அழியாச்சுடர்கள்

உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கிய சிங்கள,இந்திய அதிரடிப்படையினரை துவசம் செய்த புலிகள்.!!

தமிழர் விடுதலை போராட்ட வரலாற்றில், விடுதலைப்புலிகளால், சர்வதேச இராணுவ கோற்பாடுகளையும் தாண்டிய, பாரிய இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன.ipkf-killed

புலிகளின் இராணுவ வெற்றிகளில் இருந்து, இந்த முறியடிப்பு தாக்குதல்கள் இரண்டும் தனித்துவம் வாய்ந்தவை. இந்த இரு தாக்குதல்களையும் நான் ஒன்றாக பதிவு செய்வதற்கு முக்கிய காரணம், இரண்டும் ஒரேமாதிரியான தாக்குதல்கள்.

ஆனால் இரண்டு நாடுகளுக்கு எதிரானது.

1980களில் தமிழரின் விடுதலைப்போர் உச்சம் பெற்றிருந்த நேரம், சிங்கள அரசு அமெரிக்க மற்றும் அதன் செல்லப்பிள்ளையான இஸ்ரேலின் உதவியை பெற்றிருந்தது. அந்த உதவிகள் பெரும்பாலும் இராணுவ தளபாடம், தாக்குதல் பயிற்சி மற்றும் புலனாய்வு போன்ற உதவிகள் ஊடாக அமெரிக்காவுடன் சிங்களம் கைகோர்த்து மிக நெருக்கத்தில் வந்திருந்தது.

அந்த நேரத்தில் இரசிய சார்பு கொள்கையில் இருந்த இந்திய அரசால் இந்த நட்பை சகிக்க முடியவில்லை. அதனால் சிங்கள அரசை வழிக்கு கொண்டுவரும் நோக்கில், அன்றைய நேரத்தில் வேகம் பெற்றிருந்த தமிழரின் ஆயுத போராட்டத்தை இந்திராகாந்தி அரசு கையில் எடுத்தது.

அதன் வெளிப்பாடே தமிழ் குழுக்களுக்கான ஆயுத பயிற்சியும் ஆயுத உதவிகளுமாகும். இந்த உதவிகளின் பின்னால் இருந்த, இந்திய அரசின் நயவஞ்சகத்தை தலைவர் சரியாக கணிப்பிட்டிருந்தார். இந்திய அரசு இந்த உதவிகள் மூலம் தமிழரின் போராட்டக் குழுக்களை தன் கைப்பாவையாக வைத்திருக்க விரும்பியது.
இதன் மூலம் சிங்களத்தை அடக்க நினைத்தது.

இதை அறியாது, புலிகள் தவிர அனைத்து இயக்கங்களும் இந்தியம் விரித்த வலையில் விழுந்தனர். அதனால் புலிகள் மீது வஞ்சத்துடனேயே இந்திய அரசு உறவை பேணியது. காலம் சுழன்றது.

புலிகள் அமைப்பு , மிகவும் நேர்த்தியாகவும் காட்டுப்பாட்டுடனும் இராணுவ ரீதியாக வளர்ந்து கொண்டிருந்தது.

இப்படியான நேரத்தில் தான் 1985ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் தாக்குதல்கள் அகோரமாக இருந்தமையால் சிங்களம் திணறியது. இந்த தாக்குதல்களை வழிநடத்திய அன்றைய யாழ்மாவட்ட தளபதியும், புலிகளின் மூத்த தளபதியுமான கிட்டண்ணையை இலக்கு வைத்து ஒரு அதிரடித்தாக்குதளுக்கு சிங்களம் தயாரானது.

இதற்கான ஆலோசனையை அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையான கிரீன் பரேட் வழங்கி இருந்தது. இது வானூர்தி மூலமாக சிறப்பு அதிரடிப்படையினரை குறிப்பிட்ட இடத்தில் தரையிறக்கி, இலக்கை அழிப்பது அல்லது உயிருடன் கைது செய்து இழப்புகள் இல்லாது தளம் திரும்புவது.

இந்த முறையிலான தாக்குதல் ஒன்றின் மூலமாக தான் அமெரிக்க இராணுவத்தின் சீல் அதிரடிப்படையினரால் ஒசாமா பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது நீங்கள் அறிந்ததே. இதை ஒத்த தாக்குதலே அன்று சிங்களத்தாலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதல் முறையானது அமெரிக்க, வியட்னாம் போரின் போது வியட்கொங் போராளிகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தினர் அடிக்கடி பயன்படுத்தி வெற்றியும் கண்டனர். அதன் பின் பல உலகநாடுகள் இந்த தாக்குதல் உத்தியின் சிறப்பு காரணமாக, இது போன்ற தாக்குதலுக்கு ஏற்றாற்போல தமது நாட்டு வீரர்களை சிறப்பு பயிற்சி மூலம் உருவாக்கியுள்ளனர்.ipkf

அந்த உத்தியை தான் சிங்களமும் அன்று கையில் எடுத்திருந்தது. அமெரிக்காவின் ஆலோசனையுடன், இஸ்ரேல் புலனாய்வு அமைப்பான மொசாட் பயிற்சியை வழங்கி, இந்த தாக்குதலை நேரடியாக வழிநடத்தியது.

அதன் படி 1985ம் ஆண்டு சுதுமலையில் அமைந்திருந்த புலிகளின் முகாமை நோக்கி இரண்டு அமெரிக்க தயாரிப்பு பெல் ரக ( CH-146 Griffon) உலங்கு வானூர்தியில், கிட்டண்ணையை இலக்கு வைத்து, சிங்களத்தின் முதலாவது வானூர்தி மூலம் தரையிறங்கி, தாக்கும் வரலாறு ஒன்றை படைக்கும் நோக்கில், தரை இறங்கினர்.

தரையிறங்கிய அதிரடிப்படையினர் சகட்டு மேனிக்கு தாக்கியபடி புலிகளின் முகாமை நோக்கி முன்னேறினர். முகாமில் இருந்தவர்களுக்கு இது ஒரு எதிர்பாராத தாக்குதல். ஒரு கணம் திகைத்தபோதும், மறுகணம் தம்மை சுதாரித்த புலிகள் எதிர் தாக்குதலில் இறங்கினர்.

புலிகள் பற்றி மிகப்பெரும் கணிப்பீட்டு பிழையை விட்டிருந்த சிங்களத்துக்கு புலிகளின் ஆக்ரோசமான தாக்குதல் அதிர்ச்சியை கொடுத்தது.

முகாமில் இருந்தவர்கள் பாதுகாப்பாக நிலையெடுத்து நிதானமாக தாக்க ஆரம்பித்த போது, சமநேரத்தில் ஏனைய முகாம்களில் இருந்த புலிகளுக்கு தகவல் பரிமாறப்பட்டு அந்த இடத்திற்கு வேகமாக வந்து முறியடிப்பு தாக்குதலில் புலிகள் இறங்கினர்.

புலிகளின் தாக்குதலின் வேகம் காரணமாக சிங்கள அதிரடிப்படை இறந்த தமது சகாக்களின் உடல்களுடன் வந்தவழியே சிரமங்களுடன் சிலர் உயிர் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் பற்றி பின்னைய நாளில் மணலாற்றில் வைத்து, என்னிடம் கிட்டண்ணை கூறும் போது, போராளிகளின் வீரத்தையும், இந்த தாக்குதலில் லெப்.கேணல்.பைப் அண்ணையின் தாக்குதல் வேகத்தையும் சிலாகித்து கூறினார்.

இந்த தாக்குதல் வெற்றிக்கு முக்கிய காரணம் புலிகளிடமிருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் தான். தலைவர் நவீன ஆயுதங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவு முக்கியத்துவத்தை தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்குவதற்கும் கொடுத்தார்.

நான் இதை பெருமைக்காக கூறவில்லை. அந்த நேரத்தில் சிங்கள, இந்திய இராணுவத்திடம் இருந்த இலகுரக ஆயுதங்களை விட புலிகளிடம் நவீன ஆயுதங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் கைகளில் இருந்தன. இந்திய இராணுவத்துடனான போரில் புலிகளின் கை ஓங்கியிருந்தமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இந்த தாக்குதலின் தோல்வி சிங்கள அரசுக்கு மட்டுமல்ல அதன் பின்னால் இருந்து இயக்கிய CIA , மற்றும் மொசாட்டுக்கு, புலிகள் பற்றிய இராணுவ கோட்பாட்டை மறுசீரமைப்பு செய்யவேண்டிய தேவையை உருவாக்கி இருக்கும்.

அதன் பின் இது போன்ற,விமானம் மூலமான அதிரடி முயற்சிகள் எதையும் செய்ய கனவிலும் சிங்களம் நினைக்கவில்லை.

இதனை தொடர்ந்து, கால சுழற்சியின் ஊடாக, அன்றைய நேரத்தில் ஆட்சிக்கு வந்திருந்த ராஜீவ் காந்தி, அன்றைய சிங்கள ஜனாதிபதி J.R.ஜெயவத்தனாவின் குள்ளநரி ராஜதந்திரத்துக்கு பலியாகி, இந்திய அரசின் பிழையான கொள்கைவகுப்பாளர்களால் தவறான பாதையில் வழிநடத்தப்பட்டு, எமது மண்ணுக்கு அமைதிப்படை என்னும் கோரப்பப்படையை அனுப்பி வைத்தார்.

வந்த உடனேயே,பல அச்சுறுத்தல்களின் மூலமும், வாக்குறுதிகள் மூலமும் புலிகளிடமிருந்த ஆயுதங்களை களைய முற்பட்டனர். வேறு வழியில்லாது புலிகளும் அதற்கு சம்மதித்தனர்.

ஆன போதும் தலைவர் இந்திய அரசை நம்பவில்லை.!

தலைவர் இந்திய அரசால் முன்னர் கொடுக்கப்பட்ட ஆயுதங்களுடன், பாவனைக்கு உதவாத ஆயுதங்கள், மற்றும் புலிகளால் உற்பத்தி செய்யப்பட்ட மோட்டர்கள், எறிகணைகளையும் ஒப்படைத்தனர்.

ஆனால், இரவோடு, இரவாக எல்லா புதிய ஆயுதங்களும் தமிழர் பிரதேசமெங்கும் புலிகளால் மண்ணில் புதைக்கப்பட்டது.

இதை புதைப்பதற்காக யாழ்ப்பான கடைகளில் இருந்த பொலித்தீன், மற்றும் கிரீஸ் என்பன பெரும் தொகையாக கொள்முதல் செய்யப்பட்டதை மணந்து பிடித்த றோ (raw) அமைப்பு, இது பற்றி புலிகளிடம் கேட்டது. மழுப்பலான பதிலின் மூலம், றோவுக்கு கண்ணை கட்டினர் புலிகள்.

உண்மையில் புலிகளின் ஆயுத இருப்பு பற்றியோ போராளிகளின் தொகை பற்றியோ எந்த தகவலும் றோவிடம் இல்லை என்பது பெரும் புலனாய்வு சறுக்கலே றோவுக்கு.

சிங்கள அரசுக்கு சார்பாக நிலையெடுத்து வந்த இந்திய அரசு, சிங்கள அரசின், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், மற்றும் தமக்கு விசுவாசமான ஆயுதக் குழுக்களுக்களான EPRLF,TELO,ENDLF போன்ற சமூக விரோதிகளுக்கு, ஆயுதங்களை கொடுத்து நிராயுத பாணியாக நின்ற புலிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தனர்.

அத்தோடு புலிகளுக்கு உதவும் பொதுமக்களை அச்சுறுத்தும் காரியங்களிலும் ஈடுபட்டனர். அகிம்சை தேசம் அல்லது காந்திய தேசமென சர்வதேசத்தை மாயவலையில் வைத்திருந்த இந்திய தேசத்தின் உண்மை முகத்தை காட்டுவத்தற்கு புலிகள் தயாராகினர்.

இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதமிருந்த திலீபண்ணை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கி இந்தியத்தின் கோரமுகத்தை எம் மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்தி, ஈகைச்சாவடைந்தவுடன் தலைவரின் பொறுமை எல்லை கடந்தது.

அத்தோடு கடல் போக்குவரத்தில் ஈடுபட்ட எம் தளபதிகளான குமரப்பா அண்ணை, புலேந்திரன் அண்ணை உட்பட 12வேங்கைகளின் மரணமும், தலைவருக்கு இந்திய இராணுவத்துடன் மோதும் முடிவை எடுக்கவைத்தது.

அதற்கு முன்னமே, தலைவர் எமது ஆயுத கையிருப்பை கூட்டும் நோக்கில், சிங்கப்பூரில் இருந்து ஆயுதக்கப்பல் ஒன்று சிறு தொகுதி ஆயுதங்களுடன் (சில நூறு துப்பாக்கிகள், 40mm கிரனைட் லோஞ்சர்கள் (சிங்கப்பூர் டொங்கான்) கைத்துப்பாக்கிகள், M-16 கான 5.56MM NATO ரவைகள் மற்றும் AK 47-கான 7.62MM ரவைகள் உட்பட சிறு தொகுதி ஆயுதங்கள் சர்வதேசக்கடலில் வைத்து இறக்கப்பட்டு, சிறு படகுகள் மூலம் எமது பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வந்த இறுதிக் கப்பலும் இது தான்.

இந்த கப்பல் பற்றி அறிந்த இந்திய கடற்படை, இந்த தகவலை றோவுக்கு வழங்கியது. றோ, இதுபற்றி புலிகளிடம் கேட்டபோது புலிகள் அதை மறுத்தனர். இப்படி இந்திய அரசுக்கு தெரியாமலேயே,அவர்களின் நயவஞ்சகத்தை முறியடிக்க புலிகள் தயாராகினர்.

அதுக்குரிய நாளும் வந்தது. 10/10/1987அன்று இந்திய இராணுவத்துடனான அந்த வரலாற்று போர் ஆரம்பமானது. சண்டை ஆரம்பமானதும், பலாலியில் இருந்த இந்திய இராணுவ உயர் அதிகாரிகளால் எமது தலைவரை சுட்டு கொல்வதற்காக தாக்குதல் திட்டமொன்று போடப்பட்டது.

அதன்படி, 100பேர் கொண்ட சீக்கிய அணி பரசூட் மூலம் தரை இறங்கி யாழ் பல்கலைக்கழக மைதானத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தொடந்து தரையிறங்கும் பரா துருப்பினருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

அதோடு பரா துருப்பினர் சென்று, தலைவரை கொல்வது அல்லது கைது செய்தபின் மீண்டும் இவர்களிடம் திரும்பி வந்தபின், கெலிகப்டரில் தளம் திரும்புவது என திட்டமிடப்பட்டு, அதிரடிப்படையினரும் தாக்குதலுக்கு ஆயத்தமாகினர்.

அக்டோபர் மாதம் 12ம் திகதி. நேரம்: அதிகாலை 1 மணி. திட்டமிட்டபடி இந்தியப் படைகள், தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்தனர். அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில், இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படையணிகள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) மற்றும் 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 – Sikh Light Infantry) ஆகியனவே பயன்படுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைக்காக நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகாக, அதிரடிப்படையினரை ஏற்றியபடி எம்.ஐ.-8 (MI8) உலங்குவானூர்தி, தலைவர் தங்கியிருந்த கொக்குவில் முகாமுக்கு அருகில் இருந்த யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கி புறப்பட்டது.

இந்திய இராணுவத்தின் நயவஞ்சகத்தால் எம் தளபதிகளை இழந்ததினால் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் போர் மூளும் அபாயத்தை உணர்ந்த இந்திய இராணுவத்தளபதி திபீந்தர் சிங் அவசர உரையாடல் ஒன்றிற்காக புலிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு இனங்கள் 08/10/1987அன்று உலங்கு வானூர்தியில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திரங்கினார். அப்போது அந்த பிரதேசம் முழுவதும் புதிய ஆயுதம் தரித்த புலிகளின் பாதுகாப்பை கண்டதும் இந்திய தளபதிகள் திகைத்திருப்பர்.

காரணம் அதுவரை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு வெறும் கைகளுடன் உலாவிய புலிகளை தான் அவர்கள் கண்டிருந்தனர். அங்கிருந்த புலிகளின் முகத்தில் கோபம் குடிகொண்டிருந்தது. யாரும் இவர்களை வரவேற்று உபசரிக்கவும் இல்லை புன்னகைக்கவும் இல்லை.

இதனை நான் பதிவு செய்வதற்கு காரணம் இந்திய இராணுவம் எம் மண்ணிற்கு வந்தபோது புலிகளும் அவர்களுடன் மிகவும் அன்னியோன்னியமாகவே பழகினர். இது எமக்கே உரிய பண்பாடு. ஆனால் எமக்கு துரோகம் செய்து பகையானால் பாவ புண்ணியம் பார்க்க மாட்டார்கள் தமிழர்கள். கொண்ட கொள்கைக்காக சாகத்துணிந்த புலிகளுக்கு, இவர்களின் வஞ்சக நட்பை தூக்கி எறிந்தது இயல்பே.

வந்திறங்கிய தளபதிகளை, அன்றைய நேரத்தில் இந்திய இராணுவத்துடன் புலிகள் தரப்பில் உரையாடிய திரு.மாத்தையா, அவர்களை வரவேற்று புலிகளின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

உண்மையில் இந்திய இராணுவத்தளபதிகள் அங்கு வந்ததன் நோக்கம் புலிகளை பயமுறுத்தி பணியவைப்பது. அடுத்தது கொக்குவில் பிரம்படியில் தான் அன்றைய நேரத்தில் தலைவரின் முகாம் இருந்தது. அங்கு தலைவர் இப்போதும் இருக்கின்றாரா என்று உறுதிப்படுத்துவதே இவர்களின் இரண்டாவது நோக்கம்.

பேச்சுவார்த்தை பலனளிக்காது போனமையால் தளபதிகள் முகாம் திரும்பினர். இது நடந்து அடுத்த நாள் 9ம் திகதி இரவு 30பேர் கொண்ட சீக்கிய அதிரடிப்படை அணியொன்று கொக்குவில் பிரம்படியில் அமைந்திருந்த தலைவரை இலக்கு வைத்து இரவோடு இரவாக நகர்வொன்றை மேற்கொண்டனர். பின் என்ன காரணத்தாலோ அந்த திட்டத்தை கைவிட்டு முகாம் திரும்பினர்.

இந்த நகர்வு பற்றி அறிந்த புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் இலக்கு தலைவர் என்பது தெரிந்து விட்டது. அதன் பின்னர் இந்திய இராணுவத்தின் அடுத்த நகர்வு ஆகாய மார்க்கமாகவே இருக்கும் என்பதை கணித்த புலிகள், அதற்கான இடத்தை யாழ் பல்கலைகழக மைதானமாகவே இருக்கும் என்பதையும் முன்னமே ஊகித்து அதற்கு ஏற்றால் போல தம்மை தாயார் படுத்தி, இவர்களின் வரவுக்காக காத்திருந்தனர்.

இதையறியாத இந்திய கொமாண்டோக்கள் தமது தளபதியின் திட்டத்தில் இருந்த நம்பிக்கையில் வெற்றி களிப்பில் மிதந்தனர்.

அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய தளபதி திபீந்தர் சிங் தலைவரை கொன்றோ அல்லது கைது செய்ததும் இரண்டு நாளில் தாக்குதல் நிறைவு பெற்றிடும் என்று உரையாற்றியதாக தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தான் போட்ட அன்றைய திட்டம் இராணுவ கோட்பாடுகளின்படி மிகவும் துல்லியமான திட்டம் என்பதை இராணுவ வல்லுனர்கள் ஒப்புக்கொண்டதாக அந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டியதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

சாதாரண இராணுவ அமைப்புக்கான திட்டமெனில் அது சிறப்பான திட்டமே.

ஆனால் 16வயதில், தனி ஒருவனாக போராட்டத்தை ஆரம்பித்து மிக நுணுக்கமாகவும், எச்சரிக்கையாகவும் தலைமறைவு வாழ்கையை மேற்கொண்டு, தன்னை போலவே எந்த நேரத்திலும் சாவதற்கு துணிந்து,கழுத்தில் நஞ்சுடன் திரியும் ஒரு தலைவனையும் போராளிகளையும் கொண்டது புலிகளமைப்பு என்பதை இவர்கள் மறந்து விட்டனர்.

சிறுக சிறுக தாக்குதல்களை மேற்கொண்டு அதன் தோல்வி, வெற்றிகளில் பாடங்களை கற்று சிறந்த இராணுவ மதிநூட்பத்துடனிருந்த தலைவனையும், தளபதிகளுடன் மோதப்போகின்றோம் என்பதை மறந்து சில நூறு சாரம் கட்டிய புலிகள் என குறைவாக மத்திப்பிட்டே இந்த தாக்குதலுக்கு ஆயத்தமாகினர்.

எதிரியை குறைவாக மதிப்பிட்டதன் பாரிய அடியே இந்த தாக்குதல்.

திட்டத்தின் படி நான்கு MI-8 துருப்புகாவி உலங்கு வானூர்தியில் 100பேர் கொண்ட 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 – Sikh Light Infantry) பரசூட் மூலம் தரையிறக்குவது. அவர்கள் அங்கிருக்கும் புலிகளை அழித்து நிலையெடுத்ததும்.

இந்திய இராணுவத்தின் சிறப்பு படையணியின்100 பேர் கொண்ட பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) அந்த இடத்தில் தரையிறங்கி பல்கலைக்கழகத்தில் இருந்து அரை மைல் தூரத்தில் இருந்த கொக்குவில் பிரம்படியில் அமைந்திருந்த தலைவரின் இருப்பிடத்தை முற்றுகையிட்டு அவரை கொல்வது அல்லது கைது செய்தபின் வந்தவழியே வந்து உலங்குவானூர்தி மூலம் தளம் திரும்புவதே திட்டம்.

இரண்டு நாளில் போர் முடிந்துவிடும் என்னும் குருட்டு நம்பிக்கையில், ஜெய்கிந் கோசத்துடன் புறப்பட்ட கொமாண்டோக்கள் 1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி.நேரம்: அதிகாலை 1 மணி. கரும் இருட்டுக்கு மத்தியில் பரசூட் மூலம் குதித்தனர்.

தங்களுக்கான புதைகுழியை புலிகள் வெட்டிவிட்டு காத்திருப்பது தெரியாமல் குதித்த இந்திய கொமாண்டோக்கள் மீது, அந்த நேரத்தில் காவல்கடமையில் இருந்த மேஜர்.குகதாஸ் அண்ணை (1991ம் ஆண்டு ஆனையிரவு தாக்குதலின்போது வீரச்சாவடைந்தவர்) பரசூட் மூலம் குதிப்பதைக்கண்டு தனது AK-MS மூலம் இவர்களை நோக்கி தனது தாக்குதலை ஆரம்பித்தார்.
அதனைத்தொடந்து ஏனைய புலிகளும் தாக்குதலில் இறங்கினர்.

இதில் இரண்டு வானூர்திகள் சேதமாகி திரும்பி சென்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் பரசூட் மூலம் குதித்த இராணுவத்தினரில் 20க்கு மேற்பட்டவர்கள் உயிரற்ற சடலமாகவே வந்து தரையை தொட்டனர்.

உயிருடன் தரையை தொட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. காரணம் கொமாண்டோக்கள் தரை இறங்கும் போது தங்களுடன் கொண்டுவரும் “கொமாண்டோ சவள்” கொண்டு கிடங்கு கிண்டி அந்த மண்ணை தம்முடன் கொண்டுவரும் சாக்கில் போட்டு மூட்டை கட்டி முன்னாள் வைத்து கிடங்கில் இருந்தே தாக்குதல் மேற்கொள்வார்கள்.

ஆனால் அந்த பிரதேச மண் மிகவும் கடினமானது வெட்டுவதற்கு சிரமம். கற்பாறைகளுடன் கூடிய கடினமான மண் தரை என்பதால் அது முடியாது போனமையால் தரை இறங்கியவர்களும், அந்த தாக்குதலுக்கு இலக்கானார்கள்.

இரவில் இந்த தரை தாக்குதல் நடந்தமையால் 29பேர் மரணமடைய அதற்கு மேல் படுகாயமடைந்தபடி, மேலதிக உதவி பெற்று தப்பி சென்றனர். இதில் மரணமடைந்தவர்களில் தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் பீரேந்திர சிங்கும் ஒருவர்.

இந்த தாக்குதல் தோல்விக்கு முக்கிய காரணம் புலிகள் பற்றிய பிழையான மதிப்பீடேயாகும்.

இந்த தாக்குதலை பொட்டம்மான் வழிநடத்தினார். இவருடன் லெப்.கேணல். மதியண்ணை லெப்.கேணல்.சராண்ணை மேஜர்.கோணேஸண்ணை, ஜவானண்ணை, போன்றவர்களும் பங்கு பற்றினர்.

இந்த தாக்குதலின் பின் புலிகள் மீதான, இந்திய இராணுவ கோட்பாடு நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சினிமாவில் வரும் வில்லன்கள் போலவே புலிகளை எண்ணியே இந்த திட்டத்தை போட்டு தலைவரை பிடிக்க வந்தனர்.

ஆனால் அதற்கு முன்னமே தலைவரை பாதுகாப்பாக தென்மராச்சிக்கு நகர்த்தியிருந்தனர் புலிகள். அவருடன் தளபதிகளான பாண்டியண்ணை , இம்ராண்ணை , சொர்ணமண்ணை, கடாபியண்ணை போன்றவர்களுடன் ஒரு அணியொன்று பாதுகாப்புடன் சென்றிருந்ததனர்.

தென்மராச்சியில் வைத்து மேலதிக பாதுகாப்பை தமிழ்செல்வண்ணை, குணாண்ணை, கப்டன்கில்மன், பரணி, வீமன் போன்றவர்கள் பாதுகாத்து, ரகசியமாக வன்னிக்கு அனுப்பி வைத்தனர்.

இப்படி இந்த தாக்குதல் முறியடிக்க பட்டபோதும், இந்த தாக்குதலின் போது அம்மானுக்கு கடும் காயம் ஏற்பட்டிருந்தது. அவரை பாதுகாக்க மிகவும் கடும் பிரையத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அம்மானை இலக்கு வைத்தே சில கொமாண்டோ தாக்குதலை இந்திய இராணுவம் மேற்கொண்டது. அதை எழுதினால் அதுவே ஒரு தனிப்பதிவாக மாறிவிடும்.

இந்த இரு தாக்குதலுமே இரண்டு நாடுகளுக்கும் ஒன்றை உணர்த்தி இருக்கும் தாங்கள் மோதியது போர்க்கலையில் சாணக்கியம் மிக்க போராளிகளுடன் என்பதை தெளிவுபடுத்தியிருக்கும். புலிகளின் போர் உத்திகளை சாதாரண இராணுவ கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட முடியாது. அவர்கள் அதற்கு அப்பாற்பட்டவர்கள். அதனால் தான் உலகே திரண்டு எம்மை எதிர்த்தது.!

பெருமைகளுடன் துரோணர்.!!

Advertisements

நவம்பர் 4, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: