அழியாச்சுடர்கள்

தலைவர் பிறந்த நாள் வாழ்த்துப்பா!

prabakaran birthday wishes 2015முன்னைத்தமிழ்
மண்ணை மீட்க-
அன்னைத் தமிழை- அத்தமிழின்
பெண்ணைக் காக்க-
தன்னைக் கொடையாய்த்
தந்திடும் படையைப்
படைத்தான்- பகை
உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு
கிடைத்தான் இக்கரிகாலன்!

ஆண்டாண்டு காலமாய்
அடிபட்ட
அடிமைப்பட்ட
இனத்தின் வலி பொறுக்காது
பகை ஒறுக்காது இனம் இருக்காது
என்றுணர்ந்து
குகைவிட்டு வெளிவந்த புலியாய்
வலி கொடுத்தான்- பகையைப்
பலி கொடுத்தான்- பாருக்கே
கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்!

தரைப்படை
தண்ணீர்ப்படை
தாவும் வான்படை என
முப்படை படைத்து
மூடக்காடையர்
முகம் உடைத்து
எம் மண்ணை
எம்மிடம்
ஒப்படை என்றான்
ஒப்பாரும் மிக்காருமிலாப்
பெருமாவீரன் பிரபாகரன்!

காலனும்
கண்டஞ்சும்
கரிகாலன் கொண்ட
கரும்புலிப்படை
தாவும் பாய்ச்சலில்
சாவும் சற்றே
விலகி நிற்கும்;
ஆடைகள் நனைந்த
காடையர் கூட்டம்
அப்போது தானே
பாடம் கற்கும்!
பிறகென்ன?
இப்படை முன்னே
எப்படை வெல்லும்?
அதைத்தான்
அகிலம் நாளும் சொல்லும்!

நெற்றியில்
நெருப்பெரியும்
தாயகப்பற்றின் புலிகளை
நேருக்கு நேர் சந்திக்க
யாருக்கு துணிவு வரும்?

பாயும் புலிகளைச்
சாய்க்கும் சதிக்கு
முதுகைத் தேடும்
துரோகம்தானே துணைக்கு வரும்?

விலைபோன தீயோர்
வீழும் நிலை வரும்;
தாழும் தமிழினம்
வாழும்-ஆளும் நிலை பெறும்!
நிலைமாறும் போது
தலைவர் வருவார்!
மீண்டும் வருவார்!
மீட்ட வருவார்!
எனக் காத்திருந்து
எதிர்பார்த்திருந்து
என்னாகப் போகிறது?

ஓ! எந்தமிழ் பேசும்
செந்தமிழினமே!
உலகத்துள் தேடாதே
தேசியத் தலைவரை!
உனக்குள் பிரபாகரன்
உருவாகும் நிலைவரை…

-உதய் என்கிற வள்ளுவக்குமரன்

Advertisements

நவம்பர் 23, 2015 - Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: