அழியாச்சுடர்கள்

மரணவாசலில் நின்றபோதும், அதே மரணத்தை எதிரிக்கும் கொடுத்த பெரும் வீரன் மேஜர்.பிரபு

“மேஜர்.பிரபு.! மிகவும் குறும்பான போராளி. அத்தோடு அவனது பேச்சில் ஒரு நக்கல் இருக்கும்..! எப்போதும் நண்பர்களுடன் தான் அவனை பார்க்கமுடியும். போராளிகள் மட்டுமல்லாது, அதையும் தாண்டி வெளியிலும் பல நண்பர்களையும் கொண்டிருந்தான்.maaveerar

நான் அவனை முதல் முதலில் 88களின் இறுதியில் மணலாற்றில் வைத்து சந்தித்தேன். என்னை போலவே வயதில் சிறியவனாக இருந்ததினால், இலகுவில் இருவரும் நண்பர்கள் ஆனோம். அவன் மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த போராளி என்பதால் அவனது பேச்சு வழக்கு மிகவும் ரசனையாய் இருக்கும்.

இதனாலேயே அவனை பாணுஅண்ணைக்கு மிகவும் பிடிக்கும். நாம் காட்டில் இருக்கும் போது அப்பையாண்ணையின் களஞ்சியத்தின் உணவுப்பொருட்களை திருடி பிடிபட்டு, அப்பையாண்ணியிடம் தண்டனை வாங்குபவர்களில் இவன் தான் முதலிடம். இதில் பெரும் பாலான திருட்டு எனக்காகவே செய்திருந்தான்

இருவரும் வேறு,வேறு பணிகளில் இருந்தமையால் அடிக்கடி சந்திப்பதும் அரிதாகி விட்டிருந்தது. இவன் மட்டுமாவட்டம் என்பதால் யாழில் இவனுக்கு உறவென்று யாருமில்லை. என் தாயாரையே தன் தாய்போல நினைத்தான். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தான்.

இந்தியராணுவம் எம் மண்ணை விட்டு போனதும் பாணுஅண்ணை யாழ் செல்லும் அணிகளை தயார் படுத்தும் போது, விசேட பியிற்சிகளை முடிதிருந்தவன் என்பதால்,(கிட்டண்ணையிடம் சிறப்பு பயிற்சி எடுத்தவர்கள்) அவருக்கு மெய்ப்பாதுகாவல் அதிகாரியாக நியமிக்கபட்டு யாழ் நோக்கிய பயணமானான்.

அங்கு சென்று அவருடன் ஒருவரட காலம் இருந்த பின் களமுனையில் தொடர் சண்டைகள் அவனை புடம் போட்டது. சண்டைகளின் போது தனது நிதானத்தை ஒரு போதும் அவன் கைவிட்டதில்லை. அந்த நேரங்களில் கட்டுவன் பகுதியில் இருந்தான்.

அவனை சந்திக்க செல்லும் போது மரவள்ளிக்கிழங்கும் சம்பலும், அல்லது இராசவள்ளி கிழங்கு கஞ்சியும் வைத்திருப்பான். இன்று வரை அந்த சுவையை மறக்கமிடியவில்லை. இவை அனைத்தும் அவனின் கைவண்ணமே. இது தான் பிரபு.

1991ஆனையிறவு சண்டையின் போது அதன் கட்டளை அதிகாரியான பொட்டு அம்மான், அந்த சண்டையில், இவனது விவேகமான செயல்பாடு காரணமாகவும், அதுமட்டுமல்லாது இவனை காட்டில் இருக்கும் போதே அவர் அவதானித்து வைத்திருந்தமையாலும், இவனை தன்னோடு எடுத்திருந்தார்.

அதன் பின் பல இரகசிய பணிகளை எதிரி பிரதேசத்தில் இவனை வைத்து நிறைவேற்றி இருந்தார். அதன் பின் மறைப்பு போராளியாக மக்களோடு மக்களாக வலம் வந்தான். காலம் சுழன்று யாழ்பாணம் எமது கையை விட்டு போன போது, எதிர் பாராத விதமாக, இராணுவ வல் வளைப்பில் சிக்கி மக்களோடு மக்களாக மாறியிருந்தான்.

அப்போது யாழில் இவனை பாதுகாத்து வைத்திருந்த எமது ஆதரவாளர் அவரின் வீட்டில் தனது தங்கையின் கணவர் என்று கூறி,(ஆபத்தென்று தெரிந்தும்) மறைப்பில், அவனை தன் கூடவே வைத்திருந்தார். இவர்களே உண்மையான தேசபக்தர்கள்.

அந்த நேரத்தில் அவனுக்கு போராளிகளுடனான தொடர்பும் துண்டிக்கப் பட்டிருந்தது. அதனால் மாற்று வழியொன்றை உருவாக்கினான். அதனால் கப்பல் மூலமாக கொலும்பு செல்லும் ஒரு வர்த்தகரை எமது ஆதரவாளராக மாற்றி, அவர் ஊடக கடிதம் ஒன்றை வன்னிக்கு அனுப்பி எம்முடன் தொடர்பை ஏட்படுத்தி இருந்தான்.

அவனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் தடுமாறிக் கொண்டிருந்த போது தான் அவனது தொடர்பும் கிடைத்தது. அந்த நேரத்தில் நாமும் எதிரியின் புலிகள் அழிந்து விட்டார்கள் என்னும் பொய்ப் பிரச்சாரத்தை தகர்க்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். அது மட்டுமல்லாது, ஒரு முக்கிய புலனாய்வுத் தேவையின் நிமித்தம் 1996இறுதியில் நாம் யாழ் சென்றிருந்தோம். அதற்கு அவனது உதவி பெறப்பட்டது.

அந்த நேரத்தில் பிரபு திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் தான் ஒரு வீட்டில் அவன் தங்கி இருந்தான். அதனால் அந்த இடங்களில் எதிரியின் நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பான்.

நாம் யாழினுள் நுழைந்ததும் அவனது தொடர்பு எடுக்கப் பட்டதும், நானும், மேஜர்.யூதனும் அவனை சந்தித்தோம்.அது ஒரு அருமையான பொழுது. வார்த்தைகளில் சொல்ல முடியாது. எமது ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

அந்த நேரத்தில் எமக்கு வழங்கப்பட்டது ஒரு முக்கியமான பணி. அந்த பணியின் நிமித்தம் அவனை அடிக்கடி சந்தித்து உரையாடுவது வழக்கமாகி விட்டிருந்தது.

அப்படி ஒருநாளில் தான் திருநெல்வேலி சந்தையின் முன் வாசல் அருகில் சன நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் எமது பணி தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

அந்த சந்திப்பின் போது தான் திருநெல்வேலி பால்பண்ணைக்கு அருகாமையில் வசித்துவரும் “மல்லி ” என்பவர் தன்னை பின் தொடர்பதாகவும், அவனில் சந்தேகமாக உள்ளதெனவும் என்னிடம் கூறி இருந்தான். எனது இருப்பின் முக்கியம் கருதி என்னை எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்திருந்தான்.

அவனது கணிப்பு அன்று பொய்க்கவில்லை. அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வாகனத்தில் வந்த இராணுவத்தினர் நாம் நின்ற இடத்தை சுற்றி நிலை எடுக்க, இருவர் மட்டும் எம்மை நோக்கி வந்தனர். அப்போது கிசு கிசுப்பான குரலின்,ஆனால் கடும் தொனியில் என்னை தப்பி போகும் படி கூறினான். நடக்கப்போகும் விபரீதத்தை இருவருமே உணர்ந்து, ஒருவரை ஒருவர் தெரியாதது போல நகர முற்பட்டோம்.

நாம் நகர முற்படும் போது அந்த இராணுவத்தினர் இருவரும் பிரபுவை நோக்கியே வந்தனர். வந்தவர்கள் அவனிடம் அடையாள அட்டையை கேட்டனர், அதற்கு அவனும் நிதானமாக சிங்களத்தில் வணக்கம் சொன்னபடி அடையாள அட்டையை கொடுத்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் சில அடிகள் நகர்ந்து விட்டிருந்தேன்.

இவனது பெயரை மீண்டும் கேட்டு உறுதி செய்த போது நடக்க போகும் விபரீதத்தை உணர்ந்த பிரபு, துவிசக்கர வண்டியின் இருக்கையின் கீழ் மறைத்து வைத்திருந்த சயனைட் குப்பியை எடுப்பதற்கு இவன் தயாராகவும், அவர்கள் இவனை அதை கடிக்க விடாமல் தடுப்பதற்கு பாயவும் நேரம் சரியாய் இருந்தது.

வந்தவர்களின் நோக்கம் இவனை உயிருடன் பிடிப்பதே.அனால் எதிரி அவனை உயிரோடு பிடிப்பதற்கு முயன்ற போதும், அவர்களை தாக்கி குப்பியை அவன் கடித்தான்.

குப்பியை கடித்த பின், தன்னை பிடிக்க வந்த இருவரையும் குப்பி கடித்த தனது வாயால் கடித்து, ஒருவன் காயமடைய, மற்றைய எதிரியை தன்னோடு, தனது இரும்பு போன்ற கைகொண்டு அவனை இறுக்கிய படியே, அவனையும் கொன்று இவனும் வீரச்சாவடைந்தான்.! அந்த துரோகியால் அவன் எம்மை விட்டு போனான். பின்னைய நாளில் அந்த துரோகி எம்மால் அழிக்கப்பட்டான்.

எதையும் கண்டு அஞ்சாத வீரன். மக்களுக்காக உயிர் பிரிந்து போனான். எல்லாமுமாகி என்னோடு இருந்த ஒரு நட்பு, ஒன்றாய் உறங்கி ஒரு கோப்பையில் உண்டு களித்த நட்பு, என் கண்முன்னே மரண வாசலில் நின்ற போதும், ஒருகனம் எம்மை பார்த்த பார்வை அது வீரனுக்கு மட்டுமே உரியது..!!

உயிரற்று அவன் உடல் மண்ணில் சரிந்த போதும், அவனது உதட்டோர புன்னகை மட்டும் மறையவில்லை.!

என்றும் தோழனின் நினைவில்..துரோணர்..!!!

Advertisements

மார்ச் 2, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: