அழியாச்சுடர்கள்

தங்கையே துவாரகா…

தங்கையே துவாரகா…

அன்புக்கும் நேசத்துக்கும் உரித்தான தங்கையே மீண்டும் ஓராண்டு கடந்து செல்கிறது உன் நினைவோடு. உனக்கு நினைவிருக்கும் அன்றைய நாட்கள். அதைப் போலவேஎனக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது அந்தப் பொழுதுகள்.

“அண்ண எனக்கு அந்த மஞ்சள் பழத்த பிடுங்கித் தாங்கோ… சிவப்பு டேஸ்ட் இல்ல மஞ்சள் தான் நல்லா இருக்கு. ”

தேக்கம் மரத்தால் சோலையாக இருந்த அந்த வளாகத்தில் நீ என்னை அடிக்கடி கேட்ட போதெல்லாம் முறிந்து விழுந்திடுவேனோ என்ற தயக்கம் எதுவும் இன்றி மர உச்சத்தில் இருந்து உன் விருப்பத்தை நிறைவேற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்றும் மறைந்து விடாத பசுமரத்தாணிகள்.

இது ஒன்று போதுமடி உன் எளிமையை உரைக்க. எங்களால் நேசிக்கப்பட்ட ஒருவரின் மகள் என்ற பெருமை, திமிர் உன்னிடம் இருந்ததில்லை. எம்மவர் பலருக்கு உன்னோடு சேர்ந்திருந்த ஒன்றரை வருடத்தின் ஆரம்ப நாட்களில் தெரிந்ததில்லை நீ எவ்வளவு இயல்பானவள் என்று, எங்களில் பலர் கொஞ்சம் அமைதியாகவே உன்னோடு பேச முனைந்தார்கள். அப்போதெல்லாம்

” எதுக்குண்ணா இப்பிடி தயக்கம் நான் உங்கள் தங்கைதானே அப்பாவைப் பற்றி எல்லாம் நினைக்க வேணாம் தயக்கமின்றி தங்கையோடு நீங்கள் பழகலாம்.”

என்று உரைத்த போது அங்கிருந்த அனைவருமே அதியத்தில் உறைந்தார்கள்.

அது உன் அப்பா மீதுள்ள எமக்கு பயமில்லை தங்கையே மதிப்பு நேசம் அவருக்காக எதையும் செய்யும் துணிவு மட்டுமே உண்டு தங்கையே. அந்த மதிப்பு மட்டுமே உன்னிடம் தெருங்க விடாமல் தடுத்தது ஆனாலும் அதன் பின்பு நீ எங்களுள் ஒருத்தியானாய்.

“நீங்க நேசிப்பவரின் மகளாக இருந்தால் நான் பெரியவளா? நானும் சாதாரண பிள்ளை தான் அண்ணா. “

என்று தயங்காமல் சிரிக்கும் உன் வதனத்தை நினைத்து பெருமைப்பட்ட காலங்கள் அவை. இதை கேட்ட போது கூடி இருந்தவர்கள் பெருமிதம் அடைந்தார்கள்.

சாதாரண ஒரு ஆசிரியரின் மகள் என்றாலே திமிராக உலவும் சில பெண்பிள்ளைகள் மத்தியில் எம் நேசத்துக்குரியவரின் வாரிசு எந்த சலனமும் இன்றி எமக்குள் ஒருத்தியாக வாழ்ந்தது உன்னோடு கூட இருந்தவர்களில் உன்னை உயரத்துக்கே கொண்டு போயிருந்தது.

உன் பெயருக்குள் உறங்கிக்கிடக்கும் பல நியங்கள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் அருகில் இருந்து உணர்ந்தவர்கள் நாம். உன்னை நன்றாக புரிந்திருந்தோம். தங்கையே நீ வார இறுதி நாட்களில் உன்னால் தயாரிக்கப்பட்ட எதாவது உணவுடன் எம்மிடம் வருவாய். அப்போது அதை வாங்கி சுவைத்த தருணங்கள் மறக்க முடியாது. உன் சமையலை விரும்பி உண்டவர்கள் நாம். திங்கட் கிழமைகளை அதற்காகவே நாம் விரும்பினோம்.

கல்லூரியின் இறுதி நாட்களில் ஒருநாள் எல்லாருக்கும் நான் என் கையால் சமைத்து தர வேண்டும் என்று நீ ஆசைப்பட்டு உணவு தயாரித்தாய்.

அப்போது,

சொதி கடுமையாக உறைத்தது. சமையலுக்காக வாங்கிய பச்சை மிளகாய் முழுவதும் அதற்குள் போட்டுவிட்டாய் என்று எண்ணினோம் அதனால் உன்னை அருகில் அழைத்து

என்ன “………….. ” இறைச்சிக்கறிக்கு உறைப்புக் கூட என்றா சொதிய விட்டு சமப்படுத்தலாம் சொதி இறைச்சி மாதிரி உறைத்தா எதை விட்டு சமப்படுத்துவது என்று கேட்டு சிரித்தோம்.

“உங்களுக்கெல்லாம் கொழுப்பண்ண அதுக்குத்தான் இந்த சொதி ”

புன்னகை மாறாது நீ சொல்லி சென்றாய்.

இப்பிடித்தான் நீ இருந்தாய். எம்முள் எமக்குள் அன்றும் நீ வாழ்ந்தாய். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ யார் என்பதை உணராமல் பலர் இருக்கும் போது உன்னை உணர்ந்தவர்களாய் உன் அருகில் இருக்க அருகதையுள்ளவர்களாய் நாங்கள் இருந்தோம்.

நீ பிறந்ததில் இருந்து செய்தது பெரும் தவம். தமிழீழ கனவு சுமந்து வாழ்ந்த உன் பெற்றவரைப் போலவே உன் இலட்சிய்மும் ஒரு புள்ளியை நோக்கியே இருந்தது. உன் வயது அதுக்கான தருணத்தைக்காய் காத்திருந்தது. அந்த வயதை அடைய முன்னமே உன்னை அதற்காக தயார்ப்படுத்த முனைந்தாய். ஆனாலும் வயது குறைந்த நிலையில் தோற்றுப் போய் வயது வரும் வரை காத்திருந்தாய். அதற்கான தருணம் வந்தது சாதாரண உடை துறந்து பயணிக்க வேண்டிய நேரம் நெருங்கியது அதனால் வரியுடை தரித்து களமுனைக்கு விரைந்தாய். அங்கும் பல சாதனைகள் புரிந்தாய் சகோதரியே. அவற்றை வரிசைப்படுத்த என்னால் முடியவில்லை.

ஆயிரமாயிரம் கற்பனைகளை உலகின் முன்னே நீ விரித்தாய். உண்மை விளம்பிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளும் பல ஆயிரம் பேர் நீ வெளிநாட்டில் கல்வி கற்றதாய் எழுதித் தள்ளுகிறார்கள். கற்பனை சிறகடித்துப் பறக்கும் அவர்களின் வார்த்தைகளில் எம்மால் நேசிக்கப்பட்டவரின் உண்மை முகம் மழுங்கடிக்கப்படுகிறது என்பதை ஏன் உணரவில்லை. அவர் உன்னையும் எங்களைப் போலவே நேசித்தார். எமக்கு என்ன கிடைத்ததோ அதைத்தான் உங்களுக்கும் தந்தார். உணவு, உடை, கல்வி என அத்தனையும் எமக்குக் கிடைத்ததையே நீங்களும் பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் பலர் ஏன் அதை உணராமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

நீ உன் அண்ணன் உன் தம்பி என அத்தனைபேரும் தமிழீழ மண்ணில் தான் உங்கள் அறிவை வளர்த்தீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? இது எனக்கு விடைகிடைக்காத கேள்வி.

க.பொ.த சாதாரண தரத்தில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றாய். அதுவும் ஒரு ஆண்டு முன்பாகவே அந்தப் பரீட்சையை எழுது வென்றாய். க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவானாய். இது அனைத்தும் உன்னை நீ மெருகேற்றவே அன்றி பட்டங்களுக்காக அல்ல என்பதை நான் அறிவேன்.

உன் எண்ணங்கள் முழுவதும் தொழில்நுட்பத்தை நாடியதால் தொடர்ந்து தொழில்நுட்பக் கல்வியில் உன்னை ஈடுபடுத்தினாய். கற்று முடித்த காலங்கள் நகர்ந்த போது “இலத்திரணியல் மருத்துவம் “ (E-Medicine ) என்ற உயர் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பை வன்னிக் காட்டுக்குள் இருந்தே கண்டு பிடித்தாய். நீ வன்னியின் காட்டுக்குள்ளே உன்னைத் தயார்ப்படுத்தினாய். அறிவார்ந்த செயற்பாடுகளை அதிகம் மெருகூட்டினாய். கிடைத்த வளங்களைக் கொண்டு உயர்ந்த பெறுமதிகளை உனக்கானதாக கொண்டாய். உன் சிறு வயதுக்காலம் எப்படி இருந்தது என்று நான் அறியேன். ஆனால் உன் கல்விக்காலம் முழுவதும் வன்னியில் தான் என்பதை அடிக்கடி உறுதிப்படுத்துவாய். உன் புன்னகை தவழும் வதனம் அதை அடிக்கடி கூறிக்கொள்ளும். ஆனால் நாங்கள் துர்ப்பாக்கியவாதிகளானோம் தங்கையே நீ கண்டு பிடித்த அந்த கண்டுபிடிப்பை எம்மால் பயன்படுத்தக் கூடிய நிலையில் எம் காலச் சூழல் இடம் தரவில்லை. கண்டுபிடிப்பு எம் கைகளில் பயன்பாட்டுக்கு இல்லாமலே போய்விட்டது.

எமக்கு பாடங்களில் கவனம் குறைவு அதனால் பல வேளைகளில் கொப்பி பேஸ்ட் நடவடிக்கைதான். அது ஆசிரியருக்குத் தெரியுதோ இல்லையோ உனக்குத் தெரிந்தால் எம்மிடம் கோவித்துக் கொள்வாய். அந்தக் கோவமும் அழகானது தங்கையே. ஆசிரியர் பாடம் நடாத்தும்
போதெல்லாம் புன்னகை மாறாது பதில் கூறும் அந்த இனிய முகத்தை நாம் இனி பார்ப்போமா?

“ அண்ணா வாடி போடி என்று சொல்ல வேண்டாம் எனக்கு பிடிக்காது “

என சொல்லும் உன்னை வாடி போடி என்று அழைத்து சீண்டுவேன். அப்பிடி அழைத்தால் கோவம் வரும் உனக்கு. உன் புன்னகை மாறாத கோவத்தை ரசிப்பது கூட எமக்கு பிடித்திருந்தது. உனக்கும் எமக்குமான கல்லூரிக் காலங்கள் என்றும் மறைந்து போகாதவை. சாதாரண தோழியாக தங்கையாக எம்மைப் போலவே உண்டு உடுத்து வாழ்ந்து வந்தவளே அன்புத் தங்கையே விழி கலங்குகிறது உன்னை நினைக்கையில்.

பயம் என்பது கொஞ்சம் கூட இல்லாது இருக்கும் உன் வதனத்தை இனி எப்போது நாம் காண்போம் என்று தெரியவில்லை. இனி காண நீ வருவாயா இல்லையா என்ற உண்மை தெரியாதவராய், உனக்கான இந்த நாளில் இன்னொரு ஆண்டை கடந்து செல்கிறோம்.

உன் வரவு நிச்சயமற்றது உன் இருப்பு எமக்குத் தெளிவற்றது ஆனாலும் நீ வர வேண்டும்
என்னை போல அண்ணன்கள் உனக்காக காத்திருக்கிறோம். தங்கையோடு சேர்ந்து வாழ வேண்டும் நல்ல அண்ணன்களாய் உனக்கு பிடித்த அண்ணன்களாய்…

நேற்று உன்னைப் பற்றிய உரையாடல் ஒன்றில் உன் என் சகோதரி ஒருத்தி உன்னைக் கண்ட இறுதி சந்திப்பை நினைவு கூர்ந்தாள். முல்லைத்தீவின் கப்பலடி என்று சொல்லப்படுகிற இடத்தில் உன்னை அவள் கண்டபோது, அவளை இராணுவத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு பாதை கூறி இருக்கிறாய்.

“அக்கா இதுக்க ஆமி வந்துட்டான்
இதுக்குள்ளால போக வேண்டாம் வலது பக்கம் திரும்பி போங்கோ… தம்பிய கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ அக்கா சந்தர்ப்பம் வந்தால் மீண்டும் சந்திப்போம் “

என்று கூறிய உன் இறுதி வார்த்தையை அவள் அழுகையோடு கூறினாள்.

நீ என்றும் அமைதியான பொழுதுகளை கழித்தது கிடையாது. ஆபத்து நிறைந்த பாதைகளில் தான் உன் பயணம் நிறைந்து கிடந்தது. சாதாரணமான தமிழ் சிறுமியாய் நீ வாழ்ந்ததில்லை. லட்சம் லட்சமாய் இடர் சுமந்த எம் குழந்தைகளுக்குள் நீயும் முதன்மையானவள். ஆனாலும் எம்மை விட அதிகமான துயர்களை சுமந்தாய்

அண்ணனுடனும் தம்பியுடனும் கூடிப் பிறந்திருந்தாலும், அவர்களில் மிஞ்சிய பாசத்தை உன் தம்பி மீது வைத்திருந்தாய். அவன் தினமும்
எதோ ஒன்றுக்காய் சண்டை போட்டாலும் அந்தக் குழப்படிகாறனை மன்னித்து அரவணைப்பாய்.

எப்போதும் எம்மை நோக்கி திரும்பி நின்ற எதிரிகளினதும் துரோகிகளினதும் துப்பாக்கி முனைகள் எம்மை விட உன்னை குறிபார்த்து அதிகம் காத்திருந்தது. இன்றும் காத்திருக்கிறது. ஆனாலும் அந்த முனைகள் தாண்டி நீ மீண்டு வர வேண்டும் அண்ணா அக்கா மாமா சித்தி என்று நீ பாசம் வைத்த அத்தனை பேரும் உன் புன்னகைக்காக காத்துக் கிடக்கிறார்கள்.

நீ உதித்த இந்த நாளில் உனக்கு வாழ்த்துக்கள்
சொல்ல வார்த்தை வரவில்லை அன்பான தங்கையே துவாரகா எங்கிருந்தாலும் நீ வாழ்க…

பல இலட்சம் உறவுகளின் சார்பில் எதிர்பார்ப்புடன்
கவிமகன்.இ
02.06.2018

தெரியாத பல தகவல்களை பகிர்வதற்காக எனக்கு சந்தர்பம் தந்த ………. சகோ நன்றி

இரத்தினம் கவிமகன்

-தமிழ்த் தேசிய ஆவண மையம்

ஜூன் 3, 2018 - Posted by | ஈழமறவர், ஈழம், பிரபாகரன் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: