அழியாச்சுடர்கள்

பிரபாகரனும் சார்லஸும்: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

மகிந்த ராஜபக்சவைப் போலி தேசியவாதி என்று குற்றஞ்சாட்டியிருக்கும் சிங்கள விமர்சகர் உபுல் ஜோசப் பர்னாண்டோ, வெளிப்படையான விமர்சனங்களுக்குப் பெயர்போனவர்.SRI LANKA-UNREST-TIGERS-POLITICS

உபுல் போலவே வெளிப்படையாகப் பேசும் வேறுசில சிங்கள விமர்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளை விமர்சிப்பார்களே தவிர, மறந்து கூட பிரபாகரன் மாவீரன் என்பதை மனம்திறந்து பாராட்ட மாட்டார்கள்.

உபுல், அதற்கும் துணிந்திருக்கிறார்.

2009 ஜனவரி 8ம் தேதி, கொழும்பு நகரில் நட்டநடுத் தெருவில் கோத்தபாய ராஜபக்சவின் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க தொடர்பான நினைவுகள், உபுலின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்த அச்சம் இயல்பானது.

2009ல், விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலுக்குப் பயந்து, கொழும்பு அலரி மாளிகையில் மகாதீரன் மகிந்த ராஜபக்ச ரகசியப் பதுங்குகுழி கட்டியதை அம்பலப்படுத்தியவர், லசந்த விக்கிரமதுங்க. அதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்.

லசந்த கொல்லப்பட்ட அதே ஜனவரி 8ம் திகதிதான், அதிபர் பதவியிலிருந்து மகிந்த மிருகம் தூக்கியெறியப்பட்டது.

தமிழகத்தின் அடையாளமாகவே மாறிவிட்ட தம்பி முத்துக்குமாரின் மரணசாசனத்தைப் போலவே, லசந்தவின் மரணசாசனமும் வலுவானது. இரண்டுமே, 2009 ஜனவரியில் எழுதப்பட்டவை.

‘தன்னுடைய சொந்த மக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்கிற ஒரே நாடு என்னுடைய இலங்கைதான்’ என்று வெளிப்படையாகப் பேசியவன் லசந்த.

மகிந்தனின் முன்னாள் தோழனான லசந்த, ஆட்சி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் மகிந்தனின் போக்கைக் கண்டித்ததுடன் நின்றுவிடவில்லை. ‘எனக்கும் உன் பிள்ளைகள் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு நேரக்கூடியதைப் பார்த்து அவர்கள் கலங்கக் கூடும். அதே நிலை உன் பிள்ளைகளால் உனக்கு வர நேரிடலாம்’ என்கிற லசந்தவின் சாபம் ஆறேழு ஆண்டுகளில் பலித்தேவிட்டது.

வெலிக்கடை சிறை வாசலில் கண்கலங்க நிற்கிறது மகிந்த மிருகம். புத்திரபாசத்தில் மிருகங்கள் கூட கண்ணீர் வடிக்கும் என்பதற்கு இது ஒரு நிகழ்கால சாட்சியம்.

கட்டுநாயக தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட விடியோ பதிவின் பின்னணியில், எம் இனத்தின் நெருப்புக் கவி புதுவை ரத்தினதுரையின் குரல் ஆவேசத்துடன் ஒலித்ததை நினைத்துப் பார்க்கிறேன் இப்போது! ‘அழுகிறாயா, அழு… அழு! துடிக்கிறாயா, துடி.. துடி’ என்கிற புதுவையின் குரல் கணீரென ஒலிக்கிறது என் செவிகளில்!

இத்தனைக்கும், மனித உரிமை ஆணையர் ஹுசெய்ன் வருகையின் போது, ‘மகிந்த குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடத் தயங்கவில்லை’ என்று காட்டுவதற்கான காட்சிதான் யோஷித கைது.

இது மகிந்தனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லையா, அல்லது, இந்தக் கண்ணீர் நாடகமும் மைத்திரி – மகிந்தனால் முன்னதாகவே திட்டமிடப்பட்டதா… தெரியவில்லை.charles-anthony

தமிழினத்தின் ரத்தத்தில் முத்துக் குளித்த மிருகங்களை, குவியல் குவியலாக எம் இனத்தைக் கொன்று புதைத்த அரக்கர்களை, கதறக் கதற எம் சகோதரிகளைச் சீரழித்த பொறுக்கிகளை பிக்பாக்கெட் குற்றத்தில் கைது செய்துகொண்டிருக்கிறார்கள் மைத்திரியும், ரணிலும்! சட்டத்தை நிலைநாட்டிக் கிழிக்கிறார்களாம் இருவரும்!

நமக்கு நீதி வாங்கித் தருவதாக வாக்களித்த சர்வதேசம், நாண்டுகொண்டு சாக வேண்டாமா? சிங்கள மிருகங்கள் நாக்கு வழிப்பதற்காகவா தயாரிக்கப்பட்டது ஜெனிவா தீர்மானம்?

யோஷித கைது விவகாரத்தின் உருப்படியான விளைவு, ஒன்றே ஒன்றுதான்! அது, உபுலின் கட்டுரை. ‘சொந்த இனத்துக்காகத் தன்னை மட்டுமில்லாமல் தன் குடும்பத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர் பிரபாகரன்’ என்று உபுல் எழுதியிருப்பதை,

சிங்கள இனமும் சர்வதேசமும் அறிகிறதோ இல்லையோ, புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு பிரபா என்கிற அந்த மாமனிதனின் மீது புழுதிவாரித் தூற்றுவதையே முழுநேர வேலையாக வைத்திருந்த ‘அரிய மனிதர்கள்’ அறிந்துகொள்ள வேண்டும்.

அந்த ‘அரிய’ மனிதர்கள், மீண்டும் மீண்டும் இதைப் படித்துப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று விரும்புகிறேன் நான். அந்த அளவுக்கு அவர்களது பொய்ப் பிரச்சாரங்களைத் தோலுரித்து, அரை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கின்றன உபுலின் வார்த்தைகள். இதற்காகக் கூட வெட்கப்படாவிட்டால், அரிய மனிதர்கள் வேறெதற்காக வெட்கப்பட முடியும்?

கடந்த ஆறேழு ஆண்டுகளில், இரண்டு ஒற்றுமைகளைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். பிரபாகரன் என்கிற இந்த இனத்தின் அடையாளத்தை அவமதிக்கிற நோக்கத்துடன் ஒரு வேசியைப் போல கூசாமல் பேசியவர்கள்தான், ‘நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று போதிக்கிற போதி சத்துவர்களாக அவதாரம் எடுத்திருந்தார்கள். சந்தேகத்துக்கே இடமில்லாமல், அவர்கள் தான் இவர்கள் என்று அடித்துச் சொல்லமுடியும்.

‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களரோடு சேர்ந்துதான் கும்மியடிப்போம்’ என்று அடம்பிடிக்கும் அந்த அரிய மனிதர்களின் தலையில் தட்டி உண்மையைச் சொல்கிற கடமையை, உபுல் போன்ற ஒரு சிங்களவர் நிறைவேற்றியிருப்பதுதான் நியாயமானது என்று தோன்றுகிறது.

நிதிமுறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறையில் இருக்கிறான், ராஜபக்சவின் மகன் யோஷித. முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் உயிருக்கு அஞ்சாமல் போரிட்டு உயிர் துறந்த சார்லஸ் ஆன்டனி, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் இதயச் சிறையில் இருக்கிறான். இரண்டு பேருக்கும் இருக்கிற வேறுபாடுகளைத்தான் அம்பலப்படுத்தியிருக்கிறார் உபுல்.

2006ல், யோஷித ராஜபக்ச கடற்படையில் சேர்வதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நிமிடமே, ‘நாட்டைக் காப்பதற்காக நடக்கிற போருக்கு என் குடும்பத்திலிருந்து என் மகனைக் கொடுக்கிறேன்’ என்றெல்லாம் மகிந்த மிருகம் உருகி உருகிப் பேசியது.

மிருகமே உருகிய பிறகு, (பௌத்த) மகாசங்கம் வேடிக்கை பார்க்க முடியுமா? அடுத்த நொடியே களத்தில் இறங்கினார்கள் புத்தனின் பேராண்டிகள். போர்க்களத்தைப் புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த யோஷிதவுக்கு ‘உண்மையான தேசபக்தன்’ என்று பரிவட்டம் கட்டினார்கள்.

இந்தக் கூத்தைத்தான் இப்போது எழுதியிருக்கிறார் உபுல். “கொழும்பு நகரில் இந்தக் கூத்து நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி, விடுதலைப்புலிகளின் விமானப்படையினரோடு வன்னிக்காட்டுப் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்……..” என்று உபுல் எழுதியிருக்கிறாரே, இதற்குப் பெயர்தான் நெத்தியடி!

சொந்த இனத்துக்குக் குழிபறிப்பதிலேயே குறியாயிருக்கும் மிக மிக அரிய வயசாளி மனிதர்கள் இனியாவது சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடப் பழக வேண்டும். உப்பு சேர்க்காமல் எப்படி உணர்வு வரும்!

போர் தீவிரமடைந்த சமயத்தில், குமரன் பத்மநாபாவிடம் சார்லஸ் வைத்த வேண்டுகோள் தொடர்பாக உபுல் எழுதியிருப்பதைப் படிக்கும் போதே சிலிர்க்கிறது நமக்கு!

‘களத்தில் நான் நிற்கிறேன். அப்பா (பிரபாகரன்), அம்மா, தங்கை துவாரகா, தம்பி பாலச்சந்திரன் நால்வரையும் ஏதேனும் ஒரு வெளிநாட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறான் சார்லஸ். அவன்தான் மாவீரன்…. அவன்தான் மாமனிதன்!

புலிக்குப் பிறந்தது எப்படிப் பூனையாக இருக்க முடியும்?

புலம்பெயர் நாடுகளில் இருந்து, எம் இனத்தின் விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவதையும், பிரபாகரனை அவமானப் படுத்துவதையும் தொழிலாக வைத்திருந்தவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இனத்தின் விடுதலைக்காக மகன் சார்லஸைக் களத்தில் இறக்கிய பிரபாகரன் என்கிற ஓர் உண்மையான போராளியை மதித்த மதிக்கிற எங்களில் எவராவது, ‘உங்கள் பிள்ளையை எதில் ஈடுபடுத்தியிருக்கிறீர்கள்…. எங்கே அனுப்பியிருக்கிறீர்கள்’ என்று எப்போதாவது உங்களிடம் கேட்டிருக்கிறோமா? கோழைகள் குறித்து கவலைப்பட்டிருக்கிறோமா?

உபுலின் கட்டுரையைப் படித்த பிறகு கூட, சார்லஸ் வைத்த உணர்வுபூர்வமான வேண்டுகோள்தான் முதன்மையானதென்று தோன்றுகிறது எனக்கு!

சார்லஸின் வேண்டுகோளை பிரபாகரன் ஏற்காததும், ‘போர்க்களத்தை விட்டுவிட்டுப் பாதுகாப்பான இடத்துக்குப் போகமாட்டேன்’ என்று உறுதியோடு மறுத்ததும் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை.Col-Charles-Anthony

நேர்மையும் உறுதியும் கொண்ட பிரபாகரன் என்கிற அச்சமற்ற போராளியிடமிருந்து வேறெதை நாம் எதிர்பார்க்க முடியும்?

சுற்றிலும் இந்திய இராணுவம் முற்றுகையிட்டிருந்தபோதே, ‘மணலாற்றிலிருந்து வெளியேறமாட்டேன்’ என்று மறுத்து, வல்வெட்டித்துறை வரலாற்றைக் கல்வெட்டில் எழுதியவன் அவன். அந்த வீரனிடம் அச்சத்தின் சாயலாவது இருக்க முடியுமா?

‘பிரபாகரன் தீவிரவாதியாகவே இருந்தாலும், சொந்த மக்களுக்கு எந்தக் கணத்திலும் துரோகம் செய்யவில்லை’ – என்று உபுல் சொல்வதைக் கேட்ட பிறகாவது, எம் இனத்தின் முதுகில் குத்துவதற்காகவே பிரபாகரன் மீது அவதூறு பரப்பிய அரிய மனிதர்கள், தங்களைத் தாங்களே ஓரங்கட்டிக்கொள்ள வேண்டும்.

வயசுக்காலத்தில் ஒதுங்கி நிற்பது அவர்களுக்கும் ஒருவகையில் நல்லது தானே!

‘என் மகன் யோஷிதவை நாட்டுக்காகக் கொடுத்திருக்கிறேன்’ என்று பிரகடனம் செய்த ராஜபக்சவின் அசிங்க நோக்குக்கும், அப்படியெல்லாம் டமாரம் அடிக்காமல் மகனைக் களத்தில் இறக்கிய பிரபாகரனின் அரிமா நோக்குக்கும் இருப்பது ஆறேழு வித்தியாசம் மட்டுமா? அரிய மனிதர்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறேன்.

‘சார்லஸ் போர்க்களத்திலேயே இருந்தவர். யோஷிதவோ, போர்ப் பிரதேசத்தை எட்டிக்கூடப் பார்க்காதவர். அப்படி அவர் போனதற்கான அறிகுறி இல்லவே இல்லை.

போர் நடந்த வேளையில் யோஷித எங்கேயிருந்தார் என்பது கூட எவருக்கும் தெரியாது. போர் முடிந்தபிறகு, அதிபரின் பாதுகாப்புப் பிரிவுக்கு அவரை அனுப்புவதென்ற போர்வையில், அதிபர் மாளிகைக்கே அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

தந்தையின் அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே யோஷிதவின் கடற்படைப் பிரவேசம் பயன்பட்டது……..” என்று பட்டியலிடுகிறார் உபுல்.

இதெல்லாம் இயல்பானது என்றே தோன்றுகிறது எனக்கு! பிரபாகரனின் பிள்ளை பிரபாகரன் போலவே இருப்பதிலும், ராஜபக்சவின் பிள்ளை ராஜபக்ச மாதிரியே இருப்பதிலும் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

நான்கு தினங்களுக்கு முன் யோஷித ராஜபக்ச கைதுசெய்யப்பட்டதை அறிந்ததும் சித்தப்பு கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து, ‘நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்த ஒரு குழந்தையை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாமா’ என்கிற குமுறல் கேட்டது.

மகிந்தனின் செல்லப் பிள்ளை எதை எதையெல்லாம் அர்ப்பணித்திருக்கிறது, போர்க்களத்தில் என்னென்ன கிழித்திருக்கிறது என்பதையெல்லாம் உபுலின் கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.

யோஷிதவுக்குக் கடற்படையில் சேர்வதற்கான கல்வித் தகுதியே இல்லை…… கடற்படைப் பயிற்சியின்போது அவரது பாதுகாப்புக்காகவே மூன்று அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர்….. கடற்படை தளபதி அவருக்கு வரம்புகடந்த சலுகைகளை வழங்கினார்…… போர்க்களத்தையே யோஷித பார்த்ததில்லை…..

கூடுதல் பயிற்சி என்கிற பெயரில் அரசின் பணமும் வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளும் வாரி வாரி வழங்கப்பட்டன…. என்கிறார் உபுல்.

லசந்தவுக்கு நேர்ந்ததைப் போன்ற கொடுமை உபுலுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அவரைப் போன்றவர்கள் உயிருடன் இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன் நான்.

நாளையோ நாளை மறுநாளோ, ஈழத்தின் அண்டை நாடாக இருக்கப்போகிறது இலங்கை. மனசாட்சியுடன் எழுதும் உபுல் போன்றவர்கள், நமது அண்டை நாட்டில் இருக்க வேண்டாமா?

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

Advertisements

பிப்ரவரி 4, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம் | ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: