அழியாச்சுடர்கள்

முன்னால் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் !

LTTE Women_at_warதமிழீழ விடுதலைப் போராட்டம் காலம் காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிரான போராட்டமாக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு மாபெரும் எழுச்சியை விதைத்து முன்னுதாரணமாக திகழ்ந்தது.

மண்ணையும் மக்களையும் காக்க தமது இளைய இனிய உயிர்களை அர்ப்பணித்தவர்கள் எம் போராளிகள்.

ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இன்றி மண்ணை காக்க புறப்பட்ட போராளிகளை காவல் தெய்வங்களாகவே எம் மக்களும் போற்றினார்கள்.

2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் அமைதி எய்திய பின் ஆக்கிரமிப்பாளர்கள் புலனாய்வாளர்கள் முன்னிலையில் எம் மக்கள் அச்சத்தின் காரணமாக எம் போராளிகளுடனான தமது அன்பை, மதிப்பை வெளிப்படையாக காட்ட முடியாது போன நிலை உருவாகியது.

மக்களை காக்க போராட சென்ற குற்றத்திற்காக அந்த மக்களாலேயே போராளிகள் புறக்கணிக்கப்படும் கொடுமைகளை எம் மண்ணில் சந்திக்கும் சோகத்தை எதனாலும் துடைத்தெறிய முடியாது.

அதிலும் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் துன்ப துயரங்கள் மிக மிக கொடுமையானவை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கூட்டு பாலியல் வன்புணர்வுகள் படுகொலைகள், நிர்வாணப்படுத்தல்கள், பிணங்களை கூட கொன்று புணர்தல் என கொடுமைபடுத்தி துன்புறுத்திய சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகள் கடந்து தப்பியவர்கள் சிறைகளில் இருந்து பின்பு புனர்வாழ்வு என விடுவிக்கப்பட்டு வெளி வந்த சிலர் எங்கள் சமூகத்தில் வாழ வந்த பொழுது எங்கள் சமூகம் அவர்களை இழிவு படுத்தி ஏற்றுக் கொள்ளாமல் அவமானப்படுத்தும் கொடுமையானது கண்ணீர் வரிகளால் எழுதப்படும் கொடுமைகளாக இருக்கின்றன.

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்னும் திருமணமாகாமல் வாழ்கின்றார்கள். அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை. கேட்டால் இராணுவம் சிதைத்த பெண்கள் என பார்கிறார்கள். அப்படி தான் இருந்தாலும் தவறு செய்த இராணுவம் எங்கள் நிலத்தில் உலவுவதை அனுமதிக்கும் மக்கள் பலியான பெண்களை புறக்கணித்து தனிமைப்படுத்தி வதைப்பது ஏன்?

விடுதலைப் புலிகள் காலத்தில் பெண் போராளிகள் மீது எங்கள் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பக்தி இப்போது அப்படியே நன்றியில்லா துரோகங்களாக மாறி உள்ளமை உண்மையில் கொடுமையிலும் கொடுமையானது.

இப்போது அவர்களை தனிமைப்படுத்தி ஒதுக்குதல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத் தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை பயன்படுத்துதல், சாதியின் பெயரால் புறக்கணித்தல் என சமூகம் அவர்களை கையாண்டு வரும் செயல்கள் யாவுமே வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவையும் உடன் மாற்றியமைக்க வேண்டியவையும் ஆகும். .

தங்களது இளமைக் காலத்தில் தங்கள் இன்ப துன்பங்களை மக்களுக்காக துறந்து போராடப் புறப்பட்ட பெண்கள் உடல் ரீதியாகவும் பல வலிகளை அனுபவித்து சிலர் கால்கள், கைகள் இன்றி, கண்கள் தெரியாமல், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நிரந்தரமாக நடக்க முடியாமல், உடம்பில் இரும்புத் துண்டுகளை சுமந்து கொண்டு என பலவாறான வலிகளோடு வாழ்ந்து வரும் நிலையில் புறக்கணிக்கும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்கள்.

“சமூகம் எம்மை அரவணைக்கும்” என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியில் வந்தவர்களை, “சண்டையிலேயே செத்திருக்கலாம்” என்ற முடிவுக்கு தமிழ் சமூகத்தினர் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் துரோகத்தை என்ன என்று சொல்வது.

பெண் போராளிகள் விடுதலை சிந்தை கொண்டவர்கள் ஆதலால் ஆண்களுக்கு அடிமைகளாக வாழ மாட்டார்கள் குடும்பத்தில் ஒத்துப் போக மாட்டார்கள் எனும் பார்வையாலும் வதைக்கப்படுகின்றார்கள் எம் போராளிகள். சமத்துவத்தை விடுதலைப் புலிகள் இருந்த போது மதித்து வந்த மக்கள் இன்று அதையே குறையாக சொல்லி போராளிகளை வதைப்பது கொடுமையானது.

எங்கள் சமூகம் முற்போக்கு உள்ள இளையவர்களை தொலைத்து இன்று மீண்டும் அடிமைப்படுத்தும் ஆணாதிக்கவாதிகளை கொண்டு இருப்பது வேதனையான நிலையாகும்.

“ஏன் வாழ்கின்றோம்?” என கண் கலங்கி அவர்கள் வாழும் நிலைக்கு ஒவ்வொரு தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

போராளிகளை திருமணம் செய்ய உள்நாட்டில் ஒருவர் இல்லாமல் வெளியூரில் இருக்கும் தமிழ் இளைஞர்களை யார் எவர் எப்படிப்பட்டவர் என பாராமல் கொள்கை புரிதலும் இல்லாமைகள் திருமணம் செய்து வைத்தவர்கள் சிலர் பின்பு அந்த ஆண்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் தவறானவர் என “குய்யோ முறையோ” என கதறுகிறார்கள்.

2009ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில தம்பதிகள் கூட சாதியின் பெயரால் இன்று பிரிந்துள்ள செய்திகளும் கொடுமையானவை.

படுகாயங்களுக்கு உள்ளான பல பெண் போராளிகள் சாப்பிடுவதற்கே வழியின்றி ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் உண்டு வாழ்ந்து வருகின்றனர் என்ற கொடுமையை உலகில் எத்தனை பேர் அறிவார்கள்?

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் விசாரணை நடத்த 2, 3 மாதத்துக்கு ஒரு தடவை வந்து போன புலனாய்வுப் பிரிவினர் நல்லாட்சி அரசாங்கத்திலும் வரத் தவறுவதில்லை என்றும் புனர்வாழ்வு முடிந்து விடுதலையான பின்னரும், அதுவும் நல்லாட்சியிலும் புலனாய்வுப் பிரிவினரின் வருகை நொந்து போயிருக்கும் பெண் போராளிகளை இன்னும் நோகடிக்கச் செய்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்த அநீதிகளை தடுத்து நிறுத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் அரசியலாகவும் முன் வராதமை பெரும் கொடுமை.

அனைத்து போராளிகளையும் வாழ வைக்கவும் பெண் போராளிகளுக்கு மறுவாழ்வு திட்டங்களூடாக வளப்படுத்தவும் வடமாகாண சபையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மறுவாழ்வு கல்வி வேலை வாய்ப்புகள் என போராளிகள் வாழ்வை வளப்படுத்த வடமாகாண சபை மூலம் புலத்து மக்கள் உதவியோடும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

“போராளி, மாவீரர் குடும்பங்களைப் பதிவு செய்தார்கள், உதவி செய்யப் போகிறார்கள் என்றார்கள். பதிவு செய்தேன். போய்ப் பார்த்தால், அங்கர் பெட்டியொன்றும், நுளம்பு நெட் ஒன்றும் தருகிறார்கள்” என்கிறார் மகளை இழந்த தாயொருவர்.

7 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒரு போராளி காயம் காரணமாக விலகி கடைசி காலப் பகுதியில் காயப்பட்டவர்களுக்கு உதவ வைத்தியசாலைப் பணிகளைச் செய்து வந்துள்ளார்.

“இடம்பெயரும் போது எங்கட குடும்பமே சின்னாபின்னமாக பிரிந்தது. பிறகு நானும் அம்மாவும் மட்டும் தனித்துப் போயிட்டம். ஷெல் விழ விழ கிட்டத்தட்ட நூறு கொட்டில்கள் மாறிக் கொண்டே திரிஞ்சனாங்கள். இனிமே சாகத்தானே போறம் என்டு சனங்களோடு ஹொஸ்பிட்டல்ல இருந்த காயக்காரர்களுக்கு உதவ வெளிக்கிட்டம்” என்கிறார் அவர்.

3 வயது பெண் பிள்ளையின் தாயான இவர் 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்திருக்கிறார். தடுப்பிலிருந்து வந்தவுடன் திரும்பவும் இராணுத்தினர் தொந்தரவு கொடுப்பார்கள் என்ற பயத்தில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார் அவர்.

“தடுப்பு முகாம் போய் வந்து திருமணம் செய்தது என்னத்துக்கு என்டா, திரும்பவும் எனக்கு ஏதும் பிரச்சினை வந்துரும் என்ட பயத்தாலதான். தனியாளா இருந்தா நிறைய பிரச்சினதானே. சந்தேகப்பட்டு விசாரிக்க வருவினம் என்டதால திருமணம் செய்தனான்” என்கிறார்.

இவரின் நெருக்கடியான நிலையை பயன்படுத்திக் கொண்ட ஒருவர், முன்னாள் போராளி ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி இவரை அணுகியிருக்கிறார்.

அவர் ஏற்கனவே திருமணம் செய்ததை சொல்லாமல் திருமணம் செய்து இருக்கிறார் என்பதை அறிந்ததும் கலங்கி இருக்கிறார்.

“இயக்கத்தில் இருந்தா ஒழுக்கமா இருப்பாங்க என்ட எண்ணத்தோடதான் அவரை கல்யாணம் செய்தனான்.. ஆனால், பிறகு என்ன சந்தேகப்பட்டு தொல்லை குடுக்கத் தொடங்கினவர். பொறுக்க முடியாமல்தான் அவர விட்டு பிரிஞ்சனான்” என்று கலக்கத்தினை மறைத்து கூறினாலும் ‘பனையால் விழுந்தவர்களை மாடு ஏறி மிதித்தது போன்ற அநீதிகளே இவையாகும்.

இரு கண்களும் தெரியாத40 வயதை தாண்டி இருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் போரின் போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கண்பார்வையை இழந்த நிலையில் “பொழுது பட்டாலே வீட்டுக்குள்ள படுத்திறுக்கிறதே பயமா கிடக்கு. றோட்ல தனியா திறியிறதென்கிறது சாத்தியம் இல்ல. பெண்கள் வாழுறதென்டா பயம்தான். இரவு எட்டு எட்டரைக்கெல்லாம் கேட்டெல்லாம் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள இருக்கிற நிலமதான். வீட்டுல. ஒரு ஆண் இருந்தா பிரச்சின இல்ல,.தனிய பெண்கள் இருந்தா பயம்தான்” என்று கூறுகிறார்..

வாழ்வாதாரத்திற்கும் வருமானத்திற்கும் போராடும் இவர்கள் அவல வாழ்வு எவராலும் ஏறெடுத்துப் பார்க்காத கொடுமைகளாக இருக்கின்றன.

போராளியான இவரது திருமணத்தை விடுதலைப் புலிகள் அமைப்பினரே செய்து வைத்துள்ளனர். மே மாதம் 16ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாகக் கூறிய போதும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் தன்னைக் கைது செய்யவில்லை என்று கூறுகிறார்.

“இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்து விசாரிச்சினம். வேற ஆக்கள்ட்டயும் விசாரிச்சிரிக்கினம். அவ இயக்கத்தில இருந்தவவோ? என்ன நடந்தது என்டு?” அரசாங்கம் மாறியும் எந்தவித வித்தியாசத்தையும் உணராதவராக பேசுகிறார்

அவர். “என்ட கால் அடிப்பாதம் தேய்ஞ்சி போயிருக்கு. புதுசா ஒன்டு செஞ்சி எடுக்க அலைஞ்சி திரியணும்–” காலைத் தூக்கிக் காட்ட அடிப்பாதம் தேய்ந்து ஓட்டையொன்றும் உருவாகி விட்டது.

இந்த போராளிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஒரு ஊடகவியலாளர் அவதானித்த உண்மைகளை அடிப்படையாக கொண்ட கொடுமைகளின் சில துளிகள் மட்டுமே இவையாகும்.

அண்மையில் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயைச் சந்தித்து அந்த ஊடகவியலாளர் பேசிய பொழுது.

16 வயதிலேயே அமைப்பில் சேர்ந்து, தடுப்பிலிருந்து வந்து 3 வருடங்கள் மட்டுமே தன்னுடன், அதுவும் தூர விலகி இருந்ததாகக் கூறுகிறார் தமிழினியின் தாய்.

தடுப்பிலிருந்து விடுவிக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என்று கூறும் அவர், அவ்வாறு விடுவித்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் தன்னுடன் இருந்திருப்பார் என்றும் கூறுகிறார்.

அருகில் தமிழினியின் தம்பி உட்கார்ந்து, அக்கா உயிரிழந்ததை வைத்து நிறையப் பேர் உழைத்ததாகக் கூறுகிறார்.

எடுத்து சொல்ல இது போல் ஏராளம் கண்ணீர் கதைகள்.

பெண் போராளிகளின் அவலங்களை போக்க நினைக்காத நல்லாட்சி அரசு இன்னமும் புலனாய்வு துறை உருவில் தொந்தரவுகளை தொடரும் கொடுமைகள் ஒரு புறமிருக்க இராணுவ ஆக்கிரமிப்புகள் பாதுகாப்பற்ற நிலையை அச்சுறுத்த சமூகம் புறக்கணிக்க உறவுகள் தள்ளி வைக்க அத்தனை கண்ணீர் அவமானங்கள் வேதனைகளை கடந்தும் வலிமையாக வாழ்வோடு போராடி கண்ணீரை தமது வாழ்வாக்கி வாழ்கிறார்கள் எம் மண்ணை காக்க சென்ற பெண் போராளிகள்.

இவர்களை வாழ வைக்க ஆண்கள், சமூகம், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு புலம்பெயர்ந்து வாழும் மக்கள், அமைப்புகள் முன் வர வேண்டும்.

புலத்தில் இருக்கும் ஆண்கள் தாயகத்தில் வலி சுமந்து வாழும் எம் முன்னாள் போராளிகளை திருமணம் செய்ய முன் வர வேண்டும்.

தாமதிக்காமல் தீர்க்க வேண்டிய சமூக சிக்கலை போக்கி எம் பெண் போராளிகளை ஆளுமை கொண்ட பெண்களாக இயல்பு வாழ்வை நிம்மதியாக பாதுகாப்பாக மன மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுக்கும் பொறுப்பை தமிழ் சமூகமாக கட்டி எழுப்புவோமாக.

செந்தமிழினி பிரபாகரன்

*************

அவலங்கள்

Advertisements

மார்ச் 28, 2016 - Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: