அழியாச்சுடர்கள்

மாவீரர் வாரத்தின் 3ம் நாள் கார்த்திகை 23 !

புதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள்

frg

இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்க புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என தேசியத்தலைவரால் கூறப்பட்டது. அந்த வகையில் எங்கள் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

1990 ம் ஆண்டின் இறுதி பகுதியில் துயிலும் இல்ல கட்டுமானங்கள் தொடங்கினாலும் 1991 ம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் (பிரித்தானியா, மத்திய கிழக்கு , இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஒரு நாட்டு பற்றாளர் தாயகத்திற்கு வந்து தேசிய தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார் அதன் படி கட்டுமான பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.

இந்த கலைஞருக்கு கொடுத்த வேலை பிடித்து போக தனது வெளி நாட்டு வாழ்க்கையினை கைவிட்டு இதே வேலையில் ஊறிவிட்டார். கிளினொச்சி இராணுவத்தினரால் இந்த வருடம் கைப்பற்றப்படும் வரை அவர் தாயகத்தில்தான் இருந்தார் என்பதனை நாம் கட்டாயம் நினைவு படுத்தவேண்டும்.

இவ்வாறு தமிழீழ காவல்தெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவ காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர்.

ஆரம்பத்தில்பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விஸ்தரிக்கப்பட்டது அதன் பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1989 அம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991 இல் தொடங்கப்பட்டாலும் 2005 அம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 1991 ம் ஆண்டு யாழ் குடா நாடு எங்கும் எழிச்சிகோலமாக இருந்த இந்த நாட்களில் துயிலும் இல்ல பாடலாக “ மொழியாகி எங்கள் மூச்சாகி…….. என தொடங்கி தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தணப் பேழைகளே” என்ற பாடல் புதுவை இரத்தினதுரை அவரின் கவிகளில் இசைவாணர் கண்ணனால் இசையூட்டப்பட்ட பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேஜர் சிட்டு, கனிமொழி, வர்ண ராமேஸ்வரன் ஆகியோர் அதனை பாடியிருந்தனர். அன்று தொடக்கம் இந்த பாடல் ஒவ்வொரு மாவீரன் விதக்கப்படும் போதும் இசைக்கப்படும் எனப்து குறிப்பிடதக்கது.f

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நவம்பர் 22, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு | , , , | மாவீரர் வாரத்தின் 3ம் நாள் கார்த்திகை 23 ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் கார்த்திகை 22 !

இன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின் நினைவினை பகிர்வது பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மாங்குளம் தாக்குதல் னடைபெற்று கொண்டிருந்தது. இரண்டு மாதமாக வட தமிழீழத்தின் மையப்பகுதியினை ஆக்கிரமித்து இருந்த சிங்களப்படை முகாமினை தாக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆகவே மாவீரர் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய நாளில் மாங்குளத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு மாதமாக சிங்கள முகாமை தாக்குவதற்கான பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்த, சண்டையில் பங்குபற்றிய பெண்கள் படையணியில் இருந்த இருக்கின்ற இந்த போராளியின் (தேவா) பதிவு இங்கு தரப்படுகின்றது.

ஒரே வகுப்பில் 13 போராளிகள் அதில் 09 மாவீரர். 75 பேர் கொண்ட அணியில் 2 பேர் தான் தப்பினார்கள். என்றாலும் அவர்களுக்காக அந்த காலப்பகுதியில் வீரஅணக்கம் செலுத்த முடிந்திருக்கவில்லை ஆம் அதுதான் இந்த பதிவின் முக்கியம்.

1989 ம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்தது எங்கள் தேசம் அதே நேரம் எந்தவித பிரச்சாரமோ அன்றி நிகழ்ச்சிகளோ இடம்பெறாமலேயே தாயகத்தின் பல இடங்களில் இருந்தும் புதிய போராளிகளாக இளைஞர்கள் யுவதிகள் தம்மை இணைத்தவண்ணம் இருந்தனர். அந்த காலப்பகுதியில் இயக்கத்திற்கு இணைந்து ஒழுங்காக பயிற்சி முகாமுக்கு காட்டுக்கு செல்வதென்றாலே ஒரு போராட்டம் தான். அதே நேரம் பெற்றோர்களின் பார்வையில் படாமல் செல்வது முதலாவது களம். இந்திய இராணுவம் அடிக்கடி சுத்தி திரிவதால் வீட்டில் இருந்து வெளியில் கண்டபடி வெளிக்கிட பெற்றோர்கள் விடுவதில்லை. எனவே இயக்கத்திற்கு போவது பற்றி கூடி முடிவு எடுப்பது பாடசாலையில் ஆகும். முடிவு எடுத்தபின் இயக்கத்திற்கு போக புறப்படும் நாளாக கோயில் திருவிழா அல்லது ஊரில் டி.வி. இல் சினிமா படம் ஓடும் நாள் அல்லது ஏதாவது விசேட நாட்கள் தான் தெரிவு செய்யவேண்டும் அப்படி எண்டால்தான் பெற்றோர்கள் கண்ணில் படாது செல்லமுடியும்.maaveerar_nall_2004_0023

அவ்வாறு 1989 ம் ஆண்டு முற்பகுதியில் எங்கள் வகுப்பை சேர்ந்தவர்கள் 05 பேர் பெண்கள் முடிவு எடுத்து ஒரு அணியாக இயக்கத்திற்கு சென்று விட்டோம் அதன் பின்னர் ஒரு மாத காலப்பகுதிக்குள் எமது வகுப்பில் படித்த் 13 பேர்வரை இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள். நாங்கள் எமது கிராமத்தில் இருந்து படகு வழியாக சென்று செம்மலையில் இறங்கி அதன் பின்னர் காட்டிற்குள் நடந்து போகவேண்டும். ஆனால் வடமராட்சி கிழக்கில் இருந்து எம்மை ஏற்றிக்கொண்டு படகு பருத்துறை பக்கமாக சென்றது எமக்கு அதிசயமாக இருந்தது ஆனால் கேள்வி கேட்கவில்லை.

பருத்தித்துறையினை படகு அடைந்ததும் நாங்கள் இறங்கினோம் இறங்கி ஒரு வீட்டில் இரவு இருந்துவிட்டு விடியகாலையிலேயே வல்வெட்டிதுறை நோக்கி நடக்கதொடங்கினோம் நான் நினைக்கின்றேன் ஒரு குச்சு ஒழுங்கையும் மிச்சமில்லை எல்லா இடமும் அளந்து கட்டிகொண்டு போனோம். எல்லா இடமும் இந்திய இராணுவம் அதனால்தான் சுத்தி சுத்தி நடந்தோம். வல்வெட்டிதுறை சென்றதும் அன்று இரவே மீண்டும் படகில் ஏறி செம்மலை அடைந்தோம். எம்மைஅழைத்து சென்றோர்கள் இன்று மாவீரர்களாகவும், முகமறியா கரும்புலி மாவீரர்களாகவும் ஆகிவிட்டார்கள்.ஒருவர் மட்டுமே போராளியாக இன்னமும் இருக்கின்றார்.

செம்மலையில் இருந்து காட்டிற்கு பயிற்சி முகாம் நோக்கி நடக்க தொடங்கினோம் 36 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடை சாப்பிடுவதற்கு மட்டும் கொஞ்ச நேரம் ஒரே நடைதான் கடற்பயணம், நடைபயணம் எல்லாமே புதிது ஆனாலும் எங்களுக்கு சோர்வு இருக்கவில்லை. சோர்வு காட்டினால் பயிற்சிக்கு கூட்டி செல்லமாட்டார்கள் என்ற பயம் வேறு. பயிற்சி முடிந்து சண்டைகள் பிடிக்க ஆரம்பித்தோம் இந்திய இராணுவத்துடன் இரண்டு சிறிய சண்டை பின்னர் சிங்கள இராணுவத்துடன் ஒரு சிறிய சண்டை அதனை தொடர்ந்து கொக்காவில், கோட்டை ஆகிய சண்டைகளுக்கு சென்ற பின்னர் பலாலி காவலரண் கடமையில் எல்.எம்.ஜி நிலையில் நின்றேன். இந்த காலப்பகுதியில் எனது வகுப்பு சக மாணவர்களான சிட்டு, நேசன், மாக்கிரட், எலெசபெத், வரதன்,அச்சுதன்,வெண்ணிலா,பத்தி, சாந்தி என போராளிகள் ஆங்காங்கே சண்டையில் நின்றார்கள்.சிலர் வீரச்சாவும் அடைந்தார்கள் லெப்ரினன்ட் மாக்கிரெட், 2ம் லெ எலிசபெத், லெப் நேசன், வெண்ணிலா போன்றோர் கோட்டை, கொக்காவில், பலாலி சண்டைகளில் வீரச்சாவு அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களது வீரச்சாவுக்கு என்னால் செல்லமுடியாது போய்விட்டது காரணம் களப்பணி. ஆனால் முதன் முதலாக எங்கள் கட்டுப்பாட்டில் மாவீரர்னாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடு நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். 1990 ம் ஆண்டு இதே நாளில் நெல்லியடி பாடசாலை, கரவெட்டி பாடசாலைகளில் மாவீரர் பெற்றோர்கள் கெளரவிக்கும் நிகழ்வு தடல்புடலாக நடக்குதாம் என்றும் கேள்வி பட்டேன். ஆகவே அந்த நாள் நான் சென்று எல்லா நண்பிகள் நண்பர்களுக்கும் வீரவணக்கம் செலுத்திவிட்டு அவர்களது பெற்றோரையும் சந்தித்து விட்டு வருவம் என்று பெரிய பிளான் போட்டு வைத்திருந்தேன்.maaveerar_nall_2004_0024

பலாலி காவலரணனில் நின்ற போது தான் மாங்குளம் முகாம் தாக்கி அழிப்பிற்காக பயிற்சிக்கு சென்றோம் செப்ரெம்பர் மாதம் மாங்குளம் காட்டுபகுதியில் ரட்னம் முகாமிற்கு சென்று இரண்டு மாதமாக பயிற்சி எடுத்தோம் அந்த முகாமில் இருந்தே 15 மைல்கள் காடுகளுக்கு ஊடாக நடந்து மாங்குளம் சண்டைக்கு வந்து சண்டை ஆரம்பமாகி அது வெற்றிகரமான தாக்குதலாக நிறைவடைந்தது. என்றாலும் என்னால் தாங்க முடியாத சோகமும் ,நெருடலும், குமுறலுமாக இருந்தேன்.

காரணம் முதலாவது 1990 இல் மாவீரர் நாளை சிறப்பாக கொண்டாட களைகட்டி நின்றது தமிழீழம் ஆனால் என்னுடன் 10 வருடங்களாக படித்த எனது நண்பர்களின் வீரச்சாவுக்கு கூட போகவில்லை ஆனால் அவர்களுக்கு முதல்முறையாக வீரவணக்கம் கூட செலுத்த முடியவில்லை என்ற ஏக்கமும் தவிப்பும் எனது நெஞ்சத்தை உண்மையில் வாட்டி எடுத்தது.

அடுத்ததாக மாங்குளம் சண்டை களத்தில் நிற்கின்ற இடத்திலாவது வீரவணக்கம் செலுத்தலாம் என்று நினைத்தேன் அதுவும் முடியவில்லை வெற்றி ஒலியினை விட என் நெஞ்சம் வேதனை ஒலியினால் தவித்தது. ஏனென்றால் மாங்குளம் தெற்கு பக்க காவலரண்களை ஊடுருவி தாக்கியளித்து கைப்பற்றும் பொறுப்பு 75 பேர் கொண்ட எங்கள் பெண்கள் அணிக்கும் தரப்பட்ட முக்கியமான பணி. நான் பிறண் எல்.எம்.ஜி வைத்திருந்தேன் சண்டை அகோரமாகத்தான் இருந்தது. அணியில் ஒவ்வொன்றாக வீரச்சாவும் காயங்களும் என்றாலும் விடவில்லை நானும் இன்னொரு பெண்போராளியும் வேறு நான்கு ஆண்போராளிகளும் இறுதியாக மாங்குளம் கோவில் பக்க வலுவான காவலரணை தாக்கி அழித்து கைப்பற்றினோம் அதுதான் அந்த பக்கத்தில் இறுதி காவலரண்.

அதன்பின்னர் பின்னுக்கு சென்று தற்காலிக முகாமில் இருந்து அழுது கொண்டிருந்தேன் ஏனென்றால் இரண்டு மாதமாக நாங்கள் 75 பெண் போராளிகள் பயிற்சி எடுத்து எவ்வளவு சந்தோசமாக இருந்தது ஆனால் இன்று அவர்கள் இல்லை உண்மையில் அந்த சண்டையில் எங்கள் 75 பேரில் நானும் இன்னொரு பெண்போராளியும் தான் மிஞ்சினோம் 52 பேர் வீரச்சாவு ஏனையோருக்கு காயம்.

எனது வகுப்பில் ஒட்டு மொத்தமாக 13 பேர் போராளிகள் அதில் 09 பேர் வீரச்சாவு (பல சண்டைகளில்) இருவர் இருக்கின்றோம். ஒருவர் விலத்திவிட்டார். எனது பெண் போராளிகள் அணியில் 1990 ம் ஆண்டு இதே நாளில் வீரச்சாவு 52 பேர். ஆனால் இதே நாளில் 1990 ம் ஆண்டு என்னால் எவருக்குமே வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையில் இருந்தேன். ஏன் இப்பவும் கூடத்தான் என் படையணி தோழிகளும் என் பள்ளி தோழிகளும் உறங்கும் அந்த ஆலயங்களுக்கு செல்லமுடியவில்லையே… ஆனால் நான் அவர்களை என்றோ ஒரு நாள் தரிசிப்பேன் என்ற நம்பிக்கையில் எனது பணியினை தொடர்கின்றேன்.

நன்றி தேவா

நவம்பர் 22, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு | , , , | மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் கார்த்திகை 22 ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மாவீரர் வாரம் ஆரம்ப நாள் கார்த்திகை 21 ம் திகதி !

lt-sankar1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது.

1989 ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல்வாரம் அளவில் இரண்டு போராளிகள் அந்த குளிர்கால கும் என்ற இருட்டிலும் கூட வீட்டை ஒருவாறு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்து விட்டனர். எங்குமே இந்திய அமைதி காக்கும்படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அதற்கிடையே காட்டிகொடுப்போர்கள், துணை இராணுவ குழுக்கள் என நிறைந்திருந்திருந்தது தேசம். இரண்டு போராளிகளில் ஒருவர் எமது ஊர்காரர் மற்றவர் முல்லை மாவட்டம் என சொன்னார் ஆனால் இடம் சொல்லவில்லை. ஒருவர் சந்திரன் மற்றவர் பெயர் ஞாபகம் இல்லை. சந்திரன் அரைகாற்சட்டையும் சேட்டும் மற்ற போராளி சாரம் கையில் டோர்ச் லைட் ஆனால் ஆயுதம் எதுவும் கைகளில் இல்லை களைத்து விழுந்தடித்து வந்தவர்கள் எனது அப்பாவையும் அம்மாவையும் தான் சந்திக்கவேண்டும் என கேட்டனர்.

நான் அவர்களை எங்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு குசினிக்குள் இருந்த அம்மா அப்பா ஆகியோரை கூப்பிட்டு கொண்டு வந்து அவர்கள் முன் விட்டேன் ஆச்சரியம் எதுவும் இல்லை ஏனென்றால் அவ்வளவு நெருக்கடிக்குள்ளும் கிழமைக்கு இரண்டு தடவை போராளிகள் வந்து போவார்கள் ஆகையால் அம்மா கேட்டார் என்ன ஐய்யாக்கள் இந்த நேரம் ஏதும் பிரச்சினையோ என்று சி..சீ அப்படி ஒண்டும் இல்லை அம்மா இந்த கடிதத்தை உங்களிட்ட கொடுக்க சொன்னவை அண்ணையின்ர இடத்தில் இருந்து வந்தது. சரி நாங்கள் போவிட்டு வாறம் என்றனர்.

அவசரப்படவேண்டாம் ஏதாவது சாப்பிடுங்கோ அல்லது தேத்தண்ணியாவது குடிச்சிட்டு போங்கோ என்றார் அம்மா. அப்பா சொன்னார் இந்த இருட்டுக்க எங்க போகப்போறியள் மழையும் இருட்டு கட்டி கிடக்கு என்றார். ஆனால் அவர்கள் இல்ல இல்ல நாங்கள் போகவேண்டும் என அடம்பிடித்தனர்; சென்றனர். ஆனால் ஏன் அடம் பிடித்தார்கள் என்பது எனக்கு அடுத்த நாள் தான் எனக்கு தெரிந்தது. அத்தோடு எங்கள் வீட்டில் அழுகை ஒலியும் கேட்கவே அயலவர்கள் வீட்டில் கூடிவிட்டனர்.

அந்த கடிதம் இதுதான் அதாவது ஒரு தபால் அட்டை பருமனில் சிவப்பு ரோஜா படத்தின் அருகே ஊன்றப்பட்ட துப்பாக்கி அதில் மாவீரர் நாள் 1989 கார்த்திகை 27 என அச்சிடப்பட்ட எழுத்துக்கள் என நினைக்கின்றேன். ஆனால் அடுத்த பக்கத்தில் எழுதப்பட்டவைதான் எம்மை எல்லோரையும் எனது குடும்பம் அனைவரையும் தூக்கிவாரிப்போட்டது. ஆம் அதில் எழுதப்பட்டு இருந்தது என்னவென்றால் மேஜர் ———– குடும்பத்தினருக்கு என எழுதப்பட்டு இருந்தது. ஆம் அன்றுதான் எங்கள் சகோதரன் வீரச்சாவு உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்ட நாள்.

அதற்கு முன்னர் மேஜர் —– வீரமரணம் என செய்தி வந்தது ஆனால் எவரும் உறுதியாக சொல்லவில்லை என்பதால் அடிக்கடி வரும் வதந்திகள் என்றே வீட்டில் நினைத்தார்கள் ஏனென்றால் எப்போ வீரமரணம்? எந்த சண்டையில்? நாள்? நேரம்? என்ன நடந்தது? என்ற எந்தவிபரமோ அல்லது வித்துடலோ எங்கே அடக்கம் செய்தது என்ற விபரமோ சொல்லவில்லை ஆகையால்தான் வதந்தி என நாம் இருந்துவிட்டோம்.maaveerar-day-2016

ஆனால் வதந்தி அல்ல உண்மை 1989 ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நித்திகை குளத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்திருந்தார் மேஜர் —– அவர்கள். தமிழீழ தேசிய தலைவருக்கு மெய்பாதுகாவலராக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த காலப்பகுதியில் இந்தியப்படையினரால் ஒப்பரேசன் செக்மேற் 3 என்ற நடவடிக்கையினை முறியடித்து தாக்கிய சமரில் வீரச்சாவு அடைந்தார். இவரின் வித்துடலும், இவருடன் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளினதும் வித்துடல்களும் தலைவர் முன் நிலையில் தேசிய தலைவரின் முகாம்களில் ஒன்றான (பின் நாளில் கமல் பேஸ்) மணலாற்று காட்டுப்பகுதியில் விதைக்கப்பட்டது.

ஆம் முதலாவது தமிழீழ மாவீரர் நாள் நினைவு கூரப்படுவதற்கு முன்பாகவே எமக்கு இந்த விடயம் அனைத்தும் தெரிந்தது. இதனால் எனது அம்மா கட்டாயம் நான் என் பிள்ளை புதைக்கப்பட்ட இடத்தை பார்க்கவேண்டும் என அடம்பிடித்தார். இதனால் 1989 நவம்பர் மாதம் அளவில் சில போராளிகள் வந்து வடமராட்சியில் இருந்து எம்மை அழைத்து சென்றனர். முல்லைதீவு வரை சென்றோம் எங்குமே இந்திய இராணுவம் நின்றாலும் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. நாம் முல்லைத்தீவு வரை பஸ் இல் பயணம் செய்து பின்னர் அளம்பில் பகுதி கடற்கரையில் ஒரு தென்னம் தோட்ட பகுதிவரை ஒரு கன்ரர் வானில் சென்றோம். இரண்டு நாள் அங்கு தங்கி இருந்தபின்பு ஒரு பச்சை நிற டற்சன் பிக் அப் வாகனம் வந்து எம்மை அழைத்து சென்றது நீண்ட தூரம் சென்றபின்பு ( இரவு) ஒரு முகாமுக்குள் நுழைந்தோம். பின்னர் அங்கு போராளிகள் எமக்கு தே நீர் தந்தார்கள். அதன்பின்னர் போராளிகள் சொன்னார்கள் இனிதான் கவனமாக இருக்கவேண்டும் என்றார்கள். ஏனென்றால் ஆபத்து நிறைந்ததும், குன்றும் குழியும்,சேரும் சுரியும், மழை நீரும் அதேவேளை கும் என்ற இருட்டும் எனது பெற்றோருக்கு பயத்தினை ஏற்படுத்தினாலும் மகனின் இடத்தை பார்க்கவேண்டும் என்ற வீச்சும், போராளிகள் பக்கத்தில் இருந்ததாலும் பயம் கலைந்தது. 05 அல்லது 06மணித்தியாலம் கழிந்து அந்த முகாமை அடைந்தோம்.

அங்கு மண்குவியலால் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மழைவெள்ளத்தில் அவை கரைந்தும் இருந்தது. ஒவ்வொரு மாவீரர்களது தலைமாட்டிலும் ஒரு தடி நாட்டப்பட்டு இருந்தது அதில் ஒரு பலகை துண்டில் சிவப்பு பெயின்ற் இனால் ஒவ்வொருவரது பேரும் எழுதப்பட்டு இருந்தது. டோர்ச் வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தோம் இதே நேரம் எனது தம்பி (போராளி) சொன்னான் அம்மா அண்ணாவின்ர 7வதாக இருக்கு பாருங்கோ என்றான் ஆம் மேஜர் —– என்ற பெயர் எழுதப்பட்டு இருந்தது. குந்தியிருந்து எல்லா மாவீரர்களது பெற்றோர்கள் போலவும் மண்ணில் அடித்து, நெஞ்சில் அடித்து கதறி அழுதார்கள் எனது பெற்றோர். பூக்கள் தூவினோம். மெழுகுவர்த்தி ஏற்றினோம். எல்லோரும் கவனமா இருங்கோ பிள்ளையள் என்ற எனது பெற்றோரின் எச்சரிக்கையோடு அந்த இடத்தை விட்டு புறப்பட்டோம். ஒரு கிழமை பயணத்துடன் எங்கள் முதலாவது தமிழீழ மாவீரர் நாளை நினைவு கூர்ந்து மணலாற்று காட்டில் இருந்து புறப்பட்டோம் புறப்படும் போது எமது சகோதரர் விதைக்கப்பட்ட வீடியோ பிரதியினையும் தந்தார் எனது இளைய சகோதரர்.

அந்த வீடியோ கொப்பியினை வீட்டிற்கு கொண்டுவந்து எங்களூரில் டி.வி வைத்திருக்கின்ற ஒருவரிடம் சென்று அதனை போட்டு பார்த்தோம். அதில் பெற்றோ மாக்ஸ் வெளிச்சத்தில் கிடங்கு வெட்டி வரிசையாக அதே உடுப்புடன் வீரர்கள் விதைக்கப்படுவதும் அதனை வீடியோ பிடிப்பதனையும்பார்க்கும் போது அதிசயமாக இருந்தது சண்டை உக்கிரமாக நடந்த வேளையிலும் கூட தேசியத்தலைவர் அவர்களுடன் கேணல் சங்கர் அண்ணா, கேணல் கிட்டண்ணா, பிரிகேடியர் சொர்ணம் அண்ணா, மேஜர் சோதியா அக்கா ஆகியோர்கள் இறுதிவரை நின்று 07 மாவீரர்களுக்கும் மண் தூவி வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். அதே போன்றுதான் முள்ளிவாய்க்கால் இறுதி போரிலும் வீரச்சாவடைந்த போராளிகளும் மக்களும் அப்படியே புதைக்கப்பட்டதும் வணக்கம் செலுத்தியதனையும் ஒப்பீடு செய்து பார்க்கின்றேன்.ltte-cemetries

எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்.

நவம்பர் 22, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு | , , , | மாவீரர் வாரம் ஆரம்ப நாள் கார்த்திகை 21 ம் திகதி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

உலகத்தமிழர் வரலாற்று மையம் சிறப்புக்காட்சி-காணொளி

world-tamils-historicalதமிழருக்காக போராடிய எம்மின உறவுகளே,மாவீர செல்வங்களே உங்கள் நினைவாக பிரித்தானியாவில் தமிருக்கு என்று ஒரு நிலம்,பல தமிழ் உறவுகளின் கனவு.
பிரித்தானியா ஒக்ஸ்பேட் OX17 3NX எனும் முகவரியில் உலத்தமிழருக்கு என்று ஒரு வரலாற்றுமையம்!!

காலத்தின் தேவை கருதி தமிழர் அனைவரும் ஒன்றினைவோம் வாரீர் .

தமிழரின் தாகம் தமிழீழதாயகம்.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகம் அமைந்துள்ள ( ஒக்ஸ்போட் OX17 3NX ) முகவரியில் தமிழீழ மாவீரர் நாள் நவம்பர்,27-11- 2016. பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒக்ஸ்பேட் மாநகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுக் கல்லறைகளில் தமிழீழ மாவீரர் நாள் !!

உலத்தமிழர் வரலாற்று மையத்தின் தொடர்புகளுக்கு!!
admin@worldtamilshistoricalcocity.com

02089089777

நவம்பர் 22, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், வீரவரலாறு | , , , | உலகத்தமிழர் வரலாற்று மையம் சிறப்புக்காட்சி-காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

புலிகளின்குரல் வானொலி 13 ம் ஆண்டு நிறைவு விழாவின் போது !!

voice of tigersபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி.

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்……

“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.

புலிகளின் குரல் வானொலி ( 21.11.1990 ) !!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி.

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்……

“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.

ஈழப் போராட்டத்தை வேகப்படுத்திய புலிக் குரல்

ஈழத் தமிழர்களின் வாழ்வில் கார்த்திகை மாதம் பல வழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது. விடுதலைக்காக தன் மூச்சை நிறுத்திய ஓர் உயிரின் இறப்பும், விடுதலை வேண்டிய தமிழர்களினை வேகப்படுத்திட ஓர் உயிரின் உயிர்ப்பும் இம் மாதத்தில் தான் அரங்கேறின. ஈழத்தில் முன்பொரு காலத்தில் இந்த இரு பெரும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் அப்பால் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ காவல் துறை முதலியவையும் இந்த கார்த்திகை மாதத்தில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாயக மக்களின் உண்மைக் குரலாய், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் எண்ணக் குரலாய் புலிகளின் குரல் ஈழத்தின் வட கிழக்கெங்கும் தன் ஒலி வீச்சு எல்லையை விரிவுபடுத்தியிருந்தது.voice-of-tigers

சிறிய பொருளினைச் சந்தைப்படுத்துவது முதல், ஒரு வியாபாரத்தினைப் பெருக்குவது வரை விளம்பரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல ஒரு அமைப்பினது கொள்கைகளை, சிந்தனைகளை, அவ் அமைப்புச் சார்ந்த சமகால மாற்றங்களை மக்களிடத்தே கொண்டு செல்வதற்கு ஒரு ஊடகம் என்பது அவசியமாகும். விடுதலை அமைப்பினது போராட்ட நோக்கத்தை மக்களிடத்தே கொண்டு செல்லவும், விடுதலை அமைப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பாடல்களைக் கட்டியெழுப்புவதற்கும் ஊடகம் என்பது அவசியம் என்பதனை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களது சிந்தனையின் பயனாக 1986களின் பிற் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தித் தொடங்கி வைக்கப்பட்டது தான் நிதர்சனம் எனும் பெயர் கொண்ட தொலைக்காட்சியாகும்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் போராட்டச் சம்பவங்களை, கள நிலமைகளை. அரசியல் நகர்வுகளை, போராட்டப் பிரச்சாரங்களை மக்களிடத்தே கொண்டு சென்று சேர்ப்பதற்கு நடு நிலையான ஊடகம் ஒன்று இல்லையே என்று ஆதங்கப்பட்ட புலிகள் அமைப்பினரின் முதல் முயற்சியாகப் புலிகளின் குரல் எனும் பெயர் கொண்ட பத்திரிகை 1988ம் ஆண்டின் நடுப் பகுதியில் பிறக்கின்றது. காலவோட்ட மாற்றத்தில் புலிகளின் குரல் எனும் பத்திரிகையினைப் திரு.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக புலிகளின் குரல் எனும் பெயரில் வானொலியாக மாற்றம் செய்து மக்களுக்கு நடு நிலையான செய்திகளைப் பகிரும் முதலாவது ஒலிபரப்பு முயற்சியினை 21.11.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தொடங்குகின்றார்கள்.

ஸ்ரீலங்கா அரசின் அழுத்தங்களுக்கு அடி பணியாது ஈழ மக்களுக்காய் களமாடும் வீரர்களின் நினைவுகளையும்,சம கால அரசியல் சம்பவங்களையும் உள்ளடக்கிய ஒரு மணி நேர ஒலிப்பரப்பாக புலிகளின் குரல் வானொலி ஈழத்தின் வடக்குப் பகுதியில் 1990ம் ஆண்டின் இறுதிக் நாட்களில் இரவு எட்டு மணி தொடக்கம் ஒன்பது மணி வரை தன் ஒலிபரப்பினைத் தொடங்குகின்றது. பின்னர் மக்களின் பேரபிமானம் பெற்ற வானொலியாக இவ் வானொலி மாற்றம் பெற்றுக் கொண்டதும் காலையும், இரவும் எனத் தன் சேவையினை விரிவுபடுத்துகின்றது. குறுகிய மூல வளங்களை உள்ளடக்கியும், சீரான மின்சார வசதிகள் இன்றியும் மக்களுக்கு ஒரு நேர்த்தியான ஒலிபரப்பினை வழங்க வேண்டும் எனும் பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாகப் புலிகளின் குரல் வானொலி மக்கள் மனங்களைக் கவரும் வண்ணம் நாளொரு பொழுதாகத் தன் பணியினைச் சிறப்புற ஆற்றத் தொடங்குகின்றது.

ஆரம்ப காலங்களில் ஈழத்தில் மின்சாரமின்மையால் மக்கள் பற்றரிகளின் உதவியோடும், சைக்கிள் டைனமோ மின்சாரத்தின் உதவியோடும் தான் வானொலிப் பெட்டியை முடுக்கி விட்டு புலிகளின் குரல் ஒலிபரப்பினைக் கேட்கத் தொடங்கினார்கள். வட பகுதி மக்களுக்கு நடு நிலையான செய்திகள் சென்று சேரக் கூடாது எனும் இராணுவத்தினரதும், அரசாங்கத்தினதும் இறுக்கமான கொள்கை காரணமாக யாழ்ப்பாணத்தை மையமாக வைத்துப் புலிகளின் குரல் ஒலிபரப்பு பண்பலை 98 அதிர்வெண்ணில் (98KHZ) இல் ஒலிபரப்பாகும் போது இராணுவத்தினர் விஷமத்தனாமாக அவ் ஒலிபரப்புச் சேவையினைக் குழப்பும் நோக்கில் தமது வானொலிச் சேவையினைப் புலிகளின் குரல் ஒலிபரப்பாகும் அதே அலை வரிசையில் ஒலிக்கச் செய்வதும்; சமயோசிதமாகச் செயற்படும் புலிகளின் குரல் ஒலிபரப்புத் தொழில் நுட்பவியலாளர்கள் பண்பலை 92 அதிர்வெண்ணிற்ற்கு மாற்றுவதும் ஈழத்தில் புலிகளின் குரல் செய்தி ஒலிபரப்பாகும் வேளையில் இடம் பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளாகும் !

போராட்டக் கொள்கைகளைத் தாங்கி, தலைவர் பிரபாகரனின் சிந்தனையின் வடிவமாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த புலிகளின் குரல் 1990ம் ஆண்டின் பின்னர் ஈழ மண் சந்தித்த அத்தனை இடப் பெயர்வுகளையும் தாங்கி மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்து தன் சேவைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.புலிகளின் ஆட்சேர்ப்பிற்காவும், போராட்டம் பற்றிய பிரச்சாரப் பரப்புரைகளுக்காகவும் புலிகளின் குரல் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு சிலர் விஷமத்தனமான பரப்புரைகளில் ஈடுபட்டு நின்ற சமயத்தில்; சமூக நிகழ்சிகளை,செய்தி அலசல்களை,விளையாட்டுச் செய்திகளை, விளம்பரங்களைத் தாங்கி ஒலிக்கின்ற ஒலிபரப்பான தமிழீழ வானொலியினைப் புலிகளின் குரல் நிறுவனத்தினர் ஆரம்பித்து இப் பிரச்சாரச் செய்கைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தனர்.

இராணுவ விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதல்கள்,பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல நடவடிக்கைகளிற்கு மத்தியிலும் போராளிகளுக்கும், மக்களுக்கும் ஈழ மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற – தேசியத் தலைவரின் எண்ணங்களைத் தாங்கி வருகின்ற ஒரு வானொலிச் சேவையினை வழங்கிய பெருமை அதன் பணிப்பாளர் திரு. தமிழன்பன் அவர்களையும், பணியாளர்களையுமே சாரும்! ஒரு முறை அறிவிப்பாளர் கிருஸ்ணபிள்ளை திருமாறன் அவர்கள் ஜெயசிக்குறுச் சமர் இடம் பெற்ற வேளையில் 1998ம் ஆண்டின் நடுப் பகுதியில் வன்னியின் கொக்காவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குரல் வானொலிக் கலையகத்தில் தமிழீழ வானொலிச் சேவையின் மாலை நேரச் செய்தியறிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

அந் நேரம் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் புலிகளின் குரல் கலையகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், வானொலியினை நிறுத்தாது “குண்டு விழுந்தால் என்ன! வீடு குலுங்கி இடிந்தால் என்ன! உடல் துண்டு பறந்தால் என்ன! நாங்கள் துடித்து மகிழ்ந்தால் என்ன!

தாகம் தணியாது! எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது!” எனும் பாடலை ஒலிபரப்பி ஒலிபரப்பினை நிறுத்தாது அழிவுகளின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியில் இருந்தும் மக்களுக்கான சேவையினை வழங்கிய பெருமையினை எப்படி வர்ணிப்பது? இந்தளவு தூரம் தலைவரின் சிந்தனையிற்குச் செயல் வடிவம் கொடுக்கின்ற ஊடகத் துறையினையும் புலிகள் அமைப்பினர் நேசித்தார்கள் என்றால்;! அந்த ஊடகத்தின் வீரியம் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்துப் பாருங்களேன்!

1999ம் ஆண்டு கார்த்திகை மாதம் நான்காம் திகதி முதல் புலிகளின் படை நடவடிக்கைகள் தாக்குதல்கள் தொடங்கும் போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் எந்தப் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர வேண்டும் எனும் தகவல்களையும், முதன் முதலாக ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு நேரடி ஒலிபரப்புப் போன்று புலிகளின் ஓயாத அலைகள் மூன்று வரலாற்றுச் சமரின் ஆறு நாள் அதிரடித் தாக்குதல்களை நேரடிச் செய்திகளாக உடனுக்குடன் பகிர்ந்து கொண்ட பெருமையும் புலிகளின் குரலையே சாரும்! இலங்கை வானொலி வரலாற்றில் தொலைபேசியூடாக அழைத்துப் பாடல் கேட்கின்ற ரெலிபோன் விருப்ப நிகழ்ச்சியினை வயர்லெஸ் வோக்கி டோக்கி மூலம் செய்து காட்டிய முதலாவது வானொலி புலிகளின் குரலாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரை இடம் பெறும் கார்த்திகை மாதம் 27ம் திகதியன்று மாலை 05.40 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் திட்டமிட்டு மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் வகையில் இடம் பெறும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களிற்கு மத்தியிலும் நிமிர்ந்து நின்று மக்கள் மத்தியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையினைக் கொண்டு சென்று சேர்க்கின்ற அயராத பணியினைச் செய்ததும் இந்தப் புலிகளின் குரல் தான்! 23 தடவைகள் விமானக் குண்டு வீச்சிற்கு புலிகளின் குரல் கலையகம், மற்றும் ஒலிபரப்புக் கோபுரங்கள் அகப்பட்டாலும் “விழ விழ எழுவோம்!” என நிமிர்ந்து நின்று ஈழ மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது புலிகளின் குரல்.

போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை விட, பாடசாலை மாணவர்களின் உள அறிவினை மேம்படுத்தும் போட்டி நிகழ்ச்சிகள், பொது அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் நாளாந்த அவதானிப்பு போட்டி வினாக்கள் எனப் பல சிறப்பான நிகழ்வுகளையும் தன்னகத்தே தாங்கி வலம் வந்து கொண்டிருந்த புலிகளின் குரல் 1999ம் ஆண்டு சிங்கள மொழியிலான சேவையினை “கொட்டி ஹண்ட சிங்கள விக்காசிய” எனும் பெயரில் சிங்கள இராணுவத்தினருக்கு கள நிலமைகளைச் சொல்லும் நோக்கில் ஆரம்பிக்கின்றது. நாடகங்கள், நாட்டுப்புற கலைப் பாடல்கள், வரலாற்று நினைவு மீட்டல்கள் எனப் பல சுவையான சம்பவங்களைத் தாங்கி வந்த புலிகளின் குரல் போராளிகளுக்குள்ளும், பொது மக்களுக்குள்ளும் பொதிந்திருந்த இலக்கியத் தேடலுக்கும் உந்து சக்தியாக விளங்கியிருக்கிறது.

குறுகிய வீச்செல்லைக்குள் இருந்த புலிகளின் குரல் சமாதான காலத்தில் (2002ம் ஆண்டு) நோர்வே நாட்டின் அனுசரனையின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒலிபரப்புச் சாதனங்களின் உதவியோடு இலங்கையின் வடக்கு கிழக்கிற்கும் தன் ஒலிபரப்பு வீச்செல்லையினை விரிவுபடுத்துகின்றது. 2005ம் ஆண்டு இணையத்திலும் தன் சேவையினை இணைத்து உலக நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும் புலிகளின் குரலை உரத்துக் கேட்கும் நிலையினை உருவாக்கியது. காலையில் தேசியத் தலைவரின் சிந்தனைகளோடு தன் ஒலிபரப்பினைத் தொடங்கும் புலிக் குரல், மாவீரர் பாடல், கணப் பொழுது, செய்தியறிக்கை, வீரச் சாவு அறிவித்தல், சாவு அறிவித்தல், மற்றும் துயர் பகிர்வோம் ஆகிய நிகழ்ச்சிகளோடு நாளிதழ் நாழி எனும் பெயரில் சுவையும் சுவாரஸ்யமும் கலந்து பத்திரிகைச் செய்திகளையும் வழங்கி வந்திருக்கின்றது.

போர்க் கால சூழ் நிலையினைக் கருத்திற் கொண்டு ஒன்றாய் எழுவோம் எனும் நிகழ்ச்சியும், புறப்படுங்கள் போர்க்களம் எனும் நிகழ்ச்சியும், போராட்டத்திற்காக ஆட்களைத் திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னாளில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளைத் தாங்கி நாடு எனும் நிகழ்ச்சியும், யோகரட்ணம் யோகியின் உரையினைத் தாங்கி வரும் தமிழர் பாடு நிகழ்ச்சியும் ஈழத்தின் இறுதி யுத்தக் கள நிலமைகளைக் கருத்திற் கொண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது. இரவு நேரத்தில் கணப் பொழுது, கருத்துக் களம், உலக வலம், கருத்துப் பகிர்வு, செய்தி வீச்சு, அகமும் புறமும், எனும் நிகழ்ச்சிகளோடு தொடர் நாடகங்களையும் மக்களுக்கு வழங்கி மக்கள் மனங்களில் இன்றும் நினைவலைகளாக அடித்துக் கொண்டிருக்கின்ற பெருமையும் இந்தப் புலிகளின் குரலையே சாரும்.

23 தடவைகள் விமானக் குண்டு வீச்சிற்கு உட்பட்டும், பல தடவைகள் இடப் பெயர்வுகளைச் சந்தித்தும் இறுதி யுத்த காலம் வரை வன்னி மக்கள் பின்னே நகர்ந்து சென்று ஈழப் போரின் இறுதி நாட்களான 15.05.2009 வரை வன்னிப் பகுதியில் ஓயாது ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்து புலிகளின் குரல். இன்று தமிழர்களின் வாழ்வியற் கலை கலாச்சார விடயங்கள் வன்னி மண்ணில் சிதைக்கப்பட்ட பின்னரும், ஈழ மக்கள் வாழ்வோடு மட்டுமல்ல அகில மெங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்கள் வாழ்வோடும் இரண்டறக் கலந்து இணையம் மூலம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பல தடைகளின் மத்தியில் விடுதலையின் உணர்வின் குரலாக ஒலித்து நிற்கும் புலிகளின் குரல் ஈழத்தில் வாழும் பெரும்பான்மையான தமிழர் உள்ளங்களில் அவர் தம் இளமைக் காலத்தின் நினைவின் குரலாக ஞாபகச் சுவடுகளில் பொதிந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை!

வானொலி ஒலிபரப்புத் துறையில் கடந்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த வானொலி!

http://www.eelamview.com/2012/05/17/voice-of-tigers/

நவம்பர் 22, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழீழ படையணி, வீரவரலாறு | , , , , | புலிகளின்குரல் வானொலி 13 ம் ஆண்டு நிறைவு விழாவின் போது !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது