அழியாச்சுடர்கள்

தலைவரின் இராணுவ மதிநுட்பமும் முல்லை முகாம் தகர்ப்பும்..!!

1995ம் ஆண்டு சூரிய கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக எம் மக்களை யாழ்குடாவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டபின், வன்னியை தளமாக்கிய புலிகள், தமது நிர்வாக அலகுகளை அங்கு விஸ்தரித்து கொண்டார்கள்.praba atlery

எமது தரைவழிப்பாதை போக்குவதத்திற்கு இடைஞ்சலாகவும், எமது கடல் சார் நடவடிக்கைக்கு தடையாகவும், எதிரி எம் காலடியில் முல்லைதீவு முகாமில் இருந்தான். யாழ் பின்னடைவிற்கு பழிவாங்க வேண்டிய தேவையுடன், இந்த முகாமை அழித்து, சர்வதேசத்திற்கு எமது போர் வலிமையை மீண்டும் நிருபித்க வேண்டிய தேவையும் அன்றைய நேரத்தில் எமக்கு இருந்தது.

1996ம் ஆண்டு வெளியிடம் ஒன்றிலிருந்து வன்னிக்கு வந்திருந்தேன். அந்த நேரத்தில் தான் முல்லைமுகாம் தாக்குதல் எம்மவரால் ஆரம்பிக்கபட்டிருந்தது. இது தெரியாது, பல நூறு KM தூரம் நடந்து வந்தமையால் (13 நாட்கள்) அசதியில் தூங்கியிருந்த நேரம் நண்பர்கள் என்னை உலுப்பி எழுப்பினார்கள்.

நான் திடுக்கிட்டு எழும்பி சினத்துடன் அவர்களை நோக்கிய போது, அங்கை முல்லைத்தீவிலை ஆமிக்கு அடிவிளுகுது இஞ்சை குறட்டை விடுறியோ என்று உட்சாகத்துடன் கூறினார்கள். வெளிக்கிடு அங்கை போவம் என்றார்கள். அதை கேட்டதுமே உடல் அசதி தொலைந்து போக முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டு விட்டோம்.

1990ம் ஆண்டுடன் சண்டையில் இருந்து அன்னியப்பட்டிருந்தேன். அதன் பின் களம் எனக்கு கனவாகவே போய்விட்டது. என்னை போலவே பல போராளிகள் அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருப்பர். சிலருக்கு அமையும், பலருக்கு அமைவதில்லை. அதில் எனக்கும் அமையவில்லை.!

ஆதலால், எமது போராளிகளால் மீட்கப்பட்ட இடம் பார்க்க ஆவலுடன் சென்று கொண்டிருந்தோம். சாள்சின் லாண்ட்றோவரில் புதுக்குடியிருப்பு சென்று, அங்கிருந்து வட்டுவாகல் நோக்கி சென்று கொண்டிருந்தோம். நாம் முகமை நெருங்கும் நேரம் எமக்கு எதிர் திசையில் வந்த மாதவன் மாஸ்டரும், சங்கர் அண்ணையும் எமது வாகனத்தை இனம் கண்டு கையை காட்டி மறித்தார்கள்.

எமதருகில் வந்தவர்கள் ஏளனமாக… எங்கை அடிச்சு பிச்சுக் கொண்டு போறியல் சண்டைக்கோ என்றனர்? தொடந்து அவரே கூறினார், எங்கட பெரியவர் (எமது துறை சார் பொறுப்பாளர்) வாசலில நிக்கிறார் நாங்கள் பேச்சு வாங்கி கொண்டு வாரம் நீங்களும் வாங்க போறியளோ? பிரும்பி வாங்கோ என்று கூறிவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள்.

நாங்கள் ஏமாற்றத்துடன் ஒரு மரத்தின் கீழ் வாகனத்தை நிறுத்தி விட்டு தொலை தொடர்பு கருவியில் தளபதிகளின் கட்டளைகளை கேட்ட படி நின்றிருந்தோம். அப்போது கேற்கும் வெடிச் சத்தங்களால் மனம் அங்கேயே சுழன்றது. அப்போது இடையில் SO அண்ணையின் குரல் தொலை தொடர்பில் (பிரிகேடியர் சூசை) வந்தது.

உடனே அவருடன் உள்ள நட்பின் நிமித்தம், அவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவர் நிக்கும் இடத்தை அறிந்து நாம் வருவதற்கான அனுமதியை பெற்று, அவரது உதவியாளனின் தொடர்பின் ஊடான வழிகாட்டலில் கால்நடையாக அவர் நின்ற இடத்திற்கு சென்றோம்.

எங்களை கண்டதும் நலம் விசாரித்தபின், கட்டளை இடுவதும் எம்மோடு கதைப்பதுமாக இருந்தார். நாம் என்ன பாக்கியம் செய்தோம் அப்படி ஒரு கண் கொள்ளா காட்சி.!

எமது கடற்புலிகளின் படகுகள் வேகமுடன் செல்வதும், கரும்புலிப் படகுகள் சுழன்று திரிவதும், வெட்டைவெளிக் கடலில், அதுவும் பகல் சண்டை என்பதால் திரைப்படம் ஒன்றை பார்ப்பது போலவே இருந்தது. வாய் வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை.

எதிரியும் தனது 1500ற்கு மேற்பட்ட இராணுவத்தை காப்பாற்ற, முகாமினுள் மேலதிக படையை தரையிறக்க தனது முழு பலத்தையும் பிரயோகித்துக் கொண்டிருந்தான். அவன் முன்னேறுவதும் கடற்புலிகள் துரத்த ஓடுவதுமாக இருந்தான் எதிரி. சிங்களத்தில் கடற்படை முழுவதும் அன்று முல்லைத்தீவுக் கடலில் வந்து முயற்சி செய்தன, அவனால் முடியவில்லை.!

கரையை நோக்கி வரும் எதிரி படகுகளை எமது கரும்புலிகள் படகு நெருங்கும் போது எதிரி ஓடுவதை பாத்து ரசித்துக் கொண்டிருந்த நேரம், எதிரியின் கடற்கலங்கள் இரண்டு அணியாக பிரிந்தன. அதில் ஒன்று முல்லை முகாமுக்கு நேரில் தரையிறங்க முயற்சி செய்தனர்.

அடுத்த அணியினர் அலம்பில் பகுதியை நோக்கி நகர்ந்து சென்றனர். மதியம் 3மணிவரை முயற்சி செய்து முடியாததினால், கடற்புலிகளின் கண்காணிப்பு குறைவாக இருந்த அலம்பில் கடற்கரையில் இரண்டு MI-17 உலங்கு வானூர்தியால் எதிரியை தரை இறக்கினான்.

தரை இறங்கிய எதிரி பாதுகாப்பு கொடுக்க அவனது துருப்பு காவிக் கப்பல் கரையை அடைந்து பெரும் தொகையான துருப்பை தரை இறக்கினான். களத்தில் நின்று சண்டையை வழிநடத்திக்கொண்டிருந்த சூசை அண்ணைக்கு, டேவிட்டிடம் இருந்து ஒரு அவசர செய்தி வந்தது..!

எதிரி கடலால் துருப்பை இறக்க முடியாதென்று தெரிந்ததும் MI 17உலங்கு வானூர்தி மூலம் அலம்பில் பிரதேசத்தில் தரை இறங்கி விட்டதாக கூறினான். இதை உடனே SO அண்ணை, அந்த சண்டையின் கட்டளை அதிகாரியான பால்ராஜ் அண்ணைக்கு கூறினார்.

உடனே பால்ராஜ் அண்ணை அதை தலைவருக்கு தெரிய படுத்தினார். அத்தோடு தான் தனது மேலதிக படையணியை அங்கு அனுப்புவதற்கான அனுமதியை கேட்டார். அதற்கு கேணல்.ராஜு அண்ணையிடம் இருந்து பதில் வந்தது.

காரணம் தலைவரின் பாதுகாப்பு கருதி நேரடியாக தொலைத்தொடர்பில் அவர் கதைப்பதில்லை. ஆனால்,இந்த கட்டளை யாரிடம் இருந்து வருகின்றது என்பது சம்பந்தப்பட்ட கட்டளை அதிகாரிக்கு தெரியும். இது யாருடைய கட்டளை என்று. பெரும் பாலும் ராஜு அண்ணையே இப்படியான நேரங்களில் தொலைத்தொடர்பில் கதைப்பார்.

அப்போது பால்ராஜ் அண்ணைக்கு தலைவரால் சொல்லப்பட்டது, அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றும் படியும், அலம்பிலுக்கு தான் வேறு ஒழுங்கை செய்வதாகவும் கூறப்பட்டது. அதோடு தொடர்ந்து கூறப்பட்டது, அன்று இரவுக்குள் முகாம் முழுவதும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படியும் கூறப்பட்டது.

அப்போது முகாமின் பெரும் பகுதி எம்மிடம் விழவில்லை. முகாம் எம்மிடம் விழுந்து, எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டால், தரையிறங்கிய எதிரிக்கு இலக்கு இல்லாமல் போகும் என்றும், அப்போது அவர்களுக்குள் ஏற்படும் குழப்பத்தில் அவர்களும் எமது வலையில் சிக்குவார்கள் என்று கூறப்பட்டது.!

அடுத்து தலைவரின் திட்டத்திற்கு அமைய முதல், முதலாக சிறுத்தை படையணி களத்தில் இறக்கப்பட்டு, தரை இறங்கிய எதிரியை மறித்து நகரவிடாமல் வைத்திருக்க, முகாம் அழிக்கப் பட்டது. தலைவரின் கணக்கு பொய்க்கவில்லை.! வந்த எதிரியும் அழிக்கப்பட்டு,கடலிலும் படகுடன் மூழ்கடிக்கப்பட்ட எதிரியுடன் சேத்து 1800க்கு மேட்பட்ட எதிரியை கொன்று புது வரலாறொன்றை புலிகள் படைத்தனர்.

புதிதாக ஆட்லறிகளையும் கைப்பற்றி எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு தலைவர் நகர்த்தினார். இந்த சம்பவத்தின் போது SOஅண்ணை கூறினார், அண்ணையின் பார்வை எப்போதும் வித்தியாசமாய் இருக்கும்.

பால்ராஜ்அண்ணை கேட்டது போல தாக்குதல் அணிகளை அலம்பிலுக்கு அனுப்பி இருந்தால் சிலவேளை முகாமும் பிடிபட்டிருக்காது, இறங்கிய எதிரியையும் அழித்திருக்கவும் முடியாது போயிருக்கலாம். இது போல பல தடவை எனது கடல் திட்டங்களை மாற்றி எமக்கு பெரும் வெற்றிகளை பெற்று தந்துள்ளார் என்று நினைவு கூர்ந்தார்.

ஆம், உண்மை தான் தலைவரின் போர் நுணுக்கங்கள் பெரும் இராணுவ மேதைகளுக்கு மட்டுமே உரியது. உலக இராணுவ மேதைகளை மிஞ்சிய இராணுவ மேதை தமிழனாய் பிறந்ததால் உலகம் கொண்டாட போதில்லை, ஆனால் தமிழன் இருக்கும் வரை அவர் கொடாடப்படுவார்.!

பெருமையுடன் துரோணர்.!!

Advertisements

பிப்ரவரி 12, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள், வீரவரலாறு | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: