அழியாச்சுடர்கள்

தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை வெற்றி நாள்

அமாவாசையும்..புலிகளின் அதிரடித் தாக்குதல்களும்! கண்ணின், கருவிழிகளைக் குத்தும் கும்மிருட்டுதான் கெரில்லாப் போர்க்களத்துக்கு சாதகமானது! 13.11.1993இல்.. வெற்றிகரமாக புலிகள்..தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பூநகரி இராணுவ முகாமை கைப் பற்றினார்கள்.. மு.வே.யோகேஸ்வரன்

Thavalaippaayhcal-Attackகண்ணின், கருவிழிகளைக் குத்தும் கும்மிருட்டுதான் கெரில்லாப் போர்க்களத்துக்கு சாதகமானது!

13.11.1993 இல்.. வெற்றிகரமாக புலிகள்..தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பூநகரி இராணுவ முகாமை கைப் பற்றினார்கள்..

1990 கு பின்னர் ஈழத்தில் நடந்த பெரும்பாலான தாக்குதல்களை உற்று நோக்கிப் பார்த்தால், அவை பெரும்பாலும் அமாவாசை நாட்களிலோ,அல்லது அதை நெருங்கிய நாட்களிலோதான் நடை பெற்றுள்ளன.அது ஏன்? என்று அன்பர்கள் யாராவது சிந்தித்தீர்களா?

அமாவாசைக்கும் நடிகர் வடிவேலுக்கும்(வடிவேல் அவர்கள் இதை பொருட்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன்)என்ன ஒற்றுமையோ,அதே ஒற்றுமைதான் புலிகளின் அதிரடி முகாம்கள் மீதான தாக்குதல்களுக்கும்,அமாவாசைக்கும் உண்டு.மிகப் பெரிய தாக்குதலான பூனகேரி ராணுவ முகாம் தாக்குதல் ஆகட்டும்..அல்லது
தலைவரின் நேரடி தலைமையில்-வழி நடத்தலின் கீழ் நடந்த மண்டைதீவுத் தாக்குதல் ஆகட்டும்.முல்லை முகாம் மீதான தாக்குதல் ஆகட்டும், மாங்குளம்,கிளிநொச்சி, முகாம்கள் மீதான தாக்குதல் ஆகட்டும்..

பெரும்பாலும் அமாவாசை நாட்களிலும் அதற்கு முந்திய சில நாட்களிலும்,அல்லது அமாவாசைக்கு ஒருசில பிந்திய நாட்களிலுமே நடந்தேறியுள்ளன அது ஏன் என்பதை அன்பர்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அப்போது சிந்தித்ததும் இல்லை.

ஆனால், முக்கிய புலிகளின் உறுப்பினர்களுக்கு அதன் காரணம் நன்கு தெரியும்.அமாவாசைக் கும்மிருட்டில் ஓர் அடிக்கு பக்கத்தில் நிற்பவரையே சரியாக தெரியாதபோது, எப்படி ஐம்பது அடி தூரத்துக்கு அப்பால் இருந்து தாக்குதலுக்கு வரும் புலிகளை அடையாளம் காண முடியும்?..எனவேதான் புலிகள் அமாவாசையை..அல்லது அதை அண்டிய நாட்களை இலங்கை முகாம்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தினர்.அப்படிஎன்றால் புலிகளுக்கு மட்டும் எப்படி ராணுவத்தை அடையாளம் காணமுடியும்? என்று நீங்கள் கேட்கலாம்.உண்மை!அதற்கான விடையோ மிக சுலபம்.

இராணுவ முகாம்களை வேவு பார்க்க அனுப்பப்படும் வேவுப் புலிகள் இரவு நேரத்தில்தான் தங்களின் கடமையை பெரும்பாலும் ஆரம்பிப்பர்.அதனால், குத்தும் இருட்டு என்பது புலிகளுக்கு பழக்கப் பட்ட ஒன்று.பூனைகளுக்கு,புலிகளுக்கு,வவ்வால்களுக்கு எப்படி இரவில் தெளிவாக கண்கள் தெரியுமோ அப்படித்தான் இதுவும்.

தினம் தினம் இரவில் நடமாடும் மனிதர்கள், இருட்டில்தம் கண்களைப் பழக்கப் படுத்திக் கொள்வார்கள்.எமது ராணுவ வேவுப் புலிகளும் அப்படித்தான்.ஒரு முகாம் தாக்குதலுக்கு இருட்டு நேரத்தில் போகும்போது சில தளபதிகளுக்கு வேவுப் புலிகள் பல நாட்கள் இரவுநேர நகர்தல் பற்றி பயிற்சி அளிப்பதுண்டு ஏனெனில் ஒரு முகாமின் ராணுவ வரை படத்தை,அதன் சூழ் நிலையை, வேவுப் புலிகளின் வரை படத்தைக் கொண்டுதான் தலைவர் நிச்சயிப்பார்..அந்த தளபதிகள் பின்னர் தமது படைப் பிரினருக்கு அந்தப் பயிற்சியை அளிப்பார்கள்.
தாக்குதல் தொடங்கும்போது யாரும் இருட்டை பற்றி கவலைப் படாமல் முன்னேறுவார்கள்..இதுதான் புலிகளின் வெற்றியின் ரகசியம்.

ஆயினும், இன்னும் ஓர் சிறப்பு உத்தியும் போர்க்களத்தில் புலிகளால் அவ்வப்போது கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.அது என்ன தெரியுமா? தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சிறைச் சாலைகளுக்கு சென்று அங்கேயுள்ள முக்கிய திருடர்களிடம் கேளுங்கள்- அது என்ன உத்தி என்று சொல்வார்கள்.நானே சொல்லிவிடுகிறேனே..ஒரு பரம்பரைத் திருடன் நள்ளிரவில் ஒரு வீட்டில் கன்னமிட நினைத்தால்,நள்ளிரவுக்கு பின்னர் ஒரு பிளேட்டை எடுத்து தன கையில் வைத்திருப்பானாம்.அதற்கு கீழே மறு கையை வைப்பான்.ஆனால் கொட்ட, கொட்ட விழித்திருப்பான்.கூரிய பிளேட் அவனது வலக் கையில் வெட்டுவதற்கு தயாராய் இருக்கும்.ஒரு கட்டத்தில் அந்த திருடனின் கண்கள் உறங்க முயலும்போது, அவனை அறியாமலே அவனது கை கீழே தாழும்.அப்போது கையில் இருந்த பிளேட் இடது கையை தூக்க கலக்கத்தில் வெட்டிவிடும்.உடனே இரத்தம் பீறிட்டுப் பாயும்.அதற்கு ஒரு கட்டுப்போட்டுக் கொண்டு, அவன் தான் தெரிவு செய்த வீட்டை கொள்ளை அடிக்க போய்விடுவான்.அங்கே மக்கள் நன்கு தூங்கி கொண்டிருப்பார்கள்.அவன் எதுவித சிரமமும் இன்றி தன் வேலையை முடித்துவிட்டு திரும்பி விடுவான்.

அதாவது, அன்றைய சூழ் நிலையில் இயற்கையின்பருவ நிலை மாறுதலுக்கு ஏற்ப உயிரினம் தூங்கும் நேரம் வரும்போது தூக்கம் வரும். திருடனுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் அது ஒன்றுதான்.பெரும்பாலும் நள்ளிரவுக்கு ஒரு சில மணி நேரம்(அல்லது நள்ளிரவில்) கழித்தே புலிகள் தம் தாக்குதல்களை ஆரம்பிப்பது வழக்கம்.ஆனால், இதையே எதிரி நோட்டமிட்டு அதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் இருக்க, தலைவர் அவர்கள் தாக்குதல் யுக்திகளை பின்னர் அடிக்கடி மாற்றி வந்ததும் உண்டு.மாலை,ஆறு- ஏழு மணிக்கும்…ஏன் பட்டப் பகலில்கூட சில தாக்குதல்கள் இதனால்தான் நடை பெற்றன.இது தாக்குதல் யுக்திகளை எதிரிக்கு காட்டி கொடுக்க கூடாது என்பதற்காக செய்யப்பட்ட தாக்குதல்கள்..

கும்மிருட்டின் கோரப் பிடிக்குள் உலகம் துயின்று கொண்டிருந்த அந்த நாளில்..தரை மூலமும், கடல்மூலமும் புலிகள் பாய்ந்தார்கள்..வாடர் ஜெட் ..என்று அழைக்கப் படும் 8 நீரூந்துக் கப்பல்களை எதிரியிடம் இருந்து கைப் பற்றிக் கொண்டுவந்தார்கள்..அவற்றில் இரண்டு, தாக்குதலுக்கு உட்பட்டு சேதம் அடைந்து விடவே ஏனையவை கடற் புலிகளால்..பின்னர் ..பாவனைக்கு உட்படுத்தப் பட்டன..அது மட்டுமல்ல..இராணுவ பீரங்கி வண்டிகளையும் இராணுவ முகாமில் இருந்து கைப்பற்றி அவற்றை தாமே ஒட்டிக் கொண்டு வந்தார்கள்..ஆட்டிலறிகள்..பீரங்கிகள்..எறிகணை ஏவிகள்….இன்னும் எண்ண முடியாத ஆயுதங்கள் யாவும் அள்ளப் பட்ட தாக்குதல்தான் பூனகேரி முகாம் தாக்குதல் ஆகும்..

பூனகேரி முகாமை சூழவுள்ள பகுதிகளில் இருந்து…இராணுவத்துக்கு .வரும் கடல் மூலமான உதவிகளை..கடற்புலிகள்..இன்னும் ஒரு பகுதியில் தம் விசைப் படகுகளின் துணையோடு வீரப்போர் புரிந்து தடுத்தார்கள்..அதில் ,முன்னாள் கடற்புலிகளின் தளபதி, கங்கை அமரனின் பங்கும், வேறு பல கடற்புலிகளின் கமாண்டோக்களின் பங்கும்.. மகத்தானது.தளபதி…கங்கை அமரன்..வேறு ஓர் சமரின்போது வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்.. ..ஆனால் அவரின் நினைவுகள் என்றும் அழியாமல் உள்ளன..

நாகதேவன்துறை(பூனகேரிக்கு அண்மையில்) என்ற இடத்தில் உள்ள சிங்களக் கடற்படை முகாமை அழித்தால்தான் பூனகேரி முகாம் பிடிபடும் என்ற நிலையில், அதைத் தாண்டித்தான் மற்றொரு பகுதிமூலம்,பூனகேரி முகாமைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில்..கிளாலிக் கடல் ஊடாக..நூற்றுக்கு மேற்பட்ட அதிரடிக் கடற் புலிகள்..தண்ணீருக்கு அடியில், பிராண வாயுச் சிலிண்டர்களோடும் ..முதுகில் தானியங்கிகளோடும் சில கிலோ மீட்டர்..தம் தலைகளைக் கூட, தூரத்தில் காவல் காத்து நிற்கும் கடற்படைக்கு காட்டாமல் அதிரடியாக அந்த முகாமை சென்று தாக்கி அழித்தார்கள்..இதுவே பூனகேரி இராணுவ முகாம் பிடிபடுவதற்கு போடப்பட்ட முதல் அத்திவாரம் ஆகும்..இல்லையென்றால்..ஆனை இறவு இராணுவ முகாம் உட்பட.. பல பகுதிகளில் இருந்த சிங்கள இராணுவத்தினரை சிங்களக் கடற்படை பூனகேரிக்கு நகர்த்தி, புலிகளின் தாக்குதலை முளையிலேயே கிள்ளியிருக்கும்..

….இதற்காகவே பல மாதங்கள் விசேட கடற் புலிகளின்..ஆண்கள்..பெண்கள் அடங்கிய குழு ஒன்று வடமராச்சிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது..கடற்புலிகள் அமைப்பு ஏற்படுத்தப் பட்டு இரு வருடங்களில் இந்த மாபெரும் தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தியது,என்பதுதான் இதன் சிறப்பு ஆகும்..
இவைகள் போர்க்கால.. புலிகளின் வரலாற்றில் முதன் முதலாக நிகழ்ந்த புதிய போரியல் பரிமாணங்கள் ஆகும்..

என்நினைவில் இருந்து என்றும் நீங்காத நினைவுகள் அவை..

மு.வே.யோகேஸ்வரன்

********

ஒப்பறேசன் தவளைப் பாய்ச்சல்

படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி!

“11ம் திகதி ஒவ்வொரு புலிவீரனுக்கும் பத்துக் கைகள் முளைத்துவிட்டன”

பூநகரி வெற்றியுடன் புலிகள் இயக்கம் பெற்றுவிட்ட பலத்தை தலைவர் பிரபாகரன் இவ்விதம் வெளிப்படுத்தினார்.

ஆனையிறவுச் சமரின் பின் சர்வதேசத்தின் கவனத்தைப் பெருமளவு ஈர்ந்த ஒரு செருக்களமாக, பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அமைந்துவிட்டது. முன்னையதைப் போன்றே இதுவும் புலிகள் இயக்கத்தின் இராணுவத் திறனை உலகிற்குப் புலப்படுத்தியுள்ளது. ஆனாலும் பூநகரியில் சிங்களப் படைகள் சந்தித்த பேரிழப்பு, சிங்களப் பேரினவாதத்தின் போர்வெறியை முனை மழுங்கச் செய்துவிட்டது.

பலமான கடற்படைத் தளத்தையும் சக்திவாய்ந்த கவச வாகனப் படைப்பிரிவையும் கொண்டபடி, புலிகள் தாக்கப் போகின்றார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த 2000ற்கும் மேற்பட்ட சிங்களப் படைகளையும், 16 கி.மீ. நீளமும் 25 கி.மீ. சுற்றளவையும் கொண்ட பூநகரி கூட்டுத் தளத்தை அழித்தொழிப்பதென்பது, ஒரு இமாலய சாதனைதான்.

புலிவீரர்கள் அதனைச் சாதித்து பெருமளவு வெற்றியைப் பெற்றும்விட்டனர். பூநகரி கூட்டுத்தளம் மீதான தாக்குதலில் புலிகள பெற்ற பெருவெற்றியில் ஒன்றாக, அங்கிருந்து கைப்பற்றபப்ட்ட பெருமளவிலான சக்திவாய்ந்த ஆயுதங்களைக் குறிப்பிடலாம். இவை சாதாரண ஆயுதங்கள் அல்ல; போரின் போக்கை புலிவீரர்களுக்குச் சாதகமாகத் திசை திருப்பப்போகும் ஆயுதங்கள், தாங்கி, 120 மி.மீ. சுடுகலன்கள், நீருந்து விசைப்படகுகள், 50 கலிபர் துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான கனரக ஆயுதங்களும் பெருந்தொகையிலான வெடிமருந்துகளும், எமது விடுதலைப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியையும் புதிய பலத்தையும் ஊட்டியுள்ளன. பூநகரியில் சிங்களப் படைகளுக்கு ஏற்பட்ட உயிரிழப்பும் பிரதானமானது.

அதேவேளை, பெரிய நாடுகளுக்கிடையில் பெருமெடுப்பில் நடைபெறும் போர்களைத்தவிர, ஒரே தாக்குதலில் 1000 படையினர் கொல்லப்படுவதென்பது, இதுதான் முதற்சம்பவமாக இருக்கும். இந்தப் பெருநாசத்தால் சிங்கள இனமே சோகத்தில் ஆழ்ந்துபோயுள்ளது. “எல்லா இடங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கின்றன” (துக்கத்தை வெளிப்படுத்த வெள்ளைக் கொடிகளையே சிங்கள மக்கள் பயன்படுத்துபவர்) என்று, ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை சிங்கள தேசத்தின் இழப்பைச் சுட்டிக்காட்டுகின்றது.

குடாநாட்டின் வாசலில் இருக்கும் பூநகரிப் பகுதியானது இராணுவ – அரசியல் – பூகோளரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தக் கேந்திர வலயத்தைக் கைப்பற்றுவதன்மூலம், இரண்டாவது ஈழப் போரிற்கென்று சிங்கள அரசு தயாரித்த புதிய போர்முறைத் திட்டத்தை அமுல்படுத்த, சிங்களப் படைத்துறை முனைந்தது. அதன்படி பூநகரியில் ஒரு கூட்டுப் படைத்தளத்தை அது அமைத்துக்கொண்டது.

சிங்கள ஆளும் வர்க்கம் வரைந்த புதிய போர்முறைத் திட்டத்தின் நோக்கம் யாழ். குடாநாட்டைப் பூரணமாக முற்றுகையிடுவதுதான். இந்த இராணுவ முற்றுகைமூலம் பொது மக்களின் போராட்டம் உறுதியை உடைப்பதும், புலிகள் – மக்கள் உறவைச் சிதைத்து புலிகளைத் தனிமைப்படுத்துவதும், இறுதியில் குடாநாட்டைக் கைப்பற்றி புலிகளை அழித்துப் போராட்டத்தை நசுக்கிவிடுவதும்தான் சிங்கள அரசின் எண்ணம்.

ஆனால், சிங்கள அரசின் முற்றுகைத் திட்டத்தில் கடற்புலிகள் ஒரு ஒட்டையை
ஏற்படுத்திவிட்டார்கள். கடற்புலிகளின் எழுச்சியும் அவர்களின் பலத்துடன் நடந்த நீரேரிப் படகுப் பயணமும், சிங்கள அரசின் புதிய போர்முறைத் திட்டத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

இந்த நிலையில்தான் “பாதை திறப்பு” என்ற போர்வையில் இராஜதந்திரப் பொறியொன்றை அமைத்து, தனது போர்முறைத் திட்டத்தில் ஏற்பட்ட உடைவைச் சீராக்க சிங்கள அரசு முயன்றது.

குடாநாடுமீதான இராணுவ முற்றுகையால் எழுந்த பொது மக்களின் கஷ்டங்களை விவாதப் பொருளாக்கி, புலிகள் இயக்கத்திற்கெதிராகச் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் அழுத்தங்களைக் கொடுத்து, புலிகளின் தலைமையைப் பணியச் செய்யும் யுக்தியை சிங்கள அரசு கடைப்பிடித்தது.

பாதை திறப்பதற்கு புலிகளைச் சம்மதிக்கச் செய்ததால் அதன்பின் பொதுமக்களின் நன்மைக்கென்று கூறி அந்தப் பகுதியை அமைதிவலயமாக்கி, பெரும் இராணுவ நன்மைகளைப் பெற்றுவிடலாம் என்று சிங்கள அரசு நினைத்திருந்தது.

பூநகரியை ‘யுத்த சூன்யப் பகுதி’ என்று புலிகளின் சம்மதத்துடன் பிரகடனம் செய்தால், அங்குள்ள படையினரிலிருந்து பெரும்பாலானோரை எடுத்து அவர்களையும் பயன்படுத்திக் குடாநாடுமீது பெரும் போர் ஒன்று தொடுக்கலாம் என்றும், அதற்கு முன் துரோகக் குழுக்களை பூநகரிக்கு அழைத்து அவர்களின் துணையுடன் உளவாளிகளை உருவாக்கி, அவர்களைக்கொண்டு பெரும் நாசவேலைகளைச் செய்துவித்துக் குழப்ப நிலையை உருவாக்கிவிட்டுப் போரைத் தொடுக்கலாம் என்றும் சிங்கள அரசு திட்டமிட்டது.

தமிழீழ மக்கள்மீது கரிசனை கொள்வதுபோல சின்னஞ்சிறு சலுகைகளைக் கொடுத்து, அவர்களின் பென்னம்பெரு இலட்சியங்களை விழுங்கி ஏப்பம்விடுவது, சிங்களப் பேரினவாதத்தின் வழமையான வேலை ஆனால் விழிப்புணர்வுடன் செயற்படும் புலிகளிடம் அது எடுபடாமல் போய் விடுகின்றது.

பாதைதிறப்பு விவகாரத்தில் புலிகளின் விட்டுக்கொடாப் போக்கிற்குக் காரணம் கிளாலிக் கடல் நீரேரியில் கடற்புலிகள் வைத்திருந்த அசைவியக்க சக்திதான் (Mobility) என்று எண்ணிய சிங்களப் படைத்துறைத் தலைமை, கிளாலியைக் கைப்பற்றுவதன்மூலம் கடற்புலிகளின் அசைவியக்கத்தை நிறுத்தி, புலிகள் இயக்கத்தைத் தனது காலடியில் வீழ்த்த முயற்சி செய்தது.

ஆனால், சிங்களப் படைகள் மேற்கொண்ட அந்த இராணுவ நடவடிக்கை (யாழ்தேவி) ‘ஆப்பிழுத்த குரங்கின் கதைபோலவே’ தோல்விகண்டுவிட்டது.

சிங்கள அரசின் இராணுவ அழுத்தங்களுக்கு அடிபணித்து அல்லது தனது இராணுவ நன்மைகளுக்காக சிங்களப் பேரினவாதம் அமைத்த இராஜதந்திர சூழ்ச்சிப் பொறிக்குள் சிக்கி, பாதை திறப்பிற்குப் புலிகள் இயக்கம் சம்மதித்திருந்தால், 1994ம் ஆண்டின் முற்பகுதியிலே, தான் வரைந்த போர்முறைத் திட்டத்தில் சிங்கள அரசு ஒரு பாரிய வெற்றியைப் பெற்றிருக்கும்; அதாவது குடாநாட்டைப் பெரும் நாசத்துக்குள்ளாக்கியிருக்கும். இதை மனதில் வைத்தபடி தான், 1994 மார்ச் மாதத்திற்கு முன் புலிகளை அழித்துவிடுவோம் என்று பூநகரித் தாக்குதலுடன் ‘முன்னாள் லெப். ஜெனரலாகி விட்ட’ சிசில் கூறியிருந்தார்.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் சவால்களுக்கே சவால்விடும் தலைவரின் தனிப்பண்பும், புலிவீரர்களின் போர்த்திறனில் அவர் வைத்திருந்த பெரு நம்பிக்கையும் ஒன்று சேர்ந்து, “தவளை இராணுவ நடவடிக்கை” என்ற வடிவம் எடுத்தது. இது சிங்களப் படைத்துறை செயற்படுத்திவந்த போர்முறைத் திட்டத்தின் முதுகெலும்பையே முறித்து விட்டது.

பூநகரி கூட்டுத்தளத்தின் படைபலத்தைவைத்து ஒரு அரசியல் ரூபத்தின்மூலம் புலிகளுக்கெதிராகக் காய்நகர்த்த முயன்ற சிங்கள அரசு, இறுதியில் தோற்றுவிட்டது.

சிங்கள அரசின் சூழ்ச்சிகர அரசியல் காய்நகர்த்தலுக்கேற்றாற்போல், தலைவர் பிரபாகரன் அவர்கள் புலிகளின் தரப்பிலும் காய்களை நகர்த்தச் செய்தார். அதேவேளை கூட்டுத்தளத்தின்மீது புலி வீரர்களை நகர்த்தி, படை பலத்தை வைத்து சிங்கள அரசு செய்த அரசியல் பேரத்தைப் படைபலத்தைப் பயன்படுத்தியே வெற்றிகொள்ள முயன்றார்; இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த வெற்றி விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வழங்கிவிட்டது.

பூநகரி தாக்குதலில் புலிகள் இயக்கம் பெற்ற வெற்றி காரணமாகவும் அங்கிருந்து அவர்கள் கைப்பற்றிசசென்ற ஆயுத தளபாடங்களின் ஆற்றல்கள் காரணமாகவும், வாடா தமிழீழத்திலுள்ள சிங்களப் படைமுகாம்கள் அனைத்துமே “அடுத்த தாக்குதல் தம்மீதுதான்” என்று அரண்டபடியுள்ளன.

சிங்கள தேசத்தின் பத்திரிகைகளும் அடுத்தது முல்லைத்தீவா..? மண்டைதீவா என்று ஊகித்து அஞ்சுமளவுக்கு, சிங்கள தேசத்தில் ஒரு பீதிநிலை காணப்படுகின்றது.

இந்தப் பீதிக்குக் காரணம், சிங்களப் படைகள்மீதான அவ நம்பிக்கையேதான். இவ்விதம், தமது படையினர்மீதே சிங்கள மக்கள் பெரியளவில் அவநம்பிக்கைகொண்டது இதுதான் முதற்தடவை என்று கூறலாம்.

இந்த அவநம்பிக்கை நாளடைவில் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளையும் குழப்பங்களையும் சிங்கள அரசிக்குக் கொடுக்கும்.

இது ஒருபுறமிருக்க, புலோப்பளைச் சமரிலும் பூநகரிப் பெருந் தாக்குதலிலும் சிங்களப் படை, சக்திவாய்ந்த “T 55” ரக ராங்கிகளில் நான்கை இழந்துவிட்டது அத்துடன் சில கவசவாகனங்களையும் இழந்துள்ளது சிங்களப் படையின் கவசவாகனப் பிரிவு சந்தித்த இந்தப் பேரிழப்பு, தரைப்படையின் நகர்த்திறனைக் கணிசமாகப் பாதித்துவிட்டது எனலாம். இதேவேளை, நாகதேவன்த்துறையிலிருந்து கடற்புலிகள் கைப்பற்றிய நீருந்து விடைப்படகுகள், கடற்புலிகளின் நகர்த்திறனை அதிகரிக்கச் செய்துள்ளன.

இவ்விதம் பூநகரிப் பெருந் தாக்குதலுடன் சிங்களப் படைகள், தரையிலும் கடலிலும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன.

இந்த இராணுவ நெருக்கடிகளுக்கு சிங்கள அரசு எப்படி முகங்கொடுக்கப் போகிறது…?

இந்த உண்மை நிலையைப் புரிந்துகொண்ட புலிகளின் கரத்தைப் பலப்படுத்துவதற்காக, எமது இளம் பரம்பரை எவ்வாறு செயற்படப் போகின்றது என்பவற்றில்தான், அடுத்த திருப்புமுனை தங்கியுள்ளது.

விடுதலைப்புலிகள் (மார்கழி – தை 1994) இதழிலிருந்து

Advertisements

நவம்பர் 13, 2015 - Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள், வீரவரலாறு | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: