அழியாச்சுடர்கள்

பிரம்மஞானியின் இறுதிக்கால நினைவுப் பகிர்வுகள் சில…

பாலா அண்ணைக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தமை 2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத இறுதியில் சந்தேகிக்கப்பட்டாலும், அது நவம்பர் மாத நடுப்பகுதியிலேயே உறுதி செய்யப்பட்டது.Mr. Pirapaharan meets Mr. Anton Balasingham in Vanni in January 2005

பாலா அண்ணை மெலிந்து போயிருந்தார். ஆகக் கூடியவது ஆறு மாதம் தான் பாலா அண்ணை உயிர்வாழ்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவரை மரணம் அதைவிட வேகமாகவே நெருங்கத் தொடங்கியது. அப்பொழுது யாரும் எதிர்பார்க்கவில்லை நான்கு வாரங்களுக்குள் பாலா அண்ணை எம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என்று.

அவரை மருத்துவமனையில் அனுமதித்து கீமோ தெரப்பி வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கீமா தெரப்பி வழங்குபவர்கள் உயிர் தப்புவதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் சில வேளைகளில் அவர்களது ஆயுள் சில மாதத்திற்கு நீடிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. அதேநேரத்தில் கீமோ தெரப்பி பெறுபவரின் தலையில் உள்ள முடி முற்றாக உதிர்ந்து விடும். தவிர அவரது உடலும் வளைந்துவிடும்

அது பற்றி பாலா அண்ணையிடன் கேட்கப்பட்டது. பாலா அண்ணை சிரித்துக் கொண்டு பதில் சொன்னார்: ‘நான் செத்தாப் பிறகு என்னைப் பார்த்து மொட்டை பாலசிங்கம் எண்டு சனம் கதைக்க வேண்டும் எண்டு நினைக்கிறியளோ?’

அத்தோடு கீமோ தெரப்பி பற்றிய கதை நின்று போனது.

எதிர்பார்த்ததை விட வேகமாக பாலா அண்ணையை மரணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆறு மாதங்களாவது உயிர்வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட பாலா அண்ணை மூன்று வாரங்களுக்குள் மரணத்தின் வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது தலைவருக்கு ஒரு ஆதங்கம் ஏற்பட்டது. பாலா அண்ணை இறந்த பின்னர் அவரது வித்துடலை எப்படியாவது தாயகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த ஆதங்கம்.

ஆனால் அதற்கு பாலா அண்ணையின் அனுமதி வேண்டும். தயக்கத்தோடு பாலா அண்ணையை அவருக்கு நெருக்கமானவர்கள் அணுகினார்கள். பாலா அண்ணை மீண்டும் சிரித்துக் கொண்டு பதில் கூறினார்: ‘என்ரை உடம்பை ஊருக்கு கொண்டு போறதெண்டால் கொழும்பாலைதான் கொண்டு போக வேணும். அதை வைச்சு சிங்களவன் அரசியல் செய்வான். வேண்டாம். இங்கேயே (இலண்டனிலேயே) எரித்து விடுங்கள்’ என்றார் பாலா அண்ணை.

இப்பொழுது பாலா அண்ணையின் அந்திம நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இலண்டனில் அவரது இறுதி நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவர் இறந்ததும் அவரது வித்துடலை குதிரைகள் இழுத்துச் செல்லும் ரதம் (சரியட்) ஒன்றில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கும் பின்னர் அங்கிருந்து சுடுகாட்டிற்கும் கொண்டு போவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை. அதற்கு பாலா அண்ணையின் அனுமதி தேவைப்பட்டது.

மரணப் படுக்கையில் இருந்த பாலா அண்ணை இதுவிடயமாக அணுகப்பட்டார். குதிரைகள் பொருத்திய ரதத்தில் அவரது வித்துடலை எடுத்துச் செல்லும் திட்டம் அவரிடம் மெல்லத் தெரிவிக்கப்பட்டது.

வழமை போன்று பாலா அண்ணை சிரித்தார். ‘குதிரை ஒண்டும் வேண்டாம். சாதாரணமாக கொண்டு போய் எரிச்சு விடுங்கோ’ என்று பாலா அண்ணை பதிலளித்தார்.

அத்தோடு தான் இறந்ததும் தனது வித்துடலுக்குக் கோட், சூட் அணிவிக்கக் கூடாது என்றும், தமிழ் முறைப்படி வேட்டி அணிவித்தால் போதும் என்றும் பாலா அண்ணை கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

இறுதியாக ஆண்டுதோறும் அவருக்கான இறுதி நிகழ்வு நடத்துவது பற்றிய விடயம் வந்தது. இம்முறையும் பாலா அண்ணை கூறினார்: ‘நினைவு நிகழ்வு எதுவும் வேண்டாம். வேண்டுமென்றால் எல்லோரும் என்ரை நினைவு நாளிலை சந்தோசமாகச் சாப்பிடுங்கோ’ என்றார்.

மரணம் நெருங்கும் பொழுது எல்லோரையும் அச்சம் தொற்றிக் கொள்ளும். யாரும் மரணத்தை விரும்புவதில்லை. அதைப் பற்றிக் கதைத்தாலே பலருக்கு கோபம் வந்து விடும்.

ஆனால் பாலா அண்ணை அப்படியில்லை.

தான் மரணிக்கப் போகின்றேன் என்பதை விடத் தான் மரணிக்கும் பொழுதும் கம்பீரமாக மரணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

தான் மரணித்ததும் தனக்கு ஒரு கல்லறை வேண்டும் என்று அவர் எண்ணவில்லை.

தனது மரணத்தில் சிங்களம் அரசியல் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

தனது வித்துடல் ஆடம்பரமாக இலண்டன் வீதிகளால் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவதையும் அவர் வெறுத்தார்.

ஏன் தான் மரணித்த பின்னரும் தனக்கு ஒரு நினைவு நாள் தேவையில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். அந்நாளில் எல்லோரும் வயிறார உணவு உட்கொள்ள வேண்டும் என்பதே அவரது அவாவாக இருந்தது.

மரணம் பற்றி விடுதலை என்ற தனது கட்டுரைத் தொகுதியில் பின்வருமாறு பாலா அண்ணை எழுதியிருந்தார்:

‘நிலையற்ற இந்த உலகில் நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன்பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ்வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர்கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் அதுமட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக் கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.’

தமிழ்த் தேசிய அரசியல் உலகில் அன்ரன் பாலசிங்கமாக அறியப்பட்ட பாலா அண்ணை, தத்துவச் சிந்தனை உலகில் பிரம்மஞானி என்ற புனைபெயருடன் வலம் வந்தார்.

இறுதி நாட்களில் எந்தச் சலனமும் இன்றி மரணத்தை பாலா அண்ணை எதிர்கொண்ட விதமும், தனது மரணச் சடங்கு பற்றியும், தனது நினைவு நாள் பற்றியும் அவர் கூறிய கருத்துக்களும் அவரை தேசத்தின் குரலாக மட்டுமன்றி பிரம்மஞானியாகவே நிலைநிறுத்தி வைத்துள்ளது எனலாம்.

-சேயோன்-

—-anton balasingam

மரணத்தின் பின் பேசும் வரிகள்

உலகத் தமிழர்களின் இதயங்களிலும், தமிழீழ தேசத்தின் வரலாற்றிலும் தனக்கேயுரித்தான தனித்துவமான இடத்;தைப் பிடித்திருக்கும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து சென்று வரும் 14ஆம் நாளுடன் ஒன்பது ஆண்டுகள் கடக்கின்றன.

காலச்சக்கரத்தின் நீட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழினம் எதிர்பாராத எத்தனையோ தலைகீழான நிகழ்வுகளைச் சந்தித்திருக்கின்றது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பாலா அண்ணையைப் புகழ்ந்து எத்தனையோ பேர் எழுதியிருக்கின்றார்கள். எத்தனையோ பேர் மேடைகளில் ஏறியும், இணையக் காணொளிகள் வாயிலாகவும் புகழுரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இவ்வாறு பாலா அண்ணை பற்றி அடிக்கடி மேடைகளில் ஏறி புகழ்பாடுபவர்களில் ஒருவர் எரிக் சுல்கைம். ஒரு காலத்தில் உலகத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர்: சிங்களத் தலைமைகளின் ஏமாற்று வித்தைகளுக்குக் கிறங்கிப் போகாத ஒருவர் என்று கருதப்பட்டவர். பாலா அண்ணையை புற்றுநோய் காவு கொள்ளும் வரை அப்படித்தான் அவரை உலகத் தமிழர்கள் பார்த்தார்கள். எமக்காகக் குரல்கொடுப்பதற்கு மேற்குலகின் அதிகாரபீடங்களில் அமர்ந்திருந்த ஒருவராகவே எரிக் சுல்கைமை அன்று உலகத் தமிழர்கள் பார்த்தார்கள்.

ஆனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மன்னார் மடுப் பகுதியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்து, வன்னி முழுவதையும் கடுகதியில் விழுங்கத் தொடங்கிய பொழுதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. ஈழப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்று அதுகாறும் பல்லவி பாடி வந்த எரிக் சுல்கைம் சிறிது காலத்திற்கு மௌனமானார். உடனடியாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அன்றைய காலப் பகுதியில் அவருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் விடுக்கப்பட்ட வேண்டுகைகள் அனைத்தும் செவிடன் காதில் சங்கை ஊதிய கதையாகவே முடிந்தது.

குறைந்த பட்சம் வன்னிக்கு வருகை தந்து மக்களின் அவலத்தையாவது நேரில் கண்டறியுமாறு 2008ஆம் ஆண்டின் இறுதியில் அவரைத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் கோரிய பொழுது, ஆயுதக் களைவுக்கான இணக்கத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கினால் மட்டுமே தான் வன்னிக்கு வருவேன் என்று பதிலளித்தார்.

அது வரை நடுநிலையாளராகக் கருதப்பட்ட எரிக் சுல்கைம், நீதித் தராசின் எந்தப் பக்கத்தில் உண்மையில் அமர்ந்திருந்தார் என்பது அப்பொழுதுதான் பட்டவர்த்தனமாகியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலுச் சமநிலையே எரிக் சுல்கைமை நீதித் தராசின் நடுப்பக்கத்தில் அமர வைத்தது என்பது அப்பொழுது வெள்ளிடை மலையாக வெளிப்பட்டது.

சரியோ, தவறோ, எரிக் சுல்கைம் ஒரு அரசியல்வாதி. தனது கட்சியையும், தான் அரசியல் செய்யும் நோர்வீஜிய தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளையும் பிரதிபலிக்க வேண்டியது அவரது கடமை. எனவே தமிழ் மக்களின் நியாயங்களை அவர் புரிந்து கொள்ளத் தவறியதையிட்டோ, இறுதிப் போரில் தமிழினம் பெரும் அழிவைச் சந்திக்கப் போகின்றது என்பதை அறிந்திருந்தும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர் எதனையும் செய்யவில்லை என்பதையிட்டோ நாம் அவரைக் குறைகூறுவதில் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதியாகவே அவர் நடந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் அத்தோடு அவர் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. தான் ஏறும் ஒவ்வொரு மேடைகளிலும் நூதனமான நாடகம் ஒன்றை அவர் நிகழ்த்துவதுதான் பலரது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. ஒவ்வொரு மேடைகளிலும் பாலா அண்ணையைப் போற்றிப் புகழும் எரிக் சுல்கைம், அதே மேடைகளில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைத் திட்டித் தீர்ப்பதற்குத் தவறுவதில்லை. இவ்வாறுதான் கடந்த 28.10.2015 அன்று இலண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் அவர் நடந்து கொண்டார்.

அது ஒரு நூல் வெளியீட்டு விழா. மார்க் சோல்ரர் எனப்படும் ஆங்கில எழுத்தாளர் ஈழப்பிரச்சினையில் நோர்வேயின் ‘சமாதான’ முயற்சி பற்றி எழுதிய நூல் அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. அவ்விடத்தில் சிறப்புப் பேச்சாளர்களாக இரண்டு பேர் கலந்து கொண்டார்கள். ஒருவர் எரிக் சுல்கைம். மற்றையவர் 2005ஆம் ஆண்டு வரை நோர்வேயின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கிய விதார் கெல்கிசன். இதில் வேடிக்கை என்னவென்றால் நோர்வே மேற்கொண்ட ‘சமாதான’ அனுசரணை முயற்சியில் எந்த விதத்திலும் மார்க் சோல்ரர் அவர்கள் தொடர்புபடவில்லை. மாறாக எரிக் சுல்கைமும், விதார் கெல்கிசனும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தனது நூலை மார்க் சோல்ரர் எழுதியிருந்தார்.

அவ்விடத்தில் விதார் கெல்கிசன் அவர்கள் உரையாற்றும் பொழுது தனது வார்த்தைகளை அளந்தே பேசினார். ‘சமாதான’ அனுசரணைப் பணிகளை முன்னெடுப்பதில் நோர்வே எதிர்நோக்கிய சவால்கள் பற்றியெல்லாம் பேசினார். ‘ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றத்தைத் திட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு, சிறீலங்கா அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் உள்ளகப் பொறிமுறையை நோர்வே ஆதரிப்பது சரியா?’ என்று கேள்வியெழுப்பப்பட்ட பொழுது, நோர்வே அரசாங்கத்தில் தான் இப்பொழுதும் அமைச்சராக விளங்கினாலும், வெளியுறவுத்துறை அமைச்சில் அங்கம் வகிக்காததால் அதுபற்றி எதனையும் கூற முடியாது என்று பதிலளித்து நழுவிக் கொண்டார்.

ஆனால் எரிக் சுல்கைமோ அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு ஏறத்தாள நான்கு ஆண்டுகள் கடந்திருப்பதாலும், நோர்வே அரசாங்கத்தின் தீர்மானங்களில் பங்களிப்பதற்கு இப்போதைக்குத் தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படப் போவதில்லை என்பதாலும் தான் எதையும் பேசலாம், எவரையும் திட்டித் தீர்க்கலாம் என்று எரிக் சுல்கைம் எண்ணினாரோ தெரியவில்லை. மடையுடைத்து வெளியேறும் வெள்ளம் போன்று அவரது வாயிலிருந்து வார்த்தைகள் பொழிந்த வண்ணமிருந்தன:

‘‘பிரபாகரனுக்கு உலக நடப்புத் தெரியாது. அவர் ஒரு போர்ப் பிரபு போன்று நடந்து கொண்டார். சம~;டியை ஏற்பதற்குப் பிரபாகரனுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அதனை அவர் பிற்போட்டு வந்தார். சம~;டியை ஏற்பதற்குப் பிரபாகரன் தயாராகிய பொழுது காலம் கடந்திருந்தது. இறுதிப் போரில் தமிழ் மக்கள் சந்தித்த அழிவிற்குப் பிரபாகரனே காரணம்;. ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைவதற்ப் பிரபாகரன் இணங்கியிருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

இதேநேரத்தில் பாலசிங்கத்தை சமாதானத்தின் நாயகன் என்றே நான் கூறுவேன். பாலசிங்கம் உலக நடப்புகளை நன்கு புரிந்து கொண்டிருந்தார். சமாதானத்தின் நாயகர்களாக அழைக்கப்படும் தகுதி இரண்டு பேருக்கு உண்டு: ஒருவர் பாலசிங்கம், மற்றையவர் ரணில் விக்கிரமசிங்க.

தமிழர்கள் இனியாவது அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமது உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக வழங்குவார்கள் என்று தமிழர்கள் எண்ணக் கூடாது. அமைதி வழியில் தொடர்ந்து போராடி அவற்றைப் பெறுவதற்கு அவர்கள் முற்பட வேண்டும்.’’

இதில் எரிக் சுல்கைம் கூறிய மூன்றாவது கருத்துத்தான் பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அவ்விடத்தில் பார்வையாளராக வருகை தந்திருந்த தமிழ் ஒலிபரப்பாளர் ஒருவர் கருத்துக்கூறும் பொழுது: ‘பரவாயில்லையே, தமிழ் மக்களுக்கு நல்ல அறிவுரையைத் தானே எரிக் சுல்கைம் கூறியிருக்கின்றார்’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

அவ்விடத்தில் கேள்வி கேட்பதற்கு பலர் முற்பட்ட பொழுதும் ஒரு சிலருக்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனாலும் அவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்ட தமிழர்களில் எவரும் தலைவர் அவர்களை எரிக் சுல்கைம் நிந்தித்தது தவறு என்பதைச் சுட்டிக் காட்ட முற்படவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியவசமானது. ஒரேயொருவர் மட்டும் ‘இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டதற்கு எரிக் சுல்கைம் பொறுப்பேற்று மன்னிப்புக் கோருவரா?’ என்று வினவினார்.

அன்;றைய நிகழ்வில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு விரோதமான கருத்துக்களைக் கொண்டவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் தெரியாது என்றும், ‘தமிழ் மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றவர்கள் பிரபாகரனும், பாலசிங்கமும் தான்’ என்றும் திட்டித் தீர்க்கும் ‘மிதவாதிகள்’ என்று கூறிக்கொள்வோரும் கலந்து கொண்டார்கள். தலைவர் அவர்களை எரிக் சுல்கைம் திட்டித் தீர்த்த பொழுது பெரும் பூரிப்போடு தமது இருக்கைகளில் அமர்ந்திருந்த அவர்கள் எவரது முகத்திலும் பாலா அண்ணையை எரிக் சுல்கைம் புகழ்ந்துரைத்த பொழுது ஈயாடவில்லை. ‘பாலசிங்கத்திற்கும், பிரபாகரனுக்கு என்னதான் வேறுபாடு உண்டு?’ என்பது போன்று அவர்களின் தோரணை இருந்தது. இதனை எரிக் சுல்கைம் அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஏனென்றால் தலைவர் அவர்களின் குரலாகவும், அரசியல் களத்தில் அவரது அரணாகவுமே பாலா அண்ணை விளங்கினார். இது தலைவர் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பலருக்கு நன்கு தெரியும்.

பேச்சுவார்த்தைகளில் பாலா அண்ணைக்கு பிடிக்காத ஒரு விடயம் என்றால் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு பற்றிய பேச்சுத்தான். எதைப் பற்றியும் பாலா அண்ணையுடன் பேசலாம். ஆனால் ஆயுதக் களைவு பற்றி பாலா அண்ணையுடன் பேசினால் அவ்வளவுதான்.

பாலா அண்ணை உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவரிடம் ஆயுதக் களைவு பற்றி பேசி வாங்கிக் கட்டியவர்களுக்கு இது தெரியும். எனவே போர்நிறுத்தம் பற்றியும், சம~;டி பற்றியும், இடைக்கால நிர்வாகம் பற்றியும், தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வு பற்றியும் மட்டும் பாலா அண்ணையுடன் உரையாடிய எரிக் சுல்கைமிற்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

இதற்கான அனுபவம் எரிக் சுல்கைமிற்கு இருந்திருந்தால், இறுதிப் போரில் பாலா அண்ணை உயிரோடு இருந்து அவருடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு பற்றியும், சரணடைவு குறித்தும் எரிக் சுல்கைம் உரையாடியிருந்தால், இன்று பாலா அண்ணையை அவர் புகழ்ந்திருக்க மாட்டார். தமிழீழ தேசியத் தலைவரைத் திட்டித் தீர்ப்பது போன்று, பாலா அண்ணையையும் எரிக் சுல்கைம் திட்டித் தீர்த்திருப்பார்.

இதுதான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை எரிக் சுல்கைம் நிந்தித்த பொழுது பூரிப்படைந்தவர்களின் முகத்தில் பாலா அண்ணையை அவர் புகழ்ந்துரைத்த பொழுது ஈயாடாது போனதற்கான சூட்சுமமாகும்.

இன்று துர்ப்பாக்கியவசமாக பாலா அண்ணை எம்மோடு இல்லை. உயிரோடு இருந்திருந்தால், தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் எரிக் சுல்கைம் போன்றவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குக் காத்திரமான பதில் அளித்திருப்பார்.

ஆனாலும் தனது ஆயுட் காலத்தின் இறுதி ஆண்டுகளில் அவரால் வெளியிடப்பட்ட ‘போரும், சமாதானமும்’ என்ற நூலின் இறுதி அத்தியாயத்தில் நோர்வேயின் ‘சமாதான’ முயற்சி தொடர்பாக அவர் எழுதிய குறிப்புகள் சிலவற்றை அவரது ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் கட்டவிழும் இத்தருணத்தில் மீள்பதிவு செய்வது பொருத்தமானது:

‘‘…மிகவும் நுட்பமாகப் பேச்சுக்களை வழிநடத்திச் சென்ற நோர்வே ராஜதந்திரம் படிப்படியாக சர்வதேச நாடுகளின் மேலதிக தலையீட்டுக்கு இடைவெளியை அனுமதித்துத் தவறிழைத்தது. பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல்-கேந்திர அபிலாசைகளும் அதிகார வீச்சுக்களும், பேச்சில் பங்கு கொண்ட இரு தரப்பினரது அதிகார சம வலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேச சமூகம், சிறீலங்கா அரசின் நலன்களுக்கு சார்பாக நின்றது. இதனால் சம உறவு நிலை எமக்குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள், சிறீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக அரசியல் தீர்வுக்கு வரம்புகளைத் திணிக்கத் துணிந்தன. இத் தலையீடானது, எமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ணயித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. …எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைக்கோ இனப் பிரச்சினைக்கோ தீர்வு காணும் முயற்சியில் நோர்வேயின் சமாதான முயற்சி எந்தவொரு சாதனையையும் நிலைநாட்டவில்லை என்பது உண்மைதான்.’’

‘போரும், சமாதானமும்’ நூலை எழுதும் பொழுது அடிக்கடி ஒரு விடயத்தை பாலா அண்ணை குறிப்பிடுவார். ‘நான் உயிரோடு இல்லாது போனாலும் எனது நூல் நிலைத்து நிற்கும்’ என்பதுதான் அது. அதற்கான சான்றாகவே பாலா அண்ணையின் மேற்கண்ட வரிகள் திகழ்கின்றன.

– கலாநிதி சேரமான்

Advertisements

திசெம்பர் 14, 2015 - Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: