அழியாச்சுடர்கள்

மாவீரர் வாரத்தின் 3ம் நாள் கார்த்திகை 23 !

புதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள்

frg

இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்க புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என தேசியத்தலைவரால் கூறப்பட்டது. அந்த வகையில் எங்கள் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

1990 ம் ஆண்டின் இறுதி பகுதியில் துயிலும் இல்ல கட்டுமானங்கள் தொடங்கினாலும் 1991 ம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் (பிரித்தானியா, மத்திய கிழக்கு , இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஒரு நாட்டு பற்றாளர் தாயகத்திற்கு வந்து தேசிய தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார் அதன் படி கட்டுமான பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.

இந்த கலைஞருக்கு கொடுத்த வேலை பிடித்து போக தனது வெளி நாட்டு வாழ்க்கையினை கைவிட்டு இதே வேலையில் ஊறிவிட்டார். கிளினொச்சி இராணுவத்தினரால் இந்த வருடம் கைப்பற்றப்படும் வரை அவர் தாயகத்தில்தான் இருந்தார் என்பதனை நாம் கட்டாயம் நினைவு படுத்தவேண்டும்.

இவ்வாறு தமிழீழ காவல்தெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவ காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர்.

ஆரம்பத்தில்பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விஸ்தரிக்கப்பட்டது அதன் பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1989 அம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991 இல் தொடங்கப்பட்டாலும் 2005 அம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 1991 ம் ஆண்டு யாழ் குடா நாடு எங்கும் எழிச்சிகோலமாக இருந்த இந்த நாட்களில் துயிலும் இல்ல பாடலாக “ மொழியாகி எங்கள் மூச்சாகி…….. என தொடங்கி தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தணப் பேழைகளே” என்ற பாடல் புதுவை இரத்தினதுரை அவரின் கவிகளில் இசைவாணர் கண்ணனால் இசையூட்டப்பட்ட பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேஜர் சிட்டு, கனிமொழி, வர்ண ராமேஸ்வரன் ஆகியோர் அதனை பாடியிருந்தனர். அன்று தொடக்கம் இந்த பாடல் ஒவ்வொரு மாவீரன் விதக்கப்படும் போதும் இசைக்கப்படும் எனப்து குறிப்பிடதக்கது.f

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நவம்பர் 22, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: