அழியாச்சுடர்கள்

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.karthikai-poo

மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும்.

புலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில் இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும்.

எத்தகைய அடக்குமுறை வந்தபோதும் – மாவீரர் நாளில் ஆலயங்களில் மணி ஒலிப்பதோ, தீபம் ஏற்றுவதோ தடைசெய்யப்பட்ட போதும் கார்திகை மலர்கள் இதழ்களை விரித்து மாவீரர்களை அஞ்சலிக்க தவறவில்லை. தமிழர்களின் அஞ்சலியை துப்பாக்கி முனையில் அதிகாரம் தடுத்து நிறுத்தினாலும் இயற்கை கார்த்திகைப் பூ வடிவில் மாவீரர் நாளினை நினைவேந்துவதை யாராலும் அடக்க முடியவில்லை.

கார்த்திகைப் பூ மட்டும் தான் அஞ்சலிப்பதில்லை. தீபமேற்றவோ மணியொலிக்கவோ தடைகள் போடப்பட்ட போதும் மானசீகமாக தமிழர்கள் தங்கள் மனங்களுக்குள் மாவீரர்களை பூசிக்கவே செய்தார்கள். இத்தகைய ஆத்மார்த்தமான அஞ்சலிப்பையும் அதிகாரக் கரங்களால் பிடுங்கியெறிய இயலாததாகவே இருக்கிறது.


எனவே தான் அஞ்சலிப்பை தவிர்ப்பதற்காக சில தந்திரங்களை ஆளும் தரப்பு செய்து வருகின்றது.

மாவீரர்களை அஞ்சலிப்பதில் முன்னிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய இளையோரையும் திசைதிருப்பி மாவீரக் கனவுகளை மறைக்க ஆட்சியாளர்கள் எத்தனையோ வழிகளில் முயன்றார்கள். போதைப்பாவனை ஆடம்பர மோகம், சமுகச் சீரழிவு நடவடிக்கைகள் என்று இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான சகல வழிகளையும் அரசு திறந்துள்ளது.

நல்லாட்சி அரசும் இளைய சமூதாயத்தை தவறான பாதைக்கு இட்டுச்செல்ல பின்நிற்கவில்லை. நவம்பர் 27ம் திகதி இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கோலிப்பண்டிகை நடத்துவதாக இருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்பலைகளாலோ என்னவோ தமக்கும் கோலிப்பண்டிகைக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கைவிட்டார் இந்தியத் துணைத் தூதுவர் என். நடராஜன். மேலும் நல்லாட்சி அமைச்சர்கள் “மாவீரர்களை நினைவுகூர எத்தனைபேர் வருவார்கள்”, “போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூருங்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூரமுடியாது” என்றார்கள். விடுதலைப்புலிகள் என்றொரு இனம் கிடையாது. விடுதலைப்புலிகளே தமிழர்கள் தமிழர்களே விடுதலைப்புலிகள் என்பதை அரச ஆட்சியாளர்கள் மறந்து விடுகின்றனர்.

ஒரே வீட்டில் இருந்து ஒரே தட்டில் உணவு உண்ட இறந்த உறவுகளை நினைவுகூரக்கூடாது என்று கூறுவது அபத்தமானது. நாம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர எத்தகைய தடைகள் வந்தாலும் – புத்திஜீவிகளையும் மாவீரர்களையும் அள்ளித்தந்த யாழ் பல்கலைக்கழகம் மாவீரர்களை நினைவுகூர பின்னிற்பதில்லை. மாவீரர் தினதிற்கு மூன்று நாட்கள் முன்னும் யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காட்டி சுடுவோம் என எச்சரித்தும் கடந்த வெள்ளிக்கிழமை நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழக சமுகம் இறந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர்கள் நினைவிடத்தில் மரங்களை நாட்டினார்கள்.

எதிர்வரும் சந்ததிக்கு எமது உணர்வுகளை கொண்டுசெல்வது ஒவ்வொரு தமிழனினதும் தலையாய கடமையாகும். எதிர்காலச் சந்ததியினருக்கு எம்மவர்களின் தியாகங்கள் கொண்டு செல்லப்படவேண்டும். கொண்டு செல்லப்பட்டாலே மாவீரர்களின் முக்கியதுவத்தினை உணர்ந்து எமது இளம் சமுதாயம் மாவீரர் நாள் போன்றவற்றை முன்நின்று நடாத்தும்.

ஒரு சிலர் பேரினவாதத்தின் தந்திரங்களுக்கு பலியாகினாலும் பெரும்பாலானோர் தங்களுக்காக போராடி மடிந்த மறவர்களை நினைவுகூர மறப்பதில்லை. இந்த வருடமும் ஈழத்தேசமெங்கும் மனத்தீபங்களின் ஒளியில் மாவீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படத்தான் போகின்றன. தமக்காக எரிந்த சூரியர்களை எவர்தான் மறப்பார்கள்

Advertisements

நவம்பர் 27, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: