அழியாச்சுடர்கள்

மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் !

kilinochi-maaveerar-day-2016-5மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்து மாவீரர் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

போரில் சிதைக்கப்பட்ட துயிலும் இல்லம்

நானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றேன். ஒரு காலத்தில் அமைதியுடன் செழித்த ஒரு பூந்தோட்டம் போலக் காட்சி அளித்த மாவீரர் துயிலும் இல்லத்தை 2009இல் கிளிநொச்சியை கைப்பற்றியபோது இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு.

2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர். போரின் பின்னர் இந்த வருடம் எட்டாவது மாவீரர் தினம். கடந்த மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடகிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து ஈழத் மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மாவீரர் நாள்

2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. இந்த ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். எனினும் மாவீரர்களுக்காய் விளக்குகள் ஏற்றப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மக்களால் செல்ல இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை நினைந்து கண்ணீர்விட இயலவில்லை. இவை தமிழர் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. நவம்பர் 25 ஆம் திகதி காலை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பேர் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாசலில் நுழைந்தோம். சில நிமிடங்களிலேயே பத்து இருபதாகி ஐம்பதாகி நூற்றுக்கணக்கானவர்களாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அந்த வழியில் பேருந்தில் சென்றவர்கள் பேருந்தை விட்டிறங்கி வந்தார்கள். செய்தியை அறிந்தவர்கள் பலரும் துயிலும் இல்லம் நோக்கி விரைந்தார்கள். எருக்கலை மரங்களும் உண்ணியுமாய் அடர்ந்த காட்டை சுத்தப்படுத்தி எங்கள் முகவரியை தேடிச் சென்றவர்களின் கல்லறைகளை தேடினோம். ஒரு சில கல்லறைகள் அடையாளம் காணும் நிலையில் இருந்தன. மற்றைய அனைத்துக் கல்லறைகளைளும் இலங்கை அரச படைகளால் சிதைக்கப்பட்டன.

அலை அலையாக வந்த மக்கள்

ஆங்காங்கே சில கல்லறைகள் எஞ்சியிருந்தன. பெயர் விபரங்கள் அடங்கிய கல்லறைகளின் பகுதித் துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டன. அடர்ந்த காடுகளை அழிக்க மூன்று நாட்கள் ஆகியது. சிதைந்த கல்லறைத் துண்டுகள் யாவும் பத்திரமாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அவற்றை உரிய வகையில் பாதுகாப்பதற்கவும் மக்கள் தீர்மானித்தார்கள். அப் பெரும் துயிலும் இல்லத்தை, சுமார் மூவாயிரம் கல்லறைகளை, பொதுச் சுடர் ஏற்றும் மேடையை, கல்லறைகளுக்குச் செல்லும் வழியை எல்லாவவற்றையும் மண்ணோடு மண்ணாக இலங்கை அரச படைகள் ஆக்கிரமித்தன. அத்துடன் அழிக்கப்பட்ட துயிலும் இல்லத்தின்மீது முகாமிட்டு தங்கியிருந்தனர்.

அத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிக்கவும் விளக்கேற்றுவதற்கான சில பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்பட்டன. வர்த்தக நிலையங்களுக்குச் சென்று மாவீரர் தின நிகழ்வுக்காக இயன்ற பங்களிப்பு கோரப்பட்டபோது எந்த பங்களிப்பு வேண்டுமானாலும் கேளுங்கள் என்று மனமுவந்து பங்களித்தனர் வர்த்தகர்கள். பல நூற்றுக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் துயிலும் இல்லம் தன் பழைய முகத்தை மெல்ல மெல்ல உருவேற்றியது. மாவீரர்களுக்கான சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க நவம்பர் 27ஆம் திகதி துயிலும் இல்லம் வீரர்களுக்கு விளக்கேற்றத் தயாரானது. மக்கள் அலை அலையாக மக்கள் வரத் தொடங்கினார்கள். ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் நிறைந்தனர்.

ஒளிபெற்ற துயில் நிலம்:

மாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. முழங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம், ஆண்டான்குளம் முதலிய துயிலும் இல்லங்களிலும் மாண்ட வீரர்களுக்கான விளக்குள் ஏற்றப்பட்டன.

உணர்வுபூர்வமாக திரண்ட இணைஞர்களை ஒருங்கிணைத்து புனரமைப்புப் பணியை வேழமாலிகிதன் முன்னெடுத்தார். பத்துப்பேருடன் தொடங்கிய இந்த முயற்சி பல ஆயிரம் பேரை திரள செய்தது மாத்திரமின்றி பல துயிலும் இல்லங்களில் மக்கள் நுழைந்து விளக்கேற்ற வைத்தது. மக்கள் தன்னிச்சையாகவே பங்களித்தனர். கல்லறைகளை தேடி அழுத தாய்மார்கள் பலர். முற்றுமுழுதாக அழிந்த மண்ணிலும் தம் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து அங்கு விளக்கேற்றினர். அப் பெரு நிலத்தில் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபங்கள் பரவி எரிந்தன. உழவு இயந்திரத்துடன் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்த ஒரு சகோதரன் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்தார். இரு நாட்களாக காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் மண் மூடியிருந் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்து நெகழ்ந்த அந்தக் கணத்தை எளிதில் விபரிக்க இயலாது.

தவிப்பை தடை செய்ய முடியாது

துயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை இலங்கை அரசால் எப்படி தடை செய்ய முடியும்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா? அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.

எங்கள் வீரர்கள் எம் தாயக நிலம் மீட்கச் சென்றனர். நாம் அவர்களின் விதை நிலம் மீட்கச் சென்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.

மாவீரர்களை நினைவுகூர்வதைக் கூட தடுத்த இலங்கை அரசு இம்முறை நினைவுகூரவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுமதி அளித்திருக்கிறது. மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார்கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்குமுறையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

நவம்பர் 29, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள் | , , | மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் !

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.    kilinochi-maaveerar-day-2016-5

அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை நேரம் 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.

ஒன்று திரண்ட பொதுமக்கள் இறந்த சொந்தங்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் கதறி அழுது தமது சோகத்தை பிரதிபளித்தமை பார்ப்பவர்களில் நெஞ்சை கசக்கிப் பிழிய வைத்துள்ளது.

புலிகளின் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், மாவீரர் நாளான கார்த்திகை 27 விதையாகியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்னமோ அச்சுருத்தல் மிக்க நிகழ்வாகவே எதிர்நோக்கப்படுகின்றது.kilinochi-maaveerar-day-2016-3

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பலவிதமான அச்சுருத்தல்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி பல்லாயிரம் கணக்கில் பொதுமக்கள் கிளிநொச்சியில் ஒன்று திரண்டு மாவீரர் தினத்தை அனுஷ்டித்தது இதுவே முதல் தடவையாகும் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது.

அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள் இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தது.kilinochi-maaveerar-day-2016-4

அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.

இன்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர்.kilinochi-maaveerar-day-2016-2

அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும் மாவீரர் வணக்கப் பாடல் ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான “எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள்….. ”எனும் வரிகள் ஒலிக்கும் போது கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன் உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது.

கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த இடத்தில் நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை.

எனது பிள்ளையை அவனது புதைகுழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது.ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்துவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.kilinochi-maaveerar-day-2016

ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. எனவே எனக்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயிலுமில்லம் கடந்த காலத்தில் இருந்தது போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார் ஒரு மாவீரரின் தாய்.

இவ்வாறு பலர் தங்களினது உணர்வுகளை கண்ணீராகவும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முதலாக துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில்ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு முழங்காவில் மற்றும் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

 

நவம்பர் 27, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள் | , , | பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மாவீரர்களை நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது!

maveerar-thuyilumillam-5மாவீரர்களை நினைவு கூர முடியாது என்றார்கள்
அவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்
வன்முறையாளர்களை ஆதரிக்க முடியாது என்றார்கள்
எத்தனையோ தடைகளைப் போட்டுப்; பார்த்தார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் அத்தனை தடைகளையும் தாண்டினார்கள்
ஏனெனில் மாண்டவர்கள் அவர்களது உறவுகள் அல்லவா!

தமிழ் மக்கள்,
முதலில் உரிமைகளை இழந்தார்கள்.
பின்பு உடமைகளை இழந்தார்கள்.
இறுதியில் உயிர்களையும் இழந்தார்கள்.
ஆனால் அவர்கள் உணர்வுகளை இழக்கவில்லை.
எனவேதான் எழுக தமிழாக திரண்டார்கள்.
ஆயிரமாக திரண்டு மாவீரர்களையும் நினைவு கூர்கிறார்கள்.

மாண்டவர்களை வெறுமனனே நினைவு கூர்வதாயின்
வீட்டில் ஒரு மூலையில் அழுதுவிட்டுப் போயிருப்பார்கள்.kanakapuram-maaveerar-day-2016

எதற்காக இத்தனை செலவு செய்து ஒன்று கூடுகிறார்கள்?

ஏன் ஒருமித்து ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்?

புலத்தில் இருப்பவர்கள் தமது வியாபாரத்திற்காக
மாவீரர் கொண்டாடுவதாக தூற்றினார்கள்.

தமிழ்நாட்டில் அஞ்சலி செய்பவர்கள்
புலிகளின் காசுக்காய் கூவுவதாய் புலம்பினார்கள்.

போராடியவர் தாயகத்தில் வறுமையில் வாட
புலத்தில் ஆடம்பர மாவீரர் விழா தேவைதானா எனவும்
அவர்கள் கேள்விகள் கேட்டார்கள்.

ஆனால் அத்தனை கேள்விகளுக்கும்
தமிழ் மக்கள் பதில் அளித்துள்ளனர்.

மாவீரர் நினைவு என்பது வெறும் அஞ்சலி மட்டுமல்ல
அது அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் இன்னொரு வடிவம்என்று உணர்வு பூர்வமாய் காட்டுகின்றார்கள்.

அதனால்தான்,
புதர்பற்றிய மாவீரர் இல்லங்களை
கூட்டிச் சுத்தம் செய்கின்றனர்.
உடைந்துபோன கற்குவியலில்
மாவீரர்களை தேடுகின்றனர்.mulankavil-maaveerar-day-2016

புலத்தில் மட்டுமா தமிழன் அஞ்சலி செலுத்துகிறான்
இம்முறை தாயக மண்ணிலும் அல்லவா அஞ்சலி நடைபெற்றது.

அதுமட்டுமா? தமிழகத்தில்கூட பல நிகழ்வுகள் நடக்கின்றனவே

tamilnadu-rasapalaiyam

ஒன்றுகூட முடியாதவர்கள் முகநூல்களில் அஞ்சலி செய்கின்றனர்.

அஞ்சலிப் பதிவுகளால் முகநூல் என்றுமில்லாதவாறு நிரம்பி வழிகிறது.

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன?

எத்தனை அடக்குமுறை செய்தாலும்
எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும்
தமிழ் மக்கள் தமது உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டாகள் என்பதையன்றி வேறு என்னவாக இருந்தவிட முடியும்?

-Balan tholar

நவம்பர் 27, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள் | , , | மாவீரர்களை நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்

maveerar-thuyilumillam-headஇனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை
உலகம் முழுவதும் பரவிவாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளே!

வணக்கம்.

 

இன்று மாவீரர் நாள். தாயக விடுதலைக்காக உயிரை விலையாகக் கொடுத்து மண்ணில் விதையாக விழுந்த மகத்தானவர்களை மனதில் நிறுத்தி வணங்க வேண்டிய தியாகத் திருநாள். தமிழ்த்தேசிய இனத்தின் அடிமை இருள் அகற்ற தன்னைத்தானே அழித்துக்கொண்டவர்களை நம் ஆன்மாவில் பொருத்தி இந்தக் கார்த்திகை மாதத்தில் காந்தள் மலர்கொண்டு பூஜிக்க வேண்டிய பொன்னாள். இந்நாள் உயிரை இழந்தவர்களைப் பற்றி உள்ளம் உருக கசிந்து அழ வேண்டிய நாள் அல்ல! மாறாக, நம் இனத்தின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் கனவினை நாம் வாழும் காலத்திலேயே நிறைவேற்றிட அதற்காக நிதமும் உழைத்திட நமக்குள்ளாக உருவேற்றி உறுதிகொள்ள வேண்டிய உன்னத நாள்.

வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தமிழகம், தமிழீழம் என்கின்ற இரண்டுபெரும் தாய்நிலங்கள் இருந்தும், இவ்வுலம் செழிக்க அளப்பரிய உயிர்க்கொடை, ஈடு, இணையற்ற மானுட உழைப்பு, மாபெரும் கலைபண்பாட்டு பங்களிப்புகள் என அனைத்தையும் வாரிக்கொடுத்த ஒரு மாபெரும் தேசிய இனத்திற்கு உள்ளங்கை அளவுகூட இறையாண்மை கொண்ட நாடில்லை என்பதுதான் இந்த நூற்றாண்டிலும் தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் மீது கவிழ்ந்து இருக்கும் வரலாற்றுப் பெருஞ்சோகம். ஒரு தேசிய இனம் என்றைக்குத் தனக்கென ஒரு தேசம் அடைகின்றதோ அன்றைக்குத்தான் முழுமுதற் விடுதலையை எட்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அந்தத் தேச விடுதலையை அடைவதற்காகத் தன் தேகத்திற்கு விடுதலை கொடுத்தவர்கள்தான் நம் மாவீரர்கள்.

ஒருநாடு என்பது நிலம் மட்டும்தானா? இல்லை. அதனால்தான், நம் தேசிய தலைவர் அவர்கள் ஒரு அறிவார்ந்த தலைமுறையின் செறிவான உழைப்பின் மூலமாக இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்கிட முடியுமென நம்பினார். இலட்சிய வேட்கையோடு விடுதலைத்தாகம் கொண்ட ஒரு அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கினால் போதுமானது. அதுவே தனது விடுதலைப்பாதையைக் கண்டறிந்து வெற்றியடையும் என நம் தேசிய தலைவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான், உலகம் போற்றும் உன்னத மனிதர்களை, வீரம்செறிந்த தளபதிகளை, அறிவார்ந்த அறிஞர்களை அவரால் உருவாக்க முடிந்தது. இன்றளவும் என் ஆழ்மனதில் நான் இழப்பெனக் கருதி வருந்தித் துடிப்பது இதைத்தான்.

நிலத்தை இழந்தால் பெறலாம்; உடமையை இழந்தால் பெறலாம்; உரிமையை இழந்தால் அடையலாம், ஆனால், நம் தேசிய தலைவர் அவர்கள் அணு அணுவாய் பார்த்து கற்பித்து வழிகாட்டி உருவாக்கிய ஒரு அறிவார்ந்த தலைமுறையை ஈடு, இணையற்ற அறிவாற்றல் கொண்ட இளைஞர் பட்டாளத்தைத் தமிழர் என்ற தேசிய இனம் வரலாற்றின் வீதிகளில் என்று கண்டறியும்?

தியாகத்திற்கு ஒரு திலீபன், அறிவாற்றலுக்கும் ஒரு தமிழ்ச்செல்வன், பார் போற்றும் வீரத்திற்கு ஒரு பால்ராஜ், கடும்பகை அழித்துக் கொடுந்துயர் தீர்க்க ஒரு கடாபி, மானுட ஆற்றலுக்கும் மேலான நுட்பமும், வீரமும் கொண்ட பொட்டு அம்மான், கடலிலே காவியங்கள் படைத்த சூசை, வீரத்திற்கு ஒரு இலக்கணமாய்த் திகழ்ந்த விதுஷா என அடுக்கடுக்காய்ச் சொல்லிக்கொண்டே போனால், முடிவற்ற பட்டியலாய் தொடரும் என் அண்ணன்மார்களின் பெயர்கள். தமிழனின வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கபப்ட்டு, நாம் தொழுது வணங்க வேண்டிய தியாகச்சுடர்கள்.

இன்றளவும் சிங்களப்பேரினவாதிகள் நம் தாய்நிலத்தை அடிமைப்படுத்தி ஆக்கிரமித்துச் சிங்களக்கொடியேற்றங்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். திட்டமிட்ட இன அழிப்பு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதை யாழ்பாண மாணவர்கள் கொலை நிரூபிக்கிறது. ஒரு தேசிய இனத்தின் உயிர்நாடியான பண்பாட்டு விழுமியங்களை அழிப்பதன் மூலம் அந்தத் தேசிய இனத்தை எவ்வித அடையாளமுமின்றி அழித்துவிட முடியும் என்பதை நன்கு உணர்ந்த சிங்களப்பேரினவாத அரசு தமிழர் நிலத்தில் பெளத்த விகார்களை அமைக்கும் பல்வேறு விதமான பண்பாட்டுச் சீரழிவு தாக்குதல்களை நிகழ்த்தி தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம பற்றுறுதியை சிதைக்க முயன்று வருகிறார்கள். ஆனால், மாவீரர்களைத் தன்னுள் விதையாய் அடக்கிக்கொண்டு உயிர்ப்புடன் திகழும் ஈழ மண் சிங்களப் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மீண்டும் விழிப்படைந்து இருப்பது அண்மை நாட்களில் நமக்குக் கிடைத்த மாபெரும் மாறுதல். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்குதமிழர் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான நம் ஈழ உறவுகள் பங்கேற்றுத் தாய்மண் விடுதலையில் தங்கள் பற்றுறுதியை பன்னாட்டு சமூகத்தின் முன் பறைசாற்றியிருக்கிறார்கள்.maveerar-thuyilum-illam-3

இன்னும் என்னடா விளையாட்டு?

எதிரி நரம்பிலே கொடியேற்று!

நிலத்தடியில் புதைந்திருக்கும்
பிணங்களுக்கும் உயிர்த்துடிக்கும்!

என்கிற அண்ணன் அறிவுமதி பாடல்வரிகளுக்கு ஏற்ப நிலத்தடியில் புதைந்திருக்கும் நம் மாவீரர்கள் இன்றளவும் உயிர்த்துடித்து ஈழ விடுதலை உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதே பொங்குதமிழ் ஒன்றுகூடல் நமக்கெல்லாம் தெரிவித்த செய்தி.

நீண்டகாலமாக ஈழ விடுதலைக்காக நாம் எண்ணற்ற இழப்பினைத் தாங்கிப் போராடி வருகிறோம். தற்கால உலக அரசியல் ஒழுங்கமைவுகளுக்கு ஏற்ப சரியான காய்நகர்த்தல்களுடன் கூடிய ராஜதந்திர முன்னெடுப்புகள் ஈழ விடுதலைக்குத் தற்போதைய உடனடித் தேவையாக இருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவு நல்கி, ஆயுதம் வழங்கி நாம் கனவு தேசமாய்க் கட்டிய நாட்டை நம் கண்களுக்கு அழித்துப் போட்டதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. 8 கோடித் தமிழர்கள் வாக்கு செலுத்தி, வரி செலுத்தி வாழுகின்ற இந்தியப் பெருநாட்டின் வெளியுறவு கொள்கைகள் மாற்றப்படாமல் நமக்கு ஈழ விடுதலை சாத்தியமில்லை. எனவே, இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையை மாற்றுவதற்கான அதிகார வலிமைப் நமக்குத் தேவையாக இருக்கிறது. அதனால்தான், அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சலாக, எந்த அதிகாரம் எம் இனத்தின் விடுதலைக்கனவை நசுக்கிப் போட்டதோ அந்த அதிகாரத்தை அடைவதற்காகத் தமிழின இளையோர் ‘நாம் தமிழர்’ என்கின்ற மாபெரும் வெகுசன அரசியல் முன்னெடுப்பை தாயகத்தமிழகத்திலே உருவாக்கி வருகின்றோம். தன் மொழியையும், இனத்தையும் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற தமிழின இளையோர் தங்கள் இனமான விடுதலையை எதிர்காலத்தில் வென்றே தீருவார்கள். இது உறுதி.

அடிமை இருளகற்ற தங்கள் உயிரையே வெளிச்சமாகக் கொண்டு அந்த விண்ணில் நட்சத்திரமாய் மாறிப்போனவர்கள் நம் மாவீரர்கள். அவர்களது மூடிய விழிகளுக்குள் மூடாத விடுதலையின் வாசல் இருக்கிறது. ஊதக்காற்றை அலையும் அவர்களது மூச்சுக்காற்றில் முடங்காத விடுதலைக்கனவு ஒன்று இருக்கிறது. குடல் சரிந்து உடல் விழுந்தாலும் உருக்குலையாத உள்ளத்தில் தாயக விடுதலைக்கனல் இன்னும் கனன்று கொண்டேதானிருக்கிறது. எந்தக் கனவிற்காக மாவீரர்கள் மண்ணில் விழுந்து விண்ணிற்குப் போனார்களோ அந்தத் தாயக விடுதலைக்கனவை நம் உயிருள்ளவரை நம் ஆன்மாவில் சுமந்து நம் செயல்களினால் அதைச் சாத்தியப்படுத்த சத்திய தலைவன் மேதகு வே.பிரபாகரன் வழியில் ஒன்றுகூடி உழைப்போம் என இந்நாளில் நாம் உறுதியேற்போம். ஓயாத அலைகளாய் எழும்பி நம் தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்த மாவீரர்களின் புகழ் ஓங்குக! சத்தியநெருப்பில் தங்களையே ஒப்படைத்து நமக்காக, நம் இனத்திற்காக, நம் மொழிக்காக, நம் விடுதலைவாழ்விற்காகச் சாவினைத்தழுவிய சந்தனப்பேழைகளாம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

— செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

நவம்பர் 27, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள் | , , | இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.karthikai-poo

மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும்.

புலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில் இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும்.

எத்தகைய அடக்குமுறை வந்தபோதும் – மாவீரர் நாளில் ஆலயங்களில் மணி ஒலிப்பதோ, தீபம் ஏற்றுவதோ தடைசெய்யப்பட்ட போதும் கார்திகை மலர்கள் இதழ்களை விரித்து மாவீரர்களை அஞ்சலிக்க தவறவில்லை. தமிழர்களின் அஞ்சலியை துப்பாக்கி முனையில் அதிகாரம் தடுத்து நிறுத்தினாலும் இயற்கை கார்த்திகைப் பூ வடிவில் மாவீரர் நாளினை நினைவேந்துவதை யாராலும் அடக்க முடியவில்லை.

கார்த்திகைப் பூ மட்டும் தான் அஞ்சலிப்பதில்லை. தீபமேற்றவோ மணியொலிக்கவோ தடைகள் போடப்பட்ட போதும் மானசீகமாக தமிழர்கள் தங்கள் மனங்களுக்குள் மாவீரர்களை பூசிக்கவே செய்தார்கள். இத்தகைய ஆத்மார்த்தமான அஞ்சலிப்பையும் அதிகாரக் கரங்களால் பிடுங்கியெறிய இயலாததாகவே இருக்கிறது.


எனவே தான் அஞ்சலிப்பை தவிர்ப்பதற்காக சில தந்திரங்களை ஆளும் தரப்பு செய்து வருகின்றது.

மாவீரர்களை அஞ்சலிப்பதில் முன்னிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய இளையோரையும் திசைதிருப்பி மாவீரக் கனவுகளை மறைக்க ஆட்சியாளர்கள் எத்தனையோ வழிகளில் முயன்றார்கள். போதைப்பாவனை ஆடம்பர மோகம், சமுகச் சீரழிவு நடவடிக்கைகள் என்று இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான சகல வழிகளையும் அரசு திறந்துள்ளது.

நல்லாட்சி அரசும் இளைய சமூதாயத்தை தவறான பாதைக்கு இட்டுச்செல்ல பின்நிற்கவில்லை. நவம்பர் 27ம் திகதி இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கோலிப்பண்டிகை நடத்துவதாக இருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்பலைகளாலோ என்னவோ தமக்கும் கோலிப்பண்டிகைக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கைவிட்டார் இந்தியத் துணைத் தூதுவர் என். நடராஜன். மேலும் நல்லாட்சி அமைச்சர்கள் “மாவீரர்களை நினைவுகூர எத்தனைபேர் வருவார்கள்”, “போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூருங்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூரமுடியாது” என்றார்கள். விடுதலைப்புலிகள் என்றொரு இனம் கிடையாது. விடுதலைப்புலிகளே தமிழர்கள் தமிழர்களே விடுதலைப்புலிகள் என்பதை அரச ஆட்சியாளர்கள் மறந்து விடுகின்றனர்.

ஒரே வீட்டில் இருந்து ஒரே தட்டில் உணவு உண்ட இறந்த உறவுகளை நினைவுகூரக்கூடாது என்று கூறுவது அபத்தமானது. நாம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர எத்தகைய தடைகள் வந்தாலும் – புத்திஜீவிகளையும் மாவீரர்களையும் அள்ளித்தந்த யாழ் பல்கலைக்கழகம் மாவீரர்களை நினைவுகூர பின்னிற்பதில்லை. மாவீரர் தினதிற்கு மூன்று நாட்கள் முன்னும் யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காட்டி சுடுவோம் என எச்சரித்தும் கடந்த வெள்ளிக்கிழமை நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழக சமுகம் இறந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர்கள் நினைவிடத்தில் மரங்களை நாட்டினார்கள்.

எதிர்வரும் சந்ததிக்கு எமது உணர்வுகளை கொண்டுசெல்வது ஒவ்வொரு தமிழனினதும் தலையாய கடமையாகும். எதிர்காலச் சந்ததியினருக்கு எம்மவர்களின் தியாகங்கள் கொண்டு செல்லப்படவேண்டும். கொண்டு செல்லப்பட்டாலே மாவீரர்களின் முக்கியதுவத்தினை உணர்ந்து எமது இளம் சமுதாயம் மாவீரர் நாள் போன்றவற்றை முன்நின்று நடாத்தும்.

ஒரு சிலர் பேரினவாதத்தின் தந்திரங்களுக்கு பலியாகினாலும் பெரும்பாலானோர் தங்களுக்காக போராடி மடிந்த மறவர்களை நினைவுகூர மறப்பதில்லை. இந்த வருடமும் ஈழத்தேசமெங்கும் மனத்தீபங்களின் ஒளியில் மாவீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படத்தான் போகின்றன. தமக்காக எரிந்த சூரியர்களை எவர்தான் மறப்பார்கள்

நவம்பர் 27, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு | , , , | மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது