அழியாச்சுடர்கள்

இசுரேல் VS தமிழீழம் #இனப் படுகொலை #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Tamil #Eelam #Battle #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide

பலவீனமான எமது இனத்தின் தடைநீக்கிகளாகவே கரும்புலிகளை உருவாக்கினேன் என்கிறார் தலைவர். ஆனால் கரும்புலிகளை உலகம் ஏற்க மறுத்தது. காரணம்; நிழல் அரசொன்றின் மரபுசார் படையின் உச்சமாக , சிறப்புப் பயிற்சிபெற்ற Commandos இருப்பதை உலக அரசுகள் தமது நலன்களுக்கெதிராக இருப்பதாக எண்ணிக்கொண்டன. அதுவும் சிறிய தேசமொன்றில் குறைந்த வளங்களைக்கொண்டு அவர்கள் Commando அணியாக வளர்ச்சிபெற்று இருப்பதை யாராலும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் “தற்கொலைப்படை” என்ற பொதுவான சொற்பிரயோகத்தின்மூலமாக எமது மண்ணின் அதியுச்ச தியாகங்கள் வல்லாதிக்க அரசுகளால் மூடிமறைக்கப்பட்டன. உலக நாடுகளின் விசேட Commando அணிகளின் வீரர்கள் அனைவருமே உயிரைத் துச்சமாக மதித்தே நடவடிக்கைகளில் இறங்குவார்கள். அவ்வாறே தமிழீழத்தின் Commando அணியினரும் செல்வார்கள், தமிழில் நாம் அவர்களைக் கரும்புலிகள் என்கிறோம். ஏனைய நாடுகளின் Commando வீரர்கள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினால் அவர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும். ஆனால் நம்மவர்கள் விடுதளைக்கனவை நெஞ்சிலே சுமப்பதனால் ஊதியமோ சலுகைகளையோ எதிர்பார்ப்பதில்லை.

1976 யூலை 4 ஆம்திகதி இசுரேலிய Commando அணியினர் உகண்டாவின் Entebbe விமானநிலையத்தில் நுழைந்து, பணயக்கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டிருந்த இசுரேலியப் பயணிகளை மீட்டெடுத்த தாக்குதலான Operation Thunderbolt இற்கும்

தமிழீழத்தின் சிறப்புப்பயிற்சிபெற்ற Commando அணிகள் 24.07.2001 கட்டுநாயக்கவிலும், 22.10.2007 இல் அநுராதபுரத்திலுமாக நடத்திய Operation எல்லாளனுக்கும்;
இடையேயான தாக்குதல் நேர்த்தியின் பரிமாணத்தை அளந்து பார்த்தோமேயானால் , உலக அரசுகள் எதற்காகத் தமிழீழத்தின் Commando படையணிகளை அச்சத்துடன் பார்த்தது என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். தாக்குதலுக்கான சூழல்கள் வெவ்வேறாக இருந்தாலும், “எமது மக்களில் கைவைத்தால் நாம் வேடிக்கைபார்க்க மாட்டோம்” என்ற பொதுவிதி இவ்விரண்டு தாக்குதல்களுக்கும் இருக்கிறது. ஏன் நான் இசுரேலின் Operation Thunderbolt ஐ இங்கே ஒப்பீடு செய்கிறேன் எனில்; இசுரேலியர்களின் வரலாற்றில் அவர்கள் வேற்றுநாடொன்றுக்குள் பிரவேசித்துச் செய்த அதியுச்ச தாக்குதலாகவும் பெருமையாகவும் இன்றுவரை பீற்றி எழுதுகிறார்கள்.

Entabbe விமானத்தளம் இராணுவத்தளம் அல்ல, அது பயணிகள் விமானநிலையம். அங்கே அனுமதியின்றி வேற்றூநாட்டு விமானங்கள் தரையிறங்குவது சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது. ஆனால் ஏற்கனவே இடிஅமீன் மீதிருந்த வெறுப்பின் காரணமாக அமெரிக்காவின் துணையோடு இசுரேல் தரையிறங்கியது. அவ்விமானநிலையத்தில் மாலைநேரத்தின் பின் விமானங்கள் தரையிறங்குவதில்லை. இலகுவாக இறங்கித் தாக்கக்கூடிய நிலையிலிருந்தும் Operation Thunderbolt இற்காக அமெரிக்காவின் Navyseal அதிகாரிகளின் உதவி கோரப்பட்டு இசுரேலின் Commando அணிக்கு அவர்கள் பயிற்சியளித்தார்கள். அன்றைய Entabbe வானூர்தித்தளத்தில் முறையான வான்கண்காணிப்பு இருக்கவில்லை. அப்படியிருந்தும் நான்குவிதமான திட்டங்கள் போடப்பட்டு இறுதியில் நான்கு விமானங்களில் சென்று தளத்தில் இறங்குவதைத் தெரிவுசெய்தனர் இசுரேலிய Commando அணியினர். முதல் இரண்டு விமானங்களில் வாகனங்களும், மற்றைய இரண்டுவிமானங்களில் வீரர்களுமாகப் பயணித்தார்கள். தாக்குதல் முடிவில் பணயக்கைதியாகப் பிடிபட்டிருந்த இருவர்மீது பதட்டம் காரணமாகத் தவறுதலாக இசுரேலிய Commando வீரரொருவர் வேட்டுக்களைத் தீர்த்திருந்தார். ஒருவர் அங்கேயே மரணிக்க மற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார்.

இப்போது தமிழீழ Commando அணியினரின் நடவடிக்கைக்கு வருவோம். கட்டுநாயக்க தாக்குதலுக்கும் Operation எல்லாளனுக்காகவும் வேவுத்தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலிருந்து , தாக்குதலுக்கு அணியமாவது வரை தமிழீழப்படைகள் தமது சொந்தப்பலத்தையே உபயோகித்தார்கள்.யாரிடமும் பயிற்சியோ உதவியோ பெற்றுக்கொள்ளவில்லை.

கட்டுநாயக்க விமானநிலையத்தாக்குதலில் பயணிகளுக்கோ , விமானநிலையப் பணியாளருக்கோ, விமானநிலைய விடுதிகளில் தங்கியிருந்த வேற்றுநாட்டவருக்கோ, உயிரிழப்போ அல்லது காயங்களையோ ஏற்படுத்திவிடக்கூடாதென்பதில் தமிழீழத்தின் Commando அணிக்கு இறுக்கமான கட்டளை இடப்பட்டிருந்தது. அவ்வாறே அநுராதபுரத்திலும் அங்கே தங்கியிருந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு எதுவித சேதங்களும் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்கள் உறுதியாயிருந்தனர்.

Entabbe வானூர்தித் தளத்தின் அன்றைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும், கட்டுநாயக்கவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குமான வித்தியாசங்கள் காலத்தாலும் நவீனத்தாலும் பாரிய வேறுபாடுகளுக்குட்பட்டவை.

கட்டுநாயக்கவிற்கு அருகிலேயே இராணுவ விமானப்படைத் தளமும் உண்டு. அதியுச்ச கண்காணிப்புக்கருவிகள், தொடர் இராணுவக் காவலரண்கள் ஆகியனவும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் சோதனைகளுமாக இருந்த தளமே கட்டுநாயக்க.

Entabbe தளத்திற்குச் செல்லும்போது இசுரேலிய Commando அணியினர் இரண்டு Mercedes வகை மகிழுந்தினையும் எடுத்துச்சென்றிருந்தனர். காரணம் அவ்வேளையில் இடிஅமீன் பயன்படுத்திய மகிழுந்துகளும் அதே வகையானவையே. இடிஅமீன் வருவதாக எண்ணி அங்கிருந்த படையினர் தாக்காமல் இருப்பார்கள் என்பதற்காகவும் விரைவாக விமானநிலையக் கட்டடத்தை அண்மிப்பதற்குமான திட்டமுமே அது.

கட்டுநாயக்கவின் சூழலில் அப்படித் தரையிறங்க முடியாது. அவ்வாறான வளங்களும் தமிழீழத்தின் Commando அணியிடம் இல்லை. மின்சாரத்தைத் துண்டிப்பதே ஒரே ஒரு சாதகம். வேவுத்தரவுகளின் துல்லியமும், தமிழீழ Commando களின் திறமையுமாக இணைந்து இலங்கை என்ற நாட்டின் பொருளாதாரத்தில் 200 மில்லியன் டொலர்களை இல்லாமற் செய்தது.

தமிழீழம் என்ற நாட்டினது மக்களையும் பொருளாதாரத்தையும், சிறிலங்கா என்ற நாடு தொடர்ச்சியாகச் சிதைத்துவந்ததற்குப் பாடம்புகட்டும் விதமாக தமிழீழத்தின் Commando அணியினர் செய்த பதில்தாக்குதலே இந்தநடவடிக்கை. இந்நடவடிக்கையின் உச்சம் யாதெனில்; இலங்கை அரசை அடித்து இழுத்துவந்து பேச்சுவார்த்தை மேடையில் இருத்தியமையே.

அதுவரை நாளும் தமிழீழத்தின் படைகள் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று எழுதிவந்த Newyork Times பத்திரிகையானது கட்டுநாயக்க தாக்குதலுக்குப் பிறகு Rebels என்று தனது பதத்தை மாற்றிக்கொண்டது. அதேபோல Irishtimes என்ற பத்திரிகை தனது பத்தியொன்றில் “தமது மக்களுக்கானஉரிமையை விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்கிறார்கள்” என்று எழுதியது. அமெரிக்காவின் புலனாய்வு இதழான Janes Intelligense வெளியிட்ட கட்டுரையில் “இலங்கையரசின் பாதுகாப்புப் புலனாய்வு தோல்வியடைந்துவிட்டது” என்று குறிப்பிட்டது. இத்தனைக்குமான பாரிய மாற்றங்களுக்குமான அடிப்படையை உருவாக்கியவர்கள் தமிழீழத்தின் தலைசிறந்த Commando அணியான கரும்புலிகளே.

இவையெல்லாவற்றையும் ஒப்பிட்டு நோக்கினால்; அமெரிக்காவின் அதியுச்சதேவையைப் பூர்த்திசெய்யும் Navyseal Commando அணிபோல, இசுரேலின் Mistaarvim Commando அணியைப்போல, இரசியாவின் Spetsnaz போல , தமிழீழத்தின் Commando அணியான, ஒழுக்கமும் இலட்சிய உறுதியும் கொண்ட, அடிப்படை வளங்களைக்கொண்டு வளர்ந்துநின்ற Blacktigers அங்கீகாரம் பெற்றுவிட்டால், அது ஆசியக்கண்டத்தின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறிவிடும் என்பதே உலக அரசுகளின் அச்சமாகும்.

-தேவன்

ஏப்ரல் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , , | இசுரேல் VS தமிழீழம் #இனப் படுகொலை #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Tamil #Eelam #Battle #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் #ஆனந்தபுரம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Maaveerar #Tamil #Eelam #BattleofAanandapuram

ஏப்ரல் 2, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம் | , , , , , , , | போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் #ஆனந்தபுரம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Maaveerar #Tamil #Eelam #BattleofAanandapuram அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அன்று தமிழீழ மருத்துவர்களால் அழித்தொழிக்கப்பட்ட பக்டீரியா ! #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #சுத்துமாத்துக்கள் #தமிழர் #CoronaVirus #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide#ltte #Tamil #Eelam

இன்று கொரோனா தொற்றுக் கிருமி தான் அனைத்து இடங்களிலும் பேசு பொருள். உலகமே இக் கிருமித்தாக்குதலில் இருந்து தம் நாட்டைக் காப்பதிலும், தடுப்பதிலும் எவ்வகையாக விடயங்களை கையாள முடியுமென்று தம் வல்லுனர்களைப் பணித்திருக்கும் ஒரு முக்கிய காலவோட்டத்தில் இருக்கின்றது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்றுக் கிருமி மனிதர்களுக்கு அதீத காச்சலை உருவாக்கி சுவாசப் பிரச்சனைகளை உருவாக்கி நுரையீரல் செயற்படுவதை முடக்கி உயிராபத்தை ஏற்படுத்தும் வல்லமை மிக்கதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 80 இற்கும் மேற்பட்ட மக்கள் சாவடைந்தும் 1500 இற்கும் மேற்பட்டவர்கள்பாதிக்கப்பட்டுமுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது தாய்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியநாடுகளிலும் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. ( இது செய்திகளின் சாரம்)

இப்போது இக் கிருமித் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? இதைப் பற்றியே சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், தமக்குத் தாமே கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி. இது ஒரு புறம் இருக்க சீனா அரசு இக்கிருமித் தாக்கத்தில் இருந்து தன் நாட்டை காப்பாற்ற அதீத தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. இந்தக் கிருமித் தாக்கத்தால் பாதிப்படைந்தவர்களை முழுமையாக தனிமைப்படுத்திச் சிகிச்சை வழங்குவதற்காக, 6 நாட்களில் 1000 பேருக்கு மேல் சிகிச்சை பெறக்கூடிய பாரிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கத் தொடங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஒரு திட்டம்தான். அவசர நிலை வேலையாக்கத்தில் இதை உருவாக்க அவர்கள் செயற்படுவது மிகச்சிறந்த செயலே.

இதைப் போலவே சாத்தியமற்ற பல செயற்பாடுகளை சாத்தியமாக்கிக் காட்டிய எம் தமிழீழ அரசு இவ்வாறான ஒருதொற்றுக் கிருமித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி வந்த போது அதை எவ்வாறு கையாண்டார்கள் என்பதே இப்பத்தியின் சாரம்.

எம் விடுதலைப் போராட்டம் சிறு பின்னடைவை அடைந்திருந்த 1995 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் நாள் “சூரியக்கதிர்” என்று பாரிய படை நடவடிக்கையை சந்திரிக்கா அரசு எம்மக்கள் மீது திணித்து, ஒரு இரவில் யாழ் மாவட்டத்தின் வலிகாமம், தீவகம் ஆகிய பிரதேசங்களில் இருந்து 5,00,000 க்கும் அதிகமான மக்களை நாவற்குழி எனும் ஒற்றைப் பாலத்தால் ஏதிலிகளாக்கிய போதும் நாங்கள் இவ்வாறான இயற்கையின் சீற்றங்களை அனுபவித்தோம். இடநெருக்கடியால் ஏற்பட்ட நெருங்கிய சனப்பரம்பல் பல தொற்று நோய்களையும் எம் மக்களிடையே தோற்றுவித்ததை எவ்வாறு மறக்க முடியும்?

சர்வதேச அளவின் ஒப்பீட்டளவில் நோக்கினால் ஒற்றை இரவில் இத்தனை லட்சம் மக்கள் குறுகிய ஒருபாலமும், அதனோடிணைந்த குறுகிய சதுப்பு நிலப்பரப்பனூடாக, சண்டைப் பிரதேசத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இடப்பெயர்வு சம்பவம் என்றால் இது மட்டுமே வரலாறாகிக் கிடக்கிறது என்று நினைக்கிறன். அந்த நேரத்தில் எம் மக்களிடையே தாம் பிறந்த மண்ணை விட்டு வந்த வேதனை, சொத்துக்களை தொலைத்த வருத்தம் என வலிகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சிங்கள வல்லாதிக்கப் படைகளால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள், சாவுகள் என்றும் தொற்று நோய்கள் என்றும் பல்வேறு இடர்களை அவர்கள் சுமந்து நின்றதை மறக்க முடியாது.

அந்தக் காலத்தில் தான் தமிழீழ மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் அணி மாணவர்கள் மருத்துவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள் தேசியத்தலைவர் எமது மக்களுக்கும், எம் போராளிகளுக்கும் உரிய மருத்துவ தேவைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கவும் தமிழீழம் என்ற எம் தேசம் உருவாகும் போது தன்நிறைவுத் தமிழீழத் தேசமாக உருவாக வேண்டும் எனவும் தூர நோக்கம் கொண்டு 40 ற்கும் மேற்பட்ட போராளிகளை மருத்துவப் பட்டைய கற்கையைக் கற்கும் பணியில் ஈடுபடுத்தி இருந்தார்.

சந்திரிக்காவின் அரசின் அப்போதய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுரத்த ரத்வத்த எம் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு “சூரியக்கதிர்” என்ற பெயரில் தொடர் படை நடவடிக்கை மூலம் எம் தேசத்தை தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்காக படாத பாடுபட்டுக் கொண்டிருந்த போது, இப்போராளி மருத்துவர்கள் மக்களை காக்க வேண்டிய பெரிய பொறுப்புக்களைச் சுமக்கத் தொடங்கினார்கள்.

அப்போது தான் சூரியக்கதிர் யாழ்ப்பாண மாவட்டத்தையே சுட்டெரித்து பொசுக்கிப் போட்டது. தமிழீழ அரசின் நிர்வாக்க் கட்டமைப்புக்கள் அனைத்தும் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் நகர்ந்தன. மக்களும் போராளிகளோடு சேர்ந்து கிளாலி பெரு நீரேரி கடந்து வன்னிப் பெரு நிலப்பரப்பின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.

அப்போதெல்லாம் எம் மக்கள் பட்ட துயரத்தை வார்த்தைகளால் கூற இயலாது. இப்போது குறுகிய நிலப்பரப்பில் நெருங்கி வாழ வேண்டிய சூழல் இல்லை எனிலும், திடீர் என்று அதிகரித்த சனப் பரம்பலைத் தாங்க முடியாது வன்னி மண் திகைத்து நின்றது. அப்போது தான் தேசியத் தலைவர் உடனடி மக்கள் நேயப் பணிகளுக்காக போராளிகளை பணித்தார். அரசியல்துறை, காவல்துறை, படையணிகள் என வேறுபாடுஅற்று மக்கள் பணிகளில் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த காலத்தில் தான் சனப்பரம்பல் நெருக்கமடைந்து காணப்பட்ட வன்னியின் பிரதேசங்கள் எங்கும் மக்கள் மீது நோய்களும் தாக்கம் செலுத்தத் தொடங்கின.

யாழ் மாவட்டத்தை விட்டு வன்னிக்கு வந்ததன் பின்பான காலம் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற பாரிய அரசியல் பரப்புரை ஒன்றை சர்வதேசத்தில் முன்னெடுத்த சந்திரிக்காவுக்கு முல்லைத்தீவு முப்படைத்தளம் என்றும் பூநகரி கூட்டுப்படைத்தளம் என்றும் மன்னார், வவுனியா என்றும் படை முகாங்கள் மீது எம் படையணிகள் பெரும் வெற்றித் தாக்குதல்களை செய்து நிலத்தை மீட்ட போது அதிர்ந்து போன சிங்களம் எம்மீதான பொருளாதார, மருந்துத் தடைகளை அதிகப்படுத்தியது. இப்போது மக்களுக்கான மருந்துகளோ உணவுகளோ பயங்கர தட்டுப்பாடாக இருந்து. ஏற்கனவே மருந்து, உணவுப்பொருட்களின் பற்றாக்குறையை நிரப்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டார்கள். இப்போது மறுபடியும் அதிகப்படுத்தப்பட்ட தடைகளால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

அப்போது தென்னியங்குளம் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த திவாகர் நினைவு இராணுவ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 400 ற்கும் மேற்பட்ட போராளிகளுக்கான சிகிச்சையையும் போராளி மருத்துவர் தணிகை மற்றும் ஓரிரண்டு போராளி மருத்துவர்களே அங்கே பணியில் இருந்தார்கள். அவர்கள் பல சிரமங்களோடு அப்பணியை ஏற்றருந்தார்கள். ஆனாலும் பணியில் என்றும் தொய்ந்து போனதில்லை. மருத்துவப் பணி சிறப்பாகவே இருந்தது. எந்த தடையை அரசு போட்டாலும் அத்தடையை உடைத்து விழுப்புண் அடையும் போராளிகள் காப்பற்றப்பட்டே வந்தார்கள். அவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர் தணிகையின் பொறுப்பிலிருந்த விழுப்புண்ணடைந்த போரளிகளுக்கான சிகிச்சையை இடையில் விட்டுச் செல்ல வேண்டி நிலை ஒன்று அவருக்கும் இன்னும் சில மருத்துவர்களுக்கும் வந்தது.

1998 ஆம் ஆண்டு புரட்டாதி 29 ஆம் நாள் நான் திவாகரில் நின்ற போது மருத்துவரும், தமிழீழ சுகாதாரப் பகுதிப் பொறுப்பாளராக இருந்தவருமான மருத்துவக்கலாநிதி சூரி அவர்களை உடனடியாக தன்னோடு வருமாறு அழைக்கிறார்.

அவர்களது வாகனம் மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவை நோக்கி செல்கிறது. வாகனத்தில் வைத்து கூடச் சென்றவர்களுக்கு மருத்துவர் சூரி விபரத்தை கூறுகிறார். அதுவரை ஏதோ சண்டைக்கான தயார்ப்படுத்தல் என்றே எண்ணி இருந்த போராளி மருத்துவர்கள் மருத்துவர் சூரி கூறியதை கேட்டு அதிர்ந்தார்கள்.
விடத்தல் தீவில் “கொலரா “. நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டுள்ளார். நாங்கள் தான் உடனடியாக இதை பொறுப்பெடுத்து தடுத்து நிறுத்த வேணும். அதனால் தான் உங்களை அழைத்தேன்.

கொலரா என்பது ஒரு கொள்ளை நோய். “வாந்திபேதி” என்றும் கூறப்படும் அதன் தாக்கம் உடனடியாகவே பரவி வன்னி முழுவதையும் மட்டுமல்ல எம் கட்டுப்பாட்டு நிலைகளையும் தாண்டி, இலங்கையையும் தாக்கி அழிக்க கூடியவாறு பரவும் அபாயம் கொண்டது. உடனடியாக இதை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும், அதே வேளை பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் காக்க வேண்டிய இரட்டை செயற்பாட்டை அவர்கள் செய்ய வேண்டிய சூழல். அதேநேரம் வேறு பிரதேசங்களில் இந்த நோய்த்தாக்கம் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

மருத்துவர் சூரியுடன் மருத்துவர் தணிகை, பெண் போராளி மருத்துவர் பிரியவதனா, போராளி மருத்துவர் சத்தியா, போராளி மருத்துவர் வாமன் மற்றும் போராளி மருத்துவ மாணவன் யாழ்வேள், அரசியல் போராளிதூயவன் என்று சிறிய ஆளணியே இருந்தது. ஆனால் இதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். இதற்காக அவர்கள் இரண்டு முக்கிய வேலைகளை செய்ய வேண்டி இருந்தது.

அந்த பிரதேசங்களை முழுமையாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல். அதாவது இராணுவம் ஒருபிரதேசத்தைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்துவதை போல விடத்தல்தீவு, தேவன்பிட்டி, பள்ளமடு இலுப்பைக்கடவை, படகுதுறை, பாரதிபுரமுகாம், கள்ளியடி, தேத்தாவடி, மூன்றாம்பிட்டி, தேவன்பிட்டி, பலகைமுனை, பாப்பாமோட்டை , ஆண்டான்குளம், பிள்ளையார்பிட்டிபோன்றபிரதேசங்களை சுற்றிவளைத்து முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
இந்த நடவடிக்கையின் போது இந்த பிரதேசங்களில் இருந்து யாரும் வெளியேறவோ அல்லது உள்ளே வரவோமுடியாது அவ்வகையாக பலமான பாதுகாப்பு வேலியை தமிழீழக் காவல்துறை மற்றும் அரசியல்துறை போராளிகள் அமைத்திருந்தர்கள். யாரோ ஒருவர் சாவடைந்தால் கூட அவரை நெருங்க விடுவதில்லை. இவ்வாறான ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்தார்கள். அதாவது Quarantine என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அங்கே வாழ்ந்த அனைவருக்கும் நோய்த் தாக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை செய்தார்கள். முதலில் ஊரில் இருந்த பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள் என்று அழைத்து அவர்களை பல அணிகளாகப்பிரித்துத்தடுப்பு மருந்துகள் பற்றிய சிறு பயிற்சியை கொடுத்து, அவர்களோடு அனைத்து வீடுகளுக்கும் சென்றார்கள். ஒவ்வொருவராக தடுப்பு மருந்துகளை குடிக்க வைத்தார்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்திய கொலராத் தடுப்பு மாத்திரைகளான Tetracycline or Doxycycline, Furazolidone களை உடனடியாக அனைத்து மக்களையும் உட்கொள்ள வைத்தார்கள். அவர்கள் அவற்றை உட்கொள்கிறார்களா இல்லையா என்ற சந்தேகத்தில் தமக்கு முன்னால் அவற்றை உட்கொள்ளுமாறு பணித்துத் தண்ணீரை கையில் எடுத்து கொடுத்து மாத்திரைகளை விழுங்க வைத்தார்கள்.

இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் எம் மருத்துவ அணி இருந்த போது, மறுபுறத்தில் கிட்டத்தட்ட 160 க்கும்மேலான பாதிக்கப்பட்ட நோயாளிகள் பள்ளமடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இங்கே தான் பலத்த பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி வந்தது. ஒருபுறம் அவர்களுக்கு ஏற்ற வேண்டிய IV FLUIDS சேலைன் அல்லது மாத்திரைகள், மருந்துகள் எதுவும் கையிருப்பில் இல்லை. உதாரணத்துக்கு ஒருநோயாளிக்கு 10 ல் இருந்து 40 சேலைன்கள் தேவைப்படும். ஏனெனில் கொலராவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடலில் இருந்து நீரிழப்பு என்பது அதிக வீதமாக காணப்படும். இந்த நிலையில் நாம் அதிகமாக நீரிழப்பு நிவர்த்தி மருந்துகளான Jevani/ORS(oral rehydration salt) to prevent dehydration or home made ORS போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கொலரா என்பது நீரிழப்பை ஏற்படுத்துவதன் மூலமே மரணத்தை தருகிறது.
அந்த நீரிழப்பு நிவாரணிகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தேவையை மக்களுக்கு உணர்த்த்தினார்கள் மருத்துவர்கள். இந்த நீரிழப்பு நிவாரணிகளை வீட்டில் தயாரிக்க கூடிய வழிகளும் மக்களுக்குபோதிக்கப்பட்டன. அது எவ்வாறு என்றால், உப்பு எலுமிச்சம் பழம் மற்றும் சீனி ஆகியவற்றைச் சேர்த்துக் கரைத்தாலே போதுமானது என்று உணர்த்தப்பட்டது.

கையிருப்போ வெறும் 40 ற்கு குறைவான சேலைன்களே. இந்த நிலையில் மருத்துவர்களுக்கு உடனடியாகத்தடுப்பு மாத்திரையான Prophylaxis மற்றும் Tetracycline அல்லது வேறு Antimicrobials போன்றவை தேவையாக இருந்தது. இதை அவர்கள் மருத்துவப்பிரிவின் விநியோகப்பகுதிக்கும் மன்னார் மாவட்ட MOH (Medical officer of Health Services) and RDHS Dr. கதிர்காமநாதன் (MOH) ஆகியோருக்கும் தெரியப்படுத்துகிறார்கள். Dr. கதிர்காமநாதன் பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் இராணுவத்தின் தலைமை அதிகாரிகளோடு பலமுறை வாதாடி அங்கிருந்து தேவையான மருத்துவ பொருட்களை போராளி மருத்துவ அணிக்கு அனுப்பி வைக்கிறார். அதோடு பள்ளமடு மருத்துவமனை பொறுப்பு மருத்துவராக இருந்த திருமதி. சாவித்திரி அவர்களும் முழு மூச்சாக இவர்களோடு இணைந்து செயற்படுகிறார்.

உடனடியாக இல்லை எனிலும் தாமதமாக என்றாலும் தேவையான நேரத்தில் எமது விநியோகப் பிரிவும் Dr. கதிர்காமநாதன், Dr. விக்னேஸ்வரன் மற்றும் Dr. தர்மேந்திராவும் தந்துதவினார்கள். எம் மக்களுக்கான உடனடி காப்பு மருத்துவத்தை மருத்துவ அணி தொடர்ந்த அதே நேரம் இன்னும் ஒரு பிரச்சனை பூதாகாரமாக எழுந்தது.

நோயாளர்களை தங்க வைக்க எந்த வசதிகளும் இருக்கவில்லை. உடனடியாக விடுதிகள் உருவாக்கவும் கொலரா நோயாளர்களுக்கு என்று பிரத்தியேகமான கட்டில்களைச் செய்யவும் மருத்துவ அணியே நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. ஏனெனில் சாதாரண கட்டிலில் அவர்களை படுக்க வைக்கமுடியாது. அதனால் மலவாசல் இருக்குமிடத்தில் வட்டவடிவ ஓட்டை ஒன்றை போட்டு அதனூடாக வாளி ஒன்றில் மலத்தை எடுக்கும் வகையில் அதை அவர்கள் வடிவமைத்தார்கள்.

இதற்கு “சேவாலங்கா ” மற்றும் தமிழர் புனர் வாழ்வுக்கழகம் (TRO) ஆகியன அவர்களுக்குத் துணையாகின. எம் மக்களும் அவர்களோடு கூடநின்றார்கள். அதனால் குறித்த சில நாட்களுக்குள் பெரு முயற்சியில் விடுதிகளை, கட்டில்களை வடிவமைத்துக் கொண்டார்கள். இவர்களோடு புலம்பெயர் சமூகமும் இணைந்ததை மறுக்க முடியாது. தமிழீழத்துக்கு மருந்துதடைகள் வந்த போதெல்லாம், விநியோகப்பிரிவின் மருந்து வளங்கலுக்கு புலம்பெயர் சமூகமே முழுப்பொறுப்பும் எடுத்திருந்தது. அதே போலத் தான் இந்த ஆட்கொல்லி நோயை அழிக்கவும் அவர்களின் பணவுதவி வலுவாக இருந்தது.

இது இவ்வாறு இருக்க, இந்த கொடிய நோயான கொலரா கிருமியான Vibrio Cholera எப்படி எங்கட பிரதேசத்துக்குள்ள எப்படி வந்தது? இதை காவி வந்த நோயாளி யார்? போன்ற தவிர்க்க முடியாத வினாக்கள் மருத்துவ அணிக்கு எழுந்தது. தொற்றுநோய் தடுப்பு, காப்பு என்று ஒருபுறம் பணியாற்றிக் கொண்டிருந்த போது விடைதெரியாத இந்த கேள்வி தான் சிங்கள மக்களையும் காப்பாற்றியது என்றால் அது தவறில்லை.

அவர்கள் முன்னே எழுந்த இக்கேள்விக்கான விடையை மருத்துவர்கள் தேடத் தொடங்கினார்கள். முதல் கொலரா நோயாளியை பின்தொடர்ந்து அவர் எங்கிருந்து வந்தார், எங்கெல்லாம் பயணித்தார், என்றதகவல்களை ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வின் முடிவில் முதல் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி எம்பிரதேசத்துக்குள் வந்துள்ள கிருமிக் காவியாக இருந்தவர் புத்தளம் பகுதியில் இருந்து கொலரா கிருமியை கொண்டு வந்த அதிர்ச்சியான உண்மையை மருத்துவ அணி கண்டு பிடிக்கிறது.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று சர்வதேசமே தடையுத்தரவுகளைப் பிறப்பித்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடக்கத் திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருந்த போது, மருத்துவர்களுக்கான மருத்துவத்தர்மம் என்பதை விட போராளிகளுக்கான மென்மனதும், இது வல்லாதிக்க சக்திகளிடமிருந்து தமிழீழ விடுதலைக்கான போரே தவிர சிங்கள அப்பாவி மக்களுக்கு எதிரான போரில்லை என்ற உணர்வும் அவர்களை எச்சரித்தது.

புத்தளத்தில் இருந்து வந்திருந்த கொலராக் கிருமியால் புத்தளம் பகுதியிலும் மக்கள் பாதிக்கப்படலாம் என்ற உண்மையை உடனடியாக ICRC, மற்றும் MSF என்ற சர்வதேச அமைப்புக்கள் ஊடாக ஆதாரத்தோடு இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தி உடனடியாக புத்தளம் பகுதியை கொலரா தடுப்புப்பகுதியாக இனங்காட்டுகிறார்கள் அம்மருத்துவ அணியினர்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே அரச மருத்துவக்குழு அது தொடர்பாக ஆராய்கிறது. நிலைமையைக் கண்டுபிடித்து நடவடிக்கையை ஆரம்பிக்கிறது. உண்மையில் விடத்தல் தீவில்நடைபெற்றுக்கொண்டிருந்த கொலராத் தடுப்பு நடவடிக்கை அணியினர் இவ்வாறு எச்சரிக்கவில்லை எனில் அங்கு பல சாவுகள் நடந்திருக்கும்.

அவர்கள் நினைத்திருந்தால் இந்த எச்சரிக்கையை கொடுக்காமல் விட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால், பலநூறு சிங்கள மக்களும் இறந்திருக்க கூடும். ஆனால் எம்மிடமிருந்து என்றும் மக்கள் மீது எங்கள் துப்பாக்கிகளோ அல்லது எந்த தாக்குதல் முறைமைகளோ நிமிர்ந்ததில்லை. அதனால் சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்றினார்கள் அந்த மருத்துவ அணியினர்.

இந்த நடவடிக்கை முடிந்து கொலரா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போது 10 பேர் மட்டும் தான் இறந்திருந்தார்கள். மற்ற ஆக்கள் எல்லாரையும் இந்த அவசரகால நடவடிக்கை அணி காப்பாத்தியிருந்தது.

இதே நேரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்திலும் மூத்த மருத்துவப் போராளிகளும் இளநிலை மருத்துவப் போராளிகள் மற்றும் மருத்துவப்பணியாளர்களும் சுகாதாரப் பகுதி பணியாளர்களும் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு இந்த தொற்று நோய்த் தாக்கம் பற்றிய அதி உச்ச கவனத்தை உறுதிப்படுத்தும் பரப்புரைகளை மேற்கொண்டார்கள்.

நான் நினைக்கிறேன் இந்த நடவடிக்கைக்கு பின்பான காலங்கள் வன்னியில் கொலரா தாக்கிய நோயாளிகள் இதுவரை இருக்கவில்லை. கொலரா மற்றும் மலேரியா போன்ற நோய்களின் தாக்கத்தை எம் தமிழீழச் சுகாதாரப்பிரிவும், மருத்துவப்பிரிவும் இணைந்து நிறுத்தி இருந்தார்கள். அரச மருத்துவ மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் இதில் முழு பங்கும் உள்ளவர்கள். இதை பெரும் சாதனையாக சிங்கள ஆய்வாளர் ஒருவர் பெரும் ஆச்சரியமான முறையில் வியந்து எழுதியதன் தமிழாக்கத்தை நான் படித்துள்ளேன். அதேவேளை இன்றும் மலேரியாவை தடுக்க முடியாது திணறும் சிங்கள அரச மருத்துவத்துறையையும் அவர் சாடி இருந்ததை வாசித்தேன்.

தமிழீழ அரசு இலங்கை அரசை விட மக்கள் நேயப் பணிகளில் எவ்வாறு மேலோங்கி நின்றது என்பதைச் சர்வதேசமே சுனாமி அனர்த்தத்தின் போது உணர்ந்து கொண்டது. ஆனால் அதன் முன்னே சுனாமி அலைகளைப் போல ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிர்களை காவு கொள்ளவிருந்த இவ்வாறான கொலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்த் தாக்கங்களை முற்றாக இல்லாமல் அழித்தொழித்திருந்த தமிழீழ மருத்துவப் பிரிவின் சாதனைகளையும் இவ்வுலகம் உணர்ந்து கொள்ளாமல் இல்லை…

பதங்கள்…

கொலரா- Cholera outbreak
சேலைன் – saline
நீரிழப்பு – dehydrate
கிருமி -Bacteria
இராணுவ மருத்துவமனையில் : போராளிகளுக்கான தனித்துவமான மருத்துவமனை

எழுதியது: இ.இ. கவிமகன்
நாள்: 28.01.2020

ஏப்ரல் 2, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , , , | அன்று தமிழீழ மருத்துவர்களால் அழித்தொழிக்கப்பட்ட பக்டீரியா ! #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #சுத்துமாத்துக்கள் #தமிழர் #CoronaVirus #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide#ltte #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேசியத்தை நேசித்ததால் பறிக்கப்பட்ட உயிர்,மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Tamil #Eelam #TNAMedia #Genocide

இன்று அவரின் நினைவு நாள்,தலை சாய்த்து, வணங்கி நினைவில்கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மண் தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரைப்பெற்றிருக்கின்றது. இவர்களுடைய வாழ்வில்,இவர்கள் மேற்கொண்ட இனப்பற்றோடு இணைந்த மக்களுக்கான சேவைகளை பதிவாக வரலாற்றில் கொண்டுவர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் இதனை எழுத முனைகின்றோம்.

31 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ மண் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தவேளையில் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழீழம் சார்ந்த செய்திகள் மறைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்கி, அழிப்பதற்கு இந்தியப் படையினரும், தமிழ்த் தேசத் துரோகிகளும் முயன்று கொண்டிருந்தனர்.இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் வெளிக்கொண்டுவர அறிவாற்றல் மிக்க சிலர் துணிந்து செயல்பட்டனர்.

தமிழீழமெங்கும் பல அறிவாளர்கள் தேசிய விடுதலை இயக்ககத்திற்கு ஆதரவு வழங்கியதோடு, இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிராகச் செயல்பட்டு தங்களை அர்ப்பணித்ததையும் தமிழீழ மண் மறக்கவில்லை.இந்தவகையில் மட்டக்களப்பில் வணசிங்கா ஐயா அவர்களுடைய தமிழ்த் தேசியப்பற்றோடு இணைந்த மக்கள் சேவையையும் நினைவு கூர்வது பொருத்தமான ஒன்றாகும்.

ஆண்டுகள் பல கடந்தாலும் அறிவாற்றல் மிக்க வணசிங்கா ஐயா போன்றவர்களை மட்டக்களப்பு மக்களும், கல்விசார் சமூகமும் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றது. இவரைப்பற்றி எழுத எண்ணுகின்றபோது மட்டக்களப்பின் மண்வாசனையையும், மண்ணோடு இணைந்த விடுதலைசார்ந்த அரசியல் நிகழ்வுகளையும் கல்விசார் பணிகளையும் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் விடுதலை இயக்கம் சார்ந்த பதிவுகளை பலரும், பல்வேறு கால கட்டங்களை முன்வைக்கின்ற இவ்வேளையில் தங்களை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த அறிவாளர்களின் செயல்திறன் பற்றிய பதிவுகளைக் கொண்டதான வரலாற்றில் வணசிங்கா ஐயா அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் மட்டக்களப்பில் முக்கியத்துவம் பெற்றதாகவும், தற்கால தமிழ்ச் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மட்டக்களப்பில் கல்விமான்களில் ஒருவரான வணசிங்கா ஐயா அனைவராலும், மதிக்கப்பெற்ற மகத்தான மனிதர் என்பதனை அவருடைய தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பணிகளிலும், மக்கள் நலன்சார்ந்த பணிகளிலுமிருந்தும் அறியமுடிந்தது.மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை என்னும் ஊரில்13 . 01 . 1926 ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்ததனால் மட்டக்களப்பு புனித மரியநாயகி பள்ளிக்கூடத்தில் தங்கி கல்வி கற்றார். பின்பு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1948 ம் ஆண்டு வெளியேறினார்.

13 . 01 .1949 ம்ஆண்டு கொழும்பு மத்துகம புனித மேரிஸ் ஆங்கிலக் கல்லூரியில் உதவி ஆசிரியராக முதல்பணி நியமனம் பெற்றார். பின்பு பத்து ஆண்டுகள் மலையகம் ஹட்டன் புனித ஜோன் போஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவருக்கு 1968 ம் ஆண்டு ஐந்தாம் தர பாடசாலை அதிபர் பதவியும், 1973 ம் ஆண்டு மூன்றாம் தர பாடசாலை அதிபர் பதவியும் கிடைத்தது.15 .01 .1975 ம்ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பக்கல்வி பயின்ற மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தின் அதிபரானார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாக கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் பாடசாலைக்கு 18 . 05 . 1979 ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். 02 . 03 .1982 ம் ஆண்டு தொடக்கம் 10 . 01 .1986 ம்ஆண்டு பதவிக்கால ஒய்வு பெறும்வரை மீண்டும் அரசடி மகா வித்தியாலய அதிபராக பணிபுரிந்தார்.
1969 ம் ஆண்டு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத் தலைவரானார். அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கமும்,அரசினர் பாடசாலை தமிழாசிரியர் சங்கமும் இணைந்து உருவாக்கிய இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முதலாவது தலைவராக 1974 ம்ஆண்டு தெரிவு செயப்பட்டார். ஓய்வு பெறும்வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்.

சீனாவில் நடைபெற்ற கல்விசார் தொழிற்சங்க சம்மேளன மகாநாட்டில் 1965 ம் ஆண்டிலும், சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்க சம்மேளன மகாநாட்டில் 1979 ம் ஆண்டிலும், பம்பாய்க்கு அருகிலுள்ள ‘கொள்காப்பூர்’ என்னுமிடத்தில் நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகங்களினதும், கல்லூரிகளினதும்,ஆசிரியர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் 1981ம்ஆண்டிலும், அன்றைய மேற்கு ஜெர்மனி ‘பிராங்போர்ட்’ என்னும் இடத்தில் நடைபெற்ற ஆசிய பிராந்திய தொழிலாளர் கல்வி என்னும் பொருள் பற்றிய மகாநாட்டில் 1983 ம் ஆண்டிலும், பிரான்சிலுள்ள ‘மார்க் செயின்’ என்னுமிடத்தில் நடந்த சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்கத் சம்மேளன மகா நாட்டில்1985 ம் ஆண்டிலும் கலந்துகொண்டு தமிழருக்கும், தொழில் சங்கப்பணிகளுக்கும் பெருமைசேர்த்தார்.

அத்துடன் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மத்திய அலுவலகத்துக்கு சென்று அலுவலகம் இயங்கும் முறைகளை அவதானித்து திரும்பியிருந்தார்.

தாய் மொழியான தமிழிலும், அயல் மொழியான சிங்களத்திலும், அனைத்துலக மொழியான ஆங்கிலத்திலும் தேர்ச்சிபெற்றவர், இம் மொழிகள்மூலம் மேடையில் பேசுவதிலும் வல்லவராகவிருந்தார்.

மட்டக்களப்புத் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு அதன்வழியில் செயல்படத் தொடங்கியகாலம் 1956 ம் ஆண்டிலிருந்து என்பதனை நாம் அறிந்தவரையில் குறிப்பிடக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு முன்பு படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகராமிக்கவர்கள் என்ற சுயநலப் போர்வையில் மூழ்கிக்கிடந்த மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை 1956 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் புரட்சி புரட்டிப் போட்டதனால் தமிழ்மக்களின் விடுதலையோடு இணைந்ததாக அரசியல் மாறியது.

இந்த அரசியலுடான விடுதலைப் பயணத்தில் கால்பதித்த வணசிங்கா ஐயா தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களிலும்,1961 ம் ஆண்டில் நடந்த தமிழர் உரிமைக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் முன்னின்று ஈடுபட்டார்.
இவருடைய அரசியல் விடுதலைப் பயணம் 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் மட்டும் தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலையோடு அமைந்தாக இருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில்’தமிழீழம்’ என்பதை தேர்தல் கொள்கையாகக் கொண்டு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது.இத் தேர்தலில் தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்த தீர்மானத்தின்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்ததோடு, தேர்தல் மேடைகளில் சங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியுமிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு தமிழீழக் கோரிக்கைக்கு கிடைத்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியப்பற்றோடு, தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தேசிய விடுதலை இயக்கத்தையும் தமது இறுதிக்காலம் வரை ஆதரித்தவர்களில் வணசிங்கா ஐயா அவர்களை முதன்மையாக குறிப்பிடமுடியும்.

1977 ம் ஆண்டுத் தேர்தலின் பின்பு தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியோடு இளைஞர்களின் எழுச்சியும் விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்த்ததாக இருந்தன. இக் காலத்தில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் மாவீரர் லெப் . ராஜா (பரமதேவா) ,மேஜர் வேணுதாஸ் அவர்களுடைய தொடர்பு வணசிங்கா ஐயாவுக்கு நெருக்கமாக இருந்ததனால் இவ்வாறான இளைஞர்களின் மதிப்புக்குரியவராகவும் இருந்தார்.

மட்டக்களப்பு நகரை மையப்படுத்தி பல தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் களத்தில் நின்றபோதும், தேர்தல் நோக்கமில்லாத இவரைப் போன்றவர்களின் ஆதரவு மட்டும்தான் தமிழ் இளைஞர்களுக்கு இருந்ததை இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்தபோது அறியமுடிந்தது.

தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடித்து, தமிழ்மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டுமென்ற செயலில், இந்தியப் படையினர் தமிழ்த் தேசத்துரோகிகளோடு இணைந்து செயல்படுகின்ற வேளையில் எழுந்த அனைத்து அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்கொண்ட ஒரு சிலரில் வணசிங்கா ஐயா அவர்களை குறிப்பிடமுடியும்.

தமிழ் மக்களுக்குகெதிரான அடக்குமுறைகளை மக்கள்குழு ஊடாக வெளிக்கொண்டு வருவதிலும். இந்தியப் படையினராலும்,தமிழ்த் தேசத் துரோகிகளாலும் நடத்தப்படும் அட்டூழியங்களை அவர்களிடமே தட்டிக் கேட்பதிலும் வணசிங்கா ஐயா அவர்கள் பின் நிற்கவில்லை, அத்தோடு கைது செய்யப்பட்ட இளைஞர்களை இந்திய படை முகாமுக்குச் சென்று படையினருடன் வாதாடி மீட்டு வருவதிலும் இவருடைய பங்கு அதிகமாக இருந்தது.

போலியான தீர்வுடனும், அடக்குமுறையிலும் தமிழ் மக்களை வைத்திருக்க விரும்பிய இந்தியப்படை தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைக் கழகம்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் உருவாக்கி 1989 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தது.

இந்த நிகழ்வு தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு மிகவும் மனவேதனையைக் கொடுத்தது. இத் தேர்தலில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு தமிழ்த் தேசியத்தின் சார்பில் மேற்கூறப்பட்ட கூட்டணியை எதிர்த்து தமிழர் பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டது. யுத்தம் நிறுத்தப் படவேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பவற்றை முன் நிறுத்தி சுயேச்சையாக போட்டியிட்ட இவர்களுக்கு தமிழ்த் தேசியப் பற்றாளர்களான கல்விமான்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மடக்களப்பு மாவட்டத்தில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்புக்கு ஆதரவாக வணசிங்கா ஐயா அவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக ஆதரவு வழங்கினார். அடக்குமுறைக்கும், அடாவடித்தனங்களுக்கும், நேர்மையற்ற செயல்பாடுகளுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த இத் தேர்தலில் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய வேட்பாளர்களான பிரின்ஸ் காசிநாதர் , யோசேப் பரராஜசிங்கம், சாம் தம்பிமுத்து இவர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களும் உட்பட்டதான இந்தியப் படையினரின் ஆதரவு பெற்றவர்களாக தேர்தலில் போட்டியிட்டனர்.

ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு சார்பான சுயேட்சைக் குழுவுக்கு அன்றைய அரசடி மகா வித்தியாலய அதிபர் சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.இத் தேர்தல் முடிவுகளின்படி மாவட்டத்தில் 55 , 131 வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், 46 , 419 வாக்குகள் சுயேச்சை குழுவுக்கும் கிடைத்தது.

தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது மட்டக்களப்புத் தொகுதியில் சுயேட்சைக் குழுவினருக்கு கூட்டணியைவிட அதிகபடியான வாக்குகள் கிடைத்திருந்தன.
கள்ள வாக்குகளின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதும், அமிர்தலிங்கம் , யோசேப் பரராஜசிங்கம் போன்றவர்கள் தெரிவுசெய்யப்படவில்லை.

இத் தேர்தல் முடிவின்படி மக்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததையும் குறிப்பிட முடியும். ஏனெனில் திருகோணமலையில் இரண்டு தமிழர் தரப்பு ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்று ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு (சுயேட்சைக் குழு) மூலம் தமிழ் மக்கள் தங்களுடைய விருப்பத்தை இந்திய அரசுக்கு தெரிவித்தனர்.

1977 ம் ஆண்டுக்குப்பின் நடந்த அடுத்த தேர்தலிலும், தமிழ் மக்கள் தங்களது ஆணையை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். வெறும் சொல்லாகவும்,தேர்தல் அரசியலாகவும் இருந்த ‘தமிழீழம்’  என்பதை இலட்சியமாக வரிந்துகட்டி களத்தில் பயணித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. மக்களும் அவர்களோடு பயணித்தார்கள் என்பதை வணசிங்கா ஐயா போன்ற அறிவாளர்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

லெப் ராஜா (பரமதேவா)அவர்களின் விடுதலைப் பயணம் விடுதலைப் புலிகளோடு இதனை சங்கமித்தத்தைத் தொடர்ந்து , அந்த இளைஞன் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து கொண்டதன் பின்பு வணசிங்கா ஐயா, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஏற்றுக் கொண்டார்.

நாம் முன்பு குறிப்பிட்டது போல் தேசியத் தலைவர் ஆரம்பக்கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தின் அதிபராக பணிபுரிந்த அவரின் தேசியப் பற்று தன்னலமற்றதாக இருந்ததை எப்போதும் எம்மால் சொல்லிக்கொண்டிருக்க முடியும். காலம் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.

மட்டக்களப்பு _ அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களின் மதிப்புக்குரியவராக வணசிங்கா ஐயா அவர்கள் இருந்தார். தமிழ்த் தேசியத்தையும், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் ஆழமாக நேசித்த வணசிங்கா ஐயா அவர்களின் வீட்டுக்கு ஆரம்பகாலப் போராளிகள் சென்று வருவது வழக்கமாகவிருந்தது. போராளிகளை அன்பாக உபசரித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதையும், தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
1988 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கத்திலும், அன்னை பூபதி அவர்களின் அறப்போரிலும் தனது முழுமையான பங்களிப்பை செய்தார்.

மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம்பொருந்திய, நீதிக்கான குழுவாக செயல்பட்டதற்கும், பல்வேறுபட்ட அரச இயந்திரங்கள்,அரசியல் கட்சிகள் உட்பட்ட, இராணுவப்பிரிவுகளும் மக்கள் குழுவின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் அப்போது இருந்ததற்கும் மக்கள் குழுவின் பொறுப்பு வாய்ந்த பதவியில் வணசிங்கா ஐயா போன்றவர்கள் அமர்ந்திருந்தது ஒரு காரணமாகும். ஏனெனில் இவர்களின் மறைவுக்குப் பின்பு மக்கள் குழு பலம்பொருந்திய அமைப்பாக இயங்கவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

நிமிர்ந்த நடையும், நேரிய பார்வையும், அகன்ற முகத்தில் அழகான மீசையும், ஆணித்தரமாக பதில்களை கூட்டங்களில் முன்வைக்கும் கம்பீரமான குரலும், ஆக்கிரமிப்பு வாதிகளின் தமிழின அழிப்புக்கு தடையாக இருந்தது.

1986 ம் ஆண்டில் அதிபர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற வணசிங்கா ஐயா அரசடி மகா வித்தியாலய அதிபர் விடுதியிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு கல்முனை வீதியில் அரசடிச்சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

இக் காலத்தில் மட்டக்களப்பு நகரில் அரசியலில் ஈடுபட்ட சிலர் இந்தியப் படையினருடான உறவை மிகநெருக்கமாகப் பேணிவந்தனர். தமிழ்த் தேசியத்தின் பற்றோடு செயல்படுகின்ற அறிவாளர்களை அழிப்பதன் மூலம் அடக்குமுறைக்குள், திணிக்கப்பட்ட தீர்வுக்குள், சிங்களத்திற்கு ஆதரவாக தமிழ்மக்களை வழிநடத்தமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக விருந்தனர்.

இந்த அடிப்படையில் மட்டக்களப்பில் நடந்த அறிவாளர் அழிப்பில் வணசிங்கா ஐயா அவர்களையும் இணைத்துக்கொண்டனர்.

31 . 03 .1989 அன்று மாலை வேளையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த வணசிங்கா ஐயா அவர்களை சந்திப்பதற்கென வந்திருந்த தமிழ் இளைஞர் இருவரையும் நாற்காலியில் அமருமாறு கூறிவிட்டு தனது இருக்கையில் அமருகின்றபோது, அந்த கொடியவர்களால் சுடப்பட்டு அந்த இடத்திலேயே வணசிங்கா ஐயா சாவடைந்தார்.

அன்று இந்தியப்படைகளுடன் சேர்ந்து அவர்களின் ஓட்டுக்கு குழுவாக இயங்கிய தேசவிரோத EPRLF கும்பலால் இந்த தேசப்பற்றாளன் படுகொலை செய்யப்பட்டான்.

இன்று இவரை நினைவில் கொள்ளுகின்ற வேளையில்,அன்று இவரின் இழப்பு மட்டக்களப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாக விருந்ததையும் எண்ணிப்பார்க்க முடிகின்றது. உணர்வுள்ள தமிழர்களின் உள்ளங்களில் என்றும் அவர் நினைவாக வீற்றிருப்பார்.

எமது மண்ணில், எமது மக்களின் விடுதலைக்காக நாம் இழந்தது அதிகம்.
ஒவ்வொரு இழப்பிலும்,உணர்வை இழக்காமல், உரிமைக்காக உறுதியுடன் பயணித்தோம். எமது பயணம் இன்னும் தொடர்கின்றது. இலட்சியத்தின் எல்லையை நோக்கி …………..

நன்றி- எழுகதிர்

ஏப்ரல் 1, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர் | , , , | தேசியத்தை நேசித்ததால் பறிக்கப்பட்ட உயிர்,மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Tamil #Eelam #TNAMedia #Genocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தூக்கில் தொங்கி முன்னாள் போராளி சாவு : சந்தேகங்களை தோற்றுவிக்கும் மரணம் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam #TNAMedia #Genocide

மற்றுமொரு முன்னாள் போராளி அல்லைப்பிட்டியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஈழவேந்தன் அல்லது ஆனோல்ட் என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் போரின் போது தனது காலொன்றையும் இழந்திருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுத்தைப் படையணியிலும் பின்னர் உந்துருளிப்படையணியிலும் செயற்பட்டு இன அழிப்பு போரின் பின்னர் புணர்வாழ்வு பெற்று பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.

அல்லைப்பிட்டியில் சிறிய தேனீர் கடையொன்றை அமைத்து தனது வாழ்க்கையை தொடங்கிய ஈழவேந்தன் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு மெல்ல மெல்ல வாழ்க்கையில் முன்னுக்கு வந்து பின்னர் பிரதேச சபையிலும் வேலை ஒன்றை பெற்று வாழ்ந்திருக்கிறார்.

குடும்பப் பிரச்சனைகளோ கடன் பிரச்சனைகளோ இல்லாது வாழ்ந்த ஈழவேந்தனின் மரணம் பலத்த சந்தேககங்களை தோற்றுவித்திருக்கிறது.

 

ஈழவேந்தன்  நினைவாக இணையமொன்றில்  பிரசுரமான ஆக்கம்

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (13) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவர் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளதுடன், இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

குரு அல்லது ராஜ் என அழைக்கப்படும் அல்லைப்பிட்டியில் வசித்து வந்த ஒருவரது கதை…..!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இடப்பெயர்வு, புனர்வாழ்வு, விடுவிப்பு என்பன நிகந்த பிற்பாடு அல்லைப்பிட்டி கிராமத்துக்கு ஒரு கால் இழந்த ஒருவரது வருகை (2009)…..,

சமூக மட்ட அமைப்புகள் அல்லைப்பிட்டி பாடசாலை முன்பக்கத்தில் ராஜ் பவான் எனும் பெயரில் சிறிய தேநீர் கடை ஒன்றினை அமைத்து கொடுத்ததிலிருந்து அவரது வாழ்வாதாரம் அல்லைப்பிட்டியில் ஆரம்பமானது.

மூன்று பிள்ளைகளின் தந்தையாக கால் இழந்தவர் எனும் குறை உள்ளவர் என்பதை எண்ணாமல் உழைக்க வேண்டும் என்ற திடமான மன நிலையுடன் தனது வாழ்வை ஆரம்பித்து இருந்தார்.

படிப்படியாக வீட்டில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த அயராது உழைத்த வண்ணம் இருந்தார். இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்க, அல்லைப்பிட்டி எனும் ஊருக்கும் இவருக்கும் திருமணம் முடித்த பந்தத்தை தவிர வேறு எந்த தொடர்பும் இருக்கவில்லை.

இருந்த போதும் தனது சொந்த ஊர் போலவே அவரது செயற்பாடுகள் காணபட்டது. புலம்பெயர் தேசத்தில் உள்ள இணையதளம் ஒன்றுக்கு செய்தி சேகரிப்பாளராக, புகைப்பட கலைஞராக செயற்பட்டு வந்ததுடன் அவ் அமைப்பு மேற்கொண்ட சமூக பணியிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.

சமூக சேவை ஆற்றுவதில் முன் நின்று செயற்படும் வகையில் மங்கல, அமங்கல நிகழ்வுகள் எங்கும் இவரது குரல் கேட்காத இடம் இல்லை. கோவில்களிலும் இவரின் பணிகள் இல்லாமல் இல்லை.

அல்லைப்பிட்டி குருவ தெரியுமா என கேட்டால் இல்லை என்று சொல்லுவதில்லை பெரும்பாலும் எதோ ஒரு விதத்தில் தெரிந்து இருக்கும்.

திருமண விழா என்றால் வாழ்த்து பா கொடுக்க வேண்டும், மரண நிகழ்வு என்றால் பனர் அடிக்க வேண்டும், நோடீஸ் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக நிற்பார்.

தன்னை மதிப்பவர்,மதிக்காதவர் எவர் என்றாலும் ஏதும் என்றால் முன்னுக்கு நிற்பார். பாடசாலை அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி என பல சமூக சேவை மனப்பாங்கு கொண்டவர். தன்னிடம் இல்லை என்றாலும் முடிந்த வரை உதவி செய்ய கூடிய நபர்.

என்னுடன் தொடர்புடைய நினைவுகள்,

யாழ்ப்பாணத்தில் இருந்து எமது சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்த காலம். எமது வீட்டுக்கு முன் வீட்டில்தான் குரு அண்ணா வசித்து வந்தவர். ஆரம்பத்தில் என்னுடன் பழக்கம் இல்லை. எனது அக்காவின் மரண வீட்டிலேயே என்னுடன் பழக்கம் கொண்டவர்.

சதுரங்கம் விளையாடுவதில் பலே கில்லாடி. ஒரு முறை தோற்கடிக்க முடியாதா என்று ஏங்கி இருகின்றேன்.

இதுபோக நான் எனது வீட்டில் இருந்து அல்லைப்பிட்டி சந்திக்கு நடந்து செல்லும் போது, தனக்கு வேறு அலுவல்கள் இருந்தாலும் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று விடுவதுண்டு.

கல்யாண வீடு, சாமத்திய வீடு என்றால் அந் நிகழ்வுக்கு புகைப்படம் எடுப்பவர்களிடம் கேட்டு ஒரு படத்தினை பெற்று என்னிடம் கொண்டு வந்து frame செய்து தர சொல்லி கேட்டுக் கொள்வாா்.

வேலணை பிரதேச சபையில் வேலையினை பெற்று கொண்ட இவர் பிரதேச சட்ட திட்டங்களை அமுல்படுத்த போய் சிலருடன் முரண்பட்டதுண்டு. கடன் கொடுத்தல், வாங்குதல் போன்ற செயற்பாடுகள் இருந்தாலும் எல்லாவற்றையும் வெட்டி ஆளும் திறமை கொண்டவர்.

சில வேலைகள் குருவிடம் சென்றால் முடிக்கலாம் என்ற வகையிலும் வாழ்ந்த ஒருவர்.

சில இடங்களில் சிலருக்கு ஆதரவாக பேசி அடுத்தவருடன் முரண்பட்டதும் உண்டு. முரண்பட்டாலும் மீண்டும் சென்று பகையை வைத்திருக்காது பேச கூடியவர்.

கால் ஒன்றை இழந்து இருந்தாலும் மோட்டர் சைக்கில் சாகசம் நிகழ்த்தி காட்டுவதில் வல்லமை உள்ளவர். எந்த வேலையையும் முடியாது என சொல்லாமல் இறங்கி நின்று செய்ய கூடியவர்.

இறப்பதற்கு முதல் நாள் எமது வீட்டுக்கு வருகை தந்து தனது குடும்பம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் கதைத்து கொண்டு இருந்தவர்.

இறந்த அன்று காலையில் தனது மாடுகளில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று பால் கொடுக்கும் வீடுகளுக்கு கொடுத்து விட்டு எமது வீட்டிற்கு வந்து பிரதேச சபையில் இருந்து கொடுக்கபட்ட கடிதத்துக்கு அமைய TO வருவார் என கூறி அந்த விடையத்தை தான் முடித்து தருவதாக கூறி சென்றவர்.

இருபத்தைந்து நிமிடங்களின் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டார்.

மனைவி, மூன்று பிள்ளைகள் எதிர்காலம் எதையும் யோசிக்கவில்லை? வீடு, வளவு, மாடுகள், நகை அனைத்தும் இருந்தும் கடன் என ஊர் கூறும் விதத்தில் மீளா கடன் காரணம் என இது நிகழ்ந்தது ?

எனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.

முன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவர். தலைமை மற்றும் தளபதிகளின் நெருங்கிய நபருமாவர்.

கால் இல்லை என பரிதாபம் தேடவும் இல்லை, சொந்த உழைப்பில் சொந்த காலில் வாழ நினைத்தவர் – வாழ்ந்தவர். ஏற்றுக்கொள்ள கூடிய சம்பவம் இல்லை. ஏனோ மனம் தவிக்கிறதே. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

R.Raj Baarathy
14.03.2020

 

முக்கிய குறிப்பு:

மார்ச் 14, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், வீரவணக்கம் | , , , , | தூக்கில் தொங்கி முன்னாள் போராளி சாவு : சந்தேகங்களை தோற்றுவிக்கும் மரணம் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam #TNAMedia #Genocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது