அழியாச்சுடர்கள்

வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி

ஒரு போராளியின் புனிதச்சுவடுகள்.

விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்குகப்பால்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை.

இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும்.
வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன். ஜிம்கலி.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன்.ஜிம்கலி,பிறந்தது,வளர்ந்தது, வாழ்ந்தது , வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும்.

நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான்,விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப்பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நெஞ்சினில் விடுதலைநெருப்பை ஏந்தி,காலம் எமக்குத்தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது.இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதி கிரானில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாகதென்படுகின்றார்கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப்பெற்றதிலிருந்து உயர்ந்த இடத்தில் வரலாற்றில் நிமிர்ந்து நிற்கின்றாள். இதனை இம் மாவீரர்கள் சார்பாக உறுதியாகக் குறிப்பிடமுடியும்.

தளம்பாது,தடம்புரளாது,நீண்ட விடுதலைப் போரட்டத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் அழியாத பதிவையும் விடுதலை வரலாறு கொண்டுள்ளது.

கப்டன். ஜிம்கலி அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக் கணக்கான போராளிகள் மாவீரர்களாக எம் கண்முன்னே, காற்றோடு காற்றாக கலந்து நிற் கின்றார்கள். இவர்களை எம்மால் மறக்க முடியாது, மறப்பதும் சரியான அர்த்தமாகாது.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது பாசறையில் படைத்துறைப்பயிற்சி பெற்றுக்கொண்ட கப்டன். ஜிம்கலி அவர்களின் சொந்த ஊரான கிரானில் விடுதலைப் போராட்டத்திற்கு முந்திய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற வரிசையிலும் ஜிம்கலி இருந்தார்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ்மக்கள்

திரண்டெழுந்தபோது,பேரூந்து எரிப்பு, சிங்கள எழுத்துக்கள் அழிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிரான போக்கு என்பவற்றில் ஜிம்கலியின் பங்கு அதிகமாகவே இருந்தது.

வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கின்றபோது எமது மண்ணிலிருந்து கிளர்தெழுந்த தமிழ் இளைஞர் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நாம் அறிந்து

கொள்ளவேண்டிய பல சம்பவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. எந்த சுயநலமுமில்லாது தமிழ்மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்று எழுந்தவர்கள் தான் இந்த வீரமறவர்கள், நாம் வசதியோடு, வளமாக வாழ நினைக்கின்றோம் ஆனால் இவர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும், தங்களை தாங்களே ஆட்சி செய்து

தமிழ்மக்கள் வாழவேண்டும் என்று விரும்பினார்கள் அதனால் தங்களை தமது மண்ணுக்கு உரமாக்கினார்கள்.

மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்ற கிரான் என்ற ஊர் தமிழர்களின் போராட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. கிரானிலிருந்து மேற்கு திசையாக பயணிக்கின்ற போது எமது பார்வையில் படுகின்ற ஒவ்வொரு ஊரும், விடுதலைப் போராட்டத்தில் முக்கிய, அழியாத நிகழ்வு களை தன்னகத்தே கொண்டுள்ளது.

புலிபாய்ந்தகல், கோராவெளி, பொண்டுகள் சேனை, குடும்பிமலை, பள்ளத்துச்சேனை,தரவை ,வடமுனை,கள்ளிச்சை மியான்கல்குளம், கூளாவடி.வாகனேரி என இன்னும் பல வயல்சார்ந்த ஊர்கள் தமிழ்மக்களுக்கு படியளக்கும் பசுமை நிறைந்த இடமாகவும் காணப்படுகின்றன.

தமிழீழத்தின் எல்லையை நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு இடமும் தமிழர்களின் பெயர் சொல்லும் தமிழர்களின் வாழ்வாதார இடமாகவும் அமைந்திருக்கின்றன.

கொஞ்சம் குடியிருப்புகள் கொஞ்சம் வயல்நிலங்கள், கொஞ்சம் காடுகள் என கலந்திருக்கின்ற இவ்வூர்கள் அனைத்தும் எமது விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வாழ் விடங்களாகவும் மாறி யிருந்தன.ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு என்ற அடிப்படையிலும் எம்மால் காணக்கூடியதாகவும் இருந்தது.மேற்கு புறத்தின் எல்லையில் அகல வாய் திறந்திருந்த சிங்கள ஆக்கிரமிப்பையும் வடமுனையில் தடுத்து நிறுத்தியதாகவும் விடுதலைப் புலிகளின் போர் அமைந்திருந்தது. ஒவ்வொரு குடியேற்றத்திற்கும்ஒவ்வொரு காரணம் வைத்திருக்கும் சிங்கள அரசு மேற் கூறப்பட்ட தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த வைத்திருந்த காரணம் மகாவலி c வலயமாகும்.

போராளிகளின் வாழ் விடங்களாக மாறிய இவ்விடங்களில் வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் விடுதலைப் புலிகள் இருந்தனர். வீரம் செறிந்த விடுதலைப் போரை சந்தித்த இடங்களாகவும் இவை விளங்கின.

புலிபாய்ந்தகல், இவ்வூர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் வரலாற்றுப்பதிவு ஒன்றைக் கொண்டதால்சிறப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமான முறையில் இயங்க ஆரம்பித்த வேளையில் பண்ணைமுறையிலானமறைவிடங்களை தமிழீழ மெங்கும் ஆங்காங்கே வைத்திருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது பண்ணை இயங்கியது, புலிபாய்ந்தகல் ஊரில்தான் என்பதையும், இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஒரு சில தமிழ் இளைஞர்கள் தங்கியிருந்த இப் பண்ணையின் மூலமாக முதல் அத்தியாயத்தை விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வூர் பெற்றிருக்கிறது.

அதற்குப் பின்பு பல போர் நிகழ்வுகளையும், மற்றும் வழிமறிப்புத்தாக்குதல்களையும், பரந்து விரிந்த இடத்தில் வாழ்ந்த போராளிகளின் எல்லைப்பாதுகாப்பு அரண் ஊராகவும், சிங்கள ஆக்கிரமிப்பு படையினர் ஒவ்வொருவரும் அறிந்து கொண்ட இடமாகவும் இது விளங்கியது.

கப்டன்.ஜிம்கலி, பயிற்சியை முடித்தவுடன் தமிழ்நாடு மாநிலத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது பயிற்சி முகாமில் உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.

அதன் பிறகு தாய் மண் திரும்பிய வேளையில் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா காவல் நிலைய அழிப்பு தாக்குதலிலும் ஈடுபட்டார். மட்டக்களப்பு நோக்கி வருகிற வழியில்வன்னிபெருநிலப்பரப்பில் பல நடவடிக்கைகளில் போராளிகளுடன் இணைந்து செயலாற்றினார். முல்லைத்தீவின் கொக்கிளாய் என்ற இடத்தில் அமைந்திருந்த சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப் பட்ட முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதல் என்ற வரலாற்று பதிவிலும் இடம்பெற்றார். இத் தாக்குதலில் கிரான் ஊரின் முதல் மாவீரர் கென்னடி என்பவரும் வீரச்சாவடைந்தார். விடுதலைப் புலிகளின் இந்தியாவின் இரண்டாவது பாசறையில் பயிற்சி பெற்ற கென்னடி கிரான் ஊரில் விடுதலையை நேசித்த குடும்பங்களில் ஒன்றிலிருந்து புறப்பட்டவர்.

திருகோணாமலை மாவட்டத்தில் குச்சவெளி என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த சிங்களக்காவல் நிலையம் மீதான தாக் குதலிலும் கப்டன் ஜிம்கலி பங்கேற்றுக் கொண்டார்.

1985 ம் ஆண்டு மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தளபதி அருணா தங்கியிருந்த ஈரளக்குளம் மதுரையடி முகாமில் கப்டன். ஜிம்கலி அவர்களும் இணைந்திருந்தார். இம் முகாமில் வைத்து திட்டமிடப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலையத்தாக்குதலில் கப்டன். ஜிம்கலி அவர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்தது.

2 . 9 . 1985 ம் ஆண்டு அன்று இத் தாக்குதல் நடந்த வேளையில் சிங்கள அதிரடிப்படையினர், கல்லடி, கும்புறுமுலை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர்.இத் தாக்குதல் நடக்கின்றபோது ஏறாவூர் சிங்கள காவல் துறையினருக்கு உதவிக்கு வரவிருக்கும் கும்புறுமூலையில் நிலை கொண்டிருந்த சிங்கள அதிரடிப்படையினரை தடுத்துத் தாக்கும்பணி கப்டன். ஜிம்கலி தலைமையிலான குழுவினருக்கு கொடுக்கப் பட்டிருந்தது. இக் குழுவில் மட்டு – அம்பாறை முதல் பாசறையில் பயிற்சி பெற்ற மட்- இருதயபுரத்தைச் சேர்ந்த கப்டன்.சபேசன்,கிரான் ஊரைச் சேர்ந்த கங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கப்டன். ஜிம்கலி குழுவினரின் தீவிர தாக்குதலால் நிலை குலைந்த சிங்கள அதிரடிப்படையினர் முகாமுக்கு திரும்பி ஓடினார்கள்.அன்றிலிருந்து கப்டன். ஜிம்கலி கும்புறுமூலை அதிரடிப் படையினருக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகின்ற ஒரு வீரனாகக் காணப்பட்டார்.

கிரான் ஊரிலிருந்து விடுதலைக்காக திசைமாறிய இளைஞர்கள் எல்லாம் சரியான திசையில் கப்டன் ஜிம்கலி அவர்களின் பின்னால் அணிதிரண்டனர்.

இவர்களுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிருந்தும் இணைந்துகொண்ட இளைஞர்களையும் வைத்து மாவட்டத்தின் இரண்டாவது பயிற்சிப் பாசறையை பள்ளத்துச்சேனை என்ற பழந்தமிழ் வயல்சார்ந்த ஊரில் தனது மேற்பார்வையில் திறம்பட நடத்தினார்.

இப் பாசறையில் பயிற்சி பெற்று, பூநகரி சிங்கள இராணுவ படைத்தளம் மீதான தாக்குதலில் 16 . 11 . 1993 . அன்று வீரச்சாவடைந்த மேஜர். ரூபன் பல களங்களை கண்ட வீரமான ஓர் போராளியாகும். மட்டக்களப்பு வடக்கு பொறுப்பாளராகப் பணியாற்றி பலசாதனைகளை விடுதலைக்காக நிகழ்த்திக்காட்டியவர் என்பதையும் இச் சந்தர்பத்தில் நினைவு கூருகின்றோம்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தளபதியாக லெப். கேணல் குமரப்பா பொறுப்பேற்றுக் கொண்டதைத்தொடந்து, வரலாற்று சிறப்புமிக்க கோயிலைக் கொண்டிருந்த கோராவெளி ஊரில்அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தங்குமிட முகாமுக்குப் பொறுப்பாளராக கப்டன். ஜிம்கலி நியமிக்கப் பட்டிருந்தார்.

கப்டன்.ஜிம்கலி அவர்களின் திட்டமிடலிலும், தலைமையிலும் வாகனேரி என்ற ஊரில் 1986 ம் ஆண்டு ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டும், பல இராணுவத்தினர் காயமடைந்தனர்.

27 . 06 1986 அன்று அதிகாலையில் கப்டன் .ஜிம்கலி முகாம்

சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது. நீண்ட காலமாக வேவுபார்க்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு இப் பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்தினர் மேற் கொண்டிருந்ததாக பின்பு அறியப்பட்டது. காலை இரண்டு குண்டு வீச்சு விமானங்கள்,உலங்கு வானுர்தி என தாக்குதலுக்கு மேலதிக பாதுகாப்பைக்கொடுத்ததாக நடவடிக்கை அமைந்திருந்தது.

இம் முகாமுக்கு குறிப்பட்ட தூரத்தில் தங்கியிருந்த தளபதி லெப்.கேணல் குமரப்பா கப்டன். ஜிம்கலி அவர்களுடன் தொடர்பை எடுப்பதற்கு முயன்று முடியாததால் போராளி கங்கா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிங்கள இராணுவத்தினரின்
தாக்குதல் பற்றியதை அறிந்துகொண்டு, எல்லோரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் எனக்கூறினார் இதற்கேற்ப குறிப்பிட்ட சில போராளிகளை குழுவாக ஒரு பக்கம் அனுப்பிவைத்து ,இன்னொரு பக்கம் அவர்களும் சண்டையில் ஈடுபட்டனர்.

மேஜர்.ரூபன் , கப்டன்.தரன் ஆகிய குழுவினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிங்கள இராணுவத்தினர் சிதறி ஓடினர். இதன் பின்பு முகாமுக்குள் நுழைந்து தேடிய போதுதான் கப்டன். ஜிம்கலி உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தது தெரிய வந்தது. இதில் தாக்குதல் நடத்தப்பட்ட முகாமை விட்டு வெளியேறிய நிலையில் குண்டு வீச்சு விமானத்தாக்குதலில் கங்கா வீரச்சாவடைந்திருந்தார். துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் சயனைட் அருந்திய நிலையில் கப்டன். ஜிம்கலி அவர்களின் வித்துடல் எடுக்கப்பட்டது.அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருடன் இருக்கவில்லை.இவ் ஆயுதம் சிங்கள இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் இவ் விடத்தில் சில ஆண்டுகளின் பின்பு ஒரு மரப் பொந்துக்குள் மறைத்து வைக்கபட்டிருந்ததை அங்கு வாழ்ந்த மக்களில் ஒருவர் கண்டெடுத்து போராளிகளிடம் ஒப்படைத்தார். இது ஜிம்கலிவைத்திருந்தது என தெரியவந்தது. தனது உயிரை விட தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற ஆயுதம் மேலானது என்ற உணர்வு கப்டன்.ஜிம்கலி அவரிடமிருந்ததை எம்மால் உணரமுடிந்தது. அக் காலங்களில் ஒவ்வொரு போராளியும் ஆயுதத்தைப் பாதுகாப்பதற்கு தமது உயிரை அர்பணித்தார்கள் என்பதை எமது போராட்ட வரலாறுகளின் மூலம் அறிந்திருக்கின்றோம்.

இச் சம்பவத்தைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தங்கள் புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இப் புலனாய்வு நடவடிக்கையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முதல் பாசறையில் பயிற்சி பெற்ற கறுவாக்கேணி ஊரைச் சேர்ந்த கப்டன். சங்கர் ஈடு பட்டிருந்தார். இவருடைய திறமையினால் கோராவெளி முகாம் தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக விரிவாக அறிய முடிந்தது . மாடுவளர்ப்பு அதிகமாகக் காணப்பட்ட இப் பகுதிகளில் மாடு வாங்குபவர்கள் போல் வந்து முகாம் அமைவிடத்தை துல்லியமாக அறிந்து கொடுத்ததால் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை சம்பந்தப் பட்டவர்கள் மூலமாக கப்டன். சங்கர் தெரிந்து கொண்டார். இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற
பலவீனத்தைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு அன்றிலிருந்து ஆக்கிரமிப்புவாதிகள் ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இன்றும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழர்களுடைய வீரத்தையும் தன்மானத்தையும் என்றும் அழிக்கமுடியாது.

வீரர்கள் விதைக்கப்பட்ட இம் மண்ணில் விடுதலைக்கான ராகம்ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

என்றும் எழுகதிர்

ஜூலை 8, 2012 - Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | ,

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: