அழியாச்சுடர்கள்

இராணுவத்தின் கொடுமை காரணமாகவே போராட்டத்திற்கு சென்றேன்: புனர்வாழ்வு பெற்ற போராளி

pulenthiran_porali ex ltteஎனது தாய்க்கு இராணுவம் செய்த கொடுமை காரணமாக பதினொரு வயதில் என்னுடைய பள்ளிப் படிப்பை தூக்கி எறிந்துவிட்டு தமிழ் மக்களின் விடிவுக்கான போராட்ட அமைப்பில் இணைந்து கொண்டேன் என இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தேவராசா புலேந்திரன் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புச்சாக்கேணி கிராமம் முனை வீதியில், சிறு வியாபாரத்தில் பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளியான புலேந்திரன் லங்காசிறி 24 சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இவ்வாறு தெரிவித்தார்.

போராட்ட காலத்தில் தனது இடது கையில் பாரிய காயம் ஏற்பட்டதன் காரணமாக தன்னால் பெரிய வேலைகளை தற்பொழுது செய்ய முடியாமையினால், வீட்டோடு சேர்த்தவாறு சிறு வியாபார நிலையத்தை ஆரம்பித்தும், தமது கிராமங்களில் ஒரு சில இடங்களில் கிடைக்கும் வர்ணப் பூச்சு வேலைகளையும் செய்தும் வருவதாக குறிப்பிட்டார்.

தனது நிலைமைகள் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினர் எனது தாய்க்கும், கிராம மக்களுக்கும் செய்த கொடுமையின் தாக்கத்தினால் பதினொரு வயதில் தமிழ் மக்களின் விடிவுக்காக போராடும் அமைப்பில் இணைந்து கொண்டேன். ஆனால் எனக்கு சிறு வயது என்பதால் என்னை சுமார் மூன்று வருடத்திற்கு மேல் கல்வி கற்பித்தார்கள். அதன் பின்னர் பயிற்சிகள் வழங்கி போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலை அப்போதைய நிலையில் இருந்து இருந்தால் என்னைப்போன்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு இணைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

எங்களது பாடசாலைக்கு முன்னால் இராணுவ முகாம் இருந்தமையால் அங்கு பயிற்சி நடைபெறுவது மற்றும் பொது மக்களை துன்புறுத்துவது போன்ற சம்பவம் நடைபெற்றதால், அத்துடன் என்னுடைய தாய்க்கும் இந்தச் சம்பவம் நடைபெற்றதால் தான் போராட்டத்தில் இணைந்து கொண்டேன்.

வவுனியா பூந்தோட்ட முகாமில் இருந்து ஸ்கந்தபுரம் பாடசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் கிழக்கு மாகாணத்தவர்களை வெலிக்கந்தைக்கு மாற்றப்பட்டேன். அங்கு ஒரு வருடம் புனர்வாழ்வு பெற்று தொழில் பயிற்சி நிறைவு செய்துதான் செல்ல வேண்டும்.

அதில் குழுவாக பிரிக்கப்பட்டு என்னை மேசன் பயிற்சிக்கு தெரிவு செய்தார்கள். எனக்கு கையில் காயம் ஏற்பட்டமை காரணமாக இந்தப் பயிற்சி பெறமுடியாது வேறு பயிற்சிகளை பெற கேட்டேன். அவர்கள் தர மறுத்து இதனையே பெற செய்தார்கள்.

புனர்வாழ்வு பெற்று முடிந்த பின்னர் தங்களுக்கு இரண்டு இலட்சம் கடன் தொகை பெறலாம் என கூறினார்கள். அங்கு சென்று கடன் தொகை பெற கேட்ட போது அரசாங்க உத்தியோகத்தர்கள் இருவர்களின் கையொப்பம் தேவை என தெரிவித்தார்கள். எங்களுக்கு கையொப்பம் வைப்பதற்கு யாரும் வரவில்லை.

எங்களது சகோதரர்களை வைத்து ஒரு இலட்சம் கடன் தொகை பெற்றும் அத்தோடு (ஐஎம்ஓ) நிறுவனத்தால் வழங்கப்பட்ட உதவியையும் பெற்று சிறு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றேன்.

வர்ணப்பூச்சு வேலைகள் செய்து வருகின்றேன். எனக்கு கை இயலாமை காரணமாக பெரியளவில் வேலைகள் செய்ய முடியாது. கிராமத்தில் கிடைக்கும் சிறிய வேலைகளை செய்தும், கடையையும் நடாத்தி வருகின்றேன்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு மூவாயிரம் ரூபாய் பணம் வழங்குகின்றார்கள். ஆனால் எனக்கு வழங்கவில்லை. இவ்விடயமாக சென்று கேட்டால் காயம் ஏற்பட்டமைக்காக ஆதாரம் இன்மையால் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆதாரங்களை எங்கு சென்று பெறுவது!.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய எங்களை இதுவரை காலமும் தமிழ் மக்களின் விடிவுக்காக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் வாதிகள் எவரும் வந்து பார்க்கவுமில்லை.

ஆனால் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் எங்களை வந்து பார்வையிட்டு சுகம் விசாரித்து செல்கின்றனர். ஆனால் எங்களது வாக்குகளைப் பெற்ற தமிழ் அரசியல்வாதிகள் எங்களை இதுவரைக்கும் பார்க்க வரவில்லை. இது எங்களுக்கு பெரும் வேதனையைத் தருகின்றது.

கடை வியாபாரத்தில் அன்றாடம் ஒரு நாளைக்கு எண்ணூறு முதல் ஆயிரம் வரை வியாபாரம் நடைபெறுகின்றது. அதில் பெரிதாக வருமானம் இல்லை.

இதில் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு எனது இரண்டு பிள்ளைகளின் செலவுகளுக்கும் மற்றும் கல்விச் செலவுகளுக்கும் பயன்படுத்தி வருகின்றேன். ஆனால் பெரும் கஷ்டத்தின் மத்தியில் இவற்றைச் செய்து வருகின்றேன்.

எனவே புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் உறவுகள் எனது கஷ்ட நிலையை போக்க எனது கடையை விஸ்தரித்து வருமானத்தை ஈட்டுவதற்கோ அல்லது கடல்தொழில் செய்வதற்கான வலை மற்றும் மீன்பிடி படகு என்பனவற்றை தங்களால் இயன்றளவு உதவி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு இது போன்ற பல போராளிகளின் வாழ்வாதார நிலைமையும் கவலைக்கிடமாகவே காணப்படுகின்றதையும் இங்கு விசேடமாக தெரிவித்துக்கொள்வதுடன்,

அவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுமாறும் புலம் பெயர் எமது தமிழ் உறவுகளிடம் மனமுவர்ந்து தங்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Advertisements

மார்ச் 8, 2016 - Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: