அழியாச்சுடர்கள்

நாட்டுப்பற்றாளர் நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் ! # நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam

நாட்டுப்பற்றாளர். நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவுநாள் 04 .12.2020ம்.திகதி 32ம் ஆண்டு நினைவுநாள்

ஓடையிலே எம் சாம்பல்

கரையும் போது

ஒண்டமிழே சலசலத்து

ஓடவேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போது பைந்தமிழின் ஓசையை நான் கேட்க வேண்டும்!

இது பாவேந்தர் பாரதிதாசன் எழுச்சிக்கவிதை வரிகள்….

இது சிவம் மாஸ்ரருக்கு மிகப்பிடித்த வரிகளும் கூட….

சிவம் மாஸ்ரர் பெயரைச் சொல்லும்போதே, தமிழ் என்று விரியும் நினைவு காங்கேசன்துறை ஊரவர்க்கு

மனதில் தோன்றும் உருவம்!

இளம்வயதில் இருந்தே தந்தை குஞ்சன் நாகமுத்துவால், தமிழ் உணர்வும் ஊட்டமாகி வளர்ந்தது!

இவர் உணர்ச்சிமிக்க மேடைப்பேச்சாளனாக முதிர்ந்த வேளை அனைத்துக் கூட்டங்களிலும் அரங்கம் அதிரும் வண்ணம் இவரது பேச்சு அமைந்திருக்கும்.

இதேவேளை ஊர்நண்பர்களுடன் இணைந்து இளந்தமிழ் மன்றம் எனும் கலை மற்றும் விளையாட்டுடனான கழகத்தை உருவாக்கும்போது, மாம்பிராய் காந்தி விளையாட்டுக்கழக இளைஞர்களும் இணைந்து

நாடகம், கவியரங்கம், வழக்குரை மன்றம், எனத் தனியாகவும், ஆண்டுவிழாக்கள், நாடகப்போட்டிகள் என்ற முத்தமிழ் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் களைகட்டும்! இவற்றுள் எல்லாம் சிவம் மாஸ்ரரின் அலவாங்குக் குழிவெட்டி கப்பு நடுவதில் இருந்து, அரங்கு அலங்கார மஞ்சள், சிவப்புக் கீலமாக ஆடும் வெள்ளைத்தாளை வெட்டிக் கோதுமைமாவில் கிண்டிய பசைதடவி நைலோன் நூலில் ஒட்டுவது ஈறாக மேடையில் முழங்கி, நாடகத்தில் நடித்து,கவிதைபாடி,

” குற்றக்கூண்டில் பாரதி தாசன்” முன்னாள் கல்வி அதிகாரி,அதிபர், தமிழ்அறிஞர், ஆன்மீகவாதிகள் தமிழ்ப்பற்றாளர் மதிப்பிற்குரிய

திரு வேலாயுதம் ஆசிரியர் நீதிபதியாக வீற்றிருக்க,சூடுமறக்க வெடிக்கும் தமிழ் வாதாட்டுமொழி சிவம்மாஸ்ரரை மேடையில் ஓர் சிவனாகவே பார்க்கலாம்! அழகும் வேகமுமாக அடுத்தடுத்து அள்ளிவரும் தமிழ்…

இப்படியே ஆண்டுகள் நகர, தமிழினவிடுதலை மென்முறைப்போராட்டங்ககள் பலவற்றிலும், தமிழாராட்சி மாநாட்டிலும் கலந்து நின்ற வாத்தியார்……

காலத்தின் தேவை, இன ஒடுக்குமுறையின் சிங்கள வன்முறையின் உச்சக் கோரதாண்டவம், எதிர்வினையாகத் தமிழ் இளைஞர்களின் கரங்களில் கருவிகளைத் திணித்தது காலம். காலப்பிரசவமாய், ஈழத்தமிழர்களின் பாரம்பரிய போர்முகம் பிரபாகரன் எனும் தமிழ் எழுச்சி வடிவமாகதோற்றமுற, இயல்பாகவே சுதந்திரத் தாகம் கொண்ட சிவம் மாஸ்ரரும், காலத்தின் கரிசனையைத் தானும் உணர, பூம்புகார் வீடு ஓர் புலிகள் சரணாலயமானது! இதற்கு முன்னரான காலத்திலும், பலபோரளிகள் அந்தவீட்டீன் அன்னம் சுவைக்காமல் சென்றதில்லை!

இறுதியாக அவர் தலையையும், மார்பையும் துளைத்த துப்பாக்கியின் சொந்தக்காரர்களான செந்தோழர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என

அனைவருக்கும் அடைக்கலமும், ஆதரவும் கொடுத்த அந்த மனிதம் மிகு மனிதன், தமிழ்ப்பற்றாளன், மக்கள் நேய ஊரவன்,

இருண்டகாலமாக எமது மண்ணில் இறங்கிய இந்திய நஞ்சுக்காற்றால் மூச்சுத்திணறவைத்தவேளை

அமைதி முகம் கிழிய, ஆயுத அரக்கரானபோது, மீண்டும் மாஸ்ரர் வழமைபோல விடுதலைக்குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியானார்.

யாழ்மாவட்ட அரசியற் துறைப்பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் லெப்.கேணல்திலீபன் அவர்களுக்குஅடுத்ததாகப் பொறுப்பேற்ற

பிரசாத் அவர்களின் அணியினது பாதுகாப்பான தலைமறைவு செயற்பாட்டுக்கு உறுதுணையாக நின்றார்!

அத்தோடு குடாநாட்டை விட்டு வெளியேறிய பல போராளிக்குழுவின் இளைப்பாறும் இடைத்தங்கல் இல்லமாக, பல பற்றைக் காடுகளில், அவர்கள் காத்திருந்தார்கள்! மாஸ்ரரின் உணவும், மருந்தும் வரும் என்று!

அத்தகைய இருத்தலில் ஒன்றின் காட்டிக்கொடுப்புச் சுற்றிவளைப்பில் மாஸ்ரரும், திலகனும் இன்னுமொரு நண்பரும் இந்திய இராணுவத்தால் கைதைசெய்யப்பட்டு, பண்டத்தரிப்புச் சந்தி முகாமில் கடுமையாகத் தாக்கி விசாரணை செய்தபின்,காங்கேசன் துறை முகாமிற்கு மாற்றப்பட்டபின், இந்திய இராணுவத்தால் செல்வாக்கு மிக்க இரட்டைமுக காங்கேசன் பிரமுகர்கள், சில அரச நண்பர்கள் அதற்கும் மேலான நடேஸ்வராக்கல்லூரியின் அன்றைய அதிபர், மாஸ்ரரில் அன்பும், மரியாதையும் கொண்ட மாணவர்கள், சக ஆசிரிய நண்பர்கள் ஆகியோரின் முயற்சியும்,

இளந்தமிழ் மன்ற நண்பர்கள், தெல்லிப்பளை பநோகூ சங்கத்தலைவர் சிவமகாராஜா,

மாஸ்ரர் பண்டத்தரிப்பு முகாமில் தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து சொன்ன, அவரது ஒன்றைவிட்ட பிராம்பற்று அண்ணன் உட்பட பலரின் அயாராமுயற்சியால் மாஸ்ரர் மறுபடி விடுவிக்கப்பட்டார். அவர் நண்பர்களோடு!

பின்பு மறுபடியும் விடுதலைக்குரல் ஒலிக்கத்தொடங்க அதனை ஒடுக்க நினைத்த இந்திய உளவுத்துறையும், அதன் நிறைவேற்றுக்குழுவான, ஈபிஆர்எல்எவ் இன் அடியாட்களும் தமது எண்ணத்தை அவகாசமின்றி 1988 டிசம்பர் 4 ம் திகதி நிறைவேற்றின!

ஒரு ஆயுதம் ஏந்தாத ஆசிரியனை ஒழிக்க பல ஆயுதம் தாங்கிய முழுமையான கொலைகாரர்கள்!

அந்த ஜீவன், கல்லூரிவீதி இரண்டாம் குறுக்குத் தெரு வீதி சந்தியில்,தலையுலும் மார்பிலும் குண்டேந்தியபடி,

தான் பிறந்த மண்ணில் தன் குருதி வழிய தான் உயிரிலும் மேலாய் நேசித்த தாயகவிடுதலைக்காக தன்னுயிரீந்தார்.இதே சந்தியில், இந்திய இராணுவம் முன்பு தன் உரிமை முழக்கம் இட்டதும்,இதே சந்தியிலேயே ஈரோஸ் அமைப்பின் போராளிகள் நால்வர் வீரச்சாவடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க சிவந்த மண் சிவம் மாஸ்ரர் வீழ்ந்த மண்!  நாட்டுப்பற்றாளரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி அவருக்கு எமது அக நினைவு வணக்கம்

திசெம்பர் 5, 2020 - Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர், வீரவணக்கம் | , , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: