.கேணல்.திலீபனின் ஈகச்சாவுடன், தமிழ்மக்கள் இந்திய அமைதிப்படையை முற்றாக வெறுக்கத் தொடங்கியிருந்தனர். நாளாகநாளாக இந்திய அமைதிப்படையினருடனான முறுகல்நிலை இறுக்கமடையத் தொடங்கியது.

லெப்.கேணல்.குமரப்பா, லெப்.கேணல்.புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளின் மரணம் போரை உறுதிப்படுத்திற்று. மாலதியும் இன்னுஞ்சில தோழியரும் கோப்பாயில் கிறேசர்சந்தியில் ஊர்திகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போதுதான் முகாமைவிட்டு வெளியேவந்த இந்திய அமைதிப்படையினருக்கும் கண்காணிப்புக் கடமையில் நின்றவர்களுக்குமிடையில் போர்வெடித்தது. மாலதி விழுப்புண்ணுற்றாள். அங்கே அவளது வீரமரணம் உறுதியாயிற்று. இது நடந்து இன்று 32 ஆண்டுகள் உருண்டுவிட்டன.
பெண்ணினத்தினதும் தமிழினத்தினதும் விடிவுக்காக ஓர் இலட்சியப்பாதையில் பயணித்து, மாலதி உயிரீந்த 32 ஆண்டுகளில் பெண்ணினத்தின் நிலை எப்படி இருக்கின்றது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக இன்று இருக்கின்றோம்.

அந்நியப்படையினருடன் நேர்நின்றெதிர்த்து, தன்னினவிடுதலைக்காய் முதற்பெண் மாவீரராகிய மாலதியின் பெயர்தாங்கிய ‘ மாலதி படையணி ‘ தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டது.

விடுதலைப்போராட்டத்தில் எமது தமழ்ப்பெண்களை இணைத்துக்கொள்வதன் மூலம், சமுகத்தில் ஆளுமைகள், ஆற்றல்களிருந்தும் வெளிவரமுடியாப் பெண்ணினத்தை விழிக்கச் செய்து, எமது இனத்தின் விடுதலைக்கு வலிமைசேர்க்க முடியும் என்பதே தேசியத் தலைவர் அவர்களின் எண்ணமாக இருந்தது. பெண்மனங்களில் ஏற்படக்கூடிய விழிப்புநிலைதான் பெண்களின்மீதான அனைத்து அடக்குமுறைகளையும் தகர்த்தெறியும் என்பதை மாலதி உணர்த்தினாள்.

மனித ஆளுமை என்பது ஆண், பெண் என்கின்ற பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்கின்ற தேசியத்தலைவரின் எண்ணக் கருத்திற்கமைய, பெண்போராளிகள் அளப்பரிய சாதனைகளையும் வீர வரலாறுகளையும் படைத்து, தங்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். பெண்போராளிகள் வெறுமனே வீரத்தில் மட்டும் சிறந்தோங்கவில்லை. அரசியல், இராணுவம், மருத்துவம், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரிணமித்தார்கள். நெருக்கடியான பல்வேறு சூழல்களில் துணிச்சலான முடிவுகளை வகுத்து வெற்றிகளைக் குவித்தார்கள். போர்க்களம் என்பது எத்தனை ஆபத்துகள் நிறைந்தது என்பதைத் தெரிந்துகொண்டே பெண்கள் களமுனைகளில் நின்று, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தார்கள்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சமடைந்திருந்த எங்கள் மண்மீட்புப் போராட்டம், பல்வேறு அரசியற் சூழ்ச்சிகளின் பின்னணியில் நந்திக்கடலில் மௌனித்தது. இது ஒரு போராட்ட வடிவமாற்றம் என்பதைப்புரிந்து கொள்ளாதவர்கள் ஒருபுறமிருக்க, தமிழ்ப்பெண்களின் நிலைகுறித்து நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். தாயகத்தில் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் எமது பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். போரின் அமைதி பெண்களின் வாழ்வையே புரட்டிப்போட்டிருக்கின்றது. உயிர் அச்சுறுத்தல்கள் மட்டுமன்றி, பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகியே காணப்படுகிறது. என்றுமில்லாதளவுக்கு துயரமான மனதோடு பெண்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவுதான் தற்துணிபு கொண்டிருந்தாலும் தமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும் முழுமையாக வெளிப்படுத்தமுடியாத சூழல் பெண்களைச் சிக்கவைத்துள்ளது. போரினால் ஏற்பட்ட உள, உடல் வடுக்களேர்டு வாழும் பெண்களின் உணர்வுகள் சொல்லிமாளாது. பெண்களின் வாழ்வாதாரம் எவராலும் உறுதிசெய்யப்படவில்லை. பாலியற் சுரண்டல்கள் மலிந்துகிடக்கின்றன. பெண்குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன.

உறவுகளை இழந்தும், காணாமலாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைத்தேடியும் அலைந்துலையும் பெண்களின் வாழ்வு கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.

தாய்நிலத்தில் மட்டுமன்றி, மறுவளமாகப் புலத்திலுள்ள பெண்கள் குறித்த சிந்தனைகளும் முன்வைக்கப்படவேண்டும். புலத்துப் பெண்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாகவே உள்ளனர். மணிக்கூட்டுடன் சேர்ந்து ஓடும் புலத்தின் வாழ்க்கையிலும், வசதிகள், சுதந்திரமான போக்கு என்பதற்கு அப்பால் தம்மைச்சுற்றியுள்ள போலிமாயைகளைப் பெண்கள் பகுத்துணர்ந்து, அதனூடாக தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியவர்களாக பெண்கள் உள்ளனர். மூத்த தலைமுறையினரால் கைவிடப்படமுடியாத சடங்குகளும் சம்பிரதாயங்களும் இளையதலைமுறையினர் பலருக்கு மனநெருக்கடி தருவனவாக தெரிகின்றன. அத்தோடு இரட்டைக் கலாசார கடைப்பிடிப்பு முரண்நிலைகளையும் தோற்றுவித்திருக்கின்றது. பண்பாட்டுக்கும் பகட்டுக்குமான இடைவெளி இன்னமும் புரிந்துகொள்ளப்படவேண்டியிருக்கின்றது.

கருணையுள்ளமும், கொடைமனப்பாங்கும் காணப்பட்டாலும் பழைமைவாத எண்ணங்களில் நம்பிக்கைகொண்டு அவற்றில் ஆழ்ந்து தன்நிலை மறந்துவிடுபவர்களையும் தரிசிக்க முடிகிறது. மிகவும் கடினமான காலநிலைகளிலும் சலிப்பற்று, வலிமையுடன் உழைக்கும் பெண்கள் தம்வாழ்வுடன் சேர்த்து தம்நுண்ணறிவையும் பெருக்கிக்கொள்வது அவசியமாகிறது.
நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், கல்விச் செருக்கும் கொண்ட ஆளுமைமிக்கதொரு புதியதலைமுறைப் பெண்கள் பலர் புலத்தில் இருந்தாலும் அவர்கள் சரியான வழியில் வழிநடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்தே காணப்படுகின்றன. புதிய விளைநிலமான இவர்களின் மனதில் வீரியமுள்ள விதைகளை ஊன்றவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தாய்மாருக்குரியது. பேரிருளாக மூடிக்கிடக்கும் அறியாமையை உடைத்தெறிந்து, எமது தேசமீட்புக்கான புதியஎண்ணக்கருத்துகளை எண்ணிச் செயற்படுவதுதான் புலத்துப்பெண்களின் இன்றைய தேவையாக உள்ளது.

பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்ற காலத்தை மாற்றி, பெண்ணென்றால் படையும் நடுங்கும் என்ற காலத்தைப் படைத்தவர்கள் எங்கள் மானத்தமிழ் மறப்பெண்கள். அவர்கள் படைத்துள்ள வரலாற்றை நாங்கள் பேணிக்காத்து, அடுத்த தலைமுறையினரின் கைகளில் ஒப்படைக்கவேண்டும். எழுச்சியும் புரட்சியும் மிக்க பெண்களால் மட்டுமே தம் தேசத்தையும் தமது அடுத்த தலைமுறையினரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

– சிவசக்தி-

ஒக்ரோபர் 9, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , , | ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளம் – இரண்டாம் லெப்டினன்ட் மாலதி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 9 -காணொளிகள்

black-tigers-1-3

உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 9

Full VERSION

உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 9

செப்ரெம்பர் 30, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவரலாறு | , , , , , , , | உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 9 -காணொளிகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 8- காணொளிகள்

black-tigers-1-3

உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 8

செப்ரெம்பர் 30, 2019 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், வீரவரலாறு | , , , , , , , | உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 8- காணொளிகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது