அழியாச்சுடர்கள்

லெப் கேணல் மதன்

Lt Col Mathan

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி.

வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று வவுனியா மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான் . வேவுப் போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய மதன் , தாக்குதல் அணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டான் . மேலும் கனரக ஆயுதங்களில் ஆர்வமுடன் பயிற்சி , பல தாக்குதல்களில் களமாடிய மதன் 1-9 படையணியில் இணைக்கப்பட்டான் .

1-9 படையணியில் வேவுப் புலியாகவும் கனரக ஆயுதம் ( ஜி. பி. எம். ) சூட்டாளனாகவும் மதனுடைய களச் செயற்பாடுகள் வன்னிக் காடுகளில் விரிவடைந்தன .யாழ் குடா நாட்டில் பல இராணுவ முகாம்கள் மீதான வேவு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டான் . 1995 ம் ஆண்டு வன்னி மாவட்ட படையணியில் வேவு அணி லீடராக இணைக்கப்பட்ட மதன் தமிழீழத்தின் பல பகுதிகளிலும் வேவுச் செயற்பாடுகளில் திறமுடன் செயற்பட்டான் . 1996 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் வேவு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இளம் போராளிகளை வேவு நடவடிக்கைகளில் பயிற்றுவிப்பதில் மதன் வல்லவராயிருந்தார் . அச்சமறியா வேவுப் புலிகளான வீரமணி , கோபித் , தென்னரசன் , இராசசிங்கம் மதுரன் முதலான இளம் அணித் தலைவர்களை வேவு நடவடிக்கைகளில் திறமுடன் நடத்தினார். படையணியின் முதுநிலை அணித் தலைவன் ராகவன் மதனுடைய இணைபிரியாத தோழனாயிருந்து மதனிடம் வேவுப் பயிற்சி பெற்றார். பல தாக்குதல்களில் மதன் ராகவனுடன் இணைந்து கனரக ஆயுத சூட்டாளனாக களமாடினார்.

1996 ம் ஆண்டு ஆனையிறவு பெரும் தளத்தில் மதன் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது எதிரியின் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமுற்ற, ஒரு காலை இழந்தார். சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் , உடல் நலன் தேறி செயற்கைக் காலுடன் மீண்டும் களமுனைக்கு திரும்பினார்.

1997 ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் மதன் கள நிர்வாகப் பொறுப்பாளராக ஓய்வின்றி செயற்பட்டார். வெடிபொருள் வழங்கல், உணவு வழங்கல், வாகனம் முதலான அனைத்தையும் மதன் தனியொரு பொறுப்பாளராக இருந்து நிர்வகித்தார். ஜெயசிக்குறு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்ட பின்பு, படையணியின் கண்ணன் நிர்வாகத் தளத்தில் மதன் நிர்வாகப் பொறுப்பாளராக கடமையேற்று நடத்தினார். இக் காலத்தில் சேந்தன், தமிழரசன் வீரன், எழிலன், இரவி, தமிழன், குமுதன் முதலான இளம் அணித் தலைவர்களை நிர்வாகச் செயற்பாடுகளில் பயிற்றுவித்து திறமுடன் வழிநடத்தினார்.

1998 ல் ஓயாத அலைகள் -2 சமரில் மதன் வெடிபொருள் வழங்கல் பொறுப்பாளராக திறனுடன் செயற்பட்டார். கிளிநொச்சி மீட்புக்கு பிறகு தொடர்ந்து நிர்வாகப் பொறுப்பாளராக கடமையாற்றிய மதன், 1999 ல் ராகவன் அவர்கள் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற போது , கனரக அணிகள் பொறுப்பாளராக மீண்டும் களமுனைக்கு திரும்பினார். கனரக ஆயுத அணிகளை சிறப்புப் பயிற்சிகளில் ஈடுபடுத்திய மதன் , போராளிகளின் செயற்திறன்களை வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட்டார் . சுட்டதீவு பின்தளத்தில் தனது கட்டளை மையத்தை அமைத்திருந்த மதன், சுட்டதீவு பரந்தன் ஊரியான் முன்னரஙகில் எதிரி மேற்கொண்ட பாரிய முன்னேற்றங்களை தடுத்து நிறுத்திய கடும் சண்டைகளில் மோட்டார் அணிகள் ஒருங்கிணைப்பாளராக திறமுடன் களமாடினார்.

ஓயாத அலைகள்-3 சமரில் மதன் ஒட்டுசுட்டான் ,அம்பகாமம் களத்தில் வெடிபொருள் வழங்கல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இச் சமரில் ராகவன் அவர்களின் இழப்பால் ஆறாத துயரடைந்த மதன் சிறிதும் மனந்தளராமல் தனது தோழனின் இலட்சியப் பயணத்தில் ஓய்வின்றி களமாடினார். ஓமந்தை வரையிலான சமர்களில் மிகவும் திறமாக கள நிர்வாகத்தை நடத்திய மதன் , பரந்தன் மீட்புச் சமரில் சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களுடன் நின்று வெடிபொருள் வழங்கல் பொறுப்பாளராக தொடர்ந்து கடமையாற்றினார்.lt col mathan

2000 ம் ஆண்டில் பூநகரி பகுதியில் நிலையமைத்திருந்த மதன் எமது வேவு அணிகளை தனங்கிளப்பு ,அரியாலை பகுதிகளில் நடத்தினார். இலக்கியன் , பல்லவன், மதுரன் ,மோகன் முதலான அணித் தலைவர்களை தீவிரமான வேவுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தினார். குடாரப்பு இத்தாவில் தரையிறக்கச் சமருக்கான பயிற்சித் தளத்தில் படையணியின் கள நிர்வாகப் பொறுப்பாளராக மதன் கடமையாற்றினார்.

இத்தாவில் தரையிரக்கச் சமரில் மதன் தொடர்ந்து வெடிபொருள் வழங்கல் களநிர்வாகப் பொறுப்பாளராக தீவிரமாக செயற்பட்டார் . கட்டளைத் தளபதி பால்ராஜ் அவர்களுக்கு அருகில் நிலையமைத்த மதன், சிறப்புத் தளபதி இராசசிங்கம் துணைத் தளபதி நேசன் ஆகியோருடன் இணைந்து ஓய்வொழிச்சலின்றி செயற்பட்டார். மதுரன் , பாவலன் , மாறன், ஆரூரன் முதலான அணித்தலைவர்கள் மதனுடன் நின்று ஓய்வின்றி கடமையாற்றினர் . பெட்டிச் சண்டைகளில் வெடிபொருள் வழங்கலை திறமுடன் செயற்படுத்திய மதன், கனரக மோட்டார்களை ஒருங்கிணைத்தும் களமாடினார் . 2000 ம் ஆண்டு 4 ம் மாதம் 10 ம் நாள் எதிரி மேற்கொண்ட பாரிய முன்னேற்றங்களுக்கு எதிரான பெரும் சமரில் தீரத்துடன் செயற்பட்ட மதன் , தொடர்ந்து 11-04-2000 அன்று எதிரியின் செறிவான எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் எமது மோட்டார் நிலைக்கு எறிகணைகளை உழவூர்தியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது , எதிரியின் எறிகணைகள் உழவூர்தியின் மீது வீழ்ந்து வெடித்ததில் படுகாயமடைந்த மதன் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அன்றைய சமரில் போராளிகள பெற்ற வெற்றியில் மதனின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

லெப். கேணல். மதன் அவர்களின் உடன்பிறந்த தமையன் நளன் அவர்களும் எமது இயக்கத்தில் இணைந்து திறமுடன் களமாடிய போராளியாக விளங்கினார். இம்ரான் பாண்டியன் படையணியில் செயற்பட்டு வந்த நளன் , வேவு நடவடிக்கைகளிலும் நிர்வாகப் பொறுப்பாளராகவும் திறமுடன கடமையாற்றினார். இறுதிச் சமரில் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதிகளுள் ஒருவராக வீரத்துடன் களமாடிய நளன் 04-04-2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காக இரு மாவீரர்களை ஈந்த குடும்பமாக மதன் அவர்களின் குடும்பம் சிறப்பு பெற்றது.

லெப். கேணல். மதன் அவர்கள் எமது தேசியத் தலைவர் மீதும் தமிழ் மக்கள் மீதும் ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட துடிப்புமிக்க போராளியாக விளங்கினார். நெடிதுயர்ந்த தோற்றத்தில் கனிவுடனும் எளிமையுடனும் திகழ்ந்த மதன், தனது பொறுப்புகளை நிறைவேற்றும் பொழுது கண்டிப்பும் நேர்த்தியும் சமரசத்திற்கு இடமற்ற உறுதியும் கொண்ட போராளியாக விளங்கினார். இவருடைய சிறப்பான செயற்பாடுகளுக்காக தலைவரிடமும் தளபதிகளிடமும் பாரட்டுகளைப் பெற்றார். படையணியின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட மதன் ஒரு காலை இழந்தும் சிறிதும் மனம் தளராமல் தொடர்ந்து களத்தில் செயற்பட்ட முன்னுதாரணமான தளபதியாக மதன் விளங்கினார். லெப். கேணல். மதன் அவர்களின் பொறுப்புணர்வும் வீரமும் ஈகமும் தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்காது நிறைந்திருக்கும்.

இதே நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூர்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பெ . தமிழின்பன்.

———-

பொறுப்பு: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி
நிலை: லெப்.கேணல்
இயக்கப் பெயர்: மதன் (அரசன்)
இயற்பெயர்: துரைசாமி சுந்தரலிங்கம்
பால்: ஆண்
ஊர்: கூழாங்குளம், வவுன்யா
மாவட்டம்: வவுனியா
வீரப்பிறப்பு: 07.06.1972
வீரச்சாவு: 11.04.2000
நிகழ்வு: கிளிநொச்சி முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆலங்குளம்
மேலதிக விபரம்: ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

Advertisements

ஏப்ரல் 22, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், சித்திரை மாவீரர்கள், வீரவரலாறு | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: